இவருடைய பாடலைக் கேட்க (Click)
தாவுதுமியானின் முதன்மை மாணாக்கனாக விளங்கியவர் இவர். தாவுதுமியானால் உருவாக்கப்பட்ட மாணவர்களில் இன்று புகழுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர் S.M.A காதர் அவர்களே. முறைப்படிக் கர்நாடக இசையைக் குருகுலமுறையில் பயின்று தேர்ச்சி பெற்று இசைவாணராக வளர்ந்து மரபிசையரங்குகள் மட்டுமே நடத்தி வரும் இவர் இசை மரபுகளில் அழுத்தமான பற்றுடையவர். இவர் பிறந்தது 1923 டிசம்பரில். 25.8.1952-ல் இவர் ‘நாகூர் தர்கா வித்துவான்’ என்ற சிறப்புப் பதவி அளிக்கப் பெற்றார். செவ்விசை மரபைச் சிறிதும் மீற விரும்பாத இவர் தம் இசையரங்கை இசையறைவுள்ள பத்துப் பேர் கேட்டால் போதும் என்பார். மதுரை சோமு பாடும்போது சில சமயம் படே குலாம் அலிகான் பாடுவது போல இருக்கும். அதுபோல் இவரது இசையிலும் இந்துதானி சாயல் காணப்படுகிறது. இது அவர் தம் ஆசிரியர் வழி வந்த சாயலாகும்.
மரபிசையைச் சுவைப்போரும் மதிப்போரும் அருகிவரும் நிலையாலும், இசுலாமியர் என்ற காரணத்தால் இவர்தம் இசைத் திறனைப் பலரும் சரியாக அறிந்து கொள்ளாததாலும், செவ்விசை மரபுகளைச் சிறிதும் தளர்த்த விரும்பாத இவர்தம் கொள்கையாலும் இவர்தம் இசையரங்குகளுக்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இக்காலத்து முதல் தரமான இசைவாணர்களில் ஒருவராக விளங்கும் இவர் சில தமிழ் உருப்படிகளையும் இயற்றிப் பாடியிருக்கிறார். ‘வாரரோ வாராரோ ஞானக் கிளியே’ என்ற பாடல் நாட்டுப்புறப் பாடலாகிய கும்மி அமைப்பில் இவர் இயற்றிப் பாடிய பாடல். கொலம்பியா இசைத்தட்டில் இது பதிவு செய்து வெளியிடப்பட்டது. ஆயிரக்கணக்கில் விற்கப்பட்ட கொலம்பியா இசைத்தட்டுகளில் இதுவும் ஒன்று. குணங்குடியார் , ஆரிபு நாவலர், புலவர் ஆபிதீன், பண்டிட் உசேன், வண்ணக்களஞ்சிய ஹமீதுப் புலவர், கவிஞர் சலீம், மலையாளம் காலகவிப் புலவர், காசிம் புலவர், உமறுப் புலவர் ஆகியஞிசுலாமியப் புலவர்களின் பாடல்களை இசைத்தட்டுகளில் பாடியது மட்டுமின்றி தியாகராசர் கீர்த்தனைகளையும் இசைத்தட்டுகளில் பாடியிருக்கிறார். ‘சேது சாரா’ என்ற பைரவி இராக ஆதிதாள உருப்படி ஒரு முஸ்லிம் இசைவாணர் பாடிப் பதிவு செய்த முதல் தியாகராசர் கீர்த்தனை என்ற பெருமையை உடையது. ‘காரண நபியே’ என்ற அம்சத்வனி இராகப் பாடலுக்குக் குன்னக்குடி வைத்தியநாதன் வயலின் வாசித்திருக்கிறார். உமறுப் புலவர் இஸ்லாத்தைத் தழுவிய வரலாற்றுச்சுருக்கம் ஆரிபு நாவலரால் இயற்றப்பட்டது. இதனை இராகதாள மாலிகையில் இவர் பாடியுள்ள இசைத்தட்டு உண்டு. இதில் பாகேசீரி, மோகனம், சஹானா, மால்கோஸ், சுபபந்துவராளி ஆகிய இராகங்களும், ஆதி, மிசிர சாப்பு, தேசாதி, திசிரஏகம் ஆகிய தாளங்களும் கலந்து வரும்படி பாடியது குறிப்பிடித்தக்கது. இக்காலத்தில் இராகமாலிகையைக் காணலாம். தாளமாலிகையைக் காண்பது அரிது.
இவர்தம் பாடல்கள் பதிவு செய்த ஒலி நாடாக்களும் உண்டு. அவற்றிலும் இசுலாமியப் பாடல்களுடன் பாபனாசம் சிவன் போன்றோரின் இந்துமதத் தமிழ்ப் பாடல்களும் உள்ளன.
இவரிடம் இசை பயின்ற மாணாக்கர்கள் ஏராளம். எனினும் அவர்களிற் பெரும்பாலோர் கீதம், வர்ணம் என்ற அளவில் நிறுத்திக் கொண்டவர்தாம். எம்.எம். ஈசுப் என்ற மாணவர்தாம் 7,8 ஆண்டுகள் தொடர்ந்து இசை பயின்றார். அவர் சென்னை அண்ணாமலை மன்றத்தில் ‘இசை மணி’ என்ற பட்டம் தந்து சிறப்பிக்கப் பெற்றார். இவருடன் இசைமணிப் பட்டம் பெற்றவர்களில் சீர்காழி கோவிந்தராசனும் ஒருவர்.
முனைவர் இரா.திருமுருகன் – நன்றி : ஆபிதீன் பக்கங்கள்
ஆபிதீன்
December 6, 2007 at 6:27 am
கையும்,
மாமாவின் புகைப்படம் அருமையாக உள்ளது. யார் எடுத்தது? கண்டிப்பாக நீங்களாக இருக்க மாட்டீர்கள்!
– ஆபிதீன் –