RSS

கம்பன் அவன் காதலன் (இரண்டாம் பாகம்)

27 May

கதர்ச் சட்டைக்காரன்

கதர்ச் சட்டைக்காரனாக நம் கன்னித் தமிழ் கலா ரசிகன் உலா வந்த நிலாக்காலம் அது.

இந்திய நாடு சுதந்திரக் காற்றை இஞ்சித்தும் சுவாசித்திராத நேரம்.

1940-ஆம் ஆண்டின் ஆரம்பக் கட்டத்தில் நாகூரில் வாழ்ந்த முஸ்லீம்களில் பெரும்பாலோர் முஸ்லீம் லீகில் இணைந்து சுதந்திரப் போராட்டத்திற்கு சூளுரைத்த காலம்.

பஞ்சம் தீர்க்கும் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் பச்சை கொடி ஏந்திய கட்சியில் பட்டாளமாய் சேர்ந்திருந்தார்கள்.

இந்திய தேசிய காங்கிரஸ் பூண்டிருந்த “ஒருங்கிணைந்த இந்தியா” என்ற கனவு நனவாகாது என்பது ஓரளவு புரிந்துப் போனது.

பெரும்பாலான நாகூர்வாசிகள் முஹம்மது அலி ஜின்னா அவர்களின் ஆதரவாளர்களாக மாறி இருந்தனர். முஸ்லீம்களுக்கு நலம் விளைவிக்கும் எனக் கருதி, பாகிஸ்தான் பிரிவினைக்கு முழுமூச்சாய் ஆதரவு தெரிவித்தனர். வெகுசிலரே மகாத்மா காந்தி மற்றும் மெளலானா அபுல் கலாம் ஆஜாத் அவர்களுக்கு ஆதரவு நல்க தங்களை தயார் படுத்தியிருந்தார்கள்.

“பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்ற கோஷம் வான்முட்டும் மினாராக்களில் முட்டி மோதி எதிரொலித்தன.

இந்திய தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டு கதர்ச்சட்டைக்காரராக மும்முரமாக வலம் வந்த இஸ்மாயீலை, ஏதோ வேற்றுக் கிரக அந்நியனாய் ஏற இறங்க பார்த்தனர்.

சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு எத்தகையது என்பதற்கு நேதாஜியின் தேசிய ராணுவத்தில் இருந்த முஸ்லீம்களின் எண்ணிக்கையே மாபெரும் சான்றாகும். 1973-ஆம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதில் நேதாஜியின் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்களின் பட்டியலை அறிவித்திருந்தது. அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸ்லீம்கள் இருந்தனர் என்ற தகவல் நம்மை தலைநிமிர வைக்கிறது.

திருச்சியில், ‘படே ஹஜ்ரத்’ என்று மரியாதையாக அழைக்கப்பட்ட மெளலவி செய்யது முர்தஜா அவர்கள் ‘கிலாபத்’ போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளில் முக்கியமானவர். இவர் ராஜாஜி, காந்திஜி, பண்டிட் ஜவஹர்லால் நேரு ஆகியோர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். பாலக்கரையில் இவர் நிறுவிய பள்ளிக்கூடத்தை இவரது மறைவுக்குப் பின் அரசாங்கமே ஏற்று “அரசாங்க இஸ்லாமிய பள்ளிக்கூடம்” என்று பெயர் மாற்றியது.

‘படே ஹஜ்ரத்’தின் நெருங்கிய நண்பரான ராஜாஜி அவர்கள் இதனை மீண்டும் “செய்யது முர்தஜா அரசு உயர் நிலைப்பள்ளி” என்று பெயர் மாற்றம் செய்து இப்பெரியாரை கெளரவித்தார். தமிழகத்தில் பாகிஸ்தான் என்ற தனிநாடு பிரிவினைக்கு ஆட்சேபனை தெரிவித்த முஸ்லீம் தலைவர்களுள் ‘படே ஹஜ்ரத்’ குறிப்பிடத் தக்கவர்.

செய்யத் முர்தஜா மீது அளப்பரிய அன்பும் மரியாதையும் வைத்திருந்தார் மு.மு.இஸ்மாயீல். 1949-ஆம் ஆண்டு இப்பெரியார் மறைந்தபோது சொல்லவொணா துக்கத்திற்கு ஆளானார் அவர்.

1945-ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தார் இஸ்மாயீல். குறும்பு தவழும் அரும்பு மீசை பருவத்தில் இவர் விரும்பி ஏற்ற பாடமோ கணிதம்.

இருபத்து நான்கு வயதே நிரம்பியிருந்த இளைஞரான அவர், மெளலானா அபுல் கலாம் ஆஜாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் எழுதினார். அபுல் கலாம் ஆஜாத்தை பற்றி அதிகம் தெரியாதவர்கள் எல்லாம் அவரைப் பற்றி நன்கு அறியக்கூடிய வாய்ப்பை அந்நூல் ஏற்படுத்தி தந்தது. (இந்நூலைப் பற்றிய மேலும் விவரங்களை பின்னர் பார்ப்போம்)

2.2.1946 தேதியன்று காந்தியடிகள் கடைசி முறையாக தமிழகம் வந்தபோது மு.மு.இஸ்மாயீலும் அவரைப் பார்ப்பதற்கு திருச்சி ஓடோடி வந்தார். காந்திஜியின் ஆத்மார்த்த சீடாராய் மு.மு.இஸ்மாயீல் மாறியிருந்த நேரம் அது.

இளைஞர் இஸ்மாயீலுக்கு காந்தியின் மீது மிகுந்த அபிமானமும், பிரியமும் ஏற்படக் காரணமாயிருந்த ஒரு மிக முக்கிய நபரை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். பேராசிரியர் கே.சுவாமிநாதன்.என்ற புகழ் பெற்ற காந்தியவாதியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தனிமனித ஒழுக்கத்தின் தன்னிகரில்லா மாந்தனாய்த் திகழ்ந்து, தொண்ணூறு வயதுக்குமேல் நிறைவான வாழ்வு வாழ்ந்தவர் இவர். மகாத்மா காந்தி நூல்களைத் தொகுத்தவர்.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் இஸ்மாயிலின் எழுத்தாற்றலும், இலக்கிய ஆர்வமும், சொற் திறனும் சுவாமிநாதன் அவர்களை மிகவும் ஈர்த்தது. தன் வளர்ப்புப் பிள்ளையாக கருதி இஸ்மாயீல் மீது பாசத்தைக் கொட்டி அவரது வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தார். சிறுவயதில் தாய் தந்தையரை இழந்த இஸ்மாயீலுக்கு கே.சுவாமிநாதன் அவர்களுடைய அன்பும் பரிவும் அளவற்ற ஆறுதல் தந்தது. அவரை தந்தை ஸ்தானத்தில் வைத்து போற்றினார். தன் இறுதிநாள் வரை தனது ஒவ்வொரு பேச்சிலும் தன்னை ஆளாக்கிய அந்த அற்புத மாந்தரை அவ்வப்போது அவர் நினைவுகூறத் தவறவேயில்லை.

ஒரு பேட்டியின் போது “தங்கள் வாழ்க்கையின் வெற்றிக்கு காரணம் எது?” என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் “கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் வெற்றிக்கு முக்கியக் காரணம். பேராசிரியர் கே.சுவாமிநாதன் போன்ற உத்தமர்கள் என்னை ஆதரித்ததும் ஒரு காரணம்” என்று கூறினார்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

என்ற வள்ளுவரின் வாக்குக்கேற்ப எந்நாளும் செய்ந்நன்றி மறவாத செயல் வீரராய்த் திகழ்ந்தார் இஸ்மாயீல்.

அவரது நினைவாக “பேராசிரியர் கே.சுவாமிநாதன் நினைவுப் பரிசு” என்ற ஒன்றை நிறுவினார். ஒவ்வொரு ஆண்டும் சென்னை கம்பன் கழகம் நடத்தும் விழாவில் அப்பரிசு (ரூ 20,000 ரொக்கம்) சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

[அப்பரிசு, ஜெயகாந்தன் (2008), சிவசங்கரி (2009), டிஜிபி திலகவதி (2010) பொற்கோ (2011) ஆகியோருக்கு வழங்கப்பட்டது]

நீதிபதி இஸ்மாயீல் அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி அவரது குடும்பத்தார்களும் “மு.மு.இஸ்மாயீல் நினைவுப்பரிசு” என்ற ஒன்றை அவரது மறைவுக்குப்பின் ஏற்படுத்தி (ரொக்கம் ரூ 10,000) ஆண்டுதோறும் சென்னை கம்பன் கழகம் வாயிலாக சாதனையாளர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

[அப்பரிசு, கவிஞர் ஈரோடு தமிழன்பன் (2008) மு,மேத்தா (2009),கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் (2010), அப்துல் காதர் (2011) ஆகியோருக்கு வழங்கப்பட்டது]

மாணவப் பருவத்தில் இஸ்மாயீலுக்கு தமிழ் மொழியின் மீது தணியாத தாகமும், திரு.வி.க, கல்கி, உ.வே.சாமிநாதய்யர் போன்ற தமிழார்வலர்கள் மீது மோகமும் ஏற்பட்டதற்கும் பேராசிரியர் அளித்த தூண்டுகோல்தான் உந்துசக்தியாக அமைந்தது.

குறிப்பாக, காந்தியச் சிந்தனைகள் பலவற்றை அவர் உள்வாங்கிக்கொண்டது பேராசிரியரிடமிருந்துதான். இஸ்மாயிலின் உறவினர்கள் எல்லோரும் அசைவம். ஆனால், பேராசிரியரின் காந்தியத் தாக்கம் இஸ்மாயிலை முழு சைவமாக மாற்றிவிட்டது.

இளம் வயதிலிருந்தே காந்தியின் “ஹரிஜன்’ இதழ்களை வால்யூம் வால்யூமாக பைண்ட் செய்து வைத்துக்கொண்டு தம் வாழ்நாளின் இறுதிவரை பாதுகாத்து வந்தார் இஸ்மாயில்.

மாணவப் பருவத்தில் இஸ்மாயீலை காந்தியவாதியாக ஆக்கிய பெருமை இரண்டு பேர்களைச் சாரும். ஒருவர் கம்பனடிப்பொடி சா. கணேசன். இன்னொருவர் பேராசிரியர் கே.சுவாமிநாதன்.

1936 முதல் தீவிர தேசிய போராட்டத்தில் பங்கேற்று வந்தவர் கம்பனடிப்பொடி சா. கணேசன் அவர்கள். 1941-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தொடங்கிய தனிநபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு பாதயாத்திரையாக தில்லிக்குப் பயணமாகி 66 நாள்களில் 586 மைல்களைக் கடந்ததும், இவர் உத்தரப்பிரதேச அலிபுரத்தில் சிறைவாசம் அனுபவித்ததும், பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுகள்.

காந்தியடிகளைப் போன்று, நான்கு முழக் கதர் வேட்டியையும், மேலுடையாய் ஒரு துண்டையுமே அணிந்து வந்தவர் கணேசன்.

இதுபோன்ற தலைசிறந்த மனிதர்களின் சகவாசத்தைப் பெற்றிருந்த இஸ்மாயீல், ஒரு பக்குவப்பட்ட மனிதராக, பழகுவதற்கு இனிமையானவராக, பண்பிலே குணசீலராக, பார்போற்றும் உத்தமராக உருவெடுத்தார்.

(இன்னும் வரும்)

முன் வரிசையில் சா.கணேசன், ராஜாஜி, காமராஜ்

கம்பனடிப்பொடி சா. கணேசன்

Advertisements
 

Tags: , , , ,

One response to “கம்பன் அவன் காதலன் (இரண்டாம் பாகம்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: