நாகூர் தர்காவிற்கு வருகைதரும் பக்தகோடிகளின் காதுகளில் “காணிக்கை உண்டியல்லே போடுங்க” என்ற ‘கணீர்’ நாதம் விழாமல் இருக்க வாய்ப்பில்லை.
வெளி மாநிலக்காரர்களைக் கண்டுவிட்டால் “உண்டிமே நியாஸ் டாலோ” என்ற மொழிபெயர்ப்பு வாசகம் இன்னும் சற்று உச்ச ஸ்தாயியில் ஒலிக்கும்.
ஹூ….ம். அவர்கள் கஷ்டம் அவர்களுக்கு. லட்சக்கணக்கில் முதலீடு செய்துவிட்டு எதிர்பார்த்த வசூல் கிடைக்காவிட்டால் உண்டியல் காண்ட்ராக்ட் எடுத்தவரின் நிலைமை என்னாவது?
ரிகார்ட்டிங் முடிந்த கையோடு, ஏ.ஆர்.ரகுமான் , கேசட் வடிவிலான தங்க பிஸ்கட்டினை தர்கா உண்டியலில், நெரிசல் குறைந்த நேரத்தில், நைஸாக வந்து போட்டுவிட்டு, நல்ல பிள்ளையாக போய்விடுவாராம். உண்டியல் காண்ட்ராக்ட் எடுத்தவர் அன்று நரிமுகத்தில் (தபேலாக்காரர் அல்ல) முழித்திருப்பார் என்று வைத்துக் கொள்ளுங்களேன். [ஆஸ்கார் அவார்ட் வாங்குவதற்கு முன் ஆஸ்கார் சிலை வடிவிலான தங்கச்சிலையை உண்டியலில் போட்டுவிட்டுப் போயிருப்பாரோ?]
கவிஞர் கண்ணதாசன் ஒருமுறை திருப்பதி சென்றிருந்தபோது திருமலையான் உண்டியலில் இக்கவிதையை எழுதி சேர்ப்பித்தாராம்
“எங்கடனைத் தீர்ப்பாய் இறைவா திருமலைவாழ்
வெங்கடேசு ரப்பெருமாள் வேந்தனே – மங்காத
செல்வம் எனக்கள்ளித் தினமும் தருவாயேல்
நல்வழியில் வாழ்ந்திருப்பேன் நான்!”
திருப்பதி உண்டியல் காண்ட்ராக்ட்காரர் உண்டியலை திறந்து பார்த்தபோது நொந்து நூடுல்ஸாகி இருப்பார்.
காணிக்கையாக காசோ, நகையோ போட்டிருந்தாலாவது தேவலாம். அட்லீஸ்ட் தெலுங்கில் ஒரு கவிதை எழுதியிருந்தாலாவது அவருக்கு புரிந்திருக்கும். வெறும் துண்டு காகிதத்தை வைத்துக்கோண்டு என்ன செய்வார். பாவம் காண்ட்ராக்ட்காரர்!
ஒருவேளை கண்ணதாசன் நாகூருக்கு விசிட் அடித்திருந்தால் “உண்டிமே நியாஸ் டாலோ” என்ற பொன்மொழிக்கான உண்மையான அர்த்தம் அவருக்கு புரிந்திருக்குமோ..?
“தர்ஹா உள்ளே
காணிக்கை எல்லாம்
உண்டியல் போட
கட்டளைக் குரல்கள்..! “
– என்ற கவிஞர் ஜபருல்லா அவர்களின் வசனகவிதை என் நினைவுக்கு வந்தது.