RSS

ஆனை கொன்றான்

23 Feb

நாகூருக்கும் பாம்புக்கும் தொன்று தொட்டே தொடர்புகள் இருந்து வந்திருக்கிறன. இந்த சிற்றூருக்கு நாகூர் என்ற பெயர் ஏன் வந்தது என்பதற்கு பல கருத்துக்கள் நிலவுகின்றன. நான்கு காரணங்களால் வந்திருக்கக் கூடும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.   

1. நாகர் இன மக்கள் இங்கு பெருமளவு வசித்ததனால் இதற்கு நாகூர் என்ற பெயர் வந்தது என்று கூறுவோர் உண்டு.

2. கூர்மையான நா படைத்தவர்கள் (நா+கூர்) அதாவது அறம் பாடத்தக்க புலவர் பெருமக்கள் இங்கு வாழ்ந்ததினால் இந்தப் பெயர் என்று கூறுவோர் உண்டு.  (நாகூருக்கு புலவர் கோட்டை என்ற மற்றொரு பெயரும் உண்டு)

3.நாவல் மரங்கள் நிறைந்திருந்த காரணத்தால் இந்த ஊர் ‘நாவல் காடு’ என்று அழைக்கப்பட்டு, பின்னர் ‘நாகக்காடு’ என்று மருவியது என்கிறார்கள்.

4. முன்னொரு காலத்தில் நாகப்பாம்பு நிறைந்திருந்த காடு இது. அதனால்தான் நாகூர் என்று அழைக்கப்பட்டது என்றும் வாதிடுகிறார்கள்.

இன்னும் கொஞ்சம் விட்டால் பாம்பு நிறைய இருந்ததினால்தான் அதற்கு ‘பாம்பே’ என்று பெயர் வந்தது என்று வாதிடுவீர்கள் போலிருக்கிறதே என்று நண்பர் சலீம் போன்றவர்கள் என்னை இம்சை பண்ணக் கூடும். பாம்புக்கு கால் இருக்கிறதா இல்லையா என்று சலீமிடம் கேட்டால், ‘ஆம்’ இருக்கிறது என்கிறார். கால் இருப்பதால்தான் அது “பாம்பு”. இல்லையென்றால் அது “பம்பு” என்று விளக்கம் வேறு கொடுக்கிறார். எதற்கு வீண்வம்பு என்று நானும் சிரித்து தொலைத்தேன், பழைய ஜோக்காக இருந்த போதிலும்.

சதா உட்கார்ந்துக் கொண்டு ‘அதைக்கொண்டா’ ‘இதைக்கொண்டா’ என்று அதிகாரம் செய்யும் என்னைப்போன்ற சோம்பேறிகள் கொஞ்சம் ‘அனகொண்டா’வைப் பற்றியும் அறிந்து வைத்துக் கொள்வது நலம்.

1997-ஆம் ஆண்டு அனகொண்டா என்ற ஆங்கிலப் படம் வெளிவந்த பிறகு அனகொண்டா என்ற பெயர் ஐந்து கண்டமும் பிரபலமாகி விட்டது.

அனகொண்டா, அமேஸான் காடுகளில் மட்டும்தான் இருக்கிறது என்று நம்பிக் கொண்டிருந்தோம். அமேஸான் காடுகளில் வசிக்கும் அனகொண்டா பாம்புக்கு எப்படி தமிழ் பெயர் வந்திருக்க முடியும்? ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம். ‘அனகொண்டா’ வடித்தெடுத்த அழுகுத் தமிழ் பெயர்.

“ஆனை கொன்றான்” என்ற பெயரிலிருந்துதான் இந்த அனகொன்டா என்ற வார்த்தை பிறந்திருக்கிறது.’கங்கை கொண்டான்’ ‘கடாரம் வென்றான்’ என்று பட்டம் சூட்டும் பழக்கம் சோழநாட்டைச் சேர்ந்த நம்மவர்களுக்கு வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.

உலகில் அறியப்பட்ட மிகப் பெரிய பாம்பு இனம் அனகொண்டா. இந்த வகை பாம்பின் நீளம் சராசரி 33 அடியாகும். இவ்வளவு பெரிய பாம்பு ஒரு யானையையே தாக்கி கொல்ல வல்லது. பாம்பு தனது தலையைவிட 5 மடங்கு பெரியதாக உள்ள இரையை கூட விழுங்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த மெகா பாம்புக்கு நம்மவர்கள் அளித்த பொருத்தமான பெயர் ‘ஆனைகொன்றான்’ என்பதாகும். இந்தப் பெயர் உருமாறி அனகொண்டாவாகி தென்னமெரிக்காகாரர்களையும் தமிழ்வார்த்தை உச்சரிக்க வைத்தது. ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்ற பாரதியின் கனவும் நனவாகி விட்டது.

தமிழகத்து கடலோரப் பகுதிகள் டச்சுக்காரர்களின் வசம் இருந்த காலத்தில்தான் இந்தப்பெயர் மேலைநாடுகளுக்கு பரவ ஆரம்பித்திருக்கிறது. ரிச்சர்ட் பாய்ல் எழுதிய “செரந்திப்பில் சிந்துபாத்” என்ற ஆங்கில நூலில் அனகொண்டாவைப் பற்றிய குறிப்பேடுகளை காண முடிகிறது.

சிலகாலம் முன்பு இலங்கை அநுராதபுரத்தில் மிகப்பெரிய அனகொன்டா பாம்பு ஒன்று பிடிபட்ட செய்தி பத்திரிக்கையில் படிக்க நேர்ந்தது (படங்கள்: ரிஷான் ஷெரீப்). அண்மையில் திருப்புத்தூர் அருகே உலகம்பட்டி கண்மாயில் “அனகொண்டா’ மலைப் பாம்பு பீதியால் கிராமத்து மக்களை அலைக்கழித்த செய்தியும் காண நேர்ந்தது.

ஆக அனகொண்டா அமேஸான் காடுகளுக்கு மட்டும் சொந்தமானதல்ல என்பது தெளிவாகிறது. தமிழிலிருந்துதான் இந்தப் பெயர் உலகம் முழுவதும் பரவியது என்று உலகம் இப்போது நம்புகிறது.

 

Tags: , , ,

2 responses to “ஆனை கொன்றான்

  1. haja

    February 24, 2010 at 11:57 am

    நானா.! உங்க நாகூர் குசும்புடன் சேர்ந்த தகவல்கள் மிகவும் அருமை. இதுபோல் நல்ல நல்ல குசும்புகளை.. சாரி சாரி தகவல்களை போடுங்கமா…

     
  2. Saleem

    February 25, 2010 at 8:51 pm

    நாகப்பட்டினம் முன்பு நாகநாடு என்று அழைக்கபட்டதாக சான்று உள்ளது, ஆனால் நாகூருக்கும் நாகத்திற்க்கும் சம்பந்தம் இருக்க முடியாது. கூர்மையான நா படைத்தவர்கள் (நா+கூர்) அதிகம் வசிப்பதால் அவ்வாறே அழைக்க வாய்ப்புக்கள் அதிகம்.

    அதே போல நாகலாந்திற்கும் நாகத்திற்கும் சம்பந்தம் இருக்கக்கூடும். அப்படியானால் நாகநாட்டிற்கும் (நாகப்பட்டினம்) நாகாலாந்திற்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாகவே தோன்றுகிறது. ஆயிரத்தில் ஒருவன் படம் போல ஒரு ஆராய்ச்சி செய்தால்தான் என்ன?

    சுமார் 200 வருடங்களுக்கும் முன்னால் நாகையை ஆண்ட சோழ மன்னனுக்கும் புத்த துறவிகளுக்கும் போர் எற்பட்ட போது சோழ மன்னன் தன் வாரிசை தன் நம்பிக்கைக்கு உகந்த 100 பேருடன் நாகாலாந்திற்கு அனுப்பி வைத்தாகவும் அவர்கள் தன்னுடன் புத்தருடைய பல் ஒன்றையும் எடுத்துச் சென்றதாக ஒரு ஓலை சுவடிச்சான்று உள்ளது.

    நாம் வேண்டுமானால் கையூம் தலைமையில் ரீமாசென், ஆண்டிரியாவுடன் ஒரு குழுவாக நாகை முதல் நாகாலாந்த் வரை கால்நடையாக ஒரு தொல்பொருள் ஆய்வு செய்தால் கண்டிப்பாக நல்ல தீர்வு கிடைக்கும். கடைசியில் கையூம் சோழ வாரிசாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. எதற்கும் முதுகில் புலி உருவம் உள்ளதா,அல்லது புளி கொட்டை அளவு மச்சமாவது உள்ளதா என்று பார்த்து கொள்வது நல்லது. ரீமாசென், ஆண்டிரியாவுடன் செல்வதால் கண்டிப்பாக மச்சம் இருக்கும்.

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: