RSS

நூல் ஆய்வு

14 Oct

f7

சிறந்த சிறுகதை எழுத்தாளரும், பண்பட்ட நாட்டாரியல் ஆய்வாளரும், தமிழ் மாமணியும், சென்னைப் புதுக்கல்லூரி தமிழ்த் துறை தலைவருமான பேராசிரியர் முனைவர் ஹ. மு. நத்தர்சா எழுதி வெளியிட்டுள்ள ‘எண்பதுகளில் இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைகள்’ என்னும் நூல், தமிழ் கூறும் நல்லுலகில் மட்டுமில்லாது, அயல் நாடுகளிலும் உள்ள தமிழ் பேசும் மக்கள் சிறுகதைகளின் சிறப்பம்சங்களையும், அதன் வளர்ச்சிப் பாதையையும் அறிந்து கொள்ள உதவும் ஆழமும், ஆளுமையும் உள்ள நல்ல நூலாகும்.

மானிட நேயமும், உயர் பண்பும் உள்ள நூலாசிரியர் ‘சின்னச் சின்ன ஆசை’, ‘உறவுப் பறவைகள்’, ‘பெத்த மனசு’ என்னும் மூன்று சிறுகதைத் தொகுப்புகளை அளித்து தமிழுக்கும், இஸ்லாமியச் சிறுகதை வளர்ச்சிக்கும் வளம் சேர்த்துள்ளார். இவருடைய சிறுகதைகள் எல்லாம் இஸ்லாமிய சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் சிறுமைகளையும், வெறுமைகளையும, அறியாமைகளையும், அலங்கோலங்களையும், ஆசைகளையும் கருப்பொருட்களாகக் கொண்டு எழுதப்பட்டவை.

நண்பர் பேராசிரியர் நத்தர்சா இந்நூலைத் தன்னுடைய முனைவர் பட்டத்திற்கு சென்னைப் பல்கலைக்கழகத்திறகு சமர்ப்பித்தார். இவர் சமர்ப்பித்த ஆய்வேட்டின் அழகிய அச்சு வடிவமே இந்நூலாகும். இந்நூல் தமிழகத் தலைநகர் சென்னையில் மே 2007 – 25, 26, 27ம் திகதிகளில் நடைபெற்ற ‘அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய ஏழாம் மாநாட்டில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நண்பர் நத்தர்சா, சிறுகதையாசிரியர் மட்டுமல்லாது நாட்டுப்புறவியலில் நல்ல தேர்ச்சிபெற்ற ஆய்வாளர். ‘மதுரை நாயகன் மாவீரன் மகான் சாகிபு’ என்னும் நாட்டுப்புற மக்களிடையே வாய்மொழியாக இருந்து வந்த கதையை சிறப்பாக ஆய்வுசெய்து, நூலாகத் தந்த பெருமைக்குரியவர். இந்நூலின் வரவினால் நடிகர் கமல்ஹாசன் தயாரித்து வந்து சினிமாப் படமொன்று, வெளிவராமலே குறைப்பிரசவமாகிய கதை, எல்லோருக்கும் தெரிந்ததே. நல்ல படைப்பிலக்கியவாதியான நத்தர்சா காரைக்காலில் பிறந்து, முதன் முதலில் ‘முனைவர்’ பட்டம் பெற்ற முஸ்லிமாவார்.

1980 ஜனவரி முதல் 1989 டிசம்பர் வரையிலான கால கட்டத்தில் ‘முஸ்லிம் முரசு’ இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளை ஆய்வுப் பொருளாகக் கொண்டு அக்கால இஸ்லாமியத் தமிழ்ச் சமுதாயம் சந்திக்க நேர்ந்த சமூகச் சிக்கல்களை இந்நூலில் நண்பர் நத்தர்சா சிறப்பாகவும், விரிவாகவும், ஆழமாகவும் ஆராய்ந்துள்ளார்.

1948ம் ஆண்டில் தோற்றம் பெற்று சுமார் 60 ஆண்டுகளாகத் தொய்வின்றித் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்த ஒரே ஒரு இஸ்லாமியத் திங்களிதழான ‘முஸ்லிம் முரசு’ அன்று தொடக்கம் இன்றுவரை, முஸ்லிம்களின் சமய, சமூகப் பண்பாட்டு வழக்கங்களை, முஸ்லிம்களின் வாழ்க்கைப் பின்னணியை அடிப்படையாகக் கொண்ட சிறுகதைகளை வெளியிட்டு பல சிறந்த சிறுகதையாசிரியர்களை அறிமுகப்படுத்தி, அவர்களைப் புகழ் பெற வைத்துள்ளது. இவர்களையெல்லாம் முன்னோடி எழுத்தாளர்கள், புதிய தலமுறை எழுத்தாளர்கள், இன்றைய எழுத்தாளர்கள் என மூன்று பிரிவினராக அறிமுகப்படுத்தி, இவர்களைப் பற்றிய குறிப்புகளையும் சிறப்பாகத் தந்து மிகவும் பொறுப்புணர்வோடு இந்நூலை உருவாக்கித் தந்துள்ள நண்பர் நத்தர்சா நம் எல்லோருடைய பாராட்டுக்கும் உரியவராவார்.

இந்நூல் 06 இயல்களைக் கொண்டுள்ளது.

1. இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும்.
2. முஸ்லிம் முரசும் சிறுகதைகளும்.
3. கதைமாந்தர்
4. கதைச் சிக்கல்
5. கதை உத்தி.
6. முடிவாய்ச் சில செய்திகள்

இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும் என்ற தலையங்கத்தின் கீழ் இருபதாம் நூற்றாண்டில் உரைநடை வளம் பெற்றுத் திகழ்ந்த காலத்திலிருந்து சிறுகதை இலக்கிய வடிவம் சிறப்பான இடத்தைப் பிடித்ததை விரிவாக எடுத்துரைப்பதிலிருந்து சிறுகதையின் எடுப்பான வளர்ச்சிக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்களைப் பற்றியும் இந்நூலில் ஆழமாக ஆராய்ந்துள்ளார்.

முக்கியமாக இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைகளின் வளர்க்கிக்கு கூடுதலான பங்களிப்புச் செய்த முஸ்லிம் இதழ்களையும், சிறுகதையாசிரியர்களைப் பற்றியும் தெளிவாக ஆய்ந்துள்ள நண்பர் நத்தர்சா, சில சிறுகதைகளையும், அவற்றின் படைப்பாளர் பற்றியும் குறிப்பிடுவது இவரின் ஆய்வின் பெறுமதியை உயர்த்திக் காட்டுகிறது.

நண்பர் நத்தர்சா தன்னுடைய ஆய்வில் முஸ்லிம் முரசு இதழையும் அவ்விதழில் எழுதிய சிறுகதை எழுத்தாளர்களையும், அவர்களின் கதை மாந்தர்களையும், இக்கதைகளில் அவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களைப் பற்றியும், கதைகளின் உத்திகளைப் பற்றியும் மிகத் தெளிவாகவும், ஆழமாகவும் ஆய்வு செய்து இந்நூலை வருங்கால சமூகத்திற்கும், பல்கலைகக் கழகங்களில் ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கும் ஒரு அரிய பொக்கிசமாகத் தந்துள்ளார்.

உயிரற்ற செத்த மாட்டையே அடித்தடித்து தங்கள் முனைவர் பட்டத்தை ஏதோ ஒருவழியில் பெறுகின்ற கலாசாரத்தை முற்றாக ஒதுக்கித் தள்ளி ஆய்வில் ஒரு புதுக் கலாசாரத்தை பேராசிரியர் டாக்டர் கம்பம் சே. சாகுல் அமீது அவர்களின் கீழ் மேற்கொண்டு அவரின் வழிகாட்டலின் அடிப்படையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள நண்பர் நத்தர்சா, உண்மையிலேயே ஒரு உழைப்பாளிதான். டாக்டர் சாகுல் அமீது,

‘நான் விரும்பிய வண்ணம் சிறுகதைத் துறையில் சிறந்த இடத்தை அடைந்ததற்காகவும் அவருக்கு விருப்பமான சிறுகதைத் துறையில் எனது மேற்பார்வையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றமைக்காகவும் நான் பெருமைப்படுகின்றேன்’ என்று கூறிய வார்த்தைகள் மேற்சொன்ன உண்மையை உறுதிப்படுத்துகின்றது.

இந்நூலில் ‘கதை மாந்தர்’ என்னும் மூன்றாவது இயலில் இவர் உலகிலுள்ள மாந்தர்களையும், அவர்களின் இயல்புகளையும் காட்டப்பட்டுள்ள சிறுகதைகளிலிருந்து வெளிக் கொணர்ந்துள்ளது சிறப்பாக இருக்கிறது.

1. இலட்சிய மாந்தர்
2. மனிதநேய மாந்தர்கள்
3. தன்மான மாந்தர்கள்
4. தற்செருக்கு மாந்தர்கள்
5. பகட்டு மாந்தர்கள்
6. போலி மாந்தர்கள்

உலகில் மேற்சொன்ன பண்புகளுள்ள மனிதர்களே இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இம் மனிதர்களின் வாழ்வியலை நண்பர் நத்தர்சா, ஆழமாகவும் சிறப்பாகவும் சிந்தித்து அவர்களை வெளிக் கொணர்ந்திருப்பது, அவருடைய சிறுகதை ஆற்றலைக் காட்டுகின்றது. இவரால் இந்நூலுக்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சிறுகதைகள் யாவும் இப்பண்புகளைத் துல்லியமாகவும், யதார்த்தமாகவும் காட்டும் சிறப்பினைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக மனித நேயத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் சொல்லும் சிறுகதைகள், அதைப்பற்றி இவர் தன் நோக்கில் கூறும் ஆய்வுகள், உதாரணங்களாகவும் இவர் தன்னுடைய ஆய்வுக்காக எடுத்தாளப்பட்ட நபி மொழி, உத்தமர்களின் உயர் கருத்துக்கள் யாவும், ஆய்வாளர் நண்பர் நத்தர்சாவுக்கு அவர் வாழும் சமூகத்தின் மேலுள்ள அன்பையும், அக்கறையையும் தெட்டத் தெளிவாகக் காட்டுகிறது.

இயற்கையாகவே மானிட நேசமும், மற்றவர்களை உளத் தூய்மையோடு மதித்தொழுகும் சிறப்பான பண்பும், முற்போக்கு கொள்கையும், யதார்த்தங்களை ஏற்று அதற்காக குரல் கொடுக்கும் கொள்கையும் கொண்ட பேரா. நத்தர்சாவின் இந்த ஆய்வேடு இன்று, ‘எண்பதுகளில் இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைகள்’ என்ற வடிவில் நூலாக வெளிவந்திருப்பது நாம் பெற்ற பாக்கியமே.

இன்று சென்னை புதுக் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராக இருந்து அயராது சேவை செய்துகொண்டிருக்கும் பேரா. முனைவர் நத்தர்சா, வருங்காலத்தில் சிறுகதைத் துறையில் ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கும் ஆய்வாளருக்கும் நல்லதொரு ஆய்வு நூலை அளித்துள்ளதோடு, தான் பணிபுரியும் சென்னை புதுக் கல்லூரிக்கும் புகழ் சேர்த்துள்ளார்.

எஸ். முத்துமீரான்
நன்றி : தினகரன் வாரமஞ்சரி

நூல்: எண்பதுகளில் இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைகள்
நூலாசிரியர்: ஹ. மு. நத்தர்சா
வெளியீடு: சுடர் பதிப்பகம், 57, லெமர் வீதி, காரைக்கால்
விலை: ரூ. 75 (இந்திய நாணயம்)
பக்கம்: 200

Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: