RSS

நாகூர் ரூமிக்கு ஊர்விலக்கமா?

21 Sep

இஸ்லாத்தைப் பற்றி பலமுறை தவறான மதிப்பீடுகள் செய்த “சோ” ராமசாமி அவர்கள் நாகூர் ரூமி எழுதிய இஸ்லாம் – ஓர் எளிய அறிமுகம் எனும் இந்நூலைப் படித்துவிட்டு துக்ளக் இதழில்

“இஸ்லாம் பற்றிய பல கருத்துக்களை – குறிப்பாகப் பலரின் தவறான புரிதல்களை மிக எளிமையாக இந்நூலில் ரூமி அலசியுள்ளார். அனைத்துத் தரப்பு மக்களும் எளிதாகப் புரிந்துக் கொள்ளும் வகையில் எடுத்துரைத்துள்ளார்”

என்று நாகூர் ரூமியைப் புகழ்ந்து தள்ளினார்.

“இஸ்லாம் பற்றிய கருத்துக்களை நல்லமுறையில் நானிலத்தில் எடுத்துக்கூறும் நாகூர் ரூமியை ஏன் நாகூர் ஜமாஅத் மதவிலக்கம் செய்து வைக்க வேண்டும்?” என்று எல்லோரும் மூளையைக் கசக்கி, முடியைப் பிய்த்துக் கொள்ளும் நிலைமை உண்டாகி விட்டது.

நாகூரில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜமாஅத் ஒரு காலத்தில் இருந்தது. இப்பொழுது ஒரே ஒரு ஜமாஅத் பெயரளவுக்கு இருந்த போதிலும், ஜமாஅத் சொல்லிக் கட்டுப்பட்டு அடங்கி ஒடுங்கி நடக்கும் அளவுக்கா நாகூர்க்காரர்கள் நல்ல பிள்ளைகளாக ஆகி விட்டார்கள்? என்று என் மண்டைக்குள் ஒரே குஜராத் கலவரம்.

ஒரே பெருநாளை மூன்று நாட்கள் தனித்தனிக் குழுவாக கொண்டாடுபவர்கள் நாமாயிற்றே? நமக்குள் எப்படி இப்படியொரு ஒற்றுமை? என்றேல்லாம் சிந்திக்கத் தொடங்கி விட்டேன்.

அன்றொரு நாள் எச்.ஜி.ரசூலுடன் சேர்ந்து கேஷுவலாக நாகூர் ரூமி போட்டோவுக்கு போஸ் கொடுத்தபோது தன் பெயரையும் ரசூல் பெயரையும் பிற்காலத்தில் யாராவது ஒருவர் ‘ஆள்மாறாட்டம்’ செய்து குழப்பிக் கொள்வார் என்று அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சென்னையில் நடந்த அமெரிக்க தூதரக முற்றுகை தொடர்பான விவாதத்தில் ஞாநி அவர்கள் நாகூர் ரூமியின் பெயரைத் தவறாக உளறிக் கொட்டியதால்தான் இந்த குழப்பமோ குழப்பம்.

நல்லவேளை ஆஸ்கார் அவார்ட் வாங்கியது கவிக்கோ அப்துல் ரகுமான் என்றும் “ஆறாவது” விரல் எழுதியது ஏ.ஆர். ரகுமான் என்று அவர் சொல்லாமல் விட்ட வரைக்கும் நமக்கு பெருத்த சந்தோஷம்தான்.

நமக்கு எப்படி எல்லா சீன மூஞ்சியும் ஒரே மாதிரியாகத் தெரிகிறதோ அதேபோன்று பிறமதத்தவர்களுக்கு பெரும்பாலான முஸ்லீம்களின் பெயர்கள் ஒரேமாதிரியாகத் தெரிகின்றன. கவிஞர்களுல் இஜட்.ஜபருல்லா போன்ற பெயர்கள் வாயிலேயே நுழையாத பெயராக இருக்கிறது என்று அவரவர்கள் முணுமுணுக்கிறார்கள்.

(இன்னும் சற்றும் எளிமைப் படுத்தும் விதமாக  “ஜ.ஜபருல்லா என்று உங்கள் பெயரை மாற்றி வைத்துக் கொள்ளலாமே” என்று அவரிடம் போய் சொல்லலாம் என்று நினைத்தால் மனுஷர் நம்மை பிடி பிடி என்று பிடித்துக் கொள்வாரே என்ற பயம் வேறு நம்மை பெவிகால் போன்று அப்பிக் கொள்கிறது)

ஞாநி என்ற பெயரை அவர் வைத்திருப்பதால் அவருக்கு “ஞானக்கண்” இருக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாதுதான். ஏன் நாகூர் ரூமியே ஒரு ஞானியின் பெயரைத்தானே புனைப்பெயராக வைத்துள்ளார்? அவருக்கு ஒரு பூனைக்கண் கூட கிடையாது. Even Homer sometimes nods என்பார்கள். ஆனைக்கும் அடிச்சறுக்கத்தானே செய்யும்? ஞானியை நாம் மன்னித்து விடலாம். நாகூர் ரூமியின் பெயரை பிரபலமாக்கியதற்கு அவருக்கு பாராட்டுக்கள்கூட தாராளமாக நாம்  தெரிவிக்கலாம்.

அதுமட்டுமல்ல மருத்துவர் ஹபீப் முகம்மது அவர்களை மருத்துவர் சயீத் என்று வேறு குறிப்பிடுகிறார். (ஞாநி உங்களுக்கு என்ன ஆகி விட்டது?)

புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிபரப்பிய நிகழ்ச்சியைக் கண்டு குழம்பிப்போன மக்களின் ஆள்மாறாட்டக் குழப்பத்தைத் தீர்க்கும் வகையில் நாகூர் ரூமி வெளியிட்டிருக்கும் அறிக்கை இதோ:

“சென்ற 18.09.12 செவ்வாயன்று புதிய தலைமுறை டிவியில் “நேர்படப்பேசு” நிகழ்ச்சியில் பேசிய ஞாநி அவர்கள் என் பெயரைக் குறிப்பிட்டு, நான் இஸ்லாத்தை விமர்சனம் செய்ததற்காக ஜமாஅத்தார்களால் விலக்கி வைக்கப்பட்டிருந்தேன் என்று கூறினார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எனக்கே தெரியாமல் என்னை ஒரு ஜமாஅத் விலக்கி வைத்ததா?! பின் அவர் நண்பர் எச்.ஜி.ரசூலின் பெயருக்கு பதிலாக என் பெயரைச் சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது. Slip of the tongue. பின்பு புதிய தலைமுறையைத் தொடர்பு கொண்டு ஞாநி சாரின் அலைபேசி எண் வாங்கி இன்று பேசினேன். நான் பெயரைச் சொன்னதுமே, அவர் தவறாக என் பெயரைச் சொல்லிவிட்டதாகவும், “புதிய தலைமுறை”க்கு அதைத் தெரிவித்து விட்டதாகவும் சொன்னார். மன்னித்துக் கொள்ளுங்கள் என்றும் சொன்னார்.

எனக்கு சங்கடமாகிவிட்டது. அவரது பெருந்தன்மையும் எளிமையும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. இது இல்லாததால் ஆபிதீனின் கதைகளைத் தன் பெயரில் பிரசுரித்ததற்காக சில பல பொய்களை சாரு நிவேதிதா அண்ணன் சொல்லி பெயர் கெடுத்துக்கொண்டது நினைவுக்கு வந்தது.

தன் முகபுத்தகப் பக்கத்தில் இதுபற்றி சொல்லியிருப்பதாகவும், மன்னிப்புக் கேட்டிருப்பதாகவும் அவர் எனக்கு குறுஞ்செய்தியும் அனுப்பினார். அவர் தன் பக்கத்தில் இன்று எழுதியிருந்ததை உங்களுக்காக இங்கே இடுகிறேன். (என்னிடம் அலைபேசியில் பேசி முடித்த உடனேயே அவர் இந்த வேலையைச் செய்துவிட்டார். செய்துவிட்டு, உடனே அவர் பக்கத்துக்குப் போய்ப் பார்க்கும்படி எனக்கு மறு குறுஞ்செய்தியும் அனுப்பினார். பெரிய மனிதர்கள் பெரிய மனிதர்கள்தான்.

இதோ  அவர் எழுதியது:

ஞாநி

ஒரு விளக்கம்: : செப்டம்பர் 18 செவ்வாயன்று இரவு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் அமெரிக்கரின் படத்துக்கான கண்டனங்கள் பற்றிய விவாதத்தில் கலந்துகொண்டேன். படத்தைக் கடுமையாகக் கண்டித்தேன். அந்தப் படமும் அதை எடுத்தவர்களும் நாம் பொருட்படுத்துவதற்கான தகுதி கூட இல்லாதவர்கள். இதில் அமெரிக்காவின் உள்நாட்டு அரசியல் முதல், வெளிநாட்டு அரசியல், எகிப்தில் உள்நாட்டு அரசியல், கிறித்துவர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சி எல்லாம் பொதிந்திருப்பது பற்றி சொன்னேன். அதே நேரத்தில் ஒரு பகுத்தறிவாளன் நிலையிலிருந்து எப்படி எல்லா மதங்களிலும் அடிப்படை வாதத்தை உணர்ச்சியை வெறியை ஊக்குவிக்கிற குருமார்கள் இருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் பேசினேன். இழிவுபடுத்தல்தான் தவறு; விமர்சனங்களை ஏற்க வேண்டும் என்று விவாதத்தில் பங்கேற்ற இஸ்லாமியமார்க்க அறிஞரான மருத்துவர் சயீத் சொன்னார். ஜமாத் போன்ற அமைப்புகள் பெரும்பாலும் அடிப்படைவாத மத குருமார்களின் அதிகாரத்தில் இருப்பதால், விமர்சிப்பவர்களை மத விலக்கம் செய்வது நடப்பதை சுட்டிக் காட்டினேன். எழுத்தாளர் நாகூர் ரூமி அவ்வாறு விலக்கப்பட்டார் என்று தவறாக சொல்லிவிட்டேன். நான் சொல்ல நினைத்தது ரசூலின் பெயரை. தவறாக ரூமியின் பெயரை சொல்லிவிட்டேன். அதற்காக ரூமியிடமும் ரசூலிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த விஷயத்தில் இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாத நாகூர் ரூமியின் பெருந்தன்மையும், மன்னிப்பு கேட்டுக் கொண்ட ஞாநியின் பெருந்தன்மையும் நம்மையும் பெருந்தன்மையாக அவர்களை “ஆஹா! ஓஹோ! பேஷ்! பேஷ்!” என்று புகழ வைக்கிறது.

அதெல்லாம் போகட்டும் ஜாகிர் நாயக் போல பிறமதத்தினரின் கேள்விகளுக்கெல்லாம் “மானுட வசந்தம்” என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிவுபூர்வமான விளக்கங்கள் அளிக்கும் நம் காயல் பட்டினம் காக்கா டாக்டர் K.V.S.ஹபீப் முகம்மது அவர்கள் இந்நிகழ்ச்சியில் தன் நிலைபாட்டை சரியாக எடுத்துரைக்கவில்லை என்ற ஆதங்கம் இஸ்லாமிய சகோதரர்களுக்கிடையே நிலவுகிறதே!

அதுதான் நாம் முன்னமே சொல்லி விட்டோமே, “Even Homer sometimes nods” என்று. அப்படி எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

எச்.ஜி.ரசூலை அவரது ஊரின் ஜமாஅத்தார்கள் ஊர்விலக்கம் செய்து வைத்தது உண்மைதான். ஏன் ஊர்விலக்கம் செய்து வைத்தார்கள்? என்ற காரணத்தையும் நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டாமா? “வந்துதிக்காத ஒர் இனத்தின் நபி” – என்ற அவரது அரை குறை அறிவுக் கவிதை பெரிய சர்ச்சையை உண்டு பண்ணியது. அந்த கவிதைதான் இது:

பயானில் கேட்டது
திசையெங்கும் உலகை உய்விக்க வந்துதித்தது
ஒரு லட்சத்து இருபத்துநான்காயிரம்
நபிமார்களென்று.
திருகுரான் காட்டியது
கல்லடியும் சொல்லடியும் தாங்கி
வரலாறாய் மாறியது
இருபத்தைந்து நபிமார் என்று.
ஆதம் நபி…அய்யூப்நபி..
………… ………
ஈசாநபி…மூசாநபி…
இறுதியாய் வந்துதித்த
அண்ணல் முகமது நபி…
சொல்லிக் கொண்டிருந்த போதே
செல்லமகள் கேட்டாள்…
இத்தனை இத்தனை
ஆண் நபிகளுக்கு மத்தியில்
ஏன் வாப்பா இல்லை ஒரு பெண் நபி..?

எச்.ஜி.ரசூல் ஒரு நல்ல அறிவாளி. நல்ல கவிஞர். நல்ல சிந்தனையாளர். இஸ்லாத்தை அரை குறையாக தெரிந்து வைத்துக் கொள்வது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதற்கு எச்.ஜி.ரசூல் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

 – அப்துல் கையூம்

தொடர்புடைய சுட்டி : அசிங்கமும் எதிர்வினையும்

 

Tags: , , , , ,

2 responses to “நாகூர் ரூமிக்கு ஊர்விலக்கமா?

 1. sathick

  September 21, 2012 at 4:23 pm

  நாகூரில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜமாஅத் ஒரு காலத்தில் இருந்தது. இப்பொழுது ஒரே ஒரு ஜமாஅத் பெயரளவுக்கு இருந்த போதிலும், ஜமாஅத் சொல்லிக் கட்டுப்பட்டு அடங்கி ஒடுங்கி நடக்கும் அளவுக்கா நாகூர்க்காரர்கள் நல்ல பிள்ளைகளாக ஆகி விட்டார்களா? என்று என் மண்டைக்குள் ஒரே குஜராத் கலவரம். good dialogue

   
 2. Sultan

  September 22, 2012 at 9:08 am

  அப்துல் கையூம் நானா அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

  இந்த நிகழ்ச்சியை நாங்களும் பார்த்தோம், எங்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. தங்களின் பதிவை படித்துவிட்டு மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.

  KVS குறித்த தங்கள் கருத்துதான் அனைவரின் கருத்தாகவும் இருக்கிறது.

  தங்களின் நிறைய பதிவுகளை படித்துஉள்ளேன் ஆனால் தங்கள் யார் என்று தெரியாது. இந்த முறை நான் ஊருக்கு போய் இருந்த பொது என் மாமாவிடம் கேட்டு திரிந்து கொண்டேன்.

  தாங்களின் எதார்த்தமான நம்மூர் நடை எழுத்தை நான் மிகவும் விரும்பி படித்து வருகிறேன்

   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: