RSS

Category Archives: நீதிபதி இஸ்மாயீல்

கம்பன் என் காதலன் (மூன்றாம் பாகம்)

கவியரசரும் நீதியரசரும்

- அப்துல் கையூம்

கவியரசர் கண்ணதாசன் யார் ஒருவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுகிறாரோ அவரை என்றாவதொருநாள் “டமால்” என்று கீழே போட்டுக் கவிழ்த்தப் போகிறார் என்று அர்த்தம்.

இந்த மனிதரிடம் நிறைய வாங்கிக் கட்டிக் கொண்டவர்களில் நான்கு பேர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்கள், காமராசர், அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோர்.

கண்ணதாசன் யாரையாவது தூற்றி வசைபாடினால், அவரை பிறிதொரு சமயம் வானாளவ உயர்த்தி வாழ்த்திப் பாடப் போகிறார் என்றும் பொருள் கொள்ளாலாம்.

கவியரசரின் வாழ்க்கையில் இது போன்ற நிகழ்வுகள் ஒன்றல்ல, இரண்டல்ல. எத்தனையோ எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

சீரிய நெற்றி எங்கே?
சிவந்தநல் இதழ்கள் எங்கே?
கூரிய விழிகள் எங்கே?
குறுநகை போன தெங்கே?
நேரிய பார்வை எங்கே?
நிமிர்ந்தநந் நடைதான் எங்கே?
நிலமெலாம் வணங்கும் தோற்றம்
நெருப்பினிலே வீழ்ந்த திங்கே!

என்று பண்டிதர் நேருவை வாயார வாழ்த்திப் பாடிய அதே வாய்தான் முன்னொருமுறை

- சுட்டதொரு
கத்திரிக்காய் என்பேனா? கருங்குதிரை முகம் என்று
சித்தரித்துச் சொல்வேனா? திறம்போன பனம்பழத்தைச்
சப்பியபின் போட்ட தரமென் றுரைப்பேனா?
பழம்போன வாழைத்தோல் பக்குவமே நேருவமை

என்று நேருவின் தோற்றத்தை கேவலப்படுத்தி தூற்றிப் பாடியது.

உணர்ச்சிக்கு அடிமையானவர்களின் உள்ளத்தில் உருவெடுக்கும் வார்த்தைகள் காலத்திற்கேற்ப உருமாறும் என்பது இதிலிருந்து தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

இராஜாஜி என்று அழைக்கப்பட்ட இராஜகோபாலச்சாரியை அறியாதவர்கள் நம்மில் யாருமே இருக்க முடியாது.

வாழ்வாங்கு வாழ்வாரைத்
தெய்வத்துள் வைக்குமொரு
வையத்துள் வாழு மனிதா!

வையத்தில் இராசாசி
வாழ்வுக்குச் சான்றாக
வாழ்வொன்று எங்கும் உளதா?

என்று இராஜகோபாலச்சாரியை வாய்மலர வாழ்த்திப் பாடிய கவியரசரின் அதே திருவாய்தான் முன்னொருமுறை

குள்ள நரிச் செயல் செய்யும் நச்சு உள்ளக்
கொலைகாரன் இராசகோ பாலாச்சாரி
கள்ளமறு தாய்நாட்டின் பொறுப்பை ஏற்றுக்
கயமையிலே ஆட்சிபுரிகின்றார்! அன்று
பிள்ளை மனங் கெடுப்பதற்கே இந்தியென்னும்
பிய்ந்த செருப்பினை எடுத்துத் தமிழ்ச் சேயின்
உள்ளமதிற் கட்டாயம் புகுத்த வென்று
உரைத்ததனைக் கேட்டவர்கள் துடித்தார் மாதோ!
இளங்குழந்தை நெஞ்சினிலே விஷமா! சீச்சீ!
இழிகுணத்தான் செய்கையினைத் தடுத்தே நிற்போம்!

“வளங்கொல்ல வந்துற்றான் ஆரியப் பேய்
வன்நெஞ்சன்”

என்றெல்லாம் மடை திறந்த வெள்ளமென வாய்க்கு வந்தபடி வசைபாடி ஆத்திரம் தீர்த்துக் கொண்டது.

நிதான புத்தி நேரிய பார்வை
நின்று கண்டறிந்து நெடுவழி செல்லல்
சதாவ தானத் தனிப்பெருந் திறமை
தன்னை யறிந்து பிறர்உளம் நோக்கல்
நதியென ஓடி நாளெலாம் உழைத்தல்
நாடும் மக்களும் நலம்பெற நினைத்தல்
அதிசயச் சொற்றிறன் ஆய்வுறு கூர்மதி
அன்பர் நலத்திலும் அக்கறை செலுத்துதல்
மதியுறு மாண்தகை மந்திரிக் கிவையே
இலக்கண மென்றால் இலக்கியம் அவரே!

என்று கலைஞர் கருணாநிதியை போற்றிய அதே கண்ணதாசன்தான் “இவனெல்லாம் ஒரு கவிஞனா?” என்று கேட்ட அவரைப் பார்த்து..

அஞ்சாதா சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து
தன்சாதி தன்குடும்பம் தான்வாழ‌ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் கவிஞ‌னெனில்

  • நானோ கவிஞ‌னில்லை
  • என்பாட்டும் கவிதையல்ல‌.

பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய‌ கதையுரைத்து
வகுத்துண‌ரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா

  • பேதையனே கவிஞ‌னெனில்
  • நானோ கவிஞ‌னில்லை.

என்று கலைஞரை அக்கு வேறு ஆணிவேராக பிரித்து மானபங்கப் படுத்தினார் கவியரசர்.

கவியரசர் கண்ணதாசன் வாழ்த்திப்பாடி, அவரை வசைபாடாது இறுதிவரை மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த ஒரே மனிதர் யாரென்றால் அவர் இலக்கியச் செல்வர் நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களாகத்தான் இருக்க முடியும். அந்த மனிதர்குல மாணிக்கத்தை கவியரசர் கண்ணதாசன் மனம் நெகிழ்ந்து எழுதிய கவிதை இது :

புன்னகை மின்னும் தோற்றம்
புகழிலும் பணியும் ஏற்றம்
தன்னரும் திறத்தி னாலே
சபைகளை ஈர்க்கும் ஆற்றல்
இன்முகம் காட்டி னாலும்
இயல்பிலே கண்டிப்பாக
நன்மையே செய்யும் மன்னன்
நாட்டுக்கோர் நீதி தேவன்!

பதவியில் உயர்ந்த போதும்
பாரபட் சம்இல் லாமல்
நதியென நடக்கும் நேர்மை
நண்பர்க்கும் சலுகை யின்றி
அதிகார நெறியைக் காக்கும்
அண்ணலார் இஸ்மா யீல்தம்
மதியினை யேபின் பற்றி
மாநிலம் வாழ்தல் வேண்டும்!

(பார்க்க: “கண்ணதாசன் பாடிக் கொடுத்த மங்கலங்கள்” பக். 158)

கவியரசர் கண்ணதாசன் மட்டுமின்றி, வேறு எவருடைய இழிச்சொல்லுக்கும் ஆளாகாதவாறு தன் தூய்மையான வாழ்வில் கறை படாத வண்ணம் சீரிய, நேரிய வாழ்க்கை வாழ்ந்துச் சென்றவர் மு.மு.இஸ்மாயீல்.

நீதிபதி மு.மு.இஸ்மாயீல் மீது கண்ணதாசனுக்கு அப்படியென்ன ஒரு அக்கறை? அப்படியென்ன ஒரு தனி மரியாதை? அவர் மீது இணைபிரியாத ஒரு பந்தம் ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்று கேட்டால் அதற்கு ஒரே வார்த்தையில் பதில் சொல்லி விடலாம்.

ஆம்! அதற்கான ஒரே விடை – கம்பராமாயணம்.

கண்ணதாசனுக்கு பிடித்த இலக்கியம் கம்பரமாயணம். “நான் பாடல் இயற்றும் சக்தியை பெற்றதே அதிலிருந்துதான்” என்று பெருமையுடன் மார்தட்டிக் கொள்வார் அவர்.

“சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் – என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேகவேண்டும்”

என்று உணர்ந்து சொல்லுமளவுக்கு கண்ணதாசனை பித்தனாக ஆக்கிய சத்தான காவியம் எதுவென்றால் அது முத்தமிழின் முத்திரைக் காவியமான கம்பனின் படைப்புதான்

“கம்பனுக்கு மேலோர் கவிஞன் இல்லை; கம்பனது கவியின்றி கனித்தமிழ்தான் வாழ்வதில்லை” என்று அடிக்கடி உரைப்பார் கவியரசர் கண்ணதாசன்.

“கம்பனைப் போற்றுவதென்பது கன்னித்தமிழைப் போற்றுவதாகும்” என்று அடிக்கடி உரைப்பார் நீதியரசர் இஸ்மாயீல்.

ஒருவர் கோர்ட்டுக்கு அரசர். மற்றொருவர் பாட்டுக்கு அரசர்.

இவ்விருவரையும் முடுக்கிய விசையும், பற்றிப் பிடித்திருந்த பசையும்தான் கம்பராமாயணம்.

“பத்தாயிரம் கவிதைகளை முத்தாக அள்ளி வைத்த கம்பனுக்கு ஈடு -
இன்னும் வித்தாகவில்லை என்றே நீ பாடு’

என்று வேறொரிடத்தில் உணர்ச்சி பொங்க பாடி, தனக்கும் கம்பனுக்குமிடையே உள்ள மானசீக உறவை தம்பட்டம் அடிக்கிறார் கண்ணதாசன்.

இத்தமிழார்வலர்கள் இருவரும் “கம்பக் கொல்லையை மேம் போக்காக மேய்ந்த மாடுகள் கிடையாது”. மாறாக கம்பக்கடலில் மூழ்கி முத்தெடுத்து முத்தி பெற்ற முத்தமிழ்க் காவலர்கள்.

ஒருவர் முத்தையா. இன்னொருவர் முத்தான ஐயா.

நீதியரசருக்கும் கவியரசருக்கும் இடையே ஏற்பட்ட நட்பின் இறுக்கத்திற்கு கிரியாவூக்கியாகச் செயல்பட்டவன் கவிக்கம்பன். “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்பார்கள். கம்பனைக் காதலித்த இருவர்க்கிடையிலும் இணைபிரியா உறவு இறுதிவரை நிலைத்திருந்தது.

நீதிபதி மு.மு.இஸ்மாயீலைப் போலவே முன்னூறுக்கும் மேலான கம்பனின் பாடல்களை கண்ணதாசன் மனனம் செய்து வைத்திருந்தார்.

கம்பனுக்கும் கவியரசருக்கும் அப்படியென்ன ஒரு இறுக்கம்? கம்பன் மேல் அப்படியென்ன ஒரு கிறக்கம்? கவியரசரே தருகிறார் அதன் விளக்கம்.

எப்படியோ கம்பனுக்கும் எனக்கும் தொடர்புண்டு
செப்புவதெல்லாம் கம்பன்
செந்தமிழாய் வருவதனால்;
அக்காலம் அப்பிறப்பில்
அழகு வெண்ணை நல்லூரில்
கம்பனது வீட்டில்
கணக்கெழுதி வாழ்ந்தேனோ?
நம்புகிறேன் அப்படித்தான்

என்று பூர்வஜென்ம தொடர்பு இருந்ததாக அழகாக கற்பனை செய்து ஆனந்தப் படுகிறார் கவிஞர்

அதுமட்டுமல்ல தனது எத்தனையோ சினிமா பாடல்களில் கம்பனை நினைவுக்கு கொண்டு வந்து களிப்படைகிறார் கண்ணதாசன்.

‘கன்னியரை ஒரு மலரென்று’ பாடிய கம்பனை வம்புக்கிழுத்து “கம்பன் ஏமாந்தான்” என்ற பாடலில் “புலவா நீ சொன்னது பொய்” என்று – சூசகமாக – அன்பாகச் சாடுகிறார் நம் கவிஞர்.

“செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்” என்று தொடங்கும் திரைப்படப்பாடலை எழுதும்போதும் கவிஞருக்கு கம்பனின் நினைவு வந்து மீண்டும் பாடாய்ப் படுத்துகிறது. “இதழை வருடும் பனியின் காற்று, கம்பன் செய்த வருணனை” என்று பாடி ஆனந்தம் கொள்கிறார்.

“கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?” என்ற காலத்தில் அழியாத கானத்தில் ‘கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா’ என்று வரும் கண்ணதாசனின் பாடல்வரிகளை முணுமுணுத்திராத ரசிகர்கள் யாருமே இருக்க முடியாது.

“அவள் ஒரு மேனகை” என்று எஸ்.பி.பாலசுப்பிரமணியன் இழைந்து குழைந்து பாடும் கவிஞரின் பாடலிலும் ‘என்ன சொல்லி என்ன பாட, கம்பன் இல்லை கவிதை பாட’ என்று கம்பனை நினைவுக் கூறுகிறார்.

“அன்று வந்ததும் அதே நிலா, இன்று வந்ததும் அதே நிலா” என்ற பாடல் மறக்க முடியாத நிலாப் பாடல். பேசாமல் “வண்ண நிலா” “வெள்ளி நிலா” என்று பாடி விட்டு போவதுதானே? ஊஹும்.. “கம்பன் பாடிய வெள்ளி நிலா” என்று மறைந்துபோன கம்பனுக்கு மறுபடியும் உயிர் கொடுக்கிறார் கண்ணதாசன்.

“இதயத்தில் நீ” என்ற படத்தில் “சித்திர பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ?” என்ற படத்தில் மனதை வருடும் அருமையான காதற்பாடலொன்று.

“கட்டழகில் கவி கம்பன் மகனுடன்
ஒட்டி இருந்தவரோ? – இந்த
பட்டு உடலினை
தொட்டணைக்கும் கலை
கற்றுத் தெளிந்தவரோ?”

என்ற கம்பனை பிடித்திழுத்து வந்து நுழைக்கையில் நம் மனதும் கம்பனை நாடிச் செல்கிறது.

அது மட்டுமா? பண்டிதர்கள் மாத்திரமே புரிந்து கொள்ளக் கூடிய தண்டமிழ் வரிகளை பாமரனும் புரியும் வண்ணம் எளிமையாக்கியவன் இந்த கண்ணதாசன் என்றால் அது மிகையாகாது.

“நதியின் பிழை அன்று நறும்புனல்
இன்மை அற்றே
……………………………
விதியின் பிழை இதற்கு என்னை
வெகுண்டது என்றான்”

என்ற கம்பராமாயணத்தில் வரும் இலக்கணச் செய்யுளை எல்லோரும் புரியும் விதத்தில் எப்படி இனிமையாய் சொல்கிறார் கவிஞர் கண்ணதாசன் என்று பாருங்கள்.

“நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
நதி செய்த குற்றமில்லை
விதி செய்த குற்றமின்றி
வேறு யாரம்மா?”

ஆஹா…! இதை விட எளிமையா வேறு யாரால் கூற இயலும்?

“தோள் கண்டார் தோளே கண்டார்”! என்று கம்பன் ராமனை வருணிக்கும் வரிகளை “இதயக்கமலம்” என்ற படத்தில்

தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்

என்ற பாடல் வரிகளை பட்டிக்காட்டானுக்கும் எட்டும் வகையில் புட்டு புட்டு வைக்கிறார்.

பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்.

என்று “பாசம்” படத்தில் வரும் கவிஞரின் பாடல் வரிகளிலும் கம்பனின் தாக்கம் ரொம்பவே தெரிகிறது.

மேற்கூறிய எடுத்துக்காட்டிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாக விளங்குகிறது. வேறு எந்த புலவனைக்காட்டிலும் கம்பனின் எழுத்துக்கள் இவனை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கின்ற உண்மை வெட்ட வெளிச்சமாகிறது.

கவியரசரும் நீதியரசரும் கம்பன் கழக விழாக்களில் ஒன்றாக பலமுறை பங்கெடுத்துள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வானதி பதிப்பகத்தின் உரிமையாளார் திருநாவுக்கரசு இவ்விருவரின் நூல்களை தொடர்ந்து வெளியிட்டார்.

தமிழுக்குக் ‘கதி’ இருவர்தானாம். காலங்காலமாக அறிஞர்கள் உரைக்கும் கூற்று இது. “கதி” என்ற வார்த்தையில் ‘க’ என்ற எழுத்து கம்பனையும், ‘தி’ என்ற எழுத்து திருவள்ளுவரையும் குறிக்குமாம்.

இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்த இஸ்மாயீல் அவர்கள் இந்து மதத்தின் காப்பியமாக போற்றப்படும் கம்பராமாயணத்தில் அதன் இலக்கியச் சுவைக்காக அந்த காப்பியத்தை முழுவதுமாய் படித்துத் தேர்ந்தவர்.

சிலகாலம் நாத்திகச் சிந்தனையில் ஊறித் திளைத்த கண்ணதாசன், கம்பராமாயணத்தைக் கேலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே, கம்பனின் பாடல்களைக் கசடறக் கற்று, அதன் கவிநடையில் மயங்கி தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டவர் கண்ணதாசன்.

“நான் கேலி செய்ய நினைத்த கம்பன், என்னையே கேலி செய்து விட்டான்” என்று இந்நிகழ்வை கண்ணதாசன் சுவைபடக் குறிப்பிட்டுள்ளார்.

கண்ணதாசன் “ஏசு காவியத்தை” எழுதினார் என்ற காரணத்தினால் அவர் கிறித்துவ மத ஆதரவாளர் என்றோ அல்லது நீதிபதி இஸ்மாயீல் “கம்பராமாயணத்தை” ஆராய்ந்தார் என்ற காரணத்தினால் அவர் இந்து மத ஆதரவாளராக இருந்தார் என்றோ பொருள் கொள்ளல் ஆகாது.

இலக்கியச் சுவை என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதில் ஜாதி, மத பேதம் கிடையாது.

அறிஞர் அண்ணாவின் பார்வையில் கம்பராமாயணத்தில் காமரசம் தென்பட்டது.
நீதிபதி இஸ்மாயீலின் பார்வையில் கம்பராமாயாணத்தில் இலக்கியநயம் தென்பட்டது.

நீதிபதியை “வழி தவறிய வெள்ளாடு” என்று வருணிப்பவர்கள் இதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

வால்மீகி ராமாயணத்தை முழுமையாக புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே சமஸ்கிருதத்தைக் கற்றவர் இஸ்மாயீல்.

கண்ணதாசன் வாழ்க்கையில் ஒவ்வொரு தருணத்திலும் தனது அடிப்படைக் கொள்கைகளை, நம்பிக்கைகளை மாற்றிக்கொண்டே இருந்தவர்.

நீதிபதி இஸ்மாயீல் அவர்கள் தனது கொள்கைகளிலிருந்தும், தனது மார்க்கப் பற்றிலிருந்தும் சற்றும் மாறாதிருந்தவர்.

அவரது சாதனைகளை பின்வரும் பதிவுகளில் விளாவாரியாக விவாதிப்போம்.

(இன்னும் வரும்…. )

 

Tags: , , , , , , , , , ,

தந்தை பெரியாரும் தமிழார்வலர் இஸ்மாயீலும்

வாழ்நாள் முழுவதும், கம்பராமாயணத்தின் இலக்கிய நயத்தை ஊரரிய உலகறிய பிரச்சாரம் செய்துக் கொண்டிருந்தவர் நீதிபதி மு.மு.இஸ்மாயீல்.

அதற்கு மாறாக, தன் இறுதி மூச்சுவரை கம்பராமாயணத்தை முழுமூச்சாக எதிர்த்து அதில் காணப்படும் கருத்துக்களை கடுமையாக விமர்சித்து வந்தவர் தந்தை பெரியார்.

தென்துருவமாகவும், வடதுருவமாகவும் செயல்பட்ட இவர்கள் இருவருக்குமிடையே அப்படி என்ன ஒரு தொடர்பு இருக்க முடியும் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா?

தந்தை பெரியார் மீது நீதிபதி இஸ்மாயீல் கொண்டிருந்த அபிப்பிராயம் எத்தகையது என்பதனை கீழ்க்கண்ட அவரது சொற்பொழிவை படித்தாலே நன்கு விளங்கும்.                                                                                                    (30-5-79 அன்று சென்னை, பெரியார் திடலில் நடைபெற்ற “பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை” திறப்பு விழாவில் நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்கள் ஆற்றிய உரை இது)

நண்பர் திரு. வீரமணி அவர்களது பேச்சுக்குப்பின்னர் நான் என்னுடைய பேச்சினை ஒரு வழியிலே மாற்றிக் கொள்ள வேண்டியவனாக இருக்கின்றேன். அவர்கள் சில வார்த்தைகள் கூறி இருக்காவிட்டால் நான் வேறுவிதமாக என்னுடைய பேச்சினை அமைத்துக் கொண்டு இருந்திருப்பேன்

ஆனால், அவர்கள் சொன்ன சிலவற்றின் காரணமாகத் தான் ஒரு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. ஒருவிதத்தில் பார்க்கப்போனால் இந்தக் கூட்டத்தில் பங்கு கொள்வதற்கு என்னைப்போல் லாயக்கு இல்லாதவன் வேறு யாருமே இருக்க முடியாது! அதே சமயத்தில் இந்தக் கூட்டத்தில் பங்கு கொள்ள என்னைப் போலத் தகுதி உள்ளவரும் வேறு யாரும் இருக்கமுடியாது! ஏதோ ஒரு புதிர் போடுவதுபோல் இருக்கின்றதே! – இந்தப் புதிரை எப்படி அவிழ்ப்பது? என்பன போன்ற சந்தேகங்கள் உங்களுக்கு ஏற்படுமேயானால் நானே அதனை அவிழ்த்துக் காட்டுகிறேன்.

எனது மாணவர் வீரமணி!

வீரமணி அவர்கள் ஓர் அளவுக்கு என்னைப் புகழ்ந்து பேசியதற்குக் காரணம், வீரமணி அவர்கள் சட்டக் கல்லூரியிலே ஓர் ஆண்டு என்னுடைய மாணவராக இருந்தது தான். இதுவும் ஓர் புதிராக – ஆசிரியரைப் புகழ்ந்து பேசுகின்ற மாணவர்களை இன்று காண்பது அபூர்வமாக இருக்கின்றது. ஆசிரியரைப் புகழ்ந்து பேசுகின்ற மாணவர் அழைத்து இருக்கின்றார்; இதை ஆசிரியரும் ஒப்புக்கொள்கின்றார் என்பதுவம் ஒரு புதிரே. ஆனால் உண்மை என்ன? அந்தப் புதிரை எப்படி அவிழ்ப்பேன என்று சொன்னால், உண்மை பேசுவது மூலமாகவே அவிழ்ப்பேன். பெரியார் அவர்களுடைய எந்தப் பேச்சையும் நான் கேட்டவனும் அல்ல; பெரியார் அவர்களுடைய எழுத்தையும் நான் படித்தவன் அல்ல. ஆகவே, இந்த இரண்டையும் வைத்துக் கொண்டால் இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்ள என்னைப் போலத் தகுதி இல்லாதவன் லாயக்கு அற்றவன் யாருமே இருக்க முடியாது என்று முடிவுக்கு வர முடியும். அதே சமயத்தில், பெரியார் அவர்களுடைய எந்தப் பேச்சையும் கேட்காததன் காரணமாகவும், பெரியார் அவர்களுடைய எந்த எழுத்தையும் படிக்காததன் காரணமாகவும், விருப்பு வெறுப்பு இல்லாத நிலையிலே இந்த நிகழ்ச்சியிலே என்னைப் போலக் கலந்து கொள்ளத் தகுதி உள்ளவர்கள் வேறு யாரும் இல்லை என்று முடிவுக்கும் வரலாம்.

ஒரு மனிதரோடு பழகிவிட்டால், ஒரு மனிதர் எழுதியதையோ, பேசியதையோ படித்துவிட்டால், கேட்டுவிட்டால் நம்மை அறியாமலே நம்முடைய மனத்திலே அதைப்பற்றிய, அவரைப் பற்றிய எண்ணங்கள் உண்டாகிவிடும். இதன் காரணமாக விருப்பும் உண்டாகலாம்; வெறுப்பும் உண்டாகலாம். அதற்கு மாறாக, ஒருவருடைய பேச்சைக் கேட்காமலும் எழுத்துக்களைப் படிக்காமலும் இருந்துவிட்டால் அவரைப்பற்றி எதுவும் தெரியாத நிலையிலே – விருப்போ, வெறுப்போ உண்டாகும் வாய்ப்பும் இல்லாமல் போய்விடும். என்னுடைய பழக்கம், எது பற்றியும் முழுமையாக நான் தெரிந்து கொள்ளாதவரையில் அதைப் பற்றி அபிப்பிராயம் சொல்வது இல்லை. ஆகவே, பெரியார் அவர்களுடைய பேச்சைக் கேட்காததன் காரணமாகவும், பெரியார் அவர்களுடைய எழுத்துக்களைப் படிக்காததன் காரணமாகவும், என்றும் எந்த மேடையிலும் வாய்ப் பேச்சாகவோ எழுத்துக்கள் மூலமாகவோ பெரியாருடைய கருத்துக்கள் பற்றி நான் அப்பிராயம் கூறியதே கிடையாது. அப்படி இருக்கும்போது, எதற்காக நான் இந்த மேடையிலே கலந்துகொள்வது பற்றிச் சிலர் ஆச்சரியப்பட்டார்கள் என்பது எனக்குப் புரியவில்லை.

பெரியாரை அறிந்தவன் நான்!

ஆனால், நம்முடைய நாட்டில் ஒரு சமுதாயப் பழக்கம் உண்டு. யாராவது ஒருவர் பின்னால் வால்பிடித்துக் கொண்டே இருக்கவேண்டும். அவர்களைப்பற்றி எப்போதும் புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். அவர்களை எப்போதும் முகஸ்துதி செய்துகொண்டே இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள்தான் அவர்களைப்பற்றி பேசுவதற்குத் தகுதி வாய்ந்தவர்கள் என்பது அபிப்ராயம். அதற்கு மாறாக, அவர்களை விட்டு ஒதுங்கியும் தூரத்தில் இருந்துகொண்டும் அவர்கள் கருத்துக்களைப் பாராட்டிக் கொண்டு இருந்தால்கூட அவர்களுடைய கருத்துக்களைப் பற்றிப் பேசுவதற்கோ, எழுதுவதற்கோ, அபிப்ராயம் கூறுவதற்கோ தகுதி அற்றவர்கள் என்பது நமது நாட்டுப் பழக்கம்.

அடிக்கடி ஒருவரைப் பார்க்காவிட்டால், அடிக்கடி ஒருவரை சந்திக்காவிட்டால் அவர்களை விரோதியாகக் கருதும் பழக்கம் நமது நாட்டிலே வந்துவிட்டது. அதற்கு நேர் மாறாக, வேலை இருக்கின்றதோ, வேலை இல்லையோ, காரியம் இருக்கின்றதோ, காரியம் இல்லையோ, உங்களுடைய மனதிற்கு அவை ஒத்து இருக்கின்றதோ, இல்லையோ அவரைப் போய் அடிக்கடி பார்த்துவிட்டு, அவர் செய்தததையும், செய்யாததையும் புகழ்ந்துவிட்டு, அவரைப்போல் இந்திரன், சந்திரன் வேறு யாருமே இல்லை என்று புகழக்கூடியவர்கள் உண்டு.

அவர்களைவிட உற்ற நண்பர்கள் வேறு யாரும் இல்லை என்கின்ற ஒரு பொய்யான நிலை நாட்டிலே ஏற்பட்டு விட்டதன் காரணமாக, பெரியார் அவர்களுடைய எழுத்தையோ, கருத்தையோ, படிக்காமலோ, கேட்காமலோ இருந்து, அதன் காரணமாகவே அபிப்பிராயம் சொல்லாது இருந்த நான் இந்தக் கூட்டத்திலே கலந்து கொள்வது ஒருபுதிராகவே தோன்றுவதில் ஆச்சரியமில்லை. ஆனால், இந்தப் புதிரை இப்போது நான் அவிழ்த்துவிட்டேன் என்று கருதுகிறேன்.

என்றாலும், வீரமணி அவர்கள் பேச்சில் இருந்து ஒன்று நன்றாகத் தெரிகின்றது. பெரியார் அவர்களுடைய எழுத்தையோ, பேச்சையோ நான் படிக்காமலும் எழுதாமலும் இருந்தது, ஒரு குறை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. காரணம் என்னவென்றால், பழைய “குடி அரசு” பத்திரிக்கையில் இருந்து ஒரு சில பகுதிகளை உங்கள் முன் திரு. வீரமணி படித்துக் காண்பித்தார். அவர் படித்துக் காண்பித்ததையே நான் மீண்டும் ஒரு முறை படித்துக் காட்டுகின்றேன். அதனை இப்போது படித்துக் காண்பிப்பேனேயானால், அவர் அதில் கூறியிருக்கும் கருத்தில் இருந்து மாறுபாடு கொண்டவர்கள் மனிதகுலத்தில் யாருமே இருக்க முடியாது என்று ஆகிவிடும். அந்த நிலை ஏற்படுமானால் பெரியாருடைய எழுத்துக்களை முன்னதாகவே படிக்கத் தவறியது, பேச்சைக் கேட்கத் தவறியது, என்னுடைய குறை என்று நான் சொல்லவேண்டும்

“குடி அரசு” வின் கொள்கை!

படிக்கின்றேன்: “குடி அரசு” வின் கொள்கையின் முதல் மலரில் முதல் தலையங்கத்தில் தெரிவித்தபடி அதாவது, மக்களுக்குச் சுயமரியாதையும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர்தல் வேண்டும். உயர்வு- தாழ்வு என்று இருக்கக் கூடிய உணர்ச்சியினை ஒழித்து, அனைத்துயிரும் ஒன்று என்ற உண்மை அறிவு மக்களிடம் பரவ வேண்டும். சமயச் சண்டைகள் ஒழிய வேண்டும். இந்நோக்கங்கள் நிறைவேற உண்மை நெறிபற்றி இவர் எமக்கு இனியவர்; இவர் எனக்கு மாற்றார் என விருப்பு – வெறுப்பு இன்றி, நண்பனேயாயினும் ஆகுக, அவரது சொல்லும் செயலும் கேடு சூழ்வதாயின் அஞ்சாமல் கண்டித்து ஒதுக்கப்படும்” இதில் இருந்து மாறுபட்டு இருக்கமுடியாது. எங்களுடைய சமயத்தின் அடிப்படையிலே நான் சார்ந்து உள்ள மதத்தின் அடிப்படையிலே, பிறப்பின் அடிப்படையிலே உயர்வு-தாழ்வு இல்லாதது மாத்திரம் அல்லாமல், நாங்கள் வளர்க்கின்ற பண்புகள் எங்களுடைய காரியம் பழக்கத்திலே இருக்கின்றன.

சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம் என்பன எந்த அளவுக்கு முஸ்லீம்களிடையே வேரூன்றி இருக்கின்றது என்றால், யாராவது ஒருவன் முஸ்லீமாக ஆகிவிட்டால், அவன் அந்தக் காரணத்தாலேயே அதற்கு முன்னதாக அவன் எந்தச் சாதிக்காரனாக இருந்தானோ-எந்த வகுப்பினைச் சேர்ந்தவனாக இருந்தானோ அது அடியோடு மறைந்து விடுகிறது. முஸ்லீம் சமுதாயம் என்கின்ற பெருங்கடலில் அவன் சேர்ந்து விடுகின்றான்.

அந்தக்காரணத்தாலேயே அவனுக்கு சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவைகள் தாமாகவே வந்து விடுகின்றன. இன்றும் கூட கிருஸ்தவத்தைப் பார்க்கும்போது, முன்னால் இந்துக்களாக இருந்தவர்கள் கிருத்தவர்களாக ஆகிவிட்ட பிறகும்கூட இன்றும் வழக்கத்தில் ஒன்றைக் காணுகின்றோம். நாடார் கிருத்தவர்கள், பிள்ளைக் கிருத்தவர்கள் என்று அவர்கள் கூறிக் கொள்வதைக் காண்கின்றோம். அவர்களும் நாடார் மரபு வழியினையும் வேளாளர் மரபு வழியினையும் பின்பற்றிக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஆனால் முஸ்லீம்கள் சம்பந்தப்பட்ட வரையிலே அவர் முன்னதாக நாடாராக இருந்தாலும் சரி, அவர் அந்தணராக இருந்தாலும் சரி, அவர் என்று இஸ்லாத்திற்கு வந்துவிட்டாரோ அந்தக் கணமே நாடார், பிள்ளை, அந்தணர் என்கின்ற அனைத்தும் மறைந்து போய்விடும் – அழிந்து போய்விடும்.

இஸ்லாத்தில் சேர்ந்தவுடன் சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம் முதலியன தாமாகவே வந்துவிடுகின்றன. அப்படிப்பட்ட மார்க்கத்தைச் சேர்ந்த நான், எப்படி இந்தக் கொள்கைகளுக்கு மாறுபட்டவனாக இருக்கமுடியும் என்று சிந்தித்துப்பார்க்கும்போது, நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது கண்டு சிலர் ஆச்சரியத்தைத் தெரிவித்தார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

அனைத்துயிரையும் ஒன்றாய் எண்ணும் கொள்கை!

இன்னொருமுறையும் படிக்கின்றேன்: “இந்நோக்கங்கள் நிறைவேற உண்மை நெறி பற்றி, இவர் எமக்கு இனியவர்; இவர் எமக்கு மாற்றார் என்ற விருப்பு – வெறுப்பு இன்றி, நண்பனேயாயினும் ஆகு, அவரவரது சொல்லும் செயலும் கேடு சூழ்வதாயின் அஞ்சாது கண்டித்து ஒதுக்கப்படும்.”

இதில் வற்புறுத்தப்படுவது இரண்டு. ஒன்று உண்மை நெறி பற்றி வாழ்வது; இரண்டாவது, நடுநிலைமை; அவர் இன்னாதாராக இருக்கட்டும்; அல்லது இனியவராக இருக்கட்டும்; நண்பராக இருக்கட்டும்; அல்லாதாராக இருக்கட்டும் அவர்களிடத்தில் இருந்து நாம் எதிர்பார்ப்பது – அவரைத் தராசில் வைத்து நிறுப்பது, அவரை எடைபோடுவதற்கு அடிப்படையாக இருக்கின்றது. அவரை நிதானப்படுத்துவதற்கு உரைகல்லாக இருப்பது-அவர் செய்கைகள் அல்லவா என்பது தான். இதனை யார் ஆட்சேபிக்க முடியும்? உண்மையாகச் சொல்கிறேன் – எதையாவது தங்களுடைய வாழ்க்கை நெறிக்கு எல்லா வகைக்கும் பொருத்தமாக இல்லை என்று மனத்துக்குள்ளே எண்ணினாலும் வெளியே தைரியமாக்க் கூறமாட்டார்கள். இன்னும் ஒன்றைச் சொல்லுகின்றேன்; இந்த “குடி அரசு” பத்திரிகையின் தலையங்கத்திற்கு மேலாக சில வரிகள் செய்யுள் வடிவில் அமைந்து இருக்கின்றன. இந்தச் செய்யுள் வடிவிலே அமைந்துள்ள இந்த வரிகளின் கருத்துக்கள்தாம் இந்த “குடி அரசு” ஏட்டின் த்த்துவமாக அமைந்திருக்கின்றன.

அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி
அரும்பசி எவர்க்கும் ஆற்றி
மனத்தினுள் பேதா பேதம்
வஞ்சகம் பொய் களவு சூது
சினத்தையும் தவிர்ப்பா யாகில்
செய்தவம் வேறொன் றுண்டோ?
உனக்கு இது உறுதியான
உபதேசம் ஆகும் தானே?

இதைப்படித்துப் பார்த்தால், யாரோ பெரியார் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பாடினார்கள் என்று தோன்றாது. எங்கோ வைதீக சம்பிரதாயத்தைச் சார்ந்தவர்கள், பிரசங்கம் செய்கின்றவர்கள் கதாகாலட்சேபம் செய்கின்றவர்கள் பாடி வைத்திருப்பதாகத் தான் எண்ணத் தோன்றும்.

காரணம் என்னவென்றால், நாம் ஏமாந்து விடுகின்றோம். எந்த இயக்கத்திற்கும், எந்தச் சமயத்திற்கும் இரண்டு அம்சங்கள் உண்டு. அதாவது, உதாரணத்திற்கு மரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மரத்துக்கு இருக்கக்கூடிய இரண்டு அம்சம் – ஒன்று அடியிலே இருக்கின்ற ஆணிவேர் – மற்றொன்று வெளியிலே இருக்கின்ற படர்ந்த கிளைகள், இலைகள். இரண்டிற்கும் வேறுபாடுகள் உண்டு.

இந்த ஆணிவேர் அழியாத நிலையில், இவைகளை எவ்வளவு வெட்டினாலும் கூட, கிளைகளும் இலைகளும் குறைந்தாலும் கூட, மரம் உயிரோடே இருக்கும். இவை மறுபடியும் வளர்ந்துவிடும். ஆக, சமுதாய ஏற்றத்திற்குச் சமுதாயச் சீர்திருத்தத்தில் ஈடுபடுகிறவர்கள், கிளையிலே சாதி வேறுபாடு தோன்றுமாயின் களைகளை வெட்டிவிட வேண்டும். ஆணிவேர் நோயுற்றால், ஆணிவேர் பழுதுற்றால் மரம் அழிந்துவிடும். ஆணிவேர் அழுத்தமாக இருக்குமாயின் மேலே இருக்கின்ற மரத்தையும், கிளைகளையும் வெட்டி விட்டு மறுபடியும் துளிர்க்கச் செய்து கொள்ளலாம்.

புரட்சியும் புரட்டும்!

இந்தப் பணியை மேற்கொள்ளும்போது சிற்சில சமயங்களில் தவறுதலாக ஆணிவேரை வெட்டி விடுவதும் உண்டு. வேரோடு மரத்தை வெட்டிவிடுவதுதான் உலகில் எல்லாப் புரட்சிக்கும் அடிப்படையாக இருப்பது. ஆனால், அதில் முக்கியம் மனப் புரட்சி; உள்ளப் புரட்சிதான், எப்போது மனமும், உள்ளமும் தூய்மைப்படுகின்றதோ, எங்கே உண்மை நெறிப்பற்றி, இவர் எமக்கு இனியவர்; இவர் எமக்கு இன்னார் என்கின்ற வேறுபாடு இன்றி யார் இருக்கின்றார்களோ அங்கேதான் சமத்துவ நெறி துளிர்விட்டு வளரும். புரட்சி என்பது, புரட்டுதல் என்ற சொல்லிருந்து வந்தது, மேலிருக்கும் அழுக்குகளைப் போக்கி, விடுவதற்காக மண்ணையோ, மனத்தையோ புரட்டுவதுதான் புரட்சி!

நமக்குப் பழகிப்போய்விட்டது. சாக்கடையிலே முங்கி முங்கி சாக்கடை நாற்றம் தெரியாமல் போய் விட்டோம். சாக்கடையிலிருந்து வெளியே வந்து, தாராளமாகக் குளித்துவிட்டு வெளியிலே உள்ள தூய காற்றினை சுவாசிக்கும் பொழுது, “அப்பாடா, இந்தக்காற்று எங்கிருந்து வந்ததோ” என்று எண்ணம் தோன்றும்.

பாரதி சொல்லியிருக்கிறார்: “தவறாக வேதம் ஓதும் அந்தணனை விட நன்றாகச் சவரம் செய்கின்ற அம்பட்டவன் மேலானவன்” என்று.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாச் செய்தொழில் வேற்றுமையான்” என்பது தொழிலினுடைய சிறப்பை பற்றியதேயாகும். ஒரு கக்கூஸ் கழுவக்கூடிய பெண்ணானவள் அவளுடைய வேலையினைச் சிரத்தையுடன் செவ்வனே செய்வாளேயானால், நீதிபதியாக இருக்கின்ற நான் என்னுடைய வேலையினைச் சரியாகச் செய்யாமல் இருந்து விடுவேனேயானால், என்னைவிட மேலானவள் அவள்.

ஆக, இங்கு உயர்வு-தாழ்வு என்பது நான் எந்த வேலையினை பபார்க்கிறேன் என்பது பற்றி அல்ல; எனக்கு இடப்பட்ட- நான் ஏற்றுக்கொண்ட பணியை நான் எப்படிச்செய்கின்றேன் என்பது பற்றியேயாகும். ஆகவே, கக்கூஸ் கழுவுபவள் தன்னுடைய வேலையினை மனப்பூர்வமாக ஈடுபாட்டுடன் செவ்வனே செய்வாளேயானால், அவள் கொண்ட பிரமாணத்துக்கு விரோதமாக என்னுடைய உள்ள உணர்ச்சிக்கும் உண்மைக்கும் மாறாகத் தவறு செய்வேனேயானால், நான் தாழ்ந்தவன்; கேவலமானவன்.

இது சாதாரண உண்மை. நாம் இன்று என்ன பார்க்கின்றோம்? மிகமிக உயர்ந்த பதவியில் இருக்கின்றவர்கள் செய்கின்ற தவறுகள் வெளிவருவது இல்லை. ஆனால் தாழ்ந்த பதவியில் இருக்கின்றவர்கள் செய்கின்ற சிறிய தவறுகள் கூட வெளிவந்து விடுகின்றன. எனவே, தாழ்ந்த பதவியில் இருக்கின்றவர்கள் என்றும் தவறு செய்து கொண்டிருப்பது போலவும், மேலான பதவியில் உள்ளவர்கள் தவறு செய்யாதது போலவும் தவறான தோற்றம் நாட்டில் உலவுகின்றது.

தவறு யார் செய்தாலும் ஒன்றுதான். உண்மை நெறியில் இருந்து யார் தவறினாலும் அது தவறுதான். யார் சுயமரியாதையினையும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், தம்முடைய வாழ்க்கை நெறிகளாகக் கொண்டு யார் தங்களுடைய வாழ்க்கையில் அவற்றை அனுஷ்டிக்கின்றார்களோ அவர்கள் சிறந்தவர்கள். இந்த அடிப்படையில் பார்ப்பீர்களேயானால்,

அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி
அரும்பசி எவர்க்கும் ஆற்றி
மனத்தினுள் பேதா பேதம்
வஞ்சகம் பொய் களவு சூது
சினத்தையும் தவிர்ப்பா யாகில்
செய்தவம் வேறொன் றுண்டோ?

என்பதனுடைய உயர்வு விளங்கும். இதில் “தவம்” என்ற வார்த்தையும் இருக்கின்றது – பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவேளை, தவம் என்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாததாக இருக்கலாம். ஆனால், தவம் என்ற சொல் இங்கு இடம் பெற்றிருக்கிறது.

“செய்தவம் வேறொன் றுண்டோ?
உனக்கு இது உறுதியான
உபதேசம் ஆகும் தானே?”

என்று பாட்டோடு இதனைச் சேர்த்துப்பார்க்கும்போது, இதனுடைய உண்மையினை சரியாக கையாண்டால் இதில் இருக்கின்ற இலைகளையும் கிளைகளையும் வெட்டிவிட்டு, ஆணிவேரைப் பற்றிக் கொண்டால் இதில் யாருக்கும் எந்த விதமான வேற்றுமையும் இருக்கமுடியாது; மனக்குறையும் இருக்க முடியாது என்று நான் சொன்னால் இப்போது நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். நான் இங்கு வந்துள்ளதின் பொருத்தத்தை!

எனது பேச்சு சிலருக்கு முரண்பாடு!

ஒருபுறம் என்னுடைய இலக்கியப் பேச்சுக்களையும் எழுத்துக்களையும் பார்த்துவிட்டு, அதே மாதிரி பெரியார் அவர்களுடைய எழுத்துக்களையும் பார்த்துவிட்டு, இரண்டையும் படித்தவர்கள் அவைகளுக்குமுரண்பாடு இருப்பதாக கற்பனை செய்துகொண்டு அதன் காரணமாக நான் இந்த நிகழ்ச்சிக்கு வருவது என்பது ஆச்சரியமாகச் சிலருக்குத் தோன்றக் கூடும். பாதை வேறு, முறை வேறாக இருக்கலாம். ஆனால், அடிப்படை வேறு அல்ல, எல்லோரும் உண்மைநெறி வாழ வேண்டும்; உயிர்கள் அனைத்தையும் ஒன்றாகக் கருத வேண்டும்; எந்த உயிர் பசியில் வாடினாலும் தான்வாடுவதாகத்தான் கொள்ள வேண்டும். இதில் மாறுபாடு இருக்கமுடியாது.

பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும். அதனிடையே வருகின்ற சிறப்பும், சிறப்பு இல்லாமையும் அவர்கள் தத்தம் காரியங்களைச் செய்கின்ற மனப்போக்கில் தான்-சிரத்தையில் தான்- ஈடுபாட்டில் தான் என்பதை உணர்ந்து கொண்டால் எந்த விதமான ஆச்சரியத்திற்கும், எந்த விதமான கசப்பிற்கும், எந்த விதமான சண்டைக்கும் இடமில்லை என்பது மிகத் தெளிவாக விளங்கும் என்பதைச்சொல்லிக்கொண்டு, அந்தப்பொருத்தத்தோடுதான் நான் இங்கே வந்து இருக்கின்றேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னை இங்கு இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தவர் வீரமணி அவர்கள்தான். நான் இன்ன காரணத்திற்காக வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். இந்த இரண்டு காரணங்களுக்காகத்தான்; அதாவது, பணியின் தன்மை, அதில் பொறுப்பேற்று இருக்கிறவர்களுடைய பாடு ஆகியவற்றுக்காகத் தான் நான் இங்கே வந்திருக்கிறேன். எப்படி இன்னர் -இனியவர் என்று பார்க்காமல், நண்பர்-அல்லாதார் என்று பார்க்காமல் அவர்கள் செய்கின்ற காரியத்தின் பலனைப் பார்க்கவேண்டுமோ அதனைக் கருதியே நான் இங்கு வந்தேன். எனவே, வந்தவருடைய ஈடுபாட்டைப் பார்த்து, அவர் செய்கின்ற காரியத்தின் பலனைப் பார்த்து ஒத்துக் கொண்டேன்.

நண்பர் வீரமணியின் ஈடுபாட்டைப்பற்றி, அவர் செய்கின்ற காரியத்தின் பலனைப்பற்றி யாரும் சந்தேகப்பட மாட்டீர்கள். ஆகவே, நான் வீரமணி அவர்களின் ஈடுபாட்டை, தொடங்க இருக்கிற காரியத்தின் பலனை நன்கு உணர்ந்துகொண்டு இங்கு நான் வந்திருக்கின்றேன். ஒரு இலவச மருத்துவமனையினைத் துவங்குகின்றார்கள் என்றால் அது யார் பெயரில் துவங்கினாலும் மனிதத் தன்மையின் அடிப்படையிலே துவங்கப்படுகின்ற சமுதாய காரியம் என்ற காரணத்தினாலே இந்த விழாவில் என்னைச் சம்பந்தப்படுத்திக் கொள்வதிலும் ஆச்சரியம் இல்லை. இந்த இரண்டு அடிப்படையிலும் வந்திருக்கின்ற நான் இதனுடைய பொருத்ததினை மேலும் விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

உடல்நலமே மனநலம்!

ஆயுட்காலம் முழுவதும் மனதிலே இருக்கின்று மாசினை ஒழிக்கப் பாடுபட்ட ஒருவரது அறக்கட்டளையின் பெயராலே இந்த மருத்துவமனை துவங்கப்படுகின்றது. மக்களது அறிவு நன்றாக வளர வேண்டுமானால், அதற்கு அடிப்படையான உடலநலம் நன்கு சிறந்து விளங்கவேண்டும். நன்றாக உடல்நலம் வளர்ச்சியுற்றால்தான் அறிவு வளர்ச்சியும் ஏற்படும்.

ஒருவன் என்றும் வியாதியாளனாக இருப்பானேயானால்-அவன் என்றும் நோயினாலே வருந்திக் கொண்டே இருப்பானேயானால், அந்த நோயைப்பற்றி சிந்திக்கத்தான் அவன் மனம் இடம் கொடுக்குமே தவிர வேறு எதைப் பற்றியும் சிந்திக்க இடம் கொடுக்காது.

ஆக, அறிவு வளர்ச்சிக்கு அடிப்படையானது சுகாதாரம். அந்தச் சுகாதாரத்தை மக்களிடையே பரப்புவதற்காக ஓர் இலவச மருத்துவமனை பெரியார் அறக்கட்டளையின் சார்பில் துவங்கப்படுகிறது. இது விரிவாக வளரும் என்று எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். சிறிதாக துவங்கப்பட்டதுதான் விரிவடையும்.

இதற்கு நம் நாட்டு நதிகளையே உதாரணமாகக் கூறலாம். நம் நாட்டில் ஓடிக்கொண்டு இருக்கின்ற காவிரியாக இருக்கட்டும்; பிரம்மபுத்திரா, கோதாவரியாக இருக்கட்டும்; அல்லது கங்கையாக இருக்கட்டும்; அவைகள் ஆரம்ப இடத்தில் சிறிய வாய்க்கால்கள் போல் ஊற்றாக, சுனையாகத் தோன்றிப் பிறகு சிற்றாறுகளாக உருவெடுத்துப் பின்னர் பற்பல கிளைகள் அதில் ஒன்று சேர்ந்து பெரிய ஆறுகளாக காட்சி அளிக்கின்றன. அதுபோல,  சிறியதாக துவங்குகின்ற இந்த மருத்துவமனை போகப்போக அதனோடு சம்பந்தப் பட்டிருக்கிறவர்களுடைய மனத் தூய்மையின் காரணமாக, ‘இந்த மருத்துவ மனைக்குச் சென்றால் நம்மை மனிதன் என்று மதித்து அவர்கள் நிச்சயமாக நமக்கு உதவுவார்கள்’ என்றுபொதுமக்கள் கொள்கின்ற நம்பிக்கையின் காரணமாக இந்த மருத்துவமனை ஆல்போல் தழைத்து வளர்ந்து, இந்தச் சென்னை நகரத்திலேயே ஒரு தலைசிறந்த மருத்துவமனையாக அமையும் என்று வாழ்த்தி, அப்படி அமைவதற்கு நீங்கள் அனைவரும் உதவவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, வாய்ப்பு அளித்தமைக்கு நன்றியினை மீண்டும் தெரிவித்துக அமைகின்றேன்….
நன்றி : தந்தை பெரியார் ஈ.வே.ரா.

 

Tags: , ,

கம்பன் அவன் காதலன் (இரண்டாம் பாகம்)

கதர்ச் சட்டைக்காரன்

கதர்ச் சட்டைக்காரனாக நம் கன்னித் தமிழ் கலா ரசிகன் உலா வந்த நிலாக்காலம் அது.

இந்திய நாடு சுதந்திரக் காற்றை இஞ்சித்தும் சுவாசித்திராத நேரம்.

1940-ஆம் ஆண்டின் ஆரம்பக் கட்டத்தில் நாகூரில் வாழ்ந்த முஸ்லீம்களில் பெரும்பாலோர் முஸ்லீம் லீகில் இணைந்து சுதந்திரப் போராட்டத்திற்கு சூளுரைத்த காலம்.

பஞ்சம் தீர்க்கும் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் பச்சை கொடி ஏந்திய கட்சியில் பட்டாளமாய் சேர்ந்திருந்தார்கள்.

இந்திய தேசிய காங்கிரஸ் பூண்டிருந்த “ஒருங்கிணைந்த இந்தியா” என்ற கனவு நனவாகாது என்பது ஓரளவு புரிந்துப் போனது.

பெரும்பாலான நாகூர்வாசிகள் முஹம்மது அலி ஜின்னா அவர்களின் ஆதரவாளர்களாக மாறி இருந்தனர். முஸ்லீம்களுக்கு நலம் விளைவிக்கும் எனக் கருதி, பாகிஸ்தான் பிரிவினைக்கு முழுமூச்சாய் ஆதரவு தெரிவித்தனர். வெகுசிலரே மகாத்மா காந்தி மற்றும் மெளலானா அபுல் கலாம் ஆஜாத் அவர்களுக்கு ஆதரவு நல்க தங்களை தயார் படுத்தியிருந்தார்கள்.

“பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்ற கோஷம் வான்முட்டும் மினாராக்களில் முட்டி மோதி எதிரொலித்தன.

இந்திய தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டு கதர்ச்சட்டைக்காரராக மும்முரமாக வலம் வந்த இஸ்மாயீலை, ஏதோ வேற்றுக் கிரக அந்நியனாய் ஏற இறங்க பார்த்தனர்.

சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு எத்தகையது என்பதற்கு நேதாஜியின் தேசிய ராணுவத்தில் இருந்த முஸ்லீம்களின் எண்ணிக்கையே மாபெரும் சான்றாகும். 1973-ஆம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதில் நேதாஜியின் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்களின் பட்டியலை அறிவித்திருந்தது. அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸ்லீம்கள் இருந்தனர் என்ற தகவல் நம்மை தலைநிமிர வைக்கிறது.

திருச்சியில், ‘படே ஹஜ்ரத்’ என்று மரியாதையாக அழைக்கப்பட்ட மெளலவி செய்யது முர்தஜா அவர்கள் ‘கிலாபத்’ போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளில் முக்கியமானவர். இவர் ராஜாஜி, காந்திஜி, பண்டிட் ஜவஹர்லால் நேரு ஆகியோர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். பாலக்கரையில் இவர் நிறுவிய பள்ளிக்கூடத்தை இவரது மறைவுக்குப் பின் அரசாங்கமே ஏற்று “அரசாங்க இஸ்லாமிய பள்ளிக்கூடம்” என்று பெயர் மாற்றியது.

‘படே ஹஜ்ரத்’தின் நெருங்கிய நண்பரான ராஜாஜி அவர்கள் இதனை மீண்டும் “செய்யது முர்தஜா அரசு உயர் நிலைப்பள்ளி” என்று பெயர் மாற்றம் செய்து இப்பெரியாரை கெளரவித்தார். தமிழகத்தில் பாகிஸ்தான் என்ற தனிநாடு பிரிவினைக்கு ஆட்சேபனை தெரிவித்த முஸ்லீம் தலைவர்களுள் ‘படே ஹஜ்ரத்’ குறிப்பிடத் தக்கவர்.

செய்யத் முர்தஜா மீது அளப்பரிய அன்பும் மரியாதையும் வைத்திருந்தார் மு.மு.இஸ்மாயீல். 1949-ஆம் ஆண்டு இப்பெரியார் மறைந்தபோது சொல்லவொணா துக்கத்திற்கு ஆளானார் அவர்.

1945-ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தார் இஸ்மாயீல். குறும்பு தவழும் அரும்பு மீசை பருவத்தில் இவர் விரும்பி ஏற்ற பாடமோ கணிதம்.

இருபத்து நான்கு வயதே நிரம்பியிருந்த இளைஞரான அவர், மெளலானா அபுல் கலாம் ஆஜாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் எழுதினார். அபுல் கலாம் ஆஜாத்தை பற்றி அதிகம் தெரியாதவர்கள் எல்லாம் அவரைப் பற்றி நன்கு அறியக்கூடிய வாய்ப்பை அந்நூல் ஏற்படுத்தி தந்தது. (இந்நூலைப் பற்றிய மேலும் விவரங்களை பின்னர் பார்ப்போம்)

2.2.1946 தேதியன்று காந்தியடிகள் கடைசி முறையாக தமிழகம் வந்தபோது மு.மு.இஸ்மாயீலும் அவரைப் பார்ப்பதற்கு திருச்சி ஓடோடி வந்தார். காந்திஜியின் ஆத்மார்த்த சீடாராய் மு.மு.இஸ்மாயீல் மாறியிருந்த நேரம் அது.

இளைஞர் இஸ்மாயீலுக்கு காந்தியின் மீது மிகுந்த அபிமானமும், பிரியமும் ஏற்படக் காரணமாயிருந்த ஒரு மிக முக்கிய நபரை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். பேராசிரியர் கே.சுவாமிநாதன்.என்ற புகழ் பெற்ற காந்தியவாதியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தனிமனித ஒழுக்கத்தின் தன்னிகரில்லா மாந்தனாய்த் திகழ்ந்து, தொண்ணூறு வயதுக்குமேல் நிறைவான வாழ்வு வாழ்ந்தவர் இவர். மகாத்மா காந்தி நூல்களைத் தொகுத்தவர்.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் இஸ்மாயிலின் எழுத்தாற்றலும், இலக்கிய ஆர்வமும், சொற் திறனும் சுவாமிநாதன் அவர்களை மிகவும் ஈர்த்தது. தன் வளர்ப்புப் பிள்ளையாக கருதி இஸ்மாயீல் மீது பாசத்தைக் கொட்டி அவரது வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தார். சிறுவயதில் தாய் தந்தையரை இழந்த இஸ்மாயீலுக்கு கே.சுவாமிநாதன் அவர்களுடைய அன்பும் பரிவும் அளவற்ற ஆறுதல் தந்தது. அவரை தந்தை ஸ்தானத்தில் வைத்து போற்றினார். தன் இறுதிநாள் வரை தனது ஒவ்வொரு பேச்சிலும் தன்னை ஆளாக்கிய அந்த அற்புத மாந்தரை அவ்வப்போது அவர் நினைவுகூறத் தவறவேயில்லை.

ஒரு பேட்டியின் போது “தங்கள் வாழ்க்கையின் வெற்றிக்கு காரணம் எது?” என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் “கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் வெற்றிக்கு முக்கியக் காரணம். பேராசிரியர் கே.சுவாமிநாதன் போன்ற உத்தமர்கள் என்னை ஆதரித்ததும் ஒரு காரணம்” என்று கூறினார்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

என்ற வள்ளுவரின் வாக்குக்கேற்ப எந்நாளும் செய்ந்நன்றி மறவாத செயல் வீரராய்த் திகழ்ந்தார் இஸ்மாயீல்.

அவரது நினைவாக “பேராசிரியர் கே.சுவாமிநாதன் நினைவுப் பரிசு” என்ற ஒன்றை நிறுவினார். ஒவ்வொரு ஆண்டும் சென்னை கம்பன் கழகம் நடத்தும் விழாவில் அப்பரிசு (ரூ 20,000 ரொக்கம்) சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

[அப்பரிசு, ஜெயகாந்தன் (2008), சிவசங்கரி (2009), டிஜிபி திலகவதி (2010) பொற்கோ (2011) ஆகியோருக்கு வழங்கப்பட்டது]

நீதிபதி இஸ்மாயீல் அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி அவரது குடும்பத்தார்களும் “மு.மு.இஸ்மாயீல் நினைவுப்பரிசு” என்ற ஒன்றை அவரது மறைவுக்குப்பின் ஏற்படுத்தி (ரொக்கம் ரூ 10,000) ஆண்டுதோறும் சென்னை கம்பன் கழகம் வாயிலாக சாதனையாளர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

[அப்பரிசு, கவிஞர் ஈரோடு தமிழன்பன் (2008) மு,மேத்தா (2009),கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் (2010), அப்துல் காதர் (2011) ஆகியோருக்கு வழங்கப்பட்டது]

மாணவப் பருவத்தில் இஸ்மாயீலுக்கு தமிழ் மொழியின் மீது தணியாத தாகமும், திரு.வி.க, கல்கி, உ.வே.சாமிநாதய்யர் போன்ற தமிழார்வலர்கள் மீது மோகமும் ஏற்பட்டதற்கும் பேராசிரியர் அளித்த தூண்டுகோல்தான் உந்துசக்தியாக அமைந்தது.

குறிப்பாக, காந்தியச் சிந்தனைகள் பலவற்றை அவர் உள்வாங்கிக்கொண்டது பேராசிரியரிடமிருந்துதான். இஸ்மாயிலின் உறவினர்கள் எல்லோரும் அசைவம். ஆனால், பேராசிரியரின் காந்தியத் தாக்கம் இஸ்மாயிலை முழு சைவமாக மாற்றிவிட்டது.

இளம் வயதிலிருந்தே காந்தியின் “ஹரிஜன்’ இதழ்களை வால்யூம் வால்யூமாக பைண்ட் செய்து வைத்துக்கொண்டு தம் வாழ்நாளின் இறுதிவரை பாதுகாத்து வந்தார் இஸ்மாயில்.

மாணவப் பருவத்தில் இஸ்மாயீலை காந்தியவாதியாக ஆக்கிய பெருமை இரண்டு பேர்களைச் சாரும். ஒருவர் கம்பனடிப்பொடி சா. கணேசன். இன்னொருவர் பேராசிரியர் கே.சுவாமிநாதன்.

1936 முதல் தீவிர தேசிய போராட்டத்தில் பங்கேற்று வந்தவர் கம்பனடிப்பொடி சா. கணேசன் அவர்கள். 1941-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தொடங்கிய தனிநபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு பாதயாத்திரையாக தில்லிக்குப் பயணமாகி 66 நாள்களில் 586 மைல்களைக் கடந்ததும், இவர் உத்தரப்பிரதேச அலிபுரத்தில் சிறைவாசம் அனுபவித்ததும், பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுகள்.

காந்தியடிகளைப் போன்று, நான்கு முழக் கதர் வேட்டியையும், மேலுடையாய் ஒரு துண்டையுமே அணிந்து வந்தவர் கணேசன்.

இதுபோன்ற தலைசிறந்த மனிதர்களின் சகவாசத்தைப் பெற்றிருந்த இஸ்மாயீல், ஒரு பக்குவப்பட்ட மனிதராக, பழகுவதற்கு இனிமையானவராக, பண்பிலே குணசீலராக, பார்போற்றும் உத்தமராக உருவெடுத்தார்.

(இன்னும் வரும்)

கம்பனடிப்பொடி சா. கணேசன்

 

Tags: , ,

ஜெ.மோ.வின் பார்வையில் மு.மு.

தமிழின் பெரும் இலக்கியச் செல்வங்களான சீவகசிந்தாமணி, மணிமேகலை போன்றவை திராவிட இயக்கத்தின் எளிய இலக்கிய அணுகுமுறையால் மூடநம்பிக்கையை வளர்ப்பவை என புறக்கணிக்கப்பட்டன. தமிழின் பிரம்மாண்டமான பக்தி இலக்கிய மரபு முழுமையாக நிராகரிக்கப்பட்டது. சிற்றிலக்கிய காலகட்டம் ஒதுக்கப்பட்டது. காரைக்குடி சா. கணேசன் அமைத்த கம்பன்கழகம் போன்ற அமைப்புகளாலும் டி. கெ. சிதம்பரநாத முதலியார், நீதிபதி மு. மு. இஸ்மாயீல் போன்றவர்களாலும் கம்பராமாயணம் திராவிட இயக்கத்தின் எதிர்பிரச்சார அலையில் இருந்து மீட்கப்பட்டு தமிழர்களின் ரசனையில் அழுத்தமாக நிலைநாட்டப்பட்டது. அவ்வியக்கம் இல்லாமலிருந்திருந்தால் ஒருவேளை கம்பனை ஒரு தலைமுறை தொலைப்பதற்கு திராவிட இயக்கம் காரணமாக அமைந்திருக்கும்.

- எழுத்தாளர் ஜெயமோகன்

 

Tags:

பிறர் பார்வையில்….. நீதிபதி மு.மு.இஸ்மாயீல்

‘இஸ்மாயில் போன்ற நீதிபதிகள் இந்த நாட்டில்தான் உருவாக முடியும். அவரைப் போன்றவர்கள் தோன்றுகிற இந்த பூமிக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பதில் என்ன சந்தேகம்?’

- முன்னாள் பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய்

“எல்லா நீதிபதிகளும் இஸ்மாயில் அளவு சட்ட அறிவு படைத்தவர்களாக இருந்தால் வழக்குகளை நடத்துவது எளிதாகி விடும்’
- பிரபல வக்கீல் செதல்வாட்

‘தனது மத நம்பிக்கைக்கு எந்த சிறு பழுதும் இல்லாமல், கம்ப ராமாயணத்தை பெரும் இலக்கியமாக மதித்து, அதில் அவர் காட்டிய புலமை பிரமிக்கத்தக்கது’

- 2.2.2005 துக்ளக் இதழில் ‘சோ’

M.M.Ismail – A Man of Integrity – The Hindu

‘பெண்கள் நம் சமூகத்தில முன்னுக்கு வருவது ரொம்ப கஷ்டமா இருக்கும்மா. நீ இந்தச் சமூகத்துக்கு ஒரு முன்மாதிரியா இருப்பேன்னு நான் நம்பறேன். என்னுடைய ஆசியும், என்னுடைய வழிகாட்டுதலும் உனக்கு எப்போதும் உண்டு’ என்று என் தலையில கை வைத்துச் சொன்னார். அப்போது அவர் கம்பன் கழகத்தின் தலைவராக இருந்தார். சுமார் 20 நிமிடங்கள் என்னைக் குறித்து அவர் மேடையில் பேசினார். கம்பனைப் பொறுத்தவரை அவர் எனக்கு ஒரு வழிகாட்டி. அவருடைய வாரிசு என்று சொல்லப்படும் அந்தத் தகுதியை நான் முழுமையாகப் பெற வேண்டும். அதற்கான வல்லமையையும், வலுவையும், தேடலையும் இறைவன் எனக்குள் ஆத்ம பலமாய்த் தர வேண்டும் என்பது என் பிரார்த்தனை.

- பேராசிரியை பர்வீன் சுல்தானா

“M.M.Ismail; A multi-faceted Personality” - Indian Express

 

Tags: ,

நீதிபதி நாகூர் மு.மு.இஸ்மாயீல் அவர்களின் வாழ்க்கை குறிப்பு :

1921 – 8, பிப்ரவரி நாகூரில் பிறந்தார்
1945 – சென்னை சட்டக்கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார்
1945 – அவருடைய முதற் நூல் :மெளலான ஆஜாத் வெளிவந்தது
1946 – 1951 – சென்னையில் வழக்கறிஞராகவும் விவேகானந்தா கல்லூரியில் பகுதி நேரப் பேராசிரியராகவும் தொழில் புரிந்தார்
1951 – 1959 வரை சென்னை சட்டக் கல்லூரியில் பகுதிநேர விரிவுரையாளர் அதனைத்தொடர்ந்து தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞரராக நியமனம்
1967 – பிப்ரவரி – தில்லி உயர்நீதி மன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமனம்
1967 – நவம்பர் – சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றல்
1970 – நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களை வரவழைத்து தமிழ் பண்பாடுக் கழகம்- ஹாங்காங் கெளரவித்தது
1974 – சென்னையில் கம்பன் கழகம் நிறுவ காராணமாக இருந்தார்.
1978 – பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலி கம்பன் கழகம் அவருக்கு விருது வழங்கி கெளரவித்தது
1979 – அண்ணாமலை பல்கலைக் கழகம் அவருக்கு “டாக்டர்” பட்டம் வழங்கி கெளரவித்தது
1979 – நவம்பர் 6, சென்னை உயர்நீதி மன்றத்தில் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்
1979 – 1981 வரை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் நீடித்தார்
1980 – அக்டோபர் 27, பிரபுதாஸ் பட்வாரிக்கு பதிலாக தற்காலிக தமிழக ஆளுநராக நியமனம் பெற்றார்
1981 – ஜூலை 8, தன்னை கலந்தாலோசிக்காமல் வேறு மாநிலத்திற்கு மாற்றல் செய்ததை கண்டித்து தலைமை நீதிபதியை பதவியைத் துறந்தார்
1989 – மதுரை ரோட்டரி சங்கம் ‘பால் ஹாரிஸ் பெல்லோஷிப்’ விருது
1991 – சென்னை நாரத கான சபா “ராம ரத்னம்” விருது
1997 – ஆழ்வார் ஆய்வு மையம் “ராமனுஜர்” விருது
2005 – ஜனவரி 17 திங்கட்கிழமையன்று அவரது மறைவு

           பெற்ற பட்டங்கள் :

  • “இயல் செல்வம்”
  • “சேவா ரத்தினம்”
  • “இராம ரத்தினம்”
 

இலக்கிய வேந்தர் இஸ்மாயீல் எழுதிய நூல்கள்

நூல்கள் :

(20-க்கு மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்)

மெளலானா ஆஜாத் (1945) (வாழ்க்கை வரலாறு)
அல்லாவுக்கு ஆயிரம் நாமங்கள்
இனிக்கும் இராஜ நாயகம் (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்) (ஏவி.எம்.ஜாபர்தீன் – நூர்ஜஹான் அறக்கட்டளைச் சொற்பொழிவு)
மும்மடங்கு பொலிந்தன. (1978) வானதி பதிப்பகம், சென்னை. பக். 259
கம்பன் கண்ட சமரசம் (1985) வானதி பதிப்பகம், சென்னை. பக். 227.
உந்தும் உவகை (1987) வானதி பதிப்பகம், சென்னை. பக். 227.
இலக்கிய மலர்கள் (சென்னை வானதி பதிப்பகம் 1990)
ஒரு மறக்க முடியாத அனுபவம் (1992) – வானதி பதிப்பகம் (கல்கியில் டிசம்பர் 8, 1985 வெளிவந்த கட்டுரைத் தொகுப்பு) 
கம்பன் கண்ட ராமன்
செவிநுகர் கனிகள்
வள்ளலின் வள்ளல்
பழைய மன்றாடி – வானதி பதிப்பகம் 1980
மூன்று வினாக்கள் வானதி பதிப்பகம். பக். 410
நினைவுச்சுடர், 
தாயினும்…, 
உலகப் போக்கு

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 47 other followers