சோட்டுமியான் சாகிபு
இவர் புதுக்கோட்டை அரசர் அவைக்களைத்தின் இசைப் புலவராகவும் நாகூர் தர்கா வித்துவானாகவும் விளங்கினார். இந்துத்தானி இசையில் பெரும்புலவர். காசியிலிருந்து தென்னாடு வந்து தமிழிசைக் கற்றவர். இவர் காலத்தில் ஆர்மோனியம் என்ற மேனாட்டு இசைக் கருவியைக் கருநாடக இசையரங்குகளில் பக்கக் கருவியாக வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. தர்பார் கானடா என்ற இராகத்தைப் பாடுவதில் இவர் இணையற்ற விளங்கினார். அதனால் ‘தர்பார் கானாடா சோட்டுமியான்’ என்று இவரை அழைப்பார்கள். மிகப் பெரிய இசைவாணர் என்பதால் உஸ்தாத் [Vosthaath] சோட்டுமியான் என்றும் இவரை அழைப்பார்கள்.
நன்னுமியான் சாகிபு
சோட்டுமியானின் உடன்பிறந்த தம்பி இவர். மாபெரும் டோலக் கலைஞர். அதனால் இவர் ‘டோலக்கு நன்னுமியான்’ என்று அழைக்கப்பட்டார். தாளக் கருவியில் நிகரற்று விளங்கியதால் , மத்தளத்தில் கலைத் தெய்வம் நந்தீசுவரனைப் போன்றவர் என்ற பொருளில் இவரை ‘நந்தீசுவர நன்னுமியான்’ என்று அழைப்பார்கள். இவர்க்கு இசையாசிரியர் தன் அண்ணன் சோட்டுமியானே.
உருப்படிகளையே தோல்கருவிகளில் வாசிக்கும் திறன் பெற்றிருந்தார். பன்னிரண்டு சுரத்தானங்களுக்கும் பன்னிரண்டு கற்களை வரிசையாக வைத்து சலதரங்கம்போல் ஒருமுறை இவர் வாசித்தாராம். இது புதுக் கோட்டை அரசரை அப்படியே இருக்கையிலிருந்து தூக்கி எறிந்து விட்டதாம் !
கவுசுமியான் சாகிபு
இவர் சோட்டுமியான் சாகிபின் மகன். இவரும் ‘உஸ்தாத் கவுசுமியான்’ என்றழைக்கப்பட்டார். பெரிய இசைவாணராகவும் நாகூர்த் தர்கா வித்துவானாகவும் விளங்கினார். வாய்ப்பாட்டுப்போல் ஆர்மோனியத்திலும் நிகரற்றவர். ஆர்மோனியத்தை கற்றுக்கொண்டு முதன் முதலாக அதைக் கருநாடக இசையரங்கில் அறிமுகப் படுத்தியவர் இவரே. சோட்டுமியான் இசையரங்கில் இவர் ஆர்மோனியத்தைப் பக்கக் கருவியாக வாசித்தார். ‘கமகம் இல்லாத வாத்தியம்; நிறுத்திவிடு’ என்று தன் மைந்தனிடம் சொன்னாராம் சோட்டுமியான். அதன் பிறகு அதைக் கமகத்துடன் வாசிக்கப் பழகிக் கொண்டாரம்.
தாவுதுமியான் சாகிபு
இவர் சோட்டுமியானின் பேரரும் கவுசுமியானின் அண்ணன் மகனுமாவார். இவரும் உஸ்தாத் என்று மதிப்புடன் அழைக்கட்டு நாகூர் தர்கா புலவராக விளங்கிப் புகழ் பெற்றிருந்தார். சிறந்த பாடகர். ஆர்மோனியத்திலும் வல்லவர். இவரும் ஆர்மோனியம் டி.எம்.காதர் பாட்சாவும் ஆர்மோனியப் போட்டிகளில் ஈடுபடுத்தப்பட்டதுண்டு. போட்டி வேண்டாம் என்று இவர்களிருவரும் நட்பு முறையில் தங்கள் முழுத்திறனையும் வெளிப் படுத்துவார்கள்.
தாவுதுமியான் இசையரங்கு நிகழ்த்தியபோது ஒரு முறை இரவு 9 மணிக்குத் தொடங்கி இரவு 3 மணிக்கு முடித்தாராம். தஞ்சை பாபநாசத்தில் ஒருமுறை இந்துஸ்தானி இசை பாடினார். கேட்டோர் உருகி அழுதுவிட்டனர். அங்கிருந்த காஞ்சிபுரம் நாயனாப்பிள்ளை இவரைப் பன்னீரால் திருமுழுக் காட்டினராம். அடுத்து நடக்க வேண்டிய தம் இசையரங்கை ‘இன்று என் கச்சேரி எடுபடாது; நாளைக்குப் பாடுகிறேன்’ என்று சொல்லி விட்டாராம்.
இசைப்பெரும் புலவர்களும் கருநாடக இசையைச் சுவைப்பதற்காக விரும்பி நாடகங் காண வருமாறு செய்தவர் கிட்டப்பா. அத்தகைய இசைத்திறனைக் கிட்டப்பாவுக்கு அளித்தவர் தாவூதுமியானே. கங்காதர அய்யர் தம் மக்களாகிய காசி அய்யரையும் கிட்டப்பாவையும் கொண்டுவந்து இசை கற்பதற்காத் தாவுதுமியானிடம் ஒப்படைத்தாராம். இவரிடம் இசை கற்றதன் காரணமாக கிட்டப்பாவின் இசையில் இடையிடையே இந்துஸ்தானி பிடி விழுவதுண்டு. காரைக்கலில் நடந்த ஓர் இசையரங்கில் தாவூதுமியானிடம் காதர்பாட்சா தோற்றுப் போனதாகக் கூறுவர். ‘அல்லாஹு’ என்ற பாடலைத் தாவுதுமியான் சிறப்பாகப் பாடுவாராம். அதனால் அவருக்கு ‘அல்லாஹு தாவுதுமியான்’ என்ற சிறப்புப் பெயர் வழங்கியது. இவர்தம் கால்வழியினர் எவரும் இசைத் துறையில் கால் கொள்ளவில்லை. இவர் தம் மாணாக்கர்களே இப்பெருமகனாரின் பெயர் சொல்லும் எச்சங்களாக விளங்கினர். தாவுதுமியான் நாகூரில் 1940ஆம் ஆண்டு வரை வாழ்ந்திருந்தார்.
S.M.A காதர்
தாவுதுமியானின் முதன்மை மாணாக்கனாக விளங்கியவர் இவர். தாவுதுமியானால் உருவாக்கப்பட்ட மாணவர்களில் இன்று புகழுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர் S.M.A காதர் அவர்களே. முறைப்படிக் கருநாடக இசையைக் குருகுலமுறையில் பயின்று தேர்ச்சி பெற்று இசைவாணராக வளர்ந்து மரபிசையரங்குகள் மட்டுமே நடத்தி வரும் இவர் இசை மரபுகளில் அழுத்தமான பற்றுடையவர். இவர் பிறந்தது 1923 டிசம்பரில். 25.8.1952இல் இவர் ‘நாகூர் தர்கா வித்துவான்’ என்ற சிறப்புப் பதவி அளிக்கப் பெற்றார். செவ்விசை மரபைச் சிறிதும் மீற விரும்பாத இவர் தம் இசையரங்கை இசையறைவுள்ள பத்துப் பேர் கேட்டால் போதும் என்பார். மதுரை சோமு பாடும்போது சில சமயம் படே குலாம் அலிகான் பாடுவது போல இருக்கும். அதுபோல் இவரது இசையிலும் இந்துதானி சாயல் காணப்படுகிறது. இது அவர் தம் ஆசிரியர் வழி வந்த சாயலாகும்.
மரபிசையைச் சுவைப்போரும் மதிப்போரும் அருகிவரும் நிலையாலும், இசுலாமியர் என்ற காரணத்தால் இவர்தம் இசைத் திறனைப் பலரும் சரியாக அறிந்து கொள்ளாததாலும், செவ்விசை மரபுகளைச் சிறிதும் தளர்த்த விரும்பாத இவர்தம் கொள்கையாலும் இவர்தம் இசையரங்குகளுக்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இக்காலத்து முதல் தரமான இசைவாணர்களில் ஒருவராக விளங்கும் இவர் சில தமிழ் உருப்படிகளையும் இயற்றிப் பாடியிருக்கிறார். ‘வாரரோ வாராரோ ஞானக் கிளியே’ என்ற பாடல் நாட்டுப்புறப் பாடலாகிய கும்மி அமைப்பில் இவர் இயற்றிப் பாடிய பாடல். கொலம்பியா இசைத்தட்டில் இது பதிவு செய்து வெளியிடப்பட்டது. ஆயிரக்கணக்கில் விற்கப்பட்ட கொலம்பியா இசைத்தட்டுகளில் இதுவும் ஒன்று. குணங்குடியார் , ஆரிபு நாவலர், புலவர் ஆபிதீன், பண்டிட் உசேன், வண்ணக்களஞ்சிய ஹமீதுப் புலவர், கவிஞர் சலீம், மலையாளம் காலகவிப் புலவர், காசிம் புலவர், உமறுப் புலவர் ஆகியஞிசுலாமியப் புலவர்களின் பாடல்களை இசைத்தட்டுகளில் பாடியது மட்டுமின்றி தியாகராசர் கீர்த்தனைகளையும் இசைத்தட்டுகளில் பாடியிருக்கிறார். ‘சேது சாரா’ என்ற பைரவி இராக ஆதிதாள உருப்படி ஒரு முஸ்லிம் இசைவாணர் பாடிப் பதிவு செய்த முதல் தியாகராசர் கீர்த்தனை என்ற பெருமையை உடையது. ‘காரண நபியே’ என்ற அம்சத்வனி இராகப் பாடலுக்குக் குன்னக்குடி வைத்தியநாதன் வயலின் வாசித்திருக்கிறார். உமறுப் புலவர் இஸ்லாத்தைத் தழுவிய வரலாற்றுச்சுருக்கம் ஆரிபு நாவலரால் இயற்றப்பட்டது. இதனை இராகதாள மாலிகையில் இவர் பாடியுள்ள இசைத்தட்டு உண்டு. இதில் பாகேசீரி, மோகனம், சஹானா, மால்கோஸ், சுபபந்துவராளி ஆகிய இராகங்களும், ஆதி, மிசிர சாப்பு, தேசாதி, திசிரஏகம் ஆகிய தாளங்களும் கலந்து வரும்படி பாடியது குறிப்பிடித்தக்கது. இக்காலத்தில் இராகமாலிகையைக் காணலாம். தாளமாலிகையைக் காண்பது அரிது.
இவர்தம் பாடல்கள் பதிவு செய்த ஒலி நாடாக்களும் உண்டு. அவற்றிலும் இசுலாமியப் பாடல்களுடன் பாபனாசம் சிவன் போன்றோரின் இந்துமதத் தமிழ்ப் பாடல்களும் உள்ளன.
இவரிடம் இசை பயின்ற மாணாக்கர்கள் ஏராளம். எனினும் அவர்களிற் பெரும்பாலோர் கீதம், வர்ணம் என்ற அளவில் நிறுத்திக் கொண்டவர்தாம். எம்.எம். ஈசுப் என்ற மாணவர்தாம் 7,8 ஆண்டுகள் தொடர்ந்து இசை பயின்றார். அவர் சென்னை அண்ணாமலை மன்றத்தில் ‘இசை மணி’ என்ற பட்டம் தந்து சிறப்பிக்கப் பெற்றார். இவருடன் இசைமணிப் பட்டம் பெற்றவர்களில் சீர்காழி கோவிந்தராசனும் ஒருவர்.
நாகூர் ஈ.எம். ஹனீபா
இசைமுரசு, அருளிசை அரசு, கலைமாமணி முதலிய பட்டங்களைக் குவித்துள்ள ஈ.எம்.ஹனீபா இசுலாமிய மெல்லிசையுலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்து வருகிறார். இற்றைக்கு 70 ஆண்டுகளுக்கு முன் முகவை மாவட்டத்தில் பிறந்த இவருக்கு நாகூரே இளமை முதல் வாழிடமாக அமைந்து விட்டது. காரைக்கால் ஏ.எம்.தாவுது போன்றோர்களின் இசையரங்க நிகழ்ச்சிகளைக் கேட்டதனால் இளமை முதலே எழுச்சி பெற்றுப் பாடி வருகிறார். நுண்ணுணர்வும் கேள்வியறிவும் நிரம்பவுடைய இவருக்கு முறையான இசைப் பயிற்சி தேவைப் படவில்லை. 70 அகவைக்குப் பிறகும் இவருக்கே இயல்பான குரல் வளமும் தெளிவான தமிழ் ஒலிப்பும் சற்றும் குறையாமை வியப்புக்குரிய ஒன்று.
ஹாங்காக், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற வெளிநாடுகளிலும் இசை மழை பொழிந்துள்ளது இவ்வின்னிசைக் கொண்டல். நாளும் இன்னிசையால் நபிகள் புகழையும், திருக் குர்ஆனையும், திராவிட இயக்கத்தையும் பரப்பி வரும் இவர்தம் இசையரங்குகள் பொதுக் கூட்டங்களிலும், இல்லச் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் மிகுதியாக இடம் பெறும். இவர் பாடலிலும் மரபுபிறழாத உருப்படிகள் உண்டு. மெல்லிசைப் பாடல்களும் கர்னாடக இசை மரபின் சாயல் மிகுந்தவையே.
கழகம் இட்ட கட்டளைப் படிக் கைத்தறித் துணியை விற்ற போதும், சிறைப் பறவையாய் வாழ்ந்த போதும் பாடும் பணியே பணியாய் இருந்தார்.
பேரறிஞர் அண்ணா , காயிதே மில்லத் ஆகியோர் விரும்பிக் கேட்ட பெருமையுடைய பாடல் இவருடையது. இவர்தம் ‘இறைவனிடம் கையேந்துங்கள் – அவன் இல்லை என்று சொல்லுவதில்லை’ , ‘அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா ‘ முதலிய பெயர் பெற்ற பாடல்கள் 500க்கு மேற்பட்ட இசைத் தட்டுகளிலும் ஒலிநாடக்களிலும் பதிவாகி தமிழ்கூறு நல்லுலகம் எங்கும் இனிது ஒலித்து வருகின்றன.
நன்றி: முனைவர் இரா. திருமுருகன்
நன்றி: ஆபிதீன் வலைத்தளம்