RSS

நாகூர் ஹனிபாவின் வாரிசு யார்?

22 Jul


பள்ளிக்கூடம் தொடங்கி கல்லூரிவரை – ஐந்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடிக்கும்வரை -ஒன்றாகவே வளர்ந்து, ஒன்றாகவே படித்து இன்று நான்யாரோ, அவன் யாரோ என்று, தகவல் பரிமாற்றம் கூட இன்றி பிரிந்து வாழும் என் நண்பன் E.M.நெளசாத் அலி பற்றி தினகரன் வாரமஞ்சரியில் வெளிவந்த பேட்டியை என் வலைப்பதிவில் வெளியிடாமல் போனால் உண்மையில் நான் ஒரு நட்புக்கு துரோகம் செய்தவானாகி விடுவேன்.

இதற்கு ஒரு பிளாஷ்பேக் தேவைப்படுகிறது.

எல்லா பெற்றோர்களைப்போல் தன் பிள்ளையும் “டாஸ்… பூஸ்” என்று இங்கிலீசில் பேச வேண்டும் என்ற ஆங்கில மோகத்தில் என்னையும் நாகை பீச் ரோட்டில் இருந்த “Little Flower Kinder Garten” ஸ்கூலில் LKG வகுப்பில் சேர்த்தார்கள். படகு போன்ற ஸ்டுடி பெக்கர் வண்டி என்னையும் என் தம்பி தங்கைகளையும் சுமந்துச் செல்லும். “Born with Silver spoon in mouth” என்பார்களே – அது ஒரு நிலாக்காலம்.

LKGயும் படிச்சு, UKGயும் படிச்சு ரைம்ஸ் எல்லாம் தலை கீழாக மனப்பாடம் பண்ணியாச்சு. அப்புறம்….. மகன் மேலும் இங்கிலீசில் பிச்சு உதற வேண்டுமே..!

நாகூருக்கு அக்கம் பக்கத்து ஊரில் அப்போது கான்வென்ட் எதுவும் இல்லை. தஞ்சாவூரில் இருக்கும் Sacred Heart Convent-ல் கொண்டு போய் தள்ளி விட்டார்கள். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஹாஸ்டல் வாழ்க்கை. உப்புமாவில் புழு நெளியும். பூரிக்கு தொட்டுக்கொள்ள ரசம். (அது என்ன காம்பினேஷனோ தெரியாது). கோ-எஜுகேஷன் வேறு. கிறுஸ்துமஸ் தினத்தன்று பாலே டான்ஸுக்கு ஆங்கிலோ இந்திய ‘பம்பளிமாஸ்’ Joanna-தான் எனக்கு ஜோடி. அவளுடைய இடுப்பை பிடித்துக்கொண்டு நான்தான் ஆட வேண்டுமாம் மேரி சிஸ்டர் சொன்னார்கள்.

காலப்போக்கில் ஹாஸ்டல் வார்டன் புஷ்பா சிஸ்டர் முதல் ஹெட்மிஸ்ட்ரஸ் அல்போன்ஸா சிஸ்டர் வரை எல்லோருக்கும் நான்தான் Favourite Boy. சர்ச்சில் நடக்கும் Carol இசைக்கு நான்தான் Lead பாடகன். நாக்கின் கீழே அப்பத்தை பயபக்தியோடு வைத்து கரைய வைத்திருக்கிறேன். எனக்கு ஞானஸ்னானம் கூட செய்து வைத்தார்கள்.

“Our Father who art in heaven,
hallowed be Thy name.
Thy kingdom come.
Thy will be done on earth, as it is in heaven”

என்ற பிரார்த்தனை சொல்லிவிட்டுத்தான் காலைப்பொழுதையே தொடங்குவேன். அந்த அறியாப் பருவத்தில் இப்படித்தான் என் ஆரம்ப வாழ்க்கை ஓடிக்கொண்டு இருந்தது. ஐந்தாம் வகுப்பின் இறுதியில் என் பள்ளியிலிருந்து நாகூர், வேளாங்கண்ணி சுற்றுலா அழைத்துச் சென்றார்கள். வேளாங்கண்ணி மாதாகோயிலில் என்னென்ன வேண்டுதல் செய்ய வேண்டும் என்று கூட மனதில் முடிவு செய்து வைத்திருந்தேன்.

வேளாங்கண்ணி பிரார்த்தனையை முடித்து விட்டு நாகூருக்கும் அழைத்துச் சென்றார்கள். சிறிது நேரம் என் வீட்டிற்கும் செல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் என் வாழ்க்கையில் நேரான பாதைக்கு ஒரு திருப்பம் ஏற்பட்டது.

அப்பொழுது என் பர்ஸில் நான் மறைத்து வைத்திருந்த இரண்டு சமாச்சாரம் என் பாட்டிமா “அம்மாஜி” கண்ணில் பட்டுவிட்டது. ஒன்று வேளாங்கண்ணி மாதா படம். மற்றொன்று சிலுவை சுமந்த ஜபமாலை.

அவ்வளவுதான் ஹாஜிமாவாகிய என் பாட்டிமா கொதித்தெழுந்து கூப்பாடு போட்டு விட்டார்கள். என் தகப்பனாரை அழைத்து “கான்வென்ட் படிப்பு, கான்வென்ட் படிப்பு” என்று சொல்லி என் புள்ளையை கிறிஸ்துவனாக ஆக்கி விட்டாயே! போதும் இந்த படிப்பு” என்றுக் கூறி திட்டித் தீர்த்து விட்டார்கள். என் தகப்பனார் அப்படியே திகைத்துப் போய் நின்றுவிட்டார்.

“எதற்காக இவர்கள் இப்படி குதிக்கிறார்கள்?” என்று எனக்கு மட்டும் புரியவேயில்லை. நான் சுற்றுலாவை முடித்துக்கொண்டு கான்வென்ட்டுக்கும் திரும்ப வந்து விட்டேன்.

இந்த நிகழ்வை என் தகப்பனார், அவருக்கு மிகவும் நெருக்கமான இசைமுரசு நாகூர் ஹனிபாவிடம் சொல்ல, “இந்த வருடம் எனது நண்பர் பி.எஸ்.ஏ.ரஹ்மான் சென்னை சேத்துப்பட்டில் “கிரெஸெண்ட் பள்ளி” என்ற ஒன்றை ஆரம்பிக்க இருக்கிறார். அங்கு இஸ்லாமிய மார்க்கப் படிப்பும் சொல்லிக் கொடுக்கிறார்கள். என் மகனோடு உங்கள் மகனையும் அங்கு சேர்த்து விடுகிறேன்” என்று கூறி  என்னையும் நெளசாத் அலியையும் அங்கு போய் சேர்த்து விட்டார்.

நாங்கள்தான் First Batch. என்னையும். நெளசாத் அலியையும் சேர்த்து வெறும் 16 மாணவர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதுதான் அந்த பள்ளி. இன்று ஆலமரமாக கிளைவிட்டு பற்பல ஊர்களிலும் படர்ந்து இருப்பது மனதுக்கு நிறைவைத் தருகிறது. (பார்க்க: என் அன்பிற்கினிய ஆசான்)

என் வாழ்க்கையில் ஒரு நேரான திருப்பத்தை அமைத்துத் தந்த – ‘அத்தா’ என்று நான் அன்புடன் அழைக்கும் இசைமுரசு அவர்களை நான் வாழ்க்கையில் மறக்க இயலாது. அதன் பிறகு முறையான மார்க்க அறிவை பெற்று, அறியா வயதில் செய்த பிழைகளை பொறுத்தருள வேண்டி, சிறுவயதிலேயே பல்வேறு ஊர்களில் மீலாது விழாக்களில் Child Prodigy-யாக சொற்பொழிவாற்ற நேர்ந்ததற்கு உறுதுணையாக இருந்தது இசைமுரசு அவர்களின் வழிகாட்டலினால்தான் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

அவர் MLC-யாக இருந்த காலத்தில், விடுமுறை கழிந்து பள்ளிக்கூடம் செல்வதற்கு நானும் நெளசாத் அலியும் அத்தாவுடன்தான் காரில் பயணமாவோம். கார் மாமண்டூர் அல்லது மதுராங்கத்தில் நின்று உணவகத்தினுள் சாப்பிடச் செல்கையில் நாகூர் ஹனிபாவென்னும் Celebrity-யை கண்டதும் வியப்பு மேலிட எல்லோரும் புருவம் உயர்த்துவார்கள். அவரவர்கள் ஆச்சரியத்துடன் சைகையாலேயே பேசிக் கொள்வார்கள். கூட சென்றிருக்கும் எனக்கும் ஒரு இஞ்ச் உயர்ந்து விட்டதைப்போல பெருமை மேலிடும்.

எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் முதல் மாடியில் ஓரத்தில்தான் இசைமுரசு அவர்களின் அறை. பக்கத்து அறையிலிருந்து வடகரை எம்.எம்.பக்கர் போன்றவர்கள் இசைமுரசு அவர்களைச் சூழ்ந்துக் கொள்ள அரசியல் அரட்டை துவங்கிவிடும்.

பள்ளியில் பாட்டுப்போட்டி ஒன்று நடைபெற்றது. “ராமைய்யா வஸ்தாவய்யா” என்ற இந்திப்பாடல் மெட்டில் அமைந்த “இதுதான் உலகமய்யா! இதுதான் உலகமய்யா! பலவித கோலமய்யா! பலவித கோலமய்யா!” என்ற பாடலை நெளசாத் அலி பாட, “இருலோகம் போற்றும் இறைத்தூதராம்” என்ற நாகூர் ஹனிபாவின் பாடலை நான் பாட, நெளசாத்திற்கு முதல் பரிசு, எனக்கு இரண்டாம் பரிசு.

“ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்” “ஸலாத்துல்லாஹ் ஸலாமுல்லாஹ்” “ஆளும் இறையின் தூதர் நபி” போன்ற இசைமுரசுவின் பாடல்களுக்கு கோரஸ் கொடுத்த கோஷ்டியில் நானும். நெளசாத் அலியும் அடக்கம்.

இருந்தாலும் அத்தாவின் குரலை ஒப்பிட்டுப் பார்க்கையில் நெளசாத் அலிக்கு அந்த சாரீரம், உச்சஸ்தாயி, Base Voice – ஊஹூம் … (மனதில் பட்டதை பட்டவர்த்தனமாகச் சொல்லி விடுவது என்னுடைய கெட்ட வழக்கங்களில் ஒன்றாகி விட்டது)

அத்தாவுக்கு ஏனோ தன் மகன் இந்த துறைக்கு வரக்கூடாது என்ற எண்ணம் வேரூன்றி இருந்தது. தன்னளவுக்கு ஈடு கொடுக்க முடியாது என்ற அறிந்திருந்த காரணத்தால்கூட இருக்கலாம். இதற்கு அவர் காட்டிய எதிர்ப்பு ஒன்றல்ல இரண்டல்ல.

இந்தி இசையமைப்பாளர் நெளசாத் அவர்களின் மீது கொண்டிருந்த பேரன்பினால் அவனுக்கு இந்த பெயரைச் சூட்டினார் இசைமுரசு அவர்கள். தன் மகன் இசைத்துறைக்கு வரக்கூடாது என்ற நினைப்பு அப்போது வந்திருக்காது என்றுதான் நினைக்கிறேன். பிற்பாடு நெளசாத் பாடி அவர் காதால் கேட்டு விட்டாரோ என்னவோ எனக்குத் தெரியாது.

இசைத்துறையில், தான் பெற்ற கஷ்டங்களை தன் மகன் பெறக்கூடாது என்ற காரணம் இருப்பதாக நான் கருதவில்லை. இசைத்துறை மூலமாகத்தான் நாகூர் ஹனிபா பேரும், புகழும் செல்வமும், பதவியும் அடைந்தார். அதை அவரே நன்கறிவார்.

இன்று அந்த தடைகளை யெல்லாம் மீறி என் நண்பன் பாடகனாக வலம் வருகின்றான் என்றால் அது இறைவனின் நாட்டமாகத்தான் கொள்ள முடியும். “Man Proposes; God Disposes” என்று சொல்வார்களே. அது இதுதான் போலிருக்கிறது.

பள்ளிக்கூட வாழ்க்கையோடு எங்கள் நட்புறவு முடியவில்லை. அதன்பின் புதுக்கல்லூரியில் PUC-யின்போதும் ஒரே வகுப்பு, ஒரே ஹாஸ்டல் அறை. அதற்குப்பின் ஜமால் முகம்மது கல்லூரியிலும் பட்டப்படிப்பில் ஒன்றாக படிக்கக்கூடிய வாய்ப்பு. நெளசாத் அலி கிடார் வாசிக்க, நான் மேண்டலின் வாசிக்க, (சீனன்) செய்யிது அலி வாய்ப்பாட்டு பாட நாங்கள் கூடினால் இசைமயம்தான்.

“நாகூர் ஹனிபாவின் வாரிசு நான்தான்” என்று பெருமிதத்தோடு தினகரன் வாரமஞ்சரியில் என் நண்பனின் பேட்டி வெளியானதைப் பார்த்து நான் மட்டுமின்றி “வேண்டாம் உனக்கு இந்த வேண்டாத வேலை” என்று அறிவுரைத்த இசைமுரசு உட்பட மார்தட்டி பெருமை கொண்டிருப்பார் என்பதில் சற்றும் ஐயமில்லை. “கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்” என்பது உண்மைதான் போலும். நாகூர் ஹனிபாவை போல் ‘வெல்வெட்’ தொப்பியை சாய்வாக அணிந்துக்கொண்டு, ஆள்காட்டி விரலை மூக்கின்மேல் உயர்த்திக்கொண்டு, பாடலுக்கிடையே வாயருகில் கையை வைத்து வாத்தியக்காரர்களிடம் கிசுகிசுத்துக் கொண்டு, அவ்வப்போது மூக்கை உறிஞ்சிக்கொண்டு, பாடலின் முடிவில் கனைத்துக்கொண்டு, அடிக்கடி ‘விக்ஸ்’ மாத்திரைய சுவைத்துக் கொண்டு, அவரைப்போலவே பாவனைகள் செய்து மேடையேறி பாடும் பாடகர்களை வேண்டுமானால் “நாகூர் ஹனிபாவின் எதிரொலி”  என்றழைக்கலாம். ஆனால் “நாகூர் ஹனிபாவின் வாரிசு” என்று மார்தட்டிக் கொள்ளும் தகுதி நிச்சயம் நெளசாத் அலிக்குத்தான். அதில் என்ன சந்தேகம்?

– அப்துல் கையூம்

இதோ தினகரன் வாரமஞ்சரியில் (ஜூன் 17 2012) வெளிவந்திருக்கும் அந்த பேட்டி :

நாம் தலையாக இருக்க வேண்டுமே
தவிர வாலாகக் கூடாது

நாகூர் ஹனீபாவின் வாரிசு நான்தான் – நாகூர் ஹனீபா நெளசாத் அலி

இந்தப் பாடலை இஸ்லாமிய கீதம் என்று நாகூர் ஈ.எம்.ஹனீபா பாடும்போது பரவசப்படாத இதயங்களே கிடையா. எந்த மதத்தினரும் நெஞ்சுருகிப் பாடக்கூடியதும் எவரையும் தெய்வீக சக்தியுடன் கவர்ந்திழுக்கக் கூடியதுமான இந்தப் பாடலை ஹனீபாவைப் போலவே பாடுகிறார் அவருடைய வாரிசு நாகூர் ஈ.எம்.ஹனீபா நெளசாத் அலி. ஹனீபாவைப் போல் உரத்து உச்சஸ்தாயியில் பாடுவதற்கு எத்தனையோபேர் முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், நெளசாத் அலிக்குத்தான் அது வாய்த்திருக்கிறது.

“பட்டு மணல் தொட்டினிலே
பூமணக்கும் தென்றலிலே
கொட்டும் பனிக்குளிரினிலே
கடல் வழிக் கரையினிலே
உறங்குகின்றார் மன்னா
நாங்கள் கலங்குகிறோம் அண்ணா”

“என்று திராவிடக் கழக மேடைகளில் என் தந்தையார் பாடினால் கூடியிருப்பவர்களில் கண்ணீர் விடாதவர்களே கிடையாது” என்று மெய்சிலிர்க்கும் குரலில் பாடிக்காட்டி விளக்கம் தருகிறார் நெளசாத் அலி. ஈ.எம்.ஹனீபாவின் குரலை நேரில் கேட்பதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக இலங்கை வந்திருக்கிறார் ஹனீபாவின் புதல்வர். ஆங்கில இலக்கியத்தில் முதுமாணி பட்டம் பெற்ற நெளசாத் அலி, பாடுவதை சென்னையில் முழு நேரத்தொழிலாகக் கொண்டிருக்கிறார். எத்தனையோ வெளிநாட்டுப் பயணங்கள் கைகூடியும் இலங்கை மண்ணில் பாடிவிட வேண்டும் என்பது அவரின் வேட்கை.

“என் தந்தையாரும் இதே கொள்கையைக் கைக்கொண்டிருந்தார். இலங்கைக்கு வந்து பாடிவிட்டுத்தான் வேறு சக்சேரிகளில் கலந்து கொண்டார். நானும் அவரின் கொள்கையின்படியே வாழ்கிறேன். என் தந்தை நான் இந்தக் துறைக்கு வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். காரணம் அந்த அளவுக்கு அவர் இந்தத் துறையில் அனுபவப் பட்டு மனம் வாடியிருக்கிறார். ஆகவே அவருக்குத் தெரியாமலேயே நான் என்னை வளர்த்துக்கொண்டேன்.” என்றவரிடம், “நீங்களும் சரி உங்கள் தந்தையாரும் சரி இந்தளவுக்கு உரத்து உச்சஸ்தாயில் பாடுகிறீர்களே! இஃது எப்படி சாத்தியம்? என்றால்,

“அந்தக் காலத்தில் நாகூரில் பைத்துஸ் ஸபா நடத்துவார்கள். ஒலிபெருக்கி கிடையாது. உரத்துப் பாட வேண்டும். என் தந்தையார் அதிகமாக இவ்வாறான சபாக்களில் பாடியிருக்கிறார். அப்படியே தொடர்ந்தும் உரத்துப் பாடும் பழக்கம் வந்துவிட்டது.

என் தந்தையார் கொள்கைவாதி என்று சொன்னேனே… அவருக்குச் சினிமாவில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்தன. ஆனால் ஒரு நிபந்தனை விதித்தார்கள். அதாவது என் தந்தையாரை குமார் என்ற தமிழ்ப் பெயரில் பாடினால் வாய்ப்பு தருவதாகச் சொன்னார்கள். என் தந்தை மறுத்துவிட்டார்” என்று சொல்லும் நெளசாத்துக்கு இரண்டு திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு வந்திருக்கிறது என்ற மகிழ்ச்சியான தகவலையும் பகிர்ந்துகொள்கிறார். ஆனால் அவர் பெயர் மாற்றிக் கொள்ளவில்லை. கவியான இவர் இதுவரை சுமார் 40 பாடல்கள் வரை எழுதி இசையமைத்துப் பாடியிருக்கிறார் என்பது மகிழ்ச்சியான செய்தி.

“உங்கள் இலங்கை விஜய கனவு நிறைவேறியது எப்படி?”

“ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் பிரதித் தலைவர் ஹாபிஸ் நசீரும் என்னை இலங்கைக்கு அழைத்திருக்கிறார்கள். அதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டவர் நண்பர் மணவை அசோகன். திருகோணமலையில் அவர்கள் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சிகளில் பாடுகிறேன். இறை வணக்கப் பாடலுடன் இலங்கை மண்ணில் குரல் பதிக்கிறேன். எண்ணம் ஈடேறிவிட்டது. அடுத்த முறை என் இசைக்குழுவுடன் வந்து மேடைக் கச்சேரி நடத்துவேன். அதேநேரம் இனி வரும் வெளிநாட்டு அழைப்புக்களையும் ஏற்பேன்” என்று திருப்தியுடன் மகிழ்ச்சி பொங்க சொல்கிறார் நெளசாத் அலி.

“ஹனீபாவின் வாரிசு என்று சென்னையில் இன்னொருவர் பாடுகிறாராமே, உண்மையா?”

“ஆமாம் அப்படி பல பேர் சொல்லிக்கொள்வார்கள். இதுபற்றி நான் ஒரு முறை என் தந்தையாரிடம் சொன்னேன். ஏன்டா நான் கச்சேரி முடிந்து நேராக வீட்டுக்குத்தானே வருகிறேன், வேறெங்கும் போவதில்லையே! என்று சுரீர் என்று பதில் தந்தார். ஒரு முறை சென்னையில் ஒரு மேடையிலேயே அவர்களுக்குப் பதில் சொல்லியிருக்கிறேன்.

தந்தையின் குரலை எடுப்பதற்கு எத்தனையோபேர் முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் எடுபடவில்லை. எவர் வேண்டுமானாலும் பாடலாம் ஆனால், வாரிசு என்ற நிலைக்கு வரக்கூடாது. ஹனீபாவின் வாரிசு நான்தான்.” என்று அடித்துச் சொல்லும் நெளசாத் அடுத்தடுத்த பயணங்களில் இதனை நிரூபிப்பேன் என்கிறார்.

தற்போதைக்குக் கொள்கைப் பாடல்களை பாடுவதுடன் இஸ்லாமிய கச்சேரிகளையும் நடத்தி வரும் நெளசாத் சுயமாக இயற்றிய தத்துவப் பாடல்களையும் பாடி வருகிறார். அங்கீகாரத்திற்கு அவசரப்படாதவன். வெற்றிகள் தேடி வரும். அதற்குப் பொறுமை வேண்டும்” என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் நெளசாத். அவருடன் 00919994023768 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

விசு கருணாநிதி

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகளின் ஒன்று கூடலின் போது இசை விருந்தளித்த நாகூர் ஈ.எம். ஹனீபாவின் புதல்வர் நவ்ஷாத் அலியுடன் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் உரையாடுகிறார்.

நன்றி : தினகரன் வாரமஞ்சரி                                                                        தொடர்புடைய சுட்டி: நாகூர் ஹனிபா – அவர் ஒரு சரித்திரம் 

 

Tags: , , , , ,

3 responses to “நாகூர் ஹனிபாவின் வாரிசு யார்?

  1. S.E.A.Mohamed Ali. "nidurali"

    July 22, 2012 at 6:34 am

    ஆஹா! அருமை. இதனை படிக்கும்போது நாமும் அந்த நிகழ்வோடு ஒன்றிப்போதல் போன்ற ஓர் உணர்வு உண்டாகின்றது. ஹனிபா அண்ணன் அவர்களின் வாரிசு பாடகராக மட்டுமில்லாமல் சிறந்த கல்வியையும் பெற்றவராக உள்ளார் என்பதை அறிய மிகவும் மகிழ்வாக உள்ளது.அனைத்துப் புகழும் இறைவனுக்கே. எத்தனை விதமாக தந்தை உதவினாலும் தன் முயற்சி இல்லாமல் ஒன்றும் முடியாது. Prophet said, “Tie your camel first, then put your trust in Allah” (At-Tirmidhi). அந்த வகையில் அண்ணன் நெளசாத் அலி அவர்களது முயற்சி போற்றுதற்குரியது. ஹனிபா அண்ணன் அவர்களுடன் எங்கள் குடும்பம் மிகவும் நெருக்கம்தான் (நீடூர் அ.மு.சயீத் நூல் வெளியீட்டு விழாவில் – நாகூர் ஹாஜி, E.M.ஹனீபா அவர்கள் பேச்சு.
    “நீடூர் சையீத் அவர்களின் திருமணத்திற்கு மாப்பிள்ளை தோழனாக நானும் A.K.S.அப்துஸ்ஸமது அண்ணனும் இருந்தோம்” http://www.youtube.com/watch?v=OEO5VoBdnrA)-நாகூர் E.M.ஹனீபா இருப்பினும் அவர்கள் மகனாரின் சிறப்பை அறிய இந்த ‘நாகூர் ஹனிபாவின் வாரிசு யார்?’ மிகவும் உதவுகின்றது.

    நீடூர் அ.மு.சயீத் எனது உடன் பிறந்த சகோதரர்
    S.E.A. முஹம்மது அலி ஜின்னா

    \இதனை நீங்கள் மட்டும் வைத்துக் கொள்வது சரியல்ல. அதனால் நானும் எடுத்துக் கொண்டு மற்றவருக்கு கொடுக்கின்றேன்

     
  2. S.E.A.Mohamed Ali. "nidurali"

    July 22, 2012 at 7:00 am

    வாரிசின் பாடலையும் சேர்திருக்கலாம்
    Please visit
    நாகூர் ஹனிபாவின் வாரிசு யார்?
    http://nidurseasons.blogspot.in/2012/07/blog-post_21.html

     
  3. ஆபிதீன்

    July 22, 2012 at 3:42 pm

    அன்பின் கய்யூம்,நல்ல பதிவு. நண்பர் நௌஷாத்தைப் பார்த்து எத்தனை வருடங்களாகிவிட்டன! தொடர்புகொண்டால் என் சலாத்தைத் தெரியப்படுத்துங்கள்.
    ஆபிதீன்

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: