
கலைஞர் என்ற முறையில் சிலருக்கு மு.கருணாநிதியைப் பிடிக்கும். எனக்கு எங்க ஊரு ஹாஜா பாஷாவைப் பிடிக்கும். ஏனெனில் இவரும் ஒரு நல்ல கலைஞர். அவர் குறளோவியம் வரைந்தவர். இவர் நகஓவியம் வரைந்தவர்.
நகம் நமக்கு வாய்த்திருப்பது கோபம் வரும்போது அதை பல்லால் கடித்துக் குதறி துப்புவதற்காகத்தான் என்று நாம் தப்புக்கணக்கு போட்டு வைத்திருக்கிறோம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள். இவருக்கு நகம்தான் ஆயுதம். ஆம்.. நகம்தான் இவருக்கு சோறு போட்டது.
பழைய சினிமா படங்களில் பார்த்தோமானால் கதாநாயகிகளின் கண்கள் பேசும். குறிப்பாக சரோஜாதேவியின் கண்கள். “லவ் லவ் பேர்ட்ஸ், லவ் பேர்ட்ஸ், தக்கத் திமி தா” என்று பாடும்போது, அந்த பாடல் வரிகளுக்கு ஏற்றாற்போல் கண் இமைகள் துடிக்கும், விழிகள் இடது கோடிக்கும் வலது கோடிக்கும் அலைபாயும். அது கண்கள் பேசும் கலை.
ஹாஜா பாஷாவின் நகக் கண்கள் பேசும்; உரையாடும்; கவிதை வடிக்கும். நகம்தான் அவருக்கு தூரிகை.
உருவத்தை பார்த்த மாத்திரத்தில் நொடிப்பொழுதில் தத்ரூபமாக வரைந்து விடுவார். இவரை ‘அபூர்வக் கலைஞர்’ என்று ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தமிழ் பத்திரிக்கைகள் புகழ்மாலை சூட்டியிருந்ததை அந்தக் காலத்தில் படித்து மனமகிழ்ந்திருக்கிறேன்.
மாநிலக் கண்காட்சி, சென்னை மெரீனா பீச், தஞ்சை பொருட்காட்சி, என்று எங்கு சென்றாலும் இந்தக் கலைஞனை பார்க்கலாம். “இவரு எங்க ஊர்க்காரரு” என்று நண்பர்களிடம் பெருமையடித்திருக்கிறேன்.
முன்பொரு நாள் நாகூரில், ஒரு வீட்டு கல்யாண வைபவத்தில் கச்சேரி நடந்தது. “கடவுள் அமைத்து வைத்த மேடை” என்ற பாடல் ஒலிபெருக்கியில் ஒலித்துக் கொண்டிருந்தது. “நானொரு விகடகவி. இன்று நான் ஒரு கதை சொல்வேன்” என்று தொடர்ந்து கிளிகளைப்போல கத்தி, தவளைகள் போல ஒலியெழுப்பி, யானைகள் போல பிளிறி, மான்களைப்போல மந்திரம் பாடிக்கொண்டிருந்தார் ஒரு மேடைப் பாடகர். அருகில் சென்று பார்த்தால்; “அட! நம்ம ஹாஜா பாஷா!!”
கெளரவமாக நடிக்க வேண்டுமென்ற ஆசையில் திரைப்படத்துறையில் அலைந்து திரிந்து கெளரவ நடிகர் ஆனவர் இவர். “நான்” (என்ற ஞாபகம்) படம் வெளிவந்தபோது அதை ஒன்றுக்கு பலமுறை பார்த்தேன். காரணம் மொட்டை பாஸ் ஆக வரும் அசோகனுக்குத் துணையாக ஹாஜா பாஷா ஒரு சில வினாடிகள் திரையில் தோன்றுவார். “ஹய்யா.. ஹாஜா பாஷா!” என்று திரையரங்கில் என்னையறியாமலேயே கூச்சல் போட்டிருக்கிறேன்.
அமிதாப் பச்சன் நடித்த “ஆக்ரி ராஸ்தா” இந்திப் படத்தில் ஒரு அரசு அலுவலகத்தில் பழைய லெட்ஜரிலிருந்து ஏதோ ஒரு ஆவணத்தை எடுத்துக் கொடுப்பார். அவர் ஆவண நடிகராக நடித்ததைக் கண்டு ஆணவப்பட்டேன். “அடடே! நம்ம ஊருக்காரரு அகில இந்திய லெவலுக்கு பிரகாசிக்கத் தொடங்கி விட்டாரே” என்று பூரித்தேன்.
ஒருமுறை பிரசாத் ஸ்டூடியோவுக்கு போயிருந்தபோது ஹாஜா பாஷாவை தற்செயலாக அங்கு சந்திக்க நேர்ந்தது. அடுத்த ப்ளோரில் இளையராஜாவின் பாடலுக்கு ஒலிப்பதிவு நடந்துக் கொண்டிருந்தது. “வாங்க.. வாங்க..” என்று வாயார வரவேற்று, உங்களை ஒரு வி.ஐ.பி.யோடு அறிமுகப் படுத்துகிறேன் என்று கூறி “இவர்தான் டி.ஏ.மதுரத்துடைய சகோதரர்” என்று ஒரு நபரை அறிமுகப்படுத்தினார். நானும் கை குலுக்கினேன், (என்.எஸ்.கிருஷ்ணனையே திரையுலகம் மறந்திருந்த காலம் அது)
சிகப்பு, மஞ்சள், பச்சை நிறத்தில் கலர் கலராக பேண்ட் போட்டு ராமராஜன் படங்களில் நடிப்பார். அந்த Dress sense இவரைப் பார்த்துதான் ஏற்பட்டது என்று நினைக்கிறேன். எந்த ஒரு கும்பளிலும் ஹாஜா பாஷாவை சுலபமாக அடையாளம் கண்டு பிடித்து விடலாம். ஈஸ்ட்மென் கலரில் காட்சியளிப்பார்.
சிவப்பு நிறத் தொப்பி, சிவப்பு நிற Scarf, சிவப்பு நிற சட்டை, சிவப்பு நிற பேண்ட், சிவப்பு நிற பெல்ட், சிவப்பு நிற சாக்ஸ், சிவப்பு நிற ஷூ என்று உடையணிந்து தூரப்பார்வை உள்ளவர்களுக்குகூட தொலைதூரத்தில் துல்லியமாகத் தெரிவார்.
உள்ளூர் David Copperfield இவர். Showman – ஆகவே வாழ்க்கையை ஓட்ட வேண்டியதிருந்ததால், தன் ஓவியத் தொழிலுக்கு மெருகூட்டும் வகையில் மேஜிக் கலையையும் கற்று வைத்திருந்தார். ரோஜா பிரியருக்கு அடுத்தபடியாக குழந்தைகளைக் கவரும் பரமரகசியம் இந்த ஹாஜா பாஷாவுக்குத்தான் அத்துப்படி.
Polyglot – க்கு உதாரணம் கேட்டால் இவர் பெயரைச் சட்டென்று சொல்லி விடலாம். எத்தனை மொழி இவருக்குத் தெரியும் என்ற கணக்கு இவருக்கே தெரியாது. கலைத் தொழில் நிமித்தம் காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரை வட்டமடித்துக் கொண்டிருந்ததால் எல்லா பாஷையும் பேசுவார். அந்தந்த ஊர் accent – ல் பேசுவது இவரது தனித் திறமை.
மலேசியா பயணம் சென்றிருந்தபோது மலாய் மொழி கற்றுக் கொண்டு மேடை நிகழ்ச்சிகளில் மலாய் மொழியில் பேசி அசத்தினார். தாய்லாந்து நாட்டில் பத்தாயா பீச்சில் இவரது கலைத்திறன் நிகழ்ச்சி நடந்தது. “இப்பொழுது இந்தியாவிலிருந்து வருகை புரிந்திருக்கும் இந்த மிமிக்ரி கலைஞர் நம் நாட்டு அரசியல் தலைவர் சொம்சாக் போல் பேசிக்காட்டுவார்” என்று ஒருவர் தாய்பாஷையில் அறிமுகம் செய்ய, ஹாஜா பாஷா மேடைக்கு வந்து சொம்சாக் போல, அதே குரலில்; அதே பாணியில்; அதே தொனியில் பேசி பலத்த கைத்தட்டலை பெற்றுக் கொண்டார்.
ஒரு சில நாட்களுக்குள், கேட்டறிந்து; பயிற்சி செய்து; உள்ளுர் பிரமுகர் போல் பேசியது இவரது திறமைக்கு ஒரு சான்று. கூர்ந்து கவனிக்கும் தன்மை, எதையும் உடனே கிரகித்துக் கொள்ளக் கூடிய திறமை இருப்பவரால்தான் இது சாத்தியம்
இந்த தடவை ஊர் சென்றிருந்தபோது செய்யது பள்ளியிலிருந்து இனிமையான குரலில் பாங்கு சப்தம் ஒலித்தது. “இந்தக் குரல் யாருடையது தெரியுமா?” என்று என் தாயார் புதிர் போட்டார். நான் உதட்டைப் பிதுக்கினேன். “உனக்கு நன்றாக அறிமுகம் ஆனவர்தான்” என்றார். விசாரித்துப் பார்த்ததில் அது ஹாஜா பாஷாவின் குரல் என்று தெரிய வந்தது.
கலா ரசிகராக இருந்தவர் இப்போது பிலால் ரசிகராகி விட்டார். வாழ்க்கையின் சாராம்சத்தைப் புரிந்துக் கொண்டால் வாழ்க்கையின் வழிமுறையும் மாறி விடும் என்பது எவ்வளவு உண்மை? “எப்படி இருந்த நான் இப்படி ஆகி விட்டேன்” என்று விவேக் நெகட்டிவ் தொனியில் பேசும் பஞ்ச் டயலாக் இவருக்கு பாஸிடிவ் தொனியில் அமைந்து விட்டது. மார்க்கம் இவர் மார்க்கத்தை திருப்பி விட்டிருந்தது. “ஹிதாயத்” என்று சொல்வார்களே அது இதுதான் போலிருக்கிறது.
அவருடன் பேசிப் பார்த்ததில் அவரது மனதுக்குள் ஒரு மகத்தான ஆசை நெடுநாட்களாக புதைந்திருப்பது தெரிய வந்தது. புனித குர்ஆனை முழுவதுமாக உலோகத் தகட்டில் நகத்தாலேயே எழுதி முடிக்கவேண்டும் என்பதுதான் அது. இறைவன் அவரது ஆசையை நிறைவேற்றி வைப்பானாக. ஆமீன்.
