RSS

கவிஞர் ஜபருல்லாஹ்

23 Nov

zafarullah.jpg 

வாயில் நுழையாத பெயர்

எனக்கு 15 அல்லது 16 வயது இருக்கும்போது என்னுள் முளைவிட்டிருந்த கவியாற்றலை கண்டுக்கொண்டு நாகூரில் நடைபெற்ற ஒரு மாபெரும் மீலாது விழாவில் எனக்கு கவிதை பாடுகின்ற வாய்ப்பினை அளித்தார் எங்களூரைச் சேர்ந்த H. ஜக்கரியா எனும் தமிழார்வலர். அவருடைய இடைவிடாத முயற்சியினாலும், பிரமாண்டமான ஏற்பாட்டினாலும் மூன்று நாட்கள் நடைபெற்ற இலக்கியக் கொண்டாட்டத்தினால் நாகூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும்  பிரபலமான தமிழறிஞர்களும், இஸ்லாமியப் பெரியார்களும் கலந்துக்கொண்ட மாநாடு அது. ஊரின் நடுநாயகமாக வீற்றிருந்த ‘நியுபஜார் கடைத்தெரு’வில் நாயகத் திருமேனியின் பிறந்தநாள் விழாக் கூட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

எனக்கு மேடையேற வாய்ப்பளித்த தமிழார்வலர் H.ஜக்கரியா அவர்களின் மைந்தர்தான் இன்று தமிழகத்தில் நடைபெறும் ஆன்மீக, இலக்கிய, கட்சிக் கூட்டங்களில், தன் நகைச்சுவை பேச்சாலும், சொல்லாற்றலாலும் முத்திரை பதித்துவரும் கவிஞர் இஜட் ஜபருல்லா அவர்கள்.

அன்று நடைபெற்ற மீலாதுவிழா கவியரங்கத்தில் உள்ளுர்க்கவிஞர்கள் இஜட். ஜபருல்லா உட்பட கஃபூர்தாசன், அபுதல்ஹா, கலைமாமணி நாகூர் சலீம் போன்றோர் மேடையில் கவிதை பொழிந்தார்கள். சிறுவனாக இருந்த நானும் அந்த கவிவாணர்களின் கூட்டத்தில் கவிதை வாசித்து அவையோரின் பாராட்டுதலைப் பெற்றேன்.

கவியரங்கங்களில், மரபுக் கவிதைகளே அதிகம் இடம்பெற்றிருந்த அக்கால கட்டத்தில், அவரது புதுக்கவிதைபாணி அவர்பால் என்னை வெகுவாக ஈர்த்தது.

அதனைத் தொடர்ந்து, சில காலத்திற்குப்பின் (சுமார் 30 ஆண்டுகட்கு முன்னர்) எங்கள் ஊருக்கு அருகாமையில் இருந்த திட்டச்சேரியில் ஒரு மீலாதுக் கவியரங்கம் நடைபெற்றது. சுவரொட்டிகளில் கவிதை பாடுவோர் வரிசையில் கவிஞர் இஜட் ஜபருல்லா அவர்களின் பெயரும் இடம் பெற்றிருந்தது. என் தந்தையிடத்தில் வம்படித்து அனுமதி வாங்கிக் கொண்டு, துணைக்கு ஒரு ஆளையும் அழைத்துக் கொண்டு அவரது கவிமழையில் நனைவதற்காகச் பக்கத்து ஊர் சென்றேன்.

இளம் பிராயத்தில் என்னிடம் ஒரு நல்ல பழக்கம் இருந்தது. சட்டைப்பையில் ஒரு பாக்கெட் நோட்டும், பேனாவும் எப்போதும் கைவசம் இருக்கும். கவிஞர் இஜட். ஜபருல்லா மேடையில் ஏறி கவிதைமழை பொழிய, என் மனதில் நின்ற வரிகளை அவசர அவசரமாக கிறுக்கிக் கொண்டேன். அங்ஙனம்  எழுதிய ஒரு பாக்கெட் புத்தகம் நேற்று என் தற்செயலாக கண்ணில் சிக்கியது. ஏதோ ஒரு பெரிய பொக்கிஷம் கிடைத்துவிட்டதைப் போன்றதொரு சந்தோஷம் எனக்கு.

அன்று அந்த கவியரங்கத்தில் அவர் பாடிய இக்கவிதை வரிகளை நிச்சயம் அவர் கூட பாதுகாத்து வைத்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். அதனை இங்கே பதிவு செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

அழைப்பிதழ்களிலும், சுவரொட்டிகளிலும் கவியரங்கத்திற்கு தலைமை தாங்கப் போவதாக அறிவித்திருந்தவரின் பெயர் வேறு. அன்று மேடையில் தலைமை தாங்க அமர்ந்திருந்தவர் வேறொருவர். அதையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் நம் கவிஞர்.

இங்கு மாறிய தலைமையில்
மன்றம் நிகழினும் – இது
தேறிய தலைமை

என்று கவிஞர் ஆரம்பித்ததும் அவையோர்களின் முகம் மலர்ந்ததோ இல்லையோ அவைத்தலைவரின் முகம் மலர்ச்சியடைந்து விட்டது. யாருக்குத்தான் புகழ்ச்சி பிடிக்காது? சமயத்திற்கேற்ப சமயோசித அறிவுடன் சரளமாய் வந்த வரிகளைக் கேட்டதும் சோர்வுற்றிருந்த அவையோர்கள் உற்சாகத்துடன் நிமிர்ந்து உட்காரத் தொடங்கி விட்டார்கள்.

தன்னை உதவாக்கரையாய் படைக்காமல், உருப்படியான ஒரு மனிதனாகப் படைத்த இறைவனுக்கு நன்றியைச் சமர்ப்பிக்கிறார் நம் கவிஞர். நயமான கவிதை வரிகளில் ‘ஒருபிடி” “உருப்படி” என்ற சொற்களை வைத்து இவர் ‘வார்த்தை ஜாலம்’ புரிகையில், நாம் அவர் கவியாற்றல் மீது வைத்திருக்கும் நம்பிக்கையிலும் “ஒரு படி” மேலே சென்று விடுகின்றார்.

ஒருபிடியின் மண்ணாலே
உயிருள்ள பொருளாக்கி
உருப்படியாய் இப்பதியில்
உலவவிட்ட இறையவனின்
அடிபணிந்து அவையோர்முன்
படிக்கின்றேன் இக்கவிதை

என்ற கவிதை வரிகள் இதமாக நம் மனதை மயிலிறகால் வருடுவதைப்போல் இருக்கின்றன.

கஃபூர் தாசன், சாந்திதாசன், பூபதிதாசன், கதிர்தாசன். இதயதாசன் என்று தங்களுக்குத் தானே புனைப்பெயர் வைத்துக் கொண்டு கவிஞர்கள் மகிழ்ந்த காலம் அது. அந்த மேடையிலும் நிறைய தாசன்மார்கள் வீற்றிருந்தார்கள். அவர்களையும் புகழ்ந்து தனக்கு ஆதரவு திரட்டிக் கொள்கிறார் நம் கவிஞர்.

காசுக்காய் இம்மண்ணில்
தாசிகளாய் ஆனவர்கள்
பலபேர்கள் – இங்கோ
நேசம் வைத்த காரணத்தால்
தாசனாகி போய்விட்ட
மாசுஇலா கவிஞர்கள்
இவர்கள் .. ..

தலைமையேற்றவரை தனது பக்கம் இழுத்ததோடு நிற்காமல், சக கவிஞர்களையும் தன்னிடம் சரணாகதி அடையச் செய்து விடுகின்றார் கவிஞர். 
 
அவைத் தலைவரை புகழ்ந்தாகி விட்டது. மேடையில் இருந்த மற்ற கவிஞர்கள்மீதும் ஐஸ்கட்டியை வைத்தாகி விட்டது. இப்பொழுது ஊர்மக்கள்தான் பாக்கி. அவர்களுக்கு சோப்பு போட வேண்டாமா? அவர்கள் கோபித்துக் கொண்டால்.. ..?  கைத்தட்டல் கிடைக்காமல் போய்விடும். கைத்தட்டல் கிடைக்காவிட்டால்..? கவிதை எடுபடாது. கவிதை எடுபடா விட்டால்..? கவிஞருக்கு புகழ் வந்து சேராது. எனவே ஊர்க்காரர்களையும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார் கவிஞர்.

இது
இட்டமுள்ள மக்கள்வாழ் ஊர்
இவர்கள்
திட்டம் போட்டு வாழ்வதினால்
திட்டச்சேரி ஆனதோ..?
என் கவிதை கேட்டபின்னர் – இது
திட்டும்சேரி ஆனாலும் ஆகலாம்.

இப்படி கிலோ கணக்கில் ஐஸ் வைத்தால் யார்தான் திட்டுவார்கள்? கூட்டத்தினரின் முகபாவத்தை ஒரு நோட்டமிட்டேன். காதுகளைத் தீட்டிக் கொண்டு கவனமாக கேட்க ஆரம்பித்தார்கள். அஜாக்கிரதையாக இருந்தால் அவர்களைப் பாரட்டும் வரிகள் எதையாவது ‘மிஸ்’ பண்ணி விடுவோமோ என்ற பயம் காரணமாக இருக்கலாம்.

இப்பொழுது கவிதையின் தலைப்புக்கு வருகிறார் கவிஞர்.

வாழ்கின்ற மனிதரெலாம்
காவியமாய் ஆவதில்லை
வள்ளல்நபி வாழ்க்கையே – ஒரு
வற்றாத காவியமாம்

என்ற வரிகள் மனதைத் தொடுகின்றன. அண்ணலாரின் வழிமுறைகள் அழகிய முன் மாதிரி அல்லவா? அந்த வாழ்க்கையைத்தான் வற்றாத காவியம் என்கிறார் கவிஞர்.

‘மண்ணகத்தின் இகழ்வு மாற்றி; பொன்னகத்தின் உயர்வு சாற்றி’ ஒரு மாபெரும் மாற்றத்தை உண்டாக்கிய மாநபியின் மாண்புகளை அவர் ஒவ்வொன்றாக எடுத்து வைக்க, கவியரங்கம் களை கட்டுகிறது.

பெண்சேய் பிறந்தால்
மண்ணில் புதைக்கும்
மடமை பழக்கங்கள்

மழையை வேண்டி
மாட்டின் வாலில்
தீயை மூட்டும்
மாயஜாலக் கதைகள்

அவைகள்
அரேபிய மண்ணின்
மலிவுப் பதிப்புகள்

மானிடரை நல்வழிப்படுத்த வேண்டி ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தீர்க்கதரிசிகளை இத்தரைக்கு அனுப்பி வைத்ததாக திருமறை கூறுகிறது. படைத்தவனைப் ‘படைப்பாளி’யாக்கி அழகிய உவமைளோடு ஒப்பிட்டு மகிழ்கிறார் நம் கவிஞர்.

ஒப்பற்ற எழுத்தாளன்
ஒருலட்சத்து இருபதினாயிரம்
எழுதிய தொடர்கதை

நபிகள் ..
இறைவன் எழுதிய
தத்துவக் கதையின் முற்றுப்புள்ளி

இறைவன் எழுதிய
பற்பலக் கதையின்
முத்திரைக் கதை

காருண்ய நபியை, ‘கதை’ என்று சொல்வதை விட கவிதை என்று சொல்லியிருந்தால் இன்னும் பொருத்தமாக அமைந்திருக்குமோ?

இலக்கணம் பிசகாத கவிதை அல்லவா அது? எதுகைக் கேற்ற மோனையாய். மோனைக்கேற்ற எதுகையாய் சந்தம் பிறழாத சாந்தமே உருவான ‘ஆசிரியப்பா’ அல்லவா அது?. அன்பாய் உருவான வெண்பா அது. அந்த ‘திருப்புகழை’ பாடப் பாட வாய் மணக்கும். அதை இறைவன் எழுதிய ‘மரபுக்கவிதை’ என்று சொல்வதா அல்லது ‘புதுக்கவிதை’ என்று சொல்வதா? ஊஹும்.. சொல்லத் தெரியவில்லை. இத்தரை போற்றும் முத்திரை நபியை ‘முற்றுபுள்ளி’ என்ற கவிஞரின் வருணனை மிகப் பொருத்தமாக இருக்கிறது.

நபிகள் நாயகம் வணிகத் தொழில் புரிந்தவர். எமன், சிரியா போன்ற நாடுகளுக்குச் சென்று துணிமணி வியாபாரம் செய்தவர். நம் கவிஞரும் நபிகளை வியாபாரி என்று ஒத்துக் கொள்கிறார். ஆனால் அவரது பார்வையில்  ‘வியாபாரக் கண்ணோட்டம்’ முற்றிலும் வேறுபடுகிறது.

கவிஞர் சொல்வதைப் பாருங்கள் :

நபிகள் வணிகர்.
நம் பாவ மூட்டைக்குப் பதில்
புண்ணிய பொருளை
மாற்றித்தரும்
பண்டமாற்றுக் காரர்.

கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பின்னர், இக்கவிதை வரிகளை, கசங்கிபோன அந்த பாக்கெட் டயரியில் கண்டெடுத்து படித்துப் பார்த்தபோது, இதுபோன்ற உவமைகளை கண்டு வியந்துப் போனேன்.

என்னமாய் ஒரு சிந்தனை? எத்தனை கருத்தாழமிக்க சொற்கள்? எப்படிப்பட்ட சமயோசிதமான இடைச்செருகல்கள்?

நான் வெளிநாட்டுக்கு சம்பாதிக்க வந்தபின் இந்த மாபெரும் கவிஞனுடன் நெருக்கம் ஏற்பட வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது. விடுமுறையில் சென்றபோது ஓரிருமுறை சந்தித்து உரையாடியதுண்டு. ஆபிதீனின் வலைப்பதிவில் அவ்வப்போது இந்த கவிஞனின் படைப்பாற்றலைக் காணும்போதெல்லாம் என் மனதுக்குள் பொங்கி எழும் பாராட்டுக்களை ஒருநாள் நான் பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இப்பொழுது செய்கிறேன்.

தொடக்கத்தில் மணிவிளக்கு போன்ற மாத இதழ்களில் “பர்வீன்” என்ற புனைப்பெயரில்  சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்த இவர், அதற்குப் பிறகு பெரும்பாலோர், குறிப்பாக மாற்றுமதச் சகோதரர்கள்; வாயால் உச்சரிக்கச் சிரமப்படும் பெயரை வைத்து கொண்டே தமிழகத்து மூலை முடுக்குகளில் எல்லாம் வலம் வந்து வெளுத்துக் கட்டுகிறாரே என்று வெளியூரில் நான் கண்ட சுவரொட்டிகளில் “கவிஞர் இஜட் ஜபருல்லா பி.ஏ., பி.ஜி.எல்.” என்ற இவர் பெயரைக் கண்டு நான் வியந்ததுண்டு.

சென்ற முறை விடுமுறையில் திருச்சியில் என் கல்லூரி நண்பர் குணசேகரனைச் சந்தித்தேன். “உங்க ஊரு கவிஞரு நேத்து நடந்த கூட்டத்துலே சும்மா பிச்சு உதறிட்டாரு. சிரிச்சு சிரிச்சு வயிறு வலி கண்டுடுச்சு” என்று சொன்னார்.

“எங்க ஊருலே எத்தனையோ கவிஞரு இருக்காங்க. அவரு பேரு என்னா?” என்று கேட்டேன்.

“அதுதாங்க. வாயிலேயே நுழையாத பெயரா இருக்குமே.” என்றார்.

எனது இஷ்டக் கவிஞர் இஜட் ஜபருல்லாவைத்தான் இவர் சொல்கிறார் என்பது சட்டென்று புரிந்துப் போனது.

பெயர் – வாயில் நுழையா விட்டால் என்ன? எல்லோர் மனதிலும் இலகுவாய் இவர் நுழைந்து விடுகிறாரே என்று பெருமைப் பட்டுக் கொண்டேன்.

– அப்துல் கையூம்

நாகூர் புலவர் ஆபிதீன்

– இஜட். ஜபருல்லா

இவரின்
சந்தப் பாடல்கள்
சாகாவரம் பெற்றது!
இவர் –
சொந்தப் பாட்டுதான்
சோகத்தில் முடிந்தது!

இவரின்
வார்த்தைகள்
வளமாய் செழித்தன !
வாழ்க்கைதான்
வறுமையில் அழிந்தது!

இவர் பாடல்கள்
எல்லா ராகங்களிலும்
இனித்தது!
இவர் வாழ்க்கையில்
‘முகாரி’ மட்டுமே
ஒலித்தது!

நிறைய பாடகர்கள்
இவர் பாடல்களாலேயே
அறிமுகம்!
பாடகர்கள் மட்டும்
இவர் பக்கம்
பாராமுகம்!

நன்றி பற்றி
இவர் பாடல் எழுதவில்லை!
காரணம்
யாருமே இவரிடம்
நன்றியைக் காட்டவில்லை!

‘ஈட்டியில் முனையில்
நிறுத்திய போதும்
ஈமான் இழக்க மாட்டோம்’
என
இறைவன் மேலேயே
ஆணையிட்டவர்!
இவர் –
ஈமானை மட்டுமல்ல
இறுதிவரை
தன்மானத்தையும்
இழக்காதவர்!

இவருக்கு பிடித்தது
ராகத்தில் தோடி
எப்போதும் பீடி!

 

நாகூர் கந்தூரி

கைலிக் கடைகளின்

‘கட்-அவுட்’ திருவிழா..!

‘காதல் தேசம்’

‘காதல் கோட்டை’

புடவைகள் பெயர்கள்..!

பூரிப்பில் பெண்கள்…!

பாரின் சாமான்கள்

மோகத்தில் ஆண்கள்..!

ஹோட்டல் எங்கும்

விடாது ஒலிக்கும்

சட்டுவ சங்கீதம்

முட்டை புறாட்டா மணம்

மூக்கின் நுனியில்..!

கடலில் ஓடும்

கப்பல்கள்

தெருவில் ஓடும்

ஊர்வல விந்தை..!

வெடிகள் போட்டு

கொடிகள் ஏறும்

விமரிசையாக..!

நாகூர் கந்தூரி –

இங்கு

இரவிலும் சூரியன்..!

மொழிகளை எல்லாம்

இரண்டறக் கலந்து

செவிட்டில் அறையும்

கேஸட் அலறல்கள்…!

‘மேட்-இன்’

செவ்வாய்க்கிரகம்

என்றும்

முத்திரை குத்தும்

வித்தைக்காரர்கள்..!

தர்ஹா உள்ளே

காணிக்கை எல்லாம்

உண்டியல் போட

கட்டளைக் குரல்கள்..!

பாதைகள் மறித்து

பாத்திஹா கடைகள்

தாயத்து டிசைன்கள்

விற்பனை அங்கு-

மொத்தமாகவும்

சில்லறையாகவும்..!

பால்டின் தகரத்தில்

சிற்ப வேலைகள்..!

அதை

வெள்ளியாய் மாற்றும்

ரசவாதக் கலைகள்..!

கஜல்கள் கவாலிகள்

நாட்டியத்தோடு

களி நடம் புரியும்

இளைஞர் கூட்டம்..!

கமிஷன் போக

மிச்சப் பணத்தில்

கரும் புகையோடு

வாண வேடிக்கை

கோலாகலங்கள்..!

பீர்சாபு எறியும்

எழுமிச்சைப் பழங்களில்

பிள்ளைவரத்தை

தேடும் பெண்கள்..!

சந்தனக் கூட்டில்

பூக்களை வீசிப்

பரவசப்படும்

பக்த கோடிகள்..!

‘ஐயா..தருமம்..!’

என்ற

அபஸவரத்தோடு

ஊரே நிறைந்த

பிச்சைக்காரர்கள்..

அவர்களுக்கு

சுகத்தைக் கொடுக்கும்

சோத்துச் சீட்டுக்கள்..!

இன்னும்

தொண்டற் படைகள்

உண்டியலோடு..!

இகபர உலகில்

நன்மைகள் வேண்டி

இரண்டே ரூபாயில்

ஆண்டவர் தரிசனம்..!

இந்த ஆராவரங்களின் மத்தியில் கூட –

அந்த –

மகானை –

நினைத்தும் – துதித்தும்

சில

மனித மனங்கள்…

-இஜட். ஜபருல்லாஹ்
————————————————————————————- 

  

இறைவா ..! 

இறைவா
என் ‘இபாதத்’ இலைகள்
சருகாகி வீழ்ந்தாலும்
கிடப்பதென்னவோ உன்
ஏகத்துவ விருட்சத்தின்
காலடியில்தான்

இறைவா
உன்னோடு
அரபு மொழியில் பேசுவதைவிட
அழுகை மொழியில்
பேசும்போதுதான்
உன் அண்மை தெரிகிறது

இறைவா
தொழும்போதுகூட நான்
தூரமாகிறேன்
உன்னை
நினைக்கும் போதெல்லாம்
நெருக்கமாகிறேன்

இறைவா
வானம் வரைகூட
என் எண்ணங்கள்
வியாபிக்க முடிகிறது
இந்த
வார்த்தைத் தடைகள்
என்னை
தரையிலேயே நிறுத்திவிடுகின்றனவே!

இறைவா
உன் அருள் பெட்டகத்துக்கு
பூட்டுக்களே இல்லையெனும்போது
இவர்கள் மட்டும் ஏன்
வெறும் வார்த்தைச் சாவிகளை
பிரார்த்தனை வளையங்களில்
கோர்த்துக்கொண்டு அலைகிறார்கள்?

இறைவா
உண்டுவிட்டு உனக்கு
நன்றி சொல்வதைவிட
பசித்திருந்தும்
உன்னளவில்
பொறுமை கொள்ளும்போதுதான்
என் ஆன்மா
ஆனந்தமடைகிறது

இறைவா
உன்
மகத்துவமிக்க மன்னிப்பால்
மறுபடி மறுபடி
எங்களை
மனிதனாக்குகிறாய்
நாங்களோ
எங்கள் செயல்களால்
மறுபடி மறுபடி
ஷைத்தானாகிறோம்
மறுபடியும் எங்களை
மன்னித்துவிடு நாயனே

இறைவா
தொழுகையில்
உன்னைத் தொலைத்தோம்
வாழ்க்கையில்
எம்மைத் தொலைத்தோம்
‘கலிமா’வையும் நாங்கள்
களவு கொடுக்குமுன்
கரையேற்றிவிடு நாயனே

இறைவா
நீ அனுப்பிய
வேத வார்த்தைகளை
உன் தூதர்
வாழ்க்கையாக்கினார்
இவர்களோ
அவைகளை
மறுபடியும்
வார்த்தைகளாக்கிவிட்டார்கள்

இறைவா
நீ
சேதாரமில்லாமல்
பாதுகாக்கும்
திருக்குர்ஆனை
இவர்கள்
ஆதாரத்துக்கு மட்டுமே
அணுகுகிறார்கள்

இறைவா
நீ
உன் தூதரின்
மனதில் இறக்கி வைத்த
திருவசனங்களை
இவர்கள்
மூளைக்குக் கடத்திவிட்டார்கள்
அதனால்
நம்பிக்கை விழுந்தது
சந்தேகம் எழுந்தது

இறைவா
நீ
எழுத்தில் அனுப்பாத
திருமறையை
இவர்கள்
எண்களுக்குள்
சிறைவைத்து விட்டார்கள்

இறைவா
நீ
தர்க்கத்தை
தவிர்க்கச் சொன்னாய்
ஒற்றுமையை
வளர்க்கச் சொன்னாய்
இவர்கள்
தர்க்கித்தே
பிரிந்து போகிறார்கள்

இறைவா
நீ
மறுமை நாளின்
நீதிபதி என்றாய்
இவர்கள்
நீ மறுமைக்கு மட்டுமே
என நினைத்து
இம்மையின் நீதிபதிகளாக
தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்

இறைவா
கரியை வைரமாக்கும்
காரியக்காரனே!
இங்கே
உன் வஹியைச் சுமந்த
வைரங்களெல்லாம்
பணத்தீயில்
கரியாகிக் கொண்டிருக்கின்றனவே
கொஞ்சம் கவனிப்பாயா?

இறைவா
இந்த
‘தவ்ஹீது’க் குயில்களெல்லாம்
ஏகத்துவ கானத்தை
எங்கே தொலைத்தன?

இறைவா
‘ஒதுவீராக’
எனப்பணித்தாய்
இவர்கள்
ஒலிப்பேழைகளாக்கி
விற்றுக் கொண்டிருக்கிறார்கள்

இறைவா
அடிக்கடி
சிந்திக்கச் சொன்னாய்
இவர்கள்
குழு அமைத்து
நிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்

இறைவா
இவர்களுக்கு
அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய
ஏதாவது செய்யேன்

கவிஞர் இஜட் ஜபருல்லாஹ்

————————————————————————————–

தொடுசுகம்

————-

எண்ணும்

எழுத்தும்

கண்ணெனப்படும்…!

எண்ணமும்

செயலும்

இறைவனைத் தொடும்…!

கவிஞர் இஜட் ஜபருல்லாஹ்

 

தேவை

———-

 

இறைவா…

என்ன வேடிக்கை பார்!

தேவைகளே இல்லாத

உன்னிடம் –

எங்கள் தேவைகளைக்

கேட்கிறோம்…!

உனக்கு நாங்கள்

தேவையில்லாமல் இருக்கலாம்..!

எங்களுக்கு எப்போதும் நீ தேவை!

கவிஞர் இஜட் ஜபருல்லாஹ்

 

 

மாறுதல்

———–

நரக நெருப்பு

பாவிகளை

சுத்திகரிக்கிறது…!

சொர்க்கச் சுகமோ

மெய்யடியார்களை

மறுபடியும்

‘பழைய’ ஆதமாக

ஆக்கிவிடுகிறது…

 

கவிஞர் இஜட் ஜபருல்லாஹ்

 

 

பிரமை

———

இனிக்கிறது

நேற்றைய நினைவுகளும்

நாளைய கனவுகளும்.

இன்று

எப்போதும்போல

கசப்பாகவே…

ஒருவேளை

நாளை இன்றாகி

கசக்கும்போது

இன்று நேற்றாகி

இனிக்குமோ?

கவிஞர் இஜட் ஜபருல்லாஹ்

நீருக்கும் நெருப்புக்கும்

பகையென்று யார் சொன்னது?

நீர்

நெருப்பை

‘அணைக்கத்தானே’ செய்கிறது?

கவிஞர் இஜட் ஜபருல்லாஹ்

 

Advertisements
 

3 responses to “கவிஞர் ஜபருல்லாஹ்

 1. Taj

  February 17, 2009 at 3:35 pm

  படித்தேன்…
  ரசித்தேன்…
  ஜபுருல்லா
  இருக்கிறார்
  கவிஞரை காணோம்!
  இன்ஸா அல்லா
  கவிஞர் ஜபுருல்லாவை
  நிச்சயம் பார்ப்பேன்!
  – தாஜ்

   
 2. Hasan ali malimar

  May 15, 2011 at 9:19 am

  After a long time, I have seen our nagore website in which I found the above said poet’s expressions is great in all respect. I wish him all the best. The Almighty will be flourising peace, happiness, longivity and prosperity to his family and all of his relatives.
  Best regards
  Malimar and family

   
 3. FAROOKRAJA -NAGORE

  April 22, 2012 at 11:20 am

  படித்தேன்… ரசித்தேன் . படித்ததில் பிடித்தது என்னக்கு ,
  ஒருபிடியின் மண்ணாலே
  உயிருள்ள பொருளாக்கி
  உருப்படியாய் இப்பதியில்
  உலவவிட்ட இறையவனின்
  அடிபணிந்து அவையோர்முன்
  படிக்கின்றேன் இக்கவிதை…

  கதிர்தாசன். இதயதாசன் என்று தங்களுக்குத் தானே புனைப்பெயர் வைத்துக் கொண்டு கவிஞர்கள் மகிழ்ந்த காலம் அது.

  காசுக்காய் இம்மண்ணில்
  தாசிகளாய் ஆனவர்கள்
  பலபேர்கள் – இங்கோ
  நேசம் வைத்த காரணத்தால்
  தாசனாகி போய்விட்ட
  மாசுஇலா கவிஞர்கள்
  இவர்கள் .. ..

  நன்றி..

   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: