நாகூர் தர்காவுக்குள் நான் கண்ட காட்சி இது. வெளியூர்க்காரர் ஒருவர் புறாவை விடுதலை(?) செய்வதற்கு நேர்த்திக்கடன் செய்துக் கொண்டார் போலும். காசு கொடுத்து புறாவை வாங்கி, கையை வானுக்குத் தூக்கி பறக்கவிட்டார். நாலடி கூட பறந்திருக்காது. தரையில் வந்து அமர்ந்துக் கொண்டது.
“சே! இதைக் கூட ஒழுங்காக பறக்கவிட நமக்குத் தெரியவில்லையே!” என்று தன்னைத்தானே அவர் நொந்துக் கொண்டிருக்க வேண்டும். இம்முறை சரியாக பறக்க விடவேண்டும் என்ற வைராக்கியத்தோடு, ‘தம்’ பிடித்துக் கொண்டு, கைகளை கூடிய மட்டும் பின்னுக்கு இழுத்து, பலம் கொண்ட மட்டும் கைகளை மேலாக தூக்கி மீண்டும் பறக்க விட்டார். இம்முறை ஒன்றிரண்டு அடி கூடுதலாக பறந்தது. ஆனால் மறுபடியும் கூண்டின் மேலேயே வந்து ஜாலியாக அமர்ந்துக் கொண்டது.
இவ்வளவு மோசமான ஆட்டக்காரராக இருப்பார் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். காசு கொடுத்தது தண்டமாகி விட்டதே என்று நினத்தாரோ என்னவோ தெரியாது. விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளத்தைப்போல அவர் தன் முயற்சியை கைவிடுவதாக இல்லை. ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவர் போல் இருந்தார்.
இந்த முறை புறாவை பலமாக பிடித்துக் கொண்டார். ஒலிம்பிக் பந்தயத்தில் குண்டு எறியும் போட்டியில் கலந்துக்கொள்ளும் வீரரைப் போல காட்சி தந்தார். கைகளை தாராளமாக அகல விரித்துக் கொண்டார். இன்னும் சற்று முயற்சி செய்தால் அவரேகூட பறந்திருக்கலாம்.
முக்கி, முனகி, மூச்சைப்பிடித்துக் கொண்டு மும்முரமாக இம்முறை பறக்க விட்டார். அது மறுபடியும் பறந்து வந்து பக்கத்தில் இருந்த மினாராவில் கைக்கு எட்டும் தூரத்தில் வந்து அமர்ந்துக் கொண்டது.
“இந்த மனிதன் உலகம் புரியாத மனுஷனாக இருக்கிறானே” என்று புறா தன் மனதுக்குள் நினைத்து பரிதாபப்பட்டிருக்கக் கூடும். வீட்டுக்கு நான் வந்ததும் என் மனதில் பட்டதை கிறுக்கி வைத்திருந்தேன், படித்து பார்த்தபோது கவிதை போன்று இருந்தது.
எல்லையிலா வானம்
இவைகளுக்கிருந்தும்
இரண்டடி ஆக்கியது
என்ன நியாயம்?சிறைப்பட்டுப் போகவோ
சிறகுகள்?இவைகள்
சிறகுகள் இருந்தும்
“கிவி” பறவையான
கிலி பிடித்த புறாக்கள்!தந்திரமாய்
தானியங்களைத் தந்து – இதன்
சுதந்திரத்தைப் பறித்தது யார்?உயரே பறப்பதற்கு
உருவெடுத்த இவைகள்
உயிர்வதை படுவதற்கோ?இந்த சமாதானத் தூதுவன்
ஆயுள் தண்டனை அனுபவிப்பது
எந்த பாதகச் செயலுக்காக?வாயில்லா ஜீவன்களை
வறுத்தெடுத்தால்தான்
நேர்த்திக் கடன்கள்
நிவர்த்தியாகுமோ?எந்த
இறைநேசர்கள் சொன்னார்கள்
இவைகளின் சிறகுகளை
இரக்கமின்றி ஒடிப்பதற்கு?விடுதலையை
எட்டாக் கனியாக்கி
அடிமைத்தளத்தை இவர்களுக்கு
பட்டா போட்டுக் கொடுத்தது யார்?இவர்களுக்கு
விடுதலை கீதம் பாட
எந்த மீசைக்காரனை
எழுந்து வரச் சொல்வது?இவர்கள்
ஜீவனை கூண்டிலடைத்து
ஜீவகாருண்யத்தை அல்லவா
பறக்க விடுகிறார்கள்?
FAROOKRAJA -NAGORE
April 24, 2012 at 8:55 am
நான் படித்ததில் , எனக்கு பிடித்தது,
தந்திரமாய் தானியங்களைத் தந்து – இதன்
சுதந்திரத்தைப் பறித்தது யார்?
உயரே பறப்பதற்கு உருவெடுத்த இவைகள்
உயிர்வதை படுவதற்கோ?
இந்த சமாதானத் தூதுவன்
ஆயுள் தண்டனை அனுபவிப்பது
எந்த பாதகச் செயலுக்காக? .
அன்புடன்,
பாரூக்ராஜா