RSS

ஒரு மாலைப் பொழுதில் .. ..

16 Oct

ஒரு நல்ல எழுத்தாளனுக்கு எழுத்தாற்றல் + பொது அறிவு + கற்பனைத்திறன் மட்டும் இருந்தால் போதாது. Observation மிக மிக முக்கியம். சாதாரண மனிதனைக்காட்டிலும் அவனது கண்ணோட்டம் மாறுபடும்போது தான் அவன் சிறந்த படைப்பாளியாகிறான். என் நண்பன் ரபியின் (நாகூர் ரூமி) முதற் சிறுகதை இதற்கு நல்லதொரு உதாரணம். இதோ தஞ்சாவூரிலிருந்து நாகூருக்கு ‘ஓசி’யில் பஸ் பிராயணம் செய்ய உங்களுக்கு ஒரு வாய்ப்பு.

– அப்துல் கையூம்

Bus

 ஒரு மாலைப் பொழுதில் .. .. [சிறுகதை]

தலையெல்லாம் கலைந்து, உடல் பூரா வியர்வையில் நசநசத்தது. எனக்கே என்னைப் பிடிக்காமல் நான் தஞ்சாவூரில் வந்திறங்கியபோது மணி நாலாகியிருந்தது.

மருத்துவக் கல்லூரியிலிருந்து வந்துகொண்டிருந்த பஸ்ஸினுள்ளே ‘கலர் கலராக’ சில மாணவர்களும் மாணவிகளும் அட்டகாசமாக ‘ஸ்டெதாஸ்கோப்’பை கழுத்தில் மாட்டிய வண்ணம் நின்றுகொண்டிருந்தார்கள். எனக்கென்னமோ இந்த வாலிப வயதில் இந்த மாதிரியான — எந்த விதத்திலும் யாரையும் புண் படுத்தாத — இந்த இளங்கர்வப் பந்தாக்களெல்லாம் அத்தியாவசியமான தேவை என்றே தோன்றுகிறது. இவர்களைப் பார்க்கும்போது, மெடிகல் காலேஜில் சேருவதற்காகவே, பி.யு.சி.-யில் செகண்ட் க்ரூப் எடுத்து, கடைசியில் இடங்கிடைக்காமல், ‘வாயில வெரலெ வச்சுகிட்டு’ பி.ஏ.யில் சேர்ந்த நினைவு வருகிறது. ம்ஹும்…ஒரு வகையில் கொடுத்து வைத்தவர்கள்.

கண்களை உயர்த்திப் பார்த்தேன். பஸ் ஸ்டாண்டுக்கு எதிரில் புதுசாக் கட்டியிருக்காங்க — அருமையான public convenience, வாழ்க! இதற்கு முன்னே இருந்த இடம் ஒரே நாற்றமும் நரவலுமாக, உள்ளே போவதற்கே ஒரே அருவருப்பாக இருக்கும். அப்போதெல்லாம் அந்த இலாக்காவை வாய்க்கு வந்தபடியெல்லாம் ஒரு illiterate மாதிரி திட்டியிருக்கேன். India is the filthiest country-ன்னு எங்க உர்து ப்ரச·பசர் அடிக்கடி சொல்வதை நினைத்துக்
கொள்வேன்.

இப்பத்தான் அந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சமா மாறிண்டு வர்றது. அந்த அய்யர் பையன் சேகரோடு பேசிப்பேசி அவனை மாதிரியே brahmin accent எனக்கும் அடிக்கடி வந்துவிடுகிறது. நான் யாரோடு ரொம்ப நெருக்கமாகப் பழகுகிறேனோ, அவங்களோட பழக்கத்திலே ஏதாவது ஒன்னு எனக்கும் என்னையறியாமல் வந்துவிடுகிறது.

சரி, சரி, நினைவுகளை இழுத்தா அது பாட்டுக்கு திரௌபதியோட துகில் மாதிரி வந்துகொண்டே இருக்கும். என்னவோ சொல்லிக் கொண்டிருந்தேனே… ஆங்…Public Convenience! வலது பக்கத்தில் ‘ஆண்கள் கழிவிடம்’னு போட்டு, அதுக்கு மேலே ஒரு ஆணின் படம், பாஸ்போர்ட் சைஸ் ·போட்டோ மாதிரி, பாதி வரையில் அசிங்கமாக வரையப்பட்டிருந்தது. அதே மாதிரி ‘பெண்கள் கழிவிடம்’னு போட்டு பெண் குலத்தையே இழிவு படுத்துகிற மாதிரி ஒரு பொம்பளை படம்.

‘இது எதுக்கு இப்படி அழகா எழுதி, அசிங்கமா படத்தை வேறே போடணும்? ‘அப்பியரன்ஸையே ஸ்பாயில்’ பண்ணுதே…வர்றவங்க படிச்சுத் தெரிஞ்சுக்க
மாட்டாங்களா? எனக்குள் ஒரு கேள்வி ஜனித்தது.

ஓஹோ…’· பாரினர்ஸ்’ வருவாங்க இல்லையா? அவங்களுக்குத் தமிழ் எப்படித் தெரியும்? அதனாலதான் இந்த ஏற்பாடு போலருக்கு — என் மனத்துள் ஏதோ
விடை கூறியது.

ஏன் வெளிநாட்டுக்காரர்கள் மட்டும்தான் வருவார்களா? நம் நாட்டு மற்ற மாநிலங்களிலேயிருந்து தமிழ் தெரியாத எத்தனை பேர் வருகிறார்கள்? எதற்கெடுத்தாலும் இந்த மனசு வெளிநாட்டுக்கே ஓடுதே என்று எதற்கோ என்னை நானே கண்டித்துக் கொண்டேன்.

பத்து காசு கொடுத்து உள்ளே போயி, காரியமெல்லாம் பண்ணிவிட்டு, முகம் கழுவி, தலைவாரி, வெளியே வந்து, ஜில்லென்ற காற்றை முகத்திலே வாங்கி…அப்பாடா. இந்த ‘அப்பாடா’வுக்காக பஸ்ஸிலே வருகின்ற புழுதி, நசநசப்பையெல்லாம் பொறுத்துக்கொள்ளலாம் போலிருக்கிறது.

‘லைட்’டாக ஒரு காப்பி சாப்பிட்டுவிட்டு, வெளியே வந்தேன். நின்று கொண்டிருந்த பஸ்களைச் சுற்றியும் உள்ளேயும் பிச்சைக்காரர்களின் ஆக்கிரமிப்பு நடந்து கொண்டிருந்தது. ச்சே, எங்கே போனாலும் இந்தப் பிச்சைக்காரர்கள்தான். எந்த அளவுக்கு நாகரீகம் நகரங்களில் பெருகிக்கொண்டே போகிறதோ, அந்த அளவுக்கு பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையும் பெருகிண்டே போறது.

இதிலே ஜென்ட்டிலா வேறு பிச்சை! ஒரு நோட்டீஸை எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறார்கள். பஸ்ஸிலே சில பேர் அந்த நோட்டீஸை வாங்கி ரொம்ப நேரம்
படித்துப் பார்த்துவிட்டு, காசு தராமல் திருப்பித் தருகிறார்கள்! இந்தப் பிச்சைக்காரர்களையெல்லாம் ஒழிக்கவே முடியாதா?

இவர்கள்
பாரதத் தாயின்
மச்சங்கள்…

என்று நான் காலேஜில் படிக்கும்போது பிச்சைக்காரர்களைப் பற்றி என் நண்பன் எழுதிய புதுக்கவிதை ஞாபகம் வருகிறது.

எங்க ஊர் பஸ் வந்துவிட்டது. கண்டக்டரைச் சுற்றி பத்துப் பதினைந்து பேர் மொய்த்துக் கொண்டிருந்தார்கள். அதிலே ஒரு பையன் மஞ்சள்லே பெல்ஸ் போட்டு ஒரு சிங்கப்பூர் ஜெர்ஸியை ‘இன்’ பண்ணியிருந்தான். பி.யு.சி.யிலே புதுசாகச் சேர்ந்தவன் மாதிரி தெரியுது. ‘ஹலோ ஹலோ ஹலோ’ என்று கண்டக்டரின் பின்னால் நின்று கொண்டு அவர் முதுகைத் தொட்டுத்தொட்டு டிக்கட்டுக்காகத் தாவிக்கொண்டிருந்தான்.

“யாருய்யா அது? ஏன்யா, ஒனக்கெல்லாம் அறிவில்லே? படிச்ச முட்டாளா இருக்கியே? பின்னால நின்னுகிட்டு சட்டெயெ புடிச்சு புடிச்சு இளுக்குறியே… வந்து சேருது பாரு..இப்புடி முன்னால வாயா..எந்த ஊருக்குய்யா போவணும்?” என்று அந்தப் பையன் கொஞ்சம்கூட எதிர்பார்க்காத வண்ணம் கண்டக்டர் திட்டவும்…

சுற்றி இருந்தவர்கள் முகத்தில் ஒரு இளக்காரப் பார்வை. தான் பெரிதாக சாதித்துவிட்ட ஒரு பெரிய சாதனையில் அலட்டிக்கொள்ளாத மாதிரி கண்டக்டரின் முகத்தில் ஒரு அலட்சியம். அந்த அழகான பையனின் முகத்தில் பரிதாபம் வடிந்தது.

பந்தா பண்ணுகிற தன்னுடைய ‘செட்’டோடு தான் வராமல் போய்விட்ட ஒரு ஆதங்கமும், இப்படித் தனியாக வந்து அவமானப்பட்டதனால்கூட எதையோ ஒன்றைக் கற்றுக் கொண்ட மாதிரி ஒரு உணர்வும் அவன் முகத்தில் வெள்ளை வேட்டியில் பட்ட அழுக்கு மாதிரி தெளிவாகப் பிரதிபலித்தன.

ஒரு வழியாக நானும் டிக்கட்டை வாங்கிக்கொண்டு கார்னர் சீட்டில் போய் சூட்கேஸை வைத்துவிட்டு உட்காருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இந்தக் கார்னர் சீட்டில் உட்கார்ந்து போகின்ற அனுபவமே தனி. அந்த உட்காருதலில் அமைகின்ற சுகமே அலாதி. நான் யாருக்காகவும் அந்த இடத்தை விட்டுக் கொடுத்ததில்லை. இனிமேல் என்றைக்காவது என் பிரிய வசந்தமாக எவளோ பிறந்துதானே இருக்க வேண்டும்? அந்த would-be better half-க்காக வேண்டுமானால் நான் விட்டுக்கொடுக்கலாம்.

பஸ் புறப்பட்டது. டவுனை விட்டு பஸ் பச்சைப் போர்வை போர்த்தி பூமித்தாய் உறங்கும் வளமான பகுதிகளுக்கு வரும்வரை மனசுக்கு நிம்மதியில்லை. தலையை நீட்டுகையில் பச்சை பச்சையாக வயல்கள் — இளங்கதிர்கள் — இப்படியும் அப்படியும் தலையாட்டிக் கொண்டிருக்கின்றன. இஸ்லாமிய தியாலஜிப்படி பச்சையாக இருக்கின்ற எதுவுமே — அதாவது vegetations — சதா நேரமும் இறைவனை தியானித்துக்கொண்டிருக்குமாம். எனக்கு என்னமோ அவைகள் இப்போது தலையாட்டி மெய்மறந்து இறைவனைத் துதி செய்வதாகத்தான் தோன்றுகிறது.

பஸ் காற்றைக் கிழித்துக் கொண்டு சென்றுகொண்டிருந்தது. கிழிபட்ட காற்று பஸ்ஸை ஒன்றும் செய்ய முடியாததால், பக்கவாட்டில் வந்து என் முகத்தில் சளேரென்று ஒரு அறை விட்டது. ‘ஆமக்கன் அடிக்க கொழுந்தனை விழுந்து கடித்த’ மாதிரி.

தூரத்தில் ஏதோ மலைகள். அல்லது குன்றுகள். ஆண்டவன் ஆரம்பித்து வைத்த ஓவியத்தின் slihouette மாதிரி தெரிந்தது.

இந்த மாதிரி விடிவான் வெளுப்பதற்கு முன் அல்லது அடிவான் சிவப்பதற்கு முன் கார்னர் சீட்டில் உட்கார்ந்து கொண்டு பஸ்ஸிலே செல்லும்போதும், தென்றலிடம் அறைகள் வாங்கும்போதும், கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரிகின்ற பச்சையில் மனசைப் பறிகொடுக்கும் போதும் எனக்குக்கூட தனியாக எங்காவது புல்தரையில் உட்கார்ந்து கொண்டு I sit and look out என்று Walt Whitman மாதிரி கவிதை எழுதணும் போலத்தோன்றுகிறது.

லேசாகத் தூர ஆரம்பித்தது. ஆஹா! அந்தச் சாரலை முகத்தில் வாங்கும்போதெல்லாம் எவ்வளவு இனிமையாக, எவ்வளவு குளுமையாக இருக்கிறது! ஆனால், பஸ்ஸிலே உள்ள ரசனை கெட்டதுகள் எல்லாம் பக்கவாட்டில் இருக்குமே மடிப்பு மடிப்பாக, அந்தக் காலத்துக் கேமரா மாதிரி, அதை இழுத்து ஜன்னல (?) மூட ஆரம்பித்தார்கள்.

பஸ்ஸினுள் நோட்டமிட்டேன். எனக்குப் பின் சீட்டில் சில கிராமத்து வாசிகள் உட்கார்ந்து இருந்தார்கள்.

“நம்பளுக்கு இன்னும் ஒரு தடவெ மளெ நல்லா பெய்யணும். அப்பத்தான் சரிப்பட்டு வரும். ஆனா, அன்னக்கி மாதிரி அய்யோத்தி கட்டி அடிக்கப்படாது. இல்ல பக்கிரி?”

பின் சீட்டில் இருந்தவர்கள்தான். பஸ்ஸிலே போகும்போது இந்த மாதிரி பல வகையான பேச்சுக்களைக் கேட்கும்போது ஏதோ புதுக்கவிதை படிக்கிற மாதிரி தோணுது.

கண்களை நேரே ஓட்டினேன். எனக்கு முன் சீட்டில் உட்கார்ந்து இருந்தவர்கள் அத்தனை பேரும் பெண்கள். அதிலே முதலிலே அமர்ந்திருந்த பெண் அட்டகாசமாக இருந்தாள். எடுப்பான மூக்கு. அந்த மூக்கைப் பார்க்கும்போது நான் ஏழாவதோ எட்டாவதோ படிக்கும்போது சரித்திர புஸ்தகத்தில் அலெக்ஸாண்டர் என்று போட்டு ஒரு படம் வரைந்திருக்கும். அந்த அலெக்ஸாண்டர் மூக்கு ஞாபகம் வருகிறது. கண்களை இன்னும் நேரே ஓட்டினேன்.

யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

திருவள்ளுவர் படம் போட்டு எழுதியிருந்தது. இந்த மாதிரி பஸ்ஸுக்கு முன் குறளை ஏன் எழுதணும்? பஸ்ஸ¤க்கு பஸ் preach பண்ற அளவுக்கு நாடு immoral-ஆகப் போயிட்டிருக்குன்னு சொல்றாங்களா?

குறளுக்கு இடது பக்கத்திலே வள்ளுவர் படம். வள்ளுவர் ஒரு ‘பலவாக்கட்டை’ மேலே சம்மணங் கொட்டி உட்கார்ந்திருக்கிறார். வலது கையிலே எழுதுகோல். இடது கையிலே ஓலைச்சுவடிகள். ‘இனிமே எழுதி என்ன பிரயோஜனம்?’ என்று யோசிப்பதுபோல இருந்தது. அவர் தலைக்குப் பின்னால், அழகாக, தலையைவிடக் கொஞ்சம் பெரிதாக இருக்க வேண்டிய nimbus — அந்த ஒளிவட்டம் — அவரில் பாதியை விழுங்கிக் கொண்டு அசிங்கமாக இருந்தது. ச்சே! திருவள்ளுவரை  அசிங்கப்படுத்திவிட்டார்கள் !

கண்களை அப்படியே கீழே கொண்டு வந்தேன். ட்ரைவருக்கு எதிரே இருக்கும் பஸ்ஸின் முகப்புக் கண்ணாடியில் எங்கு பார்த்தாலும் மழைத்துளிகள். சமயத்தில் எதனாலோ நமக்கு உடம்பு சிலிர்த்து எல்லா மயிர்க்கால்களும் பொட்டுப் பொட்டாகத் தெரியுமே, அந்த மாதிரி இருந்தது. வைப்பர் வேலை செய்யவில்லை போலிருக்கிறது. இப்படியே அந்த மழைத்துளிகளைத் துடைக்காமல் விட்டுவிட்டால் அப்படியே அவைகள் அங்கங்கே காய்ந்து அம்மை வார்த்த முகம் மாதிரி ஆயிடும்.

மாலை இருட்டுக் கல்லறைக்குள் தன்னை கொஞ்சம் கொஞ்சமாகப் புதைத்துக் கொண்டிருந்தது. இடது கையால் தலையைக் கோதினேன். நெற்றியில் முடி ஆரம்பிக்கும் இடத்தில் தலை முடிகளுக்கிடையில் ஏதோ குளுமை. இந்தக் குளுமையை அனுபவிக்க எத்தனை தரம் வேண்டுமானாலும் பஸ் ப்ரயாணம் செய்யலாம் போலிருந்தது. இருள் மெதுவாக எங்களைக் கவ்வ ஆரம்பித்தது. லேசாக ஒரு குட்டித் தூக்கம் போட்டேன்.

விழித்துப் பார்த்தபோது பஸ் சிக்கலுக்கு வந்திருந்தது. சீக்கிரமே ஊர் வரப்போகிறது என்ற எண்ணம் வந்தவுடன் பஸ் ப்ரயாணமும் முடியப் போகிறதே என்ற கவலை படர்ந்தது எனக்கு. ஒரு நல்ல கவிதை முடியப் போவது போல் இருந்தது எனக்கு.

கணையாழி ஜூன் 1979.

Rumi

இதுதான் கணையாழியில் நான் எழுதிய முதல் சிறுகதை. ‘ஸ்பெல்லிங்’கூட மாற்றாமல் அப்படியே கொடுத்திருக்கிறேன். கணையாழியில் என் அடுத்தடுத்த கதைகள் வந்தபோது, ஆரம்பத்தில் நான் ரொம்ப innocent ஆக இருந்ததாகவும், போகப்போக அந்த innocence கெட்டுப் போய்விட்டது என்றும் என் நண்பர் ஆபிதீனிடம் அசோகமித்திரன் சொன்னதாக ஆபிதீன் சொன்ன ஞாபகம். இப்போது என்னை நானே திரும்பிப் பார்ப்பதற்கு இந்த கதை உதவுகிறது. அசோகமித்திரன் சொன்னது சொல்லியிருந்தால் — உண்மை என்றே படுகிறது. ஆங்கிலச் சொற்கள் அதிகமாக கலந்து கலந்து எழுதியிருக்கிறேன். அந்தப் பழக்கம் முற்றிலுமாக இன்னும் போகவில்லை. ஆனால் இப்போதெல்லாம் ஆங்கிலச் சொற்களை தேவைக்கேற்ப கூடுதல் விழிப்புணர்வுடன் பயன்படுத்துகிறேன். கதையை திரும்பப் படித்தபோது, தஞ்சாவூரிலிருந்து நாகூர் வரை பேருந்தில் சென்ற ஞாபகம் வரத்தான் செய்கிறது.

நாகூர் ரூமி – 27.07.05 – நன்றி : அன்புடன் குழுமம்

அடுத்த வினாடி – நூல் ஆய்வு இப்னு ஹம்துன்

நாகூர் ரூமியின் கைவரிசையில் அவரது நூல் வரிசை

இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் – நூல் ஆய்வு – தோப்பில் முகம்மது மீரான்/ யுகபாரதி

அழகிய பாண்டியன் – கருத்துரை

விக்கீபீடியா

Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: