RSS

சித்தி ஜுனைதா பேகம்

22 Jan

மின்தமிழ் நண்பர்களே,

தமிழ் மரபு அறக்கட்டளை கடந்த 8 ஆண்டுகளாக பல தரப்பட்ட தமிழ் மின்னாக்கப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளது. நமது முயற்சிகள் செயல்பாடுகள் தொடர்பான செய்திகள் அனைத்தும் நமது வலைத்தளத்தில் உள்ளன. இருந்தாலும் அவ்வப்போது இந்த வலைப்பக்கங்களின் சில சிறப்புப் பகுதிகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக சில செய்திகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். இந்த வகையில் 2002ம் ஆண்டு த.ம.அ பணிகளுக்காக முனைவர்.நா.கண்ணன் தமிழகம் சென்றிருந்தபோது நாகூருக்குச் சென்று பல அறிய தகவல்களைச் சேகரித்து வந்திருந்தார். அந்த சேகரிப்பின் வழி நாம் த.ம.அறக்கட்டளையில் மின்பதிப்பாக்கம் செய்த பக்கம் இங்கு உங்களுக்காக: http://www.tamilheritage.org/old/text/etext/sidi/pnotes.html . இந்த வலைப்பக்கங்களோடு ஒரு குருந்தகடும் வெளியீடு செய்திருந்தோம். அனைத்து விபரங்களும் நமது வலைப்பக்கத்தில் உள்ளன. பார்த்து படித்து மகிழுங்கள். உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

சித்தி ஜுனைதா பேகம்


நா.கண்ணன்
ஜூன் 22, 2002

முஸ்லிம் சமூகம் தமிழகத்தில் ஒரு சிறுபான்மை சமூகம். மற்றைய சமூகங்களை ஒப்பு நோக்கையில் படித்தவர் விழுக்காடு குறைவாகவுள்ள சமூகம். மொத்த இந்திய நாட்டிலே பெண்களின் படிப்பறிவு குறைவாக இருக்கும் போது சிறுபான்மை இனத்தைச் சொல்ல வேண்டியது இல்லை. மேலும் பெண்கள் குடும்பம் தவிர கல்வி கேள்விகளில் ஈடுபடுதல் என்பது ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்ட 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் எல்லோர் புருவங்களையும் உயர்த்த வைத்த ஒரு பெண் ஆசிரியை, பதிப்பாளர் சித்தி ஜுனைதா பேகம் அவர்கள். ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமான விஷயம் சித்தி ஜுனைதா பேகம் மூன்றாம் வகுப்புவரை மட்டுமே படித்தவர். ஆனால் இவர் நெடுங்கதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதினார் என்பதைவிட எழுதிக்குவித்தார் என்பதே உண்மை. ஒரு பெண் எழுதும் போது அதை வெளியிட ஆதரவு இருக்காது என்பதை அறிந்து இவரே தனது நூல்களை வெளியிட்டும் உள்ளார்.

இத்தகைய ஆச்சர்யமான பெண்மணியை பற்றி நான் முதலில் அறிந்து கொண்டது துபாய் நகரில்தான். ஷார்ஜா தமிழ் மன்றத்தில் என்னைப் பேச அழைத்திருந்த திரு.சடையன் சாபு அவர்கள் இந்த அம்மையார் பற்றிய ஒரு அறிமுகக் கட்டுரையைக் காட்டினார். இப்படி நூதனமாக இலக்கியப்பாதை வகுத்த சித்தி ஜுனைதா பேகம் பற்றி மேலும் அறிந்து கொள்ள, அவரது படைப்புகளை இலத்திரன் பதிவுகளாக முதுசொம் கூடத்தில் நிரந்தரப்படுத்த நான் அவர் வாழ்ந்த நாகூருக்குப் பயணப்பட்டேன்.

இவர் எழுதிய ‘காதலா? கடமையா?’ என்பது தமிழ் முஸ்லிம் பெண் எழுதிய முதல் நாவல் என்ற அந்தஸ்தைப் பெறுகிறது. இதைப் பெறுவதே என் பிரதான நோக்கமாக இருந்தது. நண்பர் சாபு அவர்கள் நாகூரில் வாழும் சொல்லரசு ஜாபர் முகைதீன் அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். இவர் ஆச்சிம்மாவின் (சித்தி ஜுனைதா பேகம்) பிள்ளை போன்றவர். ஆச்சிம்மாவிற்கு பெண்ணும், பெண் வயத்துப் பேரனும் உண்டு, சகோதரி (half sister) யின் மூலமாக பிள்ளை உண்டு – முகம்மது ரஃபி (கவிஞர் நாகூர் ரூமி) (இவரது அறிமுகக் கட்டுரை இங்கு இடம் பெறுகிறது). சொல்லரசு அவர்களும் சித்தியின் படைப்புகள் தமிழுலகம் அறிய வேண்டி நேர்காணல், கட்டுரை எழுதியவர். (இவரது நேர்காணல் இங்கு இடம் பெறுகிறது). எனவே இவரிடம் அந்த நூல் இருக்கும் என்ற நம்பிக்கையில் நான் நாகூர் சென்று விட்டேன். ஆனால் இவரிடம் அந்த நூல் இல்லை. என்னை ஆச்சிம்மாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவர்களிடமும் அந்த நூல் இல்லை! ஆனால், புத்தகத்தின் ஜிராக்ஸ் நகலொன்றை முகம்மது ரஃபியிடம் (ரூமி) தான் கொடுத்ததாக சொல்லரசு என்னிடம் சொன்னார். ஆனால் ரூமி அவர்கள் நாகூரில் இல்லை! எழுத்தாள நண்பர் இரா.முருகன் அவர்கள் ரூமியை எனக்கு அறிமுகப்படுத்தி அந்த நூலைச் சென்னையில் ஒரு வழியாகப் பெற்றுத் தந்தார். அது 1938-ல் வெளியாகியுள்ளது. அதன் இலக்கப்பதிவை சென்னை சாஃப்ட் வியூ நிறுவன இயக்குநர் ஆண்டோ பீட்டர் அவர்கள் செய்து தந்தார்.

சித்தி ஜுனைதா பேகம் அவர்களின் பேரன் செல்லமணி ஆச்சி கைப்பட எழுதிய பல டைரி போன்ற பக்கங்களையும், அவர் நூருல் இஸ்லாம் என்ற பத்திரிகையில் எழுதிய ‘மலைநாட்டு மன்னன்’ என்ற தொடர் கதையையும் முதுசொம்மில் நிரந்தரப்படுத்த என்னிடம் தந்தார்.

சித்தி ஜுனைதா பேகம் அவர்களின் முதல் நாவலை இலக்கப் பதிவாக தமிழ் கூறும் நல்லுகிற்கு அளிப்பதில் தமிழ் மரபு அறக்கட்டளை பெருமை கொள்கிறது. மூலத்தின் இலக்கப் பதிவையும் நல்குகிறது. மேலும் தொடர்ந்து அவரின் நூல்கள் முதுசொம் கூடத்தில் பொது வாசிப்பிற்கு வைக்கப்படும்.

சித்தி ஜுனைதா பேகம் அவர்கள் மிகவும் தன்னம்பிக்கை கொண்ட பெண். அது அவரது இல்லத்தின் நுழை வாயிலில் தொங்கும் பலகையிலேயே தெரிகிறது. தமிழ் ஆண்கள் BA, MA, PhD என்று பெருமையாக போர்டு போட்டுக்கொள்ளும் தமிழ் சூழலில் இவர் ‘சித்தி ஜுனைதா பேகம் – பன்னூலாசிரியை’ என்று பலகை போட்டுள்ளார். இவரது பெண் என்னிடம் சொன்ன சேதி, சித்தி ஜுனைதா பேகம் தனது பெண்ணின் படிப்பில் மிக கவனமாக இருந்தார் என்பது. தான் படிக்காத படிப்பை தனது பெண் படித்துவிட வேண்டும் என்று அவரை பள்ளி இறுதிவரை படிக்கவைத்துள்ளார். சகோதரி வயிற்றுப் பிள்ளையும், பேரனும் மேற்படிப்பு படித்து ஆங்கில விரிவுரையாளர்களாக உள்ளனர்.

சித்தி ஜுனைதா பேகம் தீர்க்கமான கொள்கையும், விடுதலை உணர்வும் கொண்ட பெண்ணாகத் திகழ்கிறார். தனது இஸ்லாம் சமூகத்தில் சாதிகள் கிடையாது எனினும் தமிழ சாதி வேறுபாடுகள் பற்றி மிக அக்கரை கொண்டிருக்கிறார். திருமூலரின் வசனமான ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்று தமிழர்கள் வாழவேண்டுமென வலியுறுத்துகிறார். இவரது சமய சமரச சன்மார்க்க நோக்கு இவரது கதைகளில் மிளிர்கிறது. இஸ்லாமை முதன்மைப் படுத்தி இவர் எழுதியிருந்தாலும், மூன்றில் ஒரு பங்குக் கதைகள் இந்துப் பாத்திரங்களை வைத்தே எழுதப்பட்டுள்ளது. மேலும் இவர் சரளமாக திருமூலர். மாணிக்கவாசகர் போன்றரை மேற்கோள் காட்டுவதிலிருந்து இவருக்கு சைவ சித்தாந்தப் பரிட்சயமும் இருப்பது தெரிகிறது. இவரது நடை ‘மென்னடை’ என்று பலர் போற்றுகின்றனர்.

அந்நடையை நீங்களும் வாசித்து மகிழ சித்தி ஜுனைதா பேகத்தின் இலக்கிய கூடத்திற்கு
வாருங்கள்.

அன்புடன்
நா.கண்ணன்
முதுசொம் இலக்கியக் கூடம்
ஜெர்மனி ஜூன் 22, 2002

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: