RSS

ஆபிதீனும் ஆர்.கே.நாரயணனும்

17 Apr

Image

எனது ஆருயிர் நண்பர் ஆபிதீன் கட்டிக் காக்கும் தீவிர வாசகப் பட்டாளத்தில் நானும் ஒரு சிப்பாய் என்று சொல்லிக் கொள்வதில் எனக்குச் சற்று கூடுதல் பெருமை. காரணம் இவர் எனது ஆத்ம நண்பர் என்பதால் மட்டுமல்ல. இவருடைய ‘பத்தாம் பசலி’ வெளிப்படத்தன்மையும் அதிமுக்கியக் காரணம்.

“ஆண்டவனே! இந்த மனுஷனுக்கு இப்படியும் ஒரு வெகுளித்தனத்தை நீ கொடுத்திருக்கக் கூடாது” என்று சிற்சமயம் வேண்டிக் கொள்வேன். திரைப்படத்திற்கு இவரை வசனம் எழுத வைத்தால் ஒருக்காலும் “U” சான்றிதழ் சென்சார் போர்டு வழங்க மாட்டார்கள் என்பது மட்டும் 100% அக்மார்க் உத்திரவாதம்.

இவருடைய எழுத்துக்களை மேய்கையில் பாக்யராஜ் படம் பார்ப்பது போன்ற ஓர் அசாத்திய உணர்வு நம்மை ‘கோந்தாக’ அப்பிக் கொள்ளும். காமெடிக்காக மட்டுமல்ல, இரட்டை அர்த்த வசனங்களுக்காகவும்தான் சேர்த்துச் சொல்கிறேன். சில பச்சையான ‘நாகூர் பாஷை’ நம்மை முகஞ் சுளிக்கத் தூண்டினாலும், அதில் இழைந்தோடும் இலக்கிய ரசனை நம்மை ஓவர்டேக் செய்து, நம்மை நைஸாக ரசிக்க வைத்து, இவரை ‘மாப்பு’ செய்ய வைத்துவிடும். இக்கலையில் இவர் ஒரு ஜகதலப்பிரதாபன் எனலாம்.

வரு….ம். ஆனால் வராது. ஆம். சில்மிஷமான இவரது வார்த்தைகளைப் படிக்கையில் நமக்கு கோபம் வரும். ஆனால் வராது. “An Apple a Day Kepps Doctor away; A Garlic a day keeps everyone away” என்ற குறும்பு மொழியை கேட்கும் போதெல்லாம் எது ஞாபகம் வருகிறதோ இல்லையோ இவருடைய சிறுகதை என் ஞாபகத்திற்கு வந்து விடும். “தினம் ஒரு பூண்டு” போன்ற இவரது சிறுகதைகளை படித்து விட்டு இவரை நேராக திட்ட தைரியமின்றி மனதுக்குள்ளேயே வஞ்சகமின்றி வாயார வசமாக திட்டித் தீர்த்திருக்கிறேன்.

குசும்பு, கேலி, நக்கல், நையாண்டி, பரிகாசம் இவையனைத்திற்கும் ஒரே அர்த்தங்களா அல்லது வெவ்வேறு அர்த்தங்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இவையனைத்தையும் ஆபிதீனின் ஒவ்வொரு வரிகளிலும் காண இயலும் என்பது வெள்ளிடமலை.

போலித்தனமில்லாமல், உள்ளதை உள்ளபடி சொல்லும் எழுத்தாளனிடம் நம்மை அறியாமலேயே ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு விடுகின்றது என்பதென்னவோ அனுபவப் பூர்வமான உண்மை. அது அருந்தி ராய் ஆனாலும் சரி ஆபிதீனானலும் சரி, இந்த ‘பார்முலா’ கனகச்சிதமாய் பொருந்துகிறது. வாசகனின் ஆழ்மனதைத் தொடுவதற்கு புத்திசாலி படைப்பாளி அறிந்து வைத்திருக்கும் மோடி மஸ்தான் வித்தைதான் இந்த ஒளிவு மறைவில்லா ‘வெளிப்படத்தன்மை’. படிக்கின்ற வாசகனுக்கு அவனை அறியாமலேயே எழுத்தாளன் மீது ஒரு அபார நம்பிக்கை/பயங்கர விசுவாசம்/பரஸ்பரம் ‘கிளிக்’ ஆகி விடுகிறது.

சில சமயத்தில் இவரது நடையை உரசிப் பார்க்கையில் “நடையா இது நடையா, ஒரு நாடகம் அன்றோ நடக்குது” என்று பாடத் தோன்றும். ஐ மீன் இவரது “எழுத்து நடை”. இடையை ஈர்க்கும் கண்களைப் போன்று, இதயத்தை ஈர்க்கும் நடை இவர் நடை.

“அடப்பாவி மனுஷா! இந்த சிம்பிளான விஷயத்தை சொல்வதற்காகவா இப்படி இவர் சுத்தி வளைச்சு இடியாப்பம் பிசைகிறார்” என்றறெல்லாம் நினைக்கத் தோன்றும். ‘அறிவு ஜீவிகள் மூக்கை நேராகத் தொட மாட்டார்கள்’ என்று யாரோ சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். (அந்த ‘யாரோ’ வேறு யாருமல்ல. நானேதான்!)

விஷயதாரிகளாக இல்லாமல் விஷமதாரிகளாக வலம் வரும் வேஷதாரி படைப்பாளிகளுக்கு மத்தியில் உண்மையிலேயே விஷயமுள்ள விஷயதாரி இவர் என்பதில் இஞ்சித்தும் சந்தேகமில்லை. ‘தானுண்டு தன் வேலையுண்டு’ என்ற ‘Motto’வை சீரியஸாக தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கரகாட்ட ராமராஜனாய் வலம் வரும் இவருக்கு கவிஞர் தாஜ், நாகூர் இஸ்மாயீல் போன்ற சகாக்கள் “சற்று பொதுவாழ்விலும் உன் முகத்தைக் காட்டுமய்யா” என்று புத்திமதி வழங்கினால் சாலச்சிறந்தது. ‘Alcoholics’ படைப்பாளிகளுக்கு மத்தியில் இவர் ஒரு “Workaholic” படைப்பாளி.

துபாயில் இலக்கியக்கூடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற இவரது சிந்தனையோட்டம் – ‘மெட்ரொவில் போவதா?’ ‘பஸ்ஸில் போவதா?’ ‘நண்பரிடம் லிஃப்ட் கேட்பதா?’ ‘கம்பேனி டிரைவரை கூப்பிடுவதா? என்பதிலேயே குறியாக இருந்த இவர் ‘ரிலாக்ஸாகவா இருந்திருப்பார்?’ என்ற கேள்வி நம்மை கன்னமிட்டு துளைக்கிறது. Work while you work; Play while you play; Relax while you relax; என்று இவருக்கு பாடம் நடத்த தோன்றுகிறது மனது.

இவரை எழுத்தாளராக அறிந்து வைத்திருப்பவர்கள் மிகவும் சொற்பம். வலைப்பதிவாளராக நிறைய பேர் அநியாயத்திற்கும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஒரு நட்சத்திர எழுத்தாளருடன் ஏற்பட்ட Controversy-யால் இணையதள ஆர்வலர்கள் அனைவரும் இவரது பெயரை ‘நச்’சென்று “Save” செய்து வைத்திருக்கிறார்கள். அந்த அசம்பாவித நிகழ்வை ‘பால்ய நட்பை’ கருத்திற் கொண்டு இவர் மறந்து தொலைக்க நினைப்பதால் அந்த பிரபல எழுத்தாளரின் பெயரை இங்கே நான் தவிர்த்திருக்கிறேன். (‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்று சொல்வது போலல்லவா இருக்கிறது என்று நீங்கள் எண்ணலாம்)

“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற நோக்கில் “எல்லோரும் இன்புற்றிருப்பதுவேயல்லாமல் வேறோன்றுமறியேன் பராபரமே!” என்ற குறிக்கோளுடன் “கருமமே கண்ணாக” ‘உயிர்த்தலம்’ படைத்த இம்மனிதரின் வலைத்தளத்தில் “நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக” தனது ஒவ்வொரு அனுபவத்தையும் நம்முடன் பாரபட்சமின்றி பகிரங்கமாக பகிர்ந்துக் கொள்வது நமக்கு இன்பமளிக்கிறது.

இவரது இசை ஈடுபாடு நம்மைக் கவர்கிறது. உருதுமொழி அறியாமலேயே குலாம் அலியின் கஜலில் இவ்வளவு தூரம் லயித்துப் போகிறாரே, இம்மொழியில் இவர் சற்று பாண்டித்தியம் பெற்றிருந்தால் எப்படியெல்லாம் கலக்குவார் என்று கற்பனை செய்து பார்த்தேன்.

இலக்கிய உலகின் UPDATES-களையெல்லாம் இவரது வலைப்பதிவை பார்த்துதான் நான் பெரும்பாலும் தெரிந்துக் கொள்கிறேன். எழுத்துலக ஜாம்பவான்கள் பலரை இவர் பக்கம் இழுத்து வைத்திருக்கிறது இவரது எழுத்து என்றால் மிகையாகாது. He calls spade a spade. தப்பை தப்பென்றுக் கூற இவர் தவறுவதில்லை. இதனாலேயே இந்த நக்கீரர் பலரையும் பகைத்துக் கொண்டதுதான் மிச்சம்.

சூஃபியிஸத்தில் ஊறித்திளைத்தவர்கள் எல்லாம் இப்போது வஹ்ஹாபியிஸத்தில் மாறிக்கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் நாத்திகம் பேசிக்கொண்டிருந்த இவர் மட்டும் எப்படி சூஃபியிஸ சிந்தனைக்கு ஆட்பட்டார் என்பது எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது. “நீங்கள் உஜாலுவுக்கு மாறவுது எப்போ?” என்று என் அபிமானிகள் வேறு என்னை துளைக்கிறார்கள். எது உஜாலா? எது இருட்டு? என்று கண்டுபிடிப்பதற்குள் நமக்கு தாவு கழன்று விடுகிறது. ‘ஆபிதீன்’ என்ற பெயர் வந்தாலே சர்ச்சைதான் போலிருக்கிறது. பெரும்பாலான சமயம் இவர் தர்காவாசிகளை தாக்கும் போது “இவர் எந்தக் கட்சி?” என்று ஊகிக்க முடியாமல் நமக்கு பித்து பிடித்து ‘அத்து பித்து’ கலங்கி விடுகிறது

இவரது வலைத்தளத்தை மேய்கையில் Personal Diary-யை கள்ளத்தனமாய் புரட்டுகின்ற ஒரு குற்ற உணர்வு நம்மை ஆட்கொள்ளும். கதைத்தது; கலாய்த்தது; உண்டது; உருண்டது. புரண்டது எல்லாவற்றையும் நம்மிடம் உளறிக் கொட்டி நம்மை ஏதோ பாவவிமோசனம் நல்கும் பாதிரியாரின் ரேஞ்சுக்கு கொண்டுச் சென்று விடுவார்.

கி.மு. அல்லது கி.பி. என்று சொல்வதைப் போல் கணினியின் வளர்ச்சி காலத்தை பென்டியத்திற்கு முன் அல்லது பெண்டியத்திற்குப் பின் என கச்சிதமாக வகுக்கலாம். கணினி 386, கணினி 486 காலத்திலிருந்தே ‘மாங்கு மாங்கு’ என்று தட்டச்சு செய்து நாகூரைப் பற்றியும். நற்றமிழ் இலக்கியத்தைப் பற்றியும் நல்ல பல அரிய தகவல்களை பெருசுகளிடமிருந்து கேட்டும் அறிந்தும் இணையத்தில் ஏற்றி இளந்ததலைமுறையினருக்கு பயன்படும் வகையில் பதிவு செய்து பாதுகாத்த இவரது நற்காரியம் போற்றத்தக்கது. ஆபிதீனின் மறைவுக்குப் பின்னர் “பீடி மஸ்தான்”, “வேப்ப மரத்து அவ்லியா”, “சட்டி மஸ்தான்”, “கட்டி மஸ்தான்” கேத்தல் பாவா அவ்லியா” போன்று இவரை “கம்ப்யூட்டர் அவ்லியா” என்று வருங்காலத்தில் இவரை சமாதி கட்டி சிலர் வழிபட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வட்டார மொழியில் சிறுகதைகளை எழுதி “திண்ணை” போன்ற இணைய இதழ்களில் நாகூர் பாஷையை பிரபலப்படுதிய மகத்தான பெருமை இவரைச் சேரும். ஒருகாலத்தில் சோ, பூர்ணம் விஸ்வநாதன், விசு, மெளலி, எஸ்.விசேகர் இவர்களின் மேடை நாடகங்களை விரும்பிச் சென்று கண்டு களித்த காலத்தில், “நாடக மொழி என்றாலே அது பிராமண பாஷயில்தான் இருக்க வேண்டுமா?” என்ற அர்த்தமுள்ள கேள்வி என் மனதில் நர்த்தனமாடும். நாகூர் பாஷையில் இருந்தால் அமர்க்களமாக இருக்குமே என்று நினைத்துப் பார்த்ததுண்டு. அதன் விளைவாக மாணவப் பருவத்தில் “ஆவுகெச்செனோவில் ஆவியுலக ஆராய்ச்சி” என்ற குறும்(பு) படத்தை படத்தை நானே எழுதி இயக்கி நண்பர்களை நடிக்க வைத்து சிலாகித்துப் போனேன்.

அக்கால கட்டத்தில் ஷேக்கோ, கருணாமணாளன் போன்றவர்களின் சிறுகதைகள் பிரபல பத்திரிக்கைகளில் பிரசுரமாகும். முஸ்லீம்களின் வாழ்க்கை முறையை யதார்த்தமாய் படம் பிடித்துக் காட்டும். முஸ்லீம் சமூகத்தார்  மட்டுமன்றி ஏனைய சமூகத்தாரும் விரும்பி வாசித்தார்கள்.

ஆபிதீன், நாகூர் ரூமி, ஹ.மு.நத்தர்சா, கீரனூர் ஜாகிர், சல்மா போன்ற எழுத்தாளர்கள் வட்டார மொழியில் எழுதத் தொடங்கிய பின்னர் இந்த “Trend” நன்றாகவே “Pick-Up” ஆகிவிட்டது. ஆர்.கே.நாராயண் எப்படி “மால்குடியை” பாத்திரமாக்கி உலவ விட்டாரோ அதே போன்று ஆபிதீன் “நாகூரை” நம் மனதில் உலவ விட்டுள்ளார். எப்படி ஆர்தர் கோனன் டாயில், ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற கதாபாத்திரத்தை உயிரோட்டமுள்ள பாத்திரமாய் உருவாக்கியிருக்கிறாரோ அதேபோன்று ஆபிதீன் “அஸ்மா” என்ற பாத்திரத்தை அவர் சிறுகதைகள் மூலமாக வாசகர் மனதில் வித்திட்டுள்ளார்.

கேரளாவைப் போலவே தமிழ்நாட்டிலும் முஸ்லீம்களின் கலாச்சாரத்தைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு மற்றவர்களுக்கும் தெரிய ஆரம்பித்து விட்டது. ஆபிதினின் இந்த ஆரோக்கிய பங்களிப்புக்காகவே தாராளமாக ஒரு “ஓ” போடலாம்.

– அப்துல் கையூம்

இலங்கை அஷ்ரப் ஷிஹாப்தீனின் அலசல்

கவிஞர் தாஜ் அவர்களின் அலசல்

———————————————————————————————————————————————————————————–

வலை (2000) – 1

ஆபிதீன்

யாரும் கவனித்த மாதிரி தெரியவில்லை – விடுமுறையில் , இரண்டு வருடத்திற்குப் பிறகு ஊர் போயிருந்தபோது. உலகமே ஊரைப் பார்க்க வைத்தவன் என்று என்னை நானேதான் மெச்சிக் கொள்ள வேண்டும் போலும். ‘ஒடுக்கத்து புதன்’ அன்று – கடற்கரையில் – ஊர் முழுக்கக் கூடிற்று , தன் பீடைகளை நீக்க அல்லது சேர்க்க. இரண்டு மூன்று குட்டி கந்தூரிகளில் கூடினார்கள். ஏன், ஒரு மாதம் முழுவதும் சுற்று வட்டாரம் கூடும் KRC-யின் கால்பந்து போட்டி அமளி துமளிப் பட்டதே.. தினம் ஒரு வி.ஐ.பி. உதைத்துத் தொடங்கி வைத்தார்.

ஊர்தான் உதைக்கிறதோ என்னை ? அல்லது ‘ஆச்சரியம், ஹராம் !’ என்று ஆன்மீகத்தில் திளைக்கிறதோ ?

சொல்ல முடியாது. ‘தர்ஹாவை சுத்தி வர்ற நேர்த்திக்கடன் ஆடு இக்கிதே… அதுட வாலைப் புடிச்சாக் கூட நாட்டம் நிறைவேறும்’ என்று சாபுமார்கள் தன் ஊரைப்பத்திச் சொல்வார்கள் பெருமையாக. தென்னகத்தின் புகழ் பெற்ற தர்ஹா உள்ள ஊர். மாணிக்கபூரில் பிறந்து தனது நாற்பதாவது வயதில் நாகூர் வந்த பாதுஷா நாயகம் நிஜத்தில் நெருப்புதான். ஆட்டின் வாலிலும் அதன் பொறி இருக்கக் கூடும். அறுக்கும்போது அவிந்து விடுமோ என்னவோ…

அதற்காக , ஆட்டின் தாடியைப் பிடித்தா குறை சொல்ல முடியும் ? வால்தான் பிடிக்க வசதி – கவனிக்கப்பட. தான் கவனிக்கப்பட வேண்டும் என்பதில்தான் எல்லா பிரச்சனைகளும் ஆரம்பமாகின்றன. தான் அறியப்பட வேண்டியே மனிதர்களைப் படைத்ததாக இறைவன் கூறுகின்றான் ‘ஹதீஸ்-குத்ஷி’ யில். hadith qudsi: (literally

“sacred hadith”) A hadith containing words of Allah that were narrated by the Prophet (PBUH), but which do not form part of the Qur’an. ஒரு முஸ்லிம் , எவ்வளவு விளங்கவும் விளக்கவும் வேண்டியிருக்கிறது!

ஊரே , தான் மேலும் அறியப்பட வேண்டும் என்பதற்காக ஏன் என்னையும் தேர்ந்தெடுத்திருக்கக் கூடாது?

‘திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து தீன் கூறி நிற்பர் கோடி’ என்று குணங்குடி மஸ்தானில் ஆரம்பித்து பாடாத புலவர்களில்லை தமிழ்நாட்டில்.

‘எங்களுக்(கு) உளர் அருகுற
ஒலிகளுக்கு இறைவர்,
உங்களுக்(கு) எவர் உளர்
என அயல் நகர் உறைவோர்
தங்களுக்(கு) உரை பெருமிதம்
படைத்த இத்தகையால்
நங்களுக்(கு) ஒரு பாக்கியம்
அனையது நாகூர்’

– மஹா வித்வான் குலாம் காதிர் நாவலர் பாடுகிறாரென்றால் வாழும் கவிஞர் ஹலீம், ‘நம்பினவனுக்கு ஜெயம் நம்பாவதவனுக்கு பயம் நம்பினால் நம்பு நமக்குள் ஏன் வம்பு ?’ என்கிறார் ஒரு புலவர் கூட்டமே இருந்திருக்கிறது; இருக்கிறது – புகழ் பாடிப் பிழைத்துக் கொண்டு. வம்புத்தனம்…

‘புலவர் கோட்டை’ என்றே கூட ஒரு பெயர் உண்டு என் ஊருக்கு. நா+கூர்..

ஒருவேளை நான் கோட்டையில் கொடி ஏற்றவில்லையோ என்னவோ ! மினாராவில் கொடி ஏற்றுகிறவனுக்கு கொடுக்கிற முக்கியத்தைக் (‘சராங்’கிற்கு ஜனங்கள் கொடுக்கிற அன்றைய காணிக்கை, வருடம் முழுக்க வாஞ்சூரில் அவன் தண்ணி போட போதுமானது) கூட எனக்கு கொடுக்காத ஜனங்கள் மேல் கோபமில்லை எனக்கு. ‘ போங்கனி பீத்த(ல்)’ என்று அவர்கள் சொன்னாலும் கவலையில்லை. ஊரிலுள்ள முக்கியப் புலவர்கள் நான் செய்தது மிக நல்ல காரியம் என்று சொல்லிவிட்டார்கள். அவர்கள் இதற்காக பின்னால் கவிதை
எழுதுவார்கள்.

இண்டர்நெட்டில் எனது ஊர் ! எந்த இணைய தளத்திலும் என் ஊரைப்பற்றி இத்தனை விபரங்களை, ·போட்டோக்களைப் பார்க்க இயலாது. தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் ‘சைட்’ஐச் சொல்வீர்கள். ஹே, அவர்கள் ‘இவ்வளவுக்கோனு’ தர்ஹா படம் போட்டு, தர்ஹாவில் கொடுக்கிற சந்தனத்திற்கு நோய் தீர்க்கும் சக்தி
இருக்கிறது என்று ஒரு வரி சொல்லி , ஜாதி பேதமில்லாமல் வரும் பக்தர்கள் கூட்டத்தை இன்னொரு வரியில் சொல்லி முடித்து விடுவார்கள்.

http://www.geocities.com/hadeen_ncr/main.html அப்படியல்ல.

ஹஜ்ரத் குத்புல் அக்தாப் ·புர்த்துல் அஹ்பாப் சையதினா அப்துல் காதிர் சையது ஷாஹுல் ஹமீது காதிர் ஒலி கஞ்ஜசவாய் கஞ்ஜபக்ஷ் பாதுஷா ஷாஹிப் ஆண்டவர் அவர்களின் முழுப் பெயரை எந்த தளம் போட்டிருக்கிறது?

இதில் எது ‘பெரிய எஜமானி’ன் பெயர் என்று மற்றவர்கள் குழம்பியிருக்கக் கூடும். எப்படியிருப்பினும் மகான்களை கண்ணியப் படுத்த வேண்டாமா – அர்த்தம் தெரியாமலிருந்தாலும் ?

தர்ஹாவிலிருந்து ‘பொட்டி சோறு’, அதுவும் விசேஷங்களின் போது மட்டும் கிடைக்கிற மூன்று வருடப் பதவியில், இருபது வருடத்திற்கு முன்பிருந்தவர்கள் கூட ‘Ex தர்ஹா அட்வைஸரி போர்டு மெம்பர்’ என்று பதவியைக் குறிப்பிடுகிறார்கள் – இப்போதும். புதிய போர்டு மாட்டினாலும் பழைய பதவியைக் குறிப்பிடத்
தவறுவதில்லை- வாழ்நாள் சாதனை போல. சமயத்தில் தன் பெயரைக் கூட விட்டு விடுகிறார்கள்..!

அரசர்கள் அடி பணிந்த பாதுஷாவுக்கு ஏன் பட்டங்கள் கொடுக்கக் கூடாது ?

நானும் அடி பணிந்து போனேனோ ? கல்லூரியில் படித்த காலங்களில் கடுமையாக விமர்சித்துக் கிண்டல் பண்ணிக் கொண்டிருந்தவன் நான். அல்லாஹ்வையே சந்தேகித்த போது அவுலியா (இறைநேசர்) என்ன சுண்டைக்காய் ! மற்றவர்கள் தன்னை மறந்து அழுது கொண்டே பார்க்கிற தமிழ் படத்தின் உச்சகட்ட வெள்ளப்
பெருக்கின் போது நண்பர்களைத் தூண்டி விட்டு உரக்கச் சிரித்த , மற்றவர்களின் உணர்வுகளை மதிக்காத மிருகத்தனம் இருந்த சமயம் அது.

அறிவு, தொடர்ந்து தோல்விகளைத் தந்தபோது அடி பணிதல் எவ்வளவு அவசியம் என்பதை அவ்வப்போது பார்க்கும் பள்ளி சாபு சொல்லிக் கொண்டிருந்தார்கள். தர்ஹாவில் எத்தனையோ ‘கராமத்’கள் (அற்புதங்கள்) நடக்கும். நான் அதற்கு, கழுதை மேல் நம்பிக்கை வைத்தாலும் காரியம் நடக்கும் என்று ‘விஞ்ஞான’ விளக்கம் சொல்வேன். ஆனால் அதிகாலை நேரத்தில் பெரிய எஜமான் (அவுலியா) வாசலின் கதவு திறக்கப்படும்போது தர்ஹாவின் ஒவ்வொரு தூணிலும் கிளம்புகிற நிம்மதியலைகள் என்னை நிம்மதியற்றவனாக ஆக்கியிருக்கின்றன. அனுபவிப்பது பெரும்பாலும் ஹிந்து வியாபாரிகள்தான். அதுவும் வருடப் பிறப்பின்போது
அங்கிருந்தால் வருடமே கைக்குள் என்பது போல் ஒரு தைரியம். கடற்கரைக்கு போகும்போது துப்பட்டி இளவரசிகளுக்கு வலை விரிப்பதற்காக நண்பர்களுடன் அங்கு நுழைகிற எனக்கு அங்குள்ள சூழல் – வியாபாரக் கூச்சல்களையும் மீறி – கொமஞ்சான் புகை நறுமணமாக சூழும். எந்தக் கழுதையும் இப்படி ஒரு வாசத்தைக்
கொடுக்காது.

என்ன இது… என்னை என்னவோ செய்கிறதே… யார் இவர்கள்?

உதறித் தள்ளு, நான் பகுத்தறிவுவாதி ! பெரியார் வாழ்க ! ‘கராமத்’-ஆ ? மண்ணாங்கட்டி. ‘இந்த ஊரே எஜமான்ற கராமத்துதான்’ என்பார்கள் பள்ளி சாபு.

உண்மைதான். தஞ்சை அரசர் தானமாகக் கொடுத்த இடம்- தன் ‘செய்வினை’யை நீக்கியதால். எஜமான் வரவில்லையென்றால் இது நாகை மீனவர் குப்பத்து நீட்சி. எஜமான் சந்ததிகளைத் தவிர்த்த மற்ற சில குடும்பங்களின் முன்னோர்கள் கூட அந்தக் குப்பத்தைச் சேர்ந்தவர்களாயிருக்கக் கூடும். மற்றவர்கள் எங்கிருந்தோ வந்த பறவைகள். சில பறவைகள் தான் அரேபியாவிலிருந்து வந்ததாகக் கூட பெருமை பேசும்.

கிட்டத்தட்ட 500 வருடங்களுக்கு மேலாக வளர்ந்து கொண்டே வருகிற மரமும் குறையாத அதன் கனிகளும் எல்லோருக்கும் பொதுவாகத்தான் இருந்து வருகிறது – நஞ்சைப் பாய்ச்சுகிற சில வேர்களையும் மீறி.. ‘மஹ்ரிப்’ற்கு (மாலை நேரத் தொழுகை) குண்டு போட்டதும் ‘ஜியாரத்’திற்கு – சமாதியை வழிபடுவதற்கு – கிளம்புகிற உம்மா இன்று வரை, இந்த முதுமையிலும், காலில் செருப்பில்லாமல்தான் போய் எஜமானின் அதிசய பாதக்குறடுகள் உள்ள தங்கப் பெட்டியை தன் தலையில் வைத்து விட்டு வருகிறார்கள். அப்போதெல்லாம் அதை நான் வெடைத்தால் ‘தெரியாம பேசாதே தம்பி வாப்பா… அஹ காரணக் கடலு..!’ என்பார்கள்.

இன்னொரு பட்ட பெயர்!

நண்பன் ரவிபிரகாஷோ தான் தினமும் போய் ஆண்டவரை வேண்டுவதற்கு வேறொரு காரணம் சொல்கிறான்:

‘நம்ம வூட்டுலே தாத்தா, பாட்டிண்டு பெரியவங்க இல்லையா ? அது போல தாத்தாவுக்கு தாத்தா அவங்க !’

என்ன அன்பு மாற்று மதத்தைச் சார்ந்த ஒரு மகான் மேல்! இவர்கள் மினாரா பொந்துகளில் ‘க்கும்..க்கும்..’ என்று கூவிக் கொண்டு, ‘நகரா’ (கொட்டு) சப்தத்திற்கும் மணியை அறிவிக்கிற குண்டு சப்தத்திற்கும் வெளி வந்து , பறந்து பறந்து – சேர்ந்தாற்போல – தங்கக் கலசத்தில் அமரும் புறாக்கள்..

இங்கே வல்லூறுகளுக்கு என்ன வேலை ? பிரியமான புறாக்கள்தான் என்ன அழகு..

ஐந்து நூற்றாண்டுகளாக இந்த பிரியம் வற்றவேயில்லை ஊரில். ஆயிரத்தெட்டு அனாச்சாரங்கள் நடக்கின்றனதான் உள்ளே. (மக்காவில் உள்ள) ‘கஃபா’வை சுற்றுவதாக நினைத்துக் கொண்டு சாய்மினாராவை சுற்றுவார்கள் சில சாபுமார்கள் ! கற்பனைக்கு வலிமை இருக்கத்தான் செய்கிறது. அதை பக்தர்களிடம்
ஃபாத்திஹா என்ற பெயரில் கொள்ளை அடிக்காமல் இருப்பது போலவும், ரசூலுல்லாவின் 23வது சந்ததியைச் சார்ந்த தங்கள் பாட்டானாரின் புகழுக்குக் களங்கம் வராத வகையில் உழைத்துப் பிழைப்பது போலவும் கற்பனை
செய்யலாமே..

பெரிய எஜமான் , இவர்கள் மேல் விட்ட சாபத்திற்கு காரணம் இருக்கிறது. அவர்கள் காரணக் கடல். கடலைப் பற்றிச் சொல்ல நான் முதலில் இணையத்தில் இடம் தேடவில்லை.

முதலில், எனக்கு ஒரு ‘ஹோம் பேஜ்’ தயார் செய்திருந்தேன் – கற்றுக் கொள்வதற்காக. கம்யூட்டர் சம்பந்தமாக பேசுகிற அனைவரும் இண்டெர்நெட் என்ற வார்த்தையை மந்திரம் போல் உச்சரித்துக் கொண்டிருந்ததால் நானும் பேய் பிடிக்கப்பட்டு எனக்கென்று தனியாக கனெக்சன் வாங்கினேன் – என்னதான் அது என்று பார்க்க. கம்ப்யூட்டர் புரோகிராமராக இருந்து கொண்டு web, tcp/ip, isp ,iab,http என்ற வார்த்தைகள் தெரியாதிருக்கலாமோ ? எல்லோர் வாயிலும் இருந்த ‘e’ என் மேலும் அமர்ந்தது. U.A.ஈ!

இலவச இ-மெயில் முகவரியாக இல்லாமல் கம்பெனிக்கென்று எதிஸாலத் மூலமாக ஒரு முகவரி/இணைப்பு வாங்கினால் பெருமைதான். விசிட்டிங் கார்டில் ஒரு வரி சேர்க்கலாம். இதன் அனுகூலங்களைச் சொன்னால் ஃபேக்ஸ் அளவுக்கு அத்தியாவசியமானதாக கம்பெனி கருதவில்லை. கருதினாலும் அதற்கென்று மாதாமாதம் செலவு பண்ணத் தயாராக இல்லை. ஆங்கில தினசரியை வாங்கிப் போட்டால் அலுவலகத்தில் உள்ளவர்கள் வீணாக படித்துக் கொண்டு நேரம் போக்குகிறார்கள் என்று அதை நிறுத்திய கம்பெனியிடம் போய் நான்
இண்டெர்நெட் கனெக்சன் பற்றி சொல்வதாவது!

‘ஹாத்தி நிகல்கயா , தூம் பச்கயா ‘ என்றார் பாகிஸ்தானி மேனேஜர். யானையைப் போக விட்டு விட்டு அதன் வாலைப் பிடித்துக் கொள்ளும் ஜாக்கிரதையான ‘அர்பாப்களை’த்தான் (அரபி முதலாளிகள்) சொன்னார் அவர். இரண்டு கார் வாங்கும் அளவுக்கு ஒவ்வொரு வருடமும் ரிப்பேர் என்று பொய் கணக்கு காட்டி தன் கார் செலவுக்கு வாங்கும் அவர் நிச்சயமாக அர்பாப்களைத்தான் சொல்லியிருப்பார்.

மனைவி, பிள்ளைகளின் குரல்களைக் கேட்டு இருத்தலுக்கான சார்ஜ் ஏற்றிக் கொள்ள இனி டெலிபோன் கார்டுகளில் பணத்தை விரயம் செய்ய வேண்டியதில்லை. ஒரு மணி நேரம் பேசினாலும் இரண்டு திர்ஹத்திற்குள்தான் வரும் என்பதும் எனக்கென்று கனெக்சன்வாங்க காரணமாக இருந்தது. அதை isp கெடுத்தது வேறு விஷயம்.

Corrupt ஆகிப் போகிற அல்லது அழிந்து போகிற Device Driverகளுக்காக ஒவ்வொருவரையும் கெஞ்சாமல் நாமே டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்பது பெரிய வசதி என்றார் ஒரு நண்பர். ‘ஏன் Corrupt ஆகிப் போகிறது அல்லது அழிந்து போகிறது ?!’ என்று கேட்டேன். பதில் சொல்லவில்லை அவர். அந்த நேரத்தில் அவர் ஒரு பத்திரிகை பார்க்க முடியும், பிரயோசனமாக. திருடர்கள் ஒன்று சேர்ந்து திருடர்களைக் கண்டு பிடிக்கும் பத்திரிக்கைகள்..

‘BF ·போட்டோக்கள் ?’ என்று இன்னொருவர் கண் சிமிட்டினார். தேவைப்பட்டால் ‘தேரா’ போய் ‘பதாகா’ (I.D) வையும் ஐம்பது திர்ஹத்தையும் கொடுத்து விட்டு சூப்பரான ரஷ்ய சாமானைப் பாத்துப்புட்டு வரலாமே ? இது எதுக்கு ‘லொடக்..லொடக்’ குண்டு ? ஃபோட்டோ , சைட்லேர்ந்து இறங்குறதுக்குள்ளே நமக்கு வடிஞ்சிடுது..!’ என்று பதில் தந்தது மற்றொரு இணையப் புள்ளி.

உலகத்தில் உள்ள அத்தனை மொழி கெட்ட வார்த்தைகளையும் சேகரித்து, Search பண்ணிய அடுத்த நொடியிலேயே ‘மம்னு (‘blocked) என்று உடனே பெரிய சிவப்பு எழுத்தில் தடுக்க ஒரு கூட்டமே எதிஸாலத்-ல் வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்த எரிச்சலில் வரும் வார்த்தைகள்… நன்றாக ஆசை தீரப் பார்த்து விட்டு, நகலும் எடுத்து விட்டு பின்பு நாம் கூட அவர்களுக்கு தகவல் தரலாம்.

‘நம்ம ஊருலே உள்ளவன்லாம் கொடுத்து வச்சவனுவ, எந்த தடையும் கிடையாது’ என்று அங்கலாய்ப்பு வரும். எல்லாம் வரும்தான். கனெக்சன் மட்டும் இலேசில் வராது. சொல்ல முடியாது ; I T என்றால் இந்தியாதான் என்று உலகம் சொல்வதற்காக , குடி தண்ணீர் பிரச்சினையத் தீர்ப்பதை விட தகவல் வெள்ளத்தை திறந்து விடுவதற்காக, என் தாய்த் திருநாடு மூச்சை முட்டிக் கொண்டு நிற்பதில், நினைத்த மாத்திரத்திலேயே பலான சைட்கள் வந்து விழலாம் அங்கே..

இங்கே அப்படியல்ல. ‘கம்ப்யூட்டரில் கலாச்சாரச் சீரழிவு’ என்பது பற்றி அடிக்கடி ஆப்ரா உல்லாசப் படகுகளிலும், பெல்லி டான்ஸ்காரிகளின் மடியிலும் படுத்தபடி விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். டிஷ் வழியே வரலாம்; கம்ப்யூட்டர் வழியே வரக்கூடாது. யூதர்களைக் கல்லால் அடிப்போம் !

எனக்கு என் சீரழிவு குறித்துத்தான் அக்கறை. இண்டெர்நெட் பற்றி தெரியாமல் போனால் நாளை வேலை தேடும்போது பிரச்சினையாகலாம்.

மவுத் கூட இஸ்ராயிலின் மவுஸ் க்ளிக்-ல் வரப்போகும் காலம் குறித்து கவலை கொண்டாக வேண்டும். இஸ்ராயில் என்றால் மரணத்திற்கான வானவர்.

இன்ஸ்டிட்யூட்களில் போய் , corba , java என்று web-ல் கலக்க படிக்கலாம்தான். நகரத்தில் இருந்து வெகு தூரம் இருக்கிற ராஸ்-அல்-கோரில் இருந்தது மட்டும் பிரச்சனையில்லை. என் உருட்டலுக்கு அவைகள் சரியாக வராது. நன்றாகத் தெரிந்து கொள்ள வழி, தவறுகள் செய்வதுதான்.

முதன் முதலாக எனக்கென்று ‘ஹோம் பேஜ்’ தயாரித்து , என் பிள்ளைகளின் ஃபோட்டோக்களையும், சில கார்ட்டூன்களையும் (Metamorphosis of Abedeen இதில் நன்றாக இருக்கும்) போட்டு , முகவரியை அமெரிக்காவிலுள்ள மைத்துனருக்கு அனுப்பினால் அடுத்த நிமிடத்தில் பதில் !

வெகுவாகப் பாராட்டிய அவர், இன்னும் நிறைய சேருங்க மச்சான் என்று சொன்னதில் ஊரைப் பற்றியும் சொல்லலாம் என்று – ஊரென்றால் தர்ஹாதானே என்று – தர்ஹா ஃபோட்டோவைத் தேடினேன். கையில் இல்லை. இணையத்திலும் என் தேடலில் அகப்படவில்லை.

தினமணி மெஸேஜ் போர்டில் என் தேவையைச் சொன்னேன். கனடா கல்யாணம் உடனே அனுப்பி வைத்தார். ஆனால் அடியக்கமங்கலம் அக்பர் பாஷா கோபித்துக் கொண்டார்.

‘தவறு செய்கிற சகோதரருக்கு நீங்கள் திருந்த ஆசைப்படும் அக்பர் பாஷா – செளதியிலிருந்து. தர்ஹா ஃபோட்டோவைக் கேட்டிருக்கிறீர்கள். வைத்து வணங்கவோ உங்கள் ஹோம் பேஜில் போடவோ எதுவாக இருந்தாலும் இது அல்லாஹ்வுக்கு இணை வைக்கிற விஷயம். எந்த பாவத்தையும் அல்லாஹ் மன்னிப்பான் – இணை வைத்தல் ஒன்றைத் தவிர’. மெஸேஜ் போர்டில் போஸ்ட் செய்ததோடு மட்டுமல்லாமல் எனக்கு இ-மெயில் வேறு அனுப்பியிருந்தார்.

ஃபோட்டோ கேட்டதுமே அது வணங்கத்தான் என்று ‘வஹி’ (இறைச்செய்தி) வந்த அவர் வணங்கத் தகுந்தவர்தான் .போட்டோ ஹராம் என்றால் கேமராவும் ஹராமான கண்டு பிடிப்புதான். இணை வைத்தலுக்கு உதவும் கருவியைக் கண்டு பிடிக்க ஏன்தான் அல்லாஹ் உதவினானோ ?

சிறு விஷயங்களையெல்லாம் பெரிது படுத்தி மூர்க்கம் கொள்கிற போக்கு, அரபு நாட்டில் எண்ணெய் கண்டு பிடிக்கப்பட்டதும் அங்கு போன முஸ்லிம்களுக்கு வந்து விட்டது. எண்ணெயோடு அறிவும் சேர்ந்து பீறிடுகிறது போலும். எளிதில் தீப்பற்றி விடுகிற அறிவு..தீக்குச்சியும் கூடவே கிடைக்கிறது… அரசு இருக்க ஆன்மீக அடிதடிகள் அவசியம்.

ஏன் இந்த கோபம் ?

ஒரு Symposium பார்த்தேன். கேரளாவில் நடந்தது. பம்பாயைச் சேர்ந்த இளைஞர் ஒரு பாதிரியாரையும் பாவமான ஸ்வாமி ஒருவரையும் வாங்கு வாங்கு என்று வாங்கினார். – ஆயத்துகளாக அள்ளி வீசி. அத்தனையும் மனப்பாடமாக , விரல் சொடுக்கில் !

‘நாம் மூவரும் மலையுச்சியில் நின்று கொண்டிருக்கிறோம். ஒரு சிறு குழந்தை அப்போது ஓடி வருகிறான். இன்னும் சற்று நேரத்தில் அவன் உச்சியிலிருந்து விழுந்து விடுவான் அதல பாதாளத்தில். நீங்கள் இருவரும் அதை கையைக் கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்! நான் உடனே சென்று குழந்தையைக் காப்பாற்றுகிறேன்’ என்றார்.

‘ஏன் உங்கள் கருத்தை எங்கள் மேல் திணித்திருக்கிறீர்கள் ? அவரவர்களுக்கு அவரவர் வழி’ என்று சாமியார் கேட்டதற்கான பதில் அது. லகும் தீனுகும் வலியதீன் ? (109 : 6)

கூட்டம் சிரித்தது சந்தோஷமாக. அவர்கள் வெற்றி கொண்டு விட்டார்கள் .உலகில் ஒரே மதமே இருக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் நாட்டமாக இருந்தால் இன்னொரு ‘குன்’

(ஆகுக!) சொல்லிவிட்டுப் போயிருக்க வேண்டியதுதானே. ஒப்பு நோக்க வேறொன்றும் வேண்டுமென்றா ? சிந்தித்துத் தெளிவு பெறுவதற்காக. அது அவனின் நாட்டம் (16:37) , (2:269)..

வேதம் கொடுக்கப்பட்டவர்கள் அனைவருமே வாக்குவாதத்தின் போது எதையும் முழுக்கச் சொல்லாமல் வெறும் அத்தியாயம் மற்றும் வசனங்களின் எண்களை மட்டும் குறிப்பிட்டால் அவ்வளவாக தீப்பொறி பறக்காது என்பது என் அபிப்ராயம். மூன்று பேர்களுக்காக முன்னூறு கோடி ஜனங்களா பலப்பரீட்சையில் இறங்குவது ?

மூவருமே அவரவருக்குப் பிடித்த திசையில் மலையில் நின்று அதன் அழகையும் கம்பீரத்தையும் வருடிப் போகும் காற்றையும் இவைகளையெல்லாம் படைத்து இயக்கும் இறைவனின் அல்லது இயற்கையின் வல்லமையையும் எண்ணி ரசிக்கலாம் ; வணங்கலாம். சாவதற்கு என்று ஒரு குழந்தை ஓடி வருவதாகக் கற்பனை செய்யும்போதுதான் கலவரம் பிறக்கிறது. அப்படியே அந்த கலவரக் குழந்தை ஓடி வந்தாலும் காப்பாற்றுகிறவர் சும்மா இருக்கக் கூடாதா? அடுத்த இருவரும் பாராட்ட வேண்டும் எண்று ஏன் எதிர்பார்க்கிறார்?

இந்த மூவரையும் விட அவர்கள் நிற்கிற மலை உயர்ந்தது. மூவருமே கிழே விழுந்தாலும் மலை இருக்கும். எதையோ நிரூபிக்க மேலேறி வருபவர்களுக்கு முடிவான ஒரு பதிலும் அது தராது. அது சாட்சி…

அக்பர் பாஷாவுக்கு பதில் எழுதப் போய் அவுலியாக்கள் மேல் மரியாதை வந்ததுதான் மிச்சம்!

இஸ்லாம், வாளால் பரவியதா இந்தியாவில் ?! தில்லியின் நிஜாமுதீன் அவுலியா, திருச்சி நத்தர்ஷா வலியுல்லாஹ், அஜ்மீரின் ஹாஜா, நாகூரின் ஷாஹூல் ஹமீது பாதுஷா போன்ற இஸ்லாமிய சூஃபிகளும் இறை நேசச் செல்வர்களாலுமல்லவா….! சரியாகப் படித்துணராமல் எவ்வளவு உதாசீனப் படுத்தியிருக்கிறேன்
இவர்களை !

‘பெரிய எஜமான் இல்லாது போயிருந்தால் தமிழகம் இன்னொரு கோவாவாக அல்லவா மாறியிருக்கும் !’ என்று ஆச்சரியத்தில் திளைக்கிறார் மத ஒற்றுமை பற்றி பேசி வரும் ஒரு எழுத்தாளர்.

கேரளாவின் குஞ்சாலி மரைக்காயர், இலங்கை இளவரசன் மாயாதுனே, தமிழக ராஜாக்களான சேதுபதி, சரபோஜி, அச்சுதப்ப நாயக்கர் போன்றவர்கள் இணைந்து போர்த்துக்கீசியர்களை போராடி வென்றது எஜமானின் வலிமையால் அல்லவா ?

எஜமானின் சீடர்களான 404 ஃபகீர்களும் உண்மையில் ஃபகீர்கள்தானா ? ஒரு குண்டா சோற்றுக்காகவா அவர்கள் கூட வந்தார்கள் ?

ஷூஐப் ஆலிம்ஷா அவர்களின் ‘ARABIC, ARWI AND PERSIAN IN SARANDIB AND TAMILNADU’ என்ற கனமான புத்தகம் நிறையவே சொல்கிறது (chapter 3 – Page 33 to 38)

எஜமானின் வரலாற்றைச் சொல்கிற புத்தகங்கள், புராணங்கள், காப்பியங்கள் நிறைய இருக்கின்றதுதான். ஆனால் எனக்குப் புரிந்த மொழியில் கே.எம். ஜான் பிரிட்டோ என்ற காவல் ஆய்வாளர் எழுதிய ‘ஞான சூரியன்’தான் என்
இருட்டை விரட்டியது. பெண்ணின் மார்பகங்களைப் பார்த்து ‘இது கட்டியோ’ என்று ‘ஒன்றும் அறியாத’ எஜமான் கேட்கும் அரைகுறை ஆச்சரியங்களும், புலி மேல் அவர்களை உட்கார வைக்கும் புருடாக்களும் இல்லை அதில்.

‘நாகூரில் அடங்கியிருப்பவர் வணங்குவதற்குரியவர்தானே?’ என்று மாறன் கேட்கிறான்.

சாதிக் : ‘நோ மாறன்..! அவரை யாரும் வணங்க முடியாது. காரணம் அவர் வணங்கியதே நாம் வணங்குகின்ற இறைவனைத்தான் ! ‘ ஏக இறைவனாகிய அல்லாஹ்வுடன் ஒன்றித்து விடு; இல்லையெனில் அல்லாஹ்வை நெருங்கியவர்களோடு ஒன்றித்து விடு’ நிச்சயமாக அவர்கள் அவனளவில் உன்னைக் கொண்டு போய்ச் சேர்ப்பார்கள்!’ என்று ஒரு கருத்து உண்டு. அதன்படி இறைவனிடம் நம்மைக் கொண்டு போய் சேர்க்க வல்லவர் என்கிற அளவில் அவரோடு ஒன்றித்து விடலாம். அவ்வளவுதான்..’

ஜான் பிரிட்டோ , ‘நாகூர் தர்ஹா ஒரு ஆய்வு’ எனும் தலைப்பில் பதுருன்னிஷா என்ற மாணவி எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை தனக்கு உதவிற்று என்று சொன்னாலும், சூஃபிகளின் அருளாட்சியைச் சொல்ல ஜபருல்லாஹ் நானா போன்ற ஊர்க் கவிஞர்கள்தான் உதவியிருக்கிறார்கள்.

மனித நேயத்தை எஜமான் போற்றியதாலல்லவா சகோதர சமயங்களைச் சார்ந்தவர்களும் எழுத வருகிறார்கள் !

எஜமான் சாதாரண ஆள் இல்லைதான். ஹிதாயத்துல் அனாம் இலா ஜியாரத்தில் அவுலியாயில் கிராம்.. மான் இனத்தில் ஒன்று புற்களைத் தின்று சாணி போடுகிறது ; இன்னொன்று கஸ்தூரியைத் தருகிறது. இரண்டும் எப்படி ஒன்றாக முடியும் ? என்று கேட்கிறார் அவுலியாக்களின் மர்மங்களைச் சொல்லும் பாக்கர் சாஹிப் ஆலிம்

காதிரி அவர்கள். அவுலியாக்களை வைத்து ‘வஸீலா’ (உதவி) தேடலாமா என்று அலசி, ‘ம்’ என்று முடிக்கிறார்கள் – ஏராளமான குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களோடு.

எஜமான் இருந்ததிலிருந்து ஐந்து நூற்றாண்டுகள் வரை மத ஒற்றுமைக்கு புகழ் பெற்ற ஊரில் இப்போது தீ நாக்குகளும் பார்சல் குண்டுகளும் அதிகப் படுவதற்குக் காரணம் என்ன?

கஸ்தூரி தீர்ந்து போய் இப்போது சாணி வருகிறதோ ? கதைகளை அப்படியே நம்பி விடுவதும் கூடாது. வரலாற்று நிகழ்வுகளுடன் தொடர்பு படுத்தித் தெளிவு படுத்த வேண்டும் என்கிறார் ‘நாகூர் – ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற அற்புதமான கட்டுரையை, இசுலாமியத் தமிழிலக்கிய ஆய்வுக் கோவையில் எழுதிய ஜெ.ராஜா முகமது. நாகூர் ஆண்டவர், தஞ்சை மன்னனின் நோயைத் தீர்த்து வைத்ததாக ‘கன்ஜுல் கராமத்’ கூறுகிறது. ஆனால் அக் காலத்தில் நாயக்க மன்னர்களைப் பற்றி எழுதப் பட்ட ரகுநாத பியுதாயமு, சாகித்ய ரத்ன காரா,சங்கீத சுதா ஆகிய தெலுங்கு இலக்கியங்களில் ஆண்டவர்களைப் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை என்கிறார். 16ஆம் நூற்றாண்டில் நாகைக்கு வந்து ஏராளமான பரதவர்களை

கிருஸ்துவ மதத்திற்கு மாற்றம் செய்து கொண்டிருந்த புனித ஃப்ரான்சிஸ் சேவியரின் குறிப்புகளிலும் நாகூர் ஆண்டவரைப் பற்றிய குறிப்புகள் இல்லை. வரலாறு…!

‘குறிப்புகள் கிடைக்காமலும் இருந்திருக்கலாம் அல்லவா ?’ என்று கேட்கலாம் , மீராபாயின் பேரின்ப நாயகர் என்று பெரிய எஜமானைக் குறிப்பிடும் ‘காருண்ய ஜோதி’ யின் ஆசிரியர்.

‘எஜமான் இப்ப எங்கே இருக்கிறாங்க நாகூர்லே ?’ என்று அலுத்துக் கொண்டார் நாகையில் ஒரு பெரியவர்.

அந்த சகோதர சமயத்தைச் சமயத்தைச் சேர்ந்த பெரியவரின் கடையில் ஒரு சமயம் ஒதுங்கி நிற்க வேண்டியிருந்தது. சர்பத் குடிக்காலமென்று. இப்போதெல்லாம் ஒதுங்கி நின்றாலே உபதேசம் ஆரம்பித்து விடுகிறது.

‘என்னா சொல்றீங்க அண்ணே..?’ என்று கேட்டேன்.

‘அவங்க வாஞ்சூருக்கு பொய்ட்டாங்க நடக்கிற அக்கிரமத்தை பார்க்க முடியாம… கந்தூரி சமயத்திலேதான் வருவேண்டு சொன்ல்லிட்டு பொய்ட்டாங்களே!’ என்று ஒரு போடு போட்டார். அல்லாஹ்வே, அந்த சமயம்தானே அதிக அக்கிரமம் நடக்கிறது ! ஆனால் இவருக்கு எப்படித் தெரியும், எஜமான் வாஞ்சூருக்குப் போனது? அவரது தகப்பனாரின் கனவில் வந்து சொன்னார்களாம். வந்தது எஜமான் என்று தெரிந்து கொள்வதும் ஒரு அவுலியாத்தனம்தான். சர்பத் அவுலியா!

‘உம் வாசல் தேடி வந்தேன் சாஹே மீரானே – நீர்எங்கே எங்கே எங்கே நாகூர் மீரானே ‘ – நாகூர் ஹனீபா தேடுகிறார்..

இதையெல்லாம் சொல்லலாமே..நமது எழுத்தை நாமே பிரசுரித்து நாமே பார்க்க ஒரு வாய்ப்பு!

ஒரு கருவேல மரமும் இரண்டு எருமைகளும் உள்ளதையே பெருமையாகப் பேசிக் கொண்டு அவரவர்கள் தங்கள் ஊர்களைப் பற்றி இணையத்தில் எழுதும்போது சரக்குள்ள என் ஊரை ஏற்றத்தான் வேண்டும்.

உலகின் அழகான கடற்கரைகளுள் ஒன்று, ஊரின் பெரிய மனிதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டு இன்னும் கொஞ்ச நாளில் ஒருவர் மட்டும் போய் வருகிற ஒற்றையடிப் பாதையாக மாறப் போவதைச் சொல்லலாம். அந்த
ஒருவரும் பெரிய எஜமான்தானோ ?

ஊரை , பாண்டி மாநிலத்துடன் இணைக்கிற 158 வருட வெட்டாற்றுப் பாலம்..இதையும் ஃபோட்டோ எடுத்துப் போட வேண்டும். நாளை இருக்காது. வான் மார்க்கமாக ஜனங்கள் போக, அரசு திட்டம் தீட்டி விட்டது.

எல்லாவற்றையும் விட முக்கியம், ஊரிலுள்ள எழுத்தாளர்கள் பற்றி சேர்ப்பது. நானும் அந்த பட்டியலில் சேர பெரிய எஜமான் உதவுவார்களாக , ஆமீன் ..

பதினான்கு கான்வாதாக்களான ஞானப்பாதைகளும் ஐம்பத்தொரு தரீக்குகளான ஞானப் பாட்டைகளும் ஒன்று கூடும் தலமாக ஊரை ஆக்கிய அவரது தர்பாரில் என் ஆசை நிறைவேறட்டும்.

யா காதிர் முராது ஹாஸில்… (‘ஆண்டவரே , என் நாட்டங்களை நிறைவேற்றும்’)

இதற்கு மெய்தீன் மாமாதான் சரியான ஆள். ‘சொல்லரசு’ என்று சொன்னால்தான் அனைவருக்கும் புரியும் – மெய்தீன் மாமாவுக்கும் கூட. அவருடைய தரமான சுத்தத் தமிழுக்கும் எனக்கும் வெகு தூரம். என் மனைவி வீட்டுத் தெருதான். ஆனால் கிழக்குக் கோடியில் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டினாற் போல் இருக்கிறது அவர் வீடு. இருவரின் வீடுகளுக்கும் இடையில் பள்ளிக் கூடம் இருக்கிறதுதான். நான் போக மாட்டேன். இணைக்கும் வீதி போதும்.

ஊரைப்பற்றி விபரங்கள் தேடும் அனைவருக்கும் அவர்தான் கருவூலம். இஸ்லாமிய இலக்கியங்கள், தத்துவங்கள் என்று ஏதேனும் ஒரு வரி கேட்டால் உணர்ச்சிப் பிரவாகமாக தொடர்ந்து, விஷய ஞானத்தோடு விளக்கும் அறிவு..கேட்டவர்கள், இன்னும் எதிரில் உட்கார்ந்து இருக்கிறார்களா என்று கூட கவனிக்காமல் ஆழ்ந்து விடும் ஆளுமை.

ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு , புதுக்கோட்டையில் நடந்த இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கிய முதல் மாநாட்டில் வெளியான மலரில் , ‘நாகூர் தந்த நற்றமிழ்ப் புலவர்கள்’ என்ற தலைப்பில் , 17ஆம் நூற்றாண்டு நாகூர் புலவர்கள் பற்றி அவர் எழுதிய கட்டுரை ஊரில் பிரபலம் – அந்தக் கவிஞர்கள் யார் என்று ஊருக்குத் தெரியாதென்றாலும்.பெரிய எஜமானின் கந்தூரி வைபவத்தின்போது ‘கடல் நாகூர் கருணை வள்ளல்’, ‘நானிலம் போற்றிடும் நாகூர் நாயகம்’ என்று வெளியாகும் மலர்களின் பதிப்பாசிரியர் கண்டிப்பாக அவராகத்தான் இருப்பார். அவரின் உதவி இல்லாமல் முஹம்மதுப் புலவரின் நாகூர் ஆண்டவர் பிள்ளைத் தமிழும், குலாம் காதிர் நாவலரின் நாகூர்ப் புராணமும், புலவர் நாயகம் என்று அழைக்கப்பட்டு அறியப்படும் ஷெய்கப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிமின் நாகையந்தாதியும் , ஜவ்வாதுப் புலவரின் நாகைக் கலம்பகமும் சேர்ப்பது எப்படி ?

நேற்று இரவு 11:48க்கு ஊரில் இறந்த அல்லது பிறந்த புதிய கவிஞனின் நூலொன்றின் கையெழுத்துப் பிரதிகூட அவரின் நூலகத்தில் இருக்கிறது.

மெய்தீன் மாமா பழக்கமானது நண்பன் ரஃபீக்கை அவர் காப்பாற்றியதில் வந்த நன்றியால்தான் என்று கூற வேண்டும். கொமெய்னி ஃபத்வா கொடுத்த ஒரு இந்திய எழுத்தாளனை , ‘அவன் சில நல்ல கட்டுரைகளும் எழுதியிருக்கிறான்; ஒரு கருத்தை எதிர்க்க கொலைவாளினை எடுப்பது தவறு’ என்று உலகத்தைப் புரியாமல் மேதாவித்தனமாக அவன் ஒரு கடிதம் Express பத்திரிகைக்கு அனுப்ப, காத்துக் கொண்டிருந்த அவர்களும் துரிதமாக பிரசுரிக்க , காம்பூரிலிருந்து ஒருவர் வாளினை எடுத்துக் கொண்டு வந்து விட்டார் நாகூருக்கு..ரஃபீக்கைப் பற்றி விசாரிக்கத்தான்..

அப்போதுதான் மாமா அவருக்கு ஒரு கதை(?)யைச் சொல்லி சமாதானப் படுத்தி விட்டிருக்கிறார் சமாளித்து. என்ன கதை ? இந்திய பாகிஸ்தான்பிரிவினையின்போது ஒருவரை ஒருவர் வெட்டிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். சொர்க்கத்திற்கு வழி சொல்லும் மதங்கள்..

ஒரு முஸ்லீம் இளைஞனிடம் ஒரு ‘காஃபிர்’ மாட்டிக் கொண்டு விட்டான் வசமாக. தன் குடும்பத்தாரை ஈவு இரக்கமில்லாமல் கொன்று தீர்த்த காஃபிர்களுள் ஒருவன் என்ற வெறி இவனுக்கு…

‘போலோ கலிமா..!’ – முஸ்லீம் இளைஞன் , வெறியோடு கத்திக் கொண்டு உருவிய வாளுடன் விரட்டுகிறான். வேறு வழியில்லை. சரியாக ஒரு மூலையில் மாட்டிக் கொண்டாகி விட்டது..தன் கடவுள்கள் யாரும் இப்போது உதவிக்கு வரப் போவதில்லை..

‘சரி சொல்கிறேன்..நீ சொன்னபடியே செய்கிறேன்..சொல். எப்படிச் சொல்ல வேண்டும் கலிமா?’

அப்போதுதான் ‘கலிமா’ என்றால் என்னவென்று தனக்கே தெரியாது என்று முஸ்லீம் இளைஞன் உணர்ந்தானாம்! ‘கலிமா’ என்பது ஒரு கைலி பிராண்ட் அல்ல. ‘லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ எனும் இஸ்லாத்தின் மூல மந்திரம்.

அப்போதைய இளைஞன் அவன். இப்போது வந்தவன் ‘கலிமா’ சொல்லி கைமா பண்ணாமல் போனவரை மாமா சந்தோஷப்பட வேண்டும்.

மாமா எல்லோருக்கும் உதவுவார். ‘நம்ம சமுதாயம்’ என்று முஸ்லீம் மக்களை அரவணைத்து அவர்களுக்காக எதுவும் செய்வார். ‘சகோதர சமயத்தைச் சேர்ந்தவர்கள் வேறு சமுதாயமோ?’ என்று நான் கிண்டல் செய்திருக்கிறேன். ஆனால் ஊரில் நடந்த மதக் கலவரங்களின் போது இரண்டு சமுதாயத்தையும் இணைத்து அவர் நடத்தும் சமுதாய நல்லிணக்க மாநாடுகளால்தான் எரிகிற வீடுகளின் எண்ணிக்கை இப்போதெல்லாம் குறைகிறது.

Front Line – Aug’95 ல் வெளியான கட்டுரையை (Under Attack) நாகூர் பக்கத்தில் சேர்க்கச் சொல்லி சில பேர் ஈ-மெயில் செய்திருந்தார்கள் செளதியிலிருந்து. நான் அதே கட்டுரையில் ‘Symbol of Harmony’ என்கிற பெட்டிச் செய்தியைத்தான் சேர்த்தேன், எழுதிய விசுவநாதனுக்கு நன்றியுடன்.

பெரிய எஜமானுக்கு அதுதான் பிடிக்கும். மெய்தீன் மாமாவுக்கும் அதுதான் பிடிக்கும்.

நாகூர் வலைப் பக்கம் பிரபலமாக ஆகிக் கொண்டுதான் இருக்கிறது. சிங்கப்பூர், மலேசியாவிலிருந்துதான் நிறைய பாராட்டு. மனித நேயம் வளர்த்த மகானின் பெருமைகளை சரியாகச் சொல்லி ஊருக்கும் தமிழக முஸ்லீம்களுக்கும் பெருமை சேர்த்து விட்டீர்கள் என்கிறது ஒரு மெயில். அங்குள்ள நாகூர் தர்ஹா ஃபோட்டோவையும் இணைத்திருக்கிறேனே….1830 ல் கட்டியிருக்கிறார்கள் ஊரிலிருந்து போனவர்கள்! வேலை வேண்டாமா?

அத்தோடு நின்றால் பரவாயில்லை பாராட்டுக்கள். கூடவே ‘நான் எஜமானுக்கு காணிக்கை செலுத்த விரும்புகிறேன் ; தர்ஹா டிரஸ்டிகள் ஒருவரின் முகவரி எழுதவும்’ என்று வேறு தொடர்பு கொண்டார்கள்! பசியால் வாடும் ஏழை சாபுமார்களின் முகவரியை அனுப்பினேன். வேறென்ன செய்ய ?

தாயத்து, கொன்னை சர்க்கரை எல்லாம் விற்கலாம்தான்..- E-Commerce !

Search Engineகளில் ‘nagorenews’ என்று கொடுத்ததும் தப்பாகப் போயிற்று. ஏதோ ஒரு ஆர்வத்தில் அப்படிப் போட்டிருந்தேன். ஊரின் கல்யாணப் பத்திரிக்கைகள் எல்லாம் சில ஊர் பற்றிய தளங்களில் காணக் கிடைக்கின்றனவே..

‘நம்ம ஹபீபுலாத்தா மவனுக்கு நேத்து சுன்னத்து. அத போடுவீங்களா?’ என்று ஒரு ஃபோன். Lungi News !

ஏன், ‘அறுபடும் படலத்தை’ வீடியோவாகவே போடலாம்தான். ஆனால் இதற்கா நான் மெனக்கெட வேண்டும் – என் காசையும் செலவு பண்ணிக்கொண்டு ?

விளம்பரங்களைக் கூட தவிர்த்தேனே…தன் ஊரைப் பற்றி ஏதோ இண்டெர்நெட்டில் எழுதுகிறேன் என்று கேள்விப் பட்டு ஒரு பெரிய ஊர் முதலாளி காக்கா தன் கம்பெனி விளம்பரத்தை போடச் சொன்னார் இலவசமாக. தரமான தஞ்சாவூர் பொன்னி புழுங்கல் அரிசிக்கு நீங்கள் நாடவேண்டியது தாஹா டிரேடிங்! ஊருக்கென்று சொந்த Domain ஏற்படுத்தக் கூட உதவாத கப்பல் அதிபர்கள்…

போடலாம்தான் அதைப் போட்டால் ‘மஸ்கா பாலிசி’ யைக் கடைப் பிடிக்கிறேன் என்று பெயர் வரும். உண்மையில், அளவு நிறை பற்றிய ஸுரத்துல் முதஃப்ஃபிபீனின் வசனங்களைப் போட்டு அவரைப் பற்றி எழுத வேண்டும்தான்…

அது அப்புறம். முதலில் எழுத்தாளர்கள். தன்னைப் புகழ்ந்தவர்களின் பட்டியலோடு வெளிப்படும்போதுதான் எஜமானுக்கும் சந்தோஷம் வரும்.

மெய்தீன் மாமாவுக்கும் என் நோக்கம் பிடித்திருந்தது. அவருடைய கட்டுரையை நண்பன் ரஃபீக்கின் உதவியுடன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, எல்லா எழுத்தாளர்களின் புகைப்படங்களுடன்- முக்கியமாக மெய்தீன் மாமாவைப் பாராட்டி பல கவிஞர்கள் எழுதிய வரிகளையும் சேர்த்து – வெளியிட வேண்டினேன்.

‘பரக்கத்தா (வளமாக) செய்யிங்க தம்பி.. நம்ம இலக்கியங்கள் காலத்தால் அழிஞ்சிடக் கூடாதுண்டு நீங்க எடுக்குற முயற்சிக்கு என்னுடைய உதவியும், பெரிய எஜமான்ற கிருபையும் உங்களுக்கு உண்டு’ என்றார்கள்.

சுத்த பரமன்றுனை

இளைய நண்பர் உயர்திரு மெய்தீன் அவர்கள் பேரில் ஆரிபு நாவலர் அன்புடன் கூறிய இயன் மொழி வாழ்த்து

எண் சீர்க் கழில் நெடில் ஆசிரியம்’அறன் படைத்த நற்செல்வ

குலத்துருவாய், அவதரித்து -அருங்கலை வினோதமெலாம்,

அகத்தினில் ஊன்றி..

….. ……. …….. ……… ……. ……. ……… ……… …….. ……..

உத்தமத்தின் சீலனென உலகந்தன்னில்

வற்றாமல், இருப்பது போல், முகையத்தீன்

வாழ்வெல்லாம் வளர்ந்தோங்கி வாழ்க வாழி’

ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க ரஃபீக் தடுமாறினான். மேற்கண்ட பாடல் மட்டுமல்ல; கட்டுரையில் குறிப்பிட்டிருந்த படைப்புகளின் தலைப்புகள்..

‘முஹாசபா மாலை’ , ‘முனாஜாத்துல் முஞ்சியாத்துத் திருவருள் கீர்த்தனம்’ , ‘பத்துஹுல்மிஸிர் புராணம்’…

‘அல்லாஹ்வே..!’ என்று என்னைப் பார்த்தான். ‘மாட்டும்..ஜஹன்னம் (நரகம்) இதுதாங்கனி!’ என்றேன். ஆள் ஆங்கில அறிவில் எமகாதகன். ‘கடலின் விரல்கள்’ என்ற அவனது புதுக் கவிதைப் புத்தகம் நன்றாக இருந்ததென்று மெய்தீன் மாமாவே பாராட்டி விட்டார் – இன்னும் வெளி வராத அதன் ஆங்கில மொழி பெயர்ப்பைப் பார்த்து. ‘நுரையின் நகங்கள்’ என்று அடுத்த கவிதைப் புத்தகமும்தயார். ஓஷோவின் ஒரு வரியைப் பார்த்து விட்டு உடனே ஒன்பது கவிதைகளை எப்படித்தான் எழுத வருகிறதோ இவ்வளவு வேகமாக! வண்ணக் களஞ்சியப் புலவரின் பரம்பரையைச் சார்ந்தவன் என்று சொல்லிக் கொள்வான்.

ஊரில் எல்லோருமே யாராவது ஒரு புலவர் பரம்பரையைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள் – கவிஞர்களைத் தவிர !

‘நாம காதர் மெய்தீன் புலவர் பரம்பரை வாப்பா..’ என்பார்கள் என் பாட்டியா.

‘ஆமா..அந்த ‘கிஸ்ஸா’வுலாம் இப்ப எதுக்கு? புள்ளையிலுவாச்சும் அரபு நாடு போயி பொழைக்கிற வழியைப் பாக்கட்டும்..’ – உம்மாவின் பதில்.

இப்படி பிழைக்கிற இடத்தில் இருந்து கொண்டு ஊரின் கிஸ்ஸாக்கள் (கதைகள்) பற்றி எழுதுவது ஒரு வேடிக்கைதான்.

‘எப்படி மாமா இதைப் போடுறது ?!’ – மலைத்தான் ரஃபீக்.

‘அப்படியே போடுங்க தம்பி’

‘அப்படீயேண்டா ?’- அவனுக்கு புரியவில்லை.

சிரித்தார் மாமா. ‘ இப்ப ஏழுமலைண்டு இருக்கு. Seven Hills-ண்டா மொழிபெயர்ப்போம்? ஆறுமுகம்டு பேரு. Six Faces-ண்டா மாத்துவீங்க ?’

அவர் சொல்வது சரிதான். பதில் சொல்ல இயலாமல் ரஃபீக் திணறினான். அதை சிரிப்பாக மாற்றினான். அடுத்த நிமிடம் அவரது பெரிய கட்டுரையை ‘சர சர’ வென்று ஒரே மூச்சில் அவர் எதிரிலேயே ஆங்கிலத்தில் மாற்றினான். இந்த முறை மாமா மலைத்தார். ‘உங்க குடும்பத்துக்கும் ஆங்கிலத்துக்கும் அப்போலேர்ந்தே
அப்படியாப்பட்ட ஒரு ஒறவு!’ என்றார். Yes.

தமிழிலேயே வெளியிடலாம்தான். ஆனால் தமிழின் எந்த எழுத்துருவை உபயோகித்தால் எல்லா தமிழர்களும் பார்க்க முடியும் என்பதில் குழப்பம். ஒவ்வொரு தமிழ்த் தளங்களும் அவைகளுக்கென்று ஒரு எழுத்துருவை தனித்தனியாக வைத்துக் கொண்டு முதலில் அதை நமது கம்ப்யூட்டரில் நிறுவிக் கொண்டு படிக்கச் சொல்வது பெரிய தலைவலி. எளிமையான ‘முரசு’க்கு அழகில்லை – சாருகேசி போல. Dynamic Font வந்து விட்டது தமிழில் என்று ஆங்கிலத்தில் தகவல்கள்.

நாகூர் பற்றிய தகவல்களை இரண்டு மொழிகளிலும் பார்க்கும் ஏற்பாடு பிறகு. முதலில் ஒன்றாவது முழுமை பெறட்டும். நான் இப்போதுதான் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஆங்கிலத்தில் தயாரித்து வடிவமைப்பதுதான் சுலபம்.

சுருக்கமான பட்டியலே பதினைந்து பக்கம் வந்திருந்தது.

எழுத்தாளர்கள் பற்றிய குறிப்பு, படைப்புகளின் தலைப்பு, படைப்பின் தன்மை, வெளியான ஆண்டு என்று நான்கு Column உள்ள table தயார் செய்வது போல அமைந்திருந்தது அழகாக.

நான்காம் நக்கீரர் என்று மதுரை தமிழ்ச் சங்கத்தால் அறிவிக்கப்பட்ட மஹாவித்வான் குலாம் காதிறு நாவலரில் ஆரம்பித்து , பல பெரும்புலவர்களின் படைப்புகளோடு நீண்டு, மஹா வித்வானின் மகனார், ‘மீரான் சாஹிப் முனாஜாத் ரத்ன மாலை’ எழுதிய நாகூர் தர்ஹா வித்வான் வா.கு.ஆரிபு நாவலர் அவர்களோடு முடிவுற்றது. ஒவ்வொருவரும் ஒன்றுக்கு மேற்பட்ட படைப்புகள் படைத்திருக்கிறார்கள். (மஹா வித்வான் மட்டும் 35..!).
விளக்கமாக நாகூர் வலைப் பக்கத்தில் காண்க !

‘எல்லாம் ‘அர்வாஹ்’வாவுலெ (இறந்துபோனவர்களாக) இக்கிறாஹா?!’ என்றான் ர·பீக்.

‘பின்னால் வந்தவர்களையும் இணைத்து சிறு குறிப்பு கொடுக்கிறேன்’ என்று மேலும் ஏழெட்டு பெயர்கள் சொன்னார் மாமா. அவர்களும் ‘அர்வாஹ்’தான் ! அதில் , தமிழின் முதல் இஸ்லாமியப் பெண் நாவலாசிரியர் சித்தி ஜுனைதா பேகம் எனப்படும் ஆச்சிமாவைத்தான் அறிவேன் நான். இவர்களின் நானா முனவர் பேக்கின் தூண்டுதலால்தான் தான் எழுத ஆரம்பித்ததாக ஆச்சி என்னிடம் நேரிலேயே கூறியிருக்கிறது.

‘நம்ம ஊர் பொண்டுவள்ளாம் என்னெயெ சூழ்ந்துகிட்டு ஒரே பிஸாது ! – ஏதோ நான் கற்பழிக்கப்பட்ட கன்னி போல!’ என்றார்கள். unravished bride of quietness…அவர்களின் முதல் நாவலான ‘காதலா கடமையா?’, உ.வே.சா அவர்களின் முன்னுரையோடு , வெளி வந்தபோது நடந்ததாம் அது.

பிஸாது (அவதூறு) அப்போதா ஆரம்பித்தது ஊரில் ?

ஆனால் அவர்களுக்கு முன்பிருந்த கால கட்டத்தில் அத்தனை ஆண் புலவர்களும் ஒற்றுமையாக, ஒருவருடைய நூலை மற்றொருவர் வெளியிடுவதும், மற்றொருவருடைய நூலுக்கு பாராட்டுரை வழங்குவதுமாக இருந்திருக்கிறார்கள். தொப்புள் கொடி அறுக்கிற செவுலிகள், பிள்ளைகள் தங்களுடையவை என்று சொல்லாத
காலம் அது…

(தொடரும்)

நன்றி : திண்ணை

abedheen@gmail.com

http://abedheen.wordpress.com/

Advertisements
 

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: