RSS

நிறம் மாறா நாகூர்

03 Feb
 
 

நிறம் மாறா நாகூர்

ஆஸ்திரிலேயாவில் இந்திய மாணவர்கள் தாக்கப் படுவது குறித்து அவரவர்கள் கண்டனக் குரல் எழுப்பி வரும் நேரமிது. இன வேறுபாடு, நிற வேறுபாடு கூடாது என்று அறிக்கைவிடும் இந்த தருணத்தில் நான் “நிற வேறுபாடு” குறித்து கட்டுரை வரைந்தால் வாசகர்கள் எப்படி வரவேற்பார்கள் என்பது சந்தேகமாக இருக்கிறது.

முன்பெல்லாம் நாகூர் மினாராக்கள் சாந்து பூசிக்கொண்டு சாந்தமாக காட்சியளித்தன. இப்போது ஆயில் பெயிண்டை அப்பிக் கொண்டு அட்டகாசமாய் ஒளிர்கின்றன. அப்படி இருந்தும், நிறம் மாறாத ஊர் நாகூர்.

அதே மனிதர்கள். அதே பேச்சு. அதே கலாச்சாரம். அதே கேலி, கிண்டல், நையாண்டிப் பேச்சு.

நண்பர்கள் சைட் அடிக்க புறப்படுகையில் “கலரு பார்க்கப் போகிறோம்” என்று சொல்லி விட்டுத்தான் கடற்கரைக்குப் போவார்கள். அது ஒரு நிலாக்காலம். இளம் வயதில், நண்பர்களோடு சேர்ந்து ஒருமுறை  நாகூர் விஜயலட்சுமி டூரிங் தியேட்டருக்கு படம் பார்க்க போயிருந்தேன்.  “மஞ்சள் நிறமே வருக! மங்கல விளக்கே வருக” என்று நாயகன், நாயகியைப் பார்த்து பாட்டுப் பாட “ஏன் மாப்ளே! கதாநாயகிக்கு என்ன மஞ்சள் காமாலையா?” என்று நண்பன் பாரூக் ராஜா குசும்பு செய்ததை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.

உலகத்தில் ஆக மொத்தம் எத்தனை விதமான நிறங்கள் இருக்கின்றன?

இந்தக் கேள்விக்கு யாரிடமும் பதில் கிடையாது.

10 மில்லியனுக்கு அதிகமான நிறங்களை நம் கண்கள்  பிரித்து அறிய முடியுமாம். முழுமையான ஒரு வண்ணப்படத்தை ஒரு கணிப்பொறி வெளிப்படுத்த 16.8 மில்லியன் நிறங்களை கிரகித்துக் கொள்கிறதாம். இத்தனை நிறங்களை பகுத்துக் கூற தமிழில் வார்த்தைகள் இருக்கிறதா என்று கேட்டால். கிடையாது.

“நிறங்கள் ஏழு” என்று ஒண்ணாம் வகுப்பு வாய்ப்பாடு புத்தகத்தில் படித்த ஞாபகம்.

பொதுவாக, தமிழில் பலான விஷயத்திற்கு எல்லா நிறங்களையும் ஏன் தொடர்பு படுத்தி வைத்திருக்கிறார்கள் என்பது மட்டும் புரியவில்லை. கலர்ஃபுல் விஷயம் என்று அதை கருதுவதாலோ என்னவோ. ‘மஞ்சள் பத்திரிக்கை’ ‘சிவப்பு விளக்குப் பகுதி’ ‘நீலப்படம்’ ‘பச்சை பச்சையாய் பேசுகிறான்’ என்று கூறுவதை நாம் பார்க்கிறோம்.

நிறங்களை பகுத்தறிய நம்மூர்க்காரர்கள் குறிப்பாக தாய்க்குலங்கள் நிறைய வார்த்தைகளை அவர்களாகவே கண்டு பிடித்து தமிழுக்கு அளித்து இருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?

Hats off to our துப்பட்டி பெண்டுகள்.

தமிழ் மொழிக்கு செய்த “Green Revolution”க்காக அவர்களுக்கு  “Red carpet Welcome” கொடுக்க வேண்டும்.

நாகூர் பாஷைக்கென்று தனியாக ஒரு அகராதி பிரசுரித்தால் அது ‘லிப்கோ’ அகராதியை விட மொத்தமாக இருக்கும். தந்தி பாஷைக்கென தாமர்ஸ் மோர்ஸ் உண்டாக்கிய Code போன்று, நாகூர் மக்கள் ஜாடைமாடையாக பேசுவதற்கு, அவர்கள் எளிதாய் புரிந்துக் கொள்ளும் வகையில்  Code Word ((பரிபாஷை) உண்டாக்கி வைத்திருக்கிறார்கள்.

நிறங்களில் மாத்திரம் இவர்கள் எத்தனை வேறுபாடுகள் காட்டினார்கள் என்று தெரியுமா?

பால் வெள்ளை (Milky white), கேந்தி (Orange), ஆனந்தா (Sky Blue) , கரூண்ட ஊதா (Dark Blue), ரோஜ் (Pink) , முட்டாய்க் கலரு (Dark Pink), கனகாம்பரம் (Coral Pink) , ராணிக் கலரு (Magenta),  காக்கா முட்டை (Violet), நாவப்பழக் கலரு (Indigo), பசலைப் பழக் கலரு (Purple), சாக்லெட் கலரு (Brown), எலிமிச்சைப் பழக் கலரு (Lemon Yellow), சந்தனக் கலரு (Sandalwood),  (காக்கி கலரு (Khaki), காவிக் கலரு (Saffron Orange), மிஸ்ரி ஊதா (Egyptian Blue), போலீஸ் ஸ்டேஷன் கலரு (Fire Brick), அரக்கு கலரு (Very Dark Brown), காப்பிக் கொட்டைக் கலரு (Dark Brown), மரக் கலரு (Light Brown), பிஸ்கோத்து கலரு (Beige), ரத்தச் சிவப்பு (Dark Red), சாம்பக் கலரு (Grey),  பவுனு கலரு (Golden Yellow). ரோஸ் உட் கலரு (Mahagony), – என்று பல்வேறு வகையாக வகைப்படுத்திக் கூறுகிறார்கள்.

Dark colours-க்கு கப்புக் கலரு என்றும், Light Colours-க்கு அவுஞ்ச கலரு அல்லது பழுப்புக் கலரு என்றும், Multi colour-க்கு மத்தாப்புக் கலரு என்றும் சொல்வது வழக்கமாக இருந்திருக்கிறது. பொதுவாக Light Colours அத்தனைக்கும் அவர்கள் அழைப்பது இங்கீலீஷ் கலரு. உதாரணத்துக்கு பச்சை நிறத்தை எடுத்துக் கொள்வோமே. அதற்கு மட்டும் எத்தனை விதமான பகுப்புகள்?

கிளிப்பச்சை, (Parrot Green), இலைப் பச்சை (Kelly green), அவ்லியா பச்சை (Napier Green), கப்பு பச்சை (Dark green), ஜைத்தூன் பச்சை (Olive Green), பாசிப் பச்சை (British Raceing green), பட்டாளத்து பச்சை (Military Green), என்று வேறுபடுத்திக் கூறுவார்கள்.

நவரத்தின வியாபாரத்திற்கு நம்மவர்கள் அளித்த ஒரு பெயர் இன்று உலகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஒலித்து வருகிறது. உயர்ந்த ரக மரகதக் கற்களுக்கு (Emerald) அவர்கள் அளித்த பெயர் ஒன்று நிரந்தரமாகி விட்டது.

அந்த உயர்ந்த ரக மரகத நிறத்துக்கு பிரபலமாகியிருக்கும் பெயர் என்ன பெயர் தெரியுமா?

மரைக்காயர் பச்சை. ஆங்கிலத்தில் Maraicair Green.

ஆராய வேண்டிய விஷயம் இது.

– அப்துல் கையூம்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: