
கலைஞரின் கண்ணியம்அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா. தமிழக அரசு சார்பில் சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபம் நிரம்பி வழிகிறது. மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் திமுக தலைவர்கள், தொண்டர்கள் என்று எல்லோரும் முதல்வர் கலைஞரின் வருகைக்காக காத்திருக்கிறார்கள்.விழா தொடக்கத்தில் சீர்காழி சிவசிதம்பரம் தனது குழுவினருடன் அண்ணாவின் புகழ்பாடும் பாடல்களை பாடினார்.
அவரைத் தொடர்ந்து திமுகவின் பழம்பெரும் பாடகர் நாகூர் அனிபா தனது குழுவினருடன் பாட வந்தார். “எனக்கு 84 வயது ஆகிவிட்டது. ரம்ஜான் மாதம் என்பதால் நோன்பு கடைப்பிடிக்கிறேன்”முன்கூட்டியே கூறிவிட்டார். அதாவது, தனது குரலில் பிசிறு ஏற்படக்கூடும் என்பதைகூறிவிட்டார். அதற்கேற்றபடியே, அவர் உச்சஸ்தாயிக்கு செல்லும்போது சிரமப்பட்டார்.
“எங்கே சென்றாய்? எங்கே சென்றாய்? எங்களை ஏங்கவிட்டு எங்கே சென்றாய்?” பாடலை அவர் பாடி முடித்தார். அடுத்து கலைஞரைப் பற்றி ஒரு பாடலை பாடத் தொடங்கினார். சில வரிகள் பாடிய நிலையில் முதல்வர் கலைஞரும், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் மேடை நுழைவாயிலுக்கு வந்துவிட்டனர்.இந்த தகவலை அனிபாவிடம் கூறினார்கள். அதாவது பாடலை முடிக்கும்படி அவர்கள் நாசூக்காக தெரிவித்தனர்.அனிபா அதை கேட்கவில்லை.
இதற்குள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மேடைக்கு வந்துவிட்டனர். அனிபா தொடர்ந்து பாடினார். மேடையில் இருந்தவர்கள் பரபரத்தார்கள். ஸ்டாலின் மேடையின் ஒரு ஓரத்தில் சாய்ந்து நின்று கொண்டார். அனிபா பாடலை பாடி முடிக்கும்வரை அவரை யாரும் தொந்தரவு செய்யவில்லை. பாடி முடித்த பிறகு அரங்கில் அவருக்கு பலத்த கரகோஷம் எழுந்தது. அதைத்தொடர்ந்துதான் கலைஞரும் மற்ற தலைவர்களும் மேடைக்கு வந்தனர். அரங்கம் அதிர்ந்தது.கலைஞர் வீல் சேர் இல்லாமல் தயாநிதி மாறன் உள்ளிட்டோரின் கைத்தாங்கலோடு நடந்து வந்தார்.“தலைவரை நடக்கவிட வேண்டாம்” என்று தொண்டர்கள் குரல் எழுப்பினார்கள்.
பிறகு விழா நிகழ்ச்சிகள் தொடர்ந்தன.இந்த நிகழ்ச்சியின் பின்னணியில் பலரும் கவனிக்கத் தவறிய ஒருவிஷயம் உண்டு.பத்திரிகையாளர்கள் வரிசையில்கூட, அனிபாவின் குரலை, எதைப்பற்றியும் கவலைப்படாத பாடிய முறையை சிலர் விமர்சித்தார்கள்.ஆனால், அனிபா இந்த இயக்கத்தின் மூத்த உறுப்பினர் என்ற வகையில் அவருக்கு மேடையில் அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை அவர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர். அனிபா பாடி முடிக்கும்வரை காத்திருந்த கலைஞரின் கண்ணியத்தை மெச்சத் தவறிவிட்டனர். இதுவே திருமதி ஜெயலலிதா பங்கேற்கும் நிகழ்ச்சியாக இருந்திருந்தால் பாடகர் பாதியிலேயே எழுந்து ஓடியிருப்பார் என்பதை அவர்கள் யோசிக்கவே இல்லை.தமிழகத்தில் உள்ள கட்சிகளில், திராவிட முன்னேற்றக் கழகத்தில் மட்டுமே கட்டுப்பாடும் கண்ணியமும் காக்கப்படுகிறது என்பதற்கு சமீபத்திய மிகச் சிறந்த உதாரணம் இது.
தொடர்புடைய சுட்டி : தமிழ் மறை தமிழர் நெறி