RSS

Category Archives: கவிஞர் ஜபருல்லா

ஜபருல்லாவும் ரசகுல்லாவும்

தூங்க வேண்டிய நேரத்தில் முழித்திருந்து, முழித்திருக்க வேண்டிய நேரத்தில் தூங்குபவனுக்குப் பெயர் சோம்பேறி. அவன் கவிஞனாக இருந்துவிட்டால் அவனுக்குப் பெயர் ‘அறிவுஜீவி’.

இஜட் ஜபருல்லா ஒரு அறிவுஜீவி.

ஜபருல்லா தர்க்கவாதியா, குதர்க்கவாதியா தெரியாது. ஆனால் வாததின்போது வாதியாக இருக்க வேண்டிய நேரத்தில் பிரதிவாதியாக இருப்பார். பிரதிவாதியாக இருக்க வேண்டிய நேரத்தில் வாதியாக இருப்பார். இறுதியில் நாம் ‘சரி’ என்று வாதாடும் விவாதத்தை ‘தவறு’ என்று புரிய வைத்துவிட்டு பேசாமல் போய்விடுவார்.

வித்தியாசமாக பேசுபவனை குதர்க்கம் பேசுபவன் என்றுச் சொல்லும் உலகம் அவன் கவிஞனாக இருந்துவிடும் பட்சத்தில் அவனது மாறுபட்ட சிந்தனை நம் சிந்தனைக்கு விருந்தாக அமைந்து விடுகிறது. இந்த உண்மையை ஜபருல்லாவின் கவிதையைச் சுவைப்பவர்களால் நன்றாகவே உணர முடியும்.

ஜபருல்லாவின் கவிதை கல்-கட்டா கவிதை. கல் கட்டாத புடலங்காய் நேராக வளராது. அதில் நெளிவு சுளிவு இருக்கும். ஜபருல்லாவின் கவிதைகளின் சாராம்சத்தை புரிந்துக் கொள்ள நமக்குச் சற்று நேரம் பிடிக்கும். ஜபருல்லாவின் கல்கட்டா கவிதை களைகட்ட வைக்கும், கல்கத்தா ரசகுல்லாவைப் போன்றது. அவ்வளவு இனிமை.

ஜபருல்லா முஸ்லீம் லீக்கில் பெரிய புள்ளி அல்லது கமா என்ற அவரது வாழ்க்கைக்குறிப்பு நம் ஆய்வுக்கு இப்போது தேவையில்லாதது.

அவர் ஒரு நல்ல கவிஞர். நல்ல மனிதர். அதுபோதும் நமக்கு.

ஜபருல்லா பற்றிய மஞ்சள் கொல்லை ஹமீது ஜாஃபரின் இந்த கீழ்க்கண்ட குறிப்பு அவரைப் பற்றி ஓரளவு தெரிந்துக் கொள்ள உதவும்.

அப்போது ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்த அந்த சிறுவன் கேட்ட கேள்விகளுக்கு தந்தை ஜெக்கரியாவால் பதில் சொல்ல இயலவில்லை. வேறு வழி தெரியாமல் அந்த சிறுவனை அழைத்துக்கொண்டு மௌலவி அப்துல் வஹ்ஹாப் பாக்கவியிடம் போனார்.  சாதாரணமாக யாரும் தன் பிள்ளையை அழைத்துக்கொண்டு போனால் ‘இவனுக்கு நல்ல புத்தி சொல்லுங்க’ என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் அவரோ,  “ஹஜ்ரத், இவன் கையைப் பிடிங்க” என்றார். “ஏன் நானா?” என்று ஹஜ்ரத் கேட்டார்கள்;

“இவன் என் மவன்”

“தெரியுமே ஜஃபருல்லாவை. ரொம்ப நல்ல பிள்ளாயாச்சே.”

“நல்ல பிள்ளையா? மொதல்லெ இவன் கையை பிடிங்க”. கையைப் பிடித்தார்கள். “தயவுசெஞ்சி இவனை இஸ்லாத்துல சேர்த்து வூட்டுக்கு அனுப்பிவைங்க!”

ஹஜ்ரத்திடம் சேர்ந்த இரண்டாம் நாள், “ஏன் சாபு நானா, (அப்படித்தான் ஜபருல்லா ஹஜ்ரத்தை கூப்பிடுவார்) குர்ஆன்லெ இடைச் சொருகல்கள் ஏதாவது இருக்கிறதா” என்று கேட்டான் அந்த சிறுவன்.

“சரிதான், ஜக்கரியா சொன்னது சரியாத்தான் இருக்கும்போலிருக்கு! குர்ஆன்லெ ஏதுப்பா இடைச்சொருகல்? அல்லா சொன்னதுலெ ஒரு ஜேரு ஜெபருகூட மாத்தம் கெடையாதே!”

“அப்போ.. எல்லாமே அல்லா சொன்னதுதானா?”

“ஒரு வார்த்தைகூட விடாம எல்லாம் அல்லா சொன்னதுதான்.”

“அப்படின்னா, ‘அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாவின் திருநாமத்தால் ஆரம்பிக்கிறேன்’ என்று சொல்றீங்களே, அதெயும் அல்லா சொல்லிருந்தான்னா அல்லாவுக்கு

அல்லா யாரு? அவன் எந்த அல்லா பெயரால் ஆரம்பிக்கிறான்?  இப்பொ நாம சொல்றது இந்த குர்ஆனைத் தந்த அல்லா பெயரால் ஆரம்பிக்கிறதா? இல்லை , அல்லா ஒரு பெயரால் ஆரம்பிக்கிறானே அல்லாவுக்கு அல்லா பில் அல்லா. அந்தப் பெயரால் ஆரம்பிக்கிறதா?”

இந்த கேள்வியைக் கேட்டுக்கொண்டிருந்த மற்றவர்கள் ‘வலா ஹவ்ல வலா கூவ்வத்த’ என்று சொன்னார்கள். ஆனால் ஹஜ்ரத் அவர்களோ, “நீ கேட்டது நல்ல கேள்விதான். சரி, குர்ஆனில் எத்தனை அத்தியாயம் இருக்குன்னு உனக்கு தெரியுமா?”

“114 அத்தியாயம் இருக்கு.”

“ஒரு அத்தியாயத்திற்கு ‘பிஸ்மி’ கிடையாது. தெரியுமா உனக்கு?”

“அப்டீன்னா ஒரு ‘பிஸ்மி’ கொறச்சலா இருக்கனும்.”

“இல்லை. சரியாவே இருக்கு.”

“அது எங்கே இருக்கு?”

“அதைத்தான் நீ கண்டுபிடிக்கனும். அறிவு தானாகாவா வரும்? குர்ஆனைத் தமிழில் எடுத்து ஓது, ஆனால் எனக்கு ஒரு உறுதிமொழி தரனும், நீ ஓதிக்கிட்டே வரும்போது நீ கேட்ட கேள்விக்கு விடை தெரிஞ்சிடும், ஆனால் அதோடு நிறுத்திவிடக் கூடாது. முழுசா நீ படிச்சுப் பார்” என்றார்கள் ஹஜ்ரத்.

அன்று படிக்கத் தொடங்கிய ஜபருல்லா இன்றும் படித்துக் கொண்டிருக்கிறார். பல முறை படித்துவிட்டார். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதுப்புதுக் கருத்துக்கள், மேம்பட்ட அறிவுகள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன.

ஹமீது ஜாஃபர் மேற்கோள் காட்டிய நிகழ்வு சிலருக்கு தெளிவையும், சிலருக்கு குழப்பத்தையும் உண்டுபண்ண போதுமானது.

“ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட  நபிமார்களை இந்த பூமிக்கு அனுப்பிய இறைவன் ஒரு பெண் நபியைகூட அனுப்பவில்லையே. ஏன்?” என்ற கேள்வியை தன் மகள் கேட்டதாக எச்.ஜி.ரசூல் ஒரு கேள்வியை ஒரு கவிதையில் எழுதியிருந்தார். அவர் ஊர்மக்கள் அவரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விட்டார்கள்.

ஜபருல்லாவிடம் எனக்கு பிடித்தது குழப்பத்தையும் உண்டு பண்ணிவிட்டு அதற்கான தீர்வையும் சொல்லி விடுவார். ஒரு உண்மையான கவிஞனுக்குள்ள நேர்த்தியான பக்குவம் அது.

ஜபருல்லாவின் கவிதைகளை ஆய்வு செய்யலாம் என்று நினைத்தால் அவருடைய கவிதைத் தொகுப்பு என்று எதுவுமே கிடையாது. கவிதை நூலே எழுதாத கவிஞர் அவர்.

கவிஞர் இதயதாசனும், ஜபருல்லாவும் ஒரு சிற்றுண்டி விடுதிக்குள் தேநீர் அருந்தச் சென்றிருக்கிறார்கள். டீக்கடை பையன்

“கவிஞருக்கு ஒரு டீ, ஜபருல்லா நானாவுக்கு ஒரு டீ” என்று டீ மாஸ்டரைப் பார்த்து கூவி இருக்கிறான். மனுஷன் நொந்துப் போய்விட்டார்.

ஜபருல்லா கவியரங்குகளில் பாடுவதோடும், நண்பர்களிடம் பகிர்வதோடும் சரி. அவரெழுதிய கவிதைகள் துண்டுக் கவிதைகளாக அவருக்கு நெருக்கமானவர்களிடம் இருப்பது மட்டுமே.

அதிர்ஷ்டவசமாக என்னிடமும் சில கசங்கிய பொக்கிஷங்கள் உள்ளன. மற்றபடி இணையத்தில் ஆபிதீன் வலைப்பூவில் பதிவு செய்யப்பட்டிருப்பது ஒரு மகிழ்ச்சிதரக்கூடிய விஷயம்.

இறைவா!
நீ படைத்த மனிதர்களுக்கு
உன் பெயரைத்தான் வைக்கிறோம்
‘அல்லாஹ்’ என்று
உனக்கு பெயர் சூட்டியது
யார்?

அவருடைய இந்தக் கவிதை மேலோட்டமாக பார்க்கையில் நாத்திகத்தனமாக இருந்தாலும் ஓரிறைக் கொள்கையையும் படைப்பினங்களின் ஆதிமூலத்தின் சிந்தனைகளை மேம்படுத்துகிறது என்பது சிந்தித்துப் பார்ப்பவர்களுக்குப் புரியும்.

“ரசூலுல்லா பிற்காலத்தில் சூஃபி அல்ல” என்று சொல்லும் ஜபருல்லா மீது பத்வா கொடுக்குமளவுக்கு நமக்கு ஆத்திரம் ஆத்திரமாக வரும்.

ஹீராக் குகையில் அவர்கள் அமர்ந்து அவர்கள் இறை சிந்தனையில் ஈடுபட்டபோது அவர்கள் சூஃபி. அதற்குப் பிறகு இறைவனிடமிருந்து “வஹீ” வரத் தொடங்கிய பிறகு அவர்களுடைய சிந்தனை முடிந்து விட்டது. அதற்குப் பின்னர் அவர்களது செயல்கள் எல்லாம் இறைக்கட்டளைக்கு உட்பட்டது என்று விளக்கம் சொல்லும் இவரை ஒரு கவிஞானியாக பார்க்கத் தோன்றுகிறது.

கவிஞர் இஸட் ஜபருல்லாவை கவிதை பாட அழைப்பவர்கள் மடியில் வெடிகுண்டை வைத்து கட்டிக் கொண்டிருப்பவர்களைப் போலத்தான் காட்சியளிப்பார்கள். காரணம் மனுஷன் எந்த நேரத்தில் எந்த குண்டை எடுத்துப் போடுவார் என்று யாருக்குமே தெரியாது. நாகூரில் நடந்த “தேவை மனித நேயம்” என்ற நூல் வெளியீட்டு விழாவின்போது இவர் வாசித்த கவிதையின் தலைப்பு “தேவை ஒரு குண்டு”. இவர் இப்படி ஆரம்பித்ததும் எல்லோரும் ஆடிப்போய் விட்டார்கள்.

வகை வகையாய்
வெடிகுண்டு
செய்யும்
வல்லுநர்களே..!

சாதி – மத – இன
வேற்றுமை
சுவர்களை
தகர்த்து
தரைமட்டமாக்கும்
ஒரு
நல்லவெடிகுண்டு
தயார் செய்யுங்களேன் !!!

என்று கவிதையை முடித்தபோதுதான் நிகழ்ச்சியாளர்கள் “அப்பாடா..” என்று பெருமூச்சு விட்டார்கள்.

இறைவா
நீ
சேதாரமில்லாமல்
பாதுகாக்கும்
திருக்குர்ஆனை
இவர்கள்
ஆதாரத்துக்கு மட்டுமே
அணுகுகிறார்கள்

என்று இவர் பாடிய கவிதையை அலசிப் பார்க்கையில் பரணிமீது அழகான பளபளப்புத் துணியால் மிகுந்த கவனத்துடன் பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கும் திருமறையை எடுத்து தினமும் எடுத்து ஓதத் தூண்டுகிறது.

இறைவா
உண்டுவிட்டு உனக்கு
நன்றி சொல்வதைவிட
பசித்திருந்தும்
உன்னளவில்
பொறுமை கொள்ளும்போதுதான்
என் ஆன்மா
ஆனந்தமடைகிறது

என்ற இவரது வரிகளை வாசிக்கையில் இறைவழியில் நம்மை அர்ப்பணித்து நோன்பு நோற்க வைக்கிறது.

இறைவா
உன்னோடு
அரபு மொழியில் பேசுவதைவிட
அழுகை மொழியில்
பேசும்போதுதான்
உன் அண்மை தெரிகிறது

என்று இவர் கூறுவதைக் கேட்டு பள்ளிவாயிலில் தொழும்போது இமாம் அவர்கள் “அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்” என்று கூறியதும் விழுந்தடித்துக் கொண்டு நம் அலுவல்களை கவனிக்க ஓடும் நமக்கு சற்று நேரம் தொழுகைப்பாயில் அமர்ந்து இறைவனிடம் மனமுருகி துஆ கேட்கத் தோன்றுகிறது.

இறைவனோடு நாமிருப்பது
முடியாத ஒன்று
என்றாலும்
இறைவன்
நம்மோடிருக்க
முயற்சி செய்யலாம்!’

என்று அவர் கவிதை வடிக்கையில் வெட்டிபேச்சு பேசி வீண்பொழுதைக் கழிக்கும் நம்மை சற்று நேரம் தஸ்பீஹ் எடுத்து இறைவனை நினைத்து ‘திக்ரு’ செய்ய வைக்கிறது.

ஹஸ்ரத்மார்களின் ஐந்துமணி நேர மார்க்க உரை ஏற்படுத்தும் மனமாற்றத்தை இவரது ஐந்தாறு வரி கவிதை நமக்கு ஏற்படுத்தி விடுகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இவர்தான் ஜபருல்லா.
இவரது கவிதை நமக்கு ரசகுல்லா.

(நிறைய தகவல்கள் நாகூர் ஆபிதீனின் வலைப்பூ களஞ்சியத்திலிருந்து பெற்றது)

 

(“வைரமுத்துவும் இஜட் ஜபருல்லாவும்” என்ற எனது ஆய்வுக்கு பின்னூட்டம் அனுப்பிய அனைத்து நண்பர்களுக்கும், ஜபருல்லாவுடன் அவர்களுக்கிருந்த உறவுகளை நினைவு கூர்ந்ததற்கும் நன்றி. துபாயிலிருந்து சடையன் சாபு அனுப்பியிருக்கும் கடிதம் இது)

நல்ல பதிவிற்கு நன்றி

கவிஞர் இஜட் ஜஃபருல்லாஹ் எனது வகுப்புத் தோழர். திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் 3 ஆண்டுகள் ஒன்றாக இளங்கலை பயின்றோம். மூன்று வருடங்களும் கடைசி பெஞ்சுதான், கவிஞர் மட்டுமல்ல நல்ல பாடகரும் கூட.. நாகூர் ஹனிபாவின் குரலில்,அழகாக பாடுவார். அவர் விடுதியில் தங்கி படித்தார்.நான் வெளியில் தங்கி படித்தேன். படிப்பில் ஆர்வம் இல்லை. ஆனால் B.A தேர்வில் தேர்வாகி விட்டார்.

அப்போது பார்த்து பழகியதுதான். மீண்டும் துபாயில்தான் சந்திக்க நேர்ந்தது. இதிலே ஒரு வேடிக்கை என்னவென்றால் எங்களூக்கு அரசியல் விஞ்ஞானம் (Political Science ) பாடம் எடுத்தவர் தற்போதைய முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியரகாதர் முஹைதீன், அப்போது வகுப்பில் மாணவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என அறிவுரை சொல்வார். அதே முஸ்லீம் லீக்கில் பேராசிரியர் காதர் தலைவர். இஜட் ஜஃபருல்லாஹ் அதே கட்சியில் நல்ல பதவியில்.

துபாயில் இஜட் ஜஃபருல்லாஹ் முன்னிலையில் ஒரு கவியரங்கம் அதில் பயணங்கள் முடிவதில்லை எனும் தலைப்பில் கவிதை வாசித்தேன். கவிதையின் இறுதியில் “இறைவா என் பயணத்தை முடித்துவிடு” எனும் வரிகளை வைத்திருந்தேன் படைததவனும் அவனே பறிப்பவனும் அவனே” அவன் உரிமையில் கை வைக்க உனக்கென்ன உரிமை என கடிந்து கொண்டார். அண்மையில்கூட நாகூர் ரூமியின் இல்லத்திலிருந்து தொலைபேசினார்.

Sadayan Sabu – sadayan.sabu@gmail.com

 

வைரமுத்துவும் இஜட் ஜபருல்லாவும்

கவிஞர் குழாமில் ஜபருல்லா

“வைரமுத்துவும் இஜட் ஜபருல்லாவும்” என்ற இந்த தலைப்பைப் படிக்கையில் “அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?” என்று கேட்கத் தோன்றும்.

நாகூர்க் கவிஞர் இஜட் ஜபருல்லாவுக்கும், நாடறிந்த கவிஞர் வைரமுத்துவுக்கும் அப்படி என்ன ஒற்றுமை இருக்கப் போகிறது?

கவிஞர் ஜபருல்லா ஒரு இளம்பிறை. கவிஞர் வைரமுத்து ஒரு கறுப்புச் சூரியன்.

இவர் நாற்சுவருக்குள் இருப்பவர். அவர் நாற்திசையும் அறிந்தவர்.

இவர் கற்பனை செய்யத் தெரிந்தவர். அவர் கற்பனையோடு விற்பனையும் செய்யத் தெரிந்தவர் – தன் எழுத்துக்களை.

“நமக்குத் தொழில் கவிதை” என்று மார்தட்டினான் பாட்டுக்கோர் புலவன் பாரதி. அதே வசனத்தை இன்று யாராவது பேசினால் “அதுசரி! அடுத்த வேளை சோற்றுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று திருப்பிக் கேட்பார்கள்.

வெண்பாவை நல்ல விருத்தத்தை ஏற்றதமிழ்
என்பாவை மட்டுமென்ன ஏற்காதா – எந்தோழா
போதைதர வன்றுபுதிய விடியலுக்குப்
பாதையிட வல்லதே பாட்டு

என்று மரபு ரீதியில் வெண்பா படுகிறார் புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவரான கவிஞர் வைரமுத்து.

மேற்கூறிய இரு கவிஞர்களின் பாடல்களும், வெறும் வார்த்தை ஜாலங்கள் மட்டுமின்றி வாழ்க்கைக்கு வழிகாட்டுவனவாகவும் இருக்கிறன.

கவிதை என்றால் என்ன?

“கவிதை என்பது ஒரு தொழிலல்ல. அது ஒருவனின் ஆத்மராகம்” என்கிறார் புகழ்பெற்ற சோவியத் கவிஞர் மிகாயில் சுவெத்லா.

கவிஞர் வைரமுத்துவுக்கு கவிதை தொழிலாக இருக்கிறது. ஜபருல்லாவைப் பொறுத்தவரை அது வெறும் ஒரு ஆத்மராகம்.

ஜபருல்லா இதுவரை ஒரு கவிதை நூல்கூட வெளியிட்டு காசு பார்க்கவில்லை. அவருக்கு நெருக்கமான நண்பர்கள் சிலர் சட்டைப்பையில் கசங்கிய காகிதங்களாக பத்திரப்படுத்தி வைக்கப் பட்டிருக்கின்றன. அவ்வளவே. அவற்றில் சில அதிர்ஷ்டவசமாக ஆபிதீன் வலைபூவிலும் காணக்கிடைக்கின்றன.

“கவிஞன் எப்போதுமே இரட்டை வேடம் போட முடியாது. அவன் தன் படைப்புகளில் ஒருவனாகவும், வாழ்க்கையில் வேறு மனிதனாகவும் வாழ முடியாது. அவனது படைப்பையும் வாழ்வையும் வெவ்வேறாகப் பிரிக்கவே முடியாது” என்பது ரஷ்யக் கவிஞர் ராபர்ட் ராஷ்தெஸ்க் வென்ஸ்கியின் கூற்று.

ஆமாம். கவிஞர் வைரமுத்துவைப் போலவே கவிஞர் ஜபருல்லாவுக்கும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாது. 

“Great men think alike” என்பார்கள். இவர்களின் இருவரின் “Physiques” ஒத்துப் போகா விட்டாலும்கூட “கெமிஸ்ட்ரி” ஒத்துப் போகிறது.

கையில் கொஞ்சம் காசு இருந்தால்
நீதான் உனக்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால்
அதுதான் உனக்கு எஜமானன்

என்று கவிஞர் வைரமுத்து பாடிய அதே கருத்தை சற்று வேறு விதமாக சிந்திக்கிறார் கவிஞர் ஜபருல்லா.

பதவி -
இதன்மேல் நீ அமர்
உன்மேல் -
பதவியை அமரவிடாதே..
. இது ஜபருல்லாவின் சிந்தனையூற்று.

“முடியாது என்ற வார்த்தை என் அகராதியிலேயே கிடையாது” என்று நெப்போலியன் சொல்லியதை என் நண்பன் பாரூக் ராஜாவிடம் சொன்னபோது “அதுக்கு என்ன இப்போ? அவரோட அகராதி புத்தகத்துலே அந்த பக்கம் கிழிஞ்சு போயிருக்கும்” என்று ஜோக்கடித்தான்.

“உன்னால் முடியும் தம்பி, தம்பி” என்று கவிஞர் வைரமுத்துவின் பாடலை கேட்கும் போது நமக்கு தன்னம்பிக்கை பிறந்து வாழ்க்கையில் புத்துணர்ச்சி ஏற்படும். இதே கருத்தை

‘முடியும்’ என்பதில்
நீ உறுதியாக இரு.
‘முடியாது’ என்பதை
சூழ்நிலை சொல்லட்டும்.

என்று இன்றைய இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார் கவிஞர் ஜபருல்லா.

நம்மைப் பொறுத்தவரை வெளிச்சம், விடியல் எல்லாமே ஒன்றுதான். இரண்டுமே பிரகாசமாக இருக்கிறது. சற்றே சிந்தித்துப் பார்த்தால் வெளிச்சம் வேறு, விடியல் வேறு என்ற வியாக்யானம் புரிகிறது. விடியலில் வெளிச்சம் இருக்கிறது. ஆனால் வெளிச்சம் யாவும் விடியல் அல்ல என்று உணர்ந்துக் கொள்ள முடிகிறது.

பூமி பொதுச் சொத்து
உன் பங்கு தேடி
உடனே எடு

ஒவ்வொரு முகத்திலும்
உன் துளி உண்டு

ஒவ்வொரு விடியலிலும்
உன் கிரணம் உண்டு

வானம் போலவே
வாழ்க்கையும் முடிவதில்லை

என்கிறார் கவிஞர் வைரமுத்து

உன் -
வாழ்க்கைப் பயணம்
துவங்கட்டும்..!
வெறும் வெளிச்சத்தை
நோக்கி அல்ல
விடியலை நோக்கி

என்கிறார் கவிஞர் ஜபருல்லா.

உதவி எப்படிப்பட்ட மனிதனிடம் எதிர்பார்க்க வேண்டும்?

பெரிய மனித
தரிசனமா?
அதிகாலை போ!
இல்லையேல் .. ..
அவனினும் பெரியோன் தேடி
அவன் போயிருப்பான்

என்று உலக வழக்கை ஒளிவு மறைவின்றி போட்டு உடைக்கிறார் கவிஞர் வைரமுத்து.

இதோ இஜட் ஜபருல்லா கூறுவதை கேளுங்கள்.

உதவி -
எல்லோரிடத்தும் கேட்காதே!
உதவி செய்பவர்களைத்
தேர்ந்தெடு..

என்கிறார் நம்ம ஊர் கவிஞர். அனுபவம் அவரைப் பேச வைக்கிறது போலும்.

“பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை; அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை”  என்று சொல்கிறார்களே?
“காசேதான் கடவுளடா” என்று பாடுகிறார்களே?
பணம் தேடுவது மட்டும்தான் வாழ்க்கையா?

இது போன்ற கேள்விகள் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. இங்குதான் இரு கவிஞர்களின் கருத்தும் மாறுபட்டு ஒளிர்கிறது.

நாற்பதுவரை
பணத்தை நீ
தேடவேண்டும்

நாற்பதின்பின்
பணம் உன்னைத்
தேட வேண்டும்

என்கிறார் வைரமுத்து.

ஏழை என்பதும்
பணக்காரன் என்பதும்
இருக்கின்ற
பணத்தினால் அல்ல
சுரக்கின்ற குணத்தினால்.

செல்வத்தினால்
வாழ்க்கையை
அளக்கிறவனை விட
நிம்மதியால் அளக்கிறவனே

நிலைப்படுகிறான்

என்று சாக்ரடீஸ் ஆக மாறி தத்துவம் பேசுகிறார் கவிஞர் ஜபருல்லா.

வாடிப்போயிருக்கும் மனிதனுக்கு நம்பிக்கையூட்டுவது என்பது ஒரு தனிக்கலை. அது, கவிஞனுக்கு கைக்கூடி வருகின்ற அற்புதக் கலை. சொல்வதைச் சூசகமாகவும் சொல்வான், நெத்தியடியாகவும் சொல்வான்.

“வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில்?” என்று கண்ணதாசன் பாடும் போது, நிரந்தரத் துயிலுக்கு தயாராகும் மனமுடைந்த மனிதன் கூட, கையிலிருக்கும் தூக்க மாத்திரையை தூக்கி எறிந்துவிட்டு வாழ்க்கையோடு போராட ஆயத்தமாகி விடுவான். 

மரணத்தின் கர்ப்பப்பையில்
கலைந்து போனவனே !

நீ
செத்திருந்தால்
ஊர் அழுதிருக்கும்

சாகவில்லை
நீயே அழுகிறாய்

கைக்குட்டை இந்தா
கண்களைத் துடை

உயிரின் உன்னதம்
தெரியுமா உனக்கு?

மனிதராசியின்
மகத்துவம் தெரியுமா?

உயிர் என்பது
ஒருதுளி விந்தின்
பிரயாணம் இல்லையப்பா

அது
பிரபஞ்சத்தின் சுருக்கம்

உன்னை அழித்தால்
பிரபஞ்சத்தின்
பிரதியை அழிக்கிறாய்

பிரபஞ்சத்தை அழிக்க
உனக்கேதப்பா உரிமை?

இஸ்லாம் கூறும் அதே கருத்தைதான் கவிஞர் வைரமுத்துவும் கூறுகிறார். இந்து சாஸ்திரத்தில் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது. ஒருவன் பொருளை மற்றவன் அபகரிக்க இஸ்லாத்தில் அனுமதி கிடையாது. இறைவன் அளித்த உயிரைப் பறிக்க மனிதனுக்கு உரிமையில்லை.

கவிஞர் வைரமுத்துவின் அபாரச் சிந்தனை, வார்த்தை ஜாலங்கள், கற்பனைத்திறன் நம்மை அவர்மேல் காதல் கொள்ள வைக்கிறது.

இதே போன்று கவிஞர் இஜட் ஜபருல்லாவின் வரிகளும் படிக்கின்ற வாசகனுக்குக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பை உண்டாக்குகிறது

வீணை -
தன்னைத்தானே
மீட்டிக்கொள்ள முடியாது..!
விரல்களே -
தந்திக் கம்பிகளின் ஊடே
மறைந்திருக்கும்
நாதத்தை வெளிப்படுத்தும்..!

என்கிறார் கவிஞர் ஜபருல்லா. மேலும் அவர் கூறுவதைக் கேளுங்கள்.

நீரால் உருவாகி
இருட்டிலிருந்து
காற்றால் உயிரேந்தி
வெளிச்சத்தில் விழுந்து
இருட்டுக்கும் ஒளிக்கும் நடுவே
உறங்கி விழித்து
இறுதியில் மரித்து
மண்ணில் புதைந்து
நடுவில்
கொஞ்சம் வாழ்க்கை!

வாழ்க்கை -
இது -
தத்துவமல்ல..
தனித்துவம்..!
இது -
பேசப்படுவதல்ல
பேணப்படுவது.

உன் வாழ்க்கை என்பது
உன்னை மட்டும்
சார்ந்தது அல்ல
உடன் இருப்பவர்களையும்
சூழ்ந்தது.

உதவு.. உதவு..!
வாழ்க்கையின்
கதவு திறக்கும்..!

உயர உயர
பறக்கும் பறவைக்கும்
உணவு என்னவோ
கீழேதான்..!

எண்ணமும் செயலும்
வாழ்க்கையின்
இரு சிறகுகள்..!
உயரப்பற
எனினும்
உள்ளம் என்ற அலகுதான்
உனக்கு
உணவைத் தரும்
மறந்து விடாதே..!

பட்டப்படிப்புக்கு
புத்தகங்களே போதும்
வாழ்க்கைப் படிப்புக்கு
அனுபவங்களே ஆசான்..!

என்கிறார் கவிஞர் ஜபருல்லா, உயர உயர பறந்தாலும் உணவுக்காக பருந்து தாழ்ந்து வரவேண்டுமென்பது இயற்கையின் நியதி. எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் உழைப்பாளிகளுக்கு உரிய மரியாதை கொடுக்காமல் போனால் என்னாகும்?  “நாங்கள் சேற்றிலே காலை வைக்கா விட்டால் நீங்கள் சோற்றிலே கையை வைக்க முடியாது” என்று பாட்டாளிகளின் மேன்மையை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடியதை நாம் மறக்கத்தான் முடியுமா? “உழைப்பாளிகளுக்கு அவர்களின் வியர்வை உலரும் முன்பே அவர்களுக்கான ஊதியத்தை உடனே கொடுத்து விடுங்கள்” என்று கூறிய நபிகள் நாயகத்தின் பொன்மொழி நம் நினைவில் நிற்கிறது.

வாழ்க்கையின் மீது நம்பிக்கை இழந்த மனிதனுக்கு புத்தி வரும்படி இன்னும் எத்தனையோ அறிவுரைகளைக் கூறுகிறார் கவிஞர் வைரமுத்து.

பூமியைக்
கைவிடப் பார்ப்பவனே

பூமி உன்னைக்
கைவிடவில்லையப்பா

காற்று உன்னை மட்டும்
விட்டுவிட்டு வீசியதா?

தன் கிரணக் கீற்றுகளை
நிலா உன் மீது
நிறுத்திக் கொண்டதா?

பூக்கள் உன்னைக் கண்டு
இலைகளின் பின்னால்
தலைமறைவாயினவா?

தன் சிகரங்களில் வசிக்க
வாழ்க்கை உன்னை
வரவேற்கிறது.

நீ ஏன்
மரணத்தின் பள்ளத்தாக்கை
நகங்களால் தோண்டுகிறாய்?

என்று கேள்விக் கணைகளை அடுக்கிக்கொண்டே போகிறார் கவிஞர் வைரமுத்து.

இதோ கவிஞர் ஜபருல்லாவின் அறிவுரைகளை காது கொடுத்து கேளுங்கள்.

வாழ்க்கையின்
வசந்தங்களை
வருங்கால கனவுகள் ஆக்காதே..!
நிகழ்காலத்தில் நிலைநாட்டு.

‘எனக்காக’
என்ற படியைவிட்டு
‘நமக்காக’
என்ற படியை நோக்கி
முன்னேறு..!

எண்ணங்களை
வார்த்தைகளால் வெளிப்படுத்தாதே..!
செயல்களால் நிரூபணம் செய்..!

உயர்ந்த
கோபுரங்களின் உறுதிப்பாடு
மண்ணுக்குள்ளேதான்
மறைந்து கிடக்கிறது..!
உன்-
உள்ள உறுதி
அரிய சாதனைகளுக்கு
அடித்தளம் ஆகட்டும்..!

உன்னை
வெளிப்படுத்தும்
சக்தியைத் தேடு..

அலைகள் -
ஆர்த்தெழுவது
கரையைத் தழுவத்தான்
உன் -
எழுச்சியால்
சொந்தங்களை சுகப்படுத்து..!

என்கிறார் ஊரறிந்த நம் கவிஞர்.

உலகறிந்த கவிஞரோ, சாகப் போகிறவனை எப்படியும் மரணவாயிலிருந்து மீட்டியேத் தீருவது என்ற வைராக்கியத்தோடு எழுதித் தள்ளுகிறார். இப்போது அவருடைய கோபம் (நாகூர் மம்முட்டி கடை டீயில் காணப்படும் சீனியைப் போன்று) சற்று தூக்கலாகவே காணப்படுகிறது. அவரது கண்டிப்பும் விலைவாசியாய் அதிகரிக்கிறது.

உயிரின் விலையை
உணர்த்த வேண்டும் உனக்கு

எழுந்திரு
என் பின்னால் வா

அதோ பார்!

உயிரில் பாதி
ஒழுகி விட்டாலும்
மிச்ச உயிரைக்
கோணிப்பையில் கட்டிவைத்துக்
கூனிக் கிடக்கிறானே கிழவன் – ஏன்?

அபாயம் அறிந்தால்
அங்குலப் புழு
மில்லி மீட்டர்களாய்ச்
சுருள்கிறதே – ஏன்?

பறவையாய் இருந்தும்
பறக்காத கோழி
பருந்து கண்டதும்
பறந்தடிக்கிறதே – ஏன்?

மரணம் என்ற
நிஜத்திற்கு எதிராய்
மருத்துவமனையெல்லாம்
பொய்யாக இன்னும்
போராடுவது ஏன்?

வலையறுந்து நிலை குலைந்தும்
அந்த
ஓரிழைச் சிலந்தி
ஊசலாடுகிறதே ஏன்?

வாழ்க்கையின்
நிமிஷ நீட்டிப்புக்குத்தான்

இத்தனை உரிமையான அறிவுறுத்தலுக்குப் பிறகு, சாவும் எண்ணம் – அதை மனிதன் மூட்டைக் கட்டி வைத்து விடுவது திண்ணம்.

மரண விளிம்பிலிருந்து காப்பாற்றி வந்த ஒருவனுக்கு மேலும் நம்பிக்கையூட்ட கவிஞர் ஜபருல்லாவின் இந்த வரிகள் பெரிதும் உதவும். அவனை சகஜநிலைக்கு கொண்டு வந்துவிடும்.

வாழ்க்கையில் -
உயர்ந்த பீடத்தை
இலக்காக்கு..!
அதே சமயம்
இருக்கின்ற இடத்தையும்
இழந்து விடாதே..!
முன்னேற்றத்தின்
முதற்படி இதுதான்..!

உன் சிந்தனை
மற்றவர்களைச் சுற்றி
இருப்பதை விட
முதலில்
உன்னைப்பற்றி இருக்கட்டும்..!

நீ -
யார் என்பதை உணர்..!
யாராக மாற விரும்புகிறாய் என்பதை
வரையறை செய்..!
எந்த வழியில் என்பதை
திட்டமாக்கு..!

இடையில் வரும்
வெற்றிகளில் -
இறுமாந்து விடாதே..!
இலட்சிய எல்லையை எட்டமுடியாது..!
இறுதியில் சிரிப்பவனே
வெற்றி பெற்றவன்.

பணம் -
இதை ஒரு கருவியாகவே
பயன்படுத்து
வாழ்க்கையாக
மாற்றிவிடாதே..

புகழ் -
இதனால் புத்துணர்ச்சி பெறு.
போதை மயக்கமாய்
ஆக்கிவிடாதே..!

என்று உணர வைக்கிறார் கவிஞர் ஜபருல்லா,

தற்கொலைக்குத் துணிகிறவனுக்கு முடிவுரையாக இந்த வேண்டுகோளை முன் வைக்கிறார் வைரமுத்து.

தம்பீ !

சாவைச்
சாவு தீர்மானிக்கும்

வாழ்க்கையை
நீ தீர்மானி

புரிந்துகொள்

சுடும் வரைக்கும்
நெருப்பு
 
சுற்றும் வரைக்கும்
பூமி

போராடும் வரைக்கும்
மனிதன்

நீ மனிதன்!!!

இப்படியெல்லாம் நம்பிக்கையளித்து விட்டு சாவுமுனயிலிருந்து காப்பாற்றி வந்தவனை உட்கார வைத்து கவிஞர் ஜபருல்லாவின் கவிதையும் வாசித்துக் காட்டினால் போதுமானது. இன்னொரு முறை ஒருபோதும் அந்த தவறான முடிவுக்கு அவன் செல்லவே மாட்டான்.

இதோ ஜபருல்லாவின் அறிவுரை.

வாழ்க்கையில் -
வாய்ப்பு வரும்வரை
காத்திருக்காதே..!
நீ -
உருவாக்கு..

உன் பேச்சு
எல்லோரையும்
சுகப்படுத்துவதாகவே
இருக்கட்டும்
சோகத்தை வேண்டாம்.

வீணான
விமர்சனங்கள் செய்யாதே..!
அது -
உன்னைப்பற்றி
வேண்டாத விமர்சனங்களைத்
தோற்றுவிக்கும்..!

தேவையின்றி
வார்த்தைகளைச் செலவிடாதே..!
தேவையானபோது -
அது -
உனக்குக் கிடைக்காமலே
போய்விடும்..!

அறிவுரை சொல்பவர்களை
ஆராயாதே..!
அவைகளை -
உன்னுள் பொருத்தி
ஆராய்ந்து பார்..!

உன்னைச்சுற்றி
ஒரு -
வட்டத்தை ஏற்படுத்து..
அதன் அச்சாக
என்றும் நீ இரு..!

உன்
மனக்கதவை எப்போதும்
இல்லாதவர்களுக்கு திறந்து வை!
மறுமையில்
சுவனக்கதவு உனக்கு
திறந்தே இருக்கும்..!

ஆமாம் ! அப்துல் காதருக்கும் அமவாசைக்கும் சம்பந்தம் இருக்கத்தான் செய்கிறது.

- அப்துல் கையூம்

vapuchi@gmail.com
http://nagoori.wordpress.com

 

இஸ்லாமியப் பாடல்

Zafarullah

கவிஞர் இஜட் ஜபருல்லாவின் உள்ளத்தைக் கிளறி உணர்ச்சியூட்டும் ஓர் உன்னத பாடலை இறையன்பன் ஹசன் குத்தூசின் கம்பீரமான குரலில் இங்கே கேட்டு இரசிக்கலாம்.

பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்:

அண்ணல் பெருமான் என் இல்லம் வந்தால்

அண்ணல் பெருமான்
என் இல்லம் வந்தால்
அவர்களை எப்படி வரவேற்பேன்?

அஸ்ஸலாமு அலைக்கும்
முகமன் கூறி
ஆரத்தழுவ விரைவேனா?

ஸலவாத்தை என்
நெஞ்சில் நிறைத்து
சத்தத்துடனே ஒலிப்பேனா?

களிப்பின் கடலில்
ஆழ அமிழ்ந்து
கண்ணீர் வழியப் பார்ப்பேனா?

கண்களில் வெளிச்சம்
அதிகம் ஆகி
காணமுடியாமல் அழுவேனா?

வாழ்த்திக் கவிதை
பாட நினைத்தும்
வார்த்தை வராமல் தவிப்பேனா?

வார்த்தைகள் கோடி
வலமாய் வந்தும்
நா எழும்பாமல் திகைப்பேனா?

சிந்தனை இழந்து
செயல்பட மறந்து
சிலையாய் நானும் நிற்பேனா?

கற்பனையே எனக்கு
இப்படி ஆனால்
காட்சி நிகழ்ந்தால் என்னாகும்?

ஒன்றும் புரியவில்லை
எனினும் – என்
உணர்வுகள் மடியவில்லை!

நன்றி : ஆபிதீன் பக்கங்கள்

முக்கனிச் சுவை கூறும் முப்பது கவிதைகள்

 

தேவை ஒரு குண்டு

       Bomb

கவிஞர் இஸட் ஜபருல்லாஹ்வை கவிதை பாட அழைப்பவர்கள் மடியில் வெடிகுண்டை வைத்து கட்டிக் கொண்டிருப்பவர்களைப் போலத்தான் காட்சியளிப்பார்கள். காரணம் மனுஷன் எந்த நேரத்தில் எந்த குண்டை எடுத்துப் போடுவார் என்று யாருக்குமே தெரியாது. ஒரு காலத்தில் இவரே நல்ல குண்டாகத்தான் இருந்தார். இப்போதுதான் சற்று மெலிந்து விட்டார்.

நாகூரில் நடந்த “தேவை மனித நேயம்” என்ற நூல் வெளியீட்டு விழாவின்போது நம் குசும்புக் கவிஞர் எழுதி வாசித்த கவிதையின் தலைப்பு “தேவை ஒரு குண்டு” .  குறும்பான தலைப்பு கொடுக்கும் இவரை “Naughty வெடி” என்று கூட  அழைக்கலாமோ?  

தேவை ஒரு குண்டு

- கவிஞர் இஸட் ஜபருல்லாஹ்

ஆண்டுகள்
முன்னோட்டி நடக்க
இந்த -
மனிதர்கள் மட்டும் ஏன்
பின்னோக்கியே
ஓடுகிறார்கள் .,?

பொற்காலம்
முன்னிற்க
தற்காலம் ஏன்
கற்காலம் ஆகிறது..?

மதம் பிடித்தவர்களின்
மூளைச் சலவைக்குள்
மாட்டிக் கொண்ட
இவர்கள் -
தன் மனஅழுக்குகளை
எப்படி -
சலவை செய்யப்
போகிறார்கள்..?

ஹிட்லரின் -
கில்லட்டின் அழிந்தது
என -
மகிழ்ந்தால்
ஜெல்லட்டின் வந்து
அலைக்கழிக்கிறதே ?

‘நாட்டு வெடி’ என
பெயர் வைத்ததால்
நாட்டையே அழிக்கிறதோ?

வகை வகையாய்
வெடிகுண்டு
செய்யும்
வல்லுநர்களே..!

சாதி – மத – இன
வேற்றுமை
சுவர்களை
தகர்த்து
தரைமட்டமாக்கும்
ஒரு
நல்லவெடிகுண்டு
தயார் செய்யுங்களேன் !!!

(தலைப்பைப் பார்த்து பயந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கவிதையை முழுதும் கேட்ட பிறகுதான் ‘அப்பாடா.. என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்)

கவிஞரின் “இறைவா!” கவிதைகள்

கவிஞரைப் பற்றிய அறிமுகம்

 

மானுட மகத்துவம்

Zafarullah

சடையப்ப வள்ளலின் கொடைத்தன்மையை வருணிக்கையில்

“அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்
உடையான் சடையன்” என்று கூறுவான் கவிக்கொம்பன் கம்பன்

சடையப்ப வள்ளலின் நெடுங்கதவு திறந்தே இருக்குமாம். (செல்வத்தின் உச்சியில் மிதந்த அவனது வீட்டுக் கதவு வேலைப்பாடு மிக்கதாகவும், நீண்டு நிமிர்ந்த நெடிய வாசல் நிலையை அலங்கரிக்கக் கூடியதாகவும் இருந்ததை ஒரே வார்த்தையில் – ‘நெடுங்கதவு’ என்ற வார்த்தை மூலம் நம் கண்முன்னே வந்து காட்சியாய் நிறுத்தி விடுகிறான் கம்பன்)

பசித்தவர் வந்து புசித்திட ஏதுவாக எந்நேரமும் அந்தக் கதவுகள் திறந்தே இருக்குமாம். மானுடப் பண்பின் மகத்தானதொரு பண்பு ஈகை. உதவி கேட்டு வருபவர்களுக்க்கு “மூடு” இருக்கும் போது மட்டும் வாரி வழங்கிவிட்டு மற்ற நேரங்களில் முகத்தைச் சுளித்து விரட்டியடிப்பது மானுடப் பண்பன்று. “இல்லை” என்ற சொல்லை உதிர்க்காத ஈகைகுணம் வாய்ந்தவனாக வாழ்ந்திருக்கிறான் சடையப்ப வள்ளல்.

“நித்தமும் கதவினை திறப்பது மானுடம்” என்ற கவிஞர் இஸட் ஜபருல்லாஹ்வின் வைர வரிகள் நம்மை சிந்திக்க வைக்கின்றன. மானுடத்தை இரத்தினச் சுருக்கமாக வருணிக்கும் இவர் பாணியே தனி.

மானுட மகத்துவம்

- கவிஞர் இஸட் ஜபருல்லாஹ்

மானுடம் என்பது மறைபொருள் அல்ல !
     மானுடம் என்பது ஜீவியக் கருப்பொருள் !
மானுடம் என்பது வேறிடம் இல்லை !
     மானுடம் என்பது மனிதனுக்குள்ளே !

மனிதனை மனிதன் உணர்வது மானுடம் !
     மனிதனுள் மனிதம் இணைவது மானுடம் !
மனுவின் நீதியை துறப்பது மானுடம் !
     மனிதன் புனிதனாய் சிறப்பது மானுடம் !

நிலைமை உணர்வது உதவுதல் மானுடம் !
     நித்தமும் கதவினைத் திறப்பது மானுடம் !
சளையாதுழைக்கும் சக்தியே மானுடம் !
     சத்திய வாழ்க்கைப் பத்தியம் மானுடம் !

மானுடம் என்பது அன்பில் பிறந்தது !
     மானுடம் என்பது செயலாய் நிற்பது !
மானுடம் என்பது அகத்துள் ஒளிர்வது !
     மானுடம் ஒன்றே மகத்துவம் மிக்கது !

 

கவிஞர் ஜபருல்லாஹ்வின் தூது

zafarullah

கவிஞர் இஸட் ஜபருல்லாஹ் எழுதிய “நிலவு சொன்னது!” என்ற வித்தியாசமான கவிதையை நான் அண்மையில் படித்து இரசித்தேன். “தூது விடு படலம்”  என்பது ஒரு தனி ‘ட்ராக்’ இலக்கியம். பக்தியை ஊட்டும் நூலாகப் பிறந்த இது, நாளடைவில் சிற்றின்ப இலக்கியமாக மாறியது தனிக்கதை. ‘அஃறிணை’ பொருட்களை; அவை பேசாது என்று நன்கு தெரிந்திருந்தும் அவைகளோடு உரையாடுவது கவிஞர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ‘ஸ்பெஷல் லைசன்சு’.

அன்னம் விடுதூது, புறா விடு தூது, நாரை விடு தூது, கார் விடுதூது, வண்டு விடு தூது என்று நிற்பன, நடப்பன, பறப்பன என்று அனைத்தையும் (போஸ்ட்மேனைத் தவிர) தூது அனுப்புவார்கள் இந்த ‘லைசன்சு ஹோல்டர்கள்’. “நாராய் நாராய்! செங்கால் நாராய்!” என்ற செய்யுளை பள்ளிப்பாடத்தில் படித்தது நினைவிருக்கலாம்.

(நாகூர்ப்புலவர்களாக இருந்திருந்தால் காடை, கவுதாரி, கொசு உல்லான், கோட்டுல்லான், குயில், பொன்னாந்தட்டான் என்று உண்ணும் பறவைகளாகப் பார்த்து தூது அனுப்பியிருப்பார்கள்)

காளிதாசன் ‘மேக சந்தேசம்’  என்ற காவியம் படைத்தான். “ஓடும் மேகங்களே! ஒரு சொல் கேளீரோ” என்று கண்ணதாசன் டி.எம்.எஸ். வாயிலாக மேகத்தை தூது விட்டான். “தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு; எங்கள் திருநபியிடம் போய்ச் சொல்லு” என்று கவிஞர் தா.காசிம் இசைமுரசு நாகூர் ஹனீபா வாயிலாக தூதுவிட்டார். “போகும் மேகங்களே! பூமான் நபிக்கு ஸலாத்தைச் சொல்லுங்களேன்! மதினாவில் வாழும் மஹ்மூது நபிக்கு மனத்தூதைக் கூறுங்களேன்” என்று அடியேனும் பாடகர் ஜெய்னுல் ஆபிதீன் மூலமாக தூதுவிட்டேன்.

இவையாவும் ‘ஒன் வே டிராபிக்’ தூது. இதோ கவிஞர் இஸட் ஜபருல்லா விடுத்திருக்கும் தூதை கவனியுங்கள். இது “டூ வே டிராபிக்”. இங்கிருந்து நிலவை அனுப்புகிறார் தூது. அது போகிறது. போய் பதில் செய்தியையும் கொண்டு வருகிறது

“அண்ணல் நபி பொன்முகத்தை கண்கள் தேடுதே” என்ற இசைமுரசின் இனிமையான பாடலில் ஒரு அற்புதமான வரி வரும். “தென்றல் அதை தூது விட்டேன் திரும்பவில்லையே..!” என்று. அது எப்படி திரும்பி வரும்? காரணம் அது போன இடம் அப்படிப்பட்ட இடம். திரும்பி வர மனம் இசையாது. புஷ்பங்களின் மகரந்தாமாம் மதினப் பூமியில் அதற்கு புரள வேண்டும்; உருள வேண்டும்; போலிருந்திருக்க வேண்டும். இல்லாமல் போனால் அந்த கஸ்தூரி மணத்தில் லயித்துப் போய் அங்கேயே சங்கமித்திருக்க வேண்டும். அதனால்தான் தூத் போன தென்றல் திரும்பவில்லை.

கவிஞர் இஸட் ஜபருல்லாஹ் தூதுவிட்டது நிலவை அல்லவா? தென்றல் திரும்பாமல் போனால் என்ன? இருக்கவே இருக்கிறது வாடைக் காற்று. அதை வைத்து நாம் ‘அட்ஜ்ஸ்ட்’ செய்துக் கொண்டு போய் விடலாமே?

ஆனால் நிலவு அப்படியா? இருப்பது ஒன்றே ஒன்று அல்லவா? அது இல்லாமல் போனால் இரவு வெளிச்சத்திற்கு என்னச் செய்வது? எப்படி பிறை பார்ப்பது? எங்ஙனம் பெருநாள் கொண்டாடுவது? மாதத்தை எப்படி கணக்கெடுப்பது? இடுப்பில் இருக்கும் குழந்தைகளுக்கு தாய்மார்கள் எப்படி நிலாச்சோறு ஊட்டுவது? கவிஞர்கள் கவிதை எழுதுவதற்கு ஒரு முக்கியமான ‘கரு’ மிஸ்ஸிங் ஆகி விடுமே? இவ்வளவு பிரச்சினை இருக்கிறதே?

எனவேதான் எங்கள் பூமான் நபியைக் கண்டபின்பும் அதை திரும்ப வரச் செய்கிறார் நம் கவிஞர். விவரமான மனிதர் இவர். அத்தனை ஒரு மகத்துவம் நிறைந்த இடத்திற்குச் சென்ற நிலவானது வெறுமனே எப்படி வரும்?

சில நல்ல செய்திகளைத் தாங்கி வருகிறது. அறிவுரைகளைச் சுமந்து வருகிறது. புத்திமதிகளை ஏந்தி வருகிறது. போதனைகளோடு புறப்பட்டு வருகிறது. இனி கவிஞர் இஸட் ஜபருல்லாஹ் அவர்களின் கவிதை வரிகளில் மூழ்குவோம் :

நிலவு சொன்னது ……

விண்ணகத்தில் சதிராடும்
வெண்ணிலவை நான் கேட்டேன்
அண்ணல்நபி பூமுகத்தைக் கண்டாயா….? அவர்
சொன்னமொழி எனக்கெடுத்துச் சொல்வாயா?

கன்னல்நபி நாயகத்தை
கண்டுவந்த உணர்வதனை
விண்டுரைக்க வார்த்தையில்லை என்றது..! அதை
விடவில்லைநான் அதனால் சொன்னது…!

அண்ணலாரின் ஒளிமுகத்தை
என்முகத்துக் கீடாக்கி
பாட்டெழுதும் அறியாமை சொல்லிவந்தேன்..! – நெஞ்சைப்
பண்படுத்தும் போதனைகள் அள்ளி வந்தேன்..!

ஏழைகளுக் கிரங்கச் சொல்லி
என்னிடத்தில் சொல்லச் சொன்னார்…!
ஏற்றுவந்து கூறிவிட்டேன் செல்வர்களே..! பணம்
எத்தனை நாள் நிலைத்திருக்கும் சொல்லுங்களேன்…?

இம்மைதரும் சுகங்களிலே
மறுமையினை மறந்திடாதீர்..!
என்றுஎன்னை நினைவூட்டச் சொன்னார்கள்..! நபிகள்
என்றும் உலகம் சதமில்லை என்றார்கள்..!

ஆளுகின்ற பதவியெல்லாம்
‘அல்லாவின் அடிமை’ யென்ற
பதவிக்குமுன் ஈடாகாது என்றார்கள்..! நபிகள்
பக்குவமாய் எடுத்துரைக்கச் சொன்னார்கள்..!

மூமீன்கள் பிளவுபட்டால்
ஏமாளி ஆனார்கள்…!
ஏனிந்த வேற்றுமைகள்..? என்றார்கள் – நபிகள்
என்னைத்தான் கேட்டுவரச் சொன்னார்கள்..!

சுவனசுகம் துறந்தவராய்
நரகநெருப்பை நாடுகின்றார்..!
சொல்லிவிடு வெண்ணிலவே என்றார்கள்…! இதை
சொல்லும்போது முகத்தில்வாட்டம் கொண்டார்கள்…!

எம்பெருமான் சொன்னவைகள்
எல்லாமும் சொல்வதென்றால்
எந்தன்மனம் தாங்காது என்றது..! நிலவு
என்னை விட்டு வானில்விரைந்து சென்றது…!

(இந்த தேர்தல் களத்தில் ஒற்றுமை காட்ட வேண்டிய மூமீன்களாகிய நாம் பிளவுபட்டு ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளும் இத்தருணத்தில் இக்கவிதை மிகவும் பொருத்தமாக உள்ளது)

- அப்துல் கையூம்

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 47 other followers