கடந்த இரண்டு வருட கால அவகாசத்திற்குள் நாகூர் தமிழ்ச் சங்கம் ஆற்றிய தமிழ்ச் சேவை மற்றும் பொதுச்சேவையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. தமிழ் படைப்பாளிகளையும், படிப்பாளிகளையும் ஒன்றிணைக்கும் ஒரு இயக்கமாக “இலக்கியத்தால் இதயங்களை ஒன்றிணைப்போம்” என்ற முழக்கத்தோடு சாதி, மத வேறுபாடுகளைக் களைந்து ஒரு முன்னோடியாக இது விளங்குகிறது என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை. தமிழ்ப் படைப்பாளிகளை இனம்கண்டு அவர்களை நாடறியச் செய்யும் இந்த சங்கத்திற்கும் நம் வாழ்த்தையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்வோம்.
25.08.2007
நாகூர் தமிழ்ச் சங்கத்தின் துவக்க விழா தேசிய மேல்நிலைப்பள்ளி அரங்கத்தில் கொண்டாடப்பட்டது. சங்கத்தின் நிறுவனர் எம்.ஜி.கே.ஹுசைன் மாலிம் தலைமை தாங்கினார்.பால்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு உ.மதிவாணன் பேருரை ஆற்ற, மாண்புமிகு வி.மாரிமுத்து எம்.எல்.ஏ. வாழ்த்துரை நிகழ்த்த புலவர் சீனி சண்முகம் மற்றும் புலவர் சண்முக வடிவேலு சிறப்புரை ஆற்றினார்கள். கவிஞர் அப்துல் கையூம் எழுதிய “போன்சாய் மற்றும் “அந்தநாள் ஞாபகம்” கவிதை நூல் வெளியிடப்பட்டது.
நாகூர் குலாம் காதிறு நாவலரின் “பொருத்த விளக்கம்” மற்றும் “புலவராற்றுப்படை” உரை எழுதி வெளியிட்ட பேராசிரியர் இரா.கண்ணன் அவர்களை வாழ்த்தி முன்னாள் நாகை சட்டமன்ற உறுப்பினர் எம்.ஜி.கே.நிஜாமுத்தீன் பாராட்டுரை ஆற்றினார். கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம், தலைமை ஆசிரியர் ஆர்.பழமலைநாதன், கவிஞர் காவ்யன் உட்பட ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் கலந்துக் கொண்டு உரையாற்றினர்.
10.02.2008
நாகூர் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பாட்டு பட்டி மன்றம் தேசிய மேல்நிலைப்பள்ளி அரங்கத்தில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. “மக்களை பெரிது கருத்தால் கவர்ந்தவர் யார்?” என்ற தலைப்பில் காரசாரமான விவாதம் நடந்தேறியது. “பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமே!” என்ற வாதத்தையொட்டி தஞ்சை திருமதி சா.மல்லிகா, திரு எம்.ஜி.கே, நிஜாமுத்தீன், பட்டுக்கோட்டை திருமதி பரமேஸ்வரி குணா முதலானோர் ஆதரித்துப்பேச, “நாட்டுக் கோட்டை கண்ணதாசனே!” என்ற வாதத்தையொட்டி ஏனங்குடி கவிஞர் ஜீவா பழனிவேல், கவிஞர் இஸட் ஜபருல்லாஹ், நன்னிலம் செல்வி மகேஸ்வரி முதலானோர் ஆதரித்துப் பேசினார்கள்.
18.04.2008
நாகூர் தமிழ்ச் சங்கம், திருவாரூர்-வண்டாம்பாளை லயன்ஸ் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமில் ஏராளமானோர் பங்கு கொண்டு பலன் அடைந்தனர்.
16.08.2008
நாகூர் தமிழ்ச் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழாவும், சுதந்திர தின விழாவும், ஒருசேர கொண்டாடப்பட்டது. இடம் : தேசிய மேல்நிலைப்பள்ளி வளாகம். விழா பேருரையை கவிக்கோ. அப்துல் ரகுமான் அவர்கள் ஆற்றினார்கள். நாகை மற்றும் திருவாரூர் தமிழ்ச் சங்கம் அமைப்பாளர்கள் ஒன்றுகூடி நிகழ்ச்சிக்கு பேராதரவை வழங்கினார்கள்.
07.08.2009
“தேவை மனித நேயம்” நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இடம்: தேசிய மேல்நிலைப்பள்ளி. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் மா.இராசேந்திரன், சன் டிவி புகழ் திரு.வீரபாண்டியன் உட்பட ஏராளமான தமிழ் அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.
19.08.2009
நாகூர் ஆஸ்தான சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ.காதிர் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விழுது வழங்கும் விழா. இடம் : நாகூர் தர்கா உட்புறம். நாகை மாவட்ட ஆட்சியர் ச. முனியநாதன் விருது வழங்கி மகாவித்வானை கெளரவித்தார்.