[கலைஞர் மு. கருணாநிதியின் தோள்மீது உரிமையோடு கை போட்டு அரவணைத்துப் பேசும் தகுதி நாகூர் அனிபா ஒருவருக்குத்தான் உண்டு என்பது இந்த புகைப்படத்தைப் பார்த்தாலே நன்கு விளங்கும்]
வாழும் இசை சரித்திரத்தை வாழ்த்தும் வாழும் இலக்கியச் சரித்திரம்
(கலைஞரின் வாழ்த்துரை)
கத்துகடல்சூழ் நாகையைத் தழுவி நிற்கும் நாகூர் அனிபாவுக்கு முத்து விழாவாம் !
முத்துவிழா, பவழவிழா, வைரவிழா, மாணிக்க விழா என எத்தனையோ நவரத்தின விழாக்கள் நடத்தலாம் !
இசையெனில் புகழ் எனவும் பொருள் உண்டு. இவரோ இசைமுரசு ! ஆம் ! முரசென இசை முழங்குபவர் ! இளமை முதல் இவர் பெற்ற புகழும் அவ்வாறே !
அரசியலில் நான் அடியெடுத்து வைத்த சிறுபிராயம் தொட்டு நாகூர் அனிபாவை அறிவேன் !
அன்று கேட்ட அதே குரல் ! வளமிக்க குரல் ! அனைவரையும் வளைக்கும் குரல் ! ஆதிக்கக்காரர்களின் செவிப்பறையைக் கிழிக்கும் இடியோசைக் குரல் !!
அந்தக் குரல் மட்டுமா இன்றளவும் நிலைத்து நிற்கிறது? – அவர் நெஞ்சில் பதித்த கொள்கை உறுதியுமன்றோ ஆடாமல் அசையாமல் அப்படியே நிலைத்து நிற்கிறது.
உலகில் இஸ்லாமியப் பெருமக்கள் வாழும் இடமெல்லாம் இவர் குரல் கம்பீரமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது !
பல்வேறு நாட்டுத் தமிழ் மக்கள் இந்த இசைமுரசம் கேட்டு நரம்பு முறுக்கேறிடத் தலை நிமிர்கின்றனர் !
பெரியார் பெயரை உச்சடித்தால், அண்ணாவின் பெயரைச் சொன்னால் ஒருவித முகக்கோணலுடன் சமுதாயத்தில் பலர் பார்த்து ஒதுக்கிய நேரத்தில் – அவர்களின் பெயரைச் சொன்னால் பிழைக்கவே முடியாது எனும் அச்சுறுத்தல் ஆட்டிப் படைத்த நேரத்தில் – இந்த இயக்கத்தில்
தன்னை ஒப்படைத்துக் கொண்டு, மேடை தோறும் இசைமுழக்கம் செய்த
அனிபாவின் இளமைத் தோற்றத்தையும் கண்டிருக்கிறேன். இன்று என்னை விட ஓரிரு வயது குறைந்தவராயினும் நரைத்த தாடியுடன் கழகத்தின் கொடிமரமாய் மிடுக்காகத் திகழ்வதையும் கண்டு பூரிப்புக் கொள்கிறேன்.
ஏறத்தாழ 40 ஆண்டுக்கு முன்பு என நினைவு. கழக ஏடு “நம்நாடு” இதழில் ஒரு பாடல் வெளிவந்திருக்கிறது. “அழைக்கின்றார் அழைக்கின்றார்.. அண்ணா” என்பது பாட்டின் எடுப்பாகும். அதைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியது, “இந்தப் பாடலை பாடுவதற்கு ஏற்ற குரல் நாகூரில்தான் இருக்கிறது என்று !
அழைப்பு விடுத்தேன் பாடச் சொல்லி ! மெட்டு அமைத்து பாடிக்காட்டினார் ! அந்தப் பாடல், அனிபாவுக்கு திருவாடுதுறை ராஜரத்தினத்துக்குத் தோடி ராகம் போல ! எங்குச் சென்றாலும் அதைப் பாடச் சொல்கிறார்கள். நான் எழுதிய திரைப்படம் ஒன்றில் அந்தப் பாடலை அனிபாவே பாட வேண்டுமென்றேன். பாடினார். ஆனால் அந்தக் காலத்துத் தணிக்கை அதிகாரி அந்தப் பாடலை வெட்டிவிட்டார்.
1957-ஆம் ஆண்டு கழகம், பொதுத்தேர்தல் களத்தில் குதிப்பது என முடிவெடுத்தபோது நாகை சட்டமன்றத் தொகுதியின் கழக வேட்பாளர் இசைமுரசு அனிபா அவர்கள்தான். அந்தத் தேர்தலில் அவர் தனது தேர்தல் பிரசாரத்தைப் பெரும்பாலும் இசைநிகழ்ச்சி வாயிலாகவே நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்தத் தேர்தலில் அவருக்கு வெற்றி வாய்ப்பு கிட்டவில்லை. அதற்காக அவர் சோர்ந்து விடவில்லை. தொடர்ந்து கழக மேடைகளில் இசைமுரசு கொட்டத் தொடங்கினார். சட்டமன்ற மேலவையில் நாகூர் அனிபா அவர்கள் இடம் பெற்றிருந்தபோது கருத்துக்களை இசையாகவே பொழிந்து அனைவரையும் கவர்ந்தார்.
வெறும் இசைவாணர், கழக மேடைகளில் இசை நிகழ்ச்சி நடத்துகிறவர் என்றில்லாமல் கழகம் நடத்திய போராட்டங்களில் சிறை புகுந்தவர். ஒரு காலகட்டத்தில் திருச்சிச் சிறையில் நானும் அவரும் ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளுடன் அடைக்கப்பட்டிருந்தது, நினைத்தாலே நெஞ்சினிக்கும் நிகழ்ச்சி.
அளவு கடந்த பாசத்தை என்மீது கொட்டி, பற்றினைக் கழகத்தின் மீது காட்டி கழகத்தினரின் பேரன்பைப் பரிசாகப் பெற்றுள்ள இசைமுரசு அனிபா அவர்கள், இஸ்லாமியப் பெரியோரும் இளைஞரும் மகிழ்ந்து போற்றத்தக்க அளவுக்கு நபிகள் நாயகம் அவர்களைப் பற்றிப் பாடியுள்ள பாடல்களை இன்னமும் வானொலி நிலையம் ஒலிபரப்புவதையும், தொலைக்காட்சி நிலையம் நிகழ்ச்சியாக்க்கிச் சித்தரிப்பதையும் கண்டு, கேட்டு களிப்புறாதவர் எவர்?
பாலப்பருவ முதல் நானும் அனிபா அவர்களும் இணந்து நடத்தும் இலட்சியப் பயணம், இடையூறுகளை, சோதனைகளை, வேதனைகளைக் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது.
என் மீது இவருக்கு எவ்வளவு அன்பு இருந்தால் இவர் உழைத்துச் சம்பாதித்துக் கட்டியுள்ள நாகூர் இல்லத்துக்கு “கலைஞர் இல்லம்” என்று பெயர் சூட்டியிருப்பார் என்பதை எண்ணிப் பார்க்கிறேன். இதயம் விம்முகிறது – பூரிப்புத் தாங்காமல் !
இனியும் வாழ்க பல்லாண்டு இசைமுரசு அனிபா என வாழ்த்துகிறேன் !
மு.கருணாநிதி
(இசைமுரசு நாகூர் ஹனிபா அவர்களின் 70-வது பிறந்தநாளுக்கு முத்துவிழா மலர் வெளியிட்டபோது கலைஞர் வழங்கிய வாழ்த்துரை இது)
தொகுப்பு : அ.மா.சாமி
நன்றி : அண்ணா அறிவாலயம் நூலகர் சுந்தரராசன்