RSS

காரைக்கால் காற்று

14 Dec

rumi

“இங்கு காலையில் வீசுவது கடற்கரைக் காற்று, மாலையில் வீசுவது காரைக்கால் காற்று” என்று ஒருவர் நாகூரைப் பற்றிக் கவிதை எழுதினார். இதெல்லாம் கவிதையா என்று நீங்கள் கேட்கலாம். அவர் எழுதியது கவிதையா இல்லையா என்பது இங்கே முக்கியமான விஷயமல்ல. ஆனால் அந்த இரண்டு வரிகளில் ஒரு கிண்டல் இருக்கிறது. ஒரு விமர்சனம் ஒளிந்திருக்கிறது. அது நாகூர்க்காரர்களுக்கு அல்லது நாகூரைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும். அப்படி என்ன கிண்டல் அல்லது விமர்சனம் என்கிறீர்களா? இதோ சொல்லிவிடுகிறேன்.

நாகூர் என்பது கடற்கரையோரமாக அமைந்த ஊர் என்பது மேலே கண்ட கவிதை வரிகளைப் படிப்பவர்களுக்கு எளிதாகப் புரிந்திருக்கும். காரைக்கால் என்பது பாண்டிச்சேரி யூனியன் டெரிடரியைச் சேர்ந்த ஒரு முக்கியமான ஊர் என்பதும் தெரிந்திருக்கும். ஆனால் கடற்கரைக் காற்றுக்கும் காரைக்கால் காற்றுக்கும் என்ன வித்தியாசம் என்பது புரிந்திருக்க நியாயமில்லை! ஆமாம். காரைக்கால் நாகூரிலிருந்து கிட்டத்தட்ட 13 கி.மீ. தூரத்திலேயே இருந்தாலும், நாகூர் தமிழ்நாட்டுக்கும் காரைக்கால் பாண்டிச்சேரிக்குள்ளும் போய்விடுகிறது. அதனால் என்ன என்கிறீர்களா? அதானால் ஒன்றுமில்லை. காரைக்காலும் கடற்கரை ஊர்தான். ஆனால் மாலையில் அங்கிருந்து வீசும் காற்றில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. அந்த வித்தியாசம் இரண்டு ஊர்களுக்கும் அடிக்கடி விஜயம் செய்யும் ‘குடிமகன்’களுக்கு மட்டுமே வெளிச்சம் அல்லது வாசம்!

ஆமாம். தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமுலில் இருந்தாலும் பாண்டிச்சேரி யூனியனில் மதுவிலக்குக்கு எப்போதுமே விலக்குதான். நாகூர் பழைய பஸ்டாண்டிலிருந்து பொடி நடையாக காரைக்காலை நோக்கி நடந்து போனால் ஒரு கால்மணி நேரத்தில் ஒரு சின்ன ஊர் வரும். அந்த ஊர் பெயர் வாஞ்சூர். அது நாகூர் நாயகம் தவம் செய்த சின்ன ஊரும்கூட. அவர்கள் தவம் செய்த இடம் என்பதைவிட, பல வாலிப வயோதிக அன்பர்கள் அனுதினமும் தவம் கிடக்கும் இடம் வாஞ்சூர் என்று சொன்னால் அது மிகையே இல்லாத உண்மை. வாஞ்சூரிலேயே பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம் தொடங்கிவிடுவதால், ‘பார் மகனே பார்’ என்று ‘பார்’களும் சாராயக் கடைகளும் அங்கே எந்நேரமும் திறந்திருக்கும். இதுதான் மேலே யாரோ சொன்ன கவிதையின் விஷேஷம்!

தமிழ் நாட்டில் குடிக்க முடியாத மகன்களெல்லாம் காலார நடந்து வீறுநடை போட்டு வாஞ்சூர் சென்று ‘அடி’த்துவிட்டு தள்ளாடிய நடையுடன் நாகூருக்குத் திரும்புவார்கள் மாலை வேளைகளில். ‘காரைக்கால் காற்று’ அவர்கள் வாயிலிருந்து வரும் ‘வாசம்’தான்!

நாகூரைப் பற்றிய நிஜங்களில் ஒன்றே ஒன்றுதான் இது. ஆனால் நாகூரில் அவ்வப்போது வீசும் காரைக்கால் காற்றை மீறி எப்போதுமே வீசிக்கொண்டிருப்பது ஆன்மிக, இலக்கிய, மதநல்லிணக்கத் தென்றல்கள். எல்லோரும் ஓர் குலம், எல்லோர்க்கும் ஓரிறைவன் என்ற தத்துவம் தழைத்துக் கொண்டிருக்கிறது நாகூரிலும் நாகூர் தர்காவிலும். 2005 டிசம்பரில் வந்த சுனாமியால் சாகடிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட உடல்கள், ஜாதி மத வேறுபாடின்றி நாகூர் தர்காவுக்குள் இருக்கும் அடக்கஸ்தலத்திலேயே உரிய மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட்டன என்பது கண்கூடான வரலாறு.

நாகூர் ரூமி

புலிகள் துரத்துகின்றன

பா.ராகவன்

உறக்கத்துக்கு பதிலாக உறக்கமின்மை, செழுமைக்கு பதிலாக வறுமை, பெருமைக்கு பதிலாக எளிமை என நீங்கள் மாற்றிக் கொள்ளாதவரை நீங்கள் சூஃபிகளின் கூட்டத்தில் இணைய முடியாது – இப்ராஹீம் இப்னு அதஹம்.

இஸ்லாத்தின் ஒரு பிரிவினரான சூஃபி ஞானிகள் பற்றி அங்குமிங்குமாகக் கொஞ்சம் படித்திருக்கிறேன். பவுத்தத்தில் ஒரு ஜென் போல இஸ்லாத்துக்கு சூஃபித்துவம் என்று வெகுநாள்கள் வரை எண்ணிக்கொண்டிருந்தேன்.

இல்லை. நுண்ணிய வித்தியாசங்கள் நிறையவே இருக்கின்றன. நேற்றிரவு நாகூர் ரூமி எழுதிய சூஃபித்துவம் [Sufism] பற்றிய புத்தகத்தைப் படிக்க எடுத்து ஒரே இரவில் – நிறுத்தாமல் படித்து முடித்தபோது, மிக எளிதாகப் புரிந்துவிட்டது போலவும், ஒரு வரி கூடப் புரியாதது போலவும் இருவேறு உணர்வுகள் ஏற்பட்டன. ஆனால் படித்து முடித்த கணத்திலிருந்து இந்த வினாடி வரை புத்தியில் இதைத் தவிர வேறு எதுவுமே ஓட மறுக்கிறது. வண்ணமயமானதொரு பேருலகைச் சுற்றிப் பார்த்து வந்த பரவசம் இருக்கிறது. அபாரமானதொரு ரீங்காரம் இதில் உள்ளது. கற்கும் ஆவல் உண்டாகிறது.

ஆனால் குரு இல்லாமல் சூஃபி பயில இயலாது என்கிறார் ரூமி. இனிமேல் நான் எங்கே தேடிப்போவது? புத்தகத்தில் வருகிற ஏராளமான விளக்கக் கதைகளுள் ஒரு சில இங்கே உங்கள் பார்வைக்கு.

இந்தப் புத்தகம் ஜனவரி மாதம் வெளியாகும். எத்தனை பக்கங்கள் வரும், என்ன விலை என்பதெல்லாம் இப்போது தெரியவில்லை. நான் படித்தது மேனுஸ்கிரிப்ட்.

*

கற்க வேண்டியதையெல்லாம் கற்றுவிட்டதாக நினைத்த ஒரு சிஷ்யர், ஒரு நாள் வேகமாக ஓடி வந்து தன் குருவின் வீட்டுக் கதவைத் தட்டினார்.

யாரது? என்றார் உள்ளேயிருந்து குரு.

நான்தான் என்றார் சிஷ்யர்.

போ போ, இன்னும் நீ முழுமையடையவில்லை என்றார் குரு.

திரும்பிச்சென்ற சிஷ்யர் மேலும் சில ஆன்மிகப் பயிற்சிகளை மேற்கொண்ட பிறகு மறுபடியும் வந்து குரு வீட்டுக் கதவைத் தட்டினார்.

யாரது?

இம்முறை, நீங்கள்தான் என்றார் சிஷ்யர்.

உள்ளே வா. இருவருக்கு இடமில்லை இந்த வீட்டில் என்றார் குரு.

– இது ஜலாலுத்தீன் ரூமியின் மஸ்னவியில் வரும் ஒரு கதை. சூஃபித்துவத்தின் சாரம் இதுவே.

*

ஒருவனை ஒரு புலி துரத்திக்கொண்டு வந்தது. மலைப்பகுதியில் பயந்து ஓடிய அவன் ஒரு பாறையில் தடுக்கி விழுந்தான். எப்படியோ ஒரு மரத்தின் கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்கினான். அவனுக்கு ஆறடிக்கு மேலே அந்த புலி நின்றுகொண்டிருந்தது. நூறடியில் கீழே கடல் விரிந்து கிடந்தது. அவன் பிடித்துக் கொண்டிருந்த கிளையையும் இரண்டு எலிகள் கடித்துக் கொண்டிருந்தன.

“இறைவா, என்னைக் காப்பாற்று” என்று அவன் அலறினான்.

“காப்பாற்றுகிறேன். ஆனால் முதலில் கிளையிலிருந்து உன் கையை விடுவி” என்று அசரீரி வந்தது.

காப்பாற்றக் கோருமுன் அவன் கையை எடுத்திருந்தால், அவன் சூஃபி.

*

ஆரிஃப் நாயகம் (ரிஃபாயி) ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டார். அழைத்தவர் வீட்டுக்கு அவர் சென்றபோது, அவரைத் திரும்பிச் சென்றுவிடுமாறு சொன்னார் அழைத்தவர். ஒன்றும் சொல்லாமல் திரும்பி வந்தார் ரிஃபாயி. பின் மறுபடியும் அதே மனிதரால் அழைக்கப்பட்டார். ஒன்றும் சொல்லாமல் ரிஃபாயி மறுபடியும் சென்றார். வீடுவரை வந்தபிறகு மறுபடியும் அவரைத் திரும்பிச் சென்றுவிடுமாறு சொன்னார் அழைத்தவர். ஒன்றும் சொல்லாமல் உடனே திரும்பி வந்தார் ரிஃபாயி. இவ்வாறு மூன்று முறைகள் நடந்தன.

நான்காவது முறை, ரிஃபாயி அழைத்தவர் வீட்டுக்கு வந்ததும், அழைத்தவர் அவரை உட்கார வைத்து, “உங்களைப் போன்ற ஒருவரை நான் பார்த்ததில்லை. இறைவனுக்காக என் பிழை பொறுக்க வேண்டும்” என்று கூறினார். அதற்கு ரிஃபாயி ஒரு பதில் சொன்னார். அதுதான் இங்கே முக்கியமானது.

“என்னைப் போன்ற ஒருவரைப் பார்த்ததில்லை என்று சொன்னீர்களே, நீங்கள் நாயைப் பார்த்ததில்லையா? எத்தனை முறை எஜமானன் அதை விரட்டி விரட்டி அடித்தாலும், மீண்டும் அழைக்கும்போதெல்லாம் அது வாலாட்டிக் கொண்டே திரும்பி வருவதை நீங்கள் பார்த்ததில்லையா?”

ஆணவமின்மை என்பது சூஃபித்துவத்தின் அடிப்படைகளுள் ஒன்று.

*

சூஃபித்துவம் என்பது இஸ்லாத்தில் இருப்பதுதான். பௌத்தத்திலிருந்து ஜென் தத்துவம் பிறந்ததுபோல, இஸ்லாத்திலிருந்து சூஃபித்துவம் வந்துள்ளது. சூரியனிலிருந்து வெளிச்சம் வருவதுபோல. இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமெனில், சடங்குரீதியான வைதீக இஸ்லாம் இல்லாமல் சூஃபித்துவம் இருக்க முடியும். ஆனால் சூஃபித்துவம் இல்லாத இஸ்லாம் உயிரற்ற உடலுக்கு ஒப்பானதாகிவிடும்.

பொதுவாக சூஃபிகளுக்கு எதிராகச் சொல்லப்படும் கற்பனையான குற்றச்சாட்டு அவர்கள் ‘ஷரியத்’ என்று சொல்லப்படும் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கும் சடங்குகளுக்கும் மதிப்பு கொடுப்பதில்லை, அவற்றைப் பின்பற்றுவதில்லை, அவற்றுக்கு மாற்றமாக நடந்தார்கள் என்பது. ஆனால் உண்மை இதற்கு நேர்மாறானதாக இருந்தது. சூஃபிகள் மார்க்கச் சட்டங்களை மிகவும் மதித்து, பேணி நடந்தார்கள்.

தமிழ் நாட்டின் கடற்கரையோர ஊரான நாகூரில் அடக்கமாகி, ‘நாகூர் ஆண்டவர்’ என்றறியப்படும் ஷாஹுல் ஹமீது ஆண்டகைக்கும் அவர்களது வளர்ப்பு மகனுக்கும்  ‘நிகழ்த்தப்படும் அற்புதங்கள்’ பற்றி ஒரு நாள் ஓர் உரையாடல் நடந்தது.

ஒரு வேளைத் தொழுகையைத் தவறவிட்ட தன் வளர்ப்பு மகன் யூசுஃப் இடம் அவர் கேட்டார், “மகனே, இத்தனை வருடங்களில் என்றைக்காவது நான் ஒரு வேளை தொழுகையை நிறைவேற்றத் தவறியதுண்டா?”

“இல்லை”

“ஒரு வேளைத் தொழுகையையாவது நேரம் தவறித் தொழுதிருக்கிறேனா?”

“இல்லை”

“இதைவிட வேறு என்ன அற்புதம் நான் நிகழ்த்த வேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறாய்?”

*

ஒருமுறை பாலைவனத்தின் வழியாக ஓர் ஒட்டகத்தின் மீது உணவு, உடை போன்ற சுமைகளை ஏற்றிக்கொண்டு பிஸ்தாமி சென்றுகொண்டிருந்தார். அதைப் பார்த்த ஒருவன், “இந்த ஒட்டத்தின்மீது இவ்வளவு சுமைகளா? அநியாயமாக இருக்கிறதே” என்றான். அதைக்கேட்ட பிஸ்தாமி, “இந்த ஒட்டகம்தான் இச்சுமைகளை சுமக்கிறது என்று நினைக்கிறாயா? நன்றாகப் பார்” என்றார். அவன் மறுபடியும் பார்த்தபோது ஒட்டகத்தின் முதுகுக்கும் சுமைகளுக்கும் இடையில் ஒரு சாண் இடைவெளி இருந்ததைக் கண்டு, “இதென்ன அதிசயம்?” என்று கூறினான்.

“உண்மையை உன் கண்களிலிலிருந்து மறைத்தால் என்னை ஏசுகிறாய். உண்மையை உனக்குத் திறந்து காட்டினால் அதை உன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் என்னதான் செய்வது?” என்றார்.

*

முல்லா ஒருமுறை உரத்து சிந்தித்துக்கொண்டிருந்தார்.

“நான் உயிரோடு இருக்கிறேனா அல்லது செத்துவிட்டேனா என்று எப்படித் தெரிந்துகொள்வது?”

“என்ன உளறுகிறீர்கள்? செத்துப்போனால் உடம்பெல்லாம் ஜில்லிட்டுவிடுமல்லவா?” என்றார் முல்லாவின் மனைவி.

இந்த உரையாடல் நடந்த சில நாட்கள் கழித்து முல்லா ஒரு காட்டுப் பகுதிக்கு மரம் வெட்டப் போனார். அது குளிர் காலத்தின் மையப்பகுதி. மரம் வெட்டிக் கொண்டிருக்கும்போது திடீரென்று தன் கை கால்களிலெல்லாம் குளிர் ஏறி விறைக்க ஆரம்பித்தது முல்லாவுக்கு.

“ஐயையோ, நான் நிச்சயமாக செத்துவிட்டேன். செத்துப் போனவர்கள் வேலை பார்க்க முடியாதல்லவா?” என்று சொன்னவர், செத்துப் போனவர்கள் நிற்கவும் கூடாதென்றெண்ணி தரையில் பிணம் மாதிரி அசையாமல் படுத்துக் கொண்டார். அப்போது அங்கு வந்த சில ஓநாய்கள் மரத்தில் கட்டி வைத்திருந்த அவரது கழுதையைக் கடிக்க ஆரம்பித்தன.

“ம்..செய்யுங்கள். நான் செத்துவிட்டேன். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஹும்.. நான் மட்டும் உயிரோடு இருந்தால் என் கழுதையை நீங்கள் இப்படி கடிக்க விட்டுவிடுவேனா?” என்றார்.

உயிரோடு இருப்பதனாலேயே ஒரு மனிதனால் உண்மையைப் புரிந்து கொண்டுவிட முடியும் என்ற கருத்தை சூஃபித்துவம் ஏற்றுக்கொள்வதில்லை.

Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: