RSS

சத்தமின்றி ஒரு சாதனையாளன்


ரத்தமின்றி, கத்தியின்றி நடந்த புரட்சிகளை நாம் கேள்வியுற்றிருக்கிறோம். சத்தமின்றி, சந்தடியின்றி சாதனைகள் புரிந்துவரும் ஒரு சாதனையாளனைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

ஓரிரண்டு மேடைகளில் தோன்றி விட்டாலே தனக்குத்தானே பட்டங்கள் சூட்டிக் கொள்ளும் பாடகர்கள் நிறைந்த இச்சமுதாயத்தில், 52 ஆண்டுகளாக இசைத்துறையில் ஆர்ப்பாட்டங்கள் ஏதுமின்றி, அசத்தலாக அமைதி புரட்சி புரிந்து வரும் ஓர் அபூர்வக் கலைஞனைப் பற்றித்தான் இப்போது நாம் பேசப் போகின்றோம்.

“Empty Vessel makes the Most Noise” என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. குறை குடம்தான் கூத்தாடும். நிறை குடம் தளும்பாது என்பதென்னவோ முற்றிலும் உண்மையான கூற்று.

இந்த பாராட்டுகள் அனைத்துக்கும் சொந்தக்காரர் நாகூரில் பிறந்த ஓர் இசைக் கலைஞர். அவர் பெயர் கலைமாமணி அல்ஹாஜ் இ. குல் முஹம்மது.

இப்ராஹிம்ஷா – சபியா பீவி இணையரின் புதல்வரான இவர், பிறந்த தேதி பிப்ரவரி 14, 1946. பாடகராக முதன் முதலாக மேடையில் அறிமுகமான ஆண்டு 1968. அப்போது அவருக்கு வயது வெறும் 22.

1500 இசை நிகழ்ச்சிகள், 4000 பாடல்கள் – இவர் நிகழ்த்தியிருப்பது அசாதாரணமான ஒரு சாதனை. இன்றும் இந்த 74 வயது இளைஞர் அதே உற்சாகத்துடன் தொடர்ந்து பாடிக்கொண்டு வலம் வருகிறார். போட்டியும் பொறாமையும் நிறைந்த இசையுலகில், இந்நிலையை எட்டிப் பிடிக்க வாழ்க்கையில் அவர் எந்தளவுக்கு எதிர் நீச்சல் போட்டிருப்பார் என்பதை நம்மால் ஓரளவு ஊகிக்க முடிகிறது.

இவருடைய விடயத்தில் எனக்கு வருத்தமும் உண்டு. மகிழ்ச்சியும் உண்டு.

வருத்தம் என்னவெனில், தமிழகத்து நாகூர்க்காரரான இவரை புதுவை மாநிலம் தத்தெடுத்துக் கொண்டு தனதாக்கிக் கொண்டதே என்ற சோகம்.

மகிழ்ச்சி எதற்கு என்று கேட்கிறீர்களா? தமிழ்நாடு இவருக்கு கொடுக்கத் தவறிய அங்கீகாரத்தை புதுவை மாநிலமாவது இவருக்கு வழங்கி கெளரவித்ததே என்ற மனநிறைவு.

திறம் படைத்த கலைஞனை புடம் போட்ட தங்கமாக உருவாக்குவதும், அவனை உற்சாகப்படுத்தி உயர்த்துவதும் இதுபோன்ற அங்கீகாரங்கள்தான் என்பதை நாம் மறுக்க முடியாது. குன்றிலிட்ட விளக்காக பிரகாசிக்க வேண்டிய இவரைப் போன்ற எத்தனையோ கலைஞர்கள் குடத்திலிட்ட விளக்காக ஒளி குன்றிப்போனது அவர்களை முறையாக ஊக்கப்படுத்த தவறியதால்தான் என்பதை நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

இவருக்கு பெருமளவு ஆதரவு தந்து இவருக்கு உரிய அங்கீகாரத்தை வாங்கிக் கொடுத்த பெருமை புதுச்சேரி முன்னாள் அமைச்சர் திரு A.M.H.நாஜிம் அவர்களைச் சாரும். “ஊக்குவிப்பவர்கள் ஊக்குவித்தால் ஊக்கு விற்பவன்கூட தேக்கு விற்பான்” என்ற கவிஞர் வாலியின் வரிகள்தான் சட்டென்று என் நினைவுக்கு வந்தது.

இஸ்லாமியப் பாடல்கள்

நாகூர் ஈந்த இஸ்லாமியப் பாடகர்களின் பட்டியலில் இசைமுரசு நாகூர் ஹனிபாவின் வரிசையில் இவரும் போற்றுதலுக்குரிய ஓர் இசைவாணர்.

தமிழகத்தில் எத்தனையோ இஸ்லாமியப் பாடகர்கள் இன்னிசை கீதம் பாடி பவனி வந்திருக்கிறார்கள். வந்த வேகத்தில் பலர் காணாமலும் போய்விட்டார்கள். காரணம் அவர்கள் தனக்கென ஒரு பாணியை வளர்த்துக் கொள்ளாமல், பிறரின் பாணியை அப்பட்டமாக பின்பற்றியதால்தான் என்பதை நம்மால் கணிக்க முடிகிறது.

எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டுமென்றால், இஸ்லாமியப் பாடல்கள் என்றாலே இசைமுரசு இ.எம். ஹனிபாவைத்தான் பின்பற்ற வேண்டும் என்ற எழுதப்படாத விதியை பாடகர்கள் தங்களுக்குத்தானே வகுத்துக் கொண்டார்கள்.

பாடலைத் தொடங்குவதற்கு நாகூர் ஹனிபாவை போலவே தொண்டையை கனைத்துக் கொண்டு ஒரு சிற்றுரை ஆற்றுவது, ஃபர் ஜின்னா தொப்பியை சாய்வாக அணிந்துக் கொள்வது, அவரைப்போலவே பாடலுக்கிடையில் மூக்கை உறிஞ்சிக் கொள்வது, வலது கைவிரல்களை மடக்கிக் கொண்டு அடிகொருதரம் கையை மேலே உயர்த்துவது, உச்ச ஸ்தாயியில் பாடும்போது வலது காதோரம் வலதுகையால் மூடிக்கொள்வது, பாதியில் விட்ட அதே வரியை (வேண்டுமென்றே) மீண்டும் தொடர்வது, பாடலின் BGM வாசிக்கையில் முகத்தைத் திருப்பிக் கொண்டு பின்னாலிருக்கும் இசைக்கலைஞரிடம் ஏதாவது கிசுகிசுப்பது, (சில சமயம் வசை பாடுவது) இவையாவும் தமிழ் இஸ்லாமியப் பாடல்கள் பாடும் பாடகர் பெருமக்கள் அவசியம் செய்தே ஆக வேண்டும் என்பது ‘ஷரத்தாகி’ விட்டது.

ஒருவரை அப்படியே காப்பி அடிப்பதில் இரண்டு வகைகள் உண்டு. இது “ஈயடிச்சான் காப்பி” வகையில் சேர்ந்தது. ‘கானமயிலாட கண்டிருந்த வான்கோழி’ என்ற மூதுரைதான் என் மூளையில் ரீங்காரமிட்டது.

இதாவது பரவாயில்லை சிலர் நாகூர் ஹனிபாவைப்போலவே பனங்கற்கண்டையும், விக்ஸ் மிட்டாயையும் வாயில் போட்டு மென்றுக்கொண்டு பாடுபவர்களும் உண்டு. என்னத்த சொல்ல? ‘ஏனிந்த மேனரிசம்?’ என்று கேட்டால் அவர்கள் இஸ்லாமியப் பாடல் பாடுகிறார்களாம்.

நிலையான ஓர் இடம்

மேடை அனுபவத்தில் இவர் அரை சதம் அடித்த பிறகும் அசையாமல் இசையுலகில் பசை பிடித்தாற்போல் திசைமாறாது நிலைக்கின்றார் என்றால், இந்த பாணர், யார் பாணியையும் பார்த்து காப்பி அடிக்காததினால்தான் என்று குட்டிக்கரணம் அடித்து கூறுவேன்.

தமிழ் இஸ்லாமியப் பாடல்கள் மட்டுமின்றி உருது கவ்வாலி மற்றும் இந்தி, தமிழ் திரையிசை பாடல்களை அனாயசமாக பாடுவது இவரது தனிச்சிறப்பு. இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை? “ஆன்மீக பாடல்கள் பாடும் கச்சேரியில் சினிமா பாடல்கள் பாடினால் உங்களுடைய இமேஜ் பாதிக்காதா?” என்ற கேள்விக்கு மிகவும் எதார்த்தமான முறையில் “இசைக்கு ஏது மொழி?’ என்கிறார் இந்த பன்முகக் கலைஞர்.

“இஸ்லாமியப் பாடல்களில் புகழ்ப்பெற்ற நாகூர் இ.எம்.ஹனிபா போலவே இவரின் குரலில் பாடல்கள் தனிச் சிறப்பும் பெற்றிருக்கின்றன. இவருக்கென்று ஒரு தனி பாணியை வகுத்து, தொய்வில்லாமல் துணிவும் செறிவும் இழையோட, இசை நடத்தும் இசை நிகழ்ச்சிகள் எந்த மதத்தவரும் மயங்கிப் போய் பாராட்டுகின்றனர்” என்று இவரைப் புகழ்ந்து, மனதில் பட்டதை அப்பட்டமாக எழுதுகிறார் தமிழ் மாமணி மலர் மன்னன் அவர்கள். மனுஷர் மிகவும் சரியாகத்தான் கணித்திருக்கிறார்.

“இசைப்பயணத்தில் உங்களுடைய குருநாதர் யார்?” என்று இவரிடம் வைக்கப்படும் கேள்விக்கு இவருடைய பதில் என்ன தெரியுமா?

“என்னுடைய மானசீக குரு கர்னாடக இசைமேதை நாகூர் தர்கா வித்வான் எஸ்.எம்.ஏ.காதர்”என்று அடக்கத்துடன் பதில் கூறுகிறார். வித்வானுக்கு நாகூர் தர்காவில் “வாழ்நாள் விருது” அளித்து பெருமைப் படுத்திய விழாவில், ஒரு மூலையில் அமர்ந்து, தன் மானசீக குருவுக்கு கிடைக்கப் பெறும் பாராட்டுதல்களை இவர் பவ்யமாக இரசித்துக் கொண்டிருந்ததை நான் நேரிலேயே பார்த்தேன்.

‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்பதைப் போல இவரிடத்தில் பந்தாவோ, வீண் ஜம்பமோ, சவடாலோ, அலட்டலோ எதுவுமே கிடையாது என்பதை இவரிடம் பழகியவர்கள் சாட்சியம் கூறுகிறார்கள்.

நாடகப் பாசறை

நாகூரில் ஏராளமான திறமைசாலிகள் உருவானதற்கு காரணம் ஒரு காலத்தில் நாகூரில் நாகூர்வாசிகளால் அரங்கேற்றப்பட்ட நாடகங்கள் என்பது பலருக்கும் புதியதொரு செய்தியாக இருக்கும். கலைமாமணி இ. குல் முஹம்மது போன்றவர்களைப் பற்றி எழுதுகையில் இந்த நாடக வளர்ச்சியைப் பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும்.

“முத்தமிழும் கலந்த கலாச்சாரம் நாகூரில் உண்டு. உலக அளவில் வீரியமான கலாச்சாரமும் நாகூரில்தான். எங்கள் ஊரில் சொல்லி வைத்ததுபோல் எல்லோரும் இனிமையாகப் பாடுவார்கள். புரோட்டா மாஸ்டரில் இருந்து பெண்கள் உட்பட பலரும் இரவு நேரம் ஆகிவிட்டால், இசைச் சங்கமத்தில் ஒன்றாக கலந்து விடுவார்கள். பாட்டைப் போலவே நாடகத்திற்கும் மிகப் பிரபலம் நாகூர். தூயவன், அக்பர், கவிஞர் சலீம் என பற்பல படைப்பாளிகள் எங்கள் ஊரில் இருந்து வந்தவர்கள்தான்”

என்று தன் இளம் பிராயத்து பசுமையான நினைவுகளை அசை போடுகிறார் நாகூரைச் சேர்ந்த நாடறிந்த எழுத்தாளர் சாரு நிவேதிதா.

நாகூரில் நாடகப் பாசறை

நாகூரில் ஒரு காலத்தில் ஏராளமான நாடகங்கள் அரங்கேறின. எண்ணற்ற கலைஞர்கள் உருவானது இந்த நாடகப் பாசறையில் இருந்துதான்.

சினிமாத்துறையில் நாகூரைச் சேர்ந்த ரவீந்தர், தூயவன் போன்ற பிரபலங்கள் அடியெடுத்து வைக்க அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்தது இந்த நாடகங்கள்தான்.

புலவர் ஆபிதீன், நாகூர் ஹனிபா போன்ற திறமைசாலிகள் உருவாவதற்கு அடிக்கோலிட்டதும் இந்த நாடகங்கள்தான்.

பாடலாசிரியர் கவிஞர் சலீம், வில்லன் பாத்திரம் ஏற்று நடித்து பின்னர் “டான்” என்ற பட்டப்பெயர் கொண்டு அழைக்கப்பட்ட ஹமீது சுல்தான், விறகுவாடி ஜப்பார், அஜ்ஜி, சேத்தான், குல் முஹம்மது, நாகூர் சாதிக், கத்தீப் சாஹிப், சிங்கை ஆரிஃப், பாப்ஜான், நவாப்ஜான், கவிஞர் இஜட் ஜபருல்லா போன்ற கலைஞர்கள் உருவானது இந்த நாடகப் பாசறையில் இருந்துதான்.

நாகை பேபி தியேட்டரில் சினிமா ஸ்டண்ட் நாகூர் பரீது அவர்கள் அரங்கேற்றம் செய்த “விதவைக் கண்ணீர், “சோக்காளி”, “மிஸ்டர் 1960”, “படித்தவன்” போன்ற நாடகங்கள் ஏராளமான கலைஞர்கள் உருவாவதற்கு காரணமாக இருந்தது.

“சிவப்புக்கோடு”, “சந்தர்ப்பம்”, “சன்னிதானம்”, “சூரியக்கோடு”, “சீனியர் அண்டு ஜூனியர்”மற்றும் நாகூர் சேத்தான் எழுதிய “எல்லோருக்கும் பே.. பே..”, “தண்டனை” போன்ற அனைத்து நாடகங்களும் வெற்றி வாகை சூடின. இவை எல்லாவற்றிலும் குல் முகம்மது அவர்களுடைய பங்களிப்பு கணிசமாக இருந்தது.

கவிஞர் நாகூர் சலீம் பாடல் புனைய, சேத்தான் மெட்டமைக்க, பாடகர் குல் முஹம்மது பாட்டிசைக்க – இக்கூட்டணி மக்களின் மகத்தான ஆதரவைப் பெற்றது.

“சிவப்புக்கோடு” நாடகத்தில் கவிஞர் சலீம் எழுதி, சேத்தான் மெட்டமைத்த ‘வானம் கருத்ததடி’ ‘பட்டுவிட்ட மரக்கொடியில் பச்சைக்கிளி படருவதோ’ என்று தொடங்கும் பாடல்கள், மேலும் ‘சொல்லட்டுமா சொல்லட்டுமா’ ‘பூஜை மலர் மேலே புழுதி வந்து மலர்ந்ததம்மா’ போன்ற பாடல்கள் யாவும் குல் முஹம்மது பாடிய பாடல்களே.

இசையில் நாட்டம் ஏற்பட இவருக்கு நாடக மேடை வழிவகுத்து தந்தது. இவரது இசையார்வத்திற்கும், திறமைக்கும் தீனி போட்டது நாடக மேடைதான் என்பது கலப்படமில்லாத உண்மை.

பாடகரின் பெருந்தன்மை

பாடகர் இ. குல் முஹம்மது அவர்களின் பரந்த மனதுக்கு ஏராளமான நிகழ்வுகளை உதாரணம் காட்டலாம். விட்டுக் கொடுக்கும் சுபாவம், பிடிவாதம் இல்லாத குணம், வளைந்து கொடுக்கும் மனப்பான்மை – இவை யாவும் புடம் போட்ட தங்கமாக இவரை படம் பிடித்துக் காட்டுகின்றது.

எத்தனையோ புகழ்ப் பெற்ற பாடல்கள் இவர் முதன்முதலாக அரங்கேற்றி, பிறகு மற்ற மற்ற பாடகர்கள் பாடி அது வெளிச்சத்துக்கு வந்த பாடல்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? “இப்பாடல்களை முதன்முதலில் பாடி பிரபலப்படுத்தியது நான்தான்” என்று ஒருபோதும் இவர் உரிமை கொண்டாடியதில்லை, பீற்றிக் கொண்டதும் இல்லை. மற்ற மற்ற பாடகர்களாக இருந்தால் சிவாஜி கணேசன் திருவிளையாடல் திரைப்படத்தில் ஆடியதுபோல் ருத்ர தாண்டவமே ஆடியிருப்பார்கள். தன்னுடைய நல்ல நல்ல பாடல்களெல்லாம் தன் கைவிட்டு போய்விட்டதே என்று கைசேதப்பட்டு பொற்றாமரைக் குளத்திளல்ல, கவலையில் மூழ்கி இருப்பார்கள்.

நிகழ்வு – 1

//ஒரு கையில் இறைவேதம்
மறுகையில் நபி போதம்
இருக்கையில் நமக்கென்ன கவலை
இரு கண்களில் ஏன் நீர்த் திவலை//

இவ்வரிகள் நாகூர் சேத்தான் எழுதி, அவரே மெட்டமைத்து, மேடைக் கச்சேரிகளில் குல் முஹம்மது அவர்கள் பாடிக் கொண்டிருந்த இனிமையான கானம்.

இப்பாடல் இசைமுரசு இ.எம்.ஹனிபா அவர்களுக்கும் மிகவும் பிடித்துப் போகவே அவர் இப்பாடலைப் பாட நாகூர் சேத்தானிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார். இவரும் மறுப்பேதும் சொல்லாமல் பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்திருக்கிறார். இசைமுரசு அவர்கள் சேத்தானிடம் “என்னப்பா இது ‘திவலை’ என்று வருகிறது. கேட்பவர்கள் காதுக்கு ‘தவளை’ என்று விழப்போகிறது” என்று அபிப்ராயம் சொல்லவே இப்பாடலின் வரிகள் கீழ்க்கண்டவாறு உருமாறி இருக்கிறது.

//ஒரு கையில் இறைவேதம்
மறுகையில் நபிபோதம்
இருக்கையில் நமக்கென்ன தயக்கம்?
கண்களில் ஏனிந்த கலக்கம்?//

இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. சீனியர் பாடுவதற்கு ஜூனியர் பாடகர் மனமுவந்து விட்டுக் கொடுத்த பாடலிது. தன்னுடைய நல்ல பாடலொன்று பறிபோய் விட்டதே என்று அவர் ஒருக்காலும் வருத்தப்பட்டது கிடையாது.

நிகழ்வு – 2

“ஜீனே கி ராஹ்” என்ற படத்தில் முஹம்மது ரஃபி பாடிய “ஆனே ஸே உஸ்கே ஆயே பஹார்“ என்ற இந்திப்பாட்டு மெட்டில் நாகூர் சாதிக் அவர்கள் எழுதிக் கொடுத்த பாடல் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.

//இருலோகம் போற்றும் இறைத்தூதராம்
இஸ்லாத்தை தந்த நபி நாதராம்//

என்ற இப்பாடலை குல் முஹம்மது அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மேடையில் பாடி வந்ததை உள்ளூர்வாசிகள் அனைவரும் அறிவார்கள். இது அப்படியே இருக்கட்டும்.

இச்சமயத்தில் இந்தவொரு குட்டி நிகழ்வையும் இங்கு சொல்லிக் காட்டுவது அவசியம். “பாவ மன்னிப்பு” படத்தில் கண்ணதாசன் “எல்லோரும் கொண்டாடுவோம்” என்ற பாடலை எழுதியிருந்தார். அது எல்லோருக்கும் தெரியும். அப்படத்தின் கதாநாயகன் பிறப்பால் இந்துவாகவும். வாலிப வயதை எட்டிப் பிடித்த அவன் முஸ்லீமாக வளர்ந்திருந்தாலும், அவனை அறியாமல் இந்து மத தத்துவமான “ஓம்” என்ற நாத மந்திரம் அவன் வாயிலிருந்து வருவதுபோல் பாடலை அமைத்துள்ளேன்” என்று கண்ணதாசன் சொன்னது பத்திரிக்கையிலும் வெளிவந்தது.

கவிஞர் நாகூர் சாதிக் கைவண்ணத்தில் மிளிர்ந்த “இருலோகம் போற்றும் இறைத் தூதராம், இஸ்லாத்தை தந்த நபி நாதராம்” என்ற பாடல் வரிகளை கச்சேரிகளில் பாடியபோது, குல் முகம்மது அவர்களுக்கு கண்ணதாசன் சொன்னதுதான் மண்டையில் ஓடியது.

கவிஞர் நாகூர் சாதிக்கிடம் நேரடியாகச் சென்று “இது இஸ்லாமியப் பாடல் ஆயிற்றே? இப்பாடலின் வரிகளில் ‘ராம்.. ராம்’ என்று முடிகிறதே. இதை சற்று மாற்றித் தர முடியுமா?” என்று கேட்டிருக்கிறார். அப்போது குல் முகம்மது மலேசியா இசைப் பயணத்திற்கு புறப்பட வேண்டி ஆயத்தமாகிக் கொண்டிருந்த நேரம்.

இதற்கிடையில் இப்பாடலால் கவரப்பட்ட இசைமுரசு நாகூர் ஹனிபா அவர்கள், உச்சஸ்தாயியில் அமைந்திருக்கும் இப்பாடலை, தான் பாட ஆசைப்படுவதாக விருப்பம் தெரிவித்திருக்கிறார். இதனை கவிஞர் நாகூர் சாதிக் இவரிடம் தெரிவிக்க “அண்ணன் விருப்பப்படுவதால் நான் மறுப்பேதும் சொல்வதற்கில்லை. தாராளமாக அவரே பாடட்டும்” என்று மனமுவந்து ஒப்புதல் தந்திருக்கிறார்.

“ஒரு கையில் இறைவேதம்”, “இருளோகம் போற்றும் இறைத்தூதராம்” – இந்த இரு பாடல்களையும் நாகூர் ஹனிபா பாடத்தொடங்கிய பிறகு மேடைக் கச்சேரிகளில் பாடுவதையே இவர் விட்டு விட்டார்.

அதற்கு காரணம், தனக்கென தனி பாணியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோட்பாட்டை வளர்த்துக் கொண்ட இவர், அப்பாடல்களை பாடினால் ‘நாகூர் ஹனிபாவுடைய பாடல்களையே இவரும் பாடுகிறார்’ என்று மக்கள் நினைப்பார்களே என்ற எண்ணம் இவரை பாட விடாமல் தடுத்து விட்டது. இதற்கு இன்னொரு காரணம், இசைமுரசு அவர்கள் மீது இவர் வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் என்றுதான் கூற வேண்டும்

நிகழ்வு – 3

//நபி மணி தந்த
அலி வழி வந்த
இரண்டு தீபமே !//

இந்த வரிகள் ஒரு காலத்தில் பாடகராக வலம் வந்துக் கொண்டிருந்த நாகூர் ஹஸன் குத்தூஸ் எழுதிய பல்லவி. ஹஸன் குத்தூஸ், குல் முஹம்மது இருவரும் ஒன்றாக இணைந்து நிறைய இசை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார்கள். இப்பாடலுக்கு அனுபல்லவி எழுதி முழுமையாக்கியது கவிஞர் நாகூர் சலீம் அவர்கள். இதே மெட்டில் “நபி நபி போலே, அலி அலி போலே” என்ற உருது பாடல் வடிவத்தையும் குல் முஹம்மது சிங்கப்பூர், மலேசியா சுற்றுப் பிரயாணத்தின்போது மேடை நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருந்தார்.

இதே மெட்டில் கவிஞர் இ.எம்.நெய்னா அவர்கள் எழுதிக் கொடுத்து, “நபிமணி சொன்ன நெறி முறை என்ன” என்று தொடங்கும் பாடல் நாகூர் ஹனிபா அவர்களுக்கு எழுதிக் கொடுத்து, அது மிகவும் பிரபலமாகிய பின்னர் இந்தப் பாடலை பாடுவதையும் இவர் நிறுத்திக் கொண்டார்.

“மதினா நகருக்கு போக வேண்டும்” என்ற மெட்டைச் சார்ந்து கவிஞர் இ.எம்.நெய்னா அவர்கள் எழுதிக் கொடுக்க, மேடையில் குல் முஹம்மது பாடிக்கொண்டிருந்த பாடல் இது:

//எண்திசை வித்வான்கள் சேரும் தலம்
ஏழிசை கீதங்கள் கேட்கும் தலம்
எப்போதும் பக்தர்கள் கூடும் தலம் – காஜா
ஏழை பங்காளர் வாழும் தலம்//

இதே மெட்டில் “மதீனா நகருக்கு போக வேண்டும்” என்ற பாடலை சமுதாயக் கவிஞர் தா.காசீம் எழுத, சேத்தான் மெட்டமைக்க, நாகூர் ஹனிபா அவர்கள் பாடி பிரபலமானபோது கவிஞர் இ.எம்.நெய்னா ஏற்கனவே எழுதிக் கொடுத்த இப்பாடலை நாகூர் சேத்தான் வேறு ராகத்தில் அதாவது ‘பீம்ப்ளாஸ்’ ராகத்தில் முழுவதுமாகவே மாற்றிக் கொடுத்து விட்டார்.

ஒரே ஊரில் ஏராளமான கவிஞர்கள், பாடகர்கள், இசைக்கலைஞர்கள் இருந்தால் இதுபோன்ற இடியப்ப சிக்கல் நேருவது சகஜம்தான் போலிருக்கிறது.

நிகழ்வு – 4

‘சிவப்புக் கோடுகள்’ நாடகத்தில் கவிஞர் நாகூர் சலீம் எழுதி, சேத்தான் ட்யூன் அமைத்து, குல் முஹம்மது மற்றும் சுல்தான் சாபு இணைந்துப் பாடிய பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் தொடக்க வரிகள் இதுதான்:

//பட்டுவிட்ட மரக்கிளையில்
பச்சைக்கொடி படருவதோ//

அதன் பிறகு “பெருமானார் அவர்களின் பேரர் இமாம் ஹுசைனாரின் தியாகத்தை போற்றும் வகையில் இப்பாடலை மாற்றித் தாருங்களேன்” என்று இப்பாடலுக்கு மெட்டமைத்துத் தந்த நாகூர் சேத்தானிடம் இவர் முறையிட, அவரும்

//உண்மை நபி பேரர்களை
உம் மடியில் தவழ விட்டோம்
கண் இரண்டை பறித்துக் கொண்டு
கைகளிலே கொடுத்து விட்டாய்//

என்று எழுதிக்கொடுத்து பல காலம் இவர் மேடைக் கச்சேரிகளில் பாடிக் கொண்டிருக்கையில், இந்த மெட்டு இசைமுரசு அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போக, மெட்டமைத்த நாகூர் சேத்தானிடம் அனுமதி பெற்று பொரவாச்சேரி கவிஞர் மதிதாசனை வைத்து

//கண்கள் குளமாகுதம்மா
கர்பலாவை நினைக்கையிலே
புண்ணாகி நெஞ்சமெலாம்
புலம்பியே துடிக்குதம்மா//

என்று எழுத வைத்திருக்கிறார். இசைமுரசு நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய இப்பாடல் பட்டி தொட்டிகள் எங்கும் ஒலித்தது.

“அதிகாலை வேளையிலும், காரில் பயணிக்கையிலும் இப்பாடலை நான் மிகவும் விரும்பிக் கேட்பேன். என் மனம் இளகும்” என்று நாகூர் ஹனிபாவின் நினைவாஞ்சலிக் கூட்டத்தில் தலைவர் வைகோ அவர்கள் மனம் நெகிழ்ந்து பாராட்டிய பாடலிது.

நிகழ்வு – 5

//ஈச்ச மரத்து இன்பச் சோலையில் நபி நாதரை
இறைவன் தந்தான் அந்த நாளையில்//

இது காயல் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் அவர்களின் பிரபலமான பாடல் என்று எல்லோருக்கும் தெரியும். கவிஞர் நாகூர் சலீம் அவர்கள் ஆரம்பத்தில் பி.கே கலீபுல்லா அவர்களுக்கு எழுதிக் கொடுத்த பாடலிது. ‘கலாவதி’ ராகத்தில் நாகூர் சேத்தான் மெட்டமைத்துக் கொடுத்தார். இப்பாடலை மேடைகளில் குல் முஹம்மதுதான் தொடர்ந்து பாடி வந்தார்.

1974-ஆம் ஆண்டு சிங்கப்பூர் சுற்றுப் பிரயாணத்தின்போது இப்பாடலை குல் முஹம்மது அவர்கள் பாடி, மஜீது பிரதர்ஸ் ஒலிப்பதிவு செய்து ஒலிநாடா கூட வெளியிட்டது.

சில காலத்திற்குப் பிறகு இதே பாடலை காயல் ஏ.ஆர்.ஷேக் முஹம்மது அவர்கள் கவிஞர் நாகூர் சலீமிடமிருந்து கேட்டுப் பெற்று, இசைத்தட்டில் பாடி வெளியான பிறகு, இவர் இந்தப் பாடலை மேடைகளில் பாடுவதையும் தவிர்த்து விட்டார்

நிகழ்வு – 6

‘ஷிகார்’ என்ற இந்திப் படத்தில் ‘பர்தேமே ரெஹ்னே தோ, பர்தா நா ஹட்டாவோ’ என்ற மெட்டில் கவிஞர் நாகூர் சலீம் எழுதிக் கொடுத்து குல் முஹம்மது மேடைக் கச்சேரிகளில் பாடிக் கொண்டிருந்த பாடல். இந்தப் பாடல் வரிகள் இதோ:

//உலகாளும் பெரியோனே
உயிர் காக்கும் இறையோனே – என்றும்
அலையும் தீமை அகன்றே வந்தோம்
அருள் பாவிப்பாய்//

பின்னர் இப்பாடல் பாடகர் எஸ்.எஸ்.ஏ.வாஹித் அவர்களுக்கு கொடுக்கப்பட்டு அவரும் பாடத் தொடங்கிவிட்ட பிறகு அதையும் இவர் பாடுவதை நிறுத்திக் கொண்டார்.

நான் இங்கு குறிப்பிட்டது ஒரு சில பாடல்கள்தான். இதுபோன்று இவர் பெரிய மனது பண்ணி, விட்டுக் கொடுத்த பாடல்கள் கணக்கில் அடங்காது. இதற்காக ஒரு தனி நூலொன்று எழுத வேண்டி வரும்.

முகம்மது ரஃபி பாடல்கள்

குல் முஹம்மதுக்கு இந்திப் பாடல்கள் மீது நாட்டம் ஏற்படுவதற்கு இவரது இளம் பிராயத்தில் நடந்த நிகழ்வொன்று பெரிதும் உந்துதலாக இருந்திருக்கின்றது. தனக்கு நன்றாக பாட வரும் என்ற தன்னம்பிக்கை ஏற்பட்டு, மேடையில் இவர் பாடத் தொடங்கிய காலத்தில், முகம்மது ரஃபி பாடல்களால் மிகவும் ஈர்க்கப்பட்டு, அவருக்கு ஒரு கடிதம் எழுதினால் என்ன என்ற எண்ணம் இவரது சிந்தனையில் ஊஞ்சலாடி இருக்கிறது.

அவரது முகவரியைத் தேடிப் பிடித்து, தான் அவருடைய மந்திரக் குரலால் ஈர்க்கப்பட்டவன் என்றும், அவருடைய பாடல்களை கேட்காத நாளே இல்லை என்றும், எதிர்காலத்தில் அவரைப் போலவே பாடகனாக வர விரும்புவதாகவும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

சில நாட்கள் கழித்து இவர் எழுதிய கடிதத்திற்கு அவரிடமிருந்து பதிலும் வந்திருக்கிறது. கடிதத்தை திறந்து பார்த்தபோது ஆச்சரியத்தில் உறைந்து போயிருக்கிறார். தன் கண்களையே தன்னால் நம்ப முடியவில்லை. தன்னையே ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொள்கிறார்.

முகம்மது ரஃபி இவருக்கு வாழ்த்து தெரிவித்து எழுதிய கடிதம் அது. இவரது வாழ்க்கையை புரட்டிப்போட்ட அக்கடிதத்தை இன்றும் அரியதொரு பொக்கிஷமாக பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறார்.

இந்த ஒரு சாதாரண நிகழ்வு அவரது வாழ்க்கைத் தடத்தையே மாற்றிவிட்டது. அன்றிலிருந்து முகம்மது ரஃபியுடைய பாடல்கள் ஒவ்வொன்றையும் கேட்டுக் கேட்டு, பாடிப் பழகி, தன் திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமன்றி, தான் பாடும் இஸ்லாமிய மேடைக் கச்சேரிகளில் முகம்மது ரஃபியின் பாடல்களை பாட இவர் தவறியதே இல்லை.

1973-74 காலகட்டங்களில் சிங்கப்பூர், மலேசியாவில் ஏராளமான இடங்களில் இவரது இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அந்த இசைப் பயணத்தின்போது முகம்மது ரஃபி பாடிய பழைய இந்திப் பாடல்கள் நிறைய பாடியதால், தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி மலாய்க்காரர்களும் இவரது பாடல்களை விரும்பிக் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

பெற்ற விருதுகள்

07.9.1974 தேதின்று சிங்கப்பூரில் நடந்த இசை நிகழ்ச்சியில் “இசையமுது” என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.

21.07.1974 தேதியன்று பினாங்கு மாநகரில் மலேசியப் பிரதமர் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின்போது இவருக்கு “இன்னிசைச் சுடர்” என்ற பட்டம் வழங்கப்பட்டது.

2001-ஆம் வருடம் புதுக்கோட்டை மாவட்ட அனைத்துப் பள்ளிகள் சார்பாக இவருக்கு “ஆன்மீகத் தென்றல்” பட்டம் வழங்கப்பட்டது.

16.02.2014 அன்று கும்பகோணத்தில் நடைபெற்ற அனைத்துல இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பில் நடந்த எட்டாம் மாநாட்டில் விழாவில் இவருக்கு “இசைச்சுடர்” என்ற பட்டம் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களால் வழங்கப்பட்டது.

1993-ஆம் ஆண்டு லட்சத்தீவில் நடந்த விழாவொன்றில் முன்னால் மத்திய அமைச்சர் பி.எம். சயீது அவர்களால் Indian Youth Federation (IYF) விருது வழங்கி இவர் கெளரவிக்கப்பட்டார்.

1994ஆம் வருடம் மலப்புரம் நகரில் நடந்த இவ்விழாவில் குன்னக்குடி வைத்தியனாதன் அவர்களால் ‘பாரத் உத்சவ்’ விருது வழங்கப்பட்டது

2005-ஆம் ஆண்டில் “கலைரத்னா” பட்டம் புதுவை அனைத்துக் கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பாக காரைக்கால் அம்மையார் அரங்கில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் A.M.H.நாஜிம் அவர்களால் இவருக்கு வழங்கப்பட்டது.

2008-ஆம் வருடம் மேலாக புதுவை அரசாங்கம் இவருக்கு “கலைமாமணி” என்ற உயரிய விருதை அளித்து கெளரவித்தது. புதுவை முதல்வர் வைத்தியலிங்கம் அவர்களால் வழங்கப்பட்டது.

2009-ஆம் வருடம் “வாழ்நாள் சாதனையாளர் விருது” இந்து சமய இலக்கியப் பேரவை சார்பாக வழங்கப்பட்டது.

2010-ஆம் ஆண்டு “தமிழ் மாமணி விருது” இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பாக அதிராம்பட்டினம் அரசு கல்லூரியில் பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்களால் வழங்கப்பட்டது.

2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புது டில்லி பாரதிய சாகித்ய அகாதெமி இவருக்கு “டாக்டர் அம்பேத்கர் தேசிய விருது” (Dr. Ambedkar Fellowship National Award 2011) வழங்கி சிறப்பித்தது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லா, ஜார்கன்ட், சட்டிஸ்கர், அஸ்ஸாம் உத்திரகான்ட், மணிப்பூர் மாநில அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

18.03.2012 அன்று காரைக்கால் மாவட்ட கலைஞர்கள் மாமன்றம் சார்பாக இவருக்கு “கலைப்பேரரசு” என்ற பட்டம் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கையால் வழங்கப்பட்டது.

17.12.2014 தேதியன்று “செம்பணிச் சிகரம்” விருது புதுச்சேரி குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகம் சார்பில் உள்ளாட்சித் துறை அமைச்சர் குரு பன்னீர் செல்வம், சமூக நலத்துறை அமைச்சர் பெ.ராஜவேலு அவர்களால் வழங்கப்பட்டது.

இவைகளன்றி “இசைத்தென்றல்”, “இசைஅரசு”, “இன்னிசைத் தென்றல்” போன்ற பட்டங்களும் இவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.

முன்னாள் குடியரசு அப்துல் கலாம் நல்ல இசை ஞானம் கொண்டவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவரிடம் பெற்ற பாராட்டை இவர் மிகவும் பாக்கியமாகக் கருதுகிறார்.

இசைப்பயணம்

தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்னாடகா, லட்சத்தீவு உட்பட பல இசை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார். தூரக்கிழக்கு நாடுகள், மத்தியக் கிழக்கு நாடுகளில் இவர் இசை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார்.

கேரள மாநிலம் மலப்புரம், திருப்பூர், பெரிந்தல்மன்னா போன்ற ஊர்களில் கலாச்சார விழாவில் தமிழக முன்னாள் இயல் இசை நாடக மன்றத் தலைவர் குன்னக்குடி வைத்யநாதன் அவர்களுடன் ஒரே மேடையில் இசை நிகழ்ச்சிகள் நடத்தியது இவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது.

தமிழ், உருது, இந்தி, தேசப்பற்று பாடல்கள், மத நல்லிணக்கப் பாடல்கள், பாரதியார் பாடல்கள், பாரதிதாசன் பாடல்கள், எழுச்சிப் பாடல்கள், திரையிசை பாடல்கள் ஆன்மீக பாடல்கள் என 25க்கும் மேற்பட்ட இவரது ஒலி நாடாக்கள் வெளிவந்திருக்கின்றன

1974-ஆம் ஆண்டு சிங்கை வானொலி நிலையம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் முக்கால் மணி நேரம் தொடர்ந்து பாடினார். மிகவும் பிரபலமான பாடகர்களுக்கு மாத்திரமே இதுபோன்ற வாய்ப்புகள் அன்று தரப்பட்டன.

1977-ஆம் இவர் தூரக்கிழக்கு நாடுகளுக்கு இசைப் பயணம் மேற்கொண்டிருந்தபோது இவருடன் தாயகத்திலிருந்து சென்றவர் ‘தபேலா மன்னன்’ யாகூப் அவர்கள். 8.5.1977 அன்று அப்பர் தமிழ்ப்பள்ளியில் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு மற்றும் தமிழ்க்காவலர் கா.முகம்மது பாட்சா முன்னிலையில், இசைச் செல்வர் எஸ்.சுந்தர்ராஜ் குழுவினருடன் நடந்த இவரது இசை நிகழ்ச்சியை ‘தமிழ் முரசு’ பத்திரிக்கை வெகுவாக பாராட்டி எழுதியது. “திரு குல் முஹம்மதுவின் கணீரென்ற குரல் செவிப்புலன்களில் தேனெனப் பாய்ந்தது என்றால் அது மிகையாகாது” என்று புகழாரம் சூட்டியிருந்தது.

சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு 14.9.1974 தேதியன்று இவர் இந்தியா திரும்பியபோது, சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த தமிழ்ப் பத்திரிக்கைகள் அனைத்தும் சிங்கையில் இவர் தொடர்ந்தாற்போல் நடத்திய இசை நிகழ்ச்சிகள் குறித்து புகழாரம் சூட்டி எழுதியிருந்தன.

நாகூர் இ.எம்.ஹனிபா, எச்.எம்.ஹனீபா போன்ற இஸ்லாமியப் பாடகர்களின் பாடல்களை மட்டுமே வெளியிட்டு வந்த சிங்கை எஸ்.ஏ.மஜீது பிரதர்ஸ் என்ற பாடல் ஒலிப்பதிவு நிறுவனம், குல் முகம்மது அவர்களை வரவழைத்து நேரடி ஒலிப்பதிவு செய்து ஒலிநாடாக்கள் வெளியிட்டது.

சிங்கப்பூரில் இவர் பாடிய கவிஞர் நாகூர் சலீமின் தத்துவப் பாடல்கள், அப்போது மிகவும் பிரபலமாக இருந்த ‘பாபி’, ‘ஆராதனா’ இந்திப் பாடல்கள், முகம்மது ரபி பாடிய பழைய இந்தி பாடல்கள், ‘அடி என்னடி ராக்கம்மா’ போன்ற ஜனரஞ்சக சினிமாப் பாடல்கள் அனைத்தும் வெகுவாக இசை ரசிகர்களை பரவசப்படுத்தின.

1983-ஆம் ஆண்டு சிங்கப்பூர் பயணத்தின்போது நாகூர் சேத்தான், கவிஞர் காதர் ஒலி இவர்கள் எழுதிய “கண்ணுக்கு விருந்து கல்புக்கு மருந்து”, “இறைத்தூதரே”, “நாகூரார் வாசலுக்கு நாடி வாருங்கள்”, “வங்கக் கடலோரம் வாழுகின்ற நாதா” போன்ற பாடல்களை, ஜே.கே.பாப்ஜான் இசையமைக்க சிங்கப்பூர் லதா மியூசிக் சென்டர் ஒலிநாடாவாக வெளியிட்டது.

இவரது இசைத்தட்டு மற்றும் ஒலிநாடாக்களை சங்கீதா இசைத்தட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இவரது இசைத்தட்டு பாடல்களை சென்னை, திருச்சி, காரைக்கால், புதுவை தூர்தர்ஷன், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, வானொலியில் கேட்டு இரசித்தவர்கள் ஏராளம்.

இவர் பாடிய “சுவனத்தென்றல்”, “அருள் சோலை”, “பேரிரையோனே” “இறைநேசம்” ஏனைய ஒலிப்பேழைகள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றன.

விஜய் டிவி, ராஜ் டிவி நிகழ்ச்சிகளில் இவர் பாடும் பாடல்களை காண முடிந்தது
பன்முகக் கலைஞர்

பொதுவாக ‘கலைஞர்கள்’ என்பவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்குவார்கள் என்பது நாம் அனுபவத்தில் கண்கூடாகக் கண்டது. இவர் பாடகராக அறிமுகம் ஆவதற்கு முன்னர் நாகூர் மக்கள் இவரைச் சிறந்த கால் பந்தாட்டக்காரராகவே அறிந்து வைத்திருந்தார்கள்.

நாகூரில் கஞ்சஸவாய் ஸ்போர்ட்டிங் கிளப் A, B. C, என பல குழுக்களாக பிரிக்கப்பட்டு விளையாட்டுத் துறையில் கொடிகட்டி பறந்துக் கொண்டிருந்த நேரம். ஹாஜி மெளலானா, குல் முஹம்மது, மெய் சாஹிப், ஷேக் ஹசன் சாஹிப், A.T.அலி ஹசன், A.T.சாபுனி, சாதிக் போன்ற சிறந்த கால்பந்தாட்டக்கார வீரர்கள் களமிறங்கி பேரும் புகழும் பெற்றிருந்த காலமது. மாநில அளவு போட்டிகளில், பல ஊர்களுக்கும் சென்று, நாகூர் கால்பந்தாட்டக் குழுவின் சார்பாக குல் முஹம்மது பங்கு பெற்று விளையாடி இருக்கிறார்.

அதுமட்டுமின்றி, நாணயம், தபால் தலைகள் சேகரிப்பு போன்றவற்றில் கரை கண்டு பற்பல கண்காட்சிகள்கூட நடத்தியிருக்கிறார்.

“வாழ்நாள் முழுவதையும் இசைக்காகவே அர்ப்பணிக்க வேண்டும் என்ற செழுமையான நோக்கம் என் நோக்கம்” என்று தன்னடக்கத்துடன் கூறும் இவர் இசையுலக ஜாம்பவான்களில் ஒருவராக பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.

தமிழக மக்கள் சார்பாக நாகூரில் இவருக்கு வாழ்நாள் விருது வழங்கி இவரை கெளரவிக்க வேண்டியது நம் தலையாய கடமை.

நாகூர் அப்துல் கையூம்

http://www.saaral.in/2020/10/23/gul-mohamed/

 

அஜீஸ் நஸான் ===========


கவ்வாலி உலகை கலக்கிய பாடகர்களின் பட்டியலில் அஜீஸ் நஸான் உடைய பெயர் கட்டாயம் முதன்மையாக பெற்றிருக்கும்.

ஒலிவாங்கியையே அதிர வைக்கும் எட்டுக்கட்டை உச்ச ஸ்தாயி குரல் இவர் குரல் . ஆலாபனையில் இவர் காட்டும் ஏற்ற இறக்கம் எல்லோரையும் கிறங்க வைக்கும். ஒரு காலத்தில் இசைப் பிரியர்களை தன் கட்டுப்பாட்டில் பைத்தியமாக்கி வைத்திருந்த இந்த கவ்வாலி சக்கரவர்த்தி ஒரு மலையாளி என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.

ஆம். இவருடைய தாய்மொழி மலையாளம்.1938ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி பம்பாயில் பிறந்த அப்துல் அஜீஸ் குஞ்சு மரைக்கார்தான் பிற்காலத்தில் அஜீஸ் நஸான் என்றாகிப் போனார்.இவரது உருது மொழி உச்சரிப்பின் லாவகத்தையும் சூட்சமத்தையும் கேட்பவர்கள் இவரை மலையாளி என்று கருதவே மாட்டார்கள். உதாரணத்திற்கு ஜேசுதாஸ் எத்தனையோ பாடல்கள் இந்தி திரைப்படங்களில் பாடியிருந்தாலும், அவருடைய உச்சரிப்பை வைத்தே ‘இவர் மலையாளி’ என்று யாரும் எளிதில் சொல்லி விடுவார்கள்.

உதித் நாராயண் என்னதான் குழைந்து குழைந்து பாடினாலும் அவர் தமிழர் இல்லை என்று வரது உச்சரிப்பு காட்டிக் கொடுத்துவிடும். ஆனால் அஜீஸ் நஸான் அப்படியல்ல. குஜராத்தி மீடியம் பள்ளியில் படித்த இவருக்கு உருது மொழியின் மேல் அதீத காதல் ஏற்பட்டு, ஷாயிர் சாதிக் நிஸாமி என்பவரிடம் முறையாக மொழி கற்றுக்கொண்டு நாளடைவில் உருது கவிதை எழுதும் அளவுக்கு அவர் தன் ஆற்றலை வளர்த்துக் கொண்டார்.இஸ்லாமிய பண்பாட்டில் ஊறித்திளைத்த கட்டுக்கோப்பான மலபார் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த இவரை, இசையே கூடாது, அதன் பக்கம் அண்டவே கூடாது என்று வலியுறுத்தியவர்

இவரது தந்தை. பம்பாய் மாநகரத்தில் பலசரக்கு கடை வைத்திருந்தார். சிறுவனாக இருந்தபோது, ஒவ்வொருமுறை இவர் திருட்டுத்தனமாக இசைக் கச்சேரி பார்ப்பதற்கு செல்லும்போதும், சிலசமயம் வசமாக மாட்டிக் கொண்டு அதற்கான தண்டனையும் அவர் தந்தையிடமிருந்து அனுபவிப்பார். பிண்டி பஜாரில்தான் இவர்களது வீடு இருந்தது. ஹிந்துஸ்தானி சங்கீத சாம்ராஜ்யத்து சக்கரவர்த்திகள் அத்தனைப்பேரும் அந்தப் பகுதியில்தான் குடியிருந்தார்கள். படே அலி குலாம் கான், அமீர் கான் சாகிப், அல்லா ரகா, இஸ்மாயில் ஆஜாத் கவ்வால் போன்ற அத்தனை பிரபலங்களும் அங்குதான் வசித்தார்கள்.

//ஹமே தோ லூட் லியா மில்கே ஹுஸ்ன் வாலோன் னேகாலே காலே பாலோன் னே, கோரெ கோரெ காலோன் னே//1958-ல் வெளிவந்த ‘அல்-ஹிலால்’ என்ற திரைப்படத்தில் பின்னணி பாடி வானளாவிய புகழை அடைந்தவர் இந்த இஸ்மாயில் ஆஜாத் கவ்வால். இளைஞராக இருந்த அஜீஸ் நஸான் நேரம் கிடைக்கும்போதெல்லாம் இவரோடு சென்று அமர்ந்து விடுவார். இவர் கச்சேரிக்கு போகும்போது இவரும் கூடவே சென்று, சீருடை அணிந்து கவ்வாலி பாடல்களுக்கு தாளத்திற்கேற்ப கைத்தட்டல் புரிவது, கோரஸ் கொடுப்பது இவரது ஆர்வப்பணியாக இருந்தது. ஊஹூம்.. எத்தனையோ முறை இவருடைய வீட்டார் கண்டித்தும் இவர் கேட்பதாக இல்லை. இசைப்பித்து தலைக்கேறி இருந்தது.

ஒன்பது வயதில் இவர் தன் தந்தையாரை இழந்தார். அதன் பிறகு ஒரு இசைக்குழுவில் சேர்ந்துவிட்டார். 1958-ல் அஜீஸ் நஸான் கிராமபோன் கம்பேனியுடன் ஒப்பந்தம் ஒன்றை போட்டார். 1962-ஆம் ஆண்டு ‘ஜியா நஹீன் மானா’ என்ற இவரது இசைத்தட்டு ஓரளவு பிரபலமானது. பின்னர் 1968-ல் ‘நிகா ஹே கரம்’ வெளியாகி கவ்வாலி பாடலுலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திப்பட உலகில் கிஷோர் குமார் எப்போழுதோ கால் பதித்திருந்தார். ஆனால் ‘ஆராதனா’ படம் வந்தபின்தான் அவர் உலகப் பிரசித்தி பெற்றார்.

எஸ்.ஜானகி “சிங்கார வேலனே” பாடிய போது அவ்வளவாக பிரபலமாகாதவர், ‘அன்னக்கிளி’ படத்திற்குப் பிறகு உச்சத்தை தொட்டார். ‘பொம்மை’ படத்தில் “நீயும் பொம்மை, நானும் பொம்மை” பாடிய ஜேசுதாஸ் எத்தனையோ காலத்திற்குப் பிறகுதான் தமிழில் பேரும் புகழும் அடைந்தார்.

அதுபோல 1958-ல் கொலம்பியா மியுசிக் கம்பேனியுடன் ஒப்பந்தம் போட்ட அஜீஸ் நஸான் 1970-ல் “ஜூம் பராபர் ஜூம் ஷராபி” என்ற பாடலை அந்த நிறுவனம் வெளியிட்ட போது ஒரே நாளில் உலகறிந்த பாடகர் ஆனார். 1973-ல் “மேரே கரீப் மேரே நவாஸ்” படம் வெளிவந்தபோது இந்த ஒரு பாடலுக்காகவே படம் சிறப்பாக ஓடியது. படத்தின் இடையில் 20 நிமிடம் அஜீஸ் நஸான் பாடுவதுபோல் ஒரு காட்சி இடம் பெற்றிருந்ததுதான் அதற்கு காரணம்.

1974-ல் மீண்டும் ஐ.எஸ்.ஜோஹர் தன்னுடைய ‘5 ரைஃபிள்’ படத்தில் இப்பாடலை இடம் பெறச் செய்தார். இதுவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அச்சமயத்தில் இலங்கை வானொலியிலும், பினாகா கீத் மாலாவிலும், நேயர் விருப்ப பாடல்களில் தொடர்ந்து பல வாரங்கள் இதுவே முதல் வரிசையில் இருந்தது. இந்தப் பாடலுக்குப் பிறகு ரஃபூ சக்கர், ஃபகீரா, லைலா மஜ்னு, நெஹ்லெ பெ டெஹ்லா, ட்ரிஷ்னா போன்ற படங்களில் அவருக்கு பின்னணி பாட வாய்ப்புகள் வீடு தேடி வந்தது.

மகாராஷ்டிர மாநில சிறைச்சாலை ஒன்றில் சிறைவாசிகளின் பொழுதுபோக்குக்காக சிறைவாசிகளே ஒரு வானொலி ஒலிபரப்பை நடத்துவதற்கான ஒரு ஏற்பாட்டை கவ்ஸ்துப் குர்லேக்கர் என்ற ஜெயில் சூப்பரிண்டெண்ட் முன்னெடுத்தார். அது நல்ல பிரதிபலனையும் தந்தது. அவர்கள் செய்த அந்த அன்றாட ஒலிபரப்பில் திரும்ப திரும்ப விரும்பிக் கேட்கப்பட்ட பாடல் அஜீஸ் நஸானின் “சடுத்தா சூரஜ் தீரெ தீரெ டல்த்தா ஹே டல் ஜாயேகா” என்ற கவ்வாலி பாடல்தான்.

உருது நூல்கள் ஏராளமானவற்றை அவர் சேகரித்து தன் வீட்டில் ஒரு பெரிய நூலகத்தையே பாதுகாத்து வைத்திருந்தார். ஹார்மோனியம், தபேலா, காங்கோ இன்னும் மற்ற மற்ற தாள வாத்தியங்கள் அனைத்திலும் அவர் கைதேர்ந்திருந்தார்.

கைஸர் ரத்னாகிர்வி, ஹஸ்ரத் ரூமானி, நஸன் ஷோலாபுரி போன்ற உருது கவிஞர்களின் பாடல்களை இவர் பாடியிருந்தபோதிலும் இவரே ஒரு திறமையான ரசனைமிகு கவிஞராகத்தான் திகழ்ந்தார். பஷீர் பத்ர், மக்மூர் சயீதி, மீரஜ் ஃபைஸாபாதி, கிருஷ்ண் பீகாரி நூர் லக்னவி, வலி ஆசி, வஸீம் பஹ்ரெல்வி, முனவ்வர் ரானா, முஸஃபர் வர்ஸி போன்ற புகழ்ப்பெற்ற உருது கவிவாணர்கள் இவரது நெருங்கிய நண்பர்களாகத் திகழ்ந்தனர். கவ்வாலி பாடல்களில் சில புரட்சிகளை செய்ததால் இவரை ‘புரட்சி கவ்வாலி பாடகர்’ என்றே அழைத்தனர், மேலைநாட்டு தாள வாத்தியங்களை கவ்வாலி பாடல்களில் பகுத்தி புதுமை கண்டவர்.

இந்தி படவுலகில் புகழ்ப்பெற்ற இசையமைப்பாளர்கள் எலக்ட்ரானிக் வாத்திய இசைக்கருவிகளை அறிமுகப் படுத்துவதற்கு முன்னரே கவ்வாலி பாடல்களில் நவீன இசைக்கருவிகளைப் பயன்படுத்திய பெருமை அஜீஸ் நஸானுக்கு உண்டு. அத்தனை கவ்வாலி பாடகர்களையும் ஒருங்கிணைத்து “பம்பாய் கவ்வால் சங்கம்” என்ற ஒரு அமைப்பைத் தொடங்கினார். நலிவுற்ற பாடகர்களுக்கு ஏராளமான பொருளாதார உதவிகள் தந்து உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

1978ஆம் வருடம் அவரது மனைவி இறந்த பிறகு, ஒரு இந்து பெண்மணியை மறுமணம் புரிந்துக் கொண்டார். மும்தாஜ் நஸான் என்று அவர் அழைக்கப்பட்டார். அஜீஸ் நஸானுக்கு போதைப்பொருளோ, குடிப்பழக்கமோ அறவே கிடையாது. ஆனால் செம சாப்பாட்டுப் பிரியர். “சாப்பாட்டு விஷயத்தில் அவருக்கு பயங்கரமான ஈடுபாடு இருந்தது. பம்பாயில் எந்தெந்த ஓட்டலில் என்னென்ன உணவுப் பொருட்கள் சுவையாக இருக்கும் எல்லாமே அவருக்கு அத்துப்படி. பிறரை வயிறார சாப்பிட வைத்து அழகு பார்ப்பது அவரது வழக்கம், எந்த நேரத்திலும் எங்க வீட்டு சாப்பாட்டு மேஜையில் யாராவது விருந்தினர்கள் இருந்துக்கொண்டே இருப்பார்கள்” என்று கணவரின் நினைவுகளைப் பகிர்கிறார் அவர் மனைவி மும்தாஜ் நஸான்.

32 டிராக் ரிகார்டிங், டபுள் டிராக், இவர் பாடும் பாடலில் இவரே கோரஸ் படுவது போன்ற டெக்னிக் – இதுபோன்ற அதிரடி நுணுக்கங்களை ஒலிப்பதிவில் இணைத்தவர் இவர். எந்தவொரு உச்சத்தில் பாடினாலும் இவரது குரல் உடையாது; பிசிறு தட்டாது. இவரது குரல்வளத்தை ‘ஸ்டீரியோ வாய்ஸ்’ என்று சிலாகித்து பேசுவார்கள்.

1975 ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கம் 520 ரூபாய் விற்ற காலத்தில் கொல்கத்தா கலா மந்திர் அரங்கத்தில் நடந்த இசைக் கச்சேரிக்கு இவர் பெற்ற தொகை அந்த காலத்தில் 1.80 லட்சம் ரூபாய். ரான்ச்சிக்கு இவர் ஒரு நிகழ்ச்சிக்கு தொடர்வண்டியில் போய்க் கொண்டிருக்கிறார். போகும் வழியில் பொதுமக்கள் டிரெய்னை நிறுத்துகிறார்கள், ஏனென்றால் இவரிடம் கைகுலுக்க வேண்டி. வண்டி நின்று இவருடன் கை குலுக்கிய பின்புதான் தொடர்வண்டியை நகர விட்டார்கள் அந்த ஊர்க்காரர்கள்.

அந்த அளவுக்கு மக்கள் இவரை நேசித்தார்கள்.1992ஆம் ஆண்டு அக்டோபர் 8 நாளன்று அப்துல் அஜீஸ் குஞ்சு மரைக்கார் உயிர் நீத்தபோது ‘இசையுலகத்திற்கு பேரிழப்பு’ என அனைத்து ஊடகங்களும் கண்ணீர் வடித்தன

.#அப்துல்கையூம்

 

மொஹிதீன் பேக்


இவரை இஸ்லாமியப் பாடகராக நினைவு கூறுபவர்களை விட சிங்கள பெளத்த பக்தி பாடகராக நினைவு கூறுபவர்களே அதிகம். உருது மொழியை தாய்மொழியாகக் கொண்ட ஹைதரபாத்தைச் சேர்ந்த கரீம் பேக் வேலை நிமித்தம் காவல் துறை அதிகாரியாக சேலத்தில் பணிபுரிந்தபோது மொஹிதீன் பேக் பிறந்தார். மொஹிதீன் பேக் உடைய தாயார் பெயர் பீஜான் பீவி.

சேலத்தில் தொடக்க பள்ளியில் இவர் படிக்கும்போதே இசையில் ஆர்வம் ஏற்பட்டு இசை பயின்றார். உருது கஜல் மற்றும் கவ்வாலி பாடல்களில் இவருக்கு மிகுந்த விருப்பம் இருந்தது.

இவர் தொடக்கப் பள்ளியில் படிக்கும்போது பள்ளி தலைமையாசிரியர் ஒருநாள் இவரது தந்தைக்கு தகவல் அனுப்பினார்.

“உங்க மகனுக்கும் படிப்பில் கொஞ்சம் கூட நாட்டமில்லை. ஆகவே இவனைக் கொஞ்சம் கண்டித்து வைக்கவும்”

வீட்டுக்குச் சென்றால் ஒரு பெரிய பூகம்பமே காத்திருக்கிறது என்பதை அறிந்த சிறுவன் மொய்தீன் பேக், அப்படியே திருச்சிக்கு ஓடிப் போய் விடுகிறான். அங்கு பாய்ஸ் இசை/ நடனப் பள்ளி ஒன்றுக்குச் சென்று தன்னை அங்கு சேர்த்துக் கொள்ளும்படி அங்குள்ளவர்களிடம் கெஞ்சுகிறான். தனக்கு நன்றாக பாடவரும் என்று சொல்லி, அப்போது பிரபலமாக இருந்த கண்பார்வையற்ற கே.சி.தே (Krishna chadra Dey) அவர்களுடைய பாடலை அங்கு அட்டகாசமாக பாடிக் காண்பிக்கிறான்.

(கல்கத்தாவைச் சேர்ந்த கே.சி தே என்ற இசைக்கலைஞர் இந்தி இசையமைப்பாளர். எஸ்.டி.பர்மனின் குரு என்பது கூடுதல் தகவல்)

சிறுவனுடைய குரலைக் கேட்டு பரவசமடைந்த பள்ளி நிர்வாகிகள் அவனை அங்கு சேர்த்துக் கொள்கிறார்கள். அவனுக்கு அந்த இசைப்பள்ளியில் பாடல்கள் பாடும் வாய்ப்பும் கிடைக்கிறது

ஓடிப்போன சிறுவனை காவல்துறையில் பணிபுரிந்த தந்தை கரீம் பேக் தனது தொடர்புகளை வைத்து நாலாபுறமும் வலைவீசி தேடுகிறார். திருச்சியில் இருப்பதாக செய்தி கிடைக்கிறது. கரீம் பேக்கின் நண்பரொருவர் அப்போது மெட்ராஸ் போலீஸ் பேண்டு குழுவில் ஊதுகுழல் வாத்தியம் வாசித்துக் கொண்டிருந்தார்.

இவருடைய ஏற்பாட்டின்படி ஓடிப்போன சிறுவனை கண்டுபிடிப்பதற்காக ஒரு குழு அந்த இசைப்பள்ளிக்குச் சென்றபோது, ஒரு மேடை நிகழ்ச்சியில் மொஹிதீன் பேக் பாடிக்கொண்டிருக்கிறான்.. பாட்டு முடியும் வரை காவல்துறையினர் காத்திருந்து குண்டுகட்டாக தூக்கிக் கொண்டுச் சென்று சேலத்தில் இவனது பெற்றோரிடம் ஒப்படைக்கின்றனர்.

இசையார்வம் சிறுவனை விடுவதாக இல்லை. உஸ்தாத் அஹ்மது பக்ஸ் என்பவரிடம் கவ்வாலி, கஜல், பஜன் அனைத்தும் கற்றுத் தேறுகிறான்.

மொஹிதீன் பேக்குடன் கூடப் பிறந்தவர்கள் 13 பேர்கள். இவருடைய தகப்பனார் மட்டுமின்றி பாட்டனார், சகோதரர் உட்பட பலரும் காவல்துறையிலேயே பணியாற்றினர். இவரது சகோதரர் அப்துல் அஜீஸ் ஒரு படகு விபத்தில் கொழும்பு நகரத்தில் மரணித்தபோது தன் பெற்றொருடன் இவர் கொழும்பு செல்ல நேருகிறது.

இலங்கை வந்தவர் அங்கேயே தங்கி விடுகிறார்.. 18வது வயதில் இலங்கை இராணுவத்திலும் சேர்ந்து விடுகிறார்.

13வது வயதிலிருந்தே இவர் பாடத் தொடங்கி விட்டார். இவருடைய குடும்பத்தில் பலரும் உருது கஜல் பாடகர்களாக இருந்தனர். தனது உறவினர் சேக் அமீர், சேக் பரீது போன்றவர்கள் இவருக்கு அளித்த இசைப்பயிற்சி இவருடைய திறனை மேலும் மெருகெற்றியது.

இலங்கையில் கவுஸ் மாஸ்டர் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற இசைக்கலைஞர் இவரது திறமையைக் கண்டெடுத்து இவரை உற்சாகப்படுத்தி வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். பணக்கார வீடுகளுக்கு சென்று பாடத் தொடங்கியவர் பிறகு இலங்கை வானொலியில் ஒரு நிரந்தர இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

இவருடைய மனைவியின் பெயர் சகீனா பேக். உறவுக்காரப் பெண்ணான இவரை 1947ஆம் ஆண்டு திருமணம் புரிந்துக் கொண்டார். இவரது மகன்கள் இஷாக் பேக், இல்யாஸ் பேக், மகள் முனீரா பேக் அனைவரும் பிரபலமான பாடகர்கள்.

கொலம்பியா இசைத்தட்டில் இவர் பாடிய முதற்பாடல் (1936) பாடல் “கருணா முகுதே நமு கிலீலா” என்ற சிங்களப்பாடல். சிங்கள மொழியில் வெளிவந்த இரண்டாம் திரைப்படமான “அசோகமாலா” என்ற படத்தில் பின்னணி பாடினார் (1947). இப்படத்தில் இவர் 4 பாடல்கள் பாடினார். ஒரு பாடல் காட்சியில் இவரே நடித்தும் இருந்தார்.

இஸ்லாமியப் பாடல்கள் அவ்வப்போது இவர் பாடினாலும் இவர் அதிகமாக பாடியது பெளத்தமத பக்தி பாடல்களே. இவர் பாடிய “புத்தம் சரணம் கச்சாமி” மிகவும் பிரபலம்.

1950களில் சிங்களத் திரைப்படங்களில் பிரபலமான பின்னணிப்பாடகராக வலம் வந்தார். “கெலே நந்த” மற்றும் “தைவோ கய” ஆகிய சிங்களத் திரைப்படங்கள் இவர் பாடிய பாடல்கள், 1953 ஆம் ஆண்டில் “சுஜாதா” திரைப்படத்தில் இவர் பாடிய நான்கு பாடல்களில் ஒரு பாடல் ஜமுனாராணியுடன் இணைந்து பாடியது, 1955ல் “சடசுலங்க” என்ற திரைப்படத்தில் லதா மங்கேஷ்கர் உடன் இணைந்து சிங்களப் பாடலைப் பாடியது, – இவை யாவும் இவரை தலைச்சிறந்த ஒரு சிங்களப் பாடகராக உயர்த்தியது. இலங்கை வானொலியில் ஒருக்காலத்தில் நான்கு மொழிகளில் பாடும் திறம் பெற்ற பாடகராய் வலம் வந்தவர் இவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது

இலங்கை அரசாங்கம் இவருக்கு “கலா சூரி” என்ற உயர்ந்த விருதையும் தந்து கெளரவித்தது. (1983, 1987). 450 சிங்கள மொழி படங்களிலும் 9,500 பாடல்களுக்கும் மேலாகவும் பாடியவர் என்ற பெருமையைப் பெற்றவர்.

இலங்கையில் தயாரிக்கப்பட்ட ‘கோமாளிகள்’, ‘நான் உங்கள் தோழன்’ போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் பின்னணிப் பாடல்கள் பாடியுள்ளார்.

இலங்கையின் முதலாவது சுதந்திர நாள் வைபவம், மற்றும் 1974 பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு ஆகியவற்றில் கலந்து கொண்டு பாடியுள்ளார். 1956 ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் பண்டாரநாயக்கா இவருக்கு இலங்கை குடியுரிமை வழங்கிக் கௌரவித்தார்

55 ஆண்டுகள் இசைத்துறை அனுபவத்தில் ஏராளமான இஸ்லாமியப் பாடல்கள் இவர் பாடியிருக்கிறார். புகழ்ப்பெற்ற கவிஞர்/இசையமைப்பாளர் நெ.மு.நூர்தீன் பாடல்கள் உட்பட பல சிறந்த கவிஞர்களுடைய இஸ்லாமியப் பாடல்களை இவர் பாடியுள்ளார்.

கவிஞர் மறைதாசன் எழுதி டி.எ.கல்யாணம் இசையமைத்த

“தீனெனும் இஸ்லாம் நெறிதனைத் தாங்கி

திகழ்ந்திடும் சோதரனே”

என்ற பாடல் கேட்போர் உள்ளத்தைக் கவர்ந்தது

“இறையோனின் சுடரான நபிநாதரே!

இணையேதும் இல்லாத மஹ்மூதரே !”

“உலகெங்கும் வழிகாட்டும் தீபமே – நலம்

தினம் கூறும் மாபுர்கான் வேதமே”

“தாரணி யாவுமே போற்றிடும் மேதையே

தன்மை மேவும் நாதரே !”

1991ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி தனது 72வது வயதில் மரணமுற்றார்.

“நான் புத்தர் பிறந்த நாட்டிலிருந்து வந்தவன். ஆகையால் நான் புத்த பாடல்கள் பாடுவதை விரும்புகிறேன். எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் நாமெல்லோரும் சகோதரர்கள். நான் இறக்குவரை பெளத்தமத பக்தி பாடல்கள் பாடுவேன். நான் இந்த இலங்கை நாடு மக்களிடமிருந்து பெற்ற அன்பை நான் என் வாழ்க்கையின் மாபெரும் வெற்றியாகக் கருதுகிறேன்,” என்று பேட்டியளித்தார்.

ஹஜ் புனித பயணம் மேற்கொண்ட பிறகு அல்ஹாஜ் மொய்தீன் பேக் என்று அழைப்பதையே அவர் விரும்பினார்.

இவ்வருடம் பிப்ரவரி மாதம் இவர் நினைவாக இலங்கை அரசாங்கம் தபால்தலை வெளியிட்டிருந்தாலும் இவருக்கான போதிய அங்கீகாரம் தரப்படவில்லை என்பது சிலரது அபிப்பிராயமாக இருக்கிறது.

#அப்துல்கையூம்

 

இன்னிசை ராணி


ஒரு காலத்தில் இந்தப் பெண்மணியின் இனிமையான குரல் ஒலிக்காத இஸ்லாமியர்களின் வீடே கிடையாது என்று அறுதியிட்டு உறுதியாகச் சொல்லலாம். இவரது பாடல்கள் எல்லோருடைய உதடுகளையும் முணுமுணுக்க வைத்தது. இதமான குரல். இனிமையான சாரீரம். பண்ணிசையில் இலகுவான ஏற்ற இறக்கம். கண்ணை மூடிக் கொண்டு கேட்டாலும் இது கே.ராணி உடைய குரல் என்று எளிதில் கண்டுபிடித்துச் சொல்லி விடலாம்.


நாகூர் இசைமுரசு இ.எம்.ஹனிபாவுடன் இப்பெண்மணி இணைந்து பாடிய பாடல்கள் ஒன்றல்ல, இரண்டல்ல. அத்தனையும் முத்துக்கள்.
அன்றைய கால கட்டத்தில் “இவர்களிருவரும் இணைந்து பாடிய பாடல்கள் மூலமாகத்தான் இஸ்லாத்தைப் பற்றியும் இஸ்லாமிய சரித்திர நிகழ்வையும் எவ்வளவோ நாங்கள் அறிந்துக் கொண்டோம்” என்று கூறியவர்கள் ஏராளம். புலவர் ஆபிதீன் காக்கா அவர்களுடைய எழுத்தாற்றல் அதற்கு துணை நின்றது.


இசைமுரசு நாகூர் ஹனிபா எத்தனையோ இஸ்லாமியப் பாடல்கள் பாடியிருந்தாலும் தொடக்க காலத்தில் அவர் கே. ராணியுடன் இணைந்து பாடிய பாடல்களுக்கு நிகரில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இவர்கள் இருவருடைய ‘கெமிஸ்ட்ரி’யும் அட்டகாசமாக ஒத்துப் போனது. இசை ஞானத்தில் இருவருக்கிடையிலும் நல்ல புரிதல்கள் இருந்தன. டி.எம்..எஸ்ஸுக்கு இணையான ஜோடி பி.சுசீலா போன்று, முஹம்மது ரஃபிக்கு இணையான ஜோடி லதா மங்கேஷ்கர் போன்று, இஸ்லாமியப் பாடல்களுக்கு நாகூர் ஹனிபா – கே.ராணி ஜோடி என்ற அளவில் சிலாகித்து பேசப்பட்டது.


இன்று, இசைமுரசு நாகூர் ஹனிபா, கே.ராணி இருவருமே நம்மிடையே இல்லை. ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து பாடிய இன்னிசை என்றென்றும் நம் காதுகளில் தேனாய் பாய்ந்துக் கொண்டிருக்கிறது.


கே.ராணி பாடிய கீழ்க்கண்ட இஸ்லாமியப் பாடல்கள் அன்றும், இன்றும், என்றும் பசுமரத்தாணியாய் நம் மனைதில் நீங்காது நிலைத்திருக்கும்.


அன்பு மார்க்கம் தந்த எங்கள் அஹ்மதே யா முஸ்தஃபா !
அறிவு தீபம் ஏற்றி வைத்த முஹம்மதே யா முஸ்தஃபா !


திருமறையின் அருள்மறையில் விளைந்திருப்பதென்ன?-அறிவு
இறைத்தூதர் நபி பொன்மொழியில் பொதிந்திருப்பதென்ன-அன்பு


ஓதுவோம் வாருங்கள் !
லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்
உயர் கலிமாவின் பொருள் உலகெங்கும் கேட்க


நெஞ்சிலே வாழ்கின்றவர் ! நேர்வழி காட்டுபவர் !
நானிலம் போற்றுபவர் ! நீதர் நபியாம் நாயகர் !


தீனோரே நியாயமா மாறலாமா !
தூதர் நபி போதனையை மீறலாமா ! உள்ளம் சோரலாமா !


வாழ வாழ நல்ல வழிகள் உண்டு ! நபி வழங்கிய நெறிகளிலே !
வாரி வாரி தந்த வைரம் உண்டு ! அவர் வாய்மலர் மொழிகளிலே !


எல்லாம் வல்ல ஏகன் நீயே ! இணையில்லாத அல்லாஹ் நீயே !
என்றும் புகழ்வோமே அல்ஹம்துலில்லாஹ் !!


அருள் மேவும் ஆண்டவனே ன் ! அன்புடையை காவலனே !
இருள் நீக்கும் தூயவனே ! இணையில்லாத அல்லாஹ்வே !


தீன் கொடி நாட்டிய தேவா ! – இறைத்
தூதரே யா முஸ்தபா !


பாலைவனம் தாண்டி போகலாமே நாம் !
புவிபோற்றும் மதினா நகராளும் நபியை நாம் !
பண்போடு சென்று காணலாம் !!


எல்லா உலகும் ஏகமாய் ஆளும் இணையற்ற அல்லாஹ்வே !
வல்லமை வாய்ந்த உன்னிடம் நாங்கள் மன்னிப்பை வேண்டுகிறோம் !


மக்கள் யாவரும் ஒன்றே குலமெனும் மார்க்கம் வந்தது யாராலே
மக்காவென்னும் நகரம் தந்த மாந்தர் திலகம் நபியாலே !


இன்ப வாழ்வு பொங்கிட வேண்டும் !
ஏழை எளியோர் உயர்ந்திட வேண்டும் !
அன்பு எங்கும் பரவிட வேண்டும் !
யா அல்லாஹ் ! யா அல்லாஹ் ! கருணை செய்வாய் !!


இன்று வந்து நாளை போகும் நிலையிலே
என்ன செய்து வாழுகின்றாய் உலகிலே?


இஸ்லாமியப் பாடல்கள் மாத்திரமே இவர் பாடியிருக்கிறார் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவருடைய சாதனைகளின் மறுபக்கம் சரியாக எடுத்துரைக்கப்படவில்லை என்பது என் கருத்து.. பி.சுசிலா, எஸ்.ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரியைத் தெரிந்து வைத்திருக்கின்ற அளவுக்கு இவரை யாரும் தெரிந்து வைத்திருக்கவில்லை என்பது வருத்தமான செய்தி.


வெறும் எட்டே வயது நிரம்பிய சிறுமியொருத்தி திரைப்படங்களில் பின்னணி பாடி வானளாவிய புகழைப் பெற்றார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? சிறுமுது திறனாளியாக (Child Prodigy), குழந்தை மேதையாக இவர் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்.
அக்காலத்தில் வைஜயந்திமாலாவின் நாட்டிய நிகழ்ச்சி பெரிய அரங்குகளில் நடைபெறும். நிகழ்ச்சிக்கிடையில் அவர் உடைமாற்றிக் கொண்டு வர சற்று நேரம் பிடிக்கும். அந்த இடைவெளி நேரத்தை பூர்த்தி செய்வதற்கு 5 வயது குழந்தையாக, அருமையாக பாடக்கூடிய திறன் படைத்திருந்த சிறுமி ராணியை மேடையில் ஏற்றி பிரபலமான பாடல்களை பாட வைப்பார்கள். கேள்வி ஞானத்தை வைத்து, கேட்டுப் பழகி, திறமையை வளர்த்துக் கொண்ட சிறுமி ராணியின் பிசிறில்லாத லாவகமான குரல்வளம் பலத்த கரகோஷத்தை அள்ளித் தரும்;. அரங்கத்தையே அதிர வைக்கும்.


நாட்டிய நிகழ்ச்சி முடிவதற்கு முன்பே குழந்தை ராணி தூங்கிவிடுவாளாம். அவளை வைஜயந்திமாலாவும் அவருடைய பாட்டி யதுகிரி அம்மாளும் அவளை காரில் எற்றிக் கொண்டு அவளுடைய வீட்டிற்கு கொண்டு போய்ச் சேர்ப்பார்களாம். ஒரு பேட்டியில் அவரே இதைச் சொல்லியிருக்கிறார்.


ஒருநாள் வைஜயந்திமாலாவின் நடன நிகழ்ச்சி ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்தபோது அதைக் கண்டு களிக்க இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமன் வந்திருக்கிறார். சிறுமி ராணியின் திறமை கண்டு ஆச்சரியத்தில் மூழ்கி போயிருக்கிறார்.


அடுத்த நாள் ஆர்மோனியத்தை எடுத்துக் கொண்டு ராணியின் வீட்டுக்கே வந்துவிட்டார். தமிழிலும், தெலுங்கிலும் ஒருசேர வெளிவந்த “தேவதாஸ்” திரைப்படத்தில் பாட வைத்தார். தேவதாஸ் படம் வெளிவருவதற்கு நீண்ட நாட்கள் பிடித்ததால், ராணி பின்னணி பாடியிருந்த மற்ற மற்ற படங்கள் முதலில் வெளிவந்தன.


1943-ஆம் ஆண்டில் பிறந்த இவர், தனது எட்டாவது வயதிலேயே ரூபாவதி (1951) , சிங்காரி (1951) போன்ற தெலுங்கு சினிமாவில் பாடத் தொடங்கிவிட்டார்.

இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டுச் சென்ற படம் “தேவதாஸ்” என்பதில் சந்தேகமில்லை.

தேவதாஸ் படத்தில் இவர் பாடிய
//எல்லாம் மாயை தானா? – பேதை
எண்ணம் யாவும் வீணா?
ஏழை எந்தன் வாழ்வில் – இனி
இன்பம் காண்பேனோ?”//


என்ற சோகம் பிழியும் பாடல் ‘சூப்பர் டூப்பர் ஹிட்’ ஆகி இவருக்கு வானளாவிய புகழைத் தேடித் தந்தது தெலுங்கு மொழியில் “அந்தா பிராந்தியேனா” என்று தொடங்கும் இதே பாடலும் மிகவும் பிரபலமானது.


‘தேவதாஸ்’ படத்தில் கண்டசாலாவுடன் இவர் பாடிய “உறவும் இல்லை பகையும் இல்லை” என்ற பாடல், தெலுங்கில் “செலிய லேது செலிமி லேது” என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.


ராணிக்கு தாய்மொழி தமிழும் கிடையாது; தெலுங்கும் கிடையாது. இவர், கான்பூரிலிருந்து தென்னாட்டில் குடியேறிய ஒரு குடும்பத்தை சேர்ந்தவர். அப்பா கிஷன் சிங் ஒரு ஸ்டேஷன் மாஸ்டர். பல இடத்திலும் அவருக்கு பணிமாற்றம் நிகழ்ந்தது.


ராணிக்கு மொழி எந்தக் காலத்திலும் ஒரு தடைக்கல்லாக இருந்தது கிடையாது. ஸ்டேஷன் மாஸ்டராக பணியாற்றிய இவருடைய தந்தை பல இடங்களுக்கு மாற்றலாகிக் கொண்டிருந்ததால், பல மொழிகளையும் கற்கக் கூடிய வாய்ப்பு அவருக்கு கிட்டியது.

சிறுவயது முதற்கொண்டே கிரகித்துக் கொள்ளக்கூடிய சக்தி மிகுதியாக இருந்ததால், அந்தந்த மொழிக்கு ஏற்றவாறு உச்சரிப்பை அட்சர சுத்தமாக பாடக் கற்றுக் கொண்டார். நாகூர் ஹனிபாவுடன் இணைந்து பாடிய பாடல்களில் அரபிமொழி உச்சரிப்பு இவரிடத்தில் அம்சமாக இருப்பதை நாம் நன்றாகவே உணர முடியும்.


இஸ்லாமியப் பாடல்கள் மட்டுமல்ல, பற்பல திராவிட முன்னேற்றக் கழக கொள்கைப் பாடல்கள் நாகூர் ஹனிபாவுடன் இணைந்து பாடியுள்ளார். ‘வாழ்க திராவிட நாடு’, ‘அன்னை மொழி காத்து நிற்கும் அண்ணா வாழ்கவே’ உள்ளிட்ட தி.மு.க. கொள்கை பாடல்களும் ராணியின் குரலில் ஒலிப்பதிவாகி உள்ளன.


நாகூர் ஹனிபா நாகூரில் சொந்த வீடு கட்டி அதன் திறப்புவிழாவிற்கு அறிஞர் அண்ணாவை அழைத்தபோது கே.ராணியுடைய பாட்டுக் கச்சேரியைத்தான் அவர் ஏற்பாடு செய்திருந்தார்.


தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம், ஹிந்தி, வங்காளமொழி, சிங்களம் என ஏராளமான மொழிகளில் பாடியுள்ளார். இன்னும் சொல்லப்போனால் உஸ்பெஸ்கிஸ்தான் மொழியைக் கூட இவர் விட்டுவைக்கவில்லை.


500-க்கும் மேலான பாடல்கள் இவர் பாடியிருக்கிறார். இலங்கை தேசிய கீதம் இவர் பாடியது.


அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் தில்லியில் நடந்த இசை நிகழ்ச்சியில் கர்மவீர்ர் காமராஜர் இவருக்கு “இன்னிசை ராணி” என்ற பட்டத்தை வழங்கி கெளரவித்தார். ராஜ்கபூரின் ‘சங்கம்’ படப்பாடலை அந்த மேடையில் பாடியபோது, ராஜ்கபூர் மனம் நெகிழ்ந்து இவர் குரல்வளத்தைப் புகழ்ந்தார்.


‘பாரதரத்னா’ விருது பெற்ற புகழ்ப்பெற்ற இந்திய பொறியாளர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யாவின் நூற்றாண்டு விழாவில் கலந்துக் கொள்வதற்காக கர்னாடக அரசு இவரை தனிவிமானத்தில் (Chartered Flight) ஏற்றி அனுப்பி வைத்தது.


“நல்ல சுருதி சுத்தமும் வார்த்தை சுத்தமும் உள்ள பாட்டு அவளுடையது, ரொம்ப நல்லா பாடுவா. அனுபவிச்சு பாடுவா, நல்ல ஞானம் உள்ளவ, அன்போடு பழகக் கூடிய ஜீவன். நான் நிறைஞ்ச மனசோட நினைச்சுப் பார்க்கிற பாடகி” என்று பாடகர் டி.எம்.எஸ். செளந்தர்ராஜன் இவருக்கு புகழாரம் சூட்டினார்.

கே.ராணி அன்றைய காலத்தில் புகழ் உச்சியிலிருந்த அத்தனை இசையமைப்பாளர்களின் இசையிலும், அத்தனை பிரபல பாடகர்களுடனும் இணைந்து பாடியுள்ளவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


தெலுங்கு படத்தில் அவர் பாடியுள்ள படங்களை பட்டியலிட்டால் இங்கு பக்கங்கள் காணாது.


சுஜாதா (1953), செடா சுலங் (1955), சிரிமலி (1959) மெலிகொலுப்பு, போன்ற சிங்கள படங்களில் இவர் பின்னணிக் குரல் பாடியிருக்கிறார்.


கன்னட மொழி படங்கள்:
பாக்யோதயா 1956, ரத்னகிரி ரகசியா, ஸ்கூல் மாஸ்டர் (1958), காலி கோபுரா (1962) , ரத்ன மஞ்சரி (1962) லவகுசா (1963)


மலையாள மொழி படங்கள்:
அச்சனும் மகளும் (1957) வேலுத்தம்பி தாளாவா (1962) கலாயும் காமினியும் (1963)


தமிழில் இவர் பாடிய பாடல்களைக் கணக்கிட்டால் பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கின்றன.


சின்னதுரை, தர்ம தேவதை, கல்யாணம் பண்ணிப் பார், கல்யாணி, வளையாபதி, சண்டிராணி, குமாஸ்தா, ஜெனோவா, கண்கள், மாமியார், பெற்றதாய் திரும்பிப்பார், வஞ்சம், கூண்டுக்கிளி, மா கோபி, நால்வர், நல்ல காலம், பணம்படுத்தும் பாடு, ரத்த பாசம், சுகம் எங்கே, ஆசை அண்ணா அருமை தம்பி, குணசுந்தரி, கதாநாயகி, முதல் தேதி, போர்ட்டர் கந்தன் , அமர கீதம், இல்லறமே இன்பம், காலம் மாறிப் போச்சு, மர்ம வீரன், சர்க்கஸ் சுந்தரி, மறுமலர்ச்சி, மாய மோகினி, நன்னம்பிக்கை, ஒன்றே குலம், பாசவலை, காவேரி, படித்த பெண், பிரேம பாசம், சந்தோஷம்., அலாவுத்தீனும் அற்புத விளக்கும், எங்கள் விட்டு மஹாலக்ஷ்மி, மகதல நாட்டு மேரி, மாயா பஜார், தங்கமலை ரகசியம், அரசாளப் பிறந்தவன், பூலோக ரம்பை, எங்கள் குடும்பம் பெருசு, காத்தவராயன், மாலையிட்ட மங்கை, பானை பிடித்தவள் பாக்கியசாலி, சம்பூர்ண ராமாயணம், சாரங்கதாரா, அருமை மகள் அபிராமி, அழகர் மலைக்கள்வன், பால நாகம்மா, தெய்வ பலம், மன்னன் மகள், நல தமயந்தி, பாண்டித்தேவன் புதுமைப் பெண், சுமங்கலி, ஆளுக்கொரு வீடு , சவுக்கடி சந்திரகாந்தா, எல்லோரும் இந்நாட்டு மன்னர், குழந்தைகள் கண்ட குடியரசு, மங்கைக்கு மாங்கல்யமே பிரதானம், இந்திரா என் செல்வம், லவகுசா, வழி பிறந்தது, ஹரிச்சந்திரா.‘சந்திப்பு’ (வெளிவரவில்லை)


1965 ஆண்டுக்குப் பிறகு இவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. அதன்பிறகு இசைக்கச்சேரி செய்ய ஆரம்பித்தார். இக்கால கட்டத்தில் அவர் இசைமுரசு நாகூர் ஹனிபாவுடன் இணைந்து பாடிய பாடல்கள் யாவையுமே இஸ்லாமிய மக்கள் அல்லாது பிறசமயத்தார்களும் விரும்பிக் கேட்டனர்.


இவரது கணவரின் பெயர் சீதா ராமி ரெட்டி. முன்பே இறந்து விட்டார். இரண்டு வருடங்களுக்கு முன்பு (2018) இந்த ‘இன்னிசை ராணி’ தனது 75வது வயதில் மரணமுற்றார். ஹைதரபாத்தில் இவரது மகள் விஜயாவின் வீட்டில் இவருடைய உயிர் பிரிந்தது.
தமிழகத்தில் எந்த ஊடகங்களும் இவரது மரணச் செய்தியை பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை. தெலுங்கு மற்றும் சிங்களமொழி ஊடகங்கள் மாத்திரமே இவரை நினைவு கூர்ந்து இவரது சாதனைகளைப் பகிர்ந்தன.

ஒரு சில தமிழ்ப் பத்திரிக்கைகள் ஓரத்தில் கட்டம் கட்டி சின்னதாக செய்தி வெளியிட்டிருந்தன..
காரணம் இவருடைய மரணச் செய்தி வனிதா விஜயகுமாரின் விவாகரத்து செய்தி போல அவ்வளவு முக்கியமான செய்தியாக அவர்கள் கருதவில்லை.

K. Rani

அப்துல்கையூம்

 

காரைக்கால் ஏ.எம்.தாவூத்


இஸ்லாமிய இன்னிசை உலகம் என்றென்றும் நெஞ்சில் நினைவு வைத்திருக்க வேண்டிய கடந்த கால பாடகர்களில் காரை ஏ.எம்.தாவூத் முக்கிய பங்கு வகிக்கிறார்.

இஸ்லாமியப் பாட்டுலகில் முன்னோடியாகக் கருதப்படுபவர் இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபா என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.

அந்த முன்னோடிக்கே முன்னோடியாக திகழ்ந்தவர் ஒருவர் உண்டென்றால் அது இவர்தான் என்று அடித்துச் சொல்லலாம். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? ஆம். காரை தாவூத், இசைத்துறையில் இமயத்தைத் தொட்ட இசைமுரசுக்கே ஓர் அழகிய முன்மாதிரி.

காலச் சுழற்சியில் காற்றோடு காற்றாக கரைந்துப் போன பெயர்களில் இந்த இன்னிசை வேந்தரின் பெயரும் ஒன்று.

காரைக்கால் ஏ.எம்.தாவூத் அவர்கள் 1905ஆம் ஆண்டு பிறந்தார், 1936ஆம் ஆண்டு முதலே இவர் தமிழ்க் கூறும் நல்லுலகில் நாடறிந்த இஸ்லாமியப் பாடகராய் வலம் வந்துக் கொண்டிருந்தார். தமிழ் நாட்டில் இவரை அறிந்து வைத்தவர்களைக் காட்டிலும் இலங்கையில் இவரைப் போற்றிப் புகழ்வோர் அநேகம் பேர்கள் உண்டு.

HMV (His Master’s Voice) நிறுவனத்து இசைத்தட்டில் இஸ்லாமியப் பாடல்கள் முதன் முதலாகப் பாடியவர் நாகூர் தர்கா வித்வான் எஸ்.எம்.ஏ.காதர் அல்லது நாகூர் இ.எம்.ஹனிபா என்றுதான் பெரும்பாலோர் நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

முதன் முதலில் எச்.எம்.வி. நிறுவனத்தில் இஸ்லாமியப் பாடல் பாடியவர் காரைக்கால் தாவூத் அவர்கள் என்பது பதிவு செய்யப்பட வேண்டிய தகவல். நாகூர் மண்ணுக்கும் இசைத்துறைக்கும் உள்ள தொடர்பை எல்லோரும் நன்கறிவர். நாகூர்வாசியான இவர் அறியப்பட்டது காரை ஏ.எம்.தாவூத் என்ற பெயரில் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது,

‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதைப்போல் காரை தாவூத் அவர்களின் பெருமையை அறிந்துக்கொள்ள இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபாவின் இந்த வாய்மொழி வாக்குமூலமே போதுமானது.

பத்திரிக்கையாளர் அ.மா.சாமி அவர்கள் “உங்களுக்கு எப்படி இசையில் விருப்பம் ஏற்பட்டது?” என்று கேட்ட கேள்விக்கு இசைமுரசு தந்த பதில் இதோ:

“எங்கள் தந்தையார் கோலாலம்பூரில் ரெயில்வே ‘போர்மேன்’ ஆக வேலை பார்த்தார். 28 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, அங்கிருந்து திரும்பினார். இடையிடையே வந்து போனார். ஒருமுறை வரும்போது ஒரு கிராமபோன் பெட்டி கொண்டு வந்தார். கே.பி.சுந்தராம்பாள், கிட்டப்பா, தியாகராச பாகவதர், பி.யு.சின்னப்பா, சைகால், இஸ்லாமியப் பாடகர் காரைக்கால் தாவூத் போன்றவர்களின் இசைத்தட்டுகளை அந்த கிராமபோன் பெட்டியில் ஓடவிட்டு, நான் கேட்பேன். இது அவர்களைப் போலப் பாட வேண்டும் என்ற ஆசையை என்னிடம் ஏற்படுத்தியது. எந்தப் பாடலையும் ஒருமுறை கேட்டால், அப்படியே திரும்பிப் பாடும் ஆற்றல் இயற்கையாகவே எனக்கு இருக்கிறது, அப்படிப் பாடிப் பாடி பழகிக் கொண்டேன்.” என்று தன் மனதில் தோன்றியதை அப்படியே புட்டுப் புட்டு வைத்தார்.

நாகூர் ஹனிபாவைக் காட்டிலும் காரை தாவூத் அவர்கள் வயதில் 20 வருடம் மூத்தவர். நாகூர் ஹனிபா பாடத் தொடங்குவதற்கு முன்பே புகழின் உச்சத்தில் இருந்தவர் காரை தாவூத் அவர்கள்.

உசைன் பாகவதர், வித்வான் எஸ்.எம்.ஏ,காதர், குமரி அபுபக்கர், இசைமணி எம்.எம்,யூசுப், எச்.ஏ.ஏ.காதர், காரைக்கால் தாவூத் போன்று முறையாக சங்கீதம் கற்றவன் நானல்ல என்று நாகூர் ஹனிபாவே பலமுறை சொல்லியும் இருக்கிறார். ‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பதைப் போலவே இசையை கேட்டுக் கேட்டு கேள்வி ஞானத்திலேயே தன் ஆற்றலை வளர்த்துக் கொண்டவர் அவர். இப்பேறினை இறையருள் என்றே சொல்ல வேண்டும்.

காரை தாவூத் அவர்களுக்கு பாடல் எழுதிக் கொடுத்தது புலவர் ஆபிதீன், கவிஞர் சலீம் முதலானோர். முன்பே சொன்னது போல இவருடைய திறமைக்கு முறையான அங்கீகாரம் தந்து போற்றிப் புகழ்ந்தோர் இலங்கை வாழ் தமிழர்களே. இவரை தாவூத் மாஸ்டர் என்றே மரியாதைப் பொங்க அழைத்தனர்.

ஒரு காலத்தில் இவருடைய பாடல்கள் திருச்சி வானொலியிலும், இலங்கை வானொலி கூட்டு ஸ்தாபனத்திலும் அதிகப் படியாக ஒலிபரப்பிக் கொண்டிருந்தனர். இங்கிலாந்து நாட்டில் பி.பி.சி. ஆரம்பிக்கப்பட்ட 3 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட இலங்கை வானொலி அச்சமயத்தில் தமிழகமெங்கும் எல்லோராலும் விரும்பிக் கேட்கப்பட்ட வானொலி சேவையாகும்.

உலகில் எந்த ஒரு வானொலி நிலையத்திலும் இல்லாத அளவு ஒரு லட்சத்திற்கும் மேலான இசைத்தட்டுகளை பாதுகாத்து வைத்திருக்கும் இந்த ஸ்தாபனத்தின் சேகரிப்பில் காரை ஏ.எம்.தாவூத் அவர்களின் ஏராளமான இசைத்தட்டுகள் இன்னும் அரிய பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டு இருக்கின்றன என்ற செய்தி மனதுக்கு நிறைவாக இருக்கின்றது,

அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய எட்டாம் மாநாடு 2014 பிப்ரவரி மாதம் 14,15,16 நாட்களில் கும்பகோணம் நகரில் நடந்தேறியது. அதில் “முஸ்லிம்களின் இசைப்பாடல் மரபுகள்” என்ற தலைப்பில் ஆய்வரங்கம் நடத்தப்பட்டது.

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் அப்போதைய தலைவராக இருந்த கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தொடங்கி வைத்தார். அக்கூட்டத்தில் காரைக்கால் ஏ.எம்.தாவூத் அவர்களின் இசை பங்களிப்பை நினைவு கூர்ந்து “வாழ்நாள் சேவை விருது” (Posthumous) வழங்கப்பட்டது. உயிரோடு இருந்தபோது கிடைக்காத அங்கீகாரம் மறைந்த பின்பாவது கிடைத்ததே என்று மகிழ்ச்சியாக இருந்தது.

இலங்கையிலுள்ள மாத்தளை ஸாஹிராக் கல்லூரியின் முன்னாள் அதிபரும், தமிழறிஞருமான ஜனாப் ஏ.ஏ.எம். புவாஜி எழுதிய “மாத்தளை மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு” என்ற நூலை நான் அண்மையில் படிக்க நேர்ந்தது. அதில் காரைக்கால் ஏ.எம்.தாவூத் அவர்களைப் பற்றிய குறிப்புகள் கண்டு நான் நெகிழ்ந்துப் போனேன்.

இந்நூலில் 1950களில் இசை மற்றும் இலக்கியத் துறையில் புகழ்ப் பெற்றிருந்த தமிழக ஆளுமைகளைப் பற்றிய அத்தனை விஷயங்களைப் பற்றியும் அவர் விரிவாகவும் ஆழமாகவும் எழுதியுள்ளார்.

1950களில் மீலாத் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டங்கள், பதம் பாடுதல், இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சிகள் விமரிசையாக கொண்டாடும் வழக்கம் மாத்தளையில் இருந்து வந்தது. குறிப்பாக தமிழகத்திலிருந்து வந்த பிரபல பாடகர்களை வரவேற்று உரிய மரியாதை செலுத்துபவர்களாக மாத்தளைவாசிகள் இருந்தார்கள். தமிழகத்து பிரபலங்கள் இலங்கை வரும்போதெல்லாம் அங்குள்ள பத்திரிக்கைகளும் அவர்களைப் பற்றிய வாழ்க்கை குறிப்புகளையும், அவர்கள் நிகழ்த்திய சாதனைகளையும் வரைந்தன.

கவ்வாலி பாடல்களும் மாத்தளை முஸ்லிம்கள் மத்தியிலே இசை ரசிகர்களை உருவாக்கியிருந்தன. இலங்கைக்கு வரும் இந்திய பாடகர்கள் மாத்தளைக்கு வருவது வழக்கமாக இருந்தது. இங்கு பாட்டுக் கச்சேரிகள் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டன. இப்படி மாத்தளையில் பாடியவர்களில் மலாங் பாய், கலீபுல்லாஹ் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

காரைக்கால் தாவூத் இலங்கைக்கு 12 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து போய் வந்த வண்ணமிருந்தார். அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் அங்கு உருவாகியிருந்தனர்.

“இத்தகைய பிரபல இஸ்லாமியப் பாடகர்களின் வருகையினால் மாத்தளையில் உருவான சிறந்த பாடகர், தன் வாழ்க்கையையும் தன் சொத்தின் பெரும் பகுதியையும் இஸ்லாமிய இசைக்காகவே அர்ப்பணித்தவர் மர்ஹூம் சேகு தாவுத் மாஸ்டர் ஆவார்” என்று தன் நூலில் ஏ.ஏ.எம். புவாஜி குறிப்பிடுகிறார் .

தாஸிம், கே.எம். எஸ். தெளவ்தான், கே.எம்.எஸ். சல்சபீல் போன்றோர் தமிழகத்து பாடகர் காரை ஏ.எம்.தாவூத் மாஸ்டர் அவர்களின் இசையால் உந்தப்பட்டு இசைத் துறைக்குள் புகுந்தவர்கள் என்று இலங்கை எழுத்தாளர் ஒருவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

“புதையல் மூட்டையின் மேல் அமர்ந்துக்கொண்டே நாம் புதையலைத் தேடுகிறோம்” என்று கவிக்கோ சொல்வதைப் போல நாகூர்க்காரரின் பெருமை இலங்கையைச் சேர்ந்தவர்கள் சொல்லித்தான் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

தாவூத் நானா என்று உள்ளுர்வாசிகளால் அன்போடு அழைக்கப்பட்ட இவர் மிகவும் நேசிக்கப்பட்டார். முதல் மனைவி மறைந்ததும் இரண்டாவது திருமணம் புரிந்துக் கொண்டார், இவருக்கு மூன்று ஆண், ஒரு பெண் வாரிசுகள். மூத்த மகன் “ஷாஹா” என்றழைக்கப்படும் D, ஷாஹுல் ஹமீது என் பால்ய காலத்து நண்பர். பாடகருடைய சொந்த வாழ்க்கை வரலாற்று குறிப்புகள் அவரிடமிருந்து பெறப்பட்டவை.

காரை தாவூத் போன்று இன்னும் எத்தனையோ இசைத்துறை ஆளுமைகள் கண்டுக்கப்படாமலேயே மறைந்தும் போய் விட்டனர். சிலர் இன்றும் மறக்கப்பட்டு வாழ்கின்றனர். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால் வாலை மணி ஆசானிடம் முறைப்படி சங்கீதம் பயின்று, கவி கா.மு.ஷெரீப் அவர்களின் சீறா விளக்கவுரை பாடல்களை தனது கம்பீரக் குரலால் மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றவர் இஸ்லாமியப் பாடகர் குமரி அபூபக்கர் அவர்கள்.

கவி.கா.மு.ஷெரீப் அவர்களின் நூற்றாண்டு விழாவுக்கு இவருக்கு அழைப்பே கொடுக்கப்படவில்லை என்பது விநோதம்.

#அப்துல்கையூம்

 

இலங்கை தமிழ்ச் சகோதரர்களும் இசைமுரசு நாகூர் ஹனிபாவும்


தமிழ் நாட்டு பிரபலங்களுக்கு குறிப்பாக அவர்கள் இசைத்துறை, திரைப்படத்துறை, இலக்கியம், அரசியல் என எத்துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை அழைத்து கெளரவித்து உரிய மரியாதைச் செலுத்துவதில் இலங்கை தமிழருக்கு நிகர் வேறு யாருமில்லை என நான் சொல்வேன்.

இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து “தாரகை” என்ற இதழ் 01.04.1953 அன்று வெளியிட்ட ஒரு செய்தியை படிக்கையில் நாகூர் ஹனிபாவுக்கு இலங்கை நாட்டில் எந்த அளவுக்கு வரவேற்பு இருந்தது என்பதை நாம் நன்றாக அறிந்துக் கொள்ள முடியும் .

“இசைமுரசு ஜனாப் ஹனீபா ஏப்ரலில் இலங்கை வருகிறார்” என்ற தலைப்புச் செய்தியுடன் அவரைப் பற்றிய சிறப்பான அறிமுகம் அதில் கொடுக்கப்பட்டிருந்தது.. இச்செய்திகள் யாவும் 100 நூல்களுக்கு மேல் எழூதியிருக்கும் வரலார்றாசிரிய செ.திவான் ஆய்ந்து முறையே ஆதாரத்துடன் வெளியிட்ட செய்திகளாகும் . இலங்கை “தாரகை” இதழில் வெளியான அச்செய்தியை ஒரு வரி கூட மாறாமல் அப்படியே தந்திருக்கின்றேன்.

//தமிழக இளம் பாடகர்களிலே தோழர் ஹனிபாவும் ஒருவர். இருபத்தைந்து ஆண்டுகளை எட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் இவர் “இசைமுரசு” என்ற பட்டத்தைப் பெற்றவர் மாத்திரமல்ல, எழுச்சி எண்ணங் கொண்ட சீர்த்திருத்தவாதியுங் கூட. பாடகர்களில் பலர் ஏதோ ஒரு காரியத்திற்காக அதுவும் பழமைப் பிடிப்புகளிலே பதுங்கி நின்று பணியாற்றும் பரம பக்தர்களாக காட்சியளிப்பார்களே தவிர , நாட்டுக்கு, மொழிக்கு, சமுதாயத்திற்கு பயன்படும் விதத்தில் நடந்து கொள்ள மாட்டார்கள். அப்படியே ஒரு சிலர் பயன்படுகிறார்கள் என்றால் அவர்களுக்கு பழமை விரும்பிகளுக்கு மத்தியிலே ஏற்படுவது எதிர்ப்பு..

தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்டோர் தமிழ்ப் பாட்டுக்களைத்தான் பாட வேண்டும் என்று 1928-ம் ஆண்டு, காலஞ்சென்ற ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்களால் தமிழிசைக் கழகம் தமிழ் நாட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதற்குப் பல கட்சியினர்களின் ஆதரவும் கிடைத்தது மட்டுமல்ல மூக்கால் பாடும் முசிரிகளும் ஆங்காரக் குரல் அரியக் குடிகளும் “அழகு தமிழிலே பாடினால்தான் மரியாதை” என்ற முடிவுக்கு வரும் அளவுக்கு அந்த இயக்கம் மதிப்புப் பெற்றது. இன்னும் ஒரு சிலர், தமிழில் ஒழுங்கான இசை நுணுக்கங்கள் இல்லை என்று கூறி தெலுங்கிலும் ஹிந்தியிலும் பாடிக்கொண்டலைவதும் ஆச்சரியம்தான்.! பிற மொழிகள் பேரிலுள்ள துவேஷத்தால் தமிழ்ப்பாடல்தான் பாட வேண்டுமென நான் கூறவில்லை. அந்த மொழிப் பாடல்கள் நம்மை திட்டாமலாவது இருக்கின்றதா என்பதுகூட தெரியாமல் தலையை அசைத்து ரசிப்பதில் அர்த்தமில்லை என்பதாகக் கூறுகிறேன்.

“செந்தமிழில் இசைப்பாடல்கள் இல்லையெனச்
செப்புகின்றீர் மானமின்றிப்
பைந்தமிழில் இசையின்றேல் பாழுங்கிணற்றில்
வீழ்ந்துயிரை மாய்த்தலன்றி
எந்தமிழில் இசையில்லை எந்தாய்க்கே
உடையில்லை என்பதுண்டா?”

என்று ஆத்திரத்துடன் கேட்கின்றார் நமது அன்புக் கவிஞர் பாரதிதாசன்,

“கிளிபோலச் சொல்வதன்றித் தமிழ் நூற்கள்
ஆராய்ந்து கிழித்திட்டீரோ?
புளியென்றால் புலியென்றே உச்சரிக்கும்
புலியீரே புளுக வேண்டாம்
துளியறிவும் தமிழ் மொழியில் உள்ளதுவோ
பாடகர்க்கு சொல்வீர் மெய்யாய் !”

என்று கனல் கொப்பளிக்க தமிழ் பாடல்களில் இசையில்லை என என்ணுகின்ற பாடகர்களை பார்த்துக் கடாவுகின்றார் புரட்சி வேந்தன்.

கவிஞரின் கருத்துப்படி தமிழ் பாக்கள்தான் பாட வேண்டும் என்ற எண்ணத்தினரைக் கொண்ட முற்போக்காளர் படைவரிசையில் நிற்பவர் தோழர் இசைமுரசு ஹனீபா அவர்கள். இனிமையான குரலமைப்பு, அவர் கையாளும் முறையே தனிச்சுவை தரும்.! சமீப காலங்களில்தான் தமிழ்ப் பட உலகு அவரை நாடியிருக்கின்றது. சில வாரங்களில் வரப்போகும் அறிஞர் அண்ணாவின் சொர்க்க வாசலிலும், திருமதி ராஜகுமாரியின் வாழப் பிரந்தவளிலும் ஒரு சில பாடல்கள் பாடியிருக்கின்றார். சென்ற மாதம்தான் இசைத்தட்டில் அவர் குரலை வெளியிட ஒப்பந்தம் செய்திருக்கின்றனர். வருங்காலம் ஒரு சிறந்த முன்னேற்றத்தை அவருக்கு அளிக்குமென எதிர்ப்பார்க்கலாம். இலங்கைக்கு அவர் சமீபத்தில் வருகிறாரென்ற செய்தி இலங்கை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டுவதாக இருக்கின்றது. ஏப்ரல் முதல் வாரத்தில் தோழர் ஹனீபா இலங்கையில் ஒரு சில கச்சேரிகளில் கலந்துக் கொள்வாரெனத் தெரிகிறது.//

தமிழகத்து பாடகர் ஒருவர் தனது இனிமையான குரலால் இலங்கை வாழ் தமிழர்கள் மனதில் எத்தகையவொரு தாக்கத்தை 1950களில் உண்டு பன்ணினார் என்பது இந்த பத்திரிக்கை செய்தியிலிருந்து நான் உணர்ந்துக்கொள்ள முடிகிறது.

கச்சேரி என்றால் தெலுங்கு கீர்த்தனைகள்தான் என்றிருந்த நிலைமையை தலைகீழாக புரட்டிப் போட்ட பாடகர்களில் நாகூர் ஹனிபாவும் ஒருவர் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது.

அதே சமயம் நாகூர் ஹனிபாவைப் பற்றி தவறான புரிதல்கள் கொண்ட எழுத்தாளர்களும் இலங்கையில் இருக்கத்தான் செய்தார்கள். இலங்கை “தினகரன்” பத்திரிக்கையில் மான மக்கீன் என்ற மூத்த எழுத்தாளர் நாகூர் ஹனிபா மீது தொடுத்த தனிப்பட்ட தாக்குதலுக்கு ஜூன் 4,2010 அன்று நான் ஒரு மறுப்புக் கடிதம் எழுத நேர்ந்தது.

“நாகூர் ஹனீபாவின் பாடல்கள் பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வு செய்யப்பட வேண்டும்” என்று திரு. எஸ்.ஐ.நாகூர் கனி என்பவர் இலங்கை தினகரன் பத்திரிக்கையில் ஒரு பரிந்துரை செய்திருந்தார்.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்து மூத்த எழுத்தாளர் நாகூர் ஹனிபாவுக்கு பாடல் எழுதித் தந்தவர்களை உயர்த்தியும், பாடகரை தரக்குறைவாக விமர்சித்தும் கட்டுரை (27.09.2009) ஒன்றை வரைந்திருந்தார். அவருடைய கடுமையான விமர்சனம் இலங்கை எழுத்தாளர்கள் பலரை அப்போது வெகுண்டெழ வைத்தது.

எழுத்தாளர் மதிப்பிற்குரிய திரு..மானா மக்கீன் “தினகரன்” பத்திரிக்கையில் தொடுத்த குற்றச்சாடுகள் இதோ:

//“நாகூர் ஹனீபாவின் வாழ்க்கை வரலாற்றை அ.மா.சாமியின் ஆய்வில் வெளிவந்த பிறகு புதிதாக ஓர் ஆய்வுக்கு நாகூர் ஹனிபாவிடம் எந்தச் சரக்கும் இல்லை”//

//“அவருக்கு பாடல்கள் எழுதி கொடுத்தவர்களை அவர் பிரபலப் படுத்தவில்லை”//

/“நாகூர் ஹனீபாவுக்காக எழுதப்பட்ட பாடல்களை ஹனீபாவின் பாடல்கள் என்றழைப்பது தவறு”//

//“நாம் மட்டும் பாடகர் ஹனிபாவை ஆய்வுக்குத் தூக்கிப் பிடிக்க வேண்டிய தில்லை”//

//“ஆரம்பத்திலேயே என் பேனா குத்திக் காட்டியது போல், தனக்குப் புகழும் செல்வமும் கொடுத்த உன்னதமான பாவலர் பெருமக்களை அடையாளம் காட்டத் தவறிய பாடகர் அவர்”//

//”குரல்தானம் மட்டும் செய்த ஒருவரை அரியாசனத்தில் அமர்த்துவது முறையாகாது. அதில் நல்ல தெளிவு அனைவருக்கும் இருக்க வேண்டும்”//

//“தன் சொந்த மண்ணின் குரல் வளம் மிக்க ஒருவரை உயர்த்தி வைத்தவர்கள் இக் கவிஞர்கள் (நாகூர் ஆபிதீன், நாகூர் சலீம்) இருவருமே!”//

//“ஆக நம்மைப் போன்ற மூத்த எழுத்தாளர்கள்தான், ஆய்வுப் பணியில் ஈடுபட வேண்டிய பல்கலைக்கழக மாணவர்களுக்கு யாரை, எவரை, எப்படி அடையாளமிடவேண்டும் எனச் சொல்லிக் கொடுக்க வேண்டும்”//

//“இன்று முதுமையில் தள்ளாடித் தள்ளாடி வாழ்வைக் கடத்திக் கொண்டிருக்கும் கவிஞர் சலீமுடன் உறவாடிக் கொண்டிருப்பது வறுமை மட்டுமே.”//

//“பாடகரோ கலைஞரின் தயவில் சென்னையின் சொகுசுப் பகுதி பங்களாவில் வாசம்”//

//“ஆக மேற்படி குறிப்பிலிருந்து புலவர் ஆபிதீன் கொழும்பில் வாழ்ந்தவர் என்பது புரிந்திருக்கும். அதுவும் எங்கே? வளமிகு வாழைத்தோட்டமே.”//

//“புலவர் ஆபிதீனின் பங்களிப்புகள் பற்றி தமிழகப் பதிப்பகமொன்றுக்கு ஆய்வுநூல் எழுதிக் கொண்டிருக்கின்றேன். அன்னார் பற்றி ஒருசிறு வாழ்க்கைக் குறிப்பை வாரமஞ்சரியில் தர ஆவலாக உள்ளேன்.”//

ஆக இறுதியில் அவர் வைத்த குற்றச்சாட்டு வாயிலாக எழுத்தாளருடைய நோக்கத்தை நாம் புரிந்துக் கொள்ள முடிகிறது. புலவர் ஆபிதீனை பற்றிய அவரது நூலை விளம்பரப் படுத்த வேண்டி நாகூர் ஹனிபாவை கடுமையாக விமர்சித்தார் என்பதை நாம் புரிந்துக் கொள்ள முடிகிறது. அவருடைய கட்டுரையில் ஏகப்பட்ட முரண்கள் இருக்கின்றன. “முதுமையில் சலீம் அவர்கள் வறுமையில் உழன்றுக் கொண்டிருக்கிறார்” என்று அப்போது இலங்கையில் வசித்த அவருக்கு தவறான தகவல் தரப்பட்டுள்ளது. இறைவன் புண்ணியத்தில் சலீம் மாமாவும் அவருடைய வாரிசுகளும் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். சலீம் மாமா வறுமையில் உழலவில்லை.

மக்கள் திலகத்திற்காக எழுதப்பட்ட பாடல்களை “எம்.ஜி.ஆரின் கொள்கைப் பாடல்கள்” என்றும். நடிகர் திலகத்திற்காக எழுதப்பட்ட பாடல்களை “சிவாஜியின் தத்துவப் பாடல்கள்” என்றும் எழுதும்போது, இசைமுரசுக்காக எழுதப்பட்ட பாடல்களை “ஹனீபாவின் பாடல்கள்” என்று அழைப்பதில் என்ன தவறு?

நாகூர் ஹனிபா அவர்கள் ஒவ்வொரு பாடலின் போதும் ஒரு சிற்றுரை நிகழ்த்துவார். யாரெழுதிய பாடல், எந்த சூழ்நிலையில் எழுதப்பட்ட்து, எப்போது இசைத்தட்டு வெளியாகிறது போன்ற விவரங்கள் அதில் அடங்கியிருக்கும் . மற்ற பாடகர்களிடம் இல்லாத பழக்கம் அது. இறுதிநாள் வரை புலவர் ஆபிதீனை தனது “குருநாதர்” என்றே அழைத்து வந்தார். எனவே பாடல் எழுதிக் கொடுத்தவரை அவர் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கவில்லை என்பதெல்லாம் பொருந்தாத வாதம்.. கோரஸ் பாடியவர்களைக்கூட அவர் மேடையில் குறிப்பிட்டுச் சொன்னதுண்டு. .

அவர் பாடிய அனைத்து இசைத்தட்டுகளிலும் பாடலை எழுதியது யார் என்ற விவரங்கள் இருக்கும்..

ரத்த வாந்தி எடுத்து இனிமேல் பாடக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியபோதும் கூட வாழ்நாளெல்லாம் மூச்சுப் பிடித்துப் பாடி தன் வெண்கலக்குரலால் தமிழர் இதயங்களில் நிறைந்து நின்ற அவரை தரக்குறைவாக எழுதியவர்களின் செயல் ஒரு கரும்புள்ளி என்றுதான் நான் சொல்வேன்

 

சிவாஜி கணேசனும் நீதிபதி இஸ்மாயிலும்


ஏ.பீம்சிங் இயக்கத்தில் 1961-ஆம் ஆண்டு சிவாஜி நடித்து வெளியான படம் “பாவமன்னிப்பு. அதில் நாகூர் ஹனிபா, டி.எம்.செளந்தரராஜனுடன் இணைந்துப் பாடிய “எல்லோரும் கொண்டாடுவோம்” என்ற பாடல் எல்லோருக்கும் நினைவிருக்கும். சிவாஜி கணேசன் முஸ்லிம் பாத்திரமேற்று மிகச் சிறப்பாக நடித்திருப்பார்.

உண்மையில் இப்படத்தின் மூலக்கதை நடிகர் சந்திரபாபு எழுதியது. தான் கதாநாயகனாக நடிக்க வேண்டி “அப்துல்லா” என்ற பெயரில் தானெழுதி வைத்த கதையை இயக்குனர் ஏ.பீம்சிங்கிடம் சென்று கதை சொன்னார். அவரும் சம்மதிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சந்திரபாபுவே நடித்தார். கிட்டத்தட்ட 3,000 அடி எடுத்த பிறகு பீம்சிங்குக்கு ஒரு சந்தேகம் வந்தது. கதாநாயகனாக சந்திரபாபு நடித்தால் படம் ஓடுமா என்று.

சிவாஜி கணேசனின் சகோதரர் வி.சி.சண்முகத்தின் திருமண விழாவில் கலந்துக் கொள்ள பீம்சிங் செல்கிறார். அச்சமயம் சிவாஜி கணேசனை சந்தித்து இப்படத்தில் அவரே கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். கதையும் பிடித்துப் போகவே சிவாஜியும் சம்மதிக்கிறார். இதற்கிடையில் ‘ஜென்டில்மேனான’ சந்திரபாபுவும் பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்து இந்த மாற்றத்துக்கு சம்மதிக்கிறார். படத்தில் “கதை” புத்தா பிக்சர்ஸ் குழுவினர் என்றுதான் காண்பிப்பார்கள். சந்திரபாபு பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும்.

அக்கால கட்டத்தில் சந்திரபாபுவும் சாதாரண நடிகர் அல்ல. சிவாஜிக்கு நிகராக சம்பளம் வாங்கியவர். இன்னும் சொல்லப்போனால் “சபாஷ் மீனா” படத்தில் சிவாஜியை விட ஒரு ரூபாய் கூடுதலாக சம்பளம் வேண்டும் என்று நிர்ப்பந்தித்து வாங்கியவர் “சபாஷ் மீனா” திரைப்படம் பாவமன்னிப்பு வெளிவருவதற்கு மூன்று ஆண்டுகள் முன்பே வெளிவந்த படம்.

“பாவமன்னிப்பு” படத்தை பிரமாண்டமாக விளம்பரம் செய்ய ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்து, சென்னை சாந்தி தியேட்டருக்கு மேலே AVM என்று எழுத்துடன் பறக்கவிடப்பட்ட ஹைட்ரஜன் பலூன் நிகழ்வு 50+ ஆசாமிகளுக்கு நன்றாக நினைவிருக்கும். சிவாஜிக்கு சொந்தமான “சாந்தி” திரையரங்கில் திரையிடப்பட்ட முதற்படம் “பாவமன்னிப்பு”.

பொதுவாக தமிழ்த் திரைப்பட உலகில் முஸ்லிம் பாத்திரம் என்றாலே “நம்மள்கி”, “நிம்மள்கி” என்று மார்வாடி போன்றுதான் டமில் பேச வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

முஸ்லிம் பாத்திரம் பெரும்பாலும் சல்வார் கமீஸ் அணிந்து, கூம்பு தொப்பியணைந்த, ஆஜானுபாகுவான நெட்டை ஈட்டிக்காரனாக இருப்பார். “அரே.. சைத்தான் கி பச்சா” என்று ஒரு குச்சியைக் கையில் வைத்துக் கொண்டு தெருவெல்லாம் கடன்காரனை விரட்டுவார். கடன்காரரும் தலை தெறிக்க ஓடுவார்.

சினிமாவில் முஸ்லிம் பாத்திரங்கள் என்றால் ஒருசில குறிப்பிட்ட தொழில் செய்பவர்களாக மட்டுமே காட்டப்படுவார்கள்.

தலையில் வலைப்பின்னல் வெள்ளைத் தொப்பி, கழுத்தில் தாயத்து, கைவைத்த பனியன், இடுப்பில் அகலமான பச்சை நிற பெல்ட் அணிந்திருந்தால் அவர் கசாப்புக் கடைக்காரர். சாதாரண நேரத்திலும் அவர் கசாப்புக் கத்தி கையுமாகத்தான் நடமாடுவார்.

முஸ்லிம் கதாபாத்திரமென்றால் அடிக்கொரு தரம் “அச்சா.. அச்சா” என்று சொல்ல வேண்டும்., திடீரென்று சம்பந்தம் சம்பந்தமே இல்லாமல் “அரே அல்லா” என்று நீட்டி முழங்க வேண்டும்.

அதே கெட்டப்பில் நீளமான தாடி வைத்துக்கொண்டு, கழுத்தில் மலைப்பாம்பு போல ‘இஞ்ச் டேப்பு’ தொங்கினால் அவர் தையற்கடை பாய்.

அதே கெட்டப்பில் கழுத்தில் மணியெல்லாம் அணிந்துக்கோண்டு, பச்சை நிற சால்வை போட்டுக்கொண்டு, கையில் குமைஞ்சான் சட்டியோடு கடை கடையாக, புகை மண்டலம் சூழ யாராவது அலைந்தார் என்றால் அவரும் முஸ்லிம் குணச்சித்திர பாத்திரம்.

மணிரத்தினம் படமென்றால் அந்த முஸ்லிம் தீவிரவாதியாக இருப்பான், பாகிஸ்தான் தீவிரவாதியுடன் “ஒயர்லெஸ்ஸில்” பேசுவான்.

வயதான முதியவர் முஸ்லிம் பாத்திரம் என்றால் அவருக்கு நீளமான தாடி இருக்கும்; ஆனால் மீசை முழுவதுமாக மழித்திருப்பார். ஆனால் எல்லோரும் தமிழை கடித்துக் குதறிதான் பேசுவார்கள்.

“நிம்பள் எங்கே போறான்?” “நம்மள்கி வாணாம்” “நம்பள் நமாஸ் படிக்கப் போறான்” என்றுதான் பெரும்பாலான முஸ்லிம் கேரக்டர்கள் பேசுவார்கள். ஒருவர் கூட தூயதமிழ் பேச மாட்டார்கள்.

தமிழகத்தில் பிறந்த ஒவ்வொரு இந்துமதச் சகோதரனுக்கும் நிச்சயமாக ஒரு முஸ்லிமாவது தன் வாழ்க்கையில் இணைபிரியாத நண்பனாக இருப்பான். ஒன்றாகவே உண்பார்கள், ஒன்றாகவே பழகுவார்கள். இவன் அவன் வீட்டுக்குச் செல்லப்பிள்ளையாக இருப்பான். அவன் இவன் விட்டுக்குச் செல்லப்பிள்ளையாக இருப்பான். நான் சொல்வது எதார்த்தமான நிஜவாழ்க்கை. அவர்கள் எல்லோரும் நல்ல தமிழில் உரையாடுபவர்களாகத்தான் இருப்பார்கள். தன் முஸ்லீம் நண்பன் வானத்திலிருந்து தனியாக குதித்து வந்தவனல்ல என்ற உண்மை எல்லோருக்கும் தெரியும்.

“உங்கள் முஸ்லிம் நண்பர் “நம்மள்கி.. நிம்மள்கி” என்றுதான் தமிழ் பேசுவாரா?” என்று யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். “யோவ்! நீ லூசா?” என்று திருப்பிக் கேட்பார்கள்.

நீதிபதி நாகூர் மு.மு.இஸ்மாயில் பற்றி எல்லோரும் அறிந்து வைத்திருப்பார்கள். கம்பராமாயணத்திற்கு அவர் ஒரு அத்தாரிட்டி. “பாவமன்னிப்பு” படத்தில் சிவாஜி கணேசனுக்கு இளைஞர் வேடம். சிவாஜியைப் பற்றி எல்லோருக்கும் நன்றாகத் தெரியும் அவர் ‘அல்வா’ போன்றவர். பாத்திரத்தோடு ஒன்றிப் போய்விடுவார்.

இப்படத்தில் முஸ்லிம் வாலிபராக பாத்திரம் ஏற்றிருக்கும் சிவாஜி கணேசனுக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. அதாவது, இந்தப் பாத்திரத்தை ஏற்று நடிக்கையில் எப்படி பேசுவது? முஸ்லிம் என்பதால் தூய தமிழில் பேச வேண்டுமா அல்லது “பட்லர் இங்கிலீஷ்” போன்று “பட்லர் தமிழில்” பினாத்த வேண்டுமா? இந்த சந்தேகத்தை யாரிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்வது?

சிவாஜிக்கு இப்போது நீதிபதி மு.மு.இஸ்மாயில் ஐயா ஞாபகம்தான் வந்தது. அவரிடம் சென்று கேட்கிறார். “ஐயா நான் முஸ்லிம் இளைஞர் பாத்திரம் எற்று நடிக்கின்றேன். இந்த வேடத்திற்கு ஏற்றார்போல் ‘ஸ்லாங்காக பேச வேண்டுமா அல்லது நல்ல தமிழிலேயே பேச வேண்டுமா?

பொறுமையாக கேட்ட நீதியரசர் சொன்னார் “முஸ்லிம் பாத்திரங்களில் நடிக்கும்போது தாராளமாக எல்லோரும் உரையாடுவதுபோல இயல்பாகவே நீங்க பேசலாம். நல்ல தமிழில் பேசுவது எங்கள் சமுதாயத்திற்கு நீங்கள் செய்கிற பெருமை” என்றார்.

நெகிழ்ந்துப்போன சிவாஜி கணேசன் அப்படியே செய்கிறேன் என்று நன்றி பெருக்கோடு கூறினார்.