RSS

கம்பன் அவன் காதலன் (நான்காம் பாகம்)

11 Jun

இசையரசியும் இலக்கியச் செல்வரும் ….…………………………………………………………….   நீதிபதி இஸ்மாயீல் அவர்களுக்கு கர்நாடக இசையின் மீது ஓர் அபார ஈர்ப்பு இருந்ததை அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் நன்கறிவார்கள். ஓய்வு நேரத்தில் சங்கீதம் கேட்பது அவருக்கு பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்றாக இருந்தது.

இஸ்லாமியரான இஸ்மாயீலுக்கு கர்நாடக சங்கீதத்தின் மீது எப்படி ஏற்பட்டது இந்த இசையார்வம் என்று வியப்போருண்டு. பொதுவாகவே முஸ்லீம்களுக்கும் கர்நாடக இசைக்கும் ‘மலைக்கும் மடுவுக்கும் உள்ள தூரம்’ என்ற அபிப்பிராயம் பரவலாகவே நிலவி வருகிறது.

‘அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்?’ என்று வினவத் தோன்றும்.

நாகூருக்கும் கர்நாடக இசைக்கும் உள்ள நெருக்கம் இன்று நேற்று உண்டானதல்ல. இந்த உண்மையை முழுமையாக விளங்கியவர்கள் “ஆம்! அப்துல் காதருக்கும் அமாவசைக்கும் சம்பந்தம் உண்டு” என்று அறுதியிட்டு உறுதியாகச் சொல்வார்கள்.

நாகூரில் பிறந்த இஸ்மாயீல் அவர்களின் உள்ளத்தில் சிறுவயது முதலே இசையுணர்வு ஊற்றெடுத்தது என்பதில் ஆச்சரியம் இருக்க முடியாது. காரணம் நாகூருக்கும் கர்நாடக இசைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு காலங்காலமாய்த் தொடர்ந்து வருகின்ற ஒன்று.

நீதிபதி அவர்களின் இசையுணர்வை அலசுவதற்குமுன் நாகூருக்கும் கர்நாடக இசைக்கும் இடையே நிலவி வரும் பந்தத்தை ஒருமுறை ஆராய்ந்துப் பார்த்தல் நலம்.

“பதினாறு வயதினிலே” என்ற படத்தில் “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு” என்று தொடங்கும் பாடலில்

“கிட்டப்பாவின் பாட்டை கேட்டு சின்னப்பாவை நேரில் பார்த்தேன்
கொட்ட கொட்ட வருகுதம்மா சங்கீதமா பெருகுதம்மா”

பிரபலமான இவ்வரிகளை முணுமுணுத்திருக்காதவர்கள் யாரும் இருந்திருக்க முடியாது. யார் இந்த கிட்டப்பா?

கிட்டப்பா தன் குழுவினருடன்

நாடகத்துறையிலும், இசைத்துறையிலும் முடிசூடா மன்னராக கோலோச்சியவர் எஸ்.ஜி.கிட்டப்பா (1906–1933) என்பது ஊரறிந்த விஷயம். இவருக்கு குருவாக இருந்து இசையை கற்றுத் தந்தவர் நாகூர்க்காரர் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? எஸ்.ஜி.கிட்டப்பா அவர்கள் கே.பி.சுந்தரம்பாளின் கணவர் என்பது மற்றுமொரு சுவையான விஷயம்.

செங்கோட்டை திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த கங்காதர ஐயர் தன் புதல்வர்களாகிய காசி ஐயர், கிட்டப்பா, இருவரையும் நாகூர் தர்கா ஆஸ்தான வித்வானாக விளங்கிய உஸ்தாத் தாவுத் மியான் அவர்களிடம் இசை பயில அனுப்பி வைத்தார் என்ற உண்மை பலருக்கும் தெரிய நியாயமில்லை.

தாவூத் மியான்

உஸ்தாத் தாவூத் மியான் (இறப்பு: 1940), இந்துஸ்தானி மற்றும் கர்னாடக இசையில் பெரும் புலமை வாய்ந்தவர். இவரது தாத்தா உஸ்தாத் சோட்டு மியானிடமிருந்தும், நன்னு மியானிடமிருந்தும் இசையைக் கற்றுத் தேர்ந்தார். இவரது சகோதரர் உஸ்தாத் கவுசு மியானும் நாகூரில் புகழ்பெற்ற இசைக்கலைஞராக பெயர் பெற்று திகழ்ந்தார். உஸ்தாத் தாவுத் மியானிடம் பயிற்சி பெற்றதனால் கிட்டப்பாவின் பாடல்களில் சிற்சமயம் இந்துஸ்தானி சாயல் காணப்பட்டதாக விமர்சனம் செய்வோருண்டு.

உஸ்தாத் தாவுத் மியானின் இன்னொரு மாணவர் நாகூர் தர்கா வித்வான் எஸ்.எம்.ஏ.காதர் அவர்கள். கர்னாடக இசையுலகில் ஒரு நிரந்தர இடத்தை தனக்கென தக்க வைத்துக் கொண்டவர்களில் இவரும் ஒருவர். இவரது பாடலுக்கு குன்னக்குடி வைத்தியநாதன் வயலின் வாசித்திருக்கிறார். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் எஸ்.எம்.ஏ.காதர் அவர்களின் சங்கீத ஞானத்தைப் பற்றி கேள்வியுற்று ஆசி பெற்றுச் சென்றது இன்னொரு சுவையான செய்தி. ‘குடத்திலிட்ட விளக்காக’ சங்கீத மேதை எஸ்.எம்.ஏ.காதரின் பெருமை ஊருலகத்திற்கு தெரியாமல் போனது ஒரு துரதிருஷ்டமே.

எஸ்.எம்.ஏ.காதரும் இசைமணியும்

இசைவாணர் எஸ்.எம்.ஏ.காதர் அவர்களால் உருவாக்கப்பட்ட மாணவர்களில் முதன்மையான சீடர் “இசைமணி” எம்.எம்.யூசுப் அவர்கள். இவர் சென்னை அண்ணாமலை மன்றத்தில் ‘இசை மணி’ என்ற பட்டம் தந்து சிறப்பிக்கப் பெற்றார். அச்சமயம் இவருடன் அதே மேடையில் “இசைமணி” பட்டம் பெற்றவர்களில் சீர்காழி கோவிந்தராசனும் ஒருவர்.

இவ்வாறாக ‘அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும்’ நிறையவே பொருத்தங்கள் நிலவி வந்தன.

ஷெனாய் இசையும், நாதஸ்வர இசையும் ஒருங்கேற கேட்டு வளர்ந்த இஸ்மாயீல் அவர்களின் மனதில் இசையுணர்வு வேரூன்றி இருந்ததற்கு நாகூரின் மண்வாசனையும் ஒரு காரணமாக இருந்திருக்கக்கூடும்.

அதுமட்டுமல்லாது பொதுவாகவே நீதிபதிகளுக்கும் கர்நாடக இசைக்கும் ஓர் இணைபிரியாத பந்தம் தொன்றுதொட்டு தொடர்ந்து வருவது மறுக்க முடியாத இன்னொரு உண்மை. நீதிபதி இஸ்மாயீலும் இதற்கு விதிவிலக்கல்ல.

1962-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின்போது, உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த டி.எல்.வெங்கட்ராமய்யர் கர்நாடக இசைப்பாடல் பாட, அன்றைய பப்ளிக் பிராசிக்யூட்டர் வி.பி.ராமன் வயலின் வாசிக்க ஓர் அரிய இசை நிகழ்ச்சி அப்போது நடந்தேறியது. நீதிபதி டி.எல். வெங்கட்ராம ஐயர், இசைப் பேரரசி டி.கே. பட்டம்மாளுக்கும். முத்துசாமி தீட்சிதரின் கீர்த்தனைகளைக் கற்றுத் தந்த ஆசான் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

நீதிபதி இஸ்மாயீலுக்கு கர்நாடக இசையின் மீது ஒரு பிடித்தம் ஏற்பட்டதற்கு அவர் வளர்ந்த விதம், அவருடன் உறவாடிய வைணவப் பிராமணர்கள், அவரது தொழில்முறை சகாக்கள் – இவர்களும் ஒரு முக்கியக் காரணம் என்று கூறலாம்.

 முஸ்லீம் பிரமுகர்களில் நீதிபதி இஸ்மாயீல் ஒருவர் மட்டுமே கர்நாடக இசையின் மீதி அலாதியான பிரியம் வைத்திருந்தவர் என்று கூற இயலாது. டாக்டர் அப்துல் கலாமும் ஒரு நல்ல உதாரணம். டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு வீணை வாசிக்கவும் தெரியும்.

2002-ஆம் ஆண்டு, சென்னை மியூசிக் அகாதெமி இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கியபோது, உடல்நல குறைவால் அவ்விருதை அவர்கள் நேரே சென்று பெற முடியாத நிலையில், வீட்டிற்கு நேராகவே சென்று அவ்விருதை வழங்கியவர் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள்.

நீதிபதி இஸ்மாயீல் அவர்களைப் போலவே முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தீவிர ரசிகராவார்.

 இசையரசிக்கும், இலக்கியச் செல்வருக்கும் இடையே இருந்த பரஸ்பர உறவை ஒரு சில வார்த்தைகளுக்குள் அடக்கிவிட இயலாது.

எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் தேவதாசி குலத்தில் பிறந்தவர். தனது இனிஷியலாக, தான் பிறந்த ஊரையும், தன் தயார் பெயரையும் “எம்.எஸ்.” என்று இணைத்துக் கொண்டவர். சாதாரணமாக தந்தை பெயரையே இனிஷியலாக கொண்டு இயங்கும் சமூகத்தில் எம்.எஸ்.அவர்களின் செயல் புரட்சிகரமாக பேசப்பட்ட அதே சமயத்தில் அவரை சந்தேகக் கண்கொண்டும் உலகம் பார்த்தது.

தாயார் சண்முகவடிவு

“எம்.எஸ்.” என்பதன் விரிவாக்கம் – Madurai Shanmukavadivu – என்பதாகும். எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் புகழின் உச்சியில் இருந்தபோதும் கூட தன் தந்தையைப் பற்றிய முழுவிவரத்தை ஏனோ பகிரங்கமாக அறிவிக்காமலேயே இருந்தார். வெகுகாலம்வரை வெளியுலகத்துக்குத் தெரியாதவாறு இந்த ரகசியம் பரம ரகசியமாகவே அவரால் பாதுகாக்கப்பட்டு வந்தது. வெறும் வாயை மெல்பவர்களுக்கு அவல் கிடைத்தால் போதாதா? புகழ்பெற்ற பாடகர் மதுரை புஷ்பவனம் ஐயர்தான் அவரது தந்தை என்று பலரும் அனுமானித்து பலரும் பலமாதிரி பேசி வந்தனர்.

நீதிபதி இஸ்மாயீல் அவர்களின் வாயிலாகத்தான் அவரது தந்தை சுப்பிரமணிய ஐயரைப் பற்றிய விவரங்கள் வெளியுலகுக்கு பரவலாகத் தெரிய வந்தது.

சுப்புலட்சுமியின் தந்தைஅதற்கு முன்பு ஒருமுறை, அதாவது 1980-ஆம் ஆண்டு பத்திரிக்கைத் துறையில் பணியாற்றிய தன் உறவுக்காரப் பெண்ணுக்கு அளித்த பேட்டியில்தான் எம்,எஸ்.அவர்கள் முதன்முறையாக தன் தந்தையைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்தார். ஆனாலும் அந்த விவரங்கள் பொதுமக்களை பெருமளவு சென்று அடையவில்லை.

1990-ஆம் ஆண்டு, இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி கம்பராமாயணப் பாடல்களை இசைத்தட்டில் பதிவு செய்ய எண்ணினார். அதற்கான ஆயத்தங்களை அவர் மேற்கொண்டபோது அவர் கலந்தாலோசனை செய்தது நீதிபதி இஸ்மாயீல் அவர்களிடம்தான். இசையரசிக்கு இஸ்மாயில் சொன்ன யோசனை இதுதான். கம்பராமாயணப் பாடல்களை முதலில் மனனம் செய்து, அதன் பொருளுணர்ந்து அதன் பின்னர் பாடல் பதிவு செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொண்டார்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களும் ஒரு பவ்யமான சிஷ்யையைப் போன்று அவ்வப்போது கம்பராமாயணத்தைப் பற்றிய சந்தேகங்களையும் அதன் அருஞ்சொற்பொருளையும் அவ்வப்போது ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்துக் கொண்டார்.

நீதிபதி அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க கம்பராமாயணப் பாடல் பதிவின்போது இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் தன் கைவசம் பாடல் குறிப்பு ஏதுமின்றி மனனமாய் தப்புத் தடங்களின்றி சரளமாய் பதிவினை அரங்கேற்றினார் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

அதே 1990-ஆம் ஆண்டு “கம்பராமாயண பாடல் வெளியீட்டு விழா”வுக்கான ஆயத்தங்கள் தடபுடலாக நடந்தது. அவ்விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த நீதிபதி அவர்கள் இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு ஓர் இன்ப அதிர்ச்சி அளித்தார். யாரும் எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி அது.

தாம் நன்கறிந்திருந்த பி.எஸ்.சுப்பிரமணிய ஐயர் பற்றி நீண்ட நேரம் புகழ்ந்து பேசினார் நீதிபதி அவர்கள். பக்திமானாக இருந்த அவர் புகழ் பெற்ற வழக்கறிஞரும் கூட. இந்த பி.எஸ்.சுப்பிரமணிய ஐயர் வேறு யாருமல்ல. இசையரசின் தகப்பனார்தான். இந்த மேடையில் அவர் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. தந்தை மீது அளவற்ற அன்பு வைத்திருந்த எம்.எஸ்.அவர்கள் மனம் நெகிழ்ந்துப் போனார். தந்தையுடன் தான் கழித்த இளம்பிராய நினைவுகள் ஒவ்வொன்றும் அவரது நினைவில் பெருக்கெடுத்தன. இசையரசியின் தந்தையார் மறைந்தபோது அவருக்கு வெறும் பத்து வயதுதான் நிரம்பியிருந்தது. தந்தையைப் பற்றிய விவரங்களை இதுநாள்வரை பகிரங்கப்படுத்தாமலிருந்த எம்.எஸ்.அவர்களுக்கு தந்தை மீது அன்பும் பாசமும் இல்லாமலில்லை. நிறையவே இருந்தது.

எம்.எஸ்.அவர்களின் கணவர் கல்கி சதாசிவம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக அறிந்து வைத்திருந்த ஊடகவுலகம், எம்.எஸ். அவர்களின் தந்தையைப் பற்றிய விவரங்களை அன்றுதான் முழுமையாக அறிந்துக் கொண்டது.

தன் தகப்பனாரைப் பற்றிய சில சுவையான செய்திகளை நீதிபதி அவர்கள் மேடையில் பகிர்ந்தபோது இசையரசி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

அதைக்காட்டிலும் மேலும் ஓர் இன்ப அதிர்ச்சி அவருக்கு அந்த மேடையில் காத்திருந்தது. சொற்பொழிவின் இறுதியில் அவரது தகப்பனாரின் பெரிய உருவப்படத்தை பரிசாக அளித்து அவரை திக்குமுக்காட வைத்தார் நீதிபதி அவர்கள். “தன் வாழ்க்கையில் தான் பேரானந்தம் அடைந்த நாள் இது” என்று இசையரசி தன் சகாக்களிடம் இதுபற்றி பெருமை கொண்டாராம்.

நீதிபதி பரிசளித்த தன் தந்தையின் உருவப்படத்தை பின்னர் அவர் தன் வீட்டின் வரவேற்பறையில், வீணையுடன் அமர்ந்திருக்கும் தாயார் சண்முக வடிவு புகைப்படத்துக்கு இணையாக அதனை மாட்டி வைத்து போற்றி பாதுகாத்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

எம்.எஸ்.அவர்களின் வீட்டுக்கு வருபவர்கள் அந்த புகைப்படத்தைப் பார்த்து தந்தைக்கும் மகளுக்கும் இடையே இருந்த உருவ ஒற்றுமையை சிலாகித்து பேசுகையிலெல்லாம் அவர் ஆனந்தத்தில் திளைத்துப் போவார்.

இந்நிகழ்ச்சிக்குப்பின் நீதிபதி அவர்களின் மீது எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் கொண்டிருந்த மதிப்பும் மரியாதையும் பன்மடங்கு அதிகமானது என்பதை கூறவும் வேண்டுமோ?

கெளஸல்யா சுப்ரஜா ராமபூர்வா
ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட தரசார்ந்தூல கர்த்தவியம்
தைவ மாவஹ்நிகம்…

என்று தொடங்கும் வெங்கடேச சுப்ரபாதத்தை பாடிப் புகழ் பெற்றவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி என்பது எல்லோரும் தெரிந்து வைத்திருக்கும் செய்தி. இப்பாடலை இயற்றியவர் “பிரதிவாதி பயங்கரம்” என்ற பட்டப் பெயர் கொண்ட அண்ணங்காச்சாரியார் என்பவராவார். எம்.எஸ்,சுப்புலட்சுமியை புகழின் உச்சத்துக்கு கொண்டுச் சென்ற பாடல் இது.

அண்ணங்கராச்சாரியார் பெருமளவு மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த நபர் யாரென்றுச் சொன்னால் அவர் நீதிபதி இஸ்மாயில் அவர்கள்தான். இஸ்லாமியராக இருந்த போதிலும் ஹிந்து மத அன்பர்களின் அன்புக்கும் பாசத்திற்கும் இலக்கணமாகத் திகழ்ந்தார் நீதிபதி அவர்கள். இவருக்குக் கடிதங்கள் எழுதும்போது, “உலகம் போற்றும் உத்தம” என்று தொடங்கித்தான் கடிதம் எழுதுவாராம் அண்ணங்கராச்சாரியார்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களுக்கும் நீதிபதி இஸ்மாயில் அவர்களுக்குமிடையே ஏகப்பட்ட ஒற்றுமைகள் உண்டு. இருவருமே மூதறிஞர் ராஜாஜியுடன் நெருங்கிப் பழகியவர்கள்.

காந்தீயக் கொள்கை மற்றும் கம்பராமாயண ஆய்வு இவைகளினால் இஸ்மாயீலுக்கும் ராஜாஜிக்கும் தொடர்பு இருந்தது. நீதிபதி அவர்கள் எழுதிய “மௌலானா அபுல்கலாம் ஆசாத்” வாழ்க்கை வரலாற்று நூலுக்கு முன்னுரை தந்து பெருமைப்படுத்தியவர் மூதறிஞர் இராஜாஜி.

அதேபோன்று 1966-ஆம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி ஐ.நா. சபையில் உலக அமைதியை வலியுறுத்தி மூதறிஞர் ராஜாஜி எழுதிய ‘மே தி லார்ட் பர்கிவ் அவர்சின்ஸ்’ என்னும் ஆங்கிலப்பாடலையும், ” குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா” என்று தொடங்கும் தமிழ்ப்பாடலையும் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் ஐ.நா.சபையில் பாடி வரலாற்றுச் சாதனை நிகழ்த்தினார். இப்பாடல்களை எழுதியவரும் மூதறிஞர் ராஜாஜிதான்.

இருவருடைய மரணத்தின்போதும் ஒரு நிகழ்வுப் பொருத்தம் நடந்தது.

2005-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியபோது டிசம்பர் 26 நிகழ்ந்த சுனாமி பேரழிவில் உயிரிழந்த 8,000 பேர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேறியது. அதே மன்றத்தில் மறைந்த இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கும், மறைந்த இலக்கியச் செல்வர் இஸ்மாயீல் அவர்களுக்கும் ஒரு சேர இரங்கல் தீர்மானம் நிறைவேறப்பட்டது.

இருவரின் இறப்புக்கும் இடையில் இருந்த இடைவெளி நாட்கள் ஒரு மாதத்திற்கும் குறைவான நெருக்கத்தில் இருந்தது.

நீதிபதி இஸ்மாயீல் அவர்களின் இலக்கிய அறிவை இனிவரும் பதிவில் ஆழமாக ஆராய்வோம்.

– அப்துல் கையூம்

Advertisement
 

Tags: , , ,

2 responses to “கம்பன் அவன் காதலன் (நான்காம் பாகம்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: