RSS

அயோத்திராமன் அழுகிறான்

07 Nov

Religious Harmony final

(6-12-92 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட பொழுதில் கவிஞர் வைரமுத்து இடிந்துபோய் எழுதியது)

கங்கை காவிரி
இணைக்க வேண்டும்
கரசேவகரே வருவீரா?

காடுகள் மலைகள்
திருந்த வேண்டும்
கரசேவகரே வருவீரா?

வறுமைக்கோட்டை
அழிக்க வேண்டும்
கரசேவகரே வருவீரா?

மாட்டீர்கள் சேவகரே
மாட்டீர்கள்

நாம்
உடைக்கவே பிறந்தவர்கள்
படைப்பதற்கில்லை

வித்துண்ணும் பறவைகள்
விதைப்பதில்லை

     *     *     *

விளைந்த கேடு
வெட்கக் கேடு

சுதந்திர இந்தியா
ஐம்பதாண்டு உயரத்தில்

அடிமை இந்தியன்
ஐந்நூறாண்டுப் பள்ளத்தில்

ஏ நாடாளுமன்றமே!
வறுமைக் கோட்டின்கீழ்
நாற்பதுகோடி மக்கள் என்றாய்
அறிவுக் கோட்டின்கீழ்
அறுபது கோடி
அதை மட்டும் ஏன்
அறிவிக்க மறந்தாய்?

     *     *     *

மதம் ஒரு பிரமை
மதம் ஓர் அருவம்
அருவத்தோடு என்ன
ஆயுதயுத்தம்?

மதம் என்பதொரு வாழ்க்கைமுறை சரி
வன்முறை என்பது எந்த முறை?

அந்த கட்டடத்தின் மீதெப்போது
கடப்பாரை வீழ்ந்ததோ
அப்போது முதல்
சரயூ நதி
உப்புகரித்துக் கொண்டே
ஓடுகிறது

சீதை சிறைப்பட்டபின்
இப்போதுதான் ராமன்
இரண்டாம் முறை அழுகிறான்

     *     *     *

மாண்புமிகு மதவாதிகளே

சில கேள்விகள் கேட்பேன்
செவி தருவீரா?

அயோத்திராமன்
அவதாரமா? மனிதனா?

அயோத்திராமன்
அவதாரமெனில்
அவன்
பிறப்புமற்றவன்
இறப்புமற்றவன்

பிறவாதவனுக்கா
பிறப்பிடம் தேடுவீர்?

அயோத்திராமன்
மனிதன்தான் எனில்
கர்ப்பத்தில் வந்தவன்
கடவுள் ஆகான்
மனிதக் கோயிலுக்கா
மசூதி இடித்தீர்?

போதும்
இந்தியாவில்
யுகம் யுகமாய்
ரத்தம் சிந்தியாயிற்று

இனிமேல்
சிந்த வேண்டியது
வேர்வைதான்

நம் வானத்தைக்
காலம் காலமாய்க்
கழுகுகள் மறைத்தன

போகட்டும் இனிமேலேனும்
புறாக்கள் பறக்கட்டும் !

 vairamuthu

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: