RSS

நாகூர் ஈ.எம் ஹனீபாவை நினைத்து…

18 Jul

– by இன்ஸாப் சலாஹுதீன், கண்டி, இலங்கை

இறைவா உன்னைத் தேடுடுகிறேன்
அந்த ஏக்கத்திலேதான் பாடுகிறேன்.
அந்த ஏக்கத்திலேதான் பாடுகிறேன்…

அந்த கம்பீரமான காந்தக் குரல் செவிகளுக்குச் சமீபமாக இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத அக்குரலின் இனிமையும் ஆசுவாசமும் எல்லோர் மனதையும் பரவசப்படுத்தக் கூடியது தான். ஆறு அதன் பாட்டுக்கு ஓடுவது போல மிக இயல்பாக வந்து விழுகிறது அவர் குரல்.மூங்கில் பாடும் ராகம் போல இதயத்திலேயே தங்கி விடுகிறது அக் குரல்…

அவருடைய பாடல்களைக் கேட்டுக் கொண்டுதான் இதனை எழுதிக் கொண்டிருக்கிறேன். வரிகளின் எளிமையிலும் குரலின் இனிமையிலும் எத்தனை வசீகரம்!

எனக்குப் 10 வயதிருக்கும் என்று நினைக்கிறேன். என் பாட்டி ஒருவர் எப்போது நான் அவர் வீட்டுக்குச் சென்றாலும் வீட்டிலுள்ளவர்களை அழைத்து வைத்துக் கொண்டு என்னைப் பாடச் சொல்வார். ஈ.எம் ஹனீபாவின் பாடல்களையே அப்போது நான் பாடுவேன். ‘சொன்னால்’ என்பதை அவர் பாணியில் ‘ஷொன்னால்’ என உச்சரிக்கும்போது அவர் சிரிப்பது இன்னும் மங்கலாக நினைவிருக்கிறது.

பின்னாட்களில் அவரது பாடல்களால் தீவிரமாக ஆட்கொள்ளப் பட்டிருந்தேன். என் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட என் சகோதரி ஒருத்தி அவரது அதிகமான பாடல்களை எனக்கு ஒரு கொப்பியில் எழுதித் தந்தார். இன்றும் அதனைப் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

இஸ்லாமிய கீதம் என்பதற்கு வரைவிலக்கணமாகவே ஈ.எம் ஹனீபா அமைந்து விட்டார் என்று சொல்லும் அளவுக்கு தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் முஸ்லிம்களின் மனதில் அவருக்கு இடமிருக்கிறது.எல்லோரும் அவரது பாடல்களைக் கொண்டாடுகிறார்கள். மத ரீதியான வைபவங்களிலும் அவரது பாடல்களுக்கு இடமிருக்கின்றன. ஆனால் இசையையும் பாடலையும் ‘ஹராம்’ என வாதிடுபவர்கள் கூட அவற்றைச் சத்தமாக ஒலிக்கச் செய்து கேட்டுக் கொண்டிருப்பதுதான் என்னை எப்போதும் வியப்படையச் செய்யும் முரணாக இருக்கிறது.

1940களில் தொடங்கி 2006 வரை சுமார் 65 ஆண்டுகள் தொடர்ச்சியாக இயங்கியுள்ளார் ஹனீபா. இஸ்லாமிய கீத உலகின் சிகரத்திலே சக்கரவர்த்தியாக அவர் அமர்ந்திருக்கிறார். படித்தவர்களும் பாமரர்களும் அவரது பாடலுக்குச் செவிசாய்க்கின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பாளையத்தில் 1925 டிசம்பர் திங்கள் 25 ஆம் நாள் ஹனீபா அவர்கள் பிறந்தார்கள். இஸ்மாயில் முஹம்மது ஹனிபா என்பது இவரது பெயர். அப்பெயரைச் சுருக்கி இ.எம் ஹனிபா என அழைக்கப்பட்டார். தந்தையின் பூர்வீகம் நாகூர் என்பதால் பெயரோடு நாகூரும் சேர்ந்து கொண்டது. இசை உலகில் பிரபலமானவுடன் ‘இசை முரசு’ எனும் அடைமொழியும் அப்பெயரோடு இணைந்து கொண்டது.

ஈ.எம் ஹனீபாவுக்கு ஒரு அரசியல் பரிமாணம் இருப்பதனை அண்மையில்தான் நான் அறிந்து கொண்டேன். சமநிலைச் சமுதாயத்தில் வெளியான ஆளுநர் ஷாநவாஸின் கட்டுரையே அதற்கு வழிசெய்தது. ஹனீபா அவர்களுக்கு நேர்மையான ஒரு அரசியல் பக்கமும் இருக்கின்றது. கலைஞரையும் பேராசிரியர் அன்பழகனையும் அவர் அணைத்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தை முதல் தடவை பார்த்ததும் ஒரு கணம் ஆச்சரியப்பட்டேன். தி.மு.வின் வளர்ச்சிக்காக அவர் எவ்வளவோ பாடுபட்டிருக்கிறார்.

‘கடந்த டிசம்பர் 25 ஆம் நாளோடு அவருக்கு 86 வயது நிறைவடைந்துவிட்டது. 89 வயதான பேராசியர் அன்பழகன் தி.மு.கவின் பொதுச் செயளாளராக இருக்கிறார். 88 வயதான கலைஞர் தி.மு.கவின் தலைவராக இருக்கிறார்.8 7 வயதான ஹனீபா நாகூரில் தாம் கட்டி எழுப்பிய கலைஞர் இல்லத்தில் வெளிச்சம் குன்றிய ஓர் அறையில் ஒரு ஈசி கதிரையில் சாய்ந்தவாறு ஓய்வில் இருக்கிறார்.’

சிறு வயதிலேயே இவர் பாடத் தொடங்கிவிட்டார். தனது 15 ஆவது வயதிலே 1941 ஆம் ஆண்டு தனது முதல் இசைக் கச்சேரியை ஒரு திருமண நிகழ்விலே அவர் நடத்தினார். இத்தனை இருந்தும் எடுப்பான குரல் வாய்ந்த ஹனிபா அவர்கள் முறையாக சங்கீதம் கற்றவரல்ல என்ற செய்தி எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் ஆச்சரியமான செய்திதான். முறையாக சங்கீதம் கற்றிருந்தால் அதிகமாக சாதித்திருக்க முடியுமே என்று ஹனிபாவிடம் கேட்ட போது ‘முஸ்லிம்கள் கர்நாடக சங்கீதத்தை விரும்பிக் கேட்பதில்லை.அப்படி நான் முறையாக சங்கீதம் கற்றிருந்தால் இன்று இந்த அளவுக்கு மக்களிடம் புகழ் பெற்றிருக்க மாட்டேன். எனது சங்கீதத்தை மேட்டுக்குடி மக்கள் மட்டுமே கேட்டு ரசித்திருப்பார்கள். ஆனால் எனது குரலை இன்று தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதும் கேட்கின்றது. சாதாரண மக்கள் கூட எனது பாடல்களால் ஈர்க்கப்பட்டு ஒரு மக்கள் பாடகனாக விளங்குகிறேன்’ என்று பதில் சொன்னார்.

உண்மையில் ஹனிபாவின் பாடல்களின் வெற்றி இங்குதான் இருக்கின்றது. தமிழ் கூறும் நல்லுலகில் அவரது பாடல்களின் பிரதான வெற்றிக்கு எளிமையான வரிகளும் அழகிய குரலுமே பிரதான காரணம் எனச் சொல்லலாம். இலங்கைச் சூழலில் அண்மைக் காலங்களில் வெளியான இஸ்லாமியப் பாடல்களின் வெற்றியின்மைக்கு மேற்படிக் காரணங்களில் உள்ள போதாமைகளும் ஒரு காரணம் என இங்கு குறிப்பிடலாம்.

நாகூர் ஹனீபாவின் பாடல்கள் பிரபல்யமாவதற்கு புலவர் ஆபிதீன் முக்கிய பங்காற்றியிருக்கிறார். ஏனெனில் அவரது அதிகமான பாடல்களை அவரே எழுதியிருக்கிறார். புலவர் ஆப்தீனும் ஒரு பாடகராக இருந்தாலும் ஹனீபாவின் பாடல்களால் கவரப்பட்டு தான் பாடுவதை நிறுத்திக் கொண்டு ஹனீபாவுக்குப் பாடல் எழுதிக் கொடுத்தார். இந்த ‘நாகூர் இரட்டையர்கள்’ இஸ்லாமிய கீத உலகில் புதுப் புரட்சியை ஏற்படுத்தினார்கள்.

இறை தூதர் (ஸல்) அவர்களது சீராவைச் சொல்வதில் இவரது பாடல்கள் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளன. தூதர் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை அவை எப்போதும் நினைவில் வைத்திருக்க அப்பாடல்கள் துணை புரிந்திருக்கின்றன.

இவரது சில பாடல்களில் கருத்து முரண்பாடுகள் உள்ளன என்பதனை மறுக்க முடியாது. இருப்பினும் நமது மொத்தக் கவனத்தையும் அதன் பக்கம் திருப்பி நல்லவைகளை மறுக்க வேண்டிய அவசியம் இல்லை. நிச்சயம் இவரது பாடல்கள் சமூக, பண்பாட்டுத் தளத்தில் காத்திரமான பங்களிப்பைச் செய்திருக்கின்றன என்பதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மொத்தமாக நாகூர் ஹனீபாவின் இசைப் பாடல்களை நோக்குகின்ற போது அவை மக்கள் ரசனையின் நீண்ட இடைவெளியை நிரப்புவதற்கான பெரும் சாதனமாகப் பயணப்பட்ட அதே நேரம் கலாசாரப் பண்பாட்டுத் தளத்தில் முக்கிய அதிர்வுகளையும் செய்துள்ளது.

ஆரம்ப காலத்தில் இவரது பாடல்கள் ஹிந்திப் பாடல்களின் மெட்டில் அமைந்திருந்தாலும் காலப் போக்கில் தனக்கான இசைப் பாணியொன்றை அவர் அமைத்துக் கொள்வதில் வெற்றியடைந்தார்.

கடந்த காலங்களில் இஸ்லாமிய கீதங்கள் முறையான செவ்வியல் இசை மரபில் அமையாவிட்டாலும் ஏதோ ஒரு வகையில் அவை தமது இசைப் பங்களிப்பை வழங்கியுள்ளன.

கலாநிதி எம்.எஸ்.எம் அனஸ் கூறுவது போல ‘இஸ்லாமிய கீதத்தின் அல்லது முஸ்லிம் இசையின் கடந்த 75 வருட கால வரலாற்றை நோக்கினால் அது தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் மட்டுமல்லாது தென் கிழக்காசிய இசைக்கும் தமிழ் இசைக்கும் அது அதன் பங்கைச் செலுத்தியுள்ளது’

எல்லோருக்குள்ளும் இருக்கும் ஏகாந்தத்திற்கு இவரது பாடல்கள் அர்த்தத்தை வழங்கின. இதனால் இசை ரசனைக்கு ஒரு வடிகாலாகக் கூட அவற்றை அமைத்துக் கொண்டார்கள். அல்லாஹ்வைப் பற்றியும் நபியைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் அவரது பாடல்கள் அமைந்திருக்கின்றன. இதனால் மார்ககம் குறித்த ஒரு நினைவுபடுத்தலாயும் இவை இருந்ததாகக் கொள்ளலாம்.

எல்லாப் பாடல்களும் ஈர்ப்புடையதாய் இல்லாவிட்டாலும் மிக அதிகமான பாடல்கள் எல்லோர் மனதையும் தொட்டவை. பாடும் காலத்தில் அவர் கொண்டாடப்பட்டது போல இப்போது அவர் கொண்டாடப்படுவதில்லை. எல்லாக் கலைஞர்களதும் அந்திமப் பொழுது இப்படித்தான்.அவர்கள் ஒரு காலத்தில் எல்லோரையும் பேசவைக்கிறார்கள். பின் யாராலுமே பேசப்படாதவர்களாக மாறிவிடுகிறார்கள்.

ஈ.எம் ஹனீபா காலத்தால் மறக்கப்படாத ஒருவராக இருக்க அவரது பாடல்களே போதுமானது. அவரது குரல் கேட்க ஆரம்பித்துவிடும் போது சட்டென ஒரு புத்துணர்ச்சி இதயமெங்கும் பரவ ஆரம்பித்துவிடுகிறது. மூங்கில் பாடும் ராகம் போல என்றைக்கும் எவரையும் மகிழ்விக்கும் சக்தி அவரது குரலுக்கு இருக்கிறது. இதனால் இஸ்லாமிய கீதத்தின் சிகரத்தில் என்றைக்கும் அவர் அமர்ந்திருப்பார்.மே 2012 வைகறை இதழில் வெளியானது
நன்றி : இன்ஸாப் ஸலாஹுதீன்
Friday, May 11, 2012

Advertisements
 

Tags: , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: