RSS

Category Archives: கவி.கா.மு.ஷெரீப்

பாட்டும் நானே! பாவமும் நானே!

திருவிளையாடல் படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற பாடலை எழுதியது  கண்ணதாசனா அல்லது  கவி.கா.மு.ஷெரீப்பா?

இந்த விவாதம் இன்று நேற்றல்ல வெகு காலமாகவே நடந்து வருகிறது.

இந்த விவாதத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது என்னவோ திரு.ஜெயகாந்தன் அவர்கள்தான். அவர் வாயைத் திறந்திருக்காவிட்டால் இந்த ரகசியம் பெட்டிக்குள் வைத்தது வைத்தபடி இருந்திருக்கும். நாமும் மண்டையை உடைத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. 

‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற பாடலை எழுதியவர் கவிஞர் கா.மு.ஷெரீப். ஏ.பி.நாகராஜன் அவரது நண்பர் என்ற காரணத்தினால் பிறிதொரு பிரபல கவிஞர் பெயரால் இந்தப் பாடல் வெளிவந்த போதும் ‘கேட்பதற்கு நன்றாகத்தானே இருக்கிறது’ என்று மனமுவந்து பாராட்டும் உயர் பண்பை நான் இவரிடம்தான் பார்த்தேன்.

இப்படியொரு பெரிய அரிவாளை “ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்” என்ற நூலில் எடுத்துப் போட்டார் அந்த கொடுவாள் மீசைக்காரர்.

இத்தோடு நிறுத்தியிருந்தால் பராவாயில்லை.

‘பாட்டும் நானே, பாவமும் நானே’ என்ற பாடலைத் தான் எழுதியதாகக் கண்ணதாசன் கூறுகிறார்.

என்ற குற்றச்சாட்டைக் கூறுகிறார்.

வேறொருவர் பாட்டை தனது பாடல் என்று கூற வேண்டிய அவசியம் கண்ணதாசனுக்கு ஏன் வந்தது? நொடிக்கு ஒரு பாடலை அள்ளி வீசக்கூடிய கண்ணதாசன் மீது எப்படி ஒரு பழியா?

பெயர் டைட்டிலில் போடப்பட்டு விட்டதினால், தன் இமேஜைக் காப்பாற்ற இப்படியொரு தற்காப்பு தேவைப்பட்டதோ?

கவி.கா.மு.ஷெரீப்பை அவர்களை உயர்த்தி சொல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இப்படியொரு பழியை தன்னை அறியாமலேயே போட்டு விட்டாரா ஜெயகாந்தன்?

ஜெயகாந்தனுக்கும் கண்ணதாசனுக்கும் ஏதாவது முன்விரோதமா?

கவி. கா.மு.ஷெரீப் அவர்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தவர் ஜெயகாந்தன். நெருக்கமாகவும் இருந்திருக்கிறார். அவர் மனதுக்குள் குடைந்துக் கொண்டிருந்த இந்த உண்மையை ஒருநாள் போட்டு உடைத்தும் விட்டார். இதுதான் உண்மை.

இதோ அந்த பாடலின் முழு வடிவம் :

பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைப்பேனே – (பாட்டும்)

கூத்தும் இசையும் கூற்றின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ – (பாட்டும்)

அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே (2)
என்னிசை நின்றால் அடங்கும் உலகே…

நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே (2)
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா
ஆடவா எனவே ஆடவந்ததொரு
பாடும் வாயினையே மூடவந்ததொரு – (பாட்டும்)

பாடலின் வரிகளை வைத்துக் கொண்டு ‘இது இன்னாருடைய வரிகள்’ என்று சொல்லும் திறமை நமக்கு போதாது. உதாரணத்திற்கு மருதாகாசி, கவி.கா.மு,ஷெரீப் – இவர்களுடைய பாடல்கள் கேட்பவர்களுக்கு குழப்பத்தைத் தரும். எது யாருடைய பாடலென்று சொல்ல முடியாது. 

“திருவிளையாடல்” படத்தில் இடம்பெற்ற அந்த கிளைமாக்ஸ் காட்சி பாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தார் ஏ.பி.என்.அவர்கள். 

இறைவனே இறங்கி வந்து பாடும் பாடல் அது. அவன் பாடுகையில் இந்த ஜீவராசிகள் அனைத்தும் அசைய வேண்டும். பாட்டை நிறுத்துகையில் இந்த உலகமே ஸ்தம்பித்து நின்றுவிட வேண்டும். அப்படியொரு எஃபெக்டை ஏ.பி.என் எதிர்பார்த்தார்.

பாட்டுக்குத்தான் மெட்டு என்பது கண்ணதாசனின் பாலிஸி. அதற்காக மெட்டுக்கு கண்ணதாசனால் பாட்டு எழுத முடியாது என்று யாரும் நினைக்கக் வேண்டாம். கண்ணதாசன் ஒரு பிறவிக் கவிஞன். அவனால் எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலைக்கும், எப்படிப்பட்ட மெட்டுக்கும் பாட்டெழுத முடியும்.

Homer sometimes nods. ‘ஆனைக்கும் அடி சறுக்கும்’ என்பார்கள். கிட்டத்தட்ட ஒரு டஜன் பாடல்கள் எழுதி, எழுதி கொடுத்துப் பார்த்து சளைத்து விட்டார் கவியரசு. ஏ.பி.நாகராஜனின் பெரும் எதிர்பார்ப்புக்கு அந்த பாடல் வரிகள் ஈடு கொடுக்க முடியவில்லை. கே.வி.மஹாதேவனையும் அவைகள் திருப்தி படுத்த முடியவில்லை.

‘கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்’ என்று ஏ.பி.என். நினைத்தாரோ என்னவோ. தன் ஆத்ம நண்பர் கா.மு.ஷெரீப்பை அழைத்து பாடல் எழுதச் சொன்னார். சிறிது நேரத்தில் பாடலும்  ஒகே ஆகிவிட்டது. அதுதான்  இறைவனின் நாட்டம் போலும். 

‘திருவிளையாடல்’ படம் வெளிவந்த நேரம் கண்ணதாசனின் புகழ் உச்சாணியில் இருந்தது. படம் அமோக வெற்றியைப் பெற கண்ணதாசனின் பெயர் தேவைப்பட்டது இயக்குனருக்கு.

அனைத்து பாடல்களும் கண்ணதாசன் எழுதியிருக்க ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் வேறொரு கவிஞரின் பெயரைப்போட மனது ஒப்பவில்லை ஏ.பி.என்.நாகராஜனுக்கு.

நண்பரின் மனதைப் புரிந்துக் கொண்ட கவி.கா.மு.ஷெரீப் அவர்கள், “தம்பி கண்ணதாசன் பெயரையே நான் எழுதிய பாட்டுக்கும் போட்டுவிடுங்கள்” என்று பெருந்தன்மையுடன் சொல்லியிருக்கிறார்.

யாரோ எழுதிய பாடலை தானெழுதியதாக ‘புருடா’ விடும் கவிஞர்களின் மத்தியில் தானெழுதிய சிறப்பான பாடலை மற்றவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்க, உண்மையிலேயே பெரிய மனது வேண்டும். அந்த பெருந்தன்மை, கண்ணியம், மனப்பக்குவம், நாகரிகம் கவி கா.மு.ஷெரீப் அவர்களிடம் நிரம்ப இருந்தது. படத்தின் டைட்டிலில் கண்ணதாசன் பெயர்தான் போடப்பட்டிருந்தது.
 
கா.மு.ஷெரீப், கண்ணதாசன் என்ற இரு மாபெரும் கவிஞர்களை பிரித்து வைத்திருந்தது அரசியல்தான். கண்ணதாசனைப் பொறுத்தவரை தமிழகத்துக் கட்சிகள் அனைத்திலும் ஒரு ரவுண்டு வந்து விட்டார். கா.மு.ஷெரீப் கட்சி விஷயத்தில் மிகவும் கொள்கைப் பிடிப்போடு இருந்தவர். கண்ணதாசன் தி.மு.க.வில் இருந்தபோது கா.மு.ஷெரீப் அவர்கள் மாபொசி தலைமையின் கீழ் இயங்கிய தமிழரசு கட்சியில் முக்கிய அங்கம் வகித்திருந்தார். இருவரும் நேருக்கு நேர் சந்திப்பதைக்கூட தவித்தார்கள்.

கண்ணதாசனுக்கும், தி.மு.,க.வுக்குமிடையே இருந்த உறவு கசந்து, கண்ணதாசன் வேறு புகலிடம் தேடிக் கொண்டிருந்த நேரம் அது. தமிழரசு கட்சியில் முக்கிய அங்கம் வகித்த ஏ.பி.என். அவர்கள் கண்ணதாசனை கோழியை பிடித்து அமுக்குவதைப்போல் ஒரே அமுக்காக அமுக்கி விட்டார்.  

வடிவுக்கு வளைகாப்பு, நவராத்திரி போன்ற ஏ.பி.என். படங்களுக்கு கண்ணதாசன்தான் பாடலெழுதினார். அதுசமயம் கண்ணதாசனுக்கும், கவி.காமு. ஷெரீப்புக்கும் இடையே இருந்த அரசியல் மனக்கசப்பு விலகி சுமூக உறவு தொடர்ந்தது. 
 
‘பாட்டும் நானே பாவமும் நானே’ பாடலை எழுதியவர் சத்தியமாக கண்ணதாசன்தான். அதுவும் கே.வி.மகாதேவன் பாடல் பதிவரங்கத்தில் மெட்டு போட்டுக் காட்ட, உடனுக்குடன் கண்ணதாசன் எழுதித் தந்த பாடல் அது என்று வாதிடுவோரும் உண்டு. 

நம் போதாத காலம் சம்பந்தப்பட்ட நபர்கள் – ஏ.பி.என்/ கண்ணதாசன்/ கவி.கா.மு.ஷெரீப்/ கே.வி.மகாதேவன் – யாருமே இப்போது உயிரோடு இல்லை. உயிரோடு இருக்கின்ற ஒரே நபர் டி.எம்,செளந்தர்ராஜன் ஒருவர்தான். அவரும் இந்த விஷயத்தில் ஏனோ வாயைத் திறக்க மாட்டேன் என்கிறார். “நல்லா மண்டையைப் பிச்சிக்கிடுங்கோ!” என்று வேடிக்கை பார்க்கிறார் போலும்.

வாமனன் எழுதிய டி.எம்.எஸ். ஒரு பண்-பாட்டுச் சரித்திரம் என்ற 496 பக்கங்கள் அடங்கிய தலையணை புத்தகத்தில் துருவித் துருவி ஆராய்ந்தேன்.

ஊஹூம்.. .. ..

- அப்துல் கையூம்

 

கவிஞரைப்பற்றி கலைஞர்

 

கவிஞர், கலைஞர், துரை முருகன், டி.ஆர்.பாலு

 

கவி கா.மு.ஷெரீப் அவர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள வலைப்பூ

இந்த புகைப்படம் தந்து உதவிய கவி.கா.மு.ஷெரீப் அவர்களுடைய புதல்வர் சீதக்காதி அவர்களுக்கு என் நன்றி.

“திரைப்படப் பாடல்கள் என்றைக்கும் நிலைத்து நிற்கக் கூடியவை அல்ல. ஆனால் அந்தப் பாடல்களும் கூட நிலைத்து நிற்க முடியும் என்பதற்கு எடுத்துக் காட்டாக அண்ணன் கவி கா.மு.ஷெரீப் எழுதிய சில பாடல்கள் உண்டு. இன்றைக்கும் ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே” என்கின்ற பாடலைக் கிராமப்புறத்திலே உள்ளவர்களெல்லாம் பாடக் கேட்டு அவர்கள் அந்தப் பாட்டிலே ஒரு மகிழ்ச்சியை உருவாக்கிக் கொண்டு நடப்பதைக் கண்டு நான் பூரிப்படைந்திருக்கிறேன்”

கலைஞர் மு. கருணாநிதி

 

உள்ளத்தில் நல்ல உள்ளம்

ஜெயகாந்தன்

தமிழகம் கண்ட மகா கவிஞர்களில் கவி கா.மு.ஷெரீப் அவர்களின் பெயர் காலத்தால் அழியாதது. அவரது புகழைப் பாடும் வகையில் கவி.கா.மு.ஷெரீப் என்ற ஒரு வலைப்பூவைத் தொடங்கி அவரைப் பற்றிய செய்திகளைத் தொகுத்து, வலைத்தளத்தில் தொடர்ந்து பதிவு செய்தி வருகிறேன்.

தமிழகத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயகாந்தன் கவிஞரின் நற்பண்புகளை விரிவாகப் பட்டியலிட்டிருக்கின்றார். அதிலிருந்து சில பத்திகள் :

“ஷெரீப் அவர்கள் பல நற்பண்புகளின் உறைவிடமாய் இருந்தார். சினிமா உலகத்தில் தொடர்பு இருந்தும், அந்த சினிமா உலகச் சீரழிவுகளில் சிக்கிக் கொள்ளாத உயர் பண்பு கவிஞர் கா,மு,ஷெரீப்பிடமே இருந்தது.

ஒரு கவிஞன் வறுமையிலும், செம்மையாக எப்படி வாழ்வதென்பதை அவரிடமே நான் பயின்று கொண்டேன்.

கவிஞர் கா.மு.ஷெரீப் முஸ்லீமாக இருந்த போதிலும் ஒரு தீவிரமான சைவர். அது குறித்து அவரை நாங்கள் பரிகாசம் செய்வதுண்டு.

கள் வியாபாரம் செய்பவன் கள் அருந்தமாட்டான். அது போல கசாப்பு வியாபாரம் செய்பவன் கறி சாப்பிட மாட்டானா? கவிஞர் கா.மு.ஷெரீப் கறி வியாபாரம் செய்யத் தயாராக இருந்தாலும் இருப்பாரே ஒழியப் புலால் சாப்பிட ஒப்பமாட்டார்.

அவரைப் பார்த்து நானும் கொஞ்சநாள் சைவமாக இருந்தேன். ஷெரீப் புகை பிடிப்பதில்லை. மேலும் புகைப்பிடிப்பவர்களையும், அவருக்குப் பிடிக்காது என்றிருந்தேன்.

நான் அவர் எதிரில் ஒரு மரியாதைப் பண்பு கருதிப் புகைப் பிடிக்காமல் இருக்கும் பழக்கத்தை மேற்கொண்டேன். அதனை நான் அவர் விஷயத்தில் இன்றுவரை கைக்கொண்டிருக்கிறேன்.

ஷெரீப் அவர்கள் பெரிய குடும்பஸ்தர். நிறைய குழந்தைகள். ஓர் அச்சகம் வைத்திருந்தார். அவரை நம்பி ஐந்தாறு தொழிலாளர்கள் இருந்தனர். ‘தமிழ் முழக்கம்’ என்னும் வாரப் பத்திரிக்கையும், ‘சாட்டை’ பத்திரிக்கையும் அங்குதான் கம்போஸ் ஆயின.

நாள் முழுதும் நான் கவி கா.மு.ஷெரீப்புடன் பொழுது கழித்த நாட்களில் மதியம் சிற்றுண்டியாக வேகவைத்த புளியங்கொட்டைச் சுண்டல் சாப்பிடுவோம். அது மிகவும் புரோட்டீன் சத்து உடையது என்பார் ஷெரீப். அந்தக் காலத்தில் சாப்பிட்டது தவிர, அதன் பின்னர் அவ்வளவு ருசியான அந்தச் சிற்றுண்டியைச் சாப்பிடும் சந்தர்ப்பம் இன்னும் எனக்கு வரவில்லை.

கதையோ, கட்டுரையோ எழுதித் தந்தால் ‘ரூபாய் பத்து மட்டும்’ என்று தமிழில் எழுதிய செக் ஒன்று தருவார் ஷெரீப் அவர்கள். பத்திரிக்கைக்கு எழுதிச் சன்மானம் வாங்கியது ஒரு காலத்தில் கவி கா.மு.ஷெரீப் அவர்கள் ஒருவரிடமிருந்துதான் என்பதை நன்றியோடு எப்போதும் நினைவு கூர்கிறேன்.

“பாட்டும் நானே பாவமும் நானே” என்ற பாடலை எழுதியவர் கவிஞர் கா.மு.ஷெரீப். ஏ.பி.நாகராஜன் அவரது நண்பர் என்ற காரணத்தினால் பிறிதொரு பிரபல கவிஞர் பெயரால் இந்தப் பாடல் வெளிவந்த போதும் “கேட்பதற்கு நன்றாகத்தானே இருக்கிறது” என்று மனமுவந்து பாராட்டும் உயர் பண்பை நான் இவரிடம்தான் பார்த்தேன்.

“பாட்டும் நானே, பாவமும் நானே” என்ற பாடலைத் தான் எழுதியதாகக் கண்ணதாசன் கூறுகிறார்.

கவி. கா.மு.ஷெரீப் அவர்களின் படைப்பை விடவும், அவரது பாடல்களை விடவும், அவரையும், அவரது குணாதிசயங்களையும் நான் அதிகம் மதிக்கின்றேன் என்பதற்கு எடுத்துக்காட்டாக, சான்றுக்காக ஒன்றைக் குறிப்பிட்டது சர்ச்சையாகலாம் என்று தெரிந்தே அதை நான் எழுதினேன்.

- ஜெயகாந்தன்

[பத்திரிக்கையாளர் ஜே.எம்சாலி எழுதிய கலைமாமணி கவி. கா.மு.ஷெரீப் என்ற கட்டுரையிலிருந்து.]

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 47 other followers