RSS

இசைமுரசு’ நாகூர் இ.எம். ஹனிபாவின் பாடல்கள் பல்கலை மட்டத்தில் ஆய்வு செய்யப்படவேண்டும்

14 Oct

master_head

எஸ்.ஐ. நாகூர்கனிscan0004

இஸ்லாமிய இன்னிசைப் பாடல் பாடியவர்களில் ‘இசை முரசு’ நாகூர் இ. எம். ஹனிபா ஒப்பாரும் மிக்காரும் அற்றவராக உயர்ந்து நிற்கின்றார். இலங்கை- இந்தியா – மலேஷிய- சிங்கப்பூர் போன்ற தமிழ்ப் பேசும் முஸ்லிம்கள் வாழும் வட்டத்தில், இந்த நாகூர் இ. எம். ஹனி பாவின் அளவிற்கு இஸ்லாமிய, கீதங்கள் பாடியவர் கள் எவருமிலர். இவரது பாடல்கள் முஸ்லிம்கள் மத்தியிலும், தமிழ் சகோதரர்கள் நடுவிலும் ஏற்ப டுத்திய தாக்கத்தின் தரத்திற்கு ஈடாக, மற்ற எந் தப் பாடகர்களின் பாடல்களும் ஏற்படுத்தவில்லை என்ற உண்மையை, விருப்பு- வெறுப்புக்கு அப் பால் நின்று சிந்திப்போர் நிச்சயம் ஏற்றுக்கொள்ளவே செய்வர்.

‘இசை முரசு’ நாகூர் இ. எம். ஹனிபாவின் குரல் வளத்தையும், பாடும் பாங்கினையும் காதாறக் கேட்டு நெஞ்சம் நெகிழ்ந்தோரும், மனம் திருந்தியவர்களும், இஸ்லாத்தை எண்ணிப்பார்க்கத் துணிந்தோரும், இஸ்லாத்தை நோக்கி வந்தோரும் ஏராளம் எனச் சொன்னால் அது மிகைப்படுத்திய கூற்றல்ல.

ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு மேலாக, இத்துறையில் அருஞ்சேவை புரிந்து வரும் இசைமுரசு, நமது அந்தக் காலத்து ‘ரேடியோ சிலோனும்’, அடுத்து வந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலி முஸ்லிம் நிகழ்ச்சிகளும் முக்கியத்துவம் தந்து, அடிக்கடி அன்னாரின் பாடல்களை ஒலிபரப்பு செய்து, நல்ல விளம்பர வெளிச்சத்தை பாய்ச்சி வந்தது. அந்த வகையில் இன்றும் இசை முரசு இலங்கைக்கு நன்றியுடையவராகவே இருக்கிறார்.

இப்படியான சிறப்புக்குரிய சாதனையாளர் நாகூர் இ. எம். ஹனிபாவின் இஸ்லாமிய கீதங்கள் பற்றி, பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வுகள் செய்து, அதனை நூலுருவில் வெளியிடுவது பயனுள்ள பணியாகும். இனிமேல் இசைத்துறையில் பாட வருவோ ருக்கும் அதுவோர் உசாத்துணை நூலாக- வழிகாட்டியாகப் பயன்படும் எனத் திட்டமாகக் கூறலாம்.

பல்கலைக்கழக மாணவர்கள் தத்தம் பட்டப் படிப்பிற்கு பல்வேறு வகையான தலைப்புகளை தெரிவு செய்து, ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். அந்த, வரிசையில், ‘இசைமுரசு நாகூர் இ. எம். ஹனிபாவின் இஸ்லாமிய கீதங்கள்’ என்னும் தொனிப்பொருளிலான தலைப்பும் ஒன்றாக அமையலாம். அப்படி ஆய்வு மேற்கொள்ளத் துணிவோருக்கு, அவர்களின் தேடல் முயற்சிக்கு, உசாத்துணை தகவல்களுக்கு ஆலோசனையாக இதோ.. சில சிந்தனைகள் கருத்துக்கள்…

‘இசைமுரசு’ நாகூர் இ. எம். ஹனிபா இஸ்லாமிய இன்னிசை கீதங்களைப் பாடத் துவங்கிய காலம், இதுவரை அவர் பாடிய பாடல்களின் தொகை, அந்தப் பாடல்களை எழுதிய பாடலாசிரியர்களின் பெயர், ஏனைய விவரங்கள், அவரது பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்கள், அவர்தம் குழுவினர்- இதுவரை நடத்திய கச்சேரிகள், ஏறிய மேடைகள், சென்ற ஊர்கள், கிராமங்கள், நாடுகள், இசைக் கச்சேரிகளை ஒழுங்கு செய்தவர்கள் என்று பல விடயங்கள் தலைப்புகள் இட்டு ஆராயப்பட வேண்டும்.

இசைமுரசு இத்துறையில் பெற்ற பட்டங்கள், விருதுகள், சான்றுகள், அவற்றை வழங்கியவர்கள், அமைப்புகள், அரசு, தனியார் மட்டத்தில் கிட்டிய அங்கீகார கண்ணியம் முதலிய தகவல்களை குறிப்பிட்டு, இந்திய- தமிழகப் பல்கலைக்கழகங்கள் அவரது அரை நூற்றாண்டுக்கு மேலான தொடர் சேவையை உன்னி, கெளரவ கலாநிதி (டாக்டர்) பட்டம் வழங்கப்பட வேண்டுமென, ஆய்வின் அடிநாதமாய் சிபார்சித்து பரிந்துரை செய்யலாம்.

நாகூர் இ. எம். ஹனிபா இலங்கைக்கு முதற் தடவையாக 1954 அளவில் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு வந்திருந்தார். இலங்கை வானொலியில் (அன்றைய ரேடியோ சிலோனில்) தம் சொந்தப் பணத்தை செலவழித்து, இஸ்லாமிய கீதம் பாடிய முதல் இஸ்லாமிய கீதப் பாடகரான, கொழும்பு வாழைத்தோட்ட வாரிசான மர்ஹும் எம். ஏ. ஹஸன் அலியார்தான், இலங்கை வந்த சாதாரண பாடகர் ஹனிபாவை ரேடியோ சிலோனுக்கு அழைத்துச் சென்று, சிபாரிசு செய்து அறிமுகஞ் செய்து வைத்தார். அதன் பின் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு, தலைநகர் கொழும்பு உட்பட, பல ஊர்களில் இசைக் கச்சேரி செய்துள்ளார் இசைமுரசு.

இசைமுரசு இலங்கைக்கு முதற் தடவையாக வந்திருந்தபோது, இலங்கையில் அவரது முதற் கச்சேரி, கொழும்பு மாநகரின் இதய இடமான வாழைத்தோட்டத்து முஸ்லிம் பாடசாலையான அக்காலத்திய கொ/ மிஹிந்துமாவத்தை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை நிலைகொண்டிருந்த கிறிஸ்தவ டச்சு தேவாலய மண்டபத்தில் மர்ஹும் எம். ஏ. ஹஸன் அலியார் முயற்சியில் நடந்தது இன்றைய தலைமுறை தெரிந்திராத தகவலாகும்.

இலங்கைப் போலவே சிங்கப்பூர்- மலேஷியா போன்ற நாடுகளுக்கு அன்னார் மேற்கொண்ட விஜயங்கள், அங்கெல்லாம் நடத்தி பாராட்டும்- சீராட்டும் பெற்ற இன்னிசை கச்சேரிகள் பற்றிய விபரங்கள், இத்துறையில் தமிழகம் தாண்டி வேறு நாடுகளில் பெற்ற அனுபவங்கள் முதலாய தகவல்களையும் உள்ளடக்கலாமே!

இசைமுரசு ஹனீபா முழு சமூகத்திற்கும் உரிய பொது சொத்தான ஓர் இசைப்பாடகராக விளங்கியபோதும், அன்னாருக்கும் அரசியல் தொடர்பு இருந்தமை சிலர் அறிந்த பரகசியமே! பேரறிஞர் சீ. என். அண்ணாத்துறையின் அபிமானத்திற்குரிய நம் இசைமுரசு, அண்ணாவின் தலைமையில் இயங்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்பகால உறுப்பினராகத் தன்னை இணைத்துக்கொண்டவர் மட்டுமல்ல, இன்றும் மனம் மாறாமல், நிலை தடுமாறாமல் தி.மு.க.வின் கண்மணிகளுள் ஒருவரகவே இயங்கி, இன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் அன்புச் சிறையின் ஆஸ்தான கைதியாக இருந்து வருகின்றார்.

கட்சிக்காக, கட்சியின் வளர்ச்சிக்காக இசைமுரசு பாடிய கட்சிப் பாடல்களும் ஆய்வில் சேர்க்கப்படவேண்டும். ‘அண்ணா அழைக்கின்றார்….’ என்ற இசைமுரசுவின் பாடல், எத்தனையோ தம்பிமார்களை இன்றும்கூட தலையசைத்து கிறங்கச் செய்வதை உரத்து சொல்ல வேண்டாமோ? தி.மு.க.வின் ஆஸ்தான பாடகர் அன்றும்- இன்றும் நம் இசைமுரசுதான்.

ஆரம்ப காலத்தில் தனிப் பாடகராக மட்டுமே பாடி வந்த நாகூர் இ.எம்.ஹனிபா, நாளடைவில் முஸ்லிமல்லாத- வேற்று மதப் பெண் பாடகியான ராணியுடன் இணைந்து, பல பாடல்களை பாடி பெருவரவேற்பு பெற்றுள்ளார். பாடகி ராணியுடன் சேர்ந்து முதலில் பாடிய ‘பலைவனம் தாண்டி போகலாமே நாம்… என்ற பாடல், இன்றும் கூட நம் செவிகளுக்கு விருந்தாகவே ஒலிக்கின்றது. கோஷ்டியாகப் பலருடன் சேர்ந்து பாடிய பாடல்களும் உண்டு. ஒருசில தமிழ்த் திரைப்படங்களிலும் இசைமுரசு பாடியுள்ளார்.

சில வேளைகளில் ஹிந்தி, உர்தூ பாடல்களையும் பாடியிருக்கின்றார் என அறிய முடிகின்றது. ஹிந்தி திரையுலகில் ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்த ஹிந்தி இசைப்பாடகர் முஹம்மத் ரபிக் பாடிய ‘பகவான்’… எனத் துவங்கும் பாடலை நம்இசை முரசு ஹனிபாவும் பாடி முஹம்மத் ரபிக்கினாலே பாராட்டப்பட்டுள்ளார் என்பது கவனிப்புக்குரியது. இவை யாவும் பிரஸ்தாப ஆய்வில் தொட்டுக் காட்டப்படவேண்டும்.

நாகூர் இ. எம். ஹனிபா பெரும்பாலும் இஸ்லாமிய கீதங்களையே பாடியுள்ளார். அதேவேளை தி.மு.க கட்சிப் பாடல்களையும் பாடியுள்ளதுபோல், சமய சாயலோ, கட்சி வாடையோ இல்லாமல் சில பொதுப் பாடல்களையும் பாடியுள்ளார். அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ (சிவாஜி கணேசன்- பானுமதி நடித்தது) படத்தில் வரும் ‘தலைவாரிப் பூச்சூடி உன்னை…’ என்ற பிரபலமான பாடலை இசை முரசுவும் பாடியுள்ளார் என்பது ஒரு பதச்சோறாகும்.

இந்திய முஸ்லிம்களின் தேசாபிமானத்தை சந்தேகிக்கும் வகையில் அவ்வப்போது சில தீய சக்திகளால் இந்திய முஸ்லிம்கள் சீண்டிவிடப்படுவதற்கு தக்க பதிலடியாக சில சமுதாயப் பாடல்களை இவர் பாடத் தவறவில்லை. ‘யாரடா சொன்னார் நாங்கள் அந்நியரென்று..’ என்ற பாடல் நல்லுதாரணமாகும்.

‘இசைமுரசு’ நாகூர் இ. எம். ஹனிபாவின் பாடல்கள் குறித்து, மனம் சிணுங்குவோரும் நம்மிடையே சிலர் இருக்கின்றனர். அத்தகையோர் தம் அதிருப்திக்கு கூறும் காரணம் என்ன தெரியுமா? அவரது பாடல்கள் ஷிர்க்கான (இறைவனுக்கு இணைவைப்புக்கு ஷிர்க் என்பர்) விஷயங்களை பரப்புகின்றன’ என்பதாகும். இதற்கு அத்தகையோர் உதாரணமாகக் காட்டும் பாடல், முன்னர் பிரபல பாடகர் ஹுஸைன்தீன் பாடிய ‘ஒருநகரில் ஏழு வயதுடைய ஏழைப்பாலகன்..’ என்ற பாடல் நம் ‘இசைமுரசு’ ஹனிபாவும் பாடிய பாடலாகும்.

இதில் இறந்துபோன சிறுவனை, வெண்ணிற ஆடைத் தரித்து வந்த ஒரு பெரியார் (சாது) உயிர் கொடுத்துச் சென்றார் என்ற கருத்து, எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? உயிர் கொடுப்பதும்- எடுப்பதும் இறைவனின் அதிகாரத்திற்கு உட்பட்ட விடயமல்லவா? எப்படி ஒருசாது உயிர்ப்பிக்கலாம்? என்பதே, மனம் சிணுங்குவோர் முன்வைக்கும் வாதமாகும்.

இன்னொரு பாடல் வேறு சிலரை மனம் சிணுங்க வைக்கிறது. அது.. ‘தமிழகத்தின் தர்காவை காண வாருங்கள்.. ‘ எனத் துவங்கும் பாடலாகும். இறைநேசச் செல்வர்களான செய்குமார்கள்- ஒலிமார்கள்- அவுலியாக்கள் பிற சமயத்தவர்களின் கலாசார தாக்கங்களுக்கு மத்தியில் இஸ்லாமிய சமயப் பிரசார முயற்சிகளில் பெருஞ்சேவை புரிந்தனர். அத்தகு இறை நேசர்கள் இறந்ததும், அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட இடங்களில் சமாதிகளை கட்டி, தர்காக்களை உருவாக்கினர். அக்காலத்திய முஸ்லிம்கள். இவ்வாறு உருவான தர்காக்கள் தமிழகமெங்கும் இருக்கின்றன. இவைகள் இருக்கும் ஊர்- பெயர்- அடங்கப்பட்ட பெரியார் பற்றிய விபரத்திரட்டாகவே ‘இசை முரசு’வின் மேற்படி பாடல் அமைந்தது.

இஸ்லாத்தில் சமாதி கட்டும் முறை இல்லவேயில்லை. இஸ்லாம் பரவிய காலத்தில், இஸ்லாமிய தெளிவுநிலை ஏற்பட்டிராத காலப் பிரிவில் உருவான இந்த தர்க்காக்கள், முஸ்லிம்களின் தோற்றத்தை, இருப்பை, பரம்பலை பறைசாற்றும் கலாசார சின்னங்களாக விளங்குகின்றன. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருந்தபோதும், பெரும்பான்மையான இந்து சகோதர்களின் நடுவே வாழும் முஸ்லிம்களுக்கு சில அனுகூலங்களை பெற்றுத் தரும் விடயங்களில் இந்தத் தடயங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்தக் கோணத்தில் இசை முரசுவின் சில பாடல்கள் காலத்தின் தேவையாக உள்ளன எனச் சொல்வோரும் உளர்.

ஷிர்க்கான விடயமான சில பாடல்களின் தொனிப் பொருள் குறித்து, மார்க்க அறிஞர்களின் கருத்துக்களையும் உள்ளடக்கி, பிரஸ்தாப ஆய்வினை தரப்படுத்தி தகுதியாக்கலாம். அத்தோடு, தமிழக முதல்வர் உட்பட தலைவர்கள், சமூகப் பிரமுகர்கள், இசைத்துறை பெரியார்கள் போன்ற பலரின் இசைமுரசு பற்றிய கருத்து முத்துக்களையும் கோர்த்து மாலையாகத் தொடுத்தால், அது சன்மார்க்க சமுதாயத்திற்கும் ஒரு சான்றிதழாக அமையும். நிகழ்காலத்தில் இம்முயற்சி பிரயோசனமாகப் படாவிடினும், எதிர்காலத்தில் அது நிச்சயம் பெரும்பயன் தரும் பெட்டகமாகத் திகழும் என்பது உறுதி. இது குறித்து சிந்திப்போம்.

தினகரன் 27.09.2009

Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: