- அப்துல் கையூம்
நாகூர் என்ற சிறிய வட்டத்திற்குள்ளிருந்து வெளியே வரவே மாட்டீர்களா? என் அபிமான வாசகர்கள் பலர் இதே கேள்வியைத்தான் என்னிடம் அடிக்கடி கேட்கிறார்கள். நியாயமான கேள்விதான். நான் பிறந்த மண்ணைப்பற்றி சிந்தித்து சிலாகித்து எழுதுவதற்கு அளப்பரிய விஷயங்கள் அந்த அளவுக்கு மலிந்துக் கிடக்கின்றன.
“சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு” என்று கவிஞர் வைரமுத்து சொன்னதுபோல, நான் பிறந்த மண், தனக்கென ஒரு மகரந்த வாசனையை நிலைநிறுத்தி வைத்திருக்கிறது. படித்து தெரிந்துக் கொள்ளும் விஷயங்களை பகிர்ந்துக் கொள்வதை விட, பரிச்சயமான விஷயங்களை நுகர்ந்து, அனுபவக் கலப்போடு அலசி ஆராய்வது எவ்வளவு சுகந்தம் தெரியுமா?
நாடகப் பணியையும் நாகூரையும் இணைத்துப் பேசுகையில், முஸ்லீம்கள் அதிகமாக வாழும் இச்சிற்றூரில் நாடகப் பங்களிப்பு என்ன இருக்க முடியும் என்றுதான் மேலோட்டமாக நம்மை சிந்திக்க வைக்கும். ‘அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம் இருக்கக் முடியும்?’ என்று நினைக்கக் கூடும்.
இசையும் நாடகமும் இஸ்லாத்துக்கு எதிர்மறையான விஷயங்கள். ஆதலால் இவைகளுக்கு முஸ்லீம்களின் பங்களிப்பு இருக்க முடியாது என்ற எண்ணம் பொதுவாகவே நிலவுகிறது. முன்னோடியான காரியங்களை முஸ்லீம்கள் நிகழ்த்தி அமைதிப் புரட்சி செய்திருக்கிறார்கள் என்பது கலப்படமில்லாத உண்மை.
“நாகூரில் தடுக்கி விழுந்தால் ஒரு கவிஞன் அல்லது பாடகன் காலில்தான் விழவேண்டும்” என்ற ஒரு வேடிக்கையாகச் சொல்வதுண்டு. ஆட்டுக்கால் சூப்பு விற்பவரும், கசாப்புக்கடை வைத்திருப்பவரும், முடிதிருத்துபவரும், சாயம் பூசுபவரும் இரவு நேரமானால் மேடையேறி தன் இனிய குரலால் ரசிகர்களை வசீகரிப்பது இங்கு சகஜமாக இருந்திருக்கிறது. யாரும் அவர் செய்யும் தொழிலை வைத்து எடை போட்டு குறைத்து மதிப்பிடுவதில்லை. மாறாக கலைக்கு அந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் தருபவர்கள் இவ்வூர் மக்கள்.
நாகூர் வழிபாட்டுத்தளம் என்று புகழ் பெற்றிருந்ததால் வடநாட்டு இசைக்கலைஞர்கள் திரண்டு வந்து நாகூர் தர்காவில் ‘கவ்வாலி’ என்ற சூஃபி இசையை அறிமுகம் செய்து, ஹிந்துஸ்தானி இசையின் மீதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டுப் போனார்கள். தமிழிசையும், வடநாட்டு இசையும் கலந்து இஸ்லாமிய இசை என்னும் ஒரு புதுவடிவத்திற்கு நாகூர் அடிகோலிட்டது. பெரும்பாலான நாகூர்க்காரர்களுக்கு உருதுமொழி தெரியாத போதிலும் கூட விடிய விடிய உடகர்ந்து இசையைக் கேட்பதை ஒரு வழக்கமாக வைத்திருந்தது அவர்களது இசையார்வத்திற்கும் கலையுணர்வுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
இன்றும் கடைவீதியில் சென்று நோட்டம் விட்டால் நுஸ்ரத் பதே அலிகான் ‘கவ்வாலி’ பாடி அசத்திக் கொண்டிருப்பார் அல்லது குலாம் அலி ‘கஸல்’ இசைத்துக்கொண்டு இருப்பார் அல்லது உவைஸ் ரிஸா காதிரி “நாத்” பாடி பரவசப்படுத்திக் கொண்டிருப்பார். (கேசட் கடையில்தான்)
நாகூரார்களின் இயற்றமிழ் மற்றும் இசைத் தமிழ் பங்களிப்பை பிறிதொருமுறை நாம் அலசி ஆராய்வோம். அதற்கென நிறைய பக்கங்கள் ஒதுக்க வேண்டிவரும்.
எத்தனையோ சிற்றூர்கள் தமிழுக்காக தங்களது பங்களிப்பை அளித்திருக்கின்றன. உண்மை இப்படியிருக்க நாகூரை மட்டும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவுக்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்ற கேள்வி எழ நியாயமிருக்கிறது. “காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு” என்று சொல்வதைப்போல நாகூர்க்காரர்கள் தாங்கள் பிறந்த ஊரை மெச்சிப் பேச வாய்பிருக்கிறது.
நாகூரைப் பொறுத்தவரை நாகூரின் இலக்கிய மேன்மைகளை அதிகம் பேசுபவர்கள் நாகூர்க்காரர்கள் அல்ல. வெளியூர்க்காரர்கள்தான். “புதையல் மூட்டை மீது அமர்ந்துக் கொண்டே, புதையலைத் தேடுகின்றோம் நாம்” என்று கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்வதைப் போல நாகூரின் பெருமை அவர்களுக்குத் தெரிவதில்லை. நாகூர் வரலாற்றுச் சிறப்பைக் கூறுவதற்கு ஒரு புதுக்கோட்டை ராஜா முஹம்மது தேவைப்படுகிறது.
முத்தமிழ்
வேந்தர்கள் மூவர்: சேர, சோழ, பாண்டியர்; சங்கங்கள் மூன்று: தலைச் சங்கம், இடைச் சங்கம், கடை சங்கம்; குறளின் அதிகாரம் மூன்று: அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்; குற்றங்கள் மூன்று: காமம், வெகுளி ,மயக்கம்; தோஷங்கள் மூன்று: வாதம், பித்தம், சிலேட்டுமம்; முக்கனிகள் மூன்று: மா, பலா வாழை; இப்படி எல்லாவற்றையும் மூன்றாக பிரித்தார்கள் தமிழர்கள்.
த-மி-ழ் : மூன்றெழுத்து. வல்லினத்திலிருந்து ‘த’ என்ற எழுத்தையும், மெல்லினத்திலிருந்து ‘மி’ என்ற எழுத்தையும், இடையினத்திலிருந்து ‘ழ்’ என்ற எழுத்தையும் தேர்ந்தெடுத்து தங்கள் மொழிக்கு பெயர் சூட்டிக் கொண்டவர்கள் தமிழர்கள். தமிழ் என்பதற்கு ‘இனிமை’ என்ற மூன்றேழுத்து பொருளையும் கொடுத்தார்கள். நா-கூ-ர் என்ற மூன்றெழுத்து ஊர் முத்தமிழுக்கு ஆற்றியிருக்கும் பங்களிப்பு அளவிட முடியாது.
இயற்றமிழ், இசைத்தமிழ் , நாடகத்தமிழ் என்று முறையே பிரித்து முத்தமிழ் என்று அழைத்தார்கள் நம் முன்னோர்கள். இம்மூன்றும் ஒன்று மற்றொன்றைச் சான்றது. ஒன்றில்லாமல் மற்றொன்றில்லை. இயலின்றி இசையில்லை. இசையின்றி நாடகமில்லை, இயலின்றி நாடகமுமில்லை. இந்த தத்துவத்தை முழுமையாக புரிந்து வைத்திருந்தவர்கள் நாகூரார்தான் என்றால் மிகையாகாது.
“மூன்று தமிழ் சேர்ந்ததுவும் உன்னிடமோ?” என்று வாலி எம்.ஜி.ஆருக்காக எழுதிய பாடல் நாகூருக்கு அட்டகாசமாக பொருந்துகிறது.
நாகூருக்கு “புலவர் கோட்டை” என்ற காரணப் பெயர் ஏற்பட்டதற்கு இந்த வாதம் வலிமை சேர்க்கிறது. மூன்று தமிழையும் ஒருசேர வளர்த்து போற்றியது இந்தச் சிற்றூர் என்றால் அது வியப்பில் ஆழ்த்துகின்ற விஷயம்தானே?
அன்றைய பத்திரிக்கைகள், நூல்கள் சமஸ்கிருத மொழியைக் கலந்து தமிழ் வார்த்தைகளுக்கு சமாதி கட்டிக் கொண்டிருந்த காலங்களில் தனித்தமிழ் இயக்கத்தை மறைமலையடிகள் முன்னின்று நடத்தினார். அவர் நாகையைச் சார்ந்தவராக இருந்ததால் அதன் பாதிப்பு நாகூரிலும் தெரிந்தது. தூயதமிழ் வார்த்தைகள் நாகூர் வாழ் பாமர மக்களின் வாயில் புழக்கத்திலிருப்பது இன்றும் கண்கூடு. மணிப்பிரவாளத் தமிழில் சிக்காமல் தப்பிப் பிழைத்த ஊர் நாகூர் என்று பெருமை பட்டுக் கொள்ளலாம்.
நாகூர் குலாம் காதிர் நாவலர் தனது 74- வது வயதில் 28-01-1908 அன்று உயிர் நீத்தபோது அவரது மாணவராக விளங்கிய மறைமலை அடிகள் கையறு நிலையில் பாடிய பாடல் இங்கு நினைவு கூறத்தக்கது.
“வாடுகின்ற வையத்தின் வகைவிளங்க வசைபடுத்து
பீடுகெழு தமிழ்த் தெய்வ குலாம்காதிர் பெரும்புலவோய்
நீடுவளப் புத்தேளிர் நினைவின் மாசகற்றிவிட
ஓடிமறைந் துற்றாயோ இனியெங்குற் றுணர்வேனோ”
என்ற பாடல் இருவருக்குமிடையே இருந்த நெருக்கத்தை உணர்த்த போதுமானது.
“பாத்திரத்தை ஏனம் என்போம்
பழையதுவை நீர்ச் சோறென்போம்,
ஆத்திரமாய் மொழி குழம்பை
அழகாக ஆணம் என்போம்,
சொத்தை யுரை பிறர் சொல்லும்
சாதத்தை சோறு என்போம்
எத்தனையோ தமிழ் முஸ்லீம்
எங்களுயிர்த் தமிழ் வழக்கே!”
என்ற நாகூர் புலவர் ஆபிதீனின் காலத்தால் அழியாத இப்பாடல் நாகூரில் வழக்கிலிருந்த தூயதமிழ் வார்த்தைகளுக்கு ஒரு நற்சான்று.
நாகூர் வளர்த்த நாடகத்துறையை ஆராய்வதற்கு முன்னர் ஒரு முன்சுருக்கம். உலக அளவில் அரேபியர்கள் நாடகத்திற்கு செய்திருக்கும் மகத்தான பங்கு அளவிட முடியாது. தமிழகத்திற்கு அரேபியர்களின் வருகைக்குப் பிறகு ஆயிரத்திற்கு மேற்பட்ட அரபு வார்த்தைகளை தமிழ்மொழி ஏற்றுக் கொண்டுள்ளது. புதுப்புது வார்த்தைகளுக்கு ஒரு மொழி கொடுக்கும் அங்கீகாரம்தான் அம்மொழியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறதென்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து.
“ஆயிரத்தொரு இரவுகள்” “அலாவுத்தீனும் அற்புத விளக்கும்” “லைலா-மஜ்னு” “யூசுப்-ஜுலைகா” போன்ற கதைகள், தமிழ் நாடக உலகில் மகத்தான வரவேற்பைப் பெற்றதற்கு அதில் காணப்பட்ட “Fantasy” எனப்படும் கற்பனையுலக அனுபவமும், பிரமாண்டமும், நவீனத்துவமும் ஒரு முக்கியக் காரணம்.
“குலேபகவாலி” “பாக்தாத் திருடன்” “ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி” போன்ற படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெற்றமைக்கு காரணம் தமிழுக்குப் புதிதான விஷயங்களை இறக்குமதி செய்ததினால்தான்.
ஜெயமோகன் போன்ற பழுத்த எழுத்தாளர்கள் ‘இஸ்லாமியர்களுக்கு சமகால இலக்கியப் பரிச்சயமில்லை’ என்று கண்மூடித்தனமாக எழுதுவது மிகுந்த வேதனையளிக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை; மரபுக்கவிதை காலம் முதல் புதுக்கவிதை காலம்வரை; சித்தி ஜுனைதா முதல் கவிஞர் சல்மா வரை; இஸ்லாமியர்கள் இலக்கியத்துறையில் ஆர்ப்பாட்டமின்றி முத்திரை பதிந்து வந்திருக்கிறார்கள், வருகிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை.
எம்.ஜி.ஆரின் “குடியிருந்த கோயில்” படம் வந்த காலத்திலேயே ‘ரோஷனாரா பேகம்’ என்ற முஸ்லீம் பெண் கவிஞர் எழுதிய ‘குங்குமப்பொட்டின் மங்கலம்’ என்ற பாட்டு எல்லோரையும் முணுக்கவைத்தது நமக்கு ஞாபகம் இருக்கும்.
மஞ்சள் மகிமையையும், தாலியின் சிறப்பையும், குங்குமப்பொட்டின் மங்கலத்தையும் ஒரு முஸ்லிம் பெண்மணி பாடினார் என்றுச் சொன்னால் மதநல்லிணக்கத்திற்கு இதைவிட வேறென்ன வேண்டும்?
திருவாளர் ஜெயமோகன் தயைகூர்ந்து தன் கறுப்புக் கண்ணாடியை கழற்றி வைப்பது நல்லது. ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பார்கள். ஒரு சாதாரணச் சிற்றூர் முத்தமிழை எப்படி வளர்த்தது என்பதை, மனதில் இருத்திக் கொண்டால் நாகூரைப் போன்று முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்ற எத்தனையோ பேரூர்கள் தங்களது பங்களிப்பை எப்படியெல்லாம் செய்திருக்கிறது என்பதை சுலபமாக கணக்கிட்டுக் கொள்ள ஏதுவாகும்.
கி.பி. 17-ஆம் நூற்றாண்டு பிற்பகுதியில் நாகூர் முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் எண்ணிக்கையில் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்ற வரலாறு பதிவாகி இருக்கிறது. அத்தனைப்பேரும் காவியம் படைத்தவர்கள். இலக்கியக் கர்த்தாக்கள். தமிழகமெங்குமுள்ள இஸ்லாமிய இலக்கியவாதிகளின் சரணாலயமாக நாகூர் விளங்கியுள்ளது. வண்ணக்கவிகள் பாடுவதில் வல்லவரான ஹமீத் இப்ராஹீமுக்கு “வண்ணக் களஞ்சியப்புலவர்” என்ற சிறப்புப் பெயரை நாகூர் தர்காவில் நடந்த புலவர்கள் கூட்டத்தில் வழங்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் சான்று பகர்கின்றன.
தொடக்க காலத்தில், தங்களது இயற்பெயரால் எல்லாதரப்பு வாசகர்கள் மனதிலும் நினைவில் நிற்க இயலாது என்ற அபிப்பிராயத்தினாலோ என்னவோ பெரும்பான்மையான இஸ்லாமிய எழுத்தாளர்களை அவரது பெயர்களை வைத்து தனியே இனம்காண முடியவில்லை. ஜெயமோகனின் குற்றச்சாட்டுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
ஒருமுறை சுஜாதாவிடம் ஒரு முஸ்லிம் வாசகர் கேள்வி கேட்டிருந்தார்: “அதென்ன, நாவலாசிரியர்கள் நிறைய பேர் பிராமணர்களாகவே இருக்கிறீர்கள்?” அதற்கு சுஜாதாவின் பதில் இருந்தது “அதென்ன, புதுக்கவிஞர்களில் நிறைய பேர் முஸ்லிம்களாகவே இருக்கிறீர்கள்? – இது சுஜாதாவின் பதில். இந்த தகவலும் ஜெயமோகனின் கவனத்திற்காகவே.
எண்ணற்ற இஸ்லாமிய இலக்கியவாதிகள் தங்களது அரபிப்பெயரை தமிழ்ப்படுத்தியும், யாரோ ஒருவருக்கு “தாசன்” ஆகவோ அல்லது தன் துணைவின் பெயரிணைத்து “மணாளன்” என்ற புனைப்பெயரைச் சூட்டியோ தங்களை அடையாளப் படுத்திக் கொண்டதை நாம் பார்க்கிறோம். கவிக்கோ அப்துல் ரகுமான், பேரா. அப்துல் காதர் போன்றவர்கள் இதற்கு விதிவிலக்கு.
இன்றளவும் இச்சிற்றூரில் எண்ணற்ற சிறுகதை எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள், கவிஞர்கள், பாடலாசிரியர்கள், மொழி ஆய்வாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், மின்னிதழ் எழுத்தாளர்கள், வலைப்பதிவாளர்கள் என்று பன்முக படைப்பாளிகள் இலக்கிய உலகில் சுடர்விட்டு வருகிறார்கள். சாரு நிவேதிதா, நாகூர் ரூமி, ஆபிதீன், ஏ.எச்.ஹத்தீப் சாஹிப், கவிஞர் இஜட் ஜபருல்லா, கவிஞர் நாகூர் சலீம், காதர் ஒலி, இதயதாசன் போன்றவர்களை இக்கால கட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
திருமண ‘நாலாம்நீர்’ சடங்குக்கு பரிகாசப் பாடல்கள் என்று எழுதத் தொடங்கி இப்போது வெண்பா எழுதிவரும் கவிஞர்களே இதற்கு உதாரணம். இவர்கள் எந்த பல்கலைக் கழகத்திற்குச் சென்றும் “புலவர்” பட்டம் பெற்றவர்களில்லை என்பது கவனிக்கத்தக்கது. ‘சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்’ என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள்.
இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற வரிசையில் முதலில் நாடகத்துறையில் நாகூர் காட்டிய ஈடுபாட்டை மட்டும் இங்கு ஆராய்வோம்.
நாகூரின் நாடகத் தந்தை
இந்த காமெடிக் கதையை நாகூரில் பலரும் சொல்லக் கேட்டிருக்கலாம். நாகூரில் ஒரு நாடகம் அரங்கேற்றினார்களாம். அதில் ஒரு பாத்திரத்தை ஏற்று நடித்ததோ குத்துச் சண்டை விளையாட்டில் திறம் வாய்ந்த ஒரு உள்ளூர் பிரமுகர். அவருடைய வாயில் தூயதமிழ் வசனங்கள் அவ்வளவு எளிதில் நுழையாதாம். நாடகமோ சரித்திர நாடகம்.
“மன்னா! நம் நந்தவனத்தில் செந்நிறத்திலும், நீல நிறத்திலும், வெந்நிறத்திலும் மலர்கள் மலர்ந்திருக்கின்றன, மன்னா!”
இந்த வசனத்தை காவலாளியாக பாத்திரமேற்றிருக்கும் அந்த நபர் வசனம் பேச வேண்டும். மனனம் செய்த வசனம் மறந்துப்போய் மேடையில் அவர் லோக்கல் பாஷையிலேயே புகுந்து விளையாடி விட்டாராம்.
“ராஜாவே! நம்ம பங்களா தோட்டத்துலே ரோஜு கலருன்னும், ஹூதா கலருன்னும், ஆனந்தா கலருன்னும், ஹேந்தி கலருன்னும், காக்கா முட்டை கலருன்னும் ஜோக்கு ஜோக்கா பூவு பூத்திருக்குது ராஜாவே” என்றாராம்.
இன்னொருமுறை அவர் வில்லனைப் பார்த்து “நீ என்கிட்டேயே லாடுரியா?” என்று சூளுரைத்தாராம். “காக்கா. லாடுறியா அல்ல விளையாடுறியான்னு சொல்லுங்க”ன்னு கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து கத்தினாராம்.
ரசிக்கத்தக்கதாக இருக்கிறது இந்நகைச்சுவை. அவர்கள் ‘குத்துச்சண்டை வீரர்’ என்று குறிப்பிடும் நடிகர் வேறு யாருமல்ல. “நாகூர் பரீத்” என்ற பெயரில் திரைப்பட உலகில் புகழ் பெற்றிருந்த ஸ்டண்ட் மாஸ்டர் பரீது காக்காதான் அவர்.
1966-ஆம் ஆண்டு ராமண்ணா இயக்கத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா இணைந்து நடித்த “குமரிப்பெண்” படம் வெளிவந்தது. டைட்டிலில் சண்டைப் பயிற்சி “நாகூர் பரீது” என்ற பெயர் கொட்டை எழுத்தில் காண்பிப்பார்கள். நாகூர் விஜயலட்சுமி டூரிங் கொட்டகையில் அது திரையிடப்பட்டபோது கூட்டத்தோடு கூட்டமாக நானும் எழுந்து நின்று கைத்தட்டி ஆராவாரம் செய்திருக்கிறேன். நாகூரின் “நாடகத் தந்தை” அவர்.
அவரைத்தான் நாகூர்க்காரர்கள் இப்படிப் போட்டு கலாய்ப்பார்கள். கேலி, கிண்டல், குசும்பு, நக்கல், நையாண்டி இவற்றுக்கு பிரசித்தி பெற்ற ஊரன்றோ இது. தவிர இந்த காமெடிக் கதையில் எள்ளளவும் உண்மை கிடையாது.
‘நாடகத்தந்தை’ பரீது அரங்கேற்றிய நாடகங்கள் நிறையவே உண்டு. அவை எல்லாவற்றிலும் அவர்தான் ஹீரோ. “சந்தர்ப்பம்” “விதவைக்கன்னி” போன்ற நாடகங்கள் மிகவும் பிரபலம் அடைந்தது. பாடல்கள் பெரும்பாலும் நாகூர் சலீம்தான். இவர் இப்போது திரைப்பட பாடலாசிரியரும் கூட. இவ்வூரில் முதல் முதலாக நாடகத்துக்கு பாட்டு புத்தகம் போட்டு புரட்சி செய்தது “விதவைக்கன்னி” நாடகத்திற்குத்தான்.
வில்லன் “டான்
“படித்தவன்” நாடகம் நல்ல வரவேற்பை பெற்றது. ஜப்பார் நானா (விறகுவாடி), “டான்” என்று அழைக்கப்படும் ஹமீது சுல்தான் ஏனையோர் நடித்த நாடகமிது. ரஜினிகாந்த், ஷாரூக்கான், அஜீத் இவர்களையெல்லாம் “டான்” என்று அழைப்பதற்கு முன்னால் இவர்தான் இப்பெயரால் இவ்வூரில் அழைக்கப்பட்டார். வில்லன் பாத்திரமென்றால் இவரைத்தான் அழைப்பார்கள். நாடகத்தில் வில்லன் பாத்திரமேற்று “டான்” நடிக்கையில் ஒரு சுவையான நிகழ்வு நடந்தேறியது.
கதநாயகியிடம் வில்லன் முறை தவறி நடந்துக் கொள்ளும் காட்சி. கதாநாயகி “அடப்பாவி! சண்டாளா! உனக்கு கண்ணில்லையா?” என்று வசனம் பேச வேண்டும். பாத்திரமேற்று நடித்த டானுக்கு உண்மையிலே ஒருகண் ஊனம். “டானுக்கு கண்ணில்லைதான்” என்று கூட்டதில் ஒருவர் கூச்சல் போட, தர்ம சங்கடமான சூழ்நிலையில் அரங்கத்தில் நிசப்தம். அதையும் திறம்பட சமாளித்துக் கொண்டு “எனக்கு கண்ணில்லாமல் இருக்கலாம். ஆனால் ஞானக்கண் இருக்கிறது” என்று சமயோசிதமாக பேசி நிலமையைச் சமாளித்து ‘டான்’ கைத்தட்டலை அள்ளிச் சென்றது மறக்க முடியாத நிகழ்வு. இவர்களின் நாடகங்கள் நாகூர் மட்டுமின்றி திருவாரூர் வரையிலும் அரங்கேறியது.
மாடர்ன் ஸ்டேஜ்
அதற்கு அடுத்தக் கட்டமாக வேறோரு கலைக் கூட்டணி ‘மாடர்ன் ஸ்டேஜ்’ என்ற பெயரில் இணைந்தது. நாகூர் சேத்தான், கவிஞர் இஜட்.ஜபருல்லாஹ், டைலர் அஜ்ஜி, வானவன் இவர்களது கூட்டணி நாடக ரசிகர்களை மகிழ்வித்தது. தற்போது முழுநேர எழுத்துப்பணியில் மூழ்கியிருக்கும் ஏ.ஹெச். ஹத்தீப் சாஹிப்தான் அந்த “வானவன்”. “சிவப்புக்கோடு”, “சன்னிதானம்” போன்ற நாடகங்கள் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றது.
கூத்துப் பட்டறை
இஸ்லாமிய நாட்காட்டியில் ‘முஹர்ரம்’ எனப்படும் முதலாம் மாதத்தில் கூத்துப் பட்டறைகள் அரங்கேறும். “காசீம் படைவெட்டு” என்ற பெயரில் “நூறு மசலா” பாணியில் விடுகதைச்சரங்கள் தொடுப்பார்கள். “மசலா” என்றால் அரபியில் விடுகதை என்று பொருள். இது “ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி” கதை பாணியில் இருக்கும்.
மல்யுத்தம், சிலம்பு, குத்துச் சண்டை, ஜூடோ என்று தற்காப்பு சண்டை வீரர்கள் மலிந்திருந்த ஊர் நாகூர். இவர்கள் அனைவரும் கலையுணர்வோடு இந்தக் கூத்துப் பட்டறையில் பங்கு கொள்வார்கள்.
நாடகத் கூத்தில் பங்கேற்பவர்கள் பெரும்பாலும் நாகூர் அரவாணிகள். யாத்ரீகர்களின் வருகையின் மிகுதியினாலோ என்னவோ நாகூர் ஏராளமான அரவாணிகளின் புகலிடமாகத் திகழ்ந்தது. சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட இவர்களிடம் நாடகம், நாட்டியம் என்ற கலையுணர்வுகள் பொதிந்துக் கிடந்தது நிதர்சனமான உண்மை.
சுல்தான் என்ற அரவாணி தமிழகத்து மயில் டான்ஸ் கலைஞருள் மிகவும் போற்றத் தக்கவர். இந்த பாரம்பரியக்கலை இப்போது முற்றிலும் அழிந்து வருகிறது என்பது வருந்தத்தக்கது. பிழைப்புக்காக “வாடா” என்ற தின்பண்டங்களை பொறித்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த இவர் நடனக் களத்தில் இறங்கி விட்டால் பார்ப்போரை பரவசத்தில் ஆழ்த்துவார். மயில் டான்ஸ் கலையில் புதுப்புதுயுக்திகளை கையாண்டதாக தஞ்சை கரகாட்டக் கலைஞர்கள் இவரைக் குறித்து நினைவு கூர்கிறார்கள்
கூத்துப் பட்டறையில் சுல்தான், ஹாஜி, காசீம் போன்ற அரவாணிகள் நாடக வசனம் பேசி, நாட்டியமாடி ரசிகர்களைக் கவருவார்கள். டி.ராஜேந்தர் இயக்கிய முதற்படமான “ஒரு தலை ராகம்” படத்தில் இடம்பெற்ற “கூடையிலே கருவாடு” என்ற பாடலுக்கு குரூப் நடனமாட அரவாணிகள் தேவைப்பட்டபோது நாகூரிலிருந்துதான் ஒரு கூட்டத்தை அழைத்துச் சென்றார்கள்.
ரவீந்தர்
நாடகத் துறைக்கு நாகூர் ரவீந்தர் ஆற்றிய பணி அளவிட முடியாதது. அவரது சொந்தப் பெயர் ஏ.ஆர்.செய்யது காஜா முகையதீன் . ரவீந்திரநாத் தாகூர் நினைவாக அவருக்கு இந்தப் பெயரைச் சூட்டியது எம்.ஜி.ஆர்.தான். நாகூருக்கு பக்கத்திலுள்ள திருமலைராயன் பட்டினத்தைச் சேர்ந்தவர் ‘டணால்’ தங்கவேலு. வலைத் தொப்பியொன்று அணிந்துக் கொண்டு உருவத்தில் முஸ்லீம் அன்பர் போலவே காட்சியளிப்பார். ரவீந்தர் கதைவசனம் எழுதி தங்கவேலு நடித்த “மானேஜர் என்ற மேடைநாடகம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இந்நாடகம் அவருக்கு எம்.ஜி.ஆரின் அறிமுகத்தத பெற்றுத் தந்தது. பின்னர் அவர் எம்.ஜி.ஆர் நடித்த ‘இன்பக் கனவு’, ‘அட்வகேட் அமரன்’ ஆகிய இரண்டு நாடகங்களுக்கு வசனம் எழுதினார். அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் சொந்தப்பட நிறுவனமான எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவில் கதாசிரியராக பணியாற்றினார்.
குலேபகவாலி (1956) படத்திற்கு கதை வசனம் எழுதியதும் ரவீந்தர்தான். ரவீந்தருக்கு அரபி, பார்ஸி மொழிகள் தெரிந்திருந்ததால் அரேபிய கலாச்சாரத்தை அருந்தமிழுக்கு எளிதாக இறக்குமதி செய்ய முடிந்தது. இவர் அப்போது புதியவர் என்ற காரணத்தினால் டைட்டிலில் இவரது பெயர் இடம் பெறவில்லை. அதற்கு பதிலாக தஞ்சை ராமையாதாஸின் பெயர் இடம் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து கலையரசி, சந்திரோதயம், பாக்தாத் பேரழகி, அடிமைப்பெண் என்று 32 படங்களுக்கு மேல் கதை வசன எழுதினார்.
தூயவன்
தூயவன் என்ற பெயரில் தமிழ்த் திரைப்பட உலகில் புகழ் பெற்று விளங்கிய அக்பர், நாகூரைச் சேர்ந்த வசனகர்த்தா. 84 படங்களுக்கு வசனம் எழுதி, பட அதிபராக உயர்ந்தார் “வைதேகி காத்திருந்தாள்” “அன்புள்ள ரஜினிகாந்த்” உட்பட சில படங்களை சொந்தமாகத் தயாரித்தவர். இவர் கதை, வசனம் எழுதி ஏ.வி.எம். ராஜன் & புஷ்பலதா ஜோடி நடித்த “பால்குடம்” நாடகம் தமிழகமெங்கும் வெற்றி நடைபோட்டது. நாகை பாண்டியன் தியேட்டரில் பால்குடம் நாடகம் அரங்கேறியபோது பிரமாண்டமான ‘செட்டிங்’ கண்டு நான் பிரமித்துப் போனேன்.
ஆவுக்கெச்சேனோ
வீடியோ கேமரா புழக்கத்தில் வந்த புதிதில் “ஆவுகெச்சேனோவில் ஆவியுலக ஆராய்ச்சி” என்ற குறும்படத்தை நான் எழுதி இயக்க நாகூர் சேத்தான் ஒளிப்பதிவு செய்ய, நண்பர் கபீர் ஒலிப்பதிவு செய்தது சுவையான அனுபவம். தற்செயலாக நான் ஒருநாள் பாண்டிச்சேரியிலிருந்து நாகூர் வருகையில் “மரைக்கார் டிரான்ஸ்போர்டில்” இந்த வீடியோ படம் போட்டார்கள். நாம் விளையாட்டாக எடுத்த படம் இவ்வளவுதூரம் பரவி விட்டதே என்று அசந்தே போய்விட்டேன்.
நாடகங்கள் என்பது நாகூருக்கு புதிதல்ல. அந்த காலத்திலிருந்தே ஜனங்களை விடிய விடிய உட்காரவைத்து வேடிக்கை காண்பித்திருக்கிறார்கள். தொலைக்காட்சிப் பெட்டி, வீடியோ, சாட்டிலைட் சேனல் இல்லாத காலம் அது.
கோயில் கும்பாபிசேஷங்களில் இராமயண கதை, சீதா கல்யாணம், கதாகாலேட்சபம், நாட்டார் கூத்து, புராண நாடகம் என்று பார்த்து ரசித்துக் கொண்டிருந்த முஸ்லீம் மக்களை “நூறு மசலா” “அப்பாஸ் நாடகம்” என்று அவர்களை இழுத்துப் பிடிக்க இது உதவியது.
லால் கெளஹர்
பெரும்புலவர் நாகூர் முகம்மது நயினா மரைக்காயர் இயற்றிய ‘லால் கௌஹர்’ நாடகம் நாடகத்துறைக்கு ஒரு மைல் கல். எம்.ஆர்.ராதாவின் ரத்தக் கண்ணீர் நாடகம் போன்று திருப்பத் திரும்ப அது அரங்கேறி இருக்கிறது. நாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மேடை நாடகமாக நடிக்கப்பெற்று ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றதை நாகூர் மூத்த குடிமகன்கள் நம்மூர் நினைவு கூறுகிறார்கள். நாகூரில் கவ்வாலி கச்சேரிகள் நடக்கையில், மொழி புரியாவிட்டாலும் கூட விடிய விடிய உட்கார்ந்து ரசிக்கும் நாகூர்க்காரர்கள் புரிகின்ற மொழியில் நாடகங்கள் என்றால் அவர்கள் காட்டிய ஆர்வத்த்தைச் சொல்லவா வேண்டும்?
இந்நாடக நூலினை 1892-ல் வா.குலாம் காதிறு நாவலர் அவர்கள் பதிப்பித்தும் இருக்கிறார்கள். 1990 – ஆம் ஆண்டில் கீழக்கரையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டை ஒட்டி ‘லால் கௌஹர்’ நாடகம் மூன்றாம் பதிப்பாக வெளியிடப்பட்டது அந்நாடகத்திற்கு இத்தனை ஆண்டுகட்குப் பின்னும் வரவேற்பு உள்ளதற்கு ஒரு நற்சான்று.
‘லால் கௌஹர்’ நாடகத்தைத் தொடர்ந்து வாஞ்சூர் பக்கீர் (இவர் பக்கீர் முஹியித்தீனுடைய புதல்வர்) எழுதிய ‘அப்பாஸ் நாடகம்’ பெரும் வரவேற்பைக் கண்டது. நாகூர் , நாகப்பட்டினம் மட்டுமன்றி மலேயா (குறிப்பாக பினாங்கு), சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் தொடர்ந்து ஆங்காங்கே அரங்கேறி இருக்கிறது.
நாகூர் கோசா மரைக்காயர் (கோ. முகம்மது நைனா மரைக்காயர் அவர்களின் புதல்வர்) இவர் , “சராரே இஷ்க்”, “ஷிரீன் பரஹாத்”, “ஜூஹுரா முஸ்திரி”, “லைலா மஜ்னூன்” போன்ற நாடகங்கள் எழுதி புரட்சி செய்தவர்.
நாகூர் ஆபிதீன்
நாகூர் புலவர் ஆபிதீன் நிறைய நாடகங்கள் எழுதி, இயக்கி, அவரே நடித்தும் இருக்கிறார். இஸ்லாமியப் பாடகராக எல்லோரும் நன்கறிந்த நாகூர் ஹனீபா அவர்கள் ஒரு நல்ல நாடக நடிகர் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
1950-ல் புலவர் ஆபிதீன் எழுதிய “பணம்” என்ற நாடகம் திருச்சி தேவர் மன்றத்தில் அரங்கேறியது. நாடத்திற்கு தலைமை தாங்கியவர் அறிஞர் அண்ணா. வாழ்த்துரை வழங்க வந்திருந்தவர் கலைஞர் மு, கருணாநிதி. நாடகத்தில் ஒரு கவிஞராக ஹனீபா நடித்திருந்தார். “அந்த பாத்திரத்திற்கு அனிபா என்று பெயர் வைக்கலாம், அவ்வளவு சிறப்புற நடித்திருக்கிறார் என்று புகழாரம் சூட்டினாராம் அறிஞர் அண்ணா. கலைஞர் பேசுகையில் “ஹனி; என்றால் தேன். ‘பா’ என்றால் பாட்டு. ஹனிபாவின் பாட்டு தேனாக இனிக்கிறது” என்று வார்த்தை அலங்காரம் செய்ய அரங்கத்தில் பலத்த கரகோஷம்.
“தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா, இப்பயிரை; கண்ணீரால் காத்தோம்” என்று முத்தமிழில் ஒன்றான நாடகக் கலையை நாகூர் மக்கள் கண்ணின் மணியாக போற்றிப் பாதுகாத்தார்கள் என்றால் அது மிகையாகாது. நாகூர்வாசிகள் இயற்றமிழுக்கும், இசைத்தமிழுக்கும் ஆற்றிய பங்களிப்பு பற்றிய கட்டுரைகள் தொடரும்.
- அப்துல் கையூம்

