– மு.அ. அபுல் அமீன்
காலம் கணித்து
துவங்கும் பயணம்
துவங்கிய பயணமே
காலத்தைக் கணித்தது
பாதுகாக்க தந்த
பணம் பொருட்களை
ஏதுவான ஏந்தல்
அலியிடம் கொடுத்து
உரியவரிடம் சேர்க்கச்
சொல்லி புறப்பட்டார்
தாய்நாட்டை துறந்து
செல்லும் பொழுதும்
வாய்மை காத்த வாகான பயணம்
யாசீன் சூரா
சீராய் ஓதி
வீசிய மண்ணால்
கண்ணால் காணது
உறக்கமின்றி
உருவிய வாளுடன்
உறைந்து நின்றது
உத்தம நபியைக்
கொல்ல வந்த
குறைஷிக் கூட்டம்
யாசீன் சூராவின்
மகத்துவத்தைக் காட்டும்
மகத்தான பயணம்
இரவின் இருட்டில்
துவங்கிய பயணம்
இவ்வுலகின் இருட்டை
விரட்டி வெளிச்சம்
காட்டியது
அபூபக்கரை அழைத்துச் சென்றார்
அழைப்பின்றியே தொடர்கின்றனர்
ஆயிரமாயிரம் கோடி
இருவரே சென்றனர்
இவ்வுலகே தொடர்கிறது
மூன்று நாட்கள்
தங்கியதால் வந்தது
தெளருக்குக் கெளரவம்
புறா கட்டிய கூடும்
சிலந்தி நூற்ற வலையும்
அரணாய் அமைந்து
குகையைக் கோட்டையாக்கியது
இஸ்லாமியக் கோட்டை
உலகெங்கும் உயர
முன்மாதிரியாய்
தானே கல்சுமந்து
தாஹா நபி கட்டிய
குபா பள்ளி
குவலயம் முழுதும்
கூடித் தொழும் மஸ்ஜிதுக்கு
அமைத்த அடித்தளம்
வழியில் இருந்த
வாதியுர் ரானூனா
முதல் ஜும்ஆவிற்கு
மூல வித்தானது
பாங்கொலி கேட்டு
பாய்ந்தோடுகின்றனர்
பள்ளிக்கு
ஆய்வு செய்வோர்
அதிசயிக்கின்றனர்
தூயோன் அல்லாஹ்
தூய நபி ஹிஜ்ரத்தில்
தோற்றுவித்த மாற்றத்தை
AZEEZ AHMED
October 15, 2009 at 9:08 am
Nice Poetry