RSS

அந்த நாள் ஞாபகம் – கவிதை நூல்

21 Oct

abdul_qayyum_-_1.jpg

தமிழகத் தலைநகர் சென்னையில் தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் தலைமையில் மே, 2007  25, 26, 27  தேதிகளில் நடைப்பெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய ஏழாம் மாநாட்டில் வெளியிடப்பட்ட கவிதை நூல்

 தலைப்பு : அந்த நாள் ஞாபகம்

நூலாசிரியர் : அப்துல் கையூம், த.பெ.எண் : 1341, மனாமா, பஹ்ரைன்

மின்னஞ்சல் : vapuchi@gmail.com, vapuchi@hotmail.com

வெளியீடு :  சுடர், 57,  லெமர் வீதி,  காரைக்கால்,  புதுவை மாநிலம்

அலைபேசி : 9444176646

  nagore-new

  

சமர்ப்பணம்

சமர்ப்பணத்தை சாதாரணமாக நான்கே வரிகளில் வடித்து விடுவார்கள். இதில் அது சாத்தியமில்லை.
சொந்த மண்ணில் நான் சந்தித்த அந்த வித்தியாசமான மனிதர்களுக்கு இந்நூலை அர்ப்பணம் செய்கின்றேன்.
எத்தனையோ மனிதர்களை அன்றாட வாழ்க்கையில் நாம் எதிர்க் கொள்கிறோம்.
அத்தனைப் பேர்களும் ஒட்டு மொத்தமாக நம் மனதில் நிலைப்பெற்று விடுவதில்லை.
ஒரு சிலர் மட்டும் ஏனோ நம்முள் ஒரு நிரந்தர தாக்கத்தை ஏற்படுத்திச் சென்று விடுகிறார்கள்.
இவர்கள் மறக்க முடியாத மாறுபட்ட கதாபாத்திரங்கள்.  இவர்களில் பலர் நம்மை விட்டு மறைந்து போயிருக்கலாம். ஆனால் அவர்களின் நினைவுகள் நம்மைத் துரத்தி வரும்.
பேருந்துகளின் ஓசையை வைத்தே அது எந்த நேரத்துக்கு வரும் எந்த ஊருக்குப் போகுமென்று துல்லியமாக கணக்கிட்டுச் சொல்லும் கண்பர்வை இழந்த சக்தி விலாஸ் நாகப்பன்.
அஞ்சல்துறை ஊழியர்களுக்கு அழகிய முன்மாதிரியாய் சமுதாயத்தில் ஒரு அங்கமாகி விட்டிருந்த தபால்காரர் பக்கிரிசாமி.
துணியை வெளுக்க வந்து என் மனதை வெளுத்துச் சென்ற சுயமரியாதைச் சிந்தனைவாதி சின்னத் தம்பி
அணியவேண்டிய சட்டையை அக்குளில் இடுக்கிக்கொண்டு ஹாயாய் பவனிவந்து நம் கவனத்தை ஈர்த்த கப்பவாப்பா.
தைக்கால் திடலில் பலநாட்கள் மிதிவண்டி ஓட்டிச் சாதனை புரிந்த பெண் வீரங்கனை சபுரா.
ஆயிரம் எதிர்பார்ப்போடு அன்றாடம் அஞ்சல் துறை அலுவலகத்துக்கு முன் கூட்டியே வந்து மகாத்துக் கிடக்கும் அதே பழக்கப்பட்ட முகங்கள்
நாகூரில் தடுக்கி விழுந்தால் ஒரு பாடகன் அல்லது கவிஞன் காலில்தான் விழவேண்டும் என்றொரு கூற்று உண்டு.
மளமளவென்று மாற்றங்கள் காணும் பூலோகத்தில் மாறாத பண்புகளோடு மனதில் இடம் பெற்று விடும் மனிதர்களோடு இந்த ஊர் மகத்தாக திகழ்கிறது என்றால் அது இந்த மண்ணின் மகிமை.
அப்துல் கையூம்
பஹ்ரைன்

vapuchi@hotmail.com

vapuchi@gmail.com

நாயனங்கள் துயிலெழுப்பும்
நகரா முழங்கும்
நகர்கேட்கும் அதிர்வேட்டில்
நாட்கள் புலரும்

சாயங்கள் கறைபடுத்தும்
புறாக்கள் பறக்கும்
சாந்தமிகு பாங்கோசை
தூக்கம் கலைக்கும்

தூயதமிழ் சொல்விளங்கும்
தொன்மை துலக்கும்
தொன்றுதொட்ட வழக்கங்கள்
தொடர்ந்தே தழைக்கும்

தாயகத்து ஊர்களிலே
தனித்துவம் படைக்கும்
தகைசேர்நல் நாகூர்நம்
நெஞ்சினில் நிலைக்கும்

    

நாவல்மரம் நிறைந்திருந்த
நாவல் காடு
நாகர்களும் வசித்ததாக
குறிப்பிடும் ஏடு

நாவலர்கள் வாழ்ந்ததினால்
நா-கூர் என்று
நற்றமிழில் பெயர்வைத்தார்
நல்லோர் அன்று

காவலென வீற்றிருக்கும்
அரப்ஷா தைக்கால்
கடலோரம் தவமிருந்த
சில்லடி மேடை

கூவினங்கள் குலவுகின்ற
வஞ்சித் தோப்பு
குளங்களுக்கு அகழிவழி
காணும் இணைப்பு

  

தொல்பொருளாய் புதையுண்ட
மேல நாகூர்
தொடுந்தூரம் வீற்றிருக்கும்
மேல வாஞ்சூர்

கல்தொலைவில் தெற்கினிலே
பால்பண்ணைச்சேரி
கடலிருக்கும் திசைஇவைகள்
நாற்புற எல்லை

பல்வேறு பெருமைகளில்
கைவினைப் பொருட்கள்
பனையோலை கைவிசிறி
தடுக்கு கூடை

வெல்வதற்கு வாழ்வினிலே
வழிகள் காட்டும்
விதவிதமாய் குடிசைத்தொழில்
வணிகம் ஈட்டும்

  

காலையிலே கூவிவிற்கும்
கோதுமை கஞ்சி
கமகமக்க தூக்கில்வரும்
சுக்குக் காப்பி

மாலைநேர அடிக்கடைகள்
மலிந்தே இருக்கும்
மணங்கமழும் தின்பண்டம்
மனதை இழுக்கும்

சாலையோரம் கொத்துகின்ற
புறோட்டா சப்தம்
சங்கீத தாளமென
ஸ்வரமாய் ஒலிக்கும் 

காலங்கள் மாறிடினும்
மாறா திருக்கும்
கலையாத ஞாபகங்கள்
கனிவாய்ச் சுரக்கும்

  

விண்முட்டும் கொடிமரங்கள்
வியந்திட வைக்கும்
விசையின்றி ஏற்றிவைத்த
விவரம் வியக்கும்

கண்பார்வை படும்தூரம்
காட்சிகள் கொடுக்கும்
காண்போரை கோபுரங்கள்
புருவம் உயர்த்தும்

கிண்ணமென கவிழ்ந்திருக்கும்
தர்கா கலசம்
கிழக்குவாசல் குளக்கரையில்
பிம்பம் பதிக்கும்

மண்வாசம் காத்துநிற்கும்
பாரம் பரியம்
மனதில்அசை போடுகையில்
மகிமை புரியும்

  

சங்கத்தமிழ் வளர்த்ததிந்த
புலவர் கோட்டை
சங்கீதம் படித்தவர்கள்
இசைத்தார் பாட்டை

மங்காத புகழ்இந்த
மண்ணின் வாசம்
மலையாள தேசமும்இதன்
மகிமை பேசும்

வங்கக்கடல் தாலாட்டும்
வளங்கள் பெருக்கும்
வந்தாரை வாழவைக்கும்
வாழ்வை உயர்த்தும்

சிங்கைவரை பேரோங்கும்
சிறப்பை உணர்த்தும்
சிங்காரச் சிற்றுaர்நம்
சிந்தை மகிழ்த்தும்

  

மரபுவழி மாறாத
பவுன் ஆபரணம்
மங்கையரின் பாதங்களiல்
பூட்டும் காப்பு

கரங்களுக்கு அழகூட்டும்
பொன்மணி பவளம்
கழுத்தினிலே தகதககக்கும்
காசு மாலை

சிரம்தனிலே நெத்திச் சுட்டி
முத்துப் பட்டம்
சீமாட்டி அணிகின்ற
கவர்னர் மாலை

அரபுமொழி கலந்தவண்ணம்
அருந்தமிழ் உரைக்கும்
அணங்குகளiன் சம்பாஷணை
அசர்ந்திட வைக்கும்

  

தேத்தண்ணி என்றுரைத்தால்
தேயிலைத் தண்ணீர்
தெளிந்திருக்கும் மிளகுரசம்
மொளவுத் தண்ணீர்

சோத்துக்களறி எனப்பகர்ந்தால்
விருந்தென்று அர்த்தம்
சுவைகுழம்பை ஆணமென
சொற்கள் திருத்தும்

ஆத்திரத்தின் வசைமொழிகள்
காதை கூசும்
ஆக்ரோஷ ஏசுதலும்
ஆசிகள் கூறும்

கோத்திரத்தில் சம்பந்தம்
செய்திட விரும்பும்
குலப்பெருமை காத்துவரும்
சோனகர் சமூகம்

  

கடைத்தெருவில் வறுத்தெடுக்கும்
கடலையின் வாசம்
கமகமக்கும் நெடுந்தூரம்
காரம் தூக்கும்

கடற்கரையில் நடைபழகும்
காளையர் கூட்டம்
காலார போவதிலே
காட்டும் நாட்டம்

வடைபோன்ற வடிவமைந்த
வாடா சுவையை
வாழ்த்துதற்கு வாயார
வார்த்தைகள் இல்லை

விடைகாண முடியாத
வேரதன் தாக்கம்
விழுதுகளாம் நம்மனதில்
விதைக்கும் ஏக்கம்

  

மரைக்காயர் மாலுமியார்
சாயபுமார்கள்
லெப்பைமார் ராவுத்தர்
தக்கண மக்கள்

கரையோர நகர்தனிலே
கலந்துவாழும்
காட்சிதனை காண்பதற்கு
கண்கள் வேண்டும்

திரைகடலைத் தாண்டியும்நல்
திரவியம் தேடி
தேசங்கள் புலம்பெயர்ந்தார்
திசைபல ஓடி

கரைகடந்து பொருளீட்டி
காலம் ஓட்டி
கடைசியிலே திரும்பிடுவார்
பிறந்தகம் நாடி

  

இறவாறம் தாழ்வாரம்
முற்றம் கூடம்
இயற்கையான சூழலோடு
கிணறு கொள்ளை

வரவேற்க பிரத்யேக
யானீஸ் அறை
வந்தாரை அமரவைக்க
வீட்டுத் திண்ணை

அரணாக காணுகின்ற
தூண்கள் தேக்கு
அழகான கலாரிகளால்
அமைத்திடும் போக்கு

பரம்பரையாய் கைமாறும்
பலகட்டு மனைகள்
பார்ப்போரை பிரமிக்கும்
பழம்பெருங் கலைகள்

  

கூழ்கஞ்சி குடித்தாலும்
குறையா செழிப்பு
கொள்கைகளை கைவிடாது
சடங்குகள் களிப்பு

தாழ்வான நிலைகளினை
வைத்ததன் நோக்கம்
தலைதாழ்த்தி நடக்கின்ற
தத்துவம் உணர்த்தும்

வாழ்வான வாழ்வுதனை
வாழ்ந்தார் நன்று
வாணிபத்து கப்பல்களும்
வைத்தார் அன்று

ஆழ்ந்ததொரு தொழிற்பக்தி
அதனால் சிறந்தார்
ஆங்காங்கு ஏற்றுமதி
அவனியில் புரிந்தார்

  

ஒற்றையிலே போகாத
மாதர் பிராட்டி
உடற்மறைக்க அணிகின்ற
வெண்துப்பட்டி

உற்றவரின் துணையோடு
வெளியே செல்லும்
உயர்ந்தகலாச் சாரத்தின்
உறைவிடமன்றோ?

கற்றவரும் பின்பற்றும்
கோஷா ஒழுக்கம்
கரியமணி தமிழ்ப்பண்பாய்
காட்சிகள் கொடுக்கும்

பற்றுதலை உற்றாய்ந்தால்
பழமைகள் விளங்கும்
பன்னாட்டு கலாச்சாரப்
பண்புகள் உரைக்கும்

  

தித்திப்பு பசியாறல்
உடுப்பு என்று
தெள்ளுதமிழ் செப்புகையில்
திகட்டா தினிக்கும்

துத்திப்பு மூடிவைத்த
மறவை சீர்கள்
துணிகளிலே கண்ணாடி
கைவினை ஜொலிக்கும்

பத்தாயம் நெல்நிறைக்க
பெரிதாய் இருக்கும்
“பசியாறிப் போங்க” வெனும்
பைந்தமிழ் இனிக்கும்       

சத்தான பழமொழிகள்
சரளம் தெறிக்கும்
சாதிசன பெண்டுகளiன்
விகடம் அசத்தும்

  

சாதத்தை சோறென்பார்
கர்ப்பிணிக்கு சூலி
சாவியினை திறப்பென்பார்
சோர்வுக்கு அசதி

மாதத்தை கணக்கிடுதல்
பிறையினை வைத்து
மாறாத வழிமுறையில்
மகத்துவம் இருக்கு

வேதத்தை கற்பிக்கும்
மதரா ஸாக்கள்
வெண்பலகை மார்ஏந்தி
விரையும் சிறுவர்

மூதாதையர் தந்த
முறைபேணல்கள்
முழுமூச்சாய் கடைப்பிடிக்கும்
முஸ்லிம் மக்கள்

  

நாலாம் நக்கீரரெனும்
வா.குலாம் காதிர்
நற்றமிழர் மரபினிலே
நாவலர் ஆரிப்

காலங்கள் கடந்து நிற்கும்
ஆபிதீன் பாட்டு
காதற்காவியம் புனைந்த
சித்தி ஜுனைதா

நால்மணி மாலைகள்தந்த
பக்கீர் முகைதீன்
நாடகங்கள் அரங்கேற்றிய
கோசா மரைக்கார்

ஆலிமென போற்றப்படும்
அப்துல் வஹ்ஹாப்
அவரவர்தம் படைப்பினிலே
ஆயிரம் புதுமை

  

அன்னம் விடு தூது விட்ட
அலிமரைக் காயர்
ஆன்மீக னூல் படைத்த
பாக்கர் சாகீப்

கன்னலெனும் கவிதை தந்த
பக்கீர் மஸ்தான்
கலைத்துறையில் தடம்பதித்த
தூயவன், ரவீந்தர்

நன்னெறிகள் வாணிபத்தில்
நவின்ற நெயினார்
நடமாடும் தகவல்மையம்
ஜாபர் மொய்தீன்

அன்றிருந்த புலவர்களுள்
அருட்கவி இருந்தார்
அழகுநடை தவழுகின்ற
அற்புதம் படைத்தார்     

  

மும்மணிக்கோவை தந்த
செவத்த மரைக்கார்
முகம்மது புலவர் புனைந்த
ஊஞ்சல் பாட்டு

செம்மொழியில் அப்பாசு
நாடகந்தன்னை
சிங்கைவரை அறியவைத்த
வாஞ்சூர் பக்கீர்

கம்பனது காவியத்தை
கரைத்து தந்த
கண்ணியம்சேர் இஸ்மாயீல்
பிறந்த பூமி

எம்மவரின் புகழ்பாட
பட்டியல் நீளும்
ஏடுகளiல் இலக்கியத்தில்
இவர்புகழ் வாழும்

  

தீன்மார்க்கப் பாடலுக்கு
நாகூர் ஹுனிபா
தமிழிசைசங் கீதமெனில்
வித்வான் காதிர்

தேனிசையாம் பாடலுக்கு
நாகூர் சலீம்
திறனாய்வில் பெயர்பதிக்கும்
நாகூர் ரூமி

கானங்களில் பொருளுரைத்த
எஹியா மரைக்கார்
காலங்களை கடந்துநிற்கும்
பூபதி தாசர்

வானளாவும் தமிழ்மொழியில்
வகித்தார் பங்கு
வையகத்தில் பெயர்நிலைக்க
வாழ்ந்தார் இங்கு

  

குளங்களினை கணக்கெடுத்தால்
முப்பத் தாறு
கொல்லைக்குப் போவதென்றால்
அர்த்தம் வேறு

குளிர்காற்றை வருவிக்கும்
காற்றுப் பந்தல்
கோடையிலே கதகதப்பை
களைந்திடும் தென்றல்

நளபாகம் மிளிருகின்ற
மறவை சோறு
நால்வராக உண்பதுவோ
அதுஒரு பேறு

உளங்குளிர “சீதேவி”
என்னும் போது
உவக்காத நெஞ்சங்கள்
உலகினில் ஏது?  

  

வாங்கனி போங்கனியென்று
விளிக்கும் பாஷை
வாய்மணக்க பேசுவது
இவர்களுக் காசை

தூங்காத ஊரென்றால்
மிகையாகாது
துறுதுறுஊ ரில்இங்கு
தூக்கம் ஏது?

ஆங்காங்கு காணுகின்ற
யாசகர் கூட்டம்
அலங்கார வாசலிலே
அடைவார் தஞ்சம்

ஏங்குகின்ற எம் மனது
இன்பம்  கொள்ளும்
இதமான ஞாபகங்கள்
இதயம் அள்ளும்

  

வேண்டாத பொருட்களுக்கு
‘அகடம் பகடம்’
வெளியூரார் அறியாத
மீன்கடை பேரம்

காண்டா என்றழைப்பதுவோ
உருளைக் கிழங்கு
கால்பந்து ஆட்டமெனில்
வழியும் அரங்கு

ஆண்டாண்டு கடந்தாலும்
அகன்றி டாது
அன்றாடம் ஊர்போற்றும்
அரும் பண்பாடு

ஆண்தகையின் பெருமைமிகு
அடக்க ஸ்தலம்
அழியாத புகழ்கூறும்
அகிலம் எங்கும் 

  

அயல்நாட்டு பொருட்களுக்கு
அபரித நாட்டம்
அதைவாங்க வருகின்ற
அயலூர் கூட்டம்

புயல்வந்தால் இந்நகரை
முதலில் தாக்கும்
புரியாத புதிரன்றோ
இதுநாள் வரைக்கும் ?

இயல் இசைக்கு
இவர்காட்டும் ஈடுபாடு
இசைமழையில் மூழ்கிடுவார்
இது கண்கூடு

வயல்சூழ்ந்த பசும்பரப்பு
வளைக்கரம் அணைக்கும்
வளமான பூமியிலே
வாழ்வது பிடிக்கும்

  

ஊரோரம் வடக்கினிலே
காட்டுப் பள்ளி
ஒதுக்குபுறம் தெற்கினிலே
கொல்லம் பள்ளி

சீரமைத்த அழகோடு
செய்யது பள்ளி
சிறப்போங்கும் ஏழுலெப்பை
எழுப்பிய பள்ளி

ஆர்க்காட்டு அரசரது
நவ்வாப் பள்ளி
ஆண்தகையின் பெயரினிலே
மொய்தீன் பள்ளி

மார்தட்டி சொல்ல மதார்
மரைக்கார் பள்ளி
மாண்புகளை போற்றிடுவோம்
மகிமையைச் சொல்லி

  

நற்பணிகள் புரிவதற்கு
மன்றம் உண்டு
நலிந்தோரை உயர்த்தும் பைத்
துல்மால் உண்டு

முற்போக்கு சிந்தனையை
விதைப்போர் என்று
மோதலினை வளர்ப்பதற்கு
முனைவோர் உண்டு

விற்பனைக்கு வெள்ளியிலே
தகடுகள் செய்து
வினைதீர்ப்போம் எனக்கூறி
ஏய்ப்போர் உண்டு

  

சிலம்பெடுத்தால் சிலிர்க்கவைக்கும்
செய்யது மெய்தீன்
தீப்பந்தம் விளையாட்டில்
அலியும் ஹுசைனும்

களமிறங்கி கலக்கவைக்கும்
குட்டை நானா
கால் எம்பி மேல்பறக்கும்
உமரும், சித்தீக்

இளம்வயதில் எனைக்கவர்ந்த
மொம்லி காக்கா
இயல்பாக சண்டையிடும்
பக்தாத் நானா

கலையுலகில் புகழடைந்த
நாகூர் பரீத்
காலத்தை கடந்துநிற்கும்
கண்ணியவான்கள்

  

தொடர்வண்டி மார்க்கத்திற்கு
இதுதான் எல்லை
தொடர்வதற்கு இதைத்தாண்டி
தடங்கள் இல்லை

கடலோரம் வாழுகின்ற
வலைஞர் சமூகம்
கஷ்டமெனில் கரங்கொடுக்கும்
உறவின் சுமூகம்

மடமொன்றை தந்தவரோ
பழனி யாண்டி
மனிதநேயம் மேம்படுதே
வேற்றுமை தாண்டி

இடம்பெயர்ந்து வருபவர்கள்
எண்ணில் உண்டோ?
இருகைகள் நீட்டுவது
இவ்வூர் அன்றோ?

  

வளர்த்துவிட்ட பாடகர்கள்
வகையாய் நூறு
நமன்விரட்ட பாடியவர்
பொதக்குடியாரு

சாகித்ய கீர்த்தனைக்கு
இசைமணி யூசுப்
சாதகங்கள் புரிவதற்கு
காரை தாவூத்

ராகமழை பொழிகின்ற
கவ்வாலிகள்
ரம்மியமாய் பாடுவதில்
வல்லுனர்கள்

ஆகமொத்தம் அனைவரது
ஆற்றலை யாவும்
அரவணைத்த பெருமைஇந்த
மண்ணைச் சாரும்

  

கல்மண்டபம் அருகினிலே
லாந்தர் விளக்கு
காலத்தின் சுவடாக
இன்னும் இருக்கு

சில்லென்று வீசுகின்ற
தென்றல் காற்றில்
சீராக கடல்கலக்கும்
நதிவெட்டாறு

இல்லைஇங்கு உணவிற்கு
என்றும் பஞ்சம்
என்பதினால்தானோ இங்கு
யாசகர் தஞ்சம்?

நல்லிணக்கம் பேணுகின்ற
நாகூர் போன்று
நானிலத்தில் வேறு ஒரு
நற்பதி ஏது?

  

சுங்குத்தான் குழல்ஊதி
சுட்டக் களிமண்
சூறாவளியாய் தாக்கி
சுருண்டிடும் குருவி

இங்கிருப்போர்க் கெத்தனையோ
பொழுது போக்கு
இதிலொன்று மினாரடியில்
திண்ணைப் பேச்சு

தங்குதடையின்றி பெண்கள்
பழமொழி  பகர்வார்
தகுந்தாற்போல் உவமையுடன்
தமிழ்ச்சொல் உதிர்ப்பார்

அங்கமதை அலங்கரிக்கும்
பத்தை கைலி
அதற்கேற்ற தாவணியாய்
மல்லிய பட்டீஸ்

  

காடையினை வளர்த்திடுவார்
சண்டைக்காக
காதினிலே ஊதுவது
மோதலுக்காக

ஜாடையாக பேசுதற்கு
பரிபாஷைகள்
ஜாதிக்கல் விற்பனைக்கு
விரல் சமிக்ஞைகள்

கூடையிலே வரும்போதே
பேரம் பேசி
கொண்டுபோகும் மீன்களுக்கு
போட்டா போட்டி

ஆடவர்கள் அணிவார்அது
கஞ்சி பராக்கு
அயல்மொழியின் தாக்கங்கள்
அளவின் றிருக்கு

  

இஞ்சிக்கொத்து ஈச்சங்கொட்டை
அலியத்தரம்
எதுநினைவில் வந்தாலும்
எச்சில் ஊறும்

பஞ்சுபோல கரைந்திடுமே
அதுபோணவம்
பலவண்ண அடுக்கினிலே
கடல்பாசியும்

எஞ்சிவைக்க மனமின்றி
எடுத்துச் சுவைக்கும்
இதமான பதச்சூட்டில்
வட்டில் ஆப்பம்

அஞ்சறை பணியானும் சுவை
நானா கத்தா
அத்தனையும் அனுபவிக்க
ஆசை வரும்

  

ஆச்சர்யக் குறியாக
ஆவ் கெச்சேனோ
அதிர்வுற்ற சொற்றொடராம்
ஆங் கெட்டேனோ

நாச்சியார் என்றிணைத்து
வைத்ததன் நோக்கம்
நற்றமிழர் பண்பாட்டில்
நனைந்ததன் தாக்கம்

பேச்சினிலே மூடிவைத்து
பேசுவ தில்லை
பிரியமுடன் உபசாரம்
அன்புத் தொல்லை

மூச்சிருக்கும் வரை
அந்த நினைவுகள்தொடரும்
முதுமையிலும் ஊர்நினைவு
மனதினில் படரும்

  

மூலிகைகள் வளருகின்ற
தர்கா தோட்டம்
முன்னூற்று அறுபதுநாள்
முழுவதும் கூட்டம்

கால்பதித்த பிரமுகர்கள்
கணக்கில் இல்லை
காணிக்கை சேருவதும்
குறைந்தது இல்லை

கேலியுடன் நையாண்டி
கிண்டல் செய்யும்
கிரித்துவத்தில் இவ்வூரில்
குறைச்சல் இல்லை

போலிகளும் இவ்வூரில்
பிழைப்பது உண்டு
பொட்டலத்து சர்க்கரையை
புனிதம் என்று

  

செவிவழியாய் கேட்கின்ற
தாலாட்டுக்கள்
சிந்தனையை தூண்டுகின்ற
ஞானப் பாடல்

கவிதைகளாய் பரிகாசப்
பாடல் கேட்கும்
கல்யாண வீட்டினிலே
களையே கட்டும்

குவிந்திட்ட உதடுகளீல்
குறவை சப்தம்
கொஞ்சுகின்ற தொனியினிலே
குரல்கள் ஒலிக்கும்

கவுதாரி, குயில், உல்லான்
உண்பதில் நாட்டம்
கோலாமீன் இரவில் வரும்
கூடிடும் கூட்டம்

மருத்துவருக்கில்லாத
மரியாதைகள்
மருந்துதரும் கம்பவுண்டர்
பெற்றார் அன்று

பரவலான புகழோடு
சொக்கலிங்கம்
பழகுதற்கு இனிமையான
எம்.என்.டாக்டர்

இரவுபகல் பாராத
இராமச்சந்திரன்
ஏழைகளின் அபிமானி
எம்.என் ஷாவாம்

சுறுசுறுப்பின் மறுவுருவம்
ராவ்ஜி என்பார்
சுதந்திரமாய் ராஜாங்கம்
நடத்திய காலம்

  

பதமான பால்கோவா
தம்ரூட் குலோப்ஜான்
பருத்திக்கொட்டை அல்வாவாம்
மைசூர் பாகு

விதவிதமாய் இனிப்புவகை
வியாபாரங்கள்
வெளிநாட்டி லிருந்தும்கூட
வரும் ஆர்டர்கள்

பதம்பாடும் கலைஒன்று
படைத்தார் அன்று
பாடிச்சென்ற நாவிதர்கள்
பலபேர் உண்டு

இதிகாசம் படைக்கின்ற
இனிய ஸ்தலம்
இனம்ஜாதி பாகுபாடு
கலையும் இடம்

  

தேப்பாவில் பரிமாறும்
வெற்றிலைப் பாக்கு
தோழர்களை கவரவிக்கும்
தோழம் பணம்

சாப்பிடும்முன் கைகழுவ
பாத்திரம் படிக்கண்
சபையினிலே சங்கையூட்டச்
செய்வார் முதற்கண்

ஜாப்தாவை சொல்வதற்கு
தேர்ச்சி பெற்றோர்
ஜாதகமே வைத்திருப்பார்
தலைமுறை அறிவார்

காப்பாற்றி வருகின்ற
மரபுகள் என்னே?
காலங்கள் கடந்தாலும்
தொடர்ந்திடும் பின்னே

  

நட்புக்கு இலக்கணமாய்
தோழை விடுதல்
நாகூரார் நற்பண்பின்
அடையாளங்கள்

தட்டையிலே சீர்வரிசை
பரிமாற்றங்கள்
தழைக்கின்ற சிநேகத்தின்
உதாரணங்கள்

கட்டிலுக்கு பவுன்என்ற
களிப்பும் உண்டு
கவுச்சுக்கு புலவுவிடும்
சடங்கும் உண்டு

பட்டப்பெயர் சூட்டுவதும்
தனியொரு குறும்பு
பரிகாசம் வெடப்பென்று
பழிப்பது இயல்பு

  

பார்ப்பனர்கள் கோலம்முதல்
பல்லாங்குழியும்
பரஸ்பரங்கள் ஆவதற்கு
படைத்திட்ட யுக்தி

ஊர்வலமாய் போவதற்கு
பக்கி வாகனம்
வட்டப்பறை முழக்கத்துடன்
வழங்கிடும் கானம்

நேர்த்தியான அலங்கரிப்பில்
திருமணவாளன்
நெற்றியிலே ஜிகினாவை
துடைத்திடும் தோழன்

பார்ப்போரின் மனதினிலே
பரவசம் ஊட்டும்
பாரம்பரிய வழக்கம்
பறைகள் சாற்றும்

  

பழந்தொட்டு சிராங் என்ற
பரம்பரை நுணுக்கம்
பாம்பரத்தை ஏற்றுகின்ற
பாரம்பரியம்

தொழுகின்ற நேரமெனில்
நாலா திசையும்
தொலைதூரம் கேட்கின்ற
பாங்கின் ஒலியும்

கிழந்தொட்டு சிறுவர்வரை
கைலிகள் அணியும்
காட்சிகளே ஊரெங்கும்
கண்ணில் தெரியும்

வழுவாத பண்பாடு
வாழ்த்திட வைக்கும்
வளமான நெறிமுறையில்
வாழ்க்கையே இனிக்கும்

  

மேகத்தை உரசுகின்ற
பெரிய மினாரா
மிடுக்காக பறக்கின்ற
கொடி பாவுட்டா

சோகத்தை பிழிகின்ற
ஷெஹ்னாய் ராகம்
சுகமான காற்றுவரும்
குளிர் மண்டபம்

பாகனவன் சைகையிலே
பணியும் யானை
பார்ப்போரை ஈர்க்கின்ற
காட்சிகள்தானே?

ஏகாந்தம் கமழ்கின்ற
சூழல் எங்கும்
ஏகனவன் அருள்மழையில்
இன்பம் பொங்கும்

  

ஒடுக்கத்து புதனென்றால்
நினைவுகள் மலரும்
ஓடிச்சென்ற காலங்களோ
உணர்வினைக் கிளரும்

கடற்கரையில் திரள்திரளாய்
களித்திடும் கூட்டம்
காளையர்கள் விளையாடும்
சடுகுடு ஆட்டம்

அடிக்கடைகள் வாசனையோ
ஆளையே தூக்கும்
எலந்தைவத்தல் வடுமாங்கா
எச்சில் ஊறும்

துடிப்பான இளரத்தம்
காட்டும் சேஷ்டை
தூள்பறக்க நண்பருடன்
புரியம் அரட்டை

  

வாணிபங்கள் செழித்துவந்த
வாணியத் தெருவு
வளையல்கடை லைன்தனிலே
யாத்ரிகர் வரவு

தானியங்கள் தேக்கிவைத்த
பண்டகசாலை
நெல்லுக்கடை நுழைவினிலே
செக்கு ஆலை

ஆனைகட்டி வைத்ததினால்
ஆனை முடுக்கு
அதனருகில் பழமைகூறும்
மீன்கடை முடுக்கு

யூனானி மருத்துவத்தில்
ஏற்றம் பெற்ற
எத்தனையோ பெயர்களiனை
ஏடுகள் காட்டும்

  

கல்யாண சமையலிலே
கலைமாமணிகள்
கடல்கடந்து சென்றுவந்த
பண்டாரிகள்

மெல்லவாயில் கரைகின்ற
உப்பு ரொட்டி
மிதமாக ஊறுகின்ற
சா(யா) ரொட்டி

சொல்லவொணா சுவையோடு
ஹாஜா கேக்கு
சுள்ளென்ற ஹேட்டுபாயி
பொறிச்ச குச்சி

எல்லோரும் விரும்புகின்ற
பறாட்டா உருண்டை
இதமான ஞாபகங்கள்
இனிமையை சேர்க்கும்

  

கந்தூரி உற்சவமோ
கலகலப்பூட்டும்
கால்மாட்டு வீதியிலே
கடைகள் முளைக்கும்

சந்துபொந்து யாவிலுமே
சந்தடி பெருகும்
சனங்களது வருகையினால்
சாலைகள் நிரம்பும்

பந்தலிலே கச்சேரி
பரவசம் கொடுக்கும்
பல்வேறு மொழிகளுமே
பரவாலாய் கேட்கும்

இந்தியாவின் கவனத்தை
இவ்வூர் ஈர்க்கும்
எண்திசையில் இருந்துவரும்
பக்தர்கள் கூட்டம்

  

சருமத்தை குணமாக்கும்
சோகை மருந்து
சக்திவிலாஸ் முத்திரையில்
தரமிகு சுருட்டு

உருசிதைந்த கார்களினை
ஒழுங்குச் செய்ய
ஒப்பற்ற பட்டறைஊர்
எல்லையில் உண்டு

அரபுத்தமிழ் என்றதொரு
எழுத்து வடிவம்
அரவணைத்து போற்றியதை
ஆராய்ந்தறிந்தோம்

சரித்திரத்தில் புகழ்பெற்ற
சாதனை வீரர்
சவுகத்அலி முஹும்மத்அலி
வந்தார் இங்கு

  

குன்றுபோன்ற வடிவமைந்த
நகரா மேடை
நாதமென ஒலித்திடுமே
அது மணிமேடை

தொன்றுதொட்டு சேவையிலே
முஸ்லிம் சங்கம்
தொண்டர்படை சேவையினை
காண்போம் எங்கும்

இன்றிமையா புகழ்கொண்ட
கௌதிய்யா சங்கம்
இணையற்ற சாதனைகள்
இயக்கிய அங்கம்

சென்றவிடம் யாவும் நல்ல
சிறப்புகள் ஈட்டும்
சீருடையில் பைத்துசபா
தப்ஸ்ஒலி கேட்கும்

  

மயில்நடனம் புரிவதற்கு
சுல்தான் என்பார்
மணவறைகள் அலங்கரிக்க
பக்ஷான் என்பார்

வெயில் தணிக்க நீர்தௌiக்க
காண்டா தண்ணீர்
விதவிதமாய் பந்தயங்கள்
விசித்திரம் என்பீர்

பயில்விக்கும் பாடசாலை
பலவும் உளது
பரிமாணம் காணாத
செட்டியார் ஸ்கூலு

துயில்காணும் நேரத்திலும்
தொடர்கதைபோன்று
தோன்றுகின்ற பழங்கதைகள்
துரத்துது இன்று

  

ருசியாக சமைப்பதற்கு
மெய்தீன் நானா
பிரியாணி என்றாலோ
யூசுப் அத்தா

விசேஷங்கள் யாவிற்கும்
விரைந்தோடுவார்
விருந்தோம்பல் புரிகின்ற
ஊர்மரைக்காயர்

கசங்காத மடிப்போடு
கைலிகள் சகிதம்
கண்டிப்பாய் புதுசபர் என
காண்பது சகஜம்

வசமாக்கும் மணத்தோடு
குண்டாச்சோறு
வறியோர்க்கு வழங்கிடுதல்
அதுபண்பாடு

  

சிங்கையிலே அரசியலில்
சிறப்பைப் பெற்றார்
செயல்வீரர் எனப்போற்றும்
அப்துல் ஜப்பார்

சங்கைமிகு நகரசபை
முன்னாள் தலைவர்
சாதனைகள் புரிந்தவரோ
ஜப்பார் மரைக்கார்

தங்குதடையின்றி வரும்
தமாஷ் பேச்சுக்கு
தந்திடுவோம் உதாரணமாய்
இஸட் ஜபருல்லா

எங்க வீட்டுப் பிள்ளையென
யாவரும் மெச்சும்
இளம்வயது நிஜாம்தன்னை
எங்ஞனம் மறவோம்?

  

பத்தைக் லுங்கியெனில்
நூர் அண்டு சன்ஸ்
பகட்டான ஜவுளிக்கு
அஜீஸ் அண்டு சன்ஸ்

சித்தரத்தை முதற்கொண்டு
சகலமும் கிடைக்கும்
சித்தவைத்ய கடைக்கிங்கு
சிறப்பந்தஸ்து

சத்தான தமிழ்மொழியை
செழிக்க வைக்க
சாதிக்கத் துடிக்கின்ற
சிலரும் உண்டு

முத்தான வரிகளுக்கு
இதயதாசன்
மெட்டுக்கு பாட்டெழுதும்
காதர் ஒலி

  

கின்னாரி கடையென்றால்
ஞானம் பாண்டு
கிராஅத்து என்றாலோ
பானா சாபு

அன்னாளில் புகழ்பெற்ற
லாயர் காஸிம்
அரிதான ஓவியத்தில்
ஹாஜா பாஷா

கின்னஸ்ஸு சாதனைக்கு
சந்திரபாபு
கீதங்கள் வடித்திட்ட
ஈ. எம். அலி

எந்நாளும் நினைவில்வரும்
பாத்திரங்கள்
இணையில்லா ஊர்தந்த
சரித்திரங்கள்

– முற்றும் –

                                               

 

11 responses to “அந்த நாள் ஞாபகம் – கவிதை நூல்

 1. Anwar Zamaan

  November 29, 2007 at 9:10 am

  .

  நாகூருக்கு ஒரு விஸிட் அடித்த திருப்தி.

  .

   
 2. Sirajudeen

  February 13, 2010 at 4:44 pm

  பிறந்த ஊரின் மீதும், ஊர்காரர்கள் மீதும் எனக்கு அளவுகடந்த பாசம் உள்ளது. அடிக்கடி நம்மூர் சம்மந்தமான விஷயங்களை இணையத்தில் தேடுவதுண்டு அப்படி தேடும் போது கிடைத்த பொக்கிஷம்தான் தாங்களின் வலைப்பூ.
  தாங்களின் இந்த பணிக்கு எங்களால் இயன்றவரை தோள் கொடுக்க தயாராக உள்ளோம்.

  அன்புடன்
  சிராஜுதீன்

   
 3. Abdul Qaiyum

  February 13, 2010 at 8:05 pm

  உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி சிராஜ்.

   
 4. alaudeen

  February 26, 2010 at 10:06 pm

  நீங்கள் குறிப்பிட்டு இருந்த சிலர் இன்று நம்முடன் இல்லை, இதை படித்தவுடன் அவர்கள்
  ஞாபகம் வருகிறது, குறிப்பாக நத்தர் மாஸ்டர்,

  நன்றி,

  சமிபத்தில வலையில் சிக்கிய,

  சேக் அலாவுதீன்.

   
 5. Abdul Qaiyum

  February 26, 2010 at 11:23 pm

  உண்மைதான் சேக் அலாவுத்தீன். வாழ்க்கையில் நாம் எத்தனையோ பேர்களை சந்திக்கிறோம், பேசுகிறோம், பழகுகிறோம். சிலருடைய நினைவுகளை அவர்கள் மறைந்து போன பின்பும் கூட ஞாபகப்படுத்தி புகழ்ந்து பேசுகிறோம். நாகூரில் அப்படிப்பட்ட மனிதருள் மாணிக்கங்கள் பலருண்டு.

   
 6. sheikabdulla

  December 28, 2010 at 8:04 pm

  sheik

   
 7. FAROOKRAJA -NAGORE

  April 22, 2012 at 11:06 am

  நண்பா, நீண்ட நாளைக்கு பிறகு இந்த தொகுப்பை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது..
  படிக்க படிக்க பழைய நினைவு .. என்னை கண் கலங்க வைத்து விட்டது..
  இந்த நினைவுகள் யாஉம் உன் மனதில் எப்படி ஊறி வந்தது .. உன்னை நெனைகும் போது எனக்கு பொறாமையாக இருக்கு. உனது நியாபக சக்தியை பாராட்டுகிரேன்.

   
 8. Mohamed Iqbal

  October 22, 2014 at 8:02 pm

  “அந்த நாள் ஞாபகத்தை” ரசித்துப் படித்தேன்.! நாகூரின் அந்தரங்க டைரியைப் படித்த உணர்வு ஏற்பட்டது.! நான் சாதாரணமாக வந்து போகின்ற நாகூர், சாதாரணமானதல்ல என்பதை எனக்கு விளங்க வைத்தது.!

  எல்லோரும் அவரவர் ஊர்களை காதலிக்கத்தான் செய்வார்கள்.! ஆனால் அழகிய வார்த்தைகளால் உங்கள் காதலை வெளிப்படுத்திய விதம் மிகவும் அருமை.!

  முன்னுரையில் நீங்கள் குறிப்பிட்ட பார்வையில்லாத சக்தி விலாஸ் நாகப்பன் ஒரு மறக்க முடியாத கேரக்டர்.!

  இன்டு இடுக்கையும் விடாமல் மீன் கடை முடுக்குக்கும் அழைத்துச் சென்று விட்டீர்கள்.!

  தாயத்து , தகடு, சர்க்கரையை வைத்து ஏமாற்றுபவர்களை அடையாளம் காட்டியதையும் , நினைத்தாலே இனிக்கின்ற “கட்டிலுக்குப் பவுன்” மறவாமல் இடம் பெற்றதையும் பாராட்டாமல் இருக்க முடியுமா.?

  “கொல்லைக்குப் போவதென்றால் அர்த்தம் வேறு” என்பதோடு “முகம் கழுவப் போகிறேன்” என்று நம் பெண்கள் நாசுக்காக சொல்வதையும் சேர்க்கலாம்.!

  யாசகம் கேட்டு வருபவர்களிடம் வீட்டில் எதுவும் இல்லையென்றால் ” மாப் செய்யுங்க பாவா” சொல்லும் பண்பையும் சேர்த்தால் நன்றாக இருக்கும்.!

  மொத்தத்தில் மனநிறைவை ஏற்படுத்திய கவிதை.!

   
 9. அப்துல் கையூம்

  October 22, 2014 at 8:27 pm

  கலா ரசனையோடு கூடிய உங்கள் பின்னூட்டம் என் கவிதைக்கு கிடைத்த கிடைத்த ஊட்டசத்து.

   
 10. Mohamed Musadiq

  October 25, 2014 at 4:39 pm

  அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரரே உங்கள் கவிதையை வாசித்து ஆர்ப்பரித்தேன். என் ஐம்புலன்களுக்கும் அருமையான தீனி……………….

  கவிதையை கண்டேன், கண்கள் ஆனந்தத்தில் அருவியானது, வாசிக்க கேட்டேன், எம் காதுகள் குளிர்ந்தது, வாசித்தேன் என் நாவும் இனித்தது. என் தாய் தமிழை உம் கவிதை வழி சுவாசித்தேன், என் ஜீவன் சுகந்தது…………..!
  என் தாய் பிறந்த ஊருக்கு இதுவரை யாரும் பாடாத ஒரு அருட்பா…! என் தாய், நான் என் குடும்பத்தார் பிறந்த ஊர் நான் ஐந்து வயது வரை வளர்ந்த ஊர், என்னை வளர்த்த ஊர்,எனக்கு பிள்ளைத்தமிழ் ஊட்டிய ஊர் இன்றும் நான் நேசிக்கும் ஒரு அழகிய ஊர் இன்று கண்டங்கள் கடந்து நான் ஐரோப்பாவில் குடிபெயர்ந்தாலும் பால் குடியை மறக்கமுடியாத ஊர், என் மனதை மட்டும் அங்கேயே விட்டு வந்த ஊர் இன்று மீண்டும் ஒரு முறை நான் உணர்ந்தவற்றை எல்லாம் உங்கள் இரு தோள்களில் அமர வைத்து அழகிய சுற்றுலாவை போல சுற்றி காட்டி இருகின்றீர்கள். நம் ஊர் பேச்சு வழக்கில்இன்றும் உள்ள சில வார்த்தைகளை நான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன், துவையல் அதனை சம்பால் என்றும், எல்லாரும் விரும்பும் ரோஸ்ட் அதனை பாங்கான் என்றும், பெண்களின் வாழ்வியலோடு ஒன்றிப்போன அழகிய மருதாணியை மருவண்டி என்றும் சொல்வது வழக்கம்,தாங்களும் அறிந்ததே….. உங்களிடம் இதனை நினைவு கூர்வதில் ஒரு ஆனந்தம்.. .

  வாசிப்பின் முடிவில் மீண்டும் நாகூர் சென்று விட்டு அக்கணம் தான் திரும்பி வந்த ஒரு அழகிய உணர்வு என்னுள் நிரம்பி வழிகின்றது ..

  இதற்கும் மேல் ஒருவன் நாகூரைப் பற்றி எழுத உங்களிடம் தான் கற்க வேண்டும் அய்யா …………..

  உங்களுக்கு இந்த வாசகனின் சிறு வாழ்த்து

  உலகை அழகு படுத்தி ஆழப்படுத்தி காட்டும் செயற்கைக்கோள் கண்கள் உங்களுக்கு…..
  நாகூர் கவி என்னும் பட்டம் உடனே தர வேண்டும் உங்களுக்கு…

  வாழ்த்துக்களுடன்

  முஸாதிக்

   
 11. Mohamed Imamhussain

  April 22, 2016 at 11:27 pm

  ennatra vesiyangal kalathal entryikum marakamuteytha nagoren arisuwtukal kaka ennam ethu pondtru palavesiankal venum onkalukum onka kutmbatrukum tuwa saitavanga ameen

   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: