RSS

வைரத்தூறல் – மதிப்புரை

11 Sep

நாகூரில் காதர் ஒலியைத் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.

இப்படி நான் சொன்னதும் “நீங்கள் சுன்னத் ஜமாஅத்தா அல்லது தவ்ஹீதா?” என்ற அடுத்த கேள்வி எழக்கூடும்.

நான் சொல்ல வருவது நம்மூர் கவிஞர் காதர் ஒலியை.

இவர் பரிகாசப் பாடலில் தொடங்கி இதிகாசப் பாடல்களை எட்டி இருப்பவர். இதுவரை வாழ்த்துப்பாடல்கள் எழுதிக் கொண்டிருந்தவரை நாம் வாழ்த்த வேண்டிய தருணம் வந்து விட்டது.

குடத்திலிட்ட விளக்கு இன்று குன்றின் மேல் ஒளிர்கிறது.

இவரது “வைரத்தூறல்” மழையில் நனைந்த நான் இவரது கவிதைகளுக்கு மதிப்புரை வரைந்தால் என்ன என்று தோன்றியது.
—————————————————————————————-

புலவர் ஆபிதீன் இயற்றி நாகூர் E.M.ஹனீபா மற்றும் A.ராணி இணைந்து பாடிய இந்த அருமையான பாடலை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்.

‘மக்கள் யாவரும் ஒன்றே குலமெனும் மார்க்கம் வந்தது யாராலே?’ என்று நாகூர் ஹனீபா அவர்கள் கேள்வி தொடுக்க ‘மக்கா என்னும் நகரம் தந்த மாந்தர் திலகம் நபியாலே’ என்று ராணி பதிலுரைக்கும் இந்த பாடல் எத்தனை ஆண்டுகளானாலும் நெஞ்சில் நிறைந்திருக்கும்.

கவிஞர் காதர் ஒலியின் “பிரிவினை எதற்கு?” என்ற இந்த கவிதையைப் படித்தபோது ஆபிதீன் காக்காவுடைய அந்தப் பாடல்தான் நினைவுக்கு வந்தது.

பிறந்த உலகில் பற்பலப் பிரிவாய்
பிரிந்துக் கிடப்பது எதனாலே?
சிறந்த அறிவும் செயல்படுத்திறனும்
சிதைந்து போகுது அதனாலே!
தெரிந்து இருந்தும் தெளிவு படாமல்
திருந்த மறுப்பது எவராலே?
புரிந்து கொண்டால் பலமே பெறலாம்
புண்ணியம் படரும் செயலாலே!

நம் மக்கள் கொள்கை அடிப்படையில் பிரிந்துக் கிடப்பதை கவிஞரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மற்றொரு இடத்தில்

விண்மீன்கள் சிதறிக் கிடந்தால்
விண்ணுக்கு அழகு!
மூமீன்கள் சிதறிக் கிடந்தால்
முளைக்குமா விடிவு?

என்று குமுறுகிறார். மீனை வைத்து “விண்மீன்கள்” “மூமீன்கள்” என்ற வார்த்தை விளையாட்டு எனக்கு பிடித்திருந்தது. கவுச்சியாக இருந்தாலும் கவர்ச்சியாக இருந்தது.

———————————————————————————————————————-

1993-ஆம் ஆண்டு வெளிவந்த மணிரத்னத்தின் ‘திருடா திருடா’ படம் எல்லோர் நினைவிலும் பசுமையாக இருக்கிறது. நம் கவிஞரின் “வைரத்தூறல்” தொகுப்பில் “திருடா! திருடா” என்ற தலைப்பைக் கண்டதும், இவர் எந்த திருடனைப் பற்றி சொல்லப் போகிறார்? ஒருவேளை கிரானைட் திருடனைப் பற்றி இருக்குமோ என்ற ஆவலில் கவிதையைப் படிக்க நமக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.

அப்பா அம்மா சொல்லைப் பின்னே தள்ளாதிருடா
அச்சம் அகந்தை அழுக்கு நெஞ்சில் கொள்ளாதிருடா
தப்பித் தவறி தறுதலை வழியில் செல்லாதிருடா
தரங்கள்கெட்ட வார்த்தையை வாயால் சொல்லாதிருடா

என நாசுக்காக நம் கவிஞர் நல்லுபதேசம் நயம்பட உரைக்கிறார்.
———————————————————————————————————————

இன்றைய இளந் தலைமுறையினருக்கு உவமைக் கவிஞர் சுரதாவைப் பற்றி அதிகம் தெரியாது. பாரதிதாசன் மிது கொண்டிருந்த பேரன்பின் காரணமாய் “சுப்பு ரத்தின தாசன்” என்ற தன் புனைப்பெயரை மேலும் சுருக்கி “சுரதா” என்று தனக்குத்தானே பெயர் சூட்டிக் கொண்டவர்.

“விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்”

என்ற கே.பாலச்சந்தரின் “நாணல்” படத்தில் இடம்பெற்ற பாடலின் சாயலை கவிஞர் காதர் ஒலியின் “ஆடையோ ஆடை!” என்ற கவிதையில் காண முடிகிறது.

கவர்ச்சி கன்னிக்கு காலாடை
காற்றில் பறக்குது மேலாடை
கட்டழகு பெண்ணுக்கு நூலாடை
காய்ச்சிய பாலுக்கு பாலாடை

என்று பாடும் கவிஞர் மேலும் தொடர்கிறார்.

நீதான் எனக்கு என்னாடை
நான்தான் உனக்கு உன்னாடை
நீக்கிடமுடியா இவ்வாடை
நெஞ்சிலே மனக்கும் அன்பாடை

கவிஞர் காதர் ஒலியின் ஆடை வரிகளில் வீசிய பா-வாடை என் மனதிற்குள் பலவிதமான சிந்தனையை தோற்றுவித்தது.

‘…அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை…” (அல்குர்ஆன் 2:187) என்ற திருக்குர்ஆன் வரிகள் நினைவுக்கு வந்தன.

ஒருவர் மற்றவருக்கு ஆடை என்றால் இருவரும் சரிசமம் என்று அர்த்தமாகிறது அல்லவா? ஆடை இல்லாதவன் அரை மனிதன் என்பார்கள். இந்துமதம் கூட சிவபெருமானை ஆண்பாதி, பெண்பாதியாக – உமையொருபாகனாக, மாதிருக்கும் பாதியனாக, மங்கை பங்கனாக, அர்த்தநாரீஸ்வரராக உருவகப் படுத்துகிறது.

வாழ்க்கைத்துணை இல்லாத மனித வாழ்க்கையும் அரைகுறையாகத்தான் ஆகிவிடுகிறது. பரிபூரணம் ஆவதில்லை. அதனால்தான் இஸ்லாம் சன்னியாசத்தை ஆதரிப்பதில்லை.

கவிக்கோ அவர்கள் ஜூனியர் விகடனில் இவ்வரிகளுக்கு விளக்கம் தந்ததை சற்று கூர்ந்து கவனித்தால் பலப்பல உண்மைகள் கண்முன் புலப்படுகின்றது.

ஆடையை ஏன் உதாரணம் காட்ட வேண்டும்?

ஆடை, மானத்தை பாதுகாக்கின்றது; மரியாதை கூட்டுகின்றது; மதிப்பை உயர்த்துகின்றது. ஆணுக்குப் பெண் ஆடையாகவும், பெண்ணுக்கு ஆண் ஆடையாகவும் இருப்பது கட்டாயமாகின்றது. குர்ஆன் கவிதைநயமிக்கது என்பதற்கு இவ்வசனமே நல்லதொரு சான்று.

மனைவியின் மானத்திற்கு பங்கம் ஏற்படுகையில் கணவன்தான் கேடயமாக செயல்பட்டு அவளுக்கு கேடு விளையா வண்ணம் பாதுகாக்கின்றான். கணவனுக்கு அவள் மனைவியானவள், தன் சொல்லாலும் செயலாலும், மதிப்பையும் மரியாதையையும் தேடித் தருகிறாள். எனவேதான் அவனுக்கு அவள் ஆடை, அவளுக்கு அவன் ஆடை என்ற பொருத்தமான உதாரணம் சுட்டிக் காட்டப் படுகின்றது.

உயிரினங்களில் மனிதன் மாத்திரம்தான் ஆடை அணிகிறான். அதேபோன்று ‘திருமணம்’ என்ற புனித பந்தம் மனிதர்களாகிய நமக்கு மட்டும்தான் கடமையாக்கப்பட்டிருக்கின்றது. “வாலை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்” என்பது வெறும் கற்பனைக்குத்தானே அன்றி நிஜவாழ்க்கைக்கு அல்ல.

பொருத்தமான ஆடையைத் தெர்ந்தெடுப்பதில் எவ்வளவு கவனம் தேவையோ, அதே அளவு கவனம் பொருத்தமான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதிலும் அவசியம் தேவை என்பதை சொல்லாமல் சொல்கின்றது.

தட்பவெப்ப காலங்களில் குளிர் நம்மை தாக்காமலும், வெயில் நம்மை சுட்டெரிக்காமலும் ஆடை நம்மைக் காக்கின்றது. இன்பங்களிலும் துன்பங்களிலும் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு அளித்து, ஆடை நம் அங்கங்களை மறைப்பதுபோல் அவரவர் தத்தம் குறைகளை மறைத்து இல்லறவாழ்க்கை நடத்த வேண்டும் என்பதுதான் இதன் உட்கருத்து.

God Makes Man. Tailor makes him Gentleman என்று நகைச்சுவையாகச் சொல்வார்கள். ஆடையை அணிந்ததும் மனிதனுக்கு மதிப்பு கூடி விடுகின்றது. பாதுகாப்பாக உணர்கிறான். மானம் காக்கப் படுகின்றது.

நன்மதிப்பு, சமுதாய அந்தஸ்து, கெளரவம் – இவைகளை ஈட்டித் தருகின்றது ஆடை, அணிகலன்.

ஆடை அணியாதவனை காட்டுமிராண்டி என்று பழித்துரைக்கிறோம்.

ஆடை நாகரீகத்துக்கான குறியீடு; சமூகத்தின் பண்பாடு. ‘அறிவுக்கனி’யை உண்டதும் ஆதாமும் ஏவாளும் புரிந்த முதற்காரியம் இலைதழைகளை ஆடையாக்கிக் கொண்டதுதான். சுயநினைவு இழக்கும் பைத்தியக்காரன் செய்யும் முதற்காரியம் ஆடைகளை கிழித்துக் கொள்வதுதான். புரிதலின்றி இல்லற வாழ்க்கையில் கணவனும் மனைவியும் தாம்பத்திய வாழ்வை கெடுத்துக் கொள்வதும் பைத்தியக்காரர்கள் செய்யும் செய்கைகளுக்குச் சமம். அவர்களது வாழ்க்கை தாறுமாறாய்க் கிழிந்து சின்னாபின்னமாகி விடுகின்றது.

கவிஞர் காதர் ஒலியின் மேற்கூறிய இவ்வரிகள் மனநிறைவைத் தந்தது.

நீதான் எனக்கு என்னாடை
நான்தான் உனக்கு உன்னாடை
நீக்கிடமுடியா இவ்வாடை
நெஞ்சிலே மனக்கும் அன்பாடை

——————————————————————————————————————–
இதோ கவிஞர் காதர் ஒலியின் மற்றொரு கவிதை:

கொசுக்களுக்கு கொண்டாட்டம்
நன்றி சொல்லும் பொதுக்கூட்டம்
முன்னிரவிலும் பின்னிரவிலும்
மூக்குப்பிடிக்க ரத்த விருந்து
மிக்க நன்றி! மின்வெட்டுக்கு!

நாகூரில் விருந்து என்றால் “சஹன் சாப்பாட்டில்” நாலுபேர்தான் உட்கார்ந்து சாப்பிடுவார்கள். கவிஞர் சொல்லும் இந்த ரத்த விருந்தில் கூட்டம் கூட்டமாக அல்லவா உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள்?

இம்முறை தாயகம் சென்ற நான் மின்வெட்டினால் ரொம்பவே நொந்து போய்விட்டேன். கலைஞர் ஆட்சியின்போது வெளிவந்த ஜோக் ஒன்று நினைவுக்கு வந்தது.

அரவிந்த் சாமிக்கும் ஆற்காடு வீராசாமிக்கும் என்ன வித்தியாசம்?

அரவிந்த் சாமி வந்தது “மின்சாரக் கனவு”, ஆற்காடு வீராசாமி வந்ததும், மின்சாரமே கனவு.

இதுக்கு அது எவ்வளவோ தேவலாம் என்று தோணுகின்றது.

இவ்வளவு அருமையாக கவிதை எழுதும் என் நண்பருக்கு அடுத்த முறை ஊர் செல்லுகையில் ஏதாவதொன்று பரிசளிக்க வேண்டும். ‘டார்டாய்ஸ்’ கொசுவர்த்திச் சுருள் பொருத்தமான பரிசாக இருக்குமோ?  “அனுபவம்தான் கவிதை” என்பான் கவியரசு கண்ணதாசன். கொசுக்கடியால் எந்த அளவுக்கு நம் கவிஞர் பாதிக்கப்பட்டிருந்தால் இது போன்ற அனுபவக் கவிதைகளை அவர் எழுதி இருப்பார் என்று நம்மால் எளிதில் கற்பனைச் செய்து ஊகிக்க முடிகின்றது.

“கடிஜோக்” கேள்விப்பட்டிருப்பீர்கள். இது “கடிகவிதை”

அசுக்கடி புசுக்கடி கொசுக்கடி
அவரவர் உடம்பினில் அடிதடி
இசுக்கடி நசுக்கடி பொசுக்கடி
இரவினில் நடக்குது அதிரடி

கொசுத்தொல்லையை விவரிப்பதோடு நிற்கவில்லை. அதை போக்குவதற்கும் ஆலோசனை தருகிறார் கவிஞர். ஒரு பிரச்சினையை எடுத்துச் சொல்வதோடு மட்டும் கவிஞனின் பங்களிப்பு நின்று விடுவதில்லை. அதற்கு நிவர்த்தி வைத்தியமும் சொல்ல வேண்டும்.

கொசுக்கு பயந்தா வலையடி?
குப்பைக் கூளத்தைத் தொலையடி
அசுத்த அசிங்கத்தை அகற்றடி
அதுதான் கிருமிக்கு சவுக்கடி.

வேப்பிலை புகையைப் போடடி
வெகுண்டு ஓடிடும் கொசுவடி
காப்பில்லை கொசுவத்தி சுருளடி
காசுக்குத் தாண்டி அழிவடி

என்று இப்பிரச்சினைக்கு தீர்வு காண விழைகிறார். இதை படித்துவிட்டு கொசுவத்திச் சுருள் விற்பனையாளர்கள் நிச்சயம் இவர்மீது கடுப்பாவார்கள் என்பது நிச்சயம்.
———————————————————————————————————————–

தினக்கூலித் தொழிலாளிகளின் அவல வாழ்க்கையை எடுத்துரைக்கையில் இப்படி கூறுகிறார் நம் கவிஞர்:

ஒருவேளை அடுப்பெரிக்க
மூன்று வேளை வெயிலில் காயும்
விறகுகள்

தன்னைச் சார்ந்தோரை வாழவைப்பதற்கு தன்னைத்தானே வருத்திக் கொள்கிறான் தினக்கூலிக்காரன். மனிதனை விறகாய் உருவகப்படுத்துகையில் சித்தர் பாடல்களில் காணும் தத்துவக்கருத்தை   இந்த ‘ஹைக்கூ’ கவிதையில் நம்மால் உணர முடிகிறது.

பார்த்தா பசுமரம்
படுத்து விட்டா நெடுமரம்
சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா?

திருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற ஞானப்பாடல்தான் எனக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது. (இது கண்ணதாசன் எழுதிய பாடலா அல்லது கவி கா.மு.ஷெரீப் எழுதிய பாடலா என்ற விவாதம் நமக்கு இப்போது தேவையில்லாதது.)  [பார்க்க]

———————————————————————————————————————

எட்டு வயது சிறுமியாக இருந்த என் மகள் ஒரு முறை என்னிடம் “ரூபாய் நோட்டில் ஏன் காந்தி சிரித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியுமா?” என கேள்வி கேட்டாள். “தெரியாது” என்று நான் பதில் சொன்னதும் “அவர் அழுதா நோட்டு நனைந்து விடுமே!” என்று சிரித்தபடி கூறிவிட்டு ஓடிவிட்டாள். இதை நகைச்சுவையாக ரசித்த எனக்கு, கவிஞர் காதர் ஒலியின் இதே கருத்தைக்கொண்ட கவிதை சீர்தூக்கி சிந்திக்க வைத்தது.

வாக்களித்து விட்டு வெளியே வந்தவன்
வாழ்க காந்தி என்றான்!! கேட்டால்
வேட்பாளர் கொடுத்த பணத்தில்
காந்தி சிரிக்கிறாராம்

ஊழல் நிறைந்த தேர்தல் களங்களின் அவலத்தை உரித்துக் காட்ட இந்த வரிகள் போதாதா?

———————————————————————————————————————

கவிஞர் காதர் ஒலி எழுதியுள்ள “திருப்புகழ் தமிழ்”, “தமிழச்சித் தாலாட்டு”, “தாய் மண்ணை மதி” “தமிழா! தமிழா”, “திருக்குறள் சுவை”  “முண்டாசுக் கவிஞன்” “புதுவையின் புயல்”  போன்ற கவிதைகள், அவருக்கு தமிழ்மொழியின் மீதுள்ள ஈடில்லா பற்றையும் தமிழ் தாக்கத்தையும் படம்பிடித்துக் காட்டியுள்ளது.

“புதியதோர் உலகம் செய்வோம்” என்றான் பாரதிதாசன் “புதிய பாரதம் செய்வோம்” என்று முழக்கமிடுகிறார் நம் கவிஞர். “ஓடி விளையாடு பாப்பா” என்று பாலர்களுக்கு கவிதை பாடினான் பாட்டுக்கோர் புலவன் பாரதி.

ஓடி நடக்காதே தாத்தா; உன்
உடம்புக்கு நல்லதல்ல தாத்தா
பீடி குடிக்காதே தாத்தா; பல
பிணிகளை உண்டாக்கும் தாத்தா

மாடி ஏறாதே தாத்தா; திடீர்
மயக்கம் வந்துவிடும் தாத்தா
ஆடி அலையாதே தாத்தா; அது
ஆகாது உந்தனுக்கு தாத்தா

மாமிசம் தின்னாதே தாத்தா; அந்த
மருத்துவர் சொல்கேளு தாத்தா
பூமியை நம்பாதே தாத்தா; அதை
புரிந்தவன் நீதானே தாத்தா

என பேத்தி தாத்தாவுக்கு அறிவுரை கூறுவதுபோல் கவிதை வடித்துள்ளார். இந்த ஐடியா ஏனோ பாரதிக்கு வராமல் போய்விட்டது. வந்திருந்தால் ‘பாப்பா பாட்டு’ பாடியதைப்போன்று ‘தாத்தா பாட்டையும்’ அவன் பாடிச் சென்றிருப்பான்.

மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒளி படைத்த பார்வை வேண்டும்

என்று பைந்தமிழ்த்தேனீ பாரதி பாடினான். கவிஞர் காதர் ஒலியின் கனவு சற்று மாறுபட்டு இருக்கின்றது.

பஞ்சம் இல்லாத பாரதம் வேண்டும்
பசுமையும் வளமையும் பெருகிட வேண்டும்
லஞ்சம் வாங்காத அலுவலர் வேண்டும்
லட்சியம் எல்லாம் நடந்திட வேண்டும்

என தான் காணும் கனவை எடுத்தியம்புகிறார். படிக்கின்ற வாசகன் மனதிலும் கவிஞரின் ஆசைகள் நிறைவேற வேண்டும் என்ற பிரார்த்தனை உள்மனதில் எழுகின்றது.

——————————————————————————————————————

கவிஞர் காதர் ஒலியின் கவிதைகளில் காணப்படும் உவமை, உவமேயம், உருவகம், சொல்நயம், வார்த்தை சந்தம் – இவைகள் பாராட்டும்படி இருக்கின்றது. உதாரணத்திற்கு பூமியை உயிருள்ள ஒரு பொருளாய் கற்பனை செய்திருப்பது நம்மை ரசிக்கத் தூண்டுகிறது.

பூமி விடும் பெருமூச்சுதான் புயல் காற்றாம், நரம்புத் தளர்ச்சி பூகம்பமாம், திடீர் வயிற்றுப்போக்கு சுனாமியாம், சிறுநீரகக் கோளாறு வெள்ளப் பெருக்காம், செரிமான இல்லாமல் எடுக்கப்படும் வாந்திதான் எரிமலை வெடிப்பாம்.

கத்திரிக்காயை மகுடம் அணிந்த இளவரசியாக கற்பனைச் செய்வதும், துகில் உரிப்பவரை அழவைக்கும் சக்தி எங்களுக்குத்தான் உள்ளது என்று பாஞ்சாலிக்குகூட இல்லாத சக்தியை வெங்காயத்திற்கு அளித்து அழகு பார்ப்பதும், தரம் மாறாமல் நிறம் மாறும் கர்ப்பிணி என்று மிளகாயை உருவகப் படுத்துவதும், கவிஞரின் கற்பனாச் சக்திக்கு ஒரு சபாஷ் போட வைக்கிறது.

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்

‘விவசாயி’ படத்தில் மருதகாசி வெளியிட்ட அதே ஆதங்கத்தை அவர் பானியில் வெளியிடுகிறார் கவிஞர் காதர் ஒலி

பிறந்து வளர்ந்து படித்த மண்ணில்
பிழக்கத் தொழிலா உனக்கில்லை?
பறந்து சென்று இளமையைத் தொலைத்து
பணத்தைக் குவிப்பது கணக்கில்லை!
சிறந்த மனையால் சிரிக்கும் மழலை
செழித்த முகத்தில் பொலிவில்லை
திறந்து சொன்னால் அயலகம் சென்று
திறம்பட உழைபதில் புகழில்லை

என்று நம் கவிஞர் நடைமுறை வாழ்க்கையை, அயல்நாட்டு மோகத்தைச் சாடுகையில் பங்கஜ் உதாஸ் அவர்களின் “சிட்டி ஆயிஹே” கஜல்தான் நினைவில் வந்தது.

“ரோட்டி கப்படா அவுர் மக்கான்” என்ற படத்தில் “மெஹங்காயி மார்கயி” என்ற இந்தி பாடலில் அருமையான ஒன்று வரி வரு.ம் அதன் சாராம்சம் இதுதான்:

கைநிறைய பணம் கொண்டுச்சென்று
பைநிறைய காய்கறிகள் வாங்கி வருவோம் அன்று
பைநிறைய பணம் கொண்டுச்சென்று
பைநிறைய காய்கறிகள் வாங்கி வருகிறோம் இன்று

கவிஞர் காதர் ஒலி அவர்களின் கவிதையிலும் அதே கருத்துச்செறிவு காணக்கிடைக்கின்றது.

நோட்டு புத்தகத்துடன்
பள்ளிக்குச் சென்றேன் அன்று
நான் படிக்க!!

நோட்டுக் கட்டுடன்
பள்ளிக்கூடம் செல்கிறேன் இன்று
என் பிள்ளை படிக்க!!

என்று கல்வியின் அவலத்தை துகிலுரித்துக் காட்டுகின்றார்.

எத்தனையோ முறை திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதும் வாய்ப்புகள் தேடி வந்தும் அதில் இவர் ஆர்வம் காட்டவில்லை என்ற இவரைப் பற்றிய சுவையான செய்தி நமக்கு மகிழ்வைத் தருகிறது. எண்ணற்ற திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய கவி. கா.மு,ஷெரீப் அவர்கள் திரையுலகில் பிரவேசித்தமைக்கு, பிற்காலத்தில் மனம் வருந்தியிருக்கிறார். கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுத வாய்ப்பு தேடிவந்தபோது “அம்மி கொத்த ஏன் சிற்பியை அழைக்கிறீர்கள்?” என்ற வினாவை அவர்களிடத்திலேயே தொடுத்தார். நம் கவிஞரும் அதேபோன்ற தெளிவான சிந்தனையில் இருப்பது புலனாகிறது. புகழ் என்ற போதை அவரை மசிய வைக்கவில்லை. பணத்தாசை என்ற பாப்பாவூர் பேய் அவரைப் பிடித்து ஆட்டவில்லை.

நீ துளியில் பிறந்த உளி
சிற்பம் செத்துக்கவா?
அம்மிக் கொத்தவா?
தீர்மானிப்பது உன் விதி!!

எனக்கென்னவோ கவிஞரின் இக்கவிதை, கேள்விகளால் வேள்விகள் நடத்தி, தனக்குத்தானே கேட்டுக்கொண்ட கேள்வியாகத்தான் தோன்றுகின்றது. இக்கேள்விக்கு பதிலுரைக்கும் வண்ணம் தன் வாழ்க்கையையும் சீர்பட அமைத்துக் கொண்டதை நம்மால் பார்க்க முடிகிறது.

வளரட்டும் மேலும் இவரது கவித்திறமை என்று நம் இதயம் வாழ்த்துகின்றது.

 

Tags: , , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: