இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் இறந்தவர்களுக்காக சென்னையில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபம்
இந்த ஈத்பெருநாளன்று நாகூர் தமிழ் சங்கத்தில் எனது பால்ய நண்பர் கவிஞர் காதர் ஒலியை சந்தித்தபோது “வைரத்தூறல்” என்ற அவரது கவிதை நூலை எனக்கு பரிசாக அளித்தார். புத்தகத்தைப் புரட்டியதும் அவர் வடித்த “தமிழ்ப்போர்” என்ற கவிதைதான் முதலில் என் கண்ணில் பட்டது. தமிழை “போர்” என்று வர்ணிப்பவர்கள் இந்த தமிழ்ப்போரை வாசித்தால் தமிழுணர்வு பெறுவது நிச்சயம்.
இந்தியென்ற நந்தியை இந்நிலத்தில் மேயவிட,
இறுமாப்பாய் மேற்கொண்ட முயற்சியை
செந்தமிழர் சிங்கங்கள் செங்குருதி சிந்தியே
சிறைச்சாலை சென்று அதை ஒடுக்கினரே!
வெந்தணலில் வதங்கியே வெட்டுப்பட்டு விம்மியே
வெஞ்சமரை கண்டபோதும் அஞ்சவில்லை!
கந்தகமாய் தான்பொங்கி கெடுமதி கும்பல்களை
கரியாக்கும் வரையில் கண்கள் துஞ்சவில்லை!
பாக்குளிக்கும் தமிழகத்தில் தீக்குளித்து தமிழ்காத்த
பாய்மரக் கப்பல்களை மறக்குமோ?
நாக்குளிக்கும் தேனாறாம் நறுந்தமிழாம் தாய்மொழிபோல்
நலம் சேர்க்கும் அமுதமினி சுரக்குமோ?
பூக்குவிக்கும் வாசனையை புறம்போக்கு மலவண்டு
புறக்கணிக்க நினைப்பது நடக்குமோ?
தூக்குமேடை போனாலும் தமிழ்வாழ்க! தமிழ்வாழ்க!
தாக்குதல் நாயென்ன கடிக்குமோ?
தார்பூசி எழுத்தழித்து தண்டவாளத்தில் தலைசாய்த்து
தன்னைத் தியாகம் செய்தவர்கள் கொஞ்சமா!
ஊர்கூடி மறியல்செய்து உடம்பெல்லாம் வடுபெற்ற
உத்தமர்க்கு இங்கென்ன பஞ்சமா!
வேர்அறுக்க நடிக்கின்ற வடக்கிற்கு தலையாட்டும்
வேடதாரி வேடர்களே திருந்துவீர்!
சீர்மிகுந்த தமிழன்னை சினத்தோடு வெகுண்டெழுந்தால்
சமுதாய வாழ்க்கையிலே வருந்துவீர்!
காதர் ஒலியின் இந்த கவிதையைப் படித்தபோது பல்வேறு சிந்தனைகள் என் மனக்கண்முன் நிழலாடியது.
1960-களில் இக்கவிதையை நான் படிக்க நேர்ந்திருந்தால் அப்போது என் இந்தி எதிர்ப்பு உணர்வுக்கு இது குமைஞ்சான் போட பயன்பட்டிருக்கும். இக்கால கட்டத்தில் இக்கவிதை ஏனோ எனக்குள் மனமாற்றம் எதுவும் உண்டாக்கவில்லை.
வட இந்தியர்களும், மலையாளிகளும் தமிழகத்தில் தொழில் புரிந்து வெற்றியடைந்து “ஓஹோ” என்று வாழ்ந்துவரும் பட்சத்தில் தமிழர்கள் அந்த அளவுக்கு வடமாநிலத்தில் பிரகாசிக்க முடியாமல் போனதற்கு நமது தமிழினத் தலைவர்கள்தான் காரணம் என்பது என் தாழ்மையான கருத்து.
சிறுவனாக இருந்த காலத்தில் “இந்தி ஒழிக” என்று கோஷம் போட்டுக் கொண்டு, அவர்களோடு நாகூர் தபால்நிலையம் மற்றும் ரயில்நிலையத்திற்கு ஊர்வலமாக படையெடுத்துச் சென்று, பலகையில் எழுதப் பட்டிருக்கும் இந்தி எழுத்துக்களை தார்பூசி அழிப்பதை நேரில் சென்று வேடிக்கை பார்த்திருக்கிறேன்.
சராசரி தமிழனால் இன்று வடமாநிலங்களிலுக்கு வேலைநிமித்தம் அல்லது ‘ஜாலியாக” சுற்றுலா செல்லுகையில் மொழி தெரியாமல் அல்லல் பட்டுத் தவிப்பதை நாம் பரவலாக காண முடிகிறது.
திராவிடத் தலைவர்கள் ஆட்சியைப் பிடிப்பதற்காக நம்மை பிறமொழிகள் கற்கா வண்ணம் நம்மை மூளைச்சலவை செய்து அவர்கள் மட்டும் ஆதாயம் தேடிக் கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆம். அவர்கள் பேரன்களையும், வாரிசுகளையும் ஆசைதீர இந்தி படிக்க வைத்து மத்திய மந்திரி ஆக்கி காசு பார்த்தார்கள் என்பதை யாரால் மறுக்க முடியும்?
“தயாநிதி மாறனை ஏன் மத்திய மந்திரி பதவிக்கு சிபாரிசு செய்தீர்கள்?” என்று கலைஞரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?
“தயாநிதி இந்தி நன்றாக பேசுவான்” என்பதுதான். தமிழக மக்களை எந்த அளவுக்கு மடையர்களாக்கி இவர்கள் மகிழ்ந்தார்கள் என்று நினைத்துப் பாருங்கள்.
“இவுங்க வாரிசுங்க எல்லாம் இந்தி படிக்கலாம் ஆனா கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்கிற புள்ளை இந்தி படிக்கிறதுக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது. அப்படித்தானே?” என்று யாரிடம் சென்று முறையிடுவது?
“ஓடி வந்த இந்திப்பெண்ணே கேள் – நீ
தேடி வந்த கோழையுள்ள நாடு இது அல்லவே!”
என்று நாகூர் ஹனீபாவை ஒவ்வொரு மேடையாக கத்திக் கத்தி பாட வைத்து, அவரது காதுகள் ஜவ்வை கிழிய வைத்து செவிடராக்கிய இவர்களை எந்தக் கூண்டில் நிறுத்தி வைத்து கேள்வி கேட்பது?
வன்முறை, தீவைப்பு, தடியடி, துப்பாக்கிச்சூடு, தீக்குளிப்பு என்று உயிர் நீத்தவர்கள்தான் எத்தனை எத்தனை?
செப்டம்பர் 2009-ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கத்தில் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, அவரது உருவம் பொறிக்கப்பட்ட 5 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிடுகையில் விழாவுக்கு தலைமை தாங்கிய முதல்வர் கருணாநிதி அவர்கள்,
“தமிழகம் எந்த ஒரு மொழிக்கும் எதிரானதல்ல, அதே நேரத்தில் கட்டாயப்படுத்தி ஒரு மொழியை திணிப்பதை ஏற்க முடியாது. நான் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட போது, “இந்தி ஒழிக” என்று கோஷமிடவில்லை. “கட்டாய இந்தி ஒழிக” என்று தான் கோஷமிட்டேன்.” என்று சப்பைக்கட்டு கட்டினார்.
ஆகா.. என்ன ஒரு விளக்கம்! இவர்களது ஆவேசப் பேச்சைக் கேட்டு “இந்தி ஒழிக! இந்தி ஒழிக!” என்று கோஷமிட்டுச் சென்றவர்கள் எல்லாம் மடையர்கள் என்பது இப்போது புரிந்தது.
“திராவிடச் சோலையிலே
தீரர் வாழும் வேளையிலே
செந்தமிழை மேயவந்த
இந்தி என்ற எருமை மாடே!
முன்னம் போட்ட சூடு என்ன
மறந்ததோ உனக்கு?
என்றும் இந்தி ஏற்கமாட்டோம்
ஓடிப்போ வடக்கு!”
என்று மேடைதோறும் பாடிப் பாடி திராவிடக் கட்சியை வளர்த்த நாகூர் ஹனீபாவை எண்ணுகையில் எனக்கு பாவமாகத் தோன்றியது. தலைவர்கள் அவரை பகடைக்காயாய் பயன்படுத்திக் கொண்டது அவருக்கு இப்போதாவது புரிந்ததா இல்லையா என்று தெரியவில்லை.
இங்கு வளைகுடா நாடுகளில் இந்தி தெரியாமல் தட்டுத் தடுமாறி மலையாளிகளுக்கு இணையாக ஈடுகொடுத்து முன்னேற முடியாமல் தவியாய்த் தவிக்கும் தமிழ்ச் சகோதர்களின் பின்னடைவுக்கு காரணம் இந்த தமிழினத் தலைவர்கள்தான் என்பது முற்றிலும் உண்மை. இவர்கள் அனைவரும் ஒரு காலத்தில் ‘இந்தி ஒழிக’ என்று கோஷம் போட்டு அலைந்தவர்கள் அல்லது அவர்களது வாரிசுகளாக இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமேயில்லை.
“உங்களிடம் “வைரத்தூறல்” நூலைக் கொடுத்து நாலு நல்ல வார்த்தைகள் எழுதுவீர்களே என்று பார்த்தால் இப்படியா எழுதுவது?” என்று எனது ஆத்ம நண்பர் கவிஞர் காதர் ஒலி கேட்டால் அவருக்கு என்ன பதில் சொல்வது என்று சீரியஸாக யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
Guru
September 4, 2012 at 7:51 am
அறுபதுகளில் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு கட்டாயப்பாடமாக இருந்த இந்தி விருப்பப்பாடமாக மாற்றப்பட்டது.அதி்ல் சேர்ந்து படித்த சில மாணவர்கள் பள்ளி வளாகத்திலேயே தாக்கப்பட்டோம்.பிறகு,எழுபதுகளில் பாதுகாப்புத்துறையிலிருந்து ஓய்வு பெற்று நாகூரில் வசித்துவந்த திரு.இக்பால் அவர்களிடம் தனியாக இந்தி கற்று தேர்வு எழுதினோம்,திரு.இ.எம்.ஹனீபா அவர்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் உள்ள தாமு,சாருவின் தம்பி சுந்தர் ஆகியோர் இந்தி படித்தோம். எனவேதான் என்னுடைய பல ஆண்டுகால பொறியியல் பணியில் நான் கற்றுக்கொண்ட இந்தி
மிகவும் உறுதுணையாக இருந்தது.உங்கள் பதிவு என்னை பழைய நினைவுகளுக்கு கொண்டு செல்கிறது.நன்றி பல.
Abdul Qaiyum
September 4, 2012 at 8:42 am
குரு, தங்களின் நினைவுகளைப் பகிர்ந்தற்கு மிக்க நன்றி