RSS

பொய் கூறும் நாகூர் ஹனீபா?

24 Apr

(நமக்கு உவப்பான ஒருவர் மீது யாராவது பழிசார்த்துச் சாடினால் நம்மால் சட்டென்று ஜீரணிக்க முடியாதுதான். இணைய தளத்தில் வலம் வரும் சில பதிவுகளை “Bull Shit” என்று ஒரேயடியாக ஒதுக்கவும் முடியவில்லை. ஏராளமான விஷமத்தனமான பதிவுகள் உலா வந்தாலும், நம்மைச் சிந்திக்கத் தூண்டும் சில விஷயங்களை “இது உண்மைதானா?” என்று ஆராய வேண்டியது நம் கடமையாகி விடுகிறது. இதுநாள்வரை நாம் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம் என்ற ஒரே காரணத்திற்காக ‘நான் எதையும் புதிதாக ஏற்கத் தயாரில்லை’ என்ற மனப்பான்மை பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒன்று. “எய்தவினிருக்க அம்பை நோவதேன்?” என்று கேட்கத் தோன்றுகிறது மனது. “கேப்பையில் நெய் வழிகிறதென்றால் கேட்பவனுக்கு எங்கே போச்சுது புத்தி?” என்று மறுகேள்வி கேட்கலாம். இக்கட்டுரையில் ரஸ்மின் விதைத்திருக்கும் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதா, இல்லையா என்ற முடிவை வாசகர்களுக்கே விட்டு விடுகிறேன் – அப்துல் கையூம்)

இஸ்லாமிய கீதம் என்ற பெயரில் நபி மீது பொய் கூறும் நாகூர் ஹனீபா!

இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இஸ்லாமிய கீதம் இசைப்பதில் பிரபலமானவர் நாகூர் ஈ.எம்.ஹனீபா இவருடைய பாடல்களுக்கு முஸ்லீம்களுக்கு மத்தியில் மட்டுமன்றி முஸ்லீம் அல்லாத மக்களுக்கு மத்தியிலும் பெரிய மவுசு உள்ளது.

ரமழான் காலத்தில் இலங்கையின் பல வானொலி மற்றும் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளின் ஹீரோ இவராகத் தான் இருப்பார். ஆனால் இவர் ராகம் போட்டு இசைக்கும் பாடல்கள் இஸ்லாத்தின் உண்மைக் கருத்தை இல்லாதொழிக்கும் அளவுக்கு ஆபத்தானவை என்பது பலருக்குத் தெரியாத உண்மையாகும் அதனால் இவர் பற்றிய தெளிவுக்காக சகோதரர் ஷம்சுல் லுஹா அவர்கள் எழுதிய இவ்வாக்கத்தை இங்கு வெளியிடுகின்றோம்.

ஒரு திரைப்படம் வெண் திரையில் ஓடத் துவங்கியதும் அதில் முதல் காட்சியாக இடம் பெறுவது தெய்வ வணக்கம் தான். அந்தப் படத்தின் தயாரிப்பாளருடைய குல தெய்வத்தைக் காட்டி, அதற்குப் பத்தி, சாம்பிராணி, குத்து விளக்கு வைபவ காட்சிகள் முதலில் இடம் பெற்ற பின்னர் தான் மற்ற காட்சிகள்துவங்கும். இதற்கு அடிப்படைக் காரணம் ஒரு காரியத்தின் ஆரம்பம் தெய்வ வழிபாட்டில் துவங்க வேண்டும்என்பது தான்.

திரையரங்குகளில் வெளியிடப்படும் திரைப்படங்கள் தங்கள் பக்தியை இப்படி வெளிப்படுத்துகின்றன என்றால், மதச் சார்பின்மையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் அரசு தொலைக்காட்சிகள், வானொலிகள் போன்றவை நம் நாட்டிலுள்ள மூன்று பெரிய மதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்வகையில் தத்தமது நிகழ்ச்சிகளைத் துவங்கும் முன் இந்து, முஸ்லிம், கிறித்தவப் பாடல்களை ஒளி, ஒலிபரப்புகின்றன.

இந்தப் பாடல்களில் இஸ்லாமிய சமுதாயத்தின் சார்பில் இடம் பெறும் இஸ்லாமிய (?) பாடகர் இன்னிசைமுரசு நாகூர் ஈ.எம். ஹனீபா ஆவார். இவரது புகழ் இந்தியா, இலங்கை மட்டுமல்லாது தமிழ் முஸ்லிம்கள் வாழும் இடங்களிலெல்லாம் கொடி கட்டிப் பறக்கின்றது.

மாற்று மத நண்பர்கள் கூட நம்மிடம் பேசும் போது, தான் இஸ்லாமிய மார்க்கத்தை நேசிக்கும் ஓர் இனியநேயர் என்பதை வெளிப்படுத்திக் காட்டுவதற்காக, “பாய்! நான் நாகூர் அனிபா பாடல்களை ரொம்பவும் விரும்பிக் கேட்பேன்” என்று கூறுவர்.

இதன் மூலம் அவர்களது இஸ்லாமிய விசுவாசத்தை எண்ணி நாம் மகிழ்வோம் என்பதற்காக மாற்று மதத்தவர்கள் பலர் இவ்வாறு கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம். அந்த அளவுக்கு பக்திப் பாடல்களில் முன்னணிப் பாடகராக நாகூர் ஹனீபா இன்றளவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

இரு பெருநாட்களில் ஈ.எம். ஹனிபா பாடல்கள்:

அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சி, வானொலி அலை வரிசைகள் இரு பெருநாட்களின் போது முஸ்லிம்களுக்காக ஈ.எம். ஹனீபாவின் பாடல்களை ஒலி, ஒளி பரப்பி தங்களது மதச் சார்பின்மை யைநிரூபித்து, இஸ்லாமிய நேயர்களின் வரவேற்பையும் பெற்று விடுகின்றார்கள். மற்றவர்களே இஸ்லாமியப்பாடல்களுக்கு இப்படி ஒரு முக்கியத்துவத்தைக் கொடுக்கும் போது, முஸ்லிம்கள் இந்த இஸ்லாமியப்பாடல்களில் தங்களது முத்திரையைப் பதிக்காமல், இசை முரசுவின் பாடலைக் கேட்டு தங்கள் ஈமானைப் புதுப்பிக்காமல் விடுவார்களா?

மார்க்கத்தில் மிக அழுத்தமான அளவுக்கு இஸ்லாமியப் பிடிப்புள்ள மக்கள் ரமளான் மாதத்தின் ஸஹர்நேரத்தில் பாங்கு, பயானுக்காக உள்ள ஒலி பெருக்கிகளில் இசை முரசின் பாடல்களை ஒலிபரப்பி முஸ்லிம்களைப் புல்லரிக்கச் செய்து விடுவார்கள்.

வெள்ளிக்கிழமையின் போது தங்கள் வீடுகளில் நாகூர் ஹனீபா பாடல்களை டேப் ரிக்கார்டர்களில் போட்டுக் கேட்டு, தங்கள் இஸ்லாமியப் பற்றுதலை வெளிக் காட்டும் முஸ்லிம்கள் ஏராளம் உள்ளனர்.

தங்கள் வீட்டில் நடக்கும் பெயர் சூட்டு விழா, கத்னா, பெண் குழந்தைகளுக்குக் காது குத்துதல், பூப்புனித நீராட்டு விழா மற்றும் கல்யாண வைபவங்களில் நாகூர் ஹனீபாவின் பாடல்களை அலற விட்டு தங்களது அபாரமான மார்க்க பக்தியை வெளிப்படுத்துகின்றனர்.

ஹனிபா பாடல்கள் மீது அப்பாவி மக்கள் தான் பக்தி கொண்டிருக்கின்றார்கள் என்றால் ஆலிம்பெருந்தகைகளும் இதற்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல. தமிழகம் மற்றும் இலங்கையின் பெரும் பெரும்மார்க்க மேதைகள் முதல் சாதாரண கடைநிலை ஆலிம்கள் வரை உரையாற்றும் மேடைகளில்சொற்பொழிவு துவங்கும் முன் நாகூர் ஹனீபாவின் பாடல்களை ஒலி பெருக்கிகளில் அலற விட்டு ஆனந்தம்அடைகின்றனர்.

நாகூர் ஹனீபா வெறும் கேஸட் வடிவில் மட்டுமல்லாது தனது மேடைக் கச்சேரிகள் மூலமும் தனக்கென தனிஇடத்தைப் பெற்றிருக்கின்றார்.

தமிழகத்து தர்ஹாக்களைப் பார்த்து வருவோம் என்று ஒரு பாடகர் பாடலில் தான் தர்ஹாக்களுக்குப் பயணம் செய்தார் என்றால், நாகூர் ஹனீபா தன் பாட்டுக் கச்சேரியுடன் நேரிலேயே அனைத்து தர்ஹாக்களுக்கும் பயணம் செய்திருக்கின்றார். தமிழகத்தில் அவரது பாதம் படாத, பாட்டுக் கச்சேரிநடக்காத எந்தவொரு பட்டி தொட்டியும் இல்லை என்ற அளவுக்கு தமிழகத்தின் தர்ஹா வரலாற்றில்பதிவாகியிருக்கின்றார்.

அந்தந்தப் பகுதிகளில் அடங்கியிருக்கும், பைசாவுக்குத் தேறாத அவ்லியாக்கள் கூட இவரது பாடல் வரிகளுக்குள் நுழைந்து அதன் மூலம் பிரபலம் அடைந்திருக்கின்றார்கள் என்றால் இவரது பாட்டின்மகிமையை நாம் என்னவென்று சொல்வது? இந்தப் பாடல்கள் மீது முஸ்லிம்கள் கொண்ட உண்மையானஇஸ்லாமிய (?) ஈடுபாட்டை என்னவென்று வர்ணிப்பது?

ஆலிம்கள் போதனையும், ஹனிபாவின் கீர்த்தனையும்:

தமிழகத்திலும், இலங்கையிலும் மீலாது விழாக்கள் நடைபெறும் போது அங்கு புகழ் பெற்ற ஆலிம் அறிஞர்களின் போதனை நடக்கும். அதன் பின் ஹனீபாவின் வெண்கலக் குரல் கீர்த்தனையும் இசைஆராதனையும் நடைபெறும்.

மீலாது விழா ஏற்பாடு செய்த விழாக் குழுவினர், கச்சேரி தொடங்கும் மகிழ்ச்சியில், அதுவரை அண்ணல்நபி (ஸல்) அவர்களைப் பற்றி ஆவேசமாகப் புகழ்ந்து பேசிய ஆலிம் பெருமக்களுக்கு வழிச் செலவுக்குப்பணம் கொடுக்கக் கூட மறந்து விடுவார்கள். இதன் எதிரொலியாக கச்சேரி நடக்கும் மேடைகளில் நாங்கள் பயானுக்கு வர மாட்டோம் என்று கூட அறிஞர் பெருமக்கள் முடிவெடுத்தார்கள் என்றால் இன்னிசை முரசின் ஆதிக்கம் எந்த அளவுக்கு முஸ்லிம்கள் மத்தியில் ஊடுறுவி இருக்கின்றது என்று தெரிந்துகொள்ளலாம்.

இந்த அளவுக்குப் பாமர முஸ்லிம்களுக்கு மத்தியில் தனது பாடல்களால் ஊடுறுவி இருக்கும் இவரது பாடல்கள் தமிழகத்து முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றால் மிகையல்ல!

தவ்ஹீதுவாதிகளின் இதயத்தில் இவருக்குக் கடுகளவு கூட இடமில்லை என்றாலும், இஸ்லாமிய பக்திப் பாடல்கள் என்ற பெயரில் தன் வீட்டில் இவரது பாடல் பதிவுகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் இஸ்லாமிய பாமரன் தனது ஈமானைப் பறி கொடுத்து விடாமல் பாதுகாப்பது ஒவ்வொரு ஏகத்துவவாதியின் கடமை என்பதற்காகவும், நபி (ஸல்) அவர்கள் மீது யார் பொய்யைப் பரப்பினாலும், அந்தப் பொய்யை, அந்தப் பொய்முகத்தினரை அடையாளம் காட்டுவது நமக்குக் கடமை என்ற அடிப்படையில் நமது ஆய்வுப் பார்வையை இங்கு படர விடுகின்றோம்.

காசுக்காக கடவுளைத் திட்டும் கவிஞர்கள்:

பொதுவாகக் கவிஞர்கள் காசுக்காக யாரையும் கடவுளாக்கத் தயங்க மாட்டார்கள். அந்தக் காசுக்காக கடவுளைத் திட்டவும் பயப்பட மாட்டார்கள். அவர்களுக்குக் கடவுளே காசு தான்.

அவனை அழைத்து வந்து ஆடடா ஆடு என்று ஆட விட்டுப் பார்த்திருப்பேன், வருவான், படுவான், பட்டதேபோதும் என்பான். பாவி அவன் பெண் குலத்தைப் படைக்காமல் இருந்திடுவான் என்று இந்தக் கவிஞன்கடவுளைப் பாவியாகச் சித்தரிக்கின்றான்.

கண்ணைப் படைத்து, பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே என்று இறைவனைக் கொடியவனாகக் கொண்டு வந்து நிறுத்துகின்றான். இதெல்லாம் கவிஞர்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தக் கவிஞர்கள் அனைவரும் கடவுள் நம்பிக்கையில் ஊறிப் போன பக்தர்கள் என்பது தான். இந்த ரகத்தில் உள்ளவர் தான் நாகூர் ஹனீபா.

இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லை என்று சொல்லுவதில்லை என்று ஒரு தட்டில் ஏகத்துவத்தை முழங்குவார். மறு தட்டில், அடியார்க்கு அருள் செய்யும் அம்மா, அழகான கடலோரம் வாழ்கின்ற பீமா என்றுஏகத்துவத்திற்கு வேட்டு வைப்பார்.

ஏகத்துவத்தை நிலைநாட்டும் கருத்துக்களை விட அதற்கு வேட்டு வைக்கும் கருத்துக்களைக் கொண்ட பாடல்களே அதிகம்.

நமனை விரட்ட மருந்தொன்று இருக்கின்றது நாகூர் தர்ஹாவிலே!

ஷாஹே மீரான் சஞ்சலம் தீர்க்கும் எங்கள் கஞ்ச ஷவாயே!

நீ எங்கே எங்கே ஷாகுல் மீரானே! உன் வாசல் தேடி வந்தேன் நாகூர் மீரானே!

என்று விஷம் கக்கும் வரிகளைக் கொண்ட இவருடைய பாடல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

நபி (ஸல்) அவர்களையும், முஹய்யித்தீன், ஷாகுல் ஹமீது ஆகியோரை ஒரு பக்கத்திலும், அண்ணா, கருணாநிதியை இன்னொரு பக்கத்திலும் கடவுளைப் போன்று சித்தரித்து மகிழ்வதுடன் மட்டும் நின்றுவிடாமல் நபி (ஸல்) அவர்கள் மீது பொய்யான செய்திகளை இட்டுக் கட்டி, தனது பாடல்களில்பாடியிருக்கின்றார்.

ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழைப் பாலகன் நோன்பு நோற்று, இறந்து விட்டான். அவனை ஒரு சாது வந்து உயிர்ப்பித்தார் என்று ஒரு பாடலில் பாடினார்.

பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை என்று ஏதோ ஒரு சம்பவத்தைத் தனது பாடலில் கூறினார்.

இவையெல்லாம் நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப்படாத செய்திகள் என்பதால் அவற்றை நாம் ஆராயத் தேவையில்லை. ஆனால் நபி (ஸல்) அவர்களைப் பற்றிய பொய்யான செய்திகளைத் தனது பாடல்களில் பாடுவதை நாம் அடையாளம் காட்டாமல் இருக்க முடியாது.

நபி (ஸல்) அவர்கள் தினந்தோறும் ஒரு வீட்டு வழியாக சென்று கொண்டிருந்தார்களாம். அவர்கள் அவ்வாறு செல்லும் போது அந்த வீட்டில் உள்ள மூதாட்டி நபி (ஸல்) அவர்கள் மீது குப்பையைக் கொட்டிக் கொண்டிருந்தாளாம். ஒரு நாள் குப்பையைக் கொட்டவில்லை. உடனே நபி (ஸல்)அவர்கள் அந்த மூதாட்டிக்கு என்ன ஆனது? என்று விசாரிக்கின்றார்கள். அவள் நோயுற்றிருக்கின்றாள் என்று தெரிய வருகின்றது. உடனே நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்மணியின் வீட்டுக்குச் சென்று அவளை நோய் விசாரிக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்களின் இந்தப் பெருந் தன்மையைக் கண்டு வியந்து, இப்படிப்பட்ட நல்ல பண்பாளர் மீதா நாம் குப்பையைக் கொட்டினோம் என்று வருந்தி இஸ்லாத்தில் இணைகின்றாள்.

இசை முரசு ஈ.எம். ஹனீபா இதயத்தை ஈர்த்து, இரக்கமுறச் செய்யும் வண்ணம் தன் பாட்டில் வடித்த சம்பவம் இது தான். சொல்வதற்குச் சுவையாகவும், கேட்பதற்கு ரசனையாகவும் உள்ள  இந்தச் செய்தி முஸ்லிம்களிடம் மட்டுமல்ல! மாற்று மத நண்பர்களும் இதை மேற்கோள் காட்டும் அளவுக்கு அந்தப் பாட்டில் இடம் பெற்றுள்ள இந்தக் கருத்து பரவியுள்ளது. இதை நபி (ஸல்) அவர்களின் வாழ்வின் நிகழ்ந்த ஒரு சிறப்பு நிகழ்வு என்று கருதி முஸ்லிம்கள் நடத்தும் விழாக்களில் வந்து சொற்பொழிவாற்றும் போது குறிப்பிடுகின்றனர்.

ஆனால் இப்படியொரு சம்பவம் நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்ததாக எந்தவொரு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் நூலிலும் இடம் பெறவில்லை. எனவே இது நபி (ஸல்) அவர்கள் மீது சொல்லப்படும் அப்பட்டமான பொய்யாகும்.

ஒரு நாள் மதீனா நகர்தனிலே…

என்று துவங்கும் ஒரு பாடல். அந்தப் பாடலின் கருத்து இது தான்.

ஒரு நாள் மஸ்ஜிதுந் நபவீயில் நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் அமர்ந்திருக்கும் போது, இறுதிநாள் வரப் போகின்றது? அதனால் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடுங்கள். என் மீது ஏதும் குறைஇருந்தாலும் அதைச் சொல்லுங்கள். அதை நான் நீக்கிக் கொள்கிறேன் என்று கூறினார்கள். அப்போது உக்காஷா என்ற நபித் தோழர் எழுந்து, தங்கள் மீது எனக்கு ஒரு குறை உள்ளது என்று கூறினார். உடனேநபித் தோழர்கள் அவர் மீது ஆவேசப் பட்டனர். நபி (ஸல்) அவர்கள் நபித் தோழர்களை அமைதிப் படுத்திவிட்டு, அந்தக் குறையைச் சொல்லுங்கள் என்று உக்காஷாவிடம் கூறுகின்றார்கள்.

பாலைவனத்தில் ஒட்டகத்தின் மீது தாங்கள் அமர்ந்திருக்கும் போது, நான் ஒட்டகத்தின் கயிற்றைப் பிடித்துக் கொண்டு நடந்து வந்தேன். நீங்கள் சாட்டையால் ஒட்டகத்தை அடிக்கும் போது சட்டென்று ஓர்அடி என் மீது விழுந்து விட்டது. அதற்குப் பதிலாக தங்களை நான் அடித்திட அனுமதி வேண்டும் என்று உக்காஷா கூறினார். எதிலும் நீதி தவறாத நபி (ஸல்) அவர்கள் அவரது கோரிக்கையை ஏற்றார்கள்.அப்போது உக்காஷா, என்னை அடித்த சாட்டை இங்கு இல்லை. அது தங்களின் வீட்டில் உள்ளது. எனது எண்ணம் நிறைவேற அதை எடுத்து வரச் சொல்லுங்கள் என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள்,பிலாலை அனுப்பி அதை எடுத்து வருமாறு கூறினார்கள்.

பிலால் (ரலி) அழுது கொண்டே நபி (ஸல்) அவர்களின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த ஃபாத்திமா(ரலி)யிடம் சபையில் நடந்ததைக் கூறினார்கள். உடனே ஃபாத்திமா (ரலி) அழுது, உடல் நலம் சரியில்லாதஎன் தந்தையார் இந்தத் தண்டனையை எப்படித் தாங்குவார்கள்? அதற்குப் பதிலாக எங்களை அடிக்கச்சொல்லுங்கள் என்றார். பெருமை நிறைந்த பாட்டனாருக்குப் பதிலாக எங்களை அடிக்கட்டும் என்று ஹஸனும், ஹுசைனும் கூறி விட்டு சாட்டையை எடுத்துக் கொண்டு சபைக்கு வந்தார்கள். சாட்டையை வாங்கி நபி (ஸல்) அவர்கள் உக்காஷாவிடம் கொடுத்தார்கள். அதை வாங்கிய உக்காஷா, என்னை நீங்கள் அடிக்கும் போது நான் சட்டையில்லாமல் இருந்தேன். எனவே நீங்களும் சட்டையைக் கழற்றுங்கள் என்றுகூறினார். அப்போதும் நபித்தோழர்கள் ஆவேசப்பட்டனர். நபி (ஸல்) அவர்கள் அமைதிப்படுத்தி விட்டு, தமதுசட்டையைக் கழற்றினார்கள். அப்போது உக்காஷா சாட்டையைத் தூக்கி எறிந்து விட்டு ஓடி வந்து,ஆவலுடன் நபி (ஸல்) அவர்களைத் தாவி அணைத்துக் கொண்டார். நுபுவ்வத் ஒளிரும் நபி (ஸல்) அவர்களின்முதுகில் தான் நினைத்தது போல் முத்தமிட்டார். உணர்ச்சி பொங்க மீண்டும் முத்தமிட்டார். நபி (ஸல்) அவர்கள், உக்காஷாவின் மனம் மகிழ, உமக்கு சொர்க்கம் உண்டு என்று கூறி துஆச் செய்தார்கள். சுற்றி நின்ற நபித் தோழர்கள் வாழ்த்து தெரிவிக்க, மஸ்ஜிதுந் நபவீ மகிழ்ச்சியில் ஆழ்ந்தது.

இவ்வாறாக ஒரு நீண்ட சம்பவத்தைத் தன்னுடைய கம்பீரமான குரலில் ஏற்ற, இறக்கத்துடன் நாகூர் ஹனீபா பாடுவதைக் கேட்கும் யாரும் அதில் லயித்து விடுவார்கள். நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்படும் அந்த நிகழ்ச்சியை எண்ணி, புல்லரித்து விடுவார்கள். இந்தச் சம்பவம்உண்மையானதா என்பதைப் பார்ப்போம்.

ஏறக்குறைய இது போன்ற ஒரு செய்தி தப்ரானியின் முஃஜமுல் கபீர் என்ற நூலில் 2676வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது பலவீனமான, இட்டுக் கட்டப்பட்டசெய்தியாகும்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் முன்இம் பின் இத்ரீஸ் பின் ஸினான் என்பவரைப் பொய்யர் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளார்கள்.

பொய்யர், ஹதீஸ்களை இட்டுக் கட்டக் கூடியவர் என்று மஜ்மஉஸ் ஸவாயிதில் ஹைஸமீ கூறுகின்றார்.

வஹப் என்பவர் மீது இவர் பொய் சொல்பவர் என்று அஹ்மத் இப்னு ஹம்பல் கூறுகின்றார். இப்னுல் மதீனி, அபூதாவூத், நஸயீ ஆகியோர் இவர் நம்பகமானவர் இல்லை என்று கூறுகின்றார்கள். இவர் ஹதீஸ்களில் மோசமானவர் என்று இமாம் புகாரி கூறுகின்றார். இவரை ஆதாரம் கொள்வது ஹலால் இல்லை என்று இப்னு ஹிப்பான் கூறுகின்றார். இவரும் இவரது தந்தையும் விடப்பட்டவர்கள் என்று தாரகுத்னீ கூறுகின்றார். (நூல்: இப்னுல் ஜவ்ஸீயின் அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன்)

எனவே இந்தச் செய்தி பலவீனமான, இட்டுக் கட்டப்பட்ட செய்தியாகும். இந்தச் செய்தியின் அடிப்படையில் இயற்றப்பட்ட நாகூர் ஹனீபா பாடலும் நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக் கட்டப்பட்ட ஒருசெய்தியை அடிப்படையாகக் கொண்ட பாடல் என்பதில் சந்தேகமில்லை.

எந்தத் தலைவர் மீதும் யாரும் எந்தச் சம்பவத்தையும் சொல்லி விட்டுப் போகலாம். அதைச் சொல்பவருக்கு அதனால் பெரிய அளவுக்குப் பாதிப்பு வந்து விடாது. ஆனால் அதே சமயம் நபி (ஸல்) அவர்கள் மீது, அவர்கள்சொல்லாததை, செய்யாததை, அங்கீகரிக்காததைச் சொன்னால் அவர் போய் சேருமிடம் நரகம் ஆகும்.இதை இந்த ஹதீஸ் தெளிவாக விளக்குகின்றது.

“என் மீது பொய் சொல்வ தென்பது வேறு யார் மீதும் பொய் சொல்வதைப் போன்றதல்ல. என் மீது வேண்டுமென்று பொய் சொல்பவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.

அறிவிப்பவர் : முகீரா (ரலி), நூல் : முஸ்லிம்.

நபி (ஸல்) அவர்கள் பெயரைப் பயன்படுத்தி அவர்கள் சொல்லாததைச் சொன்னதாகச் சொல்பவருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாகும்.

இந்த எச்சரிக்கையைத் தாங்கி நிற்கும் அறிவிப்புத் தொடர்கள் கிட்டத்தட்ட 72 வழிகளில் இடம்பெறுகின்றன. இந்த அடிப்படையில் இந்தச் செய்தி முதவாத்திர் என்ற தகுதியைப் பெற்று விடுகின்றது.முதவாதிர் என்றால் ஏராளமானவர்களால் ஒருமித்து அறிவிக்கப்படும் ஹதீஸ்களாகும்.

கேட்பதற்கு இனிய சம்பவமாக இருந்தாலும் அதை நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக் கட்டி கூறினால் அவ்வாறு கூறுபவர் செல்லுமிடம் நரகம் தான். அந்த அடிப்படையில் நாகூர் ஹனீபா தன்னுடைய பாடலுக்குச் சரியான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். அல்லது தான் பாடிய அந்தப் பாடல் தவறானது என்றுபகிரங்கமாக பிரகடனப் படுத்த வேண்டும்.

அவ்வாறு அவர் செய்ய முன் வரவில்லை என்றால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் எச்சரிக்கைப் படிநரகத்தில் ஓர் இடத்தை முன் பதிவு செய்து கொள்கின்றார் என்றே அர்த்தம்.

இந்த நாகூர் ஹனீபா மற்றும் இது போன்ற இஸ்லாமிய (?) பாடகர்களால் பாடப்படும் இறைவனுக்கு இணை கற்பிக்கும் பாடல்களையும், நபி (ஸல்) அவர்கள் மீது பொய்யுரைக்கும் பாடல்களையும் இஸ்லாத்தின் ஓர் அங்கமாக எண்ணி, கேட்டு ரசித்துக் கொண்டிருப்பவர்கள் இனியாவது திருந்த வேண்டும்.

நன்றி: ரஸ்மின் MISc – TUESDAY, FEBRUARY 21, 2012
கட்டுரை பெறப்பட்ட தளம்

Advertisements
 

3 responses to “பொய் கூறும் நாகூர் ஹனீபா?

 1. S.E.A.Mohamed Ali. "nidurali"

  April 25, 2012 at 4:53 am

  ஆரம்ப காலத்திலிருந்து நாகூர் ஹனீபா அண்ணன் தி. மு . க வில் இருந்தாலும் தனது இஸ்லாமிய கொள்கையை விட்டுக் கொடுக்காமல் ,போலி வேடம் போடாமல் இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிகையுடன் நபிகள் பெருமானார் அவர்களின் மீது எல்லையில்லா பாசம் கொண்டு நாயகப் பெருமானை பாடி
  புகழ்ந்து நன்மையடைத்து வருபவர். குயிலின் குரல் கேட்டு காக்காய் பொறாமை கொள்வது சரியல்ல. நாகூர் ஹனீபா அண்ணன் அவர்கள் ஒரு சரித்திரம் படைத்தவர்.பழகுவதற்க்கு இனியவர் சிம்மக் குரலுக்கு சொந்தக்காரர் அண்ணன் அவர்களுக்கு அல்லாஹ் நீடித்த வாழ்வு கொடுக்க அல்லாஹ்விடம் இறைஞ்சும் பலரில் நானும் ஒருவன்
  “நீடூர் சையீத் அவர்களின் திருமணத்திற்கு மாப்பிள்ளை தோழனாக நானும் A.K.S.அப்துஸ்ஸமது அண்ணனும் இருந்தோம் “-நாகூர் E.M.ஹனீபா பேச்சு

  மர்ஹும் நீடூர் சையீத் அவர்களின் தம்பி
  S.E.A. முஹம்மது அலி ஜின்னா
  Jazakkallahu Hairan
  Please see the video
  சயீத் நினைவு – நாகூர் E.M.ஹனீபா

  S.E.A. முஹம்மது அலி ஜின்னா
  Jazakkallahu ஹைரன்

   
 2. m.abdulnazer

  April 25, 2012 at 5:45 pm

  இந்த செய்தி முஸ்லிம் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் செய்தியாக , மக்களை பிரிக்கும் நோக்குடன் வெளிட்டகருத்துக்கள் என்று தெரிகின்றது.அன்பானவர்களே சிந்தனை செய்து செயல்படும்படி அன்பு வேண்டுகோள்….

   
 3. Abdul Qaiyum

  April 25, 2012 at 10:42 pm

  தாங்கள் ஹனீபா அண்ணன் மீது வைத்திருக்கும் அன்பை நினைத்து பெருமை படுகின்றேன்.

   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: