RSS

தமிழன் என்ன ‘காமெடி பீஸா’?

19 Nov

“:தமிழன் என்று சொல்லடா; தலை நிமிர்ந்து நில்லடா” என்று நாம் தான் கூவிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் தமிழனை ‘காமெடி பீஸ்’ என நினைத்து அவனவன் கேலி செய்வதை ஏனோ நாம் கண்டு கொள்ளாமல் பெருந்தன்மையாக இருந்து வருகிறோம்.

ஒரு காலத்தில் பாம்பே போன்ற நகரங்களில் தென்னிந்தியாவைச் சேர்ந்த அனைவரையும் ‘மதராஸி’ என்றுதான் அழைத்து வந்தார்கள். ‘மதராஸி’ என்றாலே தீண்டத் தகாதவர்களைப்போல் அலட்சியப் படுத்திய காலம் அது. பின்னர் ஆந்திராக்காரர்களை “கொல்டி” என்றும்., மலையாளிகளை “சாலா மல்பாரி” என்றும், தமிழர்களை “சாம்பார்” என்று அடைமொழி வைத்து அழைக்கத் தொடங்கினார்கள். இதில் அவர்கள் என்ன சுகத்தைக் கண்டார்களோ தெரியவில்லை.

பாம்பேயில் தாராவி போன்ற பகுதிகளில் தமிழகத்திலிருந்துச் சென்று குடிசையில் வசித்த கூலித் தொழிலாளர்களை வைத்து ஒட்டு மொத்த தமிழர்கள் அனைவரும் படிப்பறிவில்லாதவர்கள், நாகரீகமற்றவர்கள் என்று கற்பனை பாவித்து  நம்மவர்களை அலட்சியப் படுத்திய காலமது. போகப்போக தமிழர்களின் திறமையையும், அவர்களின் கலாச்சாரத்தையும் புரிந்துக் கொண்டு வாயடைத்துப் போனார்கள்.

தமிழர்களுக்கு இந்தி மொழி தகராறு என்பது உண்மைதான் என்றாலும், வளைகுடா நாடுகளுக்கு பெருமளவு தமிழர்கள் பணிநிமித்தம் வரத் தொடங்கிய பின்னர் கதையே மாறி விட்டது என்பதும் உண்மை. நாம் இந்தி மொழியை  கற்க விடாமல் நம்மை வேலை வாய்ப்புச் சந்தையில் பின்னுக்குத் தள்ளிய பெருமை நம் திராவிட தலைவர்களுக்குத்தான் போய்ச்சேரும்.

“வடக்கு வாழ்கிறது: தெற்குத் தேய்கிறது” என்று நம்மை உசுப்பிவிட்டு, நம் அனைவரையும் “இந்தி ஒழிக” என்று கோஷம் போட வைத்து, இந்தி பலகையை இரயில் நிலயங்களிலும், தபால் அலுவலகங்களிலும் அழிக்க வைத்து, தலைவர்கள் மட்டும் தங்கள் கண்மணி குழந்தைகளையும், பேரப்பிள்ளைகளையும், மருமகன்களையும் இந்தி பேச வைத்து தில்லிக்கு ராஜா, ராணியாக அனுப்பி வைத்தது கண்கூடு.

இன்றளவும் தலைநகர் தில்லியில் உயர் அதிகாரிகளாக பணியாற்றுபவர்கள், படித்தவர்கள், நல்ல நிலைமையில் இருப்பவர்கள், மிகச்சிறப்பாக இந்தி பேசக்கூடியவர்கள் தமிழர்களாக இருக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. சுப்ரமணிய சுவாமி, மணிசங்கர் ஐயர் போன்றவர்கள் பேசும் தெள்ளத் தெளிவான இந்தி உச்சரிப்பை ரசித்துக் கேட்ட அனுபவம் எனக்குண்டு.

இடுப்பில் வேஷ்டி, வெள்ளைச் சட்டை, நெற்றியில் திருநீறு பட்டை, நடுவிலே ஒரு சந்ததனப் பொட்டு,  “ஐஸாஜீ, வைஸாஜீ, க்யா கர்தாஹேஜீ” என்று திரையில் தோன்றும் அம்மாஞ்சி தமிழ் பிராமணன் பாத்திரத்தைக் கண்டாலே திரையரங்குகளில் “குபீர்” சிரிப்பு.

இப்படித்தான் தமிழன் இதுநாள் வரை கேலிச்சித்திரம் ஆகிக் கொண்டிருக்கிறான். சின்னத்திரையில் மாதவன் நடித்த “Filmy Chakkar” முதற்கொண்டு இப்போது தொடர்ந்து வரும்  தாரீக் மெஹ்தாவின் “உல்டா சஷ்மா”வில் வரும் ஐயர்
பாத்திரம் வரை தமிழனை கோமாளியாக்கி காண்பிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். அந்த தொடரில் வரும் ஜேட்டா லால், ஐயரை கோபம் வந்தால் கூப்பிட்டுவது ”ஐயர் இட்லி”.

தெரியாமல்தான் கேட்கிறேன்;  தமிழனுக்கு இட்லி, சாம்பார், சட்னி, தயிர் சாதத்தை விட்டால் வேறு எதுவுமே தெரியாதா என்ன?

கதாபாத்திரம் தமிழனாக இருந்து விட்டால்  “அய்யோ.. அய்யய்யோ”  என்று சிரிக்க வைப்பது சினிமா இலக்கணமாகி விட்டது.

மேலைநாட்டினர் Blonde என்று சொல்லப்படும் பொன்னிற முடிகொண்ட வெளிறிய நிறத்தவரை மையப்படுத்தி ஏராளமான நகைச்சுவை கதைகள் படைத்து மகிழ்வது ஒரு வித வக்கிரத்தனம் என்றுதான் கூறவேண்டு.ம்.

இந்தியாவில் கூட நல்ல அறிவாளிச் சமூகமாக கருதப்படும் சர்தார்ஜீக்களை ‘காமெடி பீஸ்’களாக ஆக்கி ஆனந்தம் அடைவது வழக்கமாகி விட்டது. சர்தார்ஜீக்கள் என்றாலே மூளையில்லாதவர்கள் என்ற மாயையை இவர்கள் உருவாக்கி விட்டர்கள்.

குஷ்வந்த் சிங் போன்ற பழுத்த எழுத்தாளர்கள் கூட Same side Goal போட்டு இது போன்ற ‘சர்தார்ஜீ ஜோக்ஸ்’ உருவாக காரணமாக இருந்தார் என்றுதான் கூற வேண்டும். Santa Singh, Banta Singh போன்ற கற்பனை பாத்திரங்கள் இன்று ஊடக உலகில் நிரந்தர கோமாளிகளாகி  விட்டார்கள்.

சண்டிகர் போன்ற ஊர்களுக்குச் சென்று பாருங்கள். அங்கு பஞ்சாபிகள் வாழும் Hi-Fi Life Style வாழ்க்கையை. விலையுயர்ந்த வெளிநாட்டுக் கார்கள் அதிகமாக வலம் வருவது ஜலந்தர் நகரத்து வீதியில்தான். மொஹால்லி. பஞ்ச்குலா போன்ற நகரங்களில் அவர்களின் வாழ்க்கை முறைகளை, சுத்தமான தெருக்களை போய்ப் பாருங்கள். எந்த சர்தார்ஜீயாவது பிச்சை எடுப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அப்படியிருந்தும் ஏன்தான் அவர்களை ஒரு முட்டாள் சமூகமாக சித்தரித்து வைத்திருக்கிறார்கள் என்பது புரியாதப் புதிர்.

அடுத்தக் கட்டமாக இப்போது தமிழர்களாகிய நாம்தான் இவர்களிடம் அகப்பட்டிருக்கிறோம். நாம் நாதியற்றவர்கள் என்று முடிவு கட்டி நம் தலையில் மசாலா அரைக்கிறார்கள்.

சமீபத்தில் ஷாரூக் கான் நடித்த “ரா ஒன்” (Ra-One) படத்தை பார்த்தபோது என் ரத்தம் தலைக்கு சூடேறி விட்டது.

“டேய்! எந்த தமிழன்டா நூடுல்ஸ்க்கு தயிர் ஊற்றி சாப்பிடுறான்?” என்று திரையரங்கில் உரக்க கத்த வேண்டும்போல் இருந்தது.

படித்து பட்டம் பெற்ற மென்பொருள் வல்லுனனாக இருந்தாலும் அவன் தமிழனாக இருந்துவிட்டால் அவனுக்கு கரண்டி, முள்கரண்டி அல்லது Chop Sticks வைத்துச் சாப்பிடத் தெரியாது என்பது இவர்களது எண்ணம்.

ஷாரூக்கான் படம் முழுக்க நன்றாக இந்தி பேசுவார்; ஆங்கிலம் பேசுவார். ஆனால் தமிழன் காஸ்ட்யூமில் இருக்கும்போது மட்டும் இந்தியையும் ஆங்கிலத்தையும் Funny-யாகப் பேசி கிச்சிகிச்சு மூட்டுவார். முட்டாள்தனமான காரியங்கள் செய்து தன் மகனிடத்திலேயே வாங்கிக் கட்டிக் கொள்வார்.

“இட்லி, வடா, சாம்பார், ரவா தோசா, மசலா தோசா” என்று சேகர் சுப்ரமணியன் (ஷாரூக் கான்) வசனம் பேசுகையில் ஒலிபரப்பப்படும் பின்னணி இசையைக் கேட்டால் அதிர்ந்துப் போவோம். “பைத்தியக்காரா பைத்தியக்காரா பைத்தியக்காரா” – இதுதான் அந்தப் பின்னணி இசை. தமிழன் என்றாலே இளிச்சவாயன் என்று முடிவு கட்டி விட்டார்கள் போலும்.

திரையரங்கை சிரிக்க வைப்பதற்காக தமிழன் பாத்திரத்தை கோமாளியாக்கி திருப்தி அடைந்த ஷாரூக்கானுக்கு தமிழ் நாட்டிலும், உலக அளவிலும் அங்கீகாரம் பெற்று தன் இமேஜை உயர்த்திக் கொள்ள ஒரு ரஜினிகாந்த் (ஒரே ஒரு சீனில்) தேவைப்படுகிறது. இது இரட்டை வேஷம் அல்லவா? இந்த பாவத்தை துடைத்துக் கொள்ள ரஜினிகாந்த்துக்கு BMW – 7 series சொகுசுக்கார் கொடுத்தால் போதுமானது என்று நினைத்துக் கொண்டாரா ஷாரூக் கான்?

படம் முழுதும் இரட்டை அர்த்தங்களுடன் பேசும் ஷாரூக் கானுடைய பேச்சும், செயல்களும் தமிழர்களை மட்டுமல்ல இந்திய மக்கள் அனைவரையும் தலைக் குனிய வைக்கிறது.

ஷாரூக் கான் கரீனா கபூரின் மார்பைத் தொடுவதும். பின்புறத்தை அழுத்திப் பிடித்து அவரைக் கதற வைப்பதும், கருத்தடை சாதனத்தை கையில் ஏந்தி “இது Mood-யை ஏற்படுத்தும் என்று கூறும் போதும், பவர் யோகா என்ற பெயரில் அவர் ஆடும் கூத்தும், குழந்தைகளுடன் திரையரங்குக்கு செல்லும் பெற்றோர்களை சங்கடத்தால் நெகிழ வைக்கிறது.

ஐயா சினிமாக்காரர்களே போதும் தமிழனை கோமாளி ஆக்கியது. நாங்கள் ஒண்ணும் முட்டாள் சமூகம் அல்ல. எங்களை காமெடி பீஸ்களாக ஆக்கி  நீங்கள் காசு பார்த்தது போதும். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை மட்டும் புரிந்துக் கொள்ளுங்கள்.

– அப்துல் கையூம்

 

2 responses to “தமிழன் என்ன ‘காமெடி பீஸா’?

 1. பிறைநதிபுரத்தான்

  November 19, 2011 at 8:44 am

  ரா ஒன் பற்றிய நேர்மையான அலசல்.

  இந்திப்படங்களில் வருகிற தமிழ் கதாபாத்திரங்கள் அ(நொ)டிக்கொரு தடவை ‘ஐயோ’ என்று சொல்லித்தான் ஆகவேண்டும் என்பது விதி. இப்படமும் விதிவிலக்கல்ல.

  தொழில்நுட்பம், விளம்பரயுக்தி, மற்றும்- facebook, twitter போன்ற சமூக ஒருங்கிணைப்பு (?) தளங்களின் மூலம் ஒரு பிரமையை – மாயையை – எதிர்பார்ப்பை உருவாக்கி – அரைவேக்காட்டு படத்தை கூட – அமோக வெற்றி பெறச்செய்ய முடியும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் ‘ரா ஒன்’.

  படம் பற்றிய முழுமையான விமர்சனம வெளியாவதற்கு முன்பே – பணத்தை அள்ளிக்குவித்து ‘கல்லா’ கட்டி – ‘சாருக்கான்’ தான் ஒரு தேர்ந்த வியாபாரி என்பதனை நிரூபித்திருக்கிறார்.

  சாது மிரண்டால் காடு கொள்ளாது – உண்மைதான். ஆனால் தமிழர்கள் – சாதுக்களா இல்லை சோதாக்களா..?

   
 2. Abdul Qaiyum

  November 19, 2011 at 9:03 am

  மிக்க நன்றி ஐயா!

   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: