RSS

உமர் கய்யாமும் நாகூர்க்காரர்களும்

06 Mar

உமர் கய்யாம் பாடல்களை மேலைநாடுகளுக்கு முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்தவர் தாமஸ் ஹைட் (Thomas Hyde) என்ற போதிலும் எட்வர்ட் பிட்ஸ்ஜெரால்ட் (Edward Fitzgerald) செய்த மொழியாக்கம்தான் மிகவும் பிரபலமாகியது.

இன்று உலகின் பல பகுதிகளில், இரவு கேளிக்கை விடுதிகளும் மதுக்கூடங்களும் உமர் கய்யாமின் பேரில் இயங்குகின்றன. உமர் கய்யாம் உண்மையிலேயே மது, மாது, மாயா ஜாலம் போன்ற மாயைகளில் மோகம் கொண்டிருந்த கவிஞனா அல்லது தவறாக புரிந்துக் கொள்ளப்பட்ட சூஃபிக் கவிஞனா என்பது முடிவுறாத வாதம். அதை இன்னொரு பதிவில் விளக்கமாக விவாதிப்போம்.

உமர் கய்யாம் வாழ்ந்த காலத்திலேயே அவற்றை பாமர மக்கள் பாடக்கூடாது ஏனெனில் மறைபொருளில் பாடப்பட்ட அந்த ஞானப் பாடல்களின் அர்த்தத்தை புரிந்துக் கொள்ள சாதாரண மனிதனுக்கு மனப்பக்குவம் போதாது என்று கூறி பாமர மக்கள் அவருடைய பாடல்களை பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

பிட்ஸ்ஜெரால்டின் மொழியாக்கம் உலகம் முழுதும் பிரபலமானதற்கு மற்றொரு காரணம் கார்டன் ரோஸ் (Gordon Ross) வரைந்த கவர்ச்சி சித்திரங்கள்தான். அந்த நிர்வாண ஓவியங்களை ஆபாசச் சித்திரம் என்று நான் வருணித்தால் ‘கலையுணர்வு’ மிக்கவர்கள் என்னை ‘கலாரசனையில்லாத முண்டம்’ என்று விமர்சிக்கக்கூடும்.

ஒரு மனிதன் எப்படி ஒரே சமயத்தில் கவிஞனாகவும், கணித நிபுணனாகவும் (Algebra & Geometry), இசை மேதையாகவும், தத்துவவாதியாகவும் மற்றும் புவியியல், பெளதிகம்,  மருத்துவம் மற்றும் வானவியல் துறைகளில் ஒரே சமயத்தில் வல்லுனனாக திகழ முடிந்தது என்பது பெரிய ஆச்சரியம்.

உமர் கய்யாமின் இயற்பெயர் கியாசுத்தீன் அபுல் ஃபத் உமர் இப்னு இப்ராஹிம் அல் நிஷாபூரி அல் கய்யாமி. நிஷாபூர் – டர்குவாய்ஸ் (ஃபெரோஸா) எனும் நீலப்பச்சை கற்களுக்கு பிரசித்திப்பெற்ற ஈரானில் உள்ள நகரம். உமர் கய்யாம் பிறந்த ஊர் இது.

கய்யாம் என்றால் கூடாரம் என்று பொருள். கூடாரம் பின்னும் குடும்பத்தில் பிறந்ததினால் அவருக்கு கய்யாம் என்ற பெயர். தனது காரணப் பெயரை வைத்தே பொருத்தமான வரிகளில் அதனை பொருத்தி வார்த்தை ஜாலம் புனையும் அந்த தத்துவக் கவிஞனை நம்மால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

Khayyam, who stitched the tents of science,
Has fallen in grief’s furnace and been suddenly burned;
The shears of Fate have cut the tent ropes of his life,
And the broker of Hope has sold him for nothing!’

அறிவியலெனும் கூடாரத்தை தைத்த கய்யாம்
இன்று துயரமெனும் அடுப்பு உலையில்
வீழ்ந்து  கருகிவிட்டான்
விதியின் கத்திரிப்பு
அவனை இணைத்திருந்த
வாழ்க்கையின் கயிற்றையும்
அற்று எறிந்து விட்டது
நம்பிக்கைத் தரகன்
அவனை
சூன்யத்திற்கு விற்றுவிட்டானே !

என்று தன்னைத் தானே அறிமுகம் செய்துக் கொள்கிறான் அவன்.

The Moving Finger writes; and, having writ,
Moves on : nor all thy Piety nor Wit
Shall lure it back to cancel half a Line,
Nor all thy Tears wash out a Word of it.

எழுதிச் செல்லும் விதியின்கை
எழுதி எழுதி மேற்செல்லும்
தொழுது போற்றி நின்றாலும்
சூழ்ச்சி பலவும் செய்தாலும்
அழுது கண்ணீர் விட்டாலும்
அபயம் அபயம் என்றாலும்
வழுவிப் பின்னால் ஏகியொரு
வார்த்தை மாற்றம் செய்திடுமோ ?

கவிமணியின் அழகுத்தமிழ் மொழியாக்கம் இது.

But helpless pieces in the game He plays
Upon this chequer-board of Nights and Days
He hither and thither moves, and checks … and slays
Then one by one, back in the Closet lays

இந்த வையம் இரவு பகல்
எழுதும் தாயக் கட்டமடா!
வந்த விதியோ மனிதர் தமை
வைத்துக் காயாய் விளையாடி
முந்தி நகர்த்தி நகைக்குமடா!
மூலைக் கிழுத்து வெட்டுமடா!
பிந்தி ஒவ்வொரு காயாகப்
பெட்டிக்குள்ளே வைக்குமடா!

இதுவும் கவிமணியின் மொழிபெயர்ப்புதான்.

இதையே செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் அ. சீநிவாசராகவன் அவர் பாணியில் கூறுகிறார்.

இரவு பகலென்ற சதுரங்கப் பலகையிலே
விதி மனிதர்களைக் காய்களாக்கிக் கொண்டு
விளையாடும் சூது தான் வாழ்வு.
காய்கள் இங்கும் அங்கும் நகர்த்தப்படுகின்றன
வெட்டப்படுகின்றன
ஒன்றின் பின் ஒன்றாக
மீண்டும் பெட்டிக்குள் எடுத்து வைக்கப்படுகின்றன”.

இளம் பிராயத்தில், கண்டசாலா பானுமதி இணைந்து பாடிய இந்த திரைப்படப்பாடல் (கள்வனின் காதலி 1955) சிலோன் ரேடியோவில் ஒலிக்கும்போதெல்லாம் அந்தப் பாடலின் இனிமையில் நான் மெய்மறந்து ரசித்ததுண்டு.

வெய்யில் கேற்ற நிழலுண்டு;
வீசும் தென்றல் காற்றுண்டு;
கையில் கம்பன் கவியுண்டு;
கலசம் நிறைய மதுவுண்டு;
தெய்வ கீதம் பலவுண்டு;
தெரிந்து பாட நீயுமுண்டு;
வையம் தரும் அவ்வனமன்றி;
வாழும் சொர்க்கம் வேறுண்டோ?”

(Here with a Loaf of Bread beneath the Bough,
A Flask of Wine, a Book of Verse — and Thou
Beside me singing in the Wilderness —
And Wilderness is Paradise enow.)

திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த உமர் கய்யாமின் வரிகளை இனிமையான மொழியில் கவிமணி மொழிபெயர்த்திருப்பார்.

மாணவப் பருவத்தில் உமர் கய்யாமின் பாடல்களால் கவரப்பட்ட நான், உமர்-கய்யூம் என்ற புனைப்பெயரில் கவியமுது, எழிலோவியம், முல்லைச்சரம், கணையாழி, போன்ற இலக்கிய ஏடுகளிலும், நற்சிந்தனை என்ற இஸ்லாமிய ஏட்டிலும் ஏராளமான கவிதைகள் எழுதி வந்திருக்கிறேன்.

உமர் கய்யாமின் ரூபய்யாத் கவிதைகளை மொழிபெயர்த்தது கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை என்ற செய்தி எல்லோருக்கும் தெரியும். இப்போது கோவிந்த தீர்த்தர் என்பவர் பாரசீக மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த 1096 ரூபய்யாத் பாடல்களில் 410ஐத் தேர்ந்தெடுத்து கவிஞர் புவியரசு தமிழாக்கம் செய்திருக்கிறார்.

உமர் கய்யாம் படைப்புகளை கவிஞர் புவியரசு மொழியாக்கம் செய்திருக்கும் பாடலொன்று இங்கு சாம்பிளுக்காக :

ஓரு நாளிரவு
குயவனின் கடையில்
மெல்ல நுழைந்து பார்த்தேன்
மட்பாண்டங்கள்
தீவிரமாக எதையோ பற்றி
விவாதம் நடத்தும்
காட்சியைக் கண்டதும்
என்னைக் கண்டதும்
கேள்விகள் கேட்டன:
‘பூமியில் குடம் யார்?’
‘குயவன் யார்?’
‘விற்றவர் யார்?’
‘அதைப் பெற்றவர் யார்?’
கை நொடி வாழ்க்கை
கைப்பிடிப் புழுதி-
இதுதான் உனது.
கைமுதல்;சொத்து.
இதயத்தை இறுகப்
பிடித்து ஏன் அழுகிறாய்?

வாழ்வின் நிலையாமையைப் பேசும் ஒரு மற்றொரு பாடல்

அரசன் எவனோ குருதி வடித்(து)
ஆழப் புதைந்த சவக்குழியில்
விரைவில் முளைக்கும் ரோஜாவை
விஞ்சிச் சிவந்த மலரேது?
உருவும் அழகும் பூத்தென்றோ
உதிர்ந்த பெண்ணின் உடலந்தான்
விரையார் சோலைப் பசுங்கூந்தல்
விஞ்சை அரும்பாய்க் கொஞ்சுமடா!

உமர் கய்யாம் பாடல்களை தமிழில் கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை (1945), மு.வ., பாலபாரதி ச.து.சு.யோகி, சாமி சிதம்பரனார், தங்கவயல் லோகிதாசன் (1980), இலங்கையைச் சேர்ந்த கவிஞர் அப்துல் காதர் லெப்பை (1965), புவியரசு (1997), ஆ.மா. ஜெகதீசன் (2002), பேரா. அ. சீநிவாசராகவன் போன்றவர்கள் மொழிபெயர்த்திருக்கின்றனர்.

ஆனால் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் தமிழில் மொழிபெயர்ப்பதற்கு முன்னாலேயே வ.மி. சம்சுத்தீன் சாஹிப் மற்றும் வீ.சி. அருளானந்தம் அவர்களும் இணைந்து தமிழில் மொழி பெயர்த்து (1936ம் ஆண்டு) கொழும்பில் வெளியிட்டுள்ள உண்மை பலருக்கும் தெரியாது.

எழுத்தாளர் சுஜாதா ஆனந்த விகடன் பத்திரிக்கையில் “கற்றதும் பெற்றதும்” என்ற தலைப்பில் கட்டுரைத் தொடர் எழுதி வந்தார்.

ஜூலை 13, 2003 அன்று எழுதிய கட்டுரையில் “இரண்டு வாரங்களுக்கு முன் நாகூர் ரூமியின் உமர் கய்யாம் மொழி பெயர்ப்பைப் பற்றி எழுதியிருந்தேன். ரூபயாத்தின் 190 கவிதைகளை அ.மா. ஜெகதீசன் என்பவரும் மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கிறாராம். இது நான்காவது மொழிபெயர்ப்பாகிறது. வேறு யாராவது செய்திருந்தால் எனக்கு ஒரு சாம்பிளுடன் தெரிவிக்கலாம்” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

அதற்குப்பின் 2 வாரங்கள் கழித்து ஜூலை 27, 2003 அன்று எழுதிய கட்டுரையில்  “உமர்கய்யாமுக்கு மற்றொரு மொழி பெயர்ப்பு உள்ளது. சாமி சிதம்பரனாரின் 105 எழு சீர் விருத்தங்களை ஓர் அன்பர் ஜெராக்ஸ் அனுப்பியிருந்தார். உதாரணம் – ‘இரவுபகல் கோடுள்ள சதுரங்க உலகத்தே எள்ளளவும் சக்தியில்லா சிறு தாயக் கட்டைகளால் விளையாடல் சில பண்ணி அலைகின்றான் இங்கும் அங்கும்’ . இதோடு ரூபாயத்தின் மொழிபெயர்ப்பு தமிழில் ஐந்தாகிறது.” என்று எழுதியிருந்தார்.

ஆனால் சுஜாதா அறியாத செய்தி ஒன்று இருந்தது. அதை அவருக்கு யாரும் எடுத்தும் சொல்லவில்லை.

நாகூர்க்காரர் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்னரே உமர் கய்யாமின் பாடலை மொழிபெயர்த்திருக்கிறார் என்ற உண்மையை அறியாமலேயே அவர் போய்ச் சேர்ந்தும் விட்டார். ‘ரூபய்யாத்’தை மொழிபெயர்த்த அந்த பெருமைக்குரிய நாகூர் நாயகர் வேறு யாருமல்ல – இலக்கியப் பரம்பரையில் வந்துதித்த கவிஞர் நாகூர் இ. எம். நயினார் மரைக்கார் அவர்கள்தான்.

தொடர்புடைய சுட்டி :

ச்சீஸ் படீஹை மஸ்த் மஸ்த்

 

Tags: , , , , ,

2 responses to “உமர் கய்யாமும் நாகூர்க்காரர்களும்

 1. nagoorumi

  March 6, 2010 at 2:05 pm

  நல்ல தகவல். எனக்கும் இப்போதுதான் தெரிகிறது. நம் ஊரில் பெரும் பெரும் அறிஞர்கள் எல்லாத் துறைகளிலும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது நம்க்குப் பெருமை

  நாகூர் ரூமி

   
 2. kabeer

  March 6, 2010 at 11:11 pm

  you should write about Nagore E.M. Yahya maricar, E.M. Naina Maricar, E.M. Ali Maricar’s part in Tamil literature.

   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: