RSS

இயற்றமிழ் வளர்த்த நாகூர் -1

08 Mar

முன்னுரை

இயற்றமிழின் வளர்ச்சிக்கு இஸ்லாமியர்கள் எந்த அளவுக்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்பதை ஆராய்ந்து பார்க்கையில் நமக்கே வியப்பாக இருக்கிறது.

இதனை ஆராய வைத்த எழுத்தாளர் ஜெயமோகனுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். ‘இஸ்லாமியர்களுக்கு சமகால இலக்கியப் பரிச்சயமில்லை’ என்று அவர் விமர்சனம் செய்யாமல் இருந்திருந்தால் பலநுட்பமான விஷயங்கள் எனக்குத் தெரியாமலே போயிருக்கும்.

தமிழில் நாவல்கள் எழுதிய முதல் இஸ்லாமிய பெண்மணி யாரென்று கேட்டால் எளிதில் கூறிவிடலாம். 1938-ஆம் ஆண்டு “காதலா கடமையா’ என்ற நாவலை எழுதிய நாகூரைச் சேர்ந்த சித்தி ஜுனைதா என்று.

தமிழில் வெளி வந்த முதல் நாவல் எது?

தமிழில் வெளி வந்த முதல் வரலாற்று நூல் எது?,

தமிழில் வெளிவந்த முதல் மொழிபெயர்ப்பு நூல் எது?

தமிழில் சிறுகதைக்கு முன்னோடி யார்?

தமிழில் பத்திரிக்கைக்கு முன்னோடி யார்?

இந்த கேள்விகளுக்கு பதில்கள் நமக்குத் தெரியாது. அப்படியே தெரிந்துக் கொள்ள விரும்பி புத்தகங்களை ஆராய்ந்தாலும் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள்தான் கிடைக்கின்றன.

இவை அத்தனைக்கும் பதில் பகரும் வண்ணம் இதற்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள் இஸ்லாமியர்கள்தான் என்று நான் சொன்னால் என்னை யாரும் நம்பப் போவதில்லை. இதில் இரண்டு சாதனைகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் நாகூர்க்காரர் என்ற தகவல் நம்மை மேலும் தலைநிமிர வைக்கிறது.

சிறுகதை

சிறுகதை தோன்றிய ஆண்டு என்று ஆய்வாளர்கள் கூறுவது 1917. வ.உ.சுவாமிநாத ஐயரின் கதைகளே முழுமையான சிறுகதை வடிவம் என்று அறியப்பட்டு வந்தது. 1887-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் வெளிவந்த “சிங்கை நேசன்” ஏட்டில் அதன் ஆசிரியர் திரு மகுதூம் சாகிபு எழுதிய ‘விநோத சம்பாஷணை’ என்ற கதையே தமிழில் வெளிவந்த முதல் சிறுகதை என வாதிடுகிறார் அமரர் நா. கோவிந்தசாமி. அக்காலக் கட்டத்தில் “சிறுகதை” என்ற பெயர் வடிவம் அதற்கு கொடுக்கப்படவில்லை. அவ்வளவுதான். உண்மையில் தமிழ்ச் சிறுகதை உலகிற்கு முதல் பங்களிப்பு மகுதூம் சாயபு அவர்களுடையது என்பதை யாரும் மறுக்க இயலாது.

நாவல்

மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதி 1879-ல் வெளிவந்த ‘பிரதாப முதலியார் சரித்திரம்’தான் தமிழ்மொழியில் வெளிவந்த முதல் நாவல் என்று ஏடுகள் கூறுகின்றன. செய்யுள் நடையில் இருந்ததை உரைநடை வடிவில் மாற்றியமைத்த பெருமை மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களையே சாரும் என்கிறார்கள்.

பிரதாப முதலியார் என்ற நாயகன், ஞானாம்பாள் என்ற நாயகியை திருமணம் புரிவதும், பிறகு அவர்களிருவரும் பிரிவதும், அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளை வைத்து பின்னப்பட்ட இக்கதை பெரிய வரவேற்பைப் பெற்றது.

நிஜவாழ்க்கையில் பேச்சு வழக்கில் இருந்ததைப் போலவே நிலவிய இந்த உரைநடையைப் பார்த்த வாசகர்கள் புரட்சிகரமான இந்த வடிவத்தைப் படித்து இரசித்து மெய்மறந்து போனார்கள். இந்த நாவல் பின்னர் ஆங்கில மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

1885-ல் எழுதப்பட்டதாகக் கூறும் சித்தி லெப்பை மரைக்காயரால் எழுதப்பட்ட ‘அசன்பே சரித்திரம்’ என்ற நூல் இலங்கையிலிருந்து வெளியானதால் இதனை யாரும் இவ்வளவு காலம் கண்டு கொள்ளவே இல்லை.

அண்மையில் ‘அசன்பே சரித்திரத்’தையும், ‘பிரதாப முதலியார் சரித்திரத்’தையும் ஒப்பிட்டு ஒப்பாய்வு செய்துள்ளார் முனைவர் தே நேசன். தமிழின் முதல் இரு நாவல்களில் ஆய்வு என்பதோடு, ஒரே கால கட்டத்தில், ஒரே மொழியில் இரு நாடுகளில் முதல் நாவல்களாகத் தோன்றிய வெவ்வேறு சமயப் பின்னணி கொண்ட படைப்புகளில் ஒப்பாய்வாகவும் இது அமைந்துள்ளது.

பத்திரிக்கை

பத்திரிக்கைத் துறைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் வேறு யாருமல்ல. நாகூர் குலாம் காதிறு அவர்களேதான். ‘வித்தியா விசாரிணி’ என்ற ஏட்டை வெளிக் கொணர்ந்து, இதே காலகட்டத்தில் ‘ஞானாசிரியன்’ என்ற ஏட்டையும் நடத்தி இருக்கிறார்.

இதோ மூத்த பத்திரிக்கையாளர் ஜே.எம்சாலி அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்:

“‘வித்தியா விசாரிணி’ – மலாயா நாட்டின் பினாங்கு நகரில் 1888 இல் வெளிவரத் தொடங்கிய தமிழ் இதழ். மார்க்க வினா-விடைகள், சமய சட்ட திட்டங்கள், நெறிமுறைகள், இலக்கிய விளக்கங்கள், உலக நடப்புச் செய்திகளைத் தாங்கி வந்தது அந்த இதழ்.

‘வித்தியா விசாரிணி’க்கு எதிர்ப்புகள். பிற இதழ்களுடன் சர்ச்சைகள், வாக்குவாதங்களை நடத்தவேண்டிய கட்டாயம் ஆசிரியருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, அன்றைய இலங்கை இதழான ‘முஸ்லிம் நேசன்’ கண்டனக் குரல் தொடுத்து வந்தது.

‘வித்தியா விசாரிணி’ பின்னர் நாகூரிலிருந்து வெளிவந்தது. அதன் ஆசிரியர் கவிதை, உரைநடை, இலக்கியம், மொழி பெயர்ப்பு, இதழியல் என இலக்கியத்துறை அனைத்திலும் 19 ஆம் நூற்றாண்டில் முன்னணி வகித்தவர். பலருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். ‘நான்காம் தமிழ்ச் சங்க நக்கீரர்’ எனச் சிறப்பிக்கப்பட்ட நாகூர் குலாம் காதிறு நாவலரே அந்த இலக்கிய இதழியல் முன்னோடி.

வரலாற்று நூல்

1870-களில் வந்த இப்ராகிம் சாகிப்பின் “விக்கிரமாதித்யன் கதை’ முதல் வரலாற்று நாவல் என்கிறார் மிகச் சிரந்த எழுத்தாளரான கீரனூர் ஜாகிர்ராஜா. “பிரதாப முதலியார் சரித்திரம்’ அல்ல; மாப்பிள்ளை லெப்பையின்1858-ல் எழுதப்பட்ட “தாமிரப் பட்டணம்’தான் தமிழின் முதல் நாவல் என்று வாதிடுகிறார். இந்த நாவல் அரபுத் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது அன்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

மொழிபெயர்ப்பு நாவல்

நாகூர் குலாம் காதிறு நாவலர் அவர்கள் ஆங்கிலத்திலும் நல்ல புலமை பெற்றவர் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. 1889 ஆம் ஆண்டு நாவலர் மொழிபெயர்த்து வெளியிட்ட மிகப் பெரிய நாவல் “உமறு பாட்ஷா யுத்த சரித்திரம்” என்ற ஆங்கில நாவலாகும். ரெனால்ஸ் என்பவர் எழுதிய இந்நாவல்தான் தமிழ் மொழிபெயர்ப்பின் முதல் நாவல். இதை நான் சொல்லவில்லை அண்மையில் இந்நூலை மறுபதிப்பு செய்து வெளியிட்ட மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பேராசிரியர் முரளீதரன் கூறுகிறார்.

நாவலர் இந்நாவலை பினாங்கில் மற்றும் தமிழ்நாட்டில் இருந்த காலகட்டத்தில் மொழிபெயர்த்துள்ளார். கொழும்பு பெருவணிகர் ஒருவரின் உதவியுடன் இந்நாவல் 1889 இல் வெளிவந்துள்ளது. இந்த நாவலில் உள்ள சிறப்பம்சன் என்னவெனில், தமிழில் மணிப்பிரவாள நடையே நடைமுறையில் இருந்த காலத்தில் கூடுமானவரை வடமொழி வார்த்தைகளை கலக்காமல் தூயதமிழ் நடையில் எழுதியிருப்பது.

பத்திரிக்கைத் துறை மட்டும் மொழியாக்கத்துறையில் நாகூர்க்காரர்கள் எந்த அளவுக்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்பதை அடுத்த பதிவில் காண்போம்.

Advertisements
 

Tags: , ,

One response to “இயற்றமிழ் வளர்த்த நாகூர் -1

  1. akbar

    April 25, 2010 at 7:41 pm

    உண்மைகள் மறைக்கபடுவது , இவற்றில் மட்டுமல்ல ,பல்வேறு விஷயங்களிலும். உண்மைகள் ஒருநாள் வெளியில் வந்தே தீரும்

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: