RSS

பனங்கிழங்கு

22 Apr

நண்பரொருவர் பனங்கிழங்கு புகைப்படத்தை முகநூலில் பகிர்ந்ததிலிருந்து இதைப்பற்றிய ஒரு கட்டுரையை பதிவுச் செய்தால் என்ன என்ற விபரீத எண்ணம் பாப்பாவூர் பேயாய் என்னை ஆட்டுவித்தது.

வேனிற் காலம் எப்பொழுது வருமென்று காத்திருந்த காலமது. நாங்கள் வசிக்கும் செய்யது பள்ளித் தெருவழியே “பனங்கிழங்கு..பனங்கிழங்கு” என்று கூவிக்கொண்டு செல்லும் அந்த கூடைக்காரியின் குரல் “தேன்வந்து பாயுது காதினிலே” என்பார்களே அதுபோன்று ஓர் இனிமை சொரியும் ஒரு கூவல். கூடை நிரம்ப கூம்பு வடிவமான பனங்கிழங்கை வட்ட வட்டமாய் அவள் அடுக்கி வைத்திருக்கும் அழகை தூரத்திலிருந்து காண்கையில் சேப்பாக்கம் ஸ்டேடியம் போல் கவர்ந்திழுக்கும்.

தங்கத்தை உரசிப் பார்த்தும், சட்டியைத் தட்டிப் பார்த்தும், தேங்காயை ஆட்டிப் பார்த்தும், வெண்டையின் நுனியை உடைத்துப் பார்த்தும் வாங்க வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள். இதில் முதலாவது சாத்தியமேயில்லை. நகையை உரசிப்பார்த்தால் (இப்பொழுதும் தங்கம் விற்கும் விலையில்) கடைக்காரன் நொங்கெடுத்து விடுவான்.

பனங்கிழங்கின் மேல்தோலை நைசாக நீக்கிப்பார்த்தாலே அது முற்றலா, இளசா என்று யூகித்து விடலாம். முற்றல்தான் நன்றாக இருக்குமாம். (வெண்டைக்காயை முற்றலாகவும், தேங்காயை இளசாகவும் மாற்றி வாங்கிக் கொண்டு போய், கட்டிய மனைவியிடம் வாங்கிக் கட்டிக்கொண்டது மறக்க முடியாத சொந்தக் கதை, சோகக் கதை.

பனங் கிழங்கைப் நீரில் போட்டு, கொஞ்சம் உப்பிட்டு அவித்து உண்ட அனுபவத்தை என்னவென்றுச் சொல்வது?

நாராய் நாராய் செங்கால் நாராய்
பனம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய் ….

என்று நாரை பறவையின் நீண்ட கூரிய அழகை சுவைபட வருணித்த சங்ககாலப் புலவர் என்னைப் போலவே ஒரு பனங்கிழங்குப் பிரியரோ என்னவோ!

பனங்கிழங்கு அலகுகளால்
மீன்பிடித் தொழில்
செங்கால் நாரைகள்

என்று ‘ஹைக்கூ’ கவிதை எழுதிய கா.ந.கல்யாண சுந்தரத்திற்கும் சங்ககாலப் புலவரின் இப்பாடல்தான் உந்துதலாக இருந்திருக்க வேண்டும் என்பது என் கருத்து.

பனங்கொட்டை மண்ணில் புதைக்கப்பட்டு பனங்கிழங்காகிறதாம், கிழங்கை எடுக்காமல் அப்படியே விட்டுவிட்டால் அது பனைமரமாகி விடுகிறதாம். புத்தகத்தில் படித்தது. இளம் பிராயத்தில் எத்தனை பனைமரத்தை மலைமுழுங்கி மகாதேவனாய் முழுசாய் முழுங்கியிருப்பேன் என்ற கணக்கு என்னிடம் கைவசமில்லை.

நார்சத்து மிகுந்த இப்பண்டம் மலச்சிக்கலுக்கு மிகவும் நல்லதாம். கவனிக்க வேண்டியவர்கள் கவனிப்பாராக. கவனிக்க வேண்டிய நண்பர்களின் பெயரை இங்கே குறிப்பிட்டால் வீண்வம்பு வரும்.

வெளிநாட்டில் வசிக்கும் என்னைப் போன்றவர்கள் நினைத்த மாத்திரத்தில் ரம்பூத்தானையும்,கிவியையும், ஸ்ட்ராபெர்ரியையும் உண்டுகளிக்க இயலும். ஆனால் பனங்கிழங்கை எங்கே போய்த் தேடுவது? “எங்கே தேடுவேன், இக்கிழங்கை எங்கே தேடுவேன்” என்று என்.எஸ்.கே. பாணியில் மனதுக்குள் முணுமுணுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

இதை ஆங்கிலத்திலோ அல்லது அரபியிலோ எப்படி கடைக்காரனிடம் போய்க் கேட்பது என்றும் எனக்குத் தெரியாது. ஒருமுறை இதன் ஆங்கிலப் பதத்தை கஷ்டப்பட்டு தேடிக் கண்டுபிடித்து “Do you have Palmyra Root?” என்று சோதனையோட்டம் விட்டுப் பார்த்தேன். கடைக்காரன் என்னை செவ்வாய்க் கிரகத்துவாசியாக சந்தேகித்து நோட்டம் விட்ட காட்சி இன்னும் என் மனதை விட்டு அகலவில்லை. கடைசியில் நான் ஓட்டம் பிடித்ததுதான் மிச்சம்.

என்னதான் ஹைப்பர் மார்க்கெட்டில் டிராலியைத் தள்ளிக் கொண்டு பழங்களை அள்ளிக் கொண்டு வந்தாலும் கூடைக்காரியை விளித்து, பேரம் பேசி, குறை குறையென்று குறைத்து அவளையும் டென்ஷனாக்கி குரைக்க வைத்து வாங்குவதில் உள்ள இன்பமே தனி.

“அஜ்மீரில் டூரிஸ்ட்” என்று கூறி வடநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் சென்ற நாகூர் சாபு ஒருவர், ஏதோ ஒரு மாநிலத்தில் புளி வாங்குவதற்கு தன் பண்டாரியை (சமையற்காரர்) கடைத்தெருவுக்கு அனுப்ப, பாஷை தெரியாததால் அவன் தன் சைகை மொழியில், விரலை வாயில் வைத்து; நாக்கைச் சப்புக் கொட்டி; கண்ணை இறுக மூடி; கோணங்கி சேஷ்டைகள் எல்லாம் செய்துக் காண்பித்து “புளி” யின் மகத்துவத்தை புரிய வைக்க முயன்ற கதை ஞாபகத்திற்கு வந்தது. இத்தனை சேஷ்டைகள் செய்தும் கடைக்காரன் புரிந்துக் கொள்ளாததால் கடைசியில் ‘புலி’ பிறாண்டுவதைப்போல் அவன் மூஞ்சிக்கு நேராக சைகை செய்ய, பண்டாரியை கடைக்காரன் நையப் புடைத்த கதையை நடிப்புடன் நூருல்அமீன் வாயால்தான் கேட்க வேண்டும். பண்டாரியை பொறுத்தவரையில் “புளி”, “புலி” எல்லாமே ஒன்றுதான் போலும்

ரசமிகு நுங்கு ,பனம்பழம், பதனீரைக் காட்டிலும் காய்ந்துபோன பனங்கிழங்கு மட்டும் ஏன் நம் மனதில் ஒரு தனியிடம் பிடித்து நிற்கிறது என்பது மட்டும் எனக்கு புரியாதப் புதிர்.

சிறுவனாய் இருந்த காலத்தில் புதன்கிழமையன்று திருமலைராயன்பட்டினம் தர்காவில் சென்று உறங்க வேண்டுமென்று நேர்த்திக்கடன் வைத்து உறவினர்கள் என்னை பட்டினம் அழைத்துச் செல்வார்கள். அந்த இரவு தர்கா முற்றத்தில் படுத்துறங்கிய பின்பு, மறுநாள் விடியற்காலை பட்டினத்திலிருந்து நடராஜா பஸ் சர்வீஸில் அதாவது கால்நடையாகவே வாஞ்சூர் வழியே நாகூர் திரும்ப வேண்டும். அந்த விடியற்காலை நடைபயணம் பசுமையான அனுபவம்.

பச்சைப் பசேலென்ற வயல்வெளி. இயற்கையின் விரிப்பு. அதிக போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலை. இளவெயில். அதே சமயம் குளுமையான காற்று. கூட்டமாக அரட்டை அடித்துக் கொண்டு காலார நடந்துவரும் வரும் அனுபவம். இவற்றை ஒருக்காலும் மறக்கவே முடியாது. இப்பொழுது அந்த பச்சைவெளி எல்லாம் அழிந்து விட்டிருந்தது. வழியெங்கும் ஒரே தொழிற்சாலைமயம்.

வரும் வழியில் பனைமரம் ஏறுபவர்களிடம் பயனி (பதனீர்) வாங்கிக் குடிப்போம். உண்மையான சுவையென்றால் அதுதான் சுவை. ‘ஆவின்’ பால் பூத்தில் கிடைக்கும் பதனீருக்கும் இதற்கும் நிறைய வித்தியாசம். வீட்டில் தயார் செய்யும் பயனி கொலுக்கொட்டையின் சுவையையும் இங்கு குறிப்பிடத்தான் வேண்டும்.

பனங்கிழங்கு தின்பதற்கு தங்கைகளுக்கும் எனக்கும் நடக்கும் போட்டியைவிட பனங்கிழங்கு நடுவில் இருக்கும் குருத்தினை தின்பதற்குத்தான் அதிகம் போட்டி நடைபெறும். வழுவழுவென்றிருக்கும் அந்த குருத்தின் நுனியை பதம் பார்த்து விட்டு, அதனை விசிறி போல் விரித்து “தொட்டில்” செய்தும் “பாய்” போன்று முடைந்தும் மகிழ்ந்த அனுபவம் என்னைப்போல் பலருக்கும் இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் இந்த “Nostalgic” பதிவு.

அப்துல் கையூம்

Advertisements
 

11 responses to “பனங்கிழங்கு

 1. FAROOKRAJA -NAGORE

  April 22, 2012 at 9:22 am

  நண்பரே திரு. அப்துல் கையும்.. எப்படி இப்படிஎல்லாம் உங்களால் யோசனை பண்ண முடிகிறது..இதை நான் படிக்கும்போது உண்மையாகவே நான் பழைய நினைவில் …… திருமலைராயன்பட்டினம் தர்காவில் சென்று உறங்க வேண்டுமென்று நேர்த்திக்கடன் வைத்து உறவினர்கள் என்னை பட்டினம் அழைத்துச் செல்வார்கள். அந்த இரவு தர்கா முற்றத்தில் படுத்துறங்கிய பின்பு, மறுநாள் விடியற்காலை பட்டினத்திலிருந்து நடராஜா பஸ் சர்வீஸில் அதாவது கால்நடையாகவே வாஞ்சூர் வழியே நாகூர் திரும்ப வேண்டும். அந்த விடியற்காலை நடைபயணம் பசுமையான அனுபவம். நிச்சயமாக.

  எப்படி ஐயா.. உனக்கு ……..PADITHAYN — RACITHAYN… ARYMAIYANA AUTOGRAPH…

   
 2. நாகூர் ரூமி

  April 22, 2012 at 3:40 pm

  அன்பு கையூம், ஆஹா அருமையான பதிவு. பனங்கிழங்கு பற்றி படித்ததும் என் மனம் கிழங்காகி கொஞ்சம் கடந்த காலத்தில் பதிந்து விட்டது. நாகூர் மார்க் ட்வைன் வாழ்க. இன்னும் பல கிழங்குகள் சாப்பிட என் வாழ்த்துக்கள்!

   
 3. Abdul Qaiyum

  April 22, 2012 at 11:22 pm

  வசிஷ்டர் வாயால் ப்ரம்மரிஷி பட்டம் வாங்கியது போலிருந்தது. ‘மார்க்’ போட்டமைக்கு நன்றி.

   
 4. Abdul Qaiyum

  April 22, 2012 at 11:34 pm

  பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. பழைய நினைவுகளை பகிர்ந்துக் கொள்வதில் ஒருவித பூரிப்பு ஏற்பட்டு விடுகிறது நண்பா!

   
 5. kabeer

  April 23, 2012 at 3:31 pm

  Good article. you for get to mention about pori vaangiyathu,nandu vaangiyathu, atharku manavidam vaankiyathu…..

   
 6. T.N.EMAJAN

  May 18, 2012 at 7:01 pm

  அது சரி , 101 புத்தகங்கள் எழுதிய என்னைப் பற்றிய விவரங்கள் நாகூர் பக்கத்தில் இல்லையே, ஏன். நானும் நாகூர்தான் –டி.என். இமாஜான்

   
 7. Abdul Qaiyum

  May 18, 2012 at 10:28 pm

  கீழ்க்கண்ட சுட்டியில் தங்களுடைய நூல்களைப் பற்றிய விவரம் இப்போதுதான் பார்த்தேன். மிகவும் சந்தோஷம். தாங்கள் நாகூர் என்ற தகவல் நான் அறிந்திருக்கவில்லை. தாங்கள் தனியாக வலைப்பதிவு ஏதாவது வைத்திருக்கிறீர்களா? தங்களைப் பற்றிய விவரங்கள் அறிய மேலும் ஆவலாக உள்ளேன். vapuchi@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

   
 8. sezhiyan R

  July 18, 2012 at 5:23 pm

  பனங்கிழங்க சாப்பிடனும்னும்கிற ஆசைய தூண்டிவிட்டிட்டீங்க,

  }}ஒரு கட்டுரையை பதிவுச் செய்தால் என்ன என்ற விபரீத எண்ணம் பாப்பாவூர் பேயாய் என்னை ஆட்டுவித்தது.{{

  கடைசிவரைக்கும் “பாப்பா”ஊரெதுனு சொல்லவே இல்லையே சார்..
  குறிபிட்டு சொல்லுற அளவுக்கு அந்தவூர் பேய்க்கு அப்படி என்ன தனிசிறப்பு…

   
 9. Abdul Qaiyum

  August 10, 2012 at 7:54 am

  தங்களைப் பற்றிய விவரங்களை என் பதிவில் நேற்று எழுதியிருக்கிறேன். பார்க்கவு. தங்களைப் பற்றிய மேலும் விவரங்களை அறிய ஆவல் கொண்டுள்ளேன்

   
 10. T.N.EMAJAN

  August 10, 2012 at 6:30 pm

  நான் சிங்கப்பூரில் வசிக்கிறேன்.தங்களின் தொலைபேசி தெரிவித்தால்,தொடர்பு கொள்கின்றேன்.நன்றி. டி.என்.இமாஜான்.

   
 11. Abdul Qaiyum

  August 10, 2012 at 10:09 pm

  Bahrain 00973-33331078

   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: