RSS

அல்தாப்பும் அலங்கார வாசலும்

04 Nov

Alangara Vasal

பால்ய நினவுகளை அசைப்போட்டுப் பார்ப்பதில் கிடைக்கும் சுகமே ஒரு அலாதியான அனுபவம்தான்.

நண்பன் அல்தாப்புடன் தர்காவுக்குப் போகையில் நன்றாக பொழுது போகும். அவனது பக்தி சேஷ்டைகள் எங்கள் நண்பர் குழாமை பரவசப்படுத்தும்.

அலங்கார வாசல் வழியாக தார்ரோட்டில் (?) கடைத்தெருவுக்கு செல்லும்போதுகூட சில கடுமையான வழிமுறைகளைக் கடைபிடிப்பான்.

தர்கா எல்லை வந்ததுமே காலில் உள்ள செருப்பைக் கழற்றி கையில் வைத்துக்கொண்டு, தர்கா ஆபிஸ் தாண்டியதும் மீண்டும் காலில் போட்டுக் கொள்வான். அவனுக்கு கால் அரிக்குமோ என்னவோ தெரியாது. ஆனால் எங்களுக்கு புல்லரித்துப் போகும்.

தர்கா முகப்பில் அலங்கார வளைவு ஒன்று இருக்கும். அதிர்ஷ்டம் செய்த அந்த இரும்புக் குழாய் இவனிடத்திலிருந்து இறுக்கமான ஒரு “உம்மா”வை வாங்கிக் கொள்ளும்.

தர்காவுக்கு தன் டிக்கியை (பின்புறத்தை) எக்காரணத்தைக் கொண்டும் காட்ட மாட்டான். அப்படியொரு கொள்கைப் பிடிப்பு. Back Race-ல் நடப்பதைப்போல பின்னாடியே நடந்துச் சென்று யாராவது ஒரு பிச்சைக்காரி மீது மோதிவிட்டு, மோதிய தண்டத்திற்கு பத்து பைசா தானம் வேறு செய்து விட்டுப் போவான். பிடறியில் அவனுக்கு கண் இருந்திருந்தால் இந்தப் பிரச்சினையே இருந்திருக்காது.

கால்மாட்டு தெரு வாசல் வழி உள்ளே நுழையும்போதே தரையைத் தொட்டு மூன்றுமுறை கண்களில் ஒத்திக் கொள்வான். பித்தளை கேட்டின் மீதி மூன்று முறை முட்டி மோதி முத்தமழை பொழிவான். (மும்மூன்று முறை என்ன கணக்கோ தெரியாது)

தாராளமான மனசு அவனுக்கு. வெள்ளி கேட், பித்தளை கேட், இரும்பு கேட் என்று பாரபட்சம் பார்க்க மாட்டான். ‘கோல்கேட்’ தவிர எல்லா கேட்டுக்கும் உம்மா கொடுப்பான்.

அடுத்து, கொமஞ்சான் (குமைஞ்சான்) சட்டியருகே வந்ததும் தொப்பியைக் கழற்றி புகையை முடிந்த அளவுக்கு கபளீகரம் செய்து, அது கசியும் முன்பாகவே தலையில் அவசர அவசரமாக அணிந்துக் கொள்வான். அணிந்த பிறகும் புகை கசிந்து வந்துக் கொண்டிருக்கும். தலைமுடி தீப்பற்றி எரிவதுபோல்  காட்சியளிக்கும்.

பெரிய நெய்விளக்கொன்று இருக்கும். ஆட்காட்டி விரலால் நெய்யை எடுத்து நாக்கிலே தடவிக்கொண்டு மீதி பிசுபிசுப்பை தன் குரல்வளையில் பூசிக் கொள்வான். இரவு அவன் தூங்குகையில் எறும்பு மொய்க்குமா என்ற விவரம் வெளியே வராது.

இரண்டாவது நுழைவாயிலில் பெரிய உண்டியல் இருக்கும். இம்ரான் ஹாஷிமி ஸ்டைலில் அதற்கும் ஒரு இறுக்கமான ‘இச்’. மூன்றுமுறை தொட்டுக் கொள்வான். ஆனால் உண்டியலில் காசு போட மாட்டான்.

Base Ball ஆட்டத்தில் நிற்பதைப்போல சதுரவடிவில் நாலுபேர் ‘அஸா கோல்’ வைத்துக் கொண்டு அட்டென்ஷனாக நிற்பார்கள். கலெக்டருக்கு பாதுகாப்பாக வருபவர்களைப்போல சீருடை அணிந்து தலைப்பாகை அணிந்திருப்பார்கள். மிஸ் இந்தியா போட்டியில் அழகிகள் அணிவதைபோல தோள்பட்டையில் ஒரு Cross Belt. ஒவ்வொரு கோலுக்கும் மூன்று முத்தங்கள் கொடுப்பான் அவன். (தர்காவில் காணப்படும் அத்தனை ஜடப்பொருள்களுக்கும் முத்தமழை பொழிந்து விடுவான்; புறாக்கூண்டைத் தவிர)

அங்கு நின்றுக் கொண்டு அண்ணாந்து பார்க்க எனக்கு ஒரே பயம். கூரையில் ராட்சஸ சைஸில் சரவிளக்கு (Chandelier) கொத்து கொத்தாக தொங்கும். ‘தலையில் விழுந்தால் என்னாவது?’ என்று நவக்கிரகம் படத்தில் நாகேஷ் வீண்கற்பனை செய்வதுபோல், நானே வீணாக கற்பனைச் செய்து. நானே பயந்துக் கொள்வேன்.

பக்கத்தில் தாயத்து வியாபாரம் மும்முரமாக நடந்துக் கொண்டிருக்கும், ஊதுவத்தி வாசம் மூக்கைத் துளைக்கும். கோயிலில் அர்ச்சனை செய்வதற்கு முன் புரோகிதர் பெயர், நட்சத்திரம் இரண்டும் கேட்பார். இங்கு “அல் பாத்திஹா” என்று சத்தமாக ஓதத் தொடங்குவதற்கு முன் பெயர் மட்டும் கேட்பார்கள். நட்சத்திரம் கேட்க மாட்டார்கள். (சினிமா நட்சத்திரம் அல்ல)

‘வெள்ளிக்கதவை தள்ளிக் கொண்டு’ உள்ளே போவான் என்று எதிர்பார்ப்பேன். ஊஹும். அல்தாப் போகமாட்டான். காசு கொடுக்கணுமே. அதனால் இருக்கலாம். உள்ளே எட்டிப் பார்த்து ஏதோ பரிபாஷையில் பேசுவான். அனேகமாக பெரிய எஜமானுடன்தான் இருக்க வேண்டும்.

மிதியடி பாதத்தை தலையில் ஏந்தி, ‘ஜாடு’ (உருது மொழியில் ‘ஜாடு’ என்றால் விளக்குமாறு என்று பொருள்) முகத்தில் அடித்துக் கொண்டு, நடுவாசலில் பதித்திருக்கும் சீசா ஓட்டை (கண்ணாடித் துண்டு) முத்தமிட்டு பக்தி பொங்க வெளியே வருவான். கையில் ஒன்றிரண்டு மல்லிகைப்பூ, ரோஜாப்பூ இதழ், சிறிய வெத்திலை துண்டு இருக்கும். அதில் வெத்திலைத் துண்டை எடுத்து நான் வாயில் போட்டுக் கொள்வேன். ‘போலோ’ வாயில் போட்டுக் கொண்டதைப்போல் வாய் ப்ரெஷ்ஷாக இருக்கும்.

‘சின்ன எஜமான்’ வாசலில் தொங்கும் சங்கிலியை நான் சற்றுநேரம் வெறித்தபடி பார்த்துக் கொண்டிருப்பேன். ஒருகாலத்தில் இந்த சங்கிலி தரையளவுக்கு குவிந்துக் கிடந்ததாம். ஒவ்வொரு வளையமாக குறைந்துக் கொண்டே வந்து இப்பொழுது ஒருசில வளையங்கள்தான் பாக்கியாம். அதுவும் குறைந்து விட்டால் ‘கியாமத்’ நாள் வந்துவிடுமாம். அல்தாப்தான் இந்த கதையை எனக்குச் சொன்னான். அவனுக்கு யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை.

“அல்லாவே! இந்த வளையங்கள் இதற்கு மேல் குறையவே கூடாது” என்று ஆண்டவனை வேண்டிக் கொள்வேன். நீண்ட இரும்புக் கம்பியில் பொறுத்தப்பட்ட எவர்சில்வர் பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி “சலக் சலக்” என்று சங்கிலி கிணிகிணிக்க நனைத்துக் கொண்டிருப்பார் ஒருவர்.

ஏன் தான் இப்படிச் செய்கிறார்களோ? இப்படி செய்தால் சீக்கிரமே சங்கிலி கரைந்து விடாதா? கியாமத் நாள் சீக்கிரமே வந்து விடுமே ! என்று மனதுக்குள் புலம்பித் தவிப்பேன்.

அல்தாப் இப்போது எங்கிருக்கிறான் தெரியவில்லை. இப்போது, அலங்கார வாசலைப் பார்க்கும் போதெல்லாம் ஆண்டகையின் ஞாபகம் வருகிறதோ என்னவோ எனக்கு அல்தாப்பின் ஞாபகம் கட்டாயம் வந்து விடும்.
pigeon

தொடர்புடைய சுட்டி : நாகூர் ‘புறா’ணம்

Advertisements
 

2 responses to “அல்தாப்பும் அலங்கார வாசலும்

 1. nagoorumi

  November 5, 2009 at 3:28 pm

  அன்பு கையூம், ரொம்ப நன்றாக இருக்கிறது. நகைச்சுவை இயற்கையாகவும் இயல்பாகவும் உங்களுக்கு வருகிறது. தமிழின் குறிப்பிடத் தகுந்த நகைச்சுவை எழுத்தாளர்களில் நீங்கள் நிச்சயம் ஒருவர்.

  அன்புடன்
  ரூமி

   
 2. Najumudeen

  January 30, 2010 at 6:59 am

  Your flashback of child hood is really fentastic & exactly correct, when i read i gone 35years back, this days when will come back, never. but friend althaf presently at K.S.A. He is giving respect to others is good,but showing like over acting.

   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: