RSS

நாகூர் ரூமியும் நானும்

04 Feb

பிரபலமானவர்களின் பெயரை நம்மோடு இணைத்துப் போட்டால் நாமும் பெரிய ஆளாகி விடலாம் என்ற எண்ணம் எனக்கும் இல்லாமலில்லை.

இணையத்தில் சென்று “நாகூர்” என்று தட்டச்சு செய்து குதுகூலமாய் ‘கூகுளி’த்துப் பார்த்தால், நாகூர் தர்காவைவிட அதிகமான தகவல்கள் நாகூர் ரூமியைப் பற்றித்தான் காணக் கிடைக்கின்றன.

நாகூர் ரூமி, டிராயர் போட்டுக்கொண்டு (அண்ட்ராயர் அல்ல) அலைந்த காலத்திலிருந்து அவரை எனக்குத் தெரியும். அப்போது அவரது பெயர் A.S.முஹம்மது ரபி. அவரது தந்தை என் தந்தையின் ஆத்ம நண்பர். சாவன்னா என்று அன்போடு அழைக்கப்படும் அவர், நாகூர் கடைத்தெருவில் நடந்து வந்தால் ஏறெடுத்து பார்க்கத் தோன்றும். சடசடவென்று சலசலக்கும் ரெட்டைமூட்டு புதுக்கைலி உடுத்தி, “See through” பாரின் சட்டை, அரசியல்வாதியைப் போன்று தோளில் உல்லன் ஷால். அரும்பு மீசை. கையில் 555 சிகரெட் டின். பார்ப்பதற்கு இளம் வயது S.S.R. போன்று காட்சியளிப்பார். பெரியவனானதும் நாமும் இப்படித்தான் பந்தாவாக காட்சிதர வேண்டும் என்று அப்போது மனதில் நினைத்ததுண்டு.

ரபிக்கும் எனக்கும் சிறுவயதிலேயே ஓர் ஒற்றுமை உண்டு. ஆமாம். நாங்களிருவரும் ‘பாட்டிச் சொல்லைத் தட்டாத’ பிள்ளைகள்.

அது என்ன “நாகூர் ரூமி” என்ற புனைப்பெயர்? எனக்கு குழப்பம் என்றால் குழப்பம், அப்படியொரு குழப்பம். ரூமி என்றால் ரோம நகரத்தைச் சேர்ந்தவர் என்று பொருள். ஜலாலுத்தீன் என்ற பெயரில் ஒரு மகா கவிஞர் இருந்தார். அவர் ரோம் நகரத்திலிருந்து வந்ததால் அவருக்கு ஜலாலுத்தீன் ரூமி என்று பெயர் வந்ததாக எங்கோ படித்த ஞாபகம்.

அப்படியென்றால் இவர் “நாகூரைச் சேர்ந்த ரோம நகரத்துக்காரர்” என்றல்லவா அர்த்தம் ஆகிறது. அப்ப இவர் ரோம நகரத்துக்காரரா அல்லது நாகூர்க்காரரா? – இது இன்னும் எனக்குத் தீராத குழப்பம்.

ஜலாலுத்தீன் ரூமியின் நினைவாக புனைப்பெயர் சூட்டிக் கொண்டாரா அல்லது ரூமிலேயே தங்கி உட்கார்ந்துக் கொண்டு நூல்கள் புனைந்துக் கொண்டிருப்பதால் ரூமி என்ற பெயரை தக்க வைத்துக் கொண்டாரா என்று விளங்கவில்லை.

எது எப்படியோ, இவர் ரூமில் உட்கார்ந்து எழுதும் நூல்கள் இன்று உலகம் முழுவதும் படிக்கப் படுகிறது, விமர்சிக்கப்படுகிறது என்பதே உண்மை. ‘பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறும்’ என்று சொல்வதைப்போல இவரை என் நண்பர் என்று சொல்லிக் கொள்வதின் மூலம் எழுத்துலகம் என்னையும் ஓர் எழுத்தாளன் என்று ஏற்றுக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

இவருக்கு முஹம்மது ரபி என்று பெற்றோர்கள் பெயர் வைத்ததற்கு காரணம் இவரும் இந்திப் பாடகர் முஹம்மது ரபியைப் போன்று பெரிய பாடகர் ஆக வேண்டும் என்ற ஆசையினாலும் இருக்கக் கூடும். ஆனால் இவரது குரல்வளம் என்னமோ லதா மங்கேஷ்கர் போலவே இருக்கிறது.

சென்ற முறை தாயகம் சென்றபோது இவரிடம் நான் தொலைபேசியில் மணிக்கணக்கில் உரையாடி மகிழ, இவரால் என் சுமூகமான இல்லற வாழ்வில் ஒரு பெரிய குழப்பம் உண்டானதுதான் மிச்சம். இவரது குரல் ஒரு பெண்குரல் போல் இருப்பதினாலும், இவர் தொலைபேசியில் சற்று உரக்க பேசினதினாலும், அது என் மனைவியின் காதில் விழ “ஒரு பொம்பளைப் புள்ளைக்கூட மணிக்கணக்கா அப்படியென்ன சிரிச்சு சிரிச்சு பேச்சு வேண்டிக் கிடக்கு?” என்று பொரிந்து தள்ளி விட்டாள் என் இல்லத்தரசி.  உண்மையை அவளுக்குப் புரிய வைப்பதற்குள் எனக்கு தாவு கழன்று விட்டது. பத்தினி விரதனான நான் அன்று அரை பட்டினி.

இந்தக் கீச்சுக் குரலை வைத்துக் கொண்டு அவர் நாகூர் தர்கா ஆஸ்தான வித்வான் எஸ்.எம்.ஏ.காதரிடம் கர்னாடகச் சங்கீதம் கற்று ‘வர்ணம்’ வரை வந்ததை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. இவர் ‘நல்லி விருது’ வாங்கிய நாட்களை விட ‘பள்ளி விருது’ வாங்கிய நாட்களில் சுவராஸ்யம் அதிகம். பள்ளி நாட்களில் ‘பேஷாக் மாந்திர்” என்ற சன்ச்சல் பாடிய பாட்டைப் பாடி பரிசும் வாங்கியிருக்கிறார்.  பொருத்தமான கீச்சுக்குரல் பாடலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார் இவர் என்று நினைத்துக் கொள்வேன். அந்த உச்ச ஸ்தாயி பாடலில் சன்ச்சலுடைய குரலும் பாகிஸ்தான் பெண் பாடகிகள் குரல் போல்தான் ஒலிக்கும்.

யார் செய்த புண்ணியமோ, நல்ல வேளை இவர் இஸ்லாமியப் பாடகராக ஆகவில்லை. ஆகியிருந்தால் இஸ்லாமிய இசையுலகிற்கு இன்னொரு K.ராணி கிடைத்திருப்பார்.

ஹரிஹரனை ரபிதான் எனக்கு அறிமுகப் படுத்தினார். அப்போது பாடகர் ஹரிஹரன் திரைப்படத்துக்குள் அடியெடுத்து வைக்காத நேரம். 1980-களின் தொடக்கத்தில் ஒரு கேசட்டை என்னிடம் கொடுத்து தமிழ்க்காரர் ஒருவர் எவ்வளவு இனிமையாக, குலாம் அலிக்கு நிகராக உருது கஸல்கள் பாடுகிறார் கேளுங்கள் என்று சிபாரிசு செய்தார். (மாண்டலின் வாத்தியத்தைக் ஓரளவுக் கற்றுக்கொண்டு நானும் இசை மேதையாக வரவேண்டும் என்று கனவுக் கண்டுக் கொண்டிருந்த காலமது)

திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் நாங்கள் ஒன்றாக பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த காலத்தில், அவரும் நானும் மன்னார்புரம் “Birds Lodge’ மாணவர் விடுதியில் தங்கியிருந்தோம். தற்போது அவரது வலைப்பூவிற்கு “பறவையின் தடங்கள்” என்று பெயர் சூட்டியிருப்பது இதனால்தானோ என்னவோ.

ஆங்கில இலக்கியம் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த காலத்தில் நானும் அவரும் இணைந்துதான் (சோடாபுட்டி கண்ணாடி அணிந்திருந்த) ஆங்கிலப் பேராசிரியர் யூசுப் சாரிடம் ட்யூஷன் படிக்கப் போவோம். எங்களிருவருக்கிடேயே நடக்கும் உரையாடல்களில் பெரும்பாலும் ஷேக்ஸ்பியர், மில்டன், கீட்ஸ், பைரன், வோர்ட்ஸ்வொர்த், ஷெல்லி இவர்கள்தான் வந்து தலைகாட்டி விட்டு போவார்கள். கம்பன், பாரதி பெரும்பாலும் வரமாட்டார்கள்.

(ஷேக்ஸ்பியரை – சேகப்பிரியர் என்றும், டென்னிஸனை – தேனிசையான் என்றும், வோர்ட்ஸ்வொர்த்தை – வார்த்தைப் பிரியன் என்றும், பைரனை – பைரவன் என்றும் என்று தமிழ்ப்படுத்தி அழைக்கும் தமிழார்வலர்கள் கருத்தோடு எனக்கு உடன்பாடில்லை)

என்னுடைய மற்ற நண்பர்கள் ரபியை ஒரு விநோதப் பிறவி போன்றே பார்ப்பார்கள். காரணம் அவர் அறிவுஜீவிகளின் லிஸ்டில் சேர்க்கப்படிருந்ததால். அறிவுஜீவி எனப்படும் ஜீவராசிகள் அதிகமாக பேச மாட்டார்கள். தனியொரு உலகத்தில் சஞ்சரிப்பார்கள். ஆர்ட் பிலிம்தான் பார்ப்பார்கள். (புரியுதோ இல்லையோ) இந்தி கஸல் கேட்பார்கள். புதுக் கவிதை எழுதுவார்கள். லா.ச.ரா. போன்றவர்களின் எழுத்துக்களை வாதிப்பார்கள். கையில் ஹெரால்ட் ராபின்சன் புத்தகம் வைத்திருப்பார்கள். ஜோல்னா பை ஒன்று தோளில் தொங்கும். செம்மறி ஆடுபோல் குஞ்சு தாடி இருக்கும். (ரபிக்கு முகத்தில் முடி வளர்த்தி குறைவு என்பதால் தாடி மிஸ்ஸிங்)

நாகூரில் ரபி, ஆபிதீன், அறிவழகன் (சாரு நிவேதிதா) நண்பர்களாக ஒன்றாகச் சுற்றுவார்கள்.

இவர் ஒரு பன்முகப் படைப்பாளி. பராக் ஒபாமா மட்டுமின்றி பர்வேஸ் முஷர்ரப் பற்றியும் எழுதுகிறார். கர்ம வீரரைப் பற்றியும் எழுதுகிறார் கம்பனையும் ஆராய்கிறார். தலாய் லாமாவைப் பற்றி எழுதுங்கள் என்றாலும் எழுதுவார்.

அது மட்டுமா? ஆங்கிலப்பாடம் நடத்துகிறார். புதுக்கவிதை எழுதுகிறார். இஸ்லாத்தைப் பற்றி ஆய்வு செய்கிறார். தன்முனைப்பு நூல்கள் எழுதுகிறார். தலைவர்களின் வாழ்க்கை வரலாறு எழுதுகிறார். போதாத குறைக்கு பாபா ராம்தேவ் ஆக மாறி “ஆல்ஃபா தியானம்” வேறு நடத்துகிறார். (ஷில்பா ஷெட்டி யோகா கற்றுக் கொடுக்கும்போது இவர் கற்றுக் கொடுத்தால் என்ன?)

நான் ஜமாலில் பட்டப்படிப்பு முடித்த காலத்தில் மற்ற நண்பர்களிடம் ஆட்டோ கிராப் வாங்கியதுபோல் இவரிடமும் வாங்கினேன். பிற நண்பர்கள் எல்லோரும் யாவும். “This page is Blue. Our friendship is True”,  “This Page is Yellow. You are a good fellow”, “This page is Pink. Truly I will think”  என்று ரைம்ஸ் எழுதிய நேரத்தில், ரபி மட்டும்

உன் நினைவுகள்
என மனதில்
போட்டோகிராப்பாய் பதிந்திருக்க

நீ ஏன் உன்
ஆட்டோகிராப்பை நீட்டுகிறாய்

என்று எழுதி இருந்தார். அப்போதே எனக்குத் தெரியும், இவர் ஒரு காலத்தில் வாசகர்கள் ஆட்டோகிராப் வாங்குமளவுக்கு பெரிய எழுத்தாளர் ஆவார் என்று. அது உண்மையாகி விட்டது.

 

18 responses to “நாகூர் ரூமியும் நானும்

  1. nagoorumi

    February 5, 2010 at 12:47 am

    அன்புள்ள கய்யூம்,

    என்னைப் பற்றிய உங்கள் பதிவுக்கு நன்றி. நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவனாக நான் வளர வேண்டும் என்பதே என் ஆசை. அது இருக்கட்டும், உங்களைப் பற்றி ஏன் இப்படி நினைக்கிறீர்கள்? அவையடக்கமா?! அல்லாஹ் கொடுத்த திறமைகளில் இரண்டை நான் வளர்த்துக் கொண்டேன். ஒன்று பேச்சு, இன்னொன்று எழுத்து. அதேபோல எழுதும் கலையை உங்களுக்கு நிறைவாகவே இறைவன் கொடுத்துள்ளான். உலகின் மிகச் சிறந்த படைப்பாளிகள் அனைவருக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை Humour. ஆமாம். அது இல்லாம பெரிய படைப்பாளி அல்லது கலைஞன் எவரும் கிடையாது. அது உங்களுக்கு மிக நன்றாகவே வாய்த்திருக்கிறது. நீங்கள் நாகூரின் மார்க் ட்வைன்! ஆமாம். மிக மிக சின்ன விஷயங்களை, மற்றவர்கள் கற்பனை செய்து பார்க்காத விஷயங்களை எடுத்துக் கொன்ண்டு அதைப் பற்றி சிரிக்கும் படியும் சிந்திக்கும்படியும் உங்களால் எழுத முடிகிறது.

    நாகூர் நாயகம் பற்றிய என் நூலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் உங்கள் கவிதை வரிகள்தான் epitaph என்பதும் உங்களுக்குத் தெரியும். மூர்த்தி சிறிது, ஆனால் கீர்த்தி பெரிது உங்களுக்கு (என்னைப் போலவே! — ஆபிதீனுக்கு இரண்டுமே பெரிது!),

    உங்கள் இந்தக் கட்டுரையில் உள்ள சில விஷயங்களைப் பற்றி நான் சொல்லியாக வேண்டும்.

    1. என் வாப்பா நடிகர் எஸ் எஸ் ஆர் போல இருப்பார் என்ற உன்னிப்பான கவனிப்பு. எனக்கு ரொம்ப ஆச்சரியமூட்டியது. நானும் அப்படித்தான் நினைத்துக் கொண்டுள்ளேன். ஏனெனில் அவர் அப்படித்தான் இருக்கிறார்!

    2. நாகூர் ரூமி என்ற புனைபெயர். அது எப்படி வைத்தேன், ஏன் ஜலாலுத்தீன் ரூமியின் பெயரை தேர்ந்தெடுத்தேன் என்று எனக்கே தெரியவில்லை. Synchrodestiny என்று ஒன்று உண்டு. அதாவது தற்செயலாக நடப்பதைப் போல சில பல விஷயங்கள் தோன்றும். ஆனால் உண்மையில் எதுவுமே தற்செயலாக நடப்பதில்லை. இறைவனின் திட்டப்படிதான் நடக்கின்றன. சிலவற்றுக்கு நமக்குக் காரணம் தெரியலாம். பலவற்றுக்குத் தெரியாமலிருக்கலாம். அந்த மாதிரி ஒன்றுதான் நாகூர் ரூமி என்ற புனைபெயரும்.

    ரஃபி என்று எழுதினால் ரக்பி என்று படிக்க வேண்டி வரலாம் என்று தோன்றியது. வேறு சில பெயர்களை யோசித்துப் பார்த்தேன். ராஹீ (உர்து — வழி காட்டுபவன்) என்ற பெயர்கூட வைக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் நானே பல நேரங்களில் வழி தெரியாமல் விழி பிதுங்கிக் கொண்டிருக்கும்போது, நான் எப்படி அடுத்தவருக்கு வழிகாட்ட முடியும் என்றோ என்னவோ அந்த பெயர் வைக்கவில்லை.

    நாகூர் பெரிய எஜமானின் பொருட்டால் நாகூர் என்று தொடங்கிக் கொண்டேன். இலக்கியம், ஆன்மிகம் இரண்டிலும் சிகரங்களைத் தொட்ட ஊரல்லவா நம் ஊர்? அதோடு ரூமி என்று அவர் பெயரை வைக்க வேண்டுமென்று ஏனோ தோன்றியது. வைத்துவிட்டேன்.

    ஆனால் கொஞ்ச ஆண்டுகளுக்கு முன்புதான் ரூமி பற்றி தெரிந்து கொண்டேன். அவர் பாரசீக கவி ஞானி. அவர் உலகின் மிகப்பெரிய காவியத்தைப் படைத்த கவிஞர் மட்டுமல்ல. ஒரு வலியுல்லாஹ்வும் கூட. எனவே கவிஞனாக அவ்வப்போது இருக்கின்ற நான் ஒரு நாள் இறைநேசனாக ஆகலாம் அல்லவா? அதனால் அந்தப் பெயரை நான் தேர்ந்தெடுத்துக் கொண்டேன் என்பதைவிட அது என்னிடம் வந்து சேர்ந்து கொண்டது என்றுதான் கூறவேண்டும். நானும் ஒருநாள் ஞானியாகலாமல்லவா?!

    நிற்க, ரூமி என்பது ரோம் நகரவாசியைக் குறிக்கும் சொல் என்றுதான் நானும் முதலில் நினைத்தேன்.ஆனால் 13ம் நூற்றாண்டின் கவிஞானி ரூமி வாழ்ந்தது ரோம் அல்ல. ரோமுக்கு அரபியில் ரூம் என்பது சரிதான். ஆனால் ஜாலாலுத்தீனின் ரூம் ரோம் அல்ல. அது துருக்கியில், கொன்யாவில் (கென்யா அல்ல) ரூம் என்ற ஊர். அதனால் அவர் ரூமி.

    ரூமியின் மஸ்னவியைப் போன்ற ஒரு படைப்பை ஒருவன் படைத்துவிட்டால் வேறு எதுவுமே எழுதவோ பேசவோ வேண்டியதில்லை. அவ்வளவு அற்புதமான படைப்பு. நான் ஆங்கிலத்தில் படித்தேன். இப்போது பாரசீகத்திலும் உருதிலும் படித்துக் கொண்டிருக்கிறேன் (கஷ்டப்பட்டு). முடிந்தால் படித்துப் பாருங்கள்.

    3. என் குரல் பற்றி நீங்கள் சொன்னது ரொம்ப சரி. தொலைபேசியில் பல ஆயிரக் கணக்கான முறைகள் ‘சொல்லுங்க மேடம்’ என்று எனக்கு பதில் சொல்லப்படுவதை நான் கேட்டுக் கேட்டு பாலுணர்வை (I mean gender feeling) தாண்டிய ஒரு நிலைக்கு நான் சென்று காலம் பலவாகிவிட்டது.

    நிற்க, எனக்குப் பெயர் வைத்தது கவிஞர் சலீம் மாமா. பாடகர் முஹம்மது ரஃபி மாதிரி நானும் பாட வேண்டும் என்ற ஆசையில்தான் மாமா அப்படி வைத்ததாம்! மாமாவே என்னிடம் சொல்லி பல முறை வருத்தப்பட்டுள்ளது! (சிரித்துக் கொண்டே). குரல் குறிப்பிட்ட வயது வரை மாறிக்கொண்டே இருக்கும். எனக்கு இசை உணர்வு இயற்கையிலேயே உள்ளது. நான் வளர்த்துக் கொள்ளாத திறமைகளில் இதுவும் ஒன்று 9ஆபிதீன் ஓவியத் திறமைக்கு ஃபாத்திஹா ஓதிவிட்ட மாதிரி).

    பேஷக் மந்திர் பாடலை நான் பாடியது கல்லூரி நாட்களில். அப்போது உச்ச ஸ்தாயியில் என்னால் பாட முடிந்தது (இப்போது அந்த சுதியில் முணகக்கூட முடியவில்லை அது வேறு விஷயம்). பள்ளி நாட்களிலேயே நான் பாட ஆரம்பித்துவிட்டேன். அப்போது என் குரல் வேறு. நானும் ஆபிதீனும் சேர்ந்து பாடியிருக்கிறோம்.

    சங்கீதம் கற்றுக் கொள்ள எந்தக் குரலும் போதும். வெறும் காற்று மட்டுமே அதிகமாக வரும் குரலாக இருந்தாலும் சரி. ஸ்வர ஸ்தானங்கள் பிடிபட்டு, சுதி சேர்ந்து விட்டால் யாரும் பாடலாம். கேட்கவும் அருமையாக இருக்கும். மதுரை சோமுவின் குரலைக் கேட்டிருக்கிறீர்களா? (மருத மலை மாமணியே அல்ல). அவருடைய கர்நாடக சங்கீதம் கேட்டால் தெரியும். அந்தக் குரலுலும் நம்மை உருக்கும் விதமாகப் பாட அவரால் முடியும். வயது ஆக ஆக, (எனக்குத்தான்) குரல் பேசவே கஷ்டமான ஒன்றாகப் போய்விட்டது. இனி மனதுக்குள்தான் என்னால் பாட முடியும். ஆனால் இந்தக் குரலை வைத்துக் கொண்டுதான் நான் பல ஊர்களுக்கும், பள்ளி கல்லூரிகள், அமைப்புகளுக்கும் சென்று பேசி வருகிறேன்!.

    எஸ் எம் ஏ காதர் வாப்பாவிடம் நான் இரண்டு வருட பாடங்களை ஆறே மாதங்களில் கற்று முடித்தேன். ம்ஹும், அவர்கள் எனக்கு கற்றுவித்தார்கள். அதுவே ஒரு சாதனைதான். அடுத்தது ராகம்தான். அதைக்கூட நான் தனியாகக் கேட்டு தெரிந்து கொள்ளுமாறு ஒரு கேஸட் முழுக்க பாடிக் கொடுத்துள்ளார்கள். நான் தான் அதை அப்புறாம் கேட்கவே இல்லை!

    4. நாம் பேர்ட்ஸ் லாட்ஜ்ஜில் தங்கியது நினைவுள்ளது. ஆனால் பறவையின் தடங்கள் என்று பெயர் வைத்ததற்கும் அதற்கும் தொடர்பில்லை. ஆனால் நீங்கள் சொன்ன பிறகுதான் அப்படி ஒரு தொடர்பிருப்பதும் படுகிறது.

    நான் உங்களிடம் ஆட்டோகிராஃபில் எப்போது எழுதிக் கொடுத்தேன், உண்மையில் கொடுத்தேனா என்றெல்லாம் ஞாபகமில்லை. ஆனால் கவிதை மு மேத்தா அண்ணனுடையது என்று நினைக்கிறேன் !

    எனக்கு பெருமையும் கிடையாது, பணிவும் கிடையாது. நான் ரொம்பவும் சாதாரணமாகவே இருக்க விரும்புகிறேன். எழுதும்போது எழுத்தாளன். பேசும்போது பேச்சாளன். பாரட்டும் விமர்சனமும் என்னை ஒன்றும் செய்யாமல் பார்த்துக்கொள்ளவே எப்போதும் முயல்கிறேன். எழுத்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். பாட்டு எத்தனை ஆயிரம் வந்தாலும் ஸ்வரங்கள் ஏழு மட்டும்தானே? அதுபோல. மற்ற நேரங்களிலெல்லாம் சரியான மனிதனாக இருக்கிறேனா என்றே பரிசோதித்துப் பார்த்துக்கொள்ள விரும்புகிறேன்.

    என்னிடம் சில திறமைகள் உள்ளன. அது எனக்குத் தெரியும். எனக்கு இரண்டு கண்கள், இரண்டு கைகள் இருப்பதைப் போல அவைகளும் உள்ளன. உங்களிடம் என்னென்ன திறமைகள் இருக்கின்றன என்பதும் உங்களுக்குத் தெரியும். இதிலே யாரும் உயர்வோ யாரும் தாழ்வோ இல்லை. உங்களைப் போல என்னால் எழுத முடியாது. என்னைப் போல் உங்களால் எழுத முடியாமலிருக்கலாம்.

    எல்லாம் போகட்டும், என்னிடம் இரவு நேரத்தில் ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்ததைப் பற்றி உங்கள் காட்டு மன்னார் கோயில் மனைவி என்ன சொன்னார்? நான் ஆம்பளைதான் என்பதை கடைசியில் நம்பினாரா இல்லையா?

    அன்புடன்
    ரூமி

     
  2. sharfudeen

    February 5, 2010 at 10:16 am

    உங்களுடன் பேச விருப்பமாய் உள்ளேன், தொடர்பு எண் தருவீர்களா?

     
  3. Abdul Qaiyum

    February 5, 2010 at 10:49 am

    With Pleasure
    00973-39628773 (Bahrain)

     
  4. sharfudeen

    February 5, 2010 at 11:09 am

    assalaaamu alaikum! I didnt noticed that you are from abraod,., ok now i have to tell what i come to say ., actually we have one magzine for bloggers, and your article about nagoor rumi is good one to publish, so can you allow to publish this article in our blogger’s magazine? i need your reply within 5pm IST , u can send mail to (vellinila@gmail.com). for further information pls read my blog. ( http://www.vellinila.blogpsot.com).thanking you !

     
  5. Abdul Qaiyum

    February 5, 2010 at 11:23 am

    You can republish my article in your blog or magazine.

    I have no objection as far as it is reproduced without any addition or omission

    Thank you

    Abdul Qaiyum
    https://nagoori.wordpress.com

     
  6. Kanthi Jaganathan

    February 5, 2010 at 2:42 pm

    good one again….

     
  7. Kanthi Jaganathan

    February 5, 2010 at 3:02 pm

    To be honest, I read only your mails in Anbudan – nowadays!

     
  8. மஞ்சூர் ராசா

    February 5, 2010 at 3:05 pm

    இனிய பதிவுக்கு நன்றி கையூம்.

    ரூமியை தெரியும் மேல் விவரங்களுக்கு நன்றி.

     
  9. மீனா

    February 5, 2010 at 3:07 pm

    அருமையான விமர்சனம்! (இங்கு போட்டிருப்பது அவருக்குத்தெரியுமா!)

    \\ நாகூரில் ரபி, ஆபிதீன், அறிவழகன் (சாரு நிவேதிதா) நண்பர்களாக ஒன்றாகச்
    சுற்றுவார்கள்.\\

    ஓ..! . அவரின் திராட்சைகளின் இதயத்தில் அறிவழகன் வருகிறார்!

    பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.

    மீனா

     
  10. Abdul Katheem Meerarowther

    February 5, 2010 at 3:11 pm

    அஸ்ஸலாமு அலைக்கும் அப்துல் கையூம் அவர்கள்

    நாகூர் ரூமி அவர்களைப்பற்றிய உங்கள் எழுத்தாக்கம் சிறப்பாக இருந்தது. ரசித்தேன். நானும் ஒரு ஜமால் மாணவன் என்ற கூடுதல் மகிழ்வு.

    அறிவு ஜீவிகள் பற்றிய உங்கள் வர்ணனை மிக அருமை. மில்டன், கீட்ஸ், ஷெல்லியுடன் ஹெரால்ட் ராபின்ஸை சேர்த்திருப்பததுதான் சற்று நெருடலாக உள்ளது.

    தொடருங்கள்.

    அன்புடன்
    அப்துல் கதீம் katheem@gmail.com

     
  11. Trichy Syed

    February 5, 2010 at 6:17 pm

    Anbulla அப்துல் கையூம் avarkalukku…

    Assalamu Alakikkum warkmathulla.

    Mela ulla news interstingaka irrunthathu.. Tharboothu nan thokkuthuvarum “Oru Rasikanin Diary” (Piravalamanavarkalin valkailan nandanthu suvaiyana sampavankalin thookuppu) noolil veliyeda virupukiren.

    Unkal anba anumathiyai ethirparkiren.

    Nandri.

    Wasalam.

    With love
    Trichy Syed,
    trichysyed@yahoo.com

     
  12. Abdul Qaiyum

    February 5, 2010 at 6:20 pm

    I have mailed you a letter to your email address regarding the permission. With Regards

    Abdul Qaiyum

     
  13. Trichy Syed

    February 5, 2010 at 6:40 pm

    Kind Attn. : Mr. Nagoor Rooumi, Journalist.

    Subject: my opinion about writer thooyavan

    என்னுடைய மாணவப் பருவத்தில் கதாசிரியர் தூயவன் அவர்களின் நல்ல கதைகளைப் படித்து மகிழ்ந்திருக்கிறேன். அவரின்மேல் எனக்கு மிகுந்த மரியாதையும் மதிப்பும் உண்டு. அவரைப் பற்றிய செய்திகளை படிக்கும்போது என்னுள் ஒரு பரவசமும் ஆத்ம திருப்தியும் ஏற்படுகிறது. எனக்கு குருவைப் போன்றவர் அவர்.

    பிரியமுடன்
    திருச்சி சையது
    துபாய்

     
  14. ஆசிப் மீரான்

    February 5, 2010 at 6:49 pm

    தலைவரே

    உங்கள் கட்டுரைகளிலிருக்கும் சுகமும் வார்த்தை நயங்களும் கவிதைகளில் எனை ஈர்ப்பதில்லை
    ரூமியோடு அவர் வீட்டில் யுகபாரதியோடு மதிய உணவுக்குச் சென்ற அனுபவம் உண்டு. மிக நெருக்கமான் நண்பரைப் போல பழகினார். எனது கலைஞன் சிறுகதையை நான் யாரென்றே தெரியாத நிலையிலும் பாராட்டி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் (பாருங்கடே! நானும் ரவுடிதான் 🙂

    சுவையான நிகழ்வுகளுக்கு வாழ்த்துகள்
    நாகூர் இஜட் ஜஃபருல்லாவைப்பற்றிய கட்டுரையும் அழகு

    ஜஃபருல்லாஹ்

    ’நான் அல்லாஹ்வுக்குப் பயப்படமாட்டேன்
    ஷைத்தானுக்குப் பயப்படுவேன்’ கவிதை கிளப்பிய
    தீப்பொறி விவாதங்கள்

    நான் நல்லவனுக்கு நல்லவன்
    கெட்டவனுக்கு கெட்டவன் என்றால் மாடு கூட அது மாதிரிதானே?
    நீ நல்லவனுக்கும் நல்லவனா இரு, கெட்டவனுக்கும் நல்லவனா இரு’ என்று
    சொன்ன போதனையைத்தான் வாழ்நாளில் இதுவரை கடைபிடித்து வருகிறேன்
    (யப்பா! என்னாலயே முடியலையே?! :-))

    வாழ்த்துகள்!!
    சுவையான கட்டுரைகளுக்கு!

    ஆசிப் மீரான்

     
  15. விஜி

    February 8, 2010 at 8:07 pm

    “//உன் நினைவுகள்
    என மனதில்
    போட்டோகிராப்பாய் பதிந்திருக்க
    நீ ஏன் உன்
    ஆட்டோகிராப்பை நீட்டுகிறாய்//

    என்று எழுதி இருந்தார். அப்போதே எனக்குத் தெரியும், இவர் ஒரு காலத்தில் வாசகர்கள் ஆட்டோகிராப் வாங்குமளவுக்கு பெரிய எழுத்தாளர் ஆவார் என்று. அது உண்மையாகி விட்டது.”

    உண்மையான நட்பின் அடையாளமே இப்படி அவரை எழுத வைத்திருக்கின்றது.

    ‘அரு”மை”…

    “ரூமி”யிற்கு உங்கள் பாணியில் சிந்தித்தது சிரிப்பை வரவழைத்தது….

    விஜி
    vselvaratnam@gmail.com

     
  16. சடையன் சாபு

    February 8, 2010 at 8:13 pm

    நண்பரே..

    எனக்கும் நாகூர் ரூமிக்கும் உள்ள தொடர்பு ராமருக்கும் அணிலுக்கும் உள்ள தொடர்பு போல. அதற்காக முதுகில் கோடு இருக்கிறதா என் கேட்கப் படாது. ரா.கா.கி குழுமத்தில் எழுதிக் கொண்டிருந்த போது எங்களுக்குள் தொடர்பு தொற்றிக் கொண்டது. அவர் எழுத இருக்கும் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் எனும் நூலுக்கு சில பொத்தகங்கள் தேவை . கொடுத்து உதவ முடியுமா என்க் கேட்டிருந்தார். அப்போது அமீரகத்தில் இருந்தேன்.சமநிலை சமுதாயம் மாத இதழிற்கு தொடர்பு கொண்டு அவருக்கு ஆவண செய்தேன். வெற்றிகரமாக பொத்தகத்தை எழுதி முடித்து வெளியீடும் செய்து விட்டார். அப் பொத்தகத்தின் முன்னுரையில் எனது பெயரையும் சேர்த்து முதுகில் கோடு போட்டு விட்டார். அதற்குப் பிறகு நிறைய இஸ்லாமிய இலக்கிய மாநாடு சந்திப்புகள் என நட்பு தொடர்கிறது.

    கவிஞன் என்றால் கொஞ்சம் திமிர் இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளம் நாகூர் ரூமி. புக் லேண்டில் நடந்த அவரது நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். சென்றிருந்தேன். மொத்தம் நாலு பொத்தகங்கள் வெளியீடு. எல்லோரும் பொத்தகத்தை ஆய்வுரை என்ற பெயரில் ஆய்ந்து கொண்டிருந்தார்கள். நாகூர் தர்காவைப் பற்றிய பொத்தகத்திற்கு பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் ஆய்வுரை வழங்கிய போது நாகூர் ஆண்டவர்கள் ‘கராமத்’ ( முடவனை நடக்கச் செய்தது, ஊமை பேசியது ) என்பதெல்லாம் கொஞ்சம் அதிகப்படி, அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்ள
    வேண்டும் என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார். நாகூரார் அமைதியாக இருந்தார், கடைசியில் ஏற்புரையின் போது சாடி விட்டார். ‘கராமத்’ களீன்
    பேரில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இன்னும் நம்புகிறேன் அதை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது என ஒரே போடு போட்டு அமர்ந்தார்.

    அடுத்து, ஈழத்துகவிஞர் அஷ்ரப் சிஹாபுதீனின் நூல் வெளியீட்டு விழா, கவிஞரின் ஏற்புரையின் போது, ரூமி சும்மா இருந்திருக்கலாம், சிஹாபுதீனை நோக்கி உங்கள் கவிதை தொகுப்பில் ஈழப்போரின் தீவிரத்தை விட அதன் வலியின் தாக்கும் அதிகமாக உள்ளதேன் ? குறைத்துச் சொல்லியிருக்கலாமெ என ஆதங்கப் பட்டார். அவ்வளவுதான் ஈழத்துக் கவிஞர் குமுறிவிட்டார். விடுதலை புலிகள் விடுதலை எனும் பேரில் தமிழ் முஸ்லிம்களை கொன்று குவித்தார்கள். ‘ஃப்ஜ்ர்’ (வைகைறை) தொழுகைக்கு சென்ற என் தாய்மாம்ன் வீடு திரும்பவில்லை. சென்று பார்த்தால் பள்ளிவாயிலில் வஃபாத் (இறந்து) கிடந்தார். அந்த வலியின் தாக்கம்தான் இந்தக் கவிதைநூல் என பொரிந்து தள்ளிவிட்டார்.

    சடையன் சாபு
    sadaya.sabu@gmail.com

     
  17. nagoorumi

    February 8, 2010 at 9:42 pm

    அன்பு சடையன், எப்படி இருக்கிறீர்கள்? சடையன் சொன்னது அனைத்தும் உண்மை. ஆனால் கடைசியில் சொன்னது மட்டுமெனக்கு சரியாக நினைவில் இல்லை. நான் அஷ்ரஃப் ஷிஹாபுதீனின் கவிதை நூல் தொடர்பாக அப்படி யொரு கேள்வி கேட்டேனா? இருக்கலாம். அவர் ’பொரிந்து தள்ளியது’ என்னையல்ல. தன் உணர்வுகளைக் கொட்டியதைத்தான் சடையன் அவர் பாணியில் இப்படிச் சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

    என் நூல்கள் வெளியீட்டு விழாவில் நான் கராமாத்களை நம்புகிறவன் என்று சொன்னது சடையரே உங்களுக்குத் திமிராகப் படுகிறதா? நீங்களும் அற்புதங்களுக்கு எதிரானவராக இருக்கலாம். அதனால் அப்படித் தோன்றியிருக்கலாம். அல்லது பாம்பின்கால் பாம்புதானே அறியும்?!

    அன்புடன்
    ரூமி

     
  18. Iniya

    February 9, 2010 at 12:12 am

    I have also stayed in Mannarpuram birds lodge for almost 2 years….between 94 and 96…. romba kodumaiyaana lodge aacche….

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: