
எனது பேரன்புக்குரியவரும், நெடுநாளைய நண்பருமான இசைமுரசு அல்ஹாஜ் நாகூர் அனிபா அவர்கள் தொடக்க நாள் முதல் பேரரிஞர் அண்ணா அவர்களிடம் மிகுந்த அன்பும் மதிப்பும் உடையவராய்த் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்து பணியாற்ற முற்பட்டுப் பல பொறுப்புகளையும் ஏற்றுக் கழகத்தின் முன்னணியில் நிலைகொண்டுள்ள மூத்த தோழர்களுள் ஒருவராக விளங்குபவர், அவர்.
நாகூர் அனிபாவின் எழுச்சியூட்டும் அரிமா முழக்கம் ஆர்த்திடாத கழக மாநாடு இல்லை, தலைமை கழகத்தின் விழா இல்லை என்று எவரும் பாராட்டிக் கூறுமாறு தமது இசைத் தொண்டினை ஆற்றுபவர் அவர்.
அவரது மங்காத குரல் வளமும் சிதையாத தமிழ் உச்சரிப்பும், பொன்றாத பண் அமைப்பும் அவரது பாடல்களைக் கேட்பவர்கள் திரும்பத் திரும்ப காட்டிடும் ஆர்வத்தைத் தூண்டுவன.
“அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா” என்னும் பாடலை அவர் பாடிக்கேட்டுப் பரவசமுறாதார் இல்லை. அவரைப்போல் அந்தப் பாட்டைப் பாட இன்னொருவர் இல்லை.
அவரது தொண்டினைப் பாராட்டியே அவரை மேலவை உறுப்பினராகக் கலைஞர் இடம்பெறச் செய்தார். அவரது இலட்சியத்தைப் பாராட்டும் முறையில் ‘கலைஞர் விருது’ வழங்கிச் சிறப்பித்துள்ளது, கழகம்.
அவர் – மார்க்கத்தில் இஸ்லாமியர் என்பதில் பெருமை கொள்ளும் உணர்வுடையவர். தெவிட்டாத தேனெனச் சுவைக்கும் ‘தீன்’ நெறி விளக்கப் பாடல்களைப் பண்ணுடன் இசைப்பதில் அவருக்கு இணை இல்லை எனலாம். நாடெங்கும் அந்தப் பாடல்கள் பரவி ஒலிப்பதே அதன் பெருமைக்குச் சான்று.
மார்க்கத்தால் இஸ்லாமியர், மொழியால் தமிழர், இனத்தால் திராவிடர் என்று அவர் பெற்றுள்ள உணர்வே – நாமெல்லோரும் ஓரினம், நமது மொழியும் ஒன்று, கடவுளும் ஒன்று என்னும் பொது நெறிக்கு அடிப்படையாவதால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் குறிக்கோள் நம் எல்லோரையும் ஒரு தாய் வயிற்று மக்களாக இணைக்கிறது.
மதம் – ஒரு வழியாக, வாழ்க்கை நெறியாக அமைவது ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள உரிமை. மதம் – பிற மதத்தினரை வெறுக்கவும், வீழ்த்தவும், வெறியை வளர்க்கவும் இடமாகுமானால் – பிற மனிதர் உரிமைக்கும் வாழ்வுக்கும் உலைவைப்பதாகும் என்னும் தெளிவுடன் நடைபோடுவதே திராவிட முன்னேறக் கழகம்.
அந்தக் கழகக் குடும்பத்தின் செல்வமாய், தமிழ் நாட்டின் பொன்னணியாய் ஒலிரும் கலைமாமணி, இசைமுரசு அவர்களின் இசை முழக்கம் இன்னும் பல்லாண்டு தொடரட்டும் ! தொடரட்டும் ! நாடெங்கும் என்று வாழ்த்துகிறேன்.
க.அன்பழகன்
பொதுச் செயலாளர்
திராவிட முன்னேற்றக் கழகம்
நன்றி : அ.மா.சாமி

