RSS

கம்பன் அவன் காதலன் (ஏழாம் பாகம்)

19 Sep

கம்பன் அவன் காதலன் – 6-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 5-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 4-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 3-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 2-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 1-ஆம் பாகம்

எழுதிய நூல்கள்

வாழ்க்கைக் குறிப்பு

பிறர் பார்வையில்

ஜெயமோகன் பார்வையில் 

தந்தை பெரியாரைப் பற்றி

கவிஞர் வாலியின் பார்வையில்

இராம வீரப்பன் பார்வையில்

டாக்டர் சுதா சேஷய்யன் பார்வையில்

[திருவாரூர் கலெக்டருடன் நாகூர் தமிழ்ச்சங்க நிர்வாகிகள்]

ஆருர் மாவட்ட ஆட்சியாளர்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நடராசன் அவர்கள் நாகூர் தமிழ்ச்சங்க அலுவகத்திற்கு கடந்த 20.8.12 தேதியன்று வருகை புரிந்தபோது, பல்வேறு கலந்துரையாடல்களுக்கிடையே எதிர்பாராத விதமாக ஜஸ்டிஸ் மு.மு.இஸ்மாயீல் அவர்களைப் பற்றிய சுவையான பேச்சு வந்தது. நாகூரில் வாழ்ந்த இலக்கியச் செல்வர்களுள் நினைவில் நிற்கக்கூடிய மாமனிதராய் முன்னாள் நீதிபதி அவர்களை ஆர்வமுடன் அவர் நினைவு கூர்ந்தார். அவர் பள்ளியில் படித்த காலத்தில் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த, ஜஸ்டிஸ் இஸ்மாயீல் எழுதிய “கொடி காட்டும் குறிப்புகள்” என்ற கட்டுரையை வெகுவாக சிலாகித்துப் பேசினார்.

கண்ணகியின் காற்சிலம்பை விற்க கோவலன் மதுரை மாநகருக்குள் அடியெடுத்து வைத்தபோது, பாண்டிய மன்னன் அரணமனையில் பட்டொளி வீசிப் பறந்த மீன்கொடியானது கோவலனை “வராதே, வராதே” என்று குறிப்புகள் காட்டிய வருணனைகள் மட்டுமின்றி, ஏனைய இலக்கியத்திலும் இதுபோன்று கவிஞர்கள் கையாண்ட நயமிகு இலக்கிய ரசனையை கோர்வையாக வடித்துத்தந்த, மாண்புமிகு இஸ்மாயீல் அவர்களின் எழுத்துத்திறனை வெகுவாகப் பாராட்டி நெகிழ்ந்தார்.

மாவட்ட ஆட்சியரோடு ஏற்பட்ட இந்த இலக்கிய கலந்துரையாடலின் உந்துதலினாலும் “கம்பன் அவன் காதலன்” என்ற தலைப்பில் ஆறாவது பாகம் வரை எழுதி, சோம்பலின் காரணமாக இவ்வலைப்பதிவில் எழுதுவதை தள்ளிப்போட்டிருந்த என்னை, மீண்டும் தொடர்ந்து எழுதத் தூண்டியுள்ளது.

ஒருவர் உயர் பதவியில் இருப்பது பெரிய விஷயமே அல்ல. ஆனால் தன் வாழ்நாள்முழுதும் கறைபடாத கரங்களோடு, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல், நீதியோடும் நேர்மையோடும், அப்பழுக்கற்ற தூயவாழ்க்கை வாழ்வதென்பது ஒரு மிகப் பெரிய சாதனை. “சான்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு” என்பார்கள். நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களைப் பொறுத்தவரை அறிஞர் பெருமக்கள் மத்தியில் அவருக்கு இருந்த உயர்இடமே தனி. ஆன்றோர்கள் அவருக்களித்த மட்டற்ற மரியாதை எழுத்தில் வடிக்க இயலாது. அவருடைய புகைப்படத்தை பூஜை அறையில் வைத்து அவருக்கு பெருமைச் சேர்த்த மயிலாப்பூர் பிறாமணச் சகோதரர்களைப் பற்றி முன்பே கண்டோம்.

மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்
ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்

என்று திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் பாடிய முத்தான வரிகள் முழுக்க முழுக்க மு.மு.இஸ்மாயீல் அவர்களுக்குத்தான் பொருந்தும்.

மக்கள் திலகமும் மாண்புமிகு நீதிபதியும்

நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களுக்கு சமூகத்தில் எப்பேர்ப்பட்ட மதிப்பும் மரியாதையும் இருந்தது என்பதற்கு இக் கீழ்க்கண்ட சம்பவம் நல்லதோர் எடுத்துக்காட்டு எனக் கூறலாம்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் இரண்டாம் முறையாக தமிழக முதல் அமைச்சராக பதவியேற்ற போது அவரோடு 17 மந்திரிகளும் பதவியேற்றனர். பதவி ஏற்பு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் 1980-ஆம் ஆண்டு ஜுன் 9-ஆம்தேதி பகல் 12 மணிக்கு நடைந்தேறியது. மேடையில் மகாத்மா காந்தி, ராஜாஜி, காமராஜர், அம்பேத்கார், “காயிதே மில்லத்” இஸ்மாயில் சாகிப், முத்துராமலிங்க தேவர் ஆகியோருடைய படங்கள் பெரிதாக அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்தன.

உறுதி மொழியையும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் கவர்னர் பட்வாரி ஆங்கிலத்தில் வாசிக்க எம்.ஜி.ஆர். அதன் தமிழ் வாசகத்தை திரும்பச் சொல்லி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். பதவி ஏற்றதும், எம்.ஜி.ஆரும், கவர்னரும் கை குலுக்கிக்கொண்டனர். பின்னர் 17 அமைச்சர்களும் ஒருவர்பின் ஒருவராக வந்து பதவி ஏற்றனர்.

ஒவ்வொரு அமைச்சரும் பதவியேற்றதும் எம்.ஜிஆரிடம் சென்று வணங்கி, ஆசி பெற்றனர். அமைச்சர் குழந்தைவேலு, முத்துசாமி, கோமதி ஆகியோர் எம்.ஜி.ஆர். காலை தொட்டு வணங்கினார்கள்.

இதற்குப் பிறகுதான் அந்த அதிசய நிகழ்ச்சி நடந்தது. தமிழக மக்களுக்கு விடிவெள்ளியாக, அத்தனை அமைச்சர்களுக்கும் ஈடில்லா தலைவனாகத் திகழ்ந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் கிடுகிடுவென்று மேடையிலிருந்து இறங்கி ஓடோடி வந்தார். கூடியிருந்தவர்கள் அத்தனைப்பேரும் எம்.ஜி.ஆரின் நடவடிக்கையையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். அத்தனை காமிராக் கண்களும் நிகழ்வை ஒன்றுவிடாமல் படம்பிடித்துக் கொண்டிருந்தன.

மேடையிலிருந்து வேகமாக கீழிறங்கி வந்தார் முதல்வர் எம்.ஜி.ஆர். முன் வரிசையில் அமர்ந்திருந்த அந்தப் பெரியவரின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு, பவ்யமாக வணங்கி வாழ்த்துப் பெற்றார் . அந்த பெருமைக்குரிய மாசில்லா மாணிக்கம் வேறு யாருமல்ல. நம் நீதிமான் மு.மு.இஸ்மாயீல்தான் அந்தப் பெரியார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால், தன்னை வளர்த்து ஆளாக்கிய, தன் உயிருக்கும் மேலாக அவர் கருதிய அருமை அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி அவர்களின் காலைத் தொட்டு கும்பிடுவதற்கு முன் எம்.ஜி.ஆர்.அவர்கள் ஆசி பெற்றது நம் நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களிடம்தான்.

பொன்மனச் செம்மலின் வாழ்க்கை வரலாற்றில் பதியப்பட்ட இந்நிகழ்ச்சி நம் கட்டுரை நாயகனின் அருமை பெருமைகளை ஊரறிய பறைசாற்ற போதுமானது.

நீதிபதி இஸ்மாயீல் அவர்கள் தொடர்ந்து 28 ஆண்டுகள் தலைவராக சேவையாற்றிய சென்னை கம்பன் கழகத்தை தற்போது நடத்தி வருபவர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ஆர்.எம்.வீரப்பன் என்பதையும் இங்கு குறிப்பிடுதல் வேண்டும்.

“கம்பன் கழகம் வளர்ந்து வருவதற்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தவர்களில் ஒருவர் முன்னாள் நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் அவர்கள்” என்று கடந்த ஆண்டு நடந்த கழகத்தின் 37-வது ஆண்டுவிழாவின்போது மறைந்த அந்த மாமேதைக்கு ஆர்.எம்.வீ. புகழாரம் சூட்டியுள்ளார்.

மக்கள் திலகம் தொடங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அரசு கட்டிலில் அமர்ந்து ஆட்சி செலுத்தும் இந்நேரத்தில், மாநில முதல்வர் அவர்களுக்கு ஓர் வேண்டுகோள் வைக்கிறேன்.

எம்.ஜி.ஆர்.அவர்கள் பெரிதும் போற்றிய நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்கள் எழுதிய நூல்களை அரசு பொதுவுடமை ஆக்குமா?

நீதியரசர்களுகெல்லாம் அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்த இந்த முன்னாள் நீதிபதியின் வாழ்க்கை வரலாற்றை இளைய சமுதாயம் பயன்படும் வகையில் பாடதிட்டங்களில் சேர்க்குமா?

அவருடைய நினைவைப் போற்றும்வகையில் நினைவுச்சின்னத்தை அரசு ஏற்படுத்துமா?

மதச்சகிப்புத்தன்மை

நீதிபதி இஸ்மாயீலுக்கிருந்த மதச்சகிப்புத்தன்மை எல்லோரையும் வியக்க வைத்தது. மதச்சகிப்புத்தன்மை, மனித நேயம் இவைகள் கொஞ்சம் கொஞ்சமாக மனிதப்பண்புகளிலிருந்து குறைந்துவரும் இன்றைய காலகட்டத்தில் இலங்கை தமிழறிஞர் டாக்டர் எம்.ஏ.எம்,ஷுக்ரி அவர்கள் பதிந்த கருத்தினை இங்கு சுட்டிக்காட்ட விழைகிறேன்.

“மதச்சகிப்புத்தன்மை என்பது எல்லா மதங்களையும் ஒரே பரிமாணத்துக்குள் உள்ளடக்கும் முயற்சியாகவோ அல்லது மத நம்பிக்கைகள், செயற்பாடுகளை வெறும் வரலாற்று வளர்ச்சியாக விளக்கி நியாயப்படுத்தும் முயற்சியாகவோ கொள்ளப்படல் கூடாது. மதங்களைப் பொறுத்தளவில் சகிப்புத்தன்மை என்பது வித்தியாசங்கள், வேற்றுமைகளை யதார்த்தமாக, அடிப்படையானதாக அனுசரித்து ஏற்றுக்கொண்டு, இந்த வித்தியாசங்கள் வேற்றுமைகளைத் தாண்டிய நிலையில் அவற்றிற்கிடையில் காணப்படும் பொதுப் பண்புகளையும் பெறுமானங்களையும் இனம் காண்பதாகும்”

என்று டாக்டர் ஷுக்ரி அவர்கள் கூறிய கருத்துக்கள் நினைவில் கொள்ளத்தகவை.

இந்த மதச்சகிப்புதன்மை (Religious Tolerence) எல்லோருக்கும் இருப்பதில்லை. இந்த உயர்பண்புக்கு எடுத்துக்காட்டாக ஒருவரைச் சொல்ல வேண்டுமெனில் நீதிபதி இஸ்மாயீல் அவர்களை தாராளமாகச் சொல்லலாம். இவ்விஷயத்தில் அவர் ஆத்திகர்கள், நாத்திகர்கள் என்று எந்த வேறுபாட்டையும் காட்டியதில்லை. தொழில் தர்மம் பேணுவதில் அவருக்கு நிகர் அவரே.

தந்தை பெரியார் அவர்களுக்கு தமிழகமெங்கிலும் சிலை நிறுவப்பட்டு அதற்கடியில் சில வாசகங்கள் பொறிக்கப்பட்டன. அந்த வாசகங்கள் மதஉணர்வு கொண்ட அத்தனை மதத்தவரின் மனதையும் ஈட்டியால் தைத்தது போலிருந்தது.

கடவுள் இல்லவே இல்லை
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி

என்ற வாக்கியங்கள் பொறிக்கப்பட்டபோது, இதனை தடுத்த நிறுத்தக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வாசகங்கள் இந்துக்கள் மட்டுமின்றி கிறித்துவர்கள், முஸ்லீம்கள் என எல்லா மதத்தினரின் மதநம்பிக்கையும் புண்படுத்துவதாக இருந்தது என்று முறையிட்டார்கள்.

ஓரிறைக் கொள்கையைப் பின்பற்றும் நீதிபதி இஸ்மாயிலிடம் இவ்வழக்கு வந்தது. நியாயத் தராசை சரியாகப் பிடித்து, வரையறுக்கப்பட்ட இந்திய நாட்டு சட்டத்திட்டன்படி, அவர் தீர்ப்பு சொல்ல வேண்டும். இருதலைக் கொள்ளியான நிலை அது. தன்னுடைய மதநம்பிக்கைக்கு ஏற்றவாறு, தன்னுடைய கொள்கைக்கு தக்கவாறு ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கலாம். ஆனால் அதற்கு அவரது மனசாட்சி இடங்கொடுக்கவில்லை.

தொழில் தர்மத்தைப் போற்றுபவர் அவர். அரசாங்கத்திடமிருந்து கைநீட்டி சம்பளம் பெறுவது தான் ஏற்றிருக்கும் நீதியரசர் பணிக்குத்தான் என்பதும், இந்திய சட்டதிட்டத்தின்படி தீர்ப்பு அளிப்பதுதான் தன் கடமை என்பதையும் நன்கறிந்தவர் அவர். இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தை பேணும் ஒரு நாட்டில் அவர் நீதிபதியாக இருக்கவில்லை. தான் சொல்லும் ஒரு தீர்ப்பு தான் சார்ந்திருக்கும் நாட்டுக்கும், சூழ்நிலைக்கும் ஏற்றதாக, இருக்க வேண்டும்.

இறுதித் தீர்ப்பின்போது அவர் சொன்ன விளக்கம் யாரும் எதிர்பார்காதது.

“ஒரு தலைவருக்கு சிலை வைக்கும்பொழுது அவருடைய கொள்கை என்னவோ அதைத்தான் அவருடைய சிலை பீடத்தின் கீழே போடவேண்டும் என்று எதிர் பார்க்கவேண்டுமே தவிர, பெரியாருக்கு சிலை வைக்கும்பொழுது சங்கராச்சாரியாருடைய மேற்கோளையா போடுவார்கள்?

என்று அவர் கேட்ட கேள்வி எல்லோரையும் திகைக்க வைத்தது.

நீதியரசருடைய தீர்ப்பு பெரும்பாலான மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்ததாக இருந்தாலும் “அவரவர்களின் மத நம்பிக்கை அவரவர்களுக்கு” என்ற அவரது அற்புதமான விளக்கம் அறிந்து அவரது பண்பை எல்லோரும் போற்றினர்.

இலக்கியச் செல்வரின் இஸ்லாமியப் பணி

[தமிழக கவர்னராக தாய் மண்ணை மிதித்தபோது]

நாகூரை பிறப்பிடமாகக் கொண்ட ஜஸ்டீஸ் அவர்கள் ஆற்றிய இஸ்லாமியப் பணியை விலாவாரியாக ஆராய்வதற்கும் முன், அவருடைய குடும்பப் பின்னணியைச் சற்று அறிந்துக் கொள்வோம்.

நீதிபதி அவர்களுக்கு பூர்வீகம் நாகூர் தெற்குத்தெரு என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் தகப்பனார் பெயர் பி.முஹம்மது காசிம் மரைக்காயர். தாயார் பெயர் ருகையா பீவி.

அவருடைய துணைவியார் பெயர் பல்கீஸ். அவருக்கு மொத்தம் நான்கு குழந்தைகள். மூன்று ஆண் குழந்தைகள். ஒரு பெண் குழந்தை. 1) காதர் ஹுசைனுத்தீன், 2) ஜஹபர் சுல்தான், 3) காசிம் மரைக்கார், மற்றும் 4) பாத்திமா பல்கீஸ்.

உடன் பிறந்தவர்கள் இரண்டு பேர்கள். முதலாவது ஜக்கரியா மரைக்கார். இரண்டாவது உம்மு ஹனிமா. சகோதரர் ஜக்கரியா மரைக்கார், நாகூர் பிரபல எழுத்தாளர் ஆபிதீனுடைய மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது. உடன்பிறந்த சகோதரி உம்மு ஹனிமா என்பவர் லுக்மான் ஆலிம் சாயபு அவர்களுடைய துணைவியார்.

நீதிபதி இஸ்மாயீல் அவர்கள் இந்துக்களின் புராணமான கம்பராமாயண காப்பியத்தின் தலைச்சிறந்த ஆய்வாளராக புகழ்பெற்று தமிழகமெங்கும் முழங்கி வந்த அதே வேளையில், இஸ்லாமிய அறிஞராகவும் திகழ்ந்து வந்தார். “இன்பத்தமிழ் எங்கள் மொழி, இஸ்லாம் எங்கள் வழி” என்று அவர் முழங்கி வந்தார்.

தமிழிலக்கிய ஆர்வத்தினால் கம்ப ராமாயண காப்பியத்தில் காணப்படும் கம்பனின் சொல்லாட்சியை வியந்து புகழ்ந்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் தான் ஆற்றி வந்த இஸ்லாமியப் பணிகளிலிருந்து நீதிபதி இஸ்மாயீல் அவர்கள் ஒருபோதும் பின்வாங்கியதில்லை.

1981-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நீதிபதி இஸ்மாயீல் அவர்கள் தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் கமிட்டி (Baithul Hajjaj) தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். உடல் நலிவுற்றதன் காரணமாக 1986-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தன் பதவியிலிருந்து விலகிக் கொண்டார் அதற்கு பதிலாக எ. முகம்மது ஹாஷிம் சாஹிப் ஒருமனதாக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நீதிபதி இஸ்மாயீல் அவர்கள் தினமணி, கல்கி போன்ற பல பத்திரிகைகளிலும், தீபாவளி மலர் உள்ளிட்ட பல்வேறு ஆண்டு மலர் சிறப்பிதழ்களிலும் அவ்வப்போது இஸ்லாமியக் கட்டுரைகள் தொடர்ந்து எழுதிய வண்ணம் இருந்தார்.

நீதிபதி இஸ்மாயீல் அவர்களிடம் இயற்கையாகவே இஸ்லாமிய இலக்கிய படைப்புக்கள் மீது மிகுந்த அளவுகடந்த ஈடுபாடு காணப்பட்டது. கம்ப ராமாயணம், சீறாப்புராணம் இவை இரண்டையும் ஒப்பாய்வு (Comparitive Study) செய்து கருத்துக்கள் வெளியிட்டவர் அவர். ஆய்வுகளின் போது அவர் மதவேறுபாடு காட்டியதில்லை. பிறமத புராணங்களானாலும் அதிலுள்ள இலக்கியச்சுவையையும், காவியப் பண்பையும் ரசிக்கக்கூடிய மனப்பக்குவம் அவரிடம் இருந்தது. ரசிப்பதோடு நின்றுவிடாமல் பிறரறிய வகை செய்தார். தமிழ் மொழியில் அவருக்கிருந்த ஆளுமையை இன்றளவும் தமிழறிஞர்கள் வியந்து பேசுகிறார்கள்.

21.06.1999 ஆம் ஆண்டு சென்னை சீதக்காதி அறக்கட்டளையின் சார்பாக இஸ்லாமிய ஆய்வுப் பண்பாட்டு நிலையம் ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தது. 1999-ஆம் ஆண்டுக்குரிய ‘செய்கு சதக்கத்துல்லலாஹ் இலக்கியப் பரிசு’ மதிப்பிற்குரிய என் ஆசான் இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர் (பி:1924 – இ:2002) அவர்களுக்கு வழங்கப்பட்டபோது விழாத்தலைவர் மாண்புமிகு நீதிபதி மு.மு.இஸ்மாயில் அவர்கள் பரிசு வழங்கி ஆற்றிய உரை இஸ்லாமிய இலக்கியத்தின்பால் அவருக்கிருந்த அளவிலா வேட்கையை ஆழமாய் உணர்த்தியது.

“பல அருமையான நூல்களை எழுதியுள்ள இறையருட் கவிமணி அவர்களின் சேவை பாராட்டிற்குரியது. இத்தனை நூல்களை ஒருவர் எழுதியுள்ளது ஆச்சரியமாக உள்ளது. மனம் சுத்தமாக இருந்தால்தான் நம்மை அறியாமலே சொற்கள் வந்து விழும். அந்த மாதிரிச் சொற்கள் அமைந்த கவிதைகள் இங்கு நிறைய இருக்கின்றன.

அப்பேர்ப்பட்ட ஒரு கவிஞருக்கு – புலவருக்கு – மார்க்க மேதைக்கு இப்பரிசை வழங்குவதில் யாருக்கும் சற்றேனும் வேறுபட்ட கருத்து இருக்க முடியாது. அவர்களுக்குத் தகுந்த, அவர்களது செயலுக்கும் சேவைக்கும் அங்கீகாரம் அளிக்கின்ற முறையில், இந்தப் பரிசினை நாம் அவர்களுக்கு வழங்குகின்றோம். இந்த வாய்ப்பு நமக்கு கிடைத்ததற்கு ஆண்டவனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்”

என்று அவர் உள்ளத்திலிருந்து வார்த்தைகள் அருவியாகக் கொட்டின.

நீதிபதி அவர்கள் 27-3-1976 தேதியிட்டு கவிஞர் சாரணபாஸ்கரன் அவர்களுடைய “யூசுப்-ஜுலைகா” காப்பியத்திற்கு அணிந்துரை வழங்கியபோது அவர் கையாண்ட கனகச்சிதமான நறுக்கென்ற நயமான சொற்றொடர்கள் அவருடைய எழுத்துத் திறமைக்கு சிறந்த சான்றாகும்.

“இது மொழியால் தமிழ்க் காப்பியம்,
உணர்ச்சியினால் காதற் காப்பியம்,
பண்பினால் மனிதக் காப்பியம்,
போதிக்கும் அறத்தினால் அமர காவியம்.

இத்தகையக் காப்பியத்தை ஆக்கித்தந்த கவிஞர் திலகம் சாரணபாஸ்கரனாருக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, சிறப்புமிகு இத்தகையக் காப்பியங்கள் இன்னும் பல செய்வதற்கான எல்லா நலன்களையும் அவருக்குத் தந்தருளுமாறு இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்”

என்று வாழ்த்துரை வழங்கினார்.

நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்கள் ஆற்றிய இஸ்லாமியப் பணி ஒன்றல்ல இரண்டல்ல.

இந்திய தேசியத் தலைவர்களும் தலைச்சிறந்த தகைசால் இஸ்லாமியப் பெரியாராக திகழ்ந்த முன்னாள் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத் அவர்களின் வாழ்க்கை வரலாறை தமிழில் வடித்த சிறப்பான பாங்கினைச் சொல்வதா?

இஸ்லாமியக் காப்பியங்களில் ஒன்றான இராஜ நாயகம் என்ற நூலை ஆய்ந்து ‘இனிக்கும் இராஜ நாயகம்” என்று விரிவுரை செய்த இலக்கியப் பணியை எடுத்துச் சொல்வதா?

ஏக இறைவனாம் அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களுக்கு அருமையான விளக்கங்கள் தந்து நூல் வரைந்த மாண்பினை போற்றுவதா?

அடுத்துவரும் பதிவுகளில் இதனை நாம் விரிவாக அலசி ஆராய்வோம்.

அப்துல் கையூம்

 

 

Tags: ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: