RSS

நீதிபதி நாகூர் மு.மு.இஸ்மாயீல்

12 Apr

copy-2-of-mmismail

(நீதியரசர் மு.மு.இஸ்மாயீல் அவருடனிருந்து பழகிய வழக்கறிஞர் த. இராமலிங்கம், தம் நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்)

நாகூரில் ஒர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர், நீதிபதி இஸ்மாயீல் அவர்கள். வறுமை சூழ்ந்த இளமை என்றாலும் படிப்பிலும் இலக்கியத்திலும் இளமை யிலேயே சிறந்து விளங்கியவர். பள்ளிப் பருவத்திலும் கல்லூரிப் பருவத்திலும் பேச்சுப் போட்டிகளில் பரிசுகள் பெற்ற கதையை, ஓய்வாகப் பேசும் நேரங்களில் சொல்லிக் கொண்டே இருப்பார்.

முயற்சியினால் முன்னுக்கு வந்தவர், அவர். டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதி பதியாகப் பதவியேற்று அதன் பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் தலைமை நீதிபதியாகவும், நீதித் துறைக்கு அவர் ஆற்றிய சேவை மகத்தானது.

பண்பட்ட இலக்கியவாதியாக அவர் திகழ்ந்தார். இலக்கியத்தில் நயம் பாராட்டிப் பேசிக்கொண்டிருப்பது அவருக்குப் பிடிக்காது. நகைச்சுவை சொன்னால் கோபமே வந்துவிடும். மேடையில் பேசப்படும் ஒவ்வொரு சொல்லும் இலக்கியத்துக்கோ, சமுதாயத்துக்கோ நேரிடையாகப் பயன்படவேண்டும் என்பார்.

சென்னை கம்பன் விழாவில் ஒருமுறை மாலை நிகழ்ச்சிக்கு அவர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பேசிய பேச்சாளர் ஒருவர், ஒரு நகைச்சுவை சொன்னார். துரதிருஷ்டவசமாக அதே நகைச் சுவையைக் காலை நிகழ்ச்சியிலும் வேறு பேச்சாளர் ஒருவர் சொல்லியிருந்தார். இவரும் அதையே சொல்ல, தலைமைப் பொறுப்பிலிருந்த நீதிபதி இஸ்மாயீல் அவர்களுக்குச் சட்டென்று கோபம் வந்துவிட்டது. “இந்த கத்திரிக்கா ஜோக்கெல்லாம் காலையிலேயே சொல்லிவிட்டாங்க, நீங்க உங்க கருத்தைப் பேசுங்க’ என்று ஒலிபெருக்கியிலேயே சொன்னார்.

நீதித் துறையில் மட்டுமல்ல. இலக்கிய உலகிலும் அவர் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். அவர் மேடையில் இருக்க வேண்டும் என்பதில்லை. பார்வையாளர்கள் வரிசையில் இருந்தால் கூட பேச்சாளர்கள் தயங்கித் தயங்கிப் பேசுவார்கள்.

இலக்கிய உலகில் அடுத்த தலைமுறை வளர வேண்டும் என்பதில் உறுதியான எண்ணம் கொண்டிருந்தார். அவருடைய எண்ணத்தைச் செயலாக்கத் துணை நின்ற பெருமை, செயலாளராக இருந்த பழ.பழநியப்பன் அவர்களையே சாரும். நீதிபதி இஸ்மாயீல் அவர்களும் பழ.பழநியப்பன் அவர்களும் வழி காட்டாமல் இருந்திருந்தால் நாங்கள் எல்லாம் இலக்கிய உலகத்திற்குள் காலடி வைத்து இருக்கமுடியாது.

மாநில அளவில் மாணவ-மாணவியர்க்குப் பேச்சு, கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகளை அவருடைய வழியில் கம்பன் கழகம் இன்றும் நடத்தி வருகிறது. பேச்சுப் போட்டியில் வெற்றிபெறும் மாணவ-மாணவியரைக் கம்பன் விழா மேடையில் ஏற்றிப் பேச வைக்கும் வழக்கத்தை நீதிபதி இஸ்மாயீல் அவர்களும் பழ.பழநியப்பன் அவர்களும்தான் உருவாக்கினார்கள். இன்று பல கழகங்கள் அதைப் பின்பற்றி வருகின்றன.

மதுரை கம்பன் கழகம், அவருடைய தமிழ்த் தொண்டைப் பாராட்டி பெரும் தொகை ஒன்றை விருதாகக் கொடுத்தது. அவர் வீட்டுக்கே சென்று நாங்கள் அனை வரும் வழங்கினோம். அப்போது பெற்றார். ஆனால் மறுநாள் ஒரு கடிதம் எழுதி, அந்தப் பணத்தையும் வைத்து, கம்பன் கழகத்தின் துணைத் தலைவர் ஏ.வி.எம்.சரவணன் அவர்களுக்கு அனுப்பிவிட்டார். “இந்தப் பணத்தை நான் வைத்துக்கொள்வது முறையாக இருக்காது’ என்று கடிதத்தில் எழுதியிருந்தார். பின் அவருடைய அனுமதியின் பேரில், கம்பன் கழகத்தின் அறக்கட்டளையில் அப்பணம் சேர்க்கப்பட்டது.

எவருக்கும் எக்காலத்திலும் தலை வணங்காத தகைமையாளராக வாழ்ந்து, தன் வாழ்வை நிறைவு செய்து கொண்டிருக்கிறார், நீதிபதி இஸ்மாயீல் அவர்கள். வளர்ந்து வரும் தலை முறைக்கு அவரது நேர்மையும் மன உறுதியும் தலைவணங்காத் தன்மையும் என்றும் வழிகாட்டி நிற்கும். 

– நன்றி (SIFY – TAMIL)

மறைவுச் செய்தி (The Hindu)

kannadasan

சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி யாக விளங்கிய நீதியரசர் மு.மு. இஸ்மாயீல், நேர்மையின் இலக்கணமாக விளங்கியவர். தலைசிறந்த தமிழறிஞர்; சென்னைக் கம்பன் கழகத்தின் தலைவராகப் பல்லாண்டுகள் தொண்டாற்றியவர்; அரும்பெரும் நூல்களை இயற்றி அன்னைத் தமிழுக்கு அணி சேர்த்தவர்; அவர் தம் சிறப்பியல்புகள் கவியரசர் கண்ணதாசனைப் பெரிதும் கவர்கின்றன. உடனே மனம் திறந்து பாராட்டுகிறார்.

“புன்னகை மின்னும் தோற்றம்
புகழிலும் பணியும் ஏற்றம்
தன்னரும் திறத்தி னாலே
சபைகளை ஈர்க்கும் ஆற்றல்
இன்முகம் காட்டி னாலும்
இயல்பிலே கண்டிப்பாக
நன்மையே செய்யும் மன்னன்
நாட்டுக்கோர் நீதி தேவன்!
பதவியில் உயர்ந்த போதும்
பாரபட் சம்இல் லாமல்
நதியென நடக்கும் நேர்மை
நண்பர்க்கும் சலுகை யின்றி
அதிகார நெறியைக் காக்கும்
அண்ணலார் இஸ்மா யீல்தம்
மதியினை யேபின் பற்றி
மாநிலம் வாழ்தல் வேண்டும்!”

(”கண்ணதாசன் பாடிக் கொடுத்த மங்கலங்கள்” பக். 158)

நீதியரசர் இஸ்மாயீலின் நேர்மைக்குக் கவியரசர் கண்ணதாசன் வழங்கியிருக்கும் இந்தக் கவிதைச் சான்றிதழ், நல்லோரைப் பாராட்டும் கவிஞரின் நற்பண்புக்கும் சான்றாக விளங்குகிறது.

நன்றி: சமரசம் 1-15 ஜூலை 2006

 

மு.மு. இஸ்மாயில்

தினமணி – ‘தலைசிறந்த 100 தமிழர்கள்’ பகுதியில் வெளியிடப்பட்டது (Year 2000):

கம்ப ராமாயணம் என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நீதிபதி மு.மு. இஸ்மாயில் (78). அந்த அளவுக்குக் கம்ப ராமாயணத்துடன் தன்னை இணைத்துக் கொண்டவர். நாகை மாவட்டம் , நாகூரில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. ஹானர்ஸ் படித்து பின் சென்னை சட்டக் கல்லூரியில் முதல் வகுப்பில் தேறினார்.

1946 முதல் 1951 வரை வழக்கறிஞர். அப்போது விவேகானந்தா கல்லூரியில் பகுதி நேரப் பேராசிரியராகவும் இருந்தார். 1951 முதல் 1959 வரை சென்னை சட்டக் கல்லூரியில் பகுதிநேர விரிவுரையாளர். அதன் பிறகு தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர். 1967-ல் புதிதாக ஏற்படுத்தப்பட்ட தில்லை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி. 1979-ல் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி.

தன்னைக் கலந்து ஆலோசிக்காமல் கேரள மாநிலத்துக்கு மாற்றியதை ஆட்சேபித்து 1981-ல் பதவியை ராஜினாமாச் செய்தார். பள்ளி மாணவராக இருந்தபோதே கதர் ஆடை அணிந்து காங்கிரசுக்காகப் பிரசாரம் செய்தார். சிறுவயதிலிருந்தே உணவில் சுத்த சைவம். மேற்படிப்புக்காகச் சென்னை வந்தபோது காங்கிரஸ் தலைவர்கள் ராஜாஜி, சத்தியமூர்த்தி ஆகியோருடன் நெருங்கிப் பழகினார்.

சென்னையில் கல்லூரியில் படித்தபோது தந்தை ஸ்தானத்தில் இருந்து இவரை ஆதரித்த பேராசிரியர் கே.சுவாமிநாதனை நன்றியுடன் நினைவு கூர்கிறார். தமிழில் ஆர்வம் அதிகமாக இருந்ததால் திரு.வி.க, கல்கி, உ.வே.சாமிநாதய்யர் ஆகியோர் மீது மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. காரைக்குடியில் நடக்கும் கம்பன் விழாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கலந்து கொண்டார். ‘கம்பன் கண்ட சமரசம்’, ‘கம்பன் கண்ட ராமன்’, அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்’ உள்பட 20 நூல்களை எழுதியிருக்கிறார். தமிழகத்தின் பல பகுதிகளில் கம்பன் கழகங்களைத் தொடங்கியிருக்கிறார். தற்போது சட்டக் கமிஷனின் தலைவர். “கடவுள் நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் வெற்றிக்கு முக்கியக் காரணம். பேராசிரியர் கே.சுவாமிநாதன் போன்ற உத்தமர்கள் என்னை ஆதரித்ததும் ஒரு காரணம்” என்பவர்.

“எதிலும் நேர்மையையும் சத்தியத்தையும் பின்பற்றினால் கடவுள் அருள் தானாக வரும்” –

இளைய தலமுறைக்கு : விடாமுயற்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.

***

நீதிமன்றத்திற்கும், நீதித் துறைக்கும் பெருமை சேர்த்த நீதிபதிகளில் அவர் ஒருவர். ஒருமுறை மொரார்ஜி தேசாய், ‘இஸ்மாயில் போன்ற நீதிபதிகள் இந்த நாட்டில்தான் உருவாக முடியும். அவரைப் போன்றவர்கள் தோன்றுகிற இந்த பூமிக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பதில் என்ன சந்தேகம்?’ என்று என்னிடம் கூறினார். செதல்வாட் என்ற பிரபல வக்கீல்,’ எல்லா நீதிபதிகளும் இஸ்மாயில் அளவு சட்ட அறிவு படைத்தவர்களாக இருந்தால் வழக்குகளை நடத்துவது எளிதாகி விடும்’ என்று கூறியிருக்கிறார்.

இது தவிர, தனது மத நம்பிக்கைக்கு எந்த சிறு பழுதும் இல்லாமல், கம்ப ராமாயணத்தை பெரும் இலக்கியமாக மதித்து, அதில் அவர் காட்டிய புலமை பிரமிக்கத்தக்கது.

துக்ளக் 2.2.2005 இதழில் ‘சோ’
நன்றி : ஆபிதீன் பக்கங்கள்

A Great Indian, the Pride of Tamil Nadu &  a perfect Muslim – by vikas Kumar

 

Leave a comment