RSS

“லெவ்வைக்கி மிஞ்சிய ஹராம்ஜாதா”

20 Jul

நாகூர் போன்ற கடலோரம் வாழும் முஸ்லீம்களுக்கிடையே இந்த பழமொழி அன்றாடச் சொல்வழக்கில் உள்ளது. பெரும்பாலோனோருக்கு இச் சொற்பதம் எந்த தருணத்தில் பயன்படுத்த வேண்டும் என்பது தெரியும். ஆனால் இதன் உள்ளர்த்தம் என்ன? எதனால் இப்பழமொழி வழக்கத்திற்கு வந்தது என்ற விவரம் தெரிந்திருக்க நியாயமில்லை.

“முந்திரிக்கொட்டை” அல்லது “அதிகப்பிரசங்கி” என்று நாம் சாதாரணமாக வருணிக்கப்படும் ஒருவரைத்தான் இந்த பழமொழியை பயன்படுத்தி ‘பாசத்தோடு'(?) அழைக்கிறார்கள்.

“மீறுபல்” என்ற சொற்பதம் இங்கு வழக்கில் உள்ளது. பீர்பல் தெரியும். அது என்ன மீறுபல்? வரிசையாக இருக்கும் பற்களுக்கு நடுவே சிலருக்கு சிங்கப்பல் ஒன்று முளைக்கும்.
கோரப்பல் எனப்படும் canine teeth – அதைத்தான் நாம் சிங்கப்பல் என்கிறோம். இந்த பல்லைத்தான் “மீறுபல்” என்ற பொருத்தமான இலக்கியத் தமிழில் இங்கு விளிக்கிறார்கள்.
சிங்கப்பல் சிலருக்கு அழகும் சேர்க்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. 70-களில் இந்திப்பட உலகில் பிரபலமாக இருந்த மெளஷ்மி சட்டர்ஜி இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

சான்றோர் சபையில் அர்த்தமுள்ள விவாதம் புரிகையில் யாராவது ஒருவர் அர்த்தமற்ற முறையில் அதிகப்பிரசங்கியாக ஒரு கருத்தினை எடுத்துரைப்பார். அல்லது நாம் ஒன்று
சொல்லி முடிப்பதற்கு முன்னரே அதை முழுதும் புரிந்துக்கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக ஏதாவது உளறுவார். அப்படிப்பட்டவரை “லெவ்வைக்கி மிஞ்சிய ஹராம்ஜாதா” என்று சாடுவது வழக்கம்.

“லெவ்வைக்கி மிஞ்சிய ஹராம்ஜாதா” – இப்பழமொழியின் விரிவாக்கத்தை இப்போது நாம் காண்போம். “லெப்பை” என்ற வார்த்தை மருவி நாளடைவில் “லெவ்வை” என்று ஆகி
விட்டது. “மிஞ்சிய” என்ற பதம் “மீறிய” என்ற அர்த்தத்தில் கையாளப்பட்டுள்ளது. “குருவுக்கு மிஞ்சிய சிஷ்யன்” என்று சொல்வதைப் போல. இன்னும் சொல்லப்போனால் “ஹராம்ஜாதா” என்ற பதம் மிகவும் அருவருக்கத்தக்கது. ஆங்கிலத்தில் அப்பட்டமாகச் சொல்ல வேண்டுமெனில் “Bastard” என்று சொல்ல வேண்டும். இந்த ஆங்கில வார்த்தையை
பயன்படுத்தினால் ‘வெட்டுக்குத்து’ நடக்கும். புரியாத மொழியில் சொல்வதினால் யாரும் ‘சீரியஸாக’ எடுத்துக் கொள்வதில்லை. “ஹராத்தில் பிறந்தவன்” “தவறான வழியில்
பிறந்தவன்” என்று இதற்கு பொருள் கொள்ளலாம். அதிகப்பிரசங்கித்தனமாக பேசிய ஒரே காரணத்திற்காக ஒருவரை இப்படிப்பட்ட பதத்தில் சாடி இழிவு படுத்துவது முறைதானா?
யோசித்துப் பார்க்கவேண்டிய ஒன்று.

(நல்ல வார்த்தைகளையே உரைக்க வேண்டும் என்ற நோக்கில் “நாசமத்துப் போ” என்ற தலைப்பில் திண்ணை இணைய இதழில் சில வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய
கட்டுரையை மீண்டும் “கடலோரம்” என்ற வலைப்பதிவில் ஒரு வாசக அன்பர் மீள்பதிவு செய்திருக்கிறார். அது உங்கள் பார்வைக்கு)

லெப்பை என்பவர் யார்? வர்த்தக சமூகத்தை சார்ந்தவர்கள் இவர்கள். 13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அரபு நாட்டிலிருந்து சோழமண்டலம் மற்றும் கடற்கரையோர பகுதியில் வந்து

குடியேறியவர்கள். லெப்பைக் என்ற வார்த்தையிலிருந்து வந்ததுதான் லெப்பை. லெப்பைக் என்றால் அரபு மொழியில் “:இதோ வந்துவிட்டேன்” என்று பொருள்.

“லெப்பைக், அல்லாஹும்ம லெப்பைக். லெப்பைக், லாஷரீக்கலக லெப்பைக்” என்ற வாக்கியத்தின் முதற்சொல்.

மக்கமா நகரத்தில், இறையில்ல வழிபாட்டின்போது. “இறைவா! உன் நாட்டப்படி இதோ நான் உன் இல்லத்தை தேடி வந்து விட்டேன்” என்று புனித யாத்ரீகர்கள் எழுப்பும் கோஷத்தின் சாராம்சம்.

பள்ளி வகுப்பில் வாத்தியார் வருகைப்பதிவு (Attendance) எடுப்பார். ஒவ்வொரு பெயராக அவர் வாசிக்கையில் மாணவர் எழுந்து நின்று “உள்ளேன் ஐயா” என்றோ “Present Sir” என்றோ உரக்கச் சொல்வார்கள்.

இறையில்ல சன்னிதானத்தில் “இதோ நான் வந்து விட்டேன்” என்று கொடுக்கப்படும் வருகைப்பதிவுதான் “லெப்பைக்” என்ற தல்பியா.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அனைவரும் லெப்பை என்ற கருத்து பொதுவாகவே நிலவுகிறது. அது தவறு. வேலூர், மேல்விஷாரம், ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் உருது மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களும் லெப்பை என்று அழைக்கப்படுகிறார்கள். அதற்கு மாறாக கீழக்கரை, காயல்பட்டினம், அதிராம்பட்டினம் போன்ற கடலோரப்  பகுதிகளில் வாழும் லெப்பைமார்கள் தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்கள்.

லெப்பைமார்களில் ஒருசாரார் அரேபியா, எமன், ஈரான் நாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும், இன்னொரு சாரார் எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள்
என்றும் சரித்திரம் சான்று பகர்கிறது.

லெப்பை என்றதும் என் நினைவுக்கு முதலில் வருவது, முதல் தமிழ் நாவலான “அசன்பே சரித்திரம்” எழுதிய பத்திரிக்கையாளரும், கல்வியாளரும், சமூக சேவையாளருமான
மு.கா.சித்திலெப்பை. அடுத்து உமர்கய்யாமின் “ரூபாய்யாத்” கவிதைகளை தமிழில் மொழி பெயர்த்த அப்துல் காதர் லெப்பை. அதைத் தொடர்ந்து 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த
அப்துல் காதிறு நெய்னா லெப்பை என்ற ஆலிம் புலவர்,

மேலும் கீரனூர் ஜாகிர் ராஜாவின் “கருத்த லெப்பை” நாவலில் வரும் கதாபாத்திரம் நெஞ்சில் நிலைத்து நிற்கிறது.

மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த இராணி மங்கம்மாள் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த “லெப்பைக் குடிகாடு” என்ற ஊரின் கதை நம் பதிவுக்கு மேலும் சுவையூட்டும்.
தஞ்சை மற்றும் இதர மாவட்டங்களைச் சார்ந்த ராவுத்தர்மார்கள் கூடியேறிய இவ்வூருக்கு ஏன் லெப்பைக்குடிகாடு என்ற பெயர் வந்தது என்று நம்மை மூளையைக் கசக்க வைக்கிறது. ‘லெப்பைக்’ என்ற தல்பியா தஸ்பீஹை அடிப்படையாகக் கொண்டு இவ்வூருக்கு லெப்பைகுடிக்காடு என பெயர் சூட்டினராம்.

லெப்பைமார்கள் என்றாலே பாத்திஹா ஓதும் மவ்லவி, ஹஸ்ரத்மார்களை குறிக்கும் வண்ணம் தவறான ஒரு கருத்தை சில மார்க்க இயக்கங்கள் பரப்பி வருவது வருத்தத்திற்குரியது. அரபு மொழியை கற்றுத்தரும் ஆசான் பணிகளை லெப்பைமார்கள் மேற்கொண்டிருந்தனர் என்பது உண்மை.

“லெவ்வெக்கி மிஞ்சிய ஹராம்ஜாதா” என்ற இந்த பழமொழி வழக்குத்தமிழில் வந்த காரணத்தை இப்போது ஆராய்வோம்.

ஒரு ஊரில் ஒரு லெப்பை இருந்தாராம். மாணவர்களுக்கு அரபுமொழி கற்றுக் கொடுப்பது அவரது ஆசிரியப் பணியாக இருந்தது. லெப்பை அவர்கள் அரபு மொழி அட்சரமான முதல்
எழுத்தை “அலீப்” என்று உரக்கச் சொல்லிக் கொடுப்பார். மாணவர்கள் அவரைத் தொடர்ந்து “அலீப்” என்று உரக்க வழிமொழிவார்கள். அடுத்து “பே” என்று சொல்ல, அடுத்து “தே” என்று
சொல்ல, ஆசானை அதுபோலவே மாணவர்கள் பின் தொடருவார்கள்.

இப்படிப்பட்ட மாணவர்களுக்கிடையே ஒரு “மீறுபல்லு” மணவன் ஒருவன் இருந்தான். ஆசான் “அலீப்” என்று சொல்லிக்கொடுக்க இவன் அதிகப்பிரசங்கியாக “பே” என்ற அடுத்த
அட்சரத்தை உச்சரிப்பான். இதுவே அந்த ‘முந்திரிக்கொட்டை’ மாணவனின் வழக்கமாக இருந்தது

இவனைத்தான் அந்த “லெவைக்கி மிஞ்சிய “ஹராம்ஜாதாவாக” உருவகப்படுத்த, இன்று நம் எல்லோர் வாயிலும் இந்த பழமொழி படாதபாடு படுகிறது.

இந்த மூன்று வார்த்தை பழமொழிக்கு இப்படியொரு மூச்சு முட்டும் விளக்கமா என்று வாசகர்கள் பெருமூச்சு விடுவதை என்னால் உணர முடிகிறது.

என்ன செய்வது? இனிமேலாவது இதுபோன்ற அருவருக்கத்தக்க வார்த்தைகளை நாம் தவிர்க்கப் பழகுவதே இப்பதிவின் நோக்கமேயன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே!.

லெப்பைமார்களுக்கு மட்டும்தான் பழமொழியா மற்றவர்களுக்கு கிடையாதா என்ற கேள்வி எழலாம். இதோ ராவுத்தர்களுக்காக ஒரு பழமொழி. “ராவுத்தரே கொக்கா பறக்கிறாராம்.
குதிரை கோதுமை ரொட்டி கேக்குதாம்”.

– அப்துல் கையூம்

 

Tags: ,

2 responses to ““லெவ்வைக்கி மிஞ்சிய ஹராம்ஜாதா”

  1. Abdul Rahim Maricar

    July 27, 2012 at 4:56 pm

    Really interesting and informative.I like it.
    Best Regards,
    AbdulRahim(Nagore)

     
  2. nagoreismail786

    December 2, 2013 at 10:54 pm

    பொறய பாக்குற மாறில இக்கிது

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: