தூங்க வேண்டிய நேரத்தில் முழித்திருந்து, முழித்திருக்க வேண்டிய நேரத்தில் தூங்குபவனுக்குப் பெயர் சோம்பேறி. அவன் கவிஞனாக இருந்துவிட்டால் அவனுக்குப் பெயர் ‘அறிவுஜீவி’.
இஜட் ஜபருல்லா ஒரு அறிவுஜீவி.
ஜபருல்லா தர்க்கவாதியா, குதர்க்கவாதியா தெரியாது. ஆனால் வாததின்போது வாதியாக இருக்க வேண்டிய நேரத்தில் பிரதிவாதியாக இருப்பார். பிரதிவாதியாக இருக்க வேண்டிய நேரத்தில் வாதியாக இருப்பார். இறுதியில் நாம் ‘சரி’ என்று வாதாடும் விவாதத்தை ‘தவறு’ என்று புரிய வைத்துவிட்டு பேசாமல் போய்விடுவார்.
வித்தியாசமாக பேசுபவனை குதர்க்கம் பேசுபவன் என்றுச் சொல்லும் உலகம் அவன் கவிஞனாக இருந்துவிடும் பட்சத்தில் அவனது மாறுபட்ட சிந்தனை நம் சிந்தனைக்கு விருந்தாக அமைந்து விடுகிறது. இந்த உண்மையை ஜபருல்லாவின் கவிதையைச் சுவைப்பவர்களால் நன்றாகவே உணர முடியும்.
ஜபருல்லாவின் கவிதை கல்-கட்டா கவிதை. கல் கட்டாத புடலங்காய் நேராக வளராது. அதில் நெளிவு சுளிவு இருக்கும். ஜபருல்லாவின் கவிதைகளின் சாராம்சத்தை புரிந்துக் கொள்ள நமக்குச் சற்று நேரம் பிடிக்கும். ஜபருல்லாவின் கல்கட்டா கவிதை களைகட்ட வைக்கும், கல்கத்தா ரசகுல்லாவைப் போன்றது. அவ்வளவு இனிமை.
ஜபருல்லா முஸ்லீம் லீக்கில் பெரிய புள்ளி அல்லது கமா என்ற அவரது வாழ்க்கைக்குறிப்பு நம் ஆய்வுக்கு இப்போது தேவையில்லாதது.
அவர் ஒரு நல்ல கவிஞர். நல்ல மனிதர். அதுபோதும் நமக்கு.
ஜபருல்லா பற்றிய மஞ்சள் கொல்லை ஹமீது ஜாஃபரின் இந்த கீழ்க்கண்ட குறிப்பு அவரைப் பற்றி ஓரளவு தெரிந்துக் கொள்ள உதவும்.
அப்போது ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்த அந்த சிறுவன் கேட்ட கேள்விகளுக்கு தந்தை ஜெக்கரியாவால் பதில் சொல்ல இயலவில்லை. வேறு வழி தெரியாமல் அந்த சிறுவனை அழைத்துக்கொண்டு மௌலவி அப்துல் வஹ்ஹாப் பாக்கவியிடம் போனார். சாதாரணமாக யாரும் தன் பிள்ளையை அழைத்துக்கொண்டு போனால் ‘இவனுக்கு நல்ல புத்தி சொல்லுங்க’ என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் அவரோ, “ஹஜ்ரத், இவன் கையைப் பிடிங்க” என்றார். “ஏன் நானா?” என்று ஹஜ்ரத் கேட்டார்கள்;
“இவன் என் மவன்”
“தெரியுமே ஜஃபருல்லாவை. ரொம்ப நல்ல பிள்ளாயாச்சே.”
“நல்ல பிள்ளையா? மொதல்லெ இவன் கையை பிடிங்க”. கையைப் பிடித்தார்கள். “தயவுசெஞ்சி இவனை இஸ்லாத்துல சேர்த்து வூட்டுக்கு அனுப்பிவைங்க!”
ஹஜ்ரத்திடம் சேர்ந்த இரண்டாம் நாள், “ஏன் சாபு நானா, (அப்படித்தான் ஜபருல்லா ஹஜ்ரத்தை கூப்பிடுவார்) குர்ஆன்லெ இடைச் சொருகல்கள் ஏதாவது இருக்கிறதா” என்று கேட்டான் அந்த சிறுவன்.
“சரிதான், ஜக்கரியா சொன்னது சரியாத்தான் இருக்கும்போலிருக்கு! குர்ஆன்லெ ஏதுப்பா இடைச்சொருகல்? அல்லா சொன்னதுலெ ஒரு ஜேரு ஜெபருகூட மாத்தம் கெடையாதே!”
“அப்போ.. எல்லாமே அல்லா சொன்னதுதானா?”
“ஒரு வார்த்தைகூட விடாம எல்லாம் அல்லா சொன்னதுதான்.”
“அப்படின்னா, ‘அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாவின் திருநாமத்தால் ஆரம்பிக்கிறேன்’ என்று சொல்றீங்களே, அதெயும் அல்லா சொல்லிருந்தான்னா அல்லாவுக்கு
அல்லா யாரு? அவன் எந்த அல்லா பெயரால் ஆரம்பிக்கிறான்? இப்பொ நாம சொல்றது இந்த குர்ஆனைத் தந்த அல்லா பெயரால் ஆரம்பிக்கிறதா? இல்லை , அல்லா ஒரு பெயரால் ஆரம்பிக்கிறானே அல்லாவுக்கு அல்லா பில் அல்லா. அந்தப் பெயரால் ஆரம்பிக்கிறதா?”
இந்த கேள்வியைக் கேட்டுக்கொண்டிருந்த மற்றவர்கள் ‘வலா ஹவ்ல வலா கூவ்வத்த’ என்று சொன்னார்கள். ஆனால் ஹஜ்ரத் அவர்களோ, “நீ கேட்டது நல்ல கேள்விதான். சரி, குர்ஆனில் எத்தனை அத்தியாயம் இருக்குன்னு உனக்கு தெரியுமா?”
“114 அத்தியாயம் இருக்கு.”
“ஒரு அத்தியாயத்திற்கு ‘பிஸ்மி’ கிடையாது. தெரியுமா உனக்கு?”
“அப்டீன்னா ஒரு ‘பிஸ்மி’ கொறச்சலா இருக்கனும்.”
“இல்லை. சரியாவே இருக்கு.”
“அது எங்கே இருக்கு?”
“அதைத்தான் நீ கண்டுபிடிக்கனும். அறிவு தானாகாவா வரும்? குர்ஆனைத் தமிழில் எடுத்து ஓது, ஆனால் எனக்கு ஒரு உறுதிமொழி தரனும், நீ ஓதிக்கிட்டே வரும்போது நீ கேட்ட கேள்விக்கு விடை தெரிஞ்சிடும், ஆனால் அதோடு நிறுத்திவிடக் கூடாது. முழுசா நீ படிச்சுப் பார்” என்றார்கள் ஹஜ்ரத்.
அன்று படிக்கத் தொடங்கிய ஜபருல்லா இன்றும் படித்துக் கொண்டிருக்கிறார். பல முறை படித்துவிட்டார். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதுப்புதுக் கருத்துக்கள், மேம்பட்ட அறிவுகள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன.
ஹமீது ஜாஃபர் மேற்கோள் காட்டிய நிகழ்வு சிலருக்கு தெளிவையும், சிலருக்கு குழப்பத்தையும் உண்டுபண்ண போதுமானது.
“ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட நபிமார்களை இந்த பூமிக்கு அனுப்பிய இறைவன் ஒரு பெண் நபியைகூட அனுப்பவில்லையே. ஏன்?” என்ற கேள்வியை தன் மகள் கேட்டதாக எச்.ஜி.ரசூல் ஒரு கேள்வியை ஒரு கவிதையில் எழுதியிருந்தார். அவர் ஊர்மக்கள் அவரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விட்டார்கள்.
ஜபருல்லாவிடம் எனக்கு பிடித்தது குழப்பத்தையும் உண்டு பண்ணிவிட்டு அதற்கான தீர்வையும் சொல்லி விடுவார். ஒரு உண்மையான கவிஞனுக்குள்ள நேர்த்தியான பக்குவம் அது.
ஜபருல்லாவின் கவிதைகளை ஆய்வு செய்யலாம் என்று நினைத்தால் அவருடைய கவிதைத் தொகுப்பு என்று எதுவுமே கிடையாது. கவிதை நூலே எழுதாத கவிஞர் அவர்.
கவிஞர் இதயதாசனும், ஜபருல்லாவும் ஒரு சிற்றுண்டி விடுதிக்குள் தேநீர் அருந்தச் சென்றிருக்கிறார்கள். டீக்கடை பையன்
“கவிஞருக்கு ஒரு டீ, ஜபருல்லா நானாவுக்கு ஒரு டீ” என்று டீ மாஸ்டரைப் பார்த்து கூவி இருக்கிறான். மனுஷன் நொந்துப் போய்விட்டார்.
ஜபருல்லா கவியரங்குகளில் பாடுவதோடும், நண்பர்களிடம் பகிர்வதோடும் சரி. அவரெழுதிய கவிதைகள் துண்டுக் கவிதைகளாக அவருக்கு நெருக்கமானவர்களிடம் இருப்பது மட்டுமே.
அதிர்ஷ்டவசமாக என்னிடமும் சில கசங்கிய பொக்கிஷங்கள் உள்ளன. மற்றபடி இணையத்தில் ஆபிதீன் வலைப்பூவில் பதிவு செய்யப்பட்டிருப்பது ஒரு மகிழ்ச்சிதரக்கூடிய விஷயம்.
இறைவா!
நீ படைத்த மனிதர்களுக்கு
உன் பெயரைத்தான் வைக்கிறோம்
‘அல்லாஹ்’ என்று
உனக்கு பெயர் சூட்டியது
யார்?
அவருடைய இந்தக் கவிதை மேலோட்டமாக பார்க்கையில் நாத்திகத்தனமாக இருந்தாலும் ஓரிறைக் கொள்கையையும் படைப்பினங்களின் ஆதிமூலத்தின் சிந்தனைகளை மேம்படுத்துகிறது என்பது சிந்தித்துப் பார்ப்பவர்களுக்குப் புரியும்.
“ரசூலுல்லா பிற்காலத்தில் சூஃபி அல்ல” என்று சொல்லும் ஜபருல்லா மீது பத்வா கொடுக்குமளவுக்கு நமக்கு ஆத்திரம் ஆத்திரமாக வரும்.
ஹீராக் குகையில் அவர்கள் அமர்ந்து அவர்கள் இறை சிந்தனையில் ஈடுபட்டபோது அவர்கள் சூஃபி. அதற்குப் பிறகு இறைவனிடமிருந்து “வஹீ” வரத் தொடங்கிய பிறகு அவர்களுடைய சிந்தனை முடிந்து விட்டது. அதற்குப் பின்னர் அவர்களது செயல்கள் எல்லாம் இறைக்கட்டளைக்கு உட்பட்டது என்று விளக்கம் சொல்லும் இவரை ஒரு கவிஞானியாக பார்க்கத் தோன்றுகிறது.
கவிஞர் இஸட் ஜபருல்லாவை கவிதை பாட அழைப்பவர்கள் மடியில் வெடிகுண்டை வைத்து கட்டிக் கொண்டிருப்பவர்களைப் போலத்தான் காட்சியளிப்பார்கள். காரணம் மனுஷன் எந்த நேரத்தில் எந்த குண்டை எடுத்துப் போடுவார் என்று யாருக்குமே தெரியாது. நாகூரில் நடந்த “தேவை மனித நேயம்” என்ற நூல் வெளியீட்டு விழாவின்போது இவர் வாசித்த கவிதையின் தலைப்பு “தேவை ஒரு குண்டு”. இவர் இப்படி ஆரம்பித்ததும் எல்லோரும் ஆடிப்போய் விட்டார்கள்.
வகை வகையாய்
வெடிகுண்டு
செய்யும்
வல்லுநர்களே..!
சாதி – மத – இன
வேற்றுமை
சுவர்களை
தகர்த்து
தரைமட்டமாக்கும்
ஒரு
நல்லவெடிகுண்டு
தயார் செய்யுங்களேன் !!!
என்று கவிதையை முடித்தபோதுதான் நிகழ்ச்சியாளர்கள் “அப்பாடா..” என்று பெருமூச்சு விட்டார்கள்.
இறைவா
நீ
சேதாரமில்லாமல்
பாதுகாக்கும்
திருக்குர்ஆனை
இவர்கள்
ஆதாரத்துக்கு மட்டுமே
அணுகுகிறார்கள்
என்று இவர் பாடிய கவிதையை அலசிப் பார்க்கையில் பரணிமீது அழகான பளபளப்புத் துணியால் மிகுந்த கவனத்துடன் பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கும் திருமறையை எடுத்து தினமும் எடுத்து ஓதத் தூண்டுகிறது.
இறைவா
உண்டுவிட்டு உனக்கு
நன்றி சொல்வதைவிட
பசித்திருந்தும்
உன்னளவில்
பொறுமை கொள்ளும்போதுதான்
என் ஆன்மா
ஆனந்தமடைகிறது
என்ற இவரது வரிகளை வாசிக்கையில் இறைவழியில் நம்மை அர்ப்பணித்து நோன்பு நோற்க வைக்கிறது.
இறைவா
உன்னோடு
அரபு மொழியில் பேசுவதைவிட
அழுகை மொழியில்
பேசும்போதுதான்
உன் அண்மை தெரிகிறது
என்று இவர் கூறுவதைக் கேட்டு பள்ளிவாயிலில் தொழும்போது இமாம் அவர்கள் “அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்” என்று கூறியதும் விழுந்தடித்துக் கொண்டு நம் அலுவல்களை கவனிக்க ஓடும் நமக்கு சற்று நேரம் தொழுகைப்பாயில் அமர்ந்து இறைவனிடம் மனமுருகி துஆ கேட்கத் தோன்றுகிறது.
இறைவனோடு நாமிருப்பது
முடியாத ஒன்று
என்றாலும்
இறைவன்
நம்மோடிருக்க
முயற்சி செய்யலாம்!’
என்று அவர் கவிதை வடிக்கையில் வெட்டிபேச்சு பேசி வீண்பொழுதைக் கழிக்கும் நம்மை சற்று நேரம் தஸ்பீஹ் எடுத்து இறைவனை நினைத்து ‘திக்ரு’ செய்ய வைக்கிறது.
ஹஸ்ரத்மார்களின் ஐந்துமணி நேர மார்க்க உரை ஏற்படுத்தும் மனமாற்றத்தை இவரது ஐந்தாறு வரி கவிதை நமக்கு ஏற்படுத்தி விடுகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இவர்தான் ஜபருல்லா.
இவரது கவிதை நமக்கு ரசகுல்லா.
(நிறைய தகவல்கள் நாகூர் ஆபிதீனின் வலைப்பூ களஞ்சியத்திலிருந்து பெற்றது)