சென்னை புதுக்கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார் முனைவர் ஹ.மு.நத்தர்சா. தொடக்க காலத்திலிருந்தே திறம் படைத்த எண்ணற்ற நாடறிந்த நற்றமிழ் படைப்பாளிகளை தமிழ்க்கூறும் நல்லுலகிற்கு வழங்கியிருக்கின்றது சென்னை புதுக்கல்லூரி.
பாலூர் கண்ணப்ப முதலியார் தலைமையில் இயங்கத் தொடங்கிய புதுக்கல்லூரியின் தமிழ்த்துறை, கலைமாமணி டாக்டர் நா.பாண்டுரங்கன் தலைமைப் பொறுப்பேற்ற காலக்கட்டத்தில் மேலும் பல ஏற்றங்களைப் பெற்று இன்றைக்கு உயர்தமிழ் ஆய்வு மையமாக உயர்ந்திருக்கின்றது என்று கூறலாம். கவிஞர் ஈரோடு தமிழன்பன், கவிஞர் இன்குலாப், அப்துல் ரசாக், அஹ்மது மரைக்காயர் போன்ற எழுத்தாற்றல் மிக்க தமிழறிஞர்களை கோடிட்டுக் காட்ட முடியும்.
இலக்கியப் பணி ஆற்றிவரும் முனைவர் ஹ.மு.நத்தர்சா சிறந்த படைப்பிலக்கியவாதி, நல்ல திறனாய்வாளர், உயர்ந்த கல்வியாளர், திறமான பேச்சாளர், அனைத்துக்கும் மேலாக பழகுதற்கினிய பண்பாளர்.
“மாடமலி காரைக்கால்” என்றும் “மாமதில் சூழ் மாடக் காரைக்கால்” என்றும் சேக்கிழார் போன்ற தமிழ்ப்புலவர்கள் போற்றிய புகழ்மிக்க காரைக்கால் ஈன்றெடுத்த பெருமைக்குரிய படைப்பாளி இவர்.
இசைத்தமிழின் முகவரியாகத் திகழும் காரைக்கால் மண்ணில் பிறந்து, இயற்றமிழின் பெருமித அடையாளமாகத் திகழும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பாடம் பயின்று, பொன்விழா கண்ட சென்னைப் புதுக் கல்லூரியில் வெள்ளி விழா காண விழைகிறது இவரது ஆசிரியத் தமிழ்ப் பணி.
முத்தமிழ் மணக்கும் நாகூர் இவரது சம்பந்தக்குடி. நாகூர், நாகை, காரைக்கால் வட்டார மொழியில் இவர் தொடர்ந்து எழுதி வரும் சிறுகதைகள் இப்பகுதி வாழ் மக்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கம் ஆகியவற்றை பறைசாற்றும் படைப்புக்களாக சுடர்விட்டு வருகின்றன.
பள்ளிப் பருவத்தில் இவரது விட்டுக்கு அருகாமையிலிருந்த “பால்ய முஸ்லிம் அசோசியேஷன்” நூலகத்தில் மணிக்கணக்காக அமர்ந்து ஏராளமான சிறுகதைகள் சுவைத்து மகிழ்ந்த அனுபவம், இவரது இலக்கிய ஆர்வத்திற்கு வித்திட்டு இவரை ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளனாக உருவாக்கி இருக்கிறது.
எட்டாம் வகுப்பு படிக்கையில் பள்ளி ஆண்டு மலரில் “அந்தோணிக்கு கொடுத்த இருபது பைசா” என்னும் சிறுகதைக்கு இவருக்கு கிடைத்த பாராட்டு இவரது எழுத்துக்கு தூண்டுகோலாய் அமைந்திருக்கிறது.
அக்காலத்தில் அறிஞர் அண்ணாவினால் “அடுக்குமொழி அண்ணல்” என்று பட்டம் சூட்டம் பெற்ற உ. அபுஹனீபா மரைக்காயர் காரைக்காலில் “பால்யன்” பத்திரிக்கை நடத்திக் கொண்டிருந்த காலமது. நத்தர்சா எழுதிய சிறுகதை முதற்முதலாக அச்சேறியது “பால்யன்” பத்திரிக்கையில்தான்.
அப்போது பிரபலமாக இருந்த எத்தனையோ இதழ்களுக்கு இவரெழுதி அனுப்பிய சிறுகதைகள் பிரசுரிக்கப்படாமலே சுவற்றில் அடித்த பந்தாய் திரும்பி வந்தபோதும் சற்றும் மனம் தளராத இவரது விடாமுயற்சி இவருக்கு வெற்றியைத் தேடித் தந்தது என்பது முற்றிலும் உண்மை.
சிறுகதை எழுத்தாளனாக இவருக்கு அங்கீகாரம் தர மறுத்த பத்திரிக்கைகள் பிற்காலத்தில் இஸ்லாமியச் சிறுகதைகளை ஆய்வுச் செய்து முனைவர் பட்டம் பெற்ற போது அதே இதழ்கள் இவரது எழுத்தாற்றலை புகழ்ந்துத் தள்ளின.
முன்னுக்கு வரத்துடிக்கும் எழுத்தாளர்கள் எப்படிப்பட்ட தடைக்கற்களையெல்லாம் சந்திக்க நேரிடும் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்ததாலோ என்னவோ பாளையம் சையத், மற்றும் என்னைப் போன்ற போன்ற எத்தனையோ எழுத்தாளர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக இவர் திகழ்ந்திருக்கிறார்.
விளையாட்டுப் போக்காக நாகூர் வாழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வண்ணம் “அந்த நாள் ஞாபகம்” என்ற பெயரில் நானெழுதிய கவிதைகளைப் படித்து விட்டு என்னை ஊக்குவித்து அதற்கொரு இலக்கிய அந்தஸ்தை வழங்கி அதை சிறுநூலாய் வெளியிடுவதற்கு முழுமுதற்காரணமாய் இருந்த இவரது ஆதரிக்கும் மனப்பான்மையை இங்கு நான் பதிவு செய்தல் அவசியம்.
கல்லூரி படிப்பு முடித்துவிட்டு புதுக்கல்லூரியில் ஆசிரியப் பணி மேற்கொண்ட இவருக்கு படைப்பிலக்கியத்தில் கொடிகட்டிப் பறந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன், மக்கள் கவிஞர் இன்குலாப் போன்றவர்களின் அருகாமை இவருக்குள் உறங்கிக் கொண்டிருந்த கதைஞனை உசுப்பி விட்டது என்றால் அது மிகையில்லை.
“அதிகாலை” பத்திரிக்கைக்கு நாடறிந்த எழுத்தாளர் நாகூர் ரூமி அளித்த பேட்டியில் “தற்கால எழுத்தாளர்களில் யாரை நீங்கள் முன்னிறுத்துவீர்கள்?” என்ற கேள்விக்கு அவர் பின்வருமாறு பதிலளிக்கிறார்.
“ஒரு சில மிக சிறப்பான சிறுகதைகளை எழுதி இருக்கிறார் நத்தர்சா. ஒரு சில என்று ஏன் சொல்கிறேன் என்றால், நத்தர்சா நிறைய சிறுகதைகளை எழுதி இருக்கிறார். ஆனால் என்னுடைய பாரபட்சமற்ற தேர்வில் ஒரு சிலதான் தேறும். ஆனால் எப்படிப்பட்ட எழுத்தை உருவாக்கவல்லவர் என்று புரிந்துகொள்ள அந்த ஒரு சில கதைகள் போதும். ‘செப்புத் தூக்கி’ என்று ஒரு கதை. இறந்த உடலின் பின்னால் அல்லது முன்னால், அடக்கஸ்தலத்தில் விநியோகம் செய்யப்பட வேண்டிய சில சமாச்சாரங்களைச் சுமந்து செல்லும் ஒரு அனாதையின் இறப்பு பற்றியது. இதுவரை யாரும் தொடாத ஒரு பாத்திரத்தைத் தொட்டு மிகையின்றி மிகச் சிறப்பாக ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார். ஒருவர் நிறைய எழுத வேண்டுமா என்ன? ஒரு சோறு போதாதா? அந்த வகையில் நத்தர்சா குறிப்பிடத்தகுந்தவர். “செப்புத் தூக்கி” பாணியில் அவர் தொடர்வாரேயானால் தமிழுக்கு இன்னொரு சிறந்த படைப்பாளி கிடைப்பார். நத்தர்சா போன்றவர்கள் பரவலாக அறியப்படவும் பாராட்டப்படவும் வேண்டியவர்கள்.”
“இவர் எழுதிய முதல் சிறுகதை தொகுப்பிற்கு நான் முன்னுரை வழங்கியபோது, இஸ்லாமிய சிறுகதை இலக்கிய உலகில் ஹ.மு.நத்தர்சா கொடிகட்டிப் பறக்க நான் கம்பமாக இருப்பேன் என்று சொல்லியிருந்தேன். என் கூற்றை அவர் இன்று மெய்ப்பித்திருக்கிறார்” என்று புகழ்மாலை சூட்டுகிறார் முனைவர் கம்பம் சே. சாகுல் அமீது.
“காரைக்காலில் பிறந்து முதன்முதலில் “முனைவர்” பட்டம் பெற்ற முஸ்லிம் என்ற பெருமை ஹ.மு.நத்தசாவைச் சாரும்” என்ற தகவலை பதிவு செய்கிறார் அதே ஊரைச் சார்ந்த கலைமாமணி பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர்.
“இவர் விரல்கள்
இளையவை;
எழுதும் வித்தகம்
முதிர்ச்சிகள்
இட்ட முத்தங்களால்
சிவந்தவை”
என்று தன் கன்னல் வரிகளால் இவரது விரல்களுக்கு கணையாழி அணிவிக்கிறார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.
எட்டு ஆண்டுகள் செலவழித்து இவர் மேற்கொண்ட இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைகள் குறித்த ஆய்வுகளில் நெற்றிப் புருவத்தை உயர்த்த வைக்கும் பல அரிய செய்திகளை காண முடிகிறது.
“சிறுகதையின் வடிவம் நமக்கு ஐரோப்பியர்களால் அறிமுகம் செய்யப்பட்டிருக்கலாம் . ஆனால் சிறுகதையின் வனப்பு தமிழுக்கு புதிதல்ல” என்கிறார் இந்த பேராசிரியர்.
“அலாவுத்தீனும் அற்புத விளக்கும், அலிபாபாவும் 40-திருடர்களும் முதலான 1001 அரபுக் கதைகளும், சிந்துபாத் கதையும், லைலா-மஜ்னு கதையும், ஹாத்திம்தாய், குலேபகவாலி போன்ற கதைகளும் அரபுலகில் மட்டுமின்றி ஐரோப்பாவிலும் தனது செல்வாக்கைச் செலுத்தி இந்திய மக்களின் இரசனைக்கு விருந்தளித்த கற்பனை அலைமிக்க படைப்பிலக்கியங்களாகும்” என்று அரபு மொழி இலக்கிய முண்டாசுக்கு ஒரு நற்சான்றிதழ் இறகை சொருகுகிறார் இந்த ஆய்வாளர்.
“தமிழ் மண்ணில் வடிவமைப்புமிக்க சிறுகதையை எழுதியவர் வ.வே.சு.ஐயர் என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் ‘ஆறில் ஒரு பங்கு’ எனும் சிறுகதையை சுதேசமித்திரன் இதழில் எழுதி தமிழ்ச் சிறுகதை உலகில் முதல் அடியெடுத்து வைத்த பெருமைக்குரியவர் மகாகவி பாரதியார்” என்ற அரிய கண்டுபிடிப்பை நம் கண்முன் வைக்கிறார் ஹ.மு.நத்தர்சா.
மகாகவி பாரதியார் “ரெயில்வே ஸ்தானம்” என்னும் சிறுகதை மூலம் தமிழகத்தில் முஸ்லீம்களின் வாழ்க்கைச் சிக்கலைப் புலப்படுத்தியிருப்பதை நமக்கு புரியவைக்கிறார் இவர். 1920ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி சுதேசமித்திரன் இதழில் பிரசுரமான இச்சிறுகதை, முஸ்லிம் ஒருவர் உடன்பிறந்த மூன்று சகோதரிகளைத் திருமணம் செய்து அதனால் அடையும் அவதியைச் சித்தரிக்கிறது.
இச்சிறுகதையில் காணப்படும் முரண்பாடான விமரிசனத்திற்கு பாரதியார் துலங்கல் தெரிவித்த விதம் மகாகவியின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. இஸ்லாமியச் சட்டபடி முதற்மனைவி உயிரோடு இருக்கையில் அவள் கூடப் பிறந்த சகோதரிகளைத் மணமுடிப்பது தடுக்கப்பட்டுள்ள விடயத்தை ஒரு முஸ்லிம் நண்பர் தெரியப்படுத்தி இருக்கிறார். அறியாமல் செய்த தன் தவறுக்கு வருந்திய பாரதியார் சிறுகதை பிரசுரமான அதே சுதேசமித்திரன் இதழில் “ரெயில்வே ஸ்தானம் என்ற கதையில் நான் மேலே கூறி சாதாரணத் தவறு புகவிட்டது பற்றி பத்திராதிபரும் படிப்போரும் என்னை பொறுத்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன் எனத் திருத்தம் வெளியிட்டச் செய்தியினை பெ.கோ.சுந்தராஜன் (சிட்டி), சோ.சிவபாத சுந்தரம் எழுதிய “தமிழில் சிறுகதை – வரலாறும் வளர்ச்சியும்” என்ற ஆய்வு நூலை மேற்கோள் காட்டுகிறார் முனைவர் ஹ.மு.நத்தர்சா.
24.1.91’ குமுதம் இதழில் ‘நஸ்ரின் என்னும் புனைப்பெயரில் எழுதிய “இரண்டாம் தாரம்” என்னும் சிறுகதை வழி இஸ்லாமியச் சிறுகதையுலகில் அடியெடுத்து வைத்தார் ஹ.மு.நத்தர்சா.
ஹ.மு.நத்தர்சாவின் சிறுகதைகள் மணிச்சுடர், முஸ்லிம் முரசு, சமரசம், இடயவாசல், ராஜம் போன்ற பத்திரிக்கைகள் இவரது சிறுகதைகளை வெளியிட்டுருக்கின்றன.
• 1994-ல் முதல் சிறுகதைத் தொகுப்பு “சின்னச் சின்ன ஆசை”
• 1996-ல் இரண்டாம் சிறுகதைத் தொகுப்பு “உறவுப்பறவைகள்”
• 1999-ல் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு “பெத்த மனசு”
ஆகியவை பிரசுரமாகி இருக்கின்றன.
• இவையன்றி மதுரை நாயகன் மாவீரன் கான் சாகிபு, என்னும் வரலாற்று ஆய்வு நூல்
• சாகித்திய அகாடமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் இறையருட் கவிமணி கா. அப்துல் கபூர் குறித்த நூல்
• 80-களில் இஸ்லாமியத் தமிழ் சிறுகதைகள் எனும் ஆய்வு நூல்
இவரது எழுத்தாற்றலுக்கு பெருமை சேர்ப்பவை. “உறவுப் பறவைகள்” 1996-ஆம் ஆண்டுக்கான புதுவை அரசின் கம்பன் புகழ்ப்பரிசை பெற்றுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் துணைப் பொதுச் செயளாலராக இருந்து சிறப்பாக செயல்பட்டு வரும் அவ்வப்போது பல பத்திரிக்கைகளில் தொடர்ந்து சமுதாயக் கருத்துக்களை பிரதிபலிக்கும் கட்டுரைகள் தொடர்ந்து எழுதி வருகிறார். இவரது இலக்கியப்பணி மேலும் சிறக்க நாம் வாழ்த்துவோமாக.
– அப்துல் கையூம்
shajahan
September 4, 2014 at 1:42 pm
அஸ்சலாமு அலைக்கும். தாங்கள் எழுதிய நாகூர் ரவிந்தர் (எம் ஜி ஆர். ரவிந்தர்) பற்றிய செய்தியை தற்போதுதான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. அவர் 7 வருடங்களுக்கு முன்னால் எங்களைப்பிரிந்து இறைவனடி சேர்ந்து விட்டார்கள். அவர்களின் நினைவு மட்டும் தான் எங்களிடம் உள்ளது. மேலும் விபரங்களுக்கு ஈமெயில் அனுப்பவும். நன்றி.
அப்துல் கையூம்
September 7, 2014 at 8:05 pm
எனது இமெயில் முகவரி. vapuchi@gmail.com மேலும் தகவல்கள் தந்தால் அவர்களைப்பற்றி விவரமாக எழுதுவேன் இன்ஷாஅல்லாஹ்