”என் வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைந்து என்னை வளர்த்து உருவாக்கியது நான் பிறந்து வளர்ந்த நாகூர்தான். பல ஊர்களில் இன்று காலம் சுழன்று ஓடி, பல மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தாலும், நாகூர் சிறிது அளவேதான் மாற்றங்களைக் கண்டிருக்கிறது. நாங்க வசித்து வந்த ஏரியா ஒரு குடிசைப் பகுதி. எப்போதும் கலகலப்புடன் இருக்கும். எங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த நாட்டு தொடக்கப் பள்ளியில்தான் என்னுடைய ஆரம்ப படிப்பு இருந்தது. நாங்க வசித்த தெருவின் பெயர்த கொசத் தெரு. அதை அறிவிக்கும் போர்டு தகரம் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் செய்யப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன். என்னுடைய ‘எக்ஸைல்’ நாவலில் நாகூரைப்பற்றி எழுத அந்தத் தெருவுக்குச் சென்றபோது, இன்னமும் அதே இடத்தில் அந்த போர்டு இருப்பதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன்.
எங்கள் ஊர் அனுதினமும் இசை சங்கமத்தில்தான் தத்தளிக்கும். காலையில் எழுந்தவுடன் தர்காவில் இசை ஒலிக்கும். அதைபோல அழகான ஷெனாய் வாத்திய இசையும் கேட்கும். இந்த இசையைக் கேட்டுக்கொண்டே காலையில் எழுந்திருப்பதற்கு கொடுப்பினை வேண்டும். உலகில் நான் கண்ட பல இசைகளில் ஹனிபாவின் இசைக்கு எப்போதும் தனி இடம் உண்டு.
கடல் காற்றின் சத்தம், இரவில் கொத்துப் புரோட்டா போடும்போது எழும் ஓசை என எப்போதும் எங்கள் ஊரைச் சுற்றி பல இசை சூழ்ந்தே இருக்கும். நான் பல ஊர்களுக்குச் சென்று இருக்கிறேன். நாகூரைத் தவிர வேறு எங்கும் கொத்துப் புரோட்டாவில் அப்படி ஒரு சுவையை ருசித்தது இல்லை. மதுரைக்கு எப்படி ஒரு சிறப்பான கலாசாரம், உணவு என்று இருக்கிறதோ.. அதேபோல் நாகூருக்கும் தனிக் கலாசாரம் உண்டு. ‘தம்ரூட்’ என்னும் இனிப்புப் பண்டம், பாக்க அல்வாவைப் போலவே இருக்கும். ஆனால், அல்வா கிடையாது. அதனுடைய சுவையே தனி. நாகூரை விட்டால் வேறு எங்கும் தம்ரூட் கிடைக்காது.
முத்தமிழும் கலந்த கலாசாரம் நாகூரில் உண்டு. உலக அளவில் வீரியமான கலாசாரமும் நாகூரில்தான். எங்கள் ஊரில் சொல்லி வைத்ததுபோல் எல்லோரும் இனிமையாகப் பாடுவார்கள். புரோட்டா மாஸ்டரில் இருந்து பெண்கள் உட்பட பலரும் இரவு நேரம் ஆகிவிட்டால், இசைச் சங்கமத்தில் ஒன்றாக கலந்து விடுவார்கள்.
எங்கள் ஊரில் கிட்டத்தட்ட 200 புலவர்களுக்கு மேல் வசித்து பல வரலாற்று நூல்கள், கவிதைகள், பாடல்கள் என பல அரிய படைப்புகள் இயற்றியிருக்கிறார்கள். அதனால் நாகூருக்கு புலவர் கோட்டை என்கிற இன்னொரு பெயரும் உண்டு. மறைமலை அடிகளுக்கு ஆசிரியராக இருந்தவர் நாகூரைச் சேர்ந்தவர்தான். கிட்டத்தட்ட 10,000 பாடல்களுக்கு மேல் நாகூரில் இருந்து இயற்றி வெளிவந்து இருக்கிறது. பாட்டைப் போலவே நாடகத்திற்கும் மிகப் பிரபலம் நாகூர். தூயவன், அக்பர், கவிஞர் சலீம் எனப் பல படைப்பாளிகள் எங்கள் ஊரில் இருந்து வந்தவர்கள்தான்.
நாகூர் தர்கா மிகவும் பிரசித்தம் பெற்றது என்று எல்லோருக்கும் தெரியும். எனக்கு ஏதாவது மனக் குழப்பம், கஷ்டம் வந்தால் தர்காவுக்குச் சென்று அமர்ந்துவிடுவேன். உடனே மனம் ஆறுதல் அடைந்து விடும். அதேபோல் அங்கு குளிர்ந்த மண்டபம் ஒன்று இருக்கிறது. ஏ.சி போட்டால்கூட அப்படி ஒரு இதமான காற்று வராது. குளிர் காற்று, கூட்டமான புறாக்கள் என அந்த இடமே பார்க்க அமைதியாக இருக்கும்.
மூன்று மதங்களும் ஒன்றாக இருக்கும் கலாசாரம் நாகூரில் உண்டு. தர்கா, சிவன் கோயில், சர்ச் என மூன்றும் ஒன்று சேர்ந்த இடம் நாகூர்தான். மத வித்தியாசம் இல்லாமல் மரபை உடைத்து நான் எழுத முடிந்ததற்கு காரணம், இங்கு சிறுவயதில் வாழ்ந்து பதிந்த உணர்வுகள்தான். 40 ஆண்டுகள் கழித்து எங்கள் ஊரைப் பற்றி ‘எக்ஸைல்’ நாவலில் எழுதுவதற்காக அங்கே சென்று இருந்தேன். 40 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்ததோ இன்னமும் நாகூர் மாறாமல் அப்படியேதான் இருக்கிறது. மக்களின் அன்பும் கூட!”
நா.சிபிச்சக்கரவர்த்தி
படங்கள்: செ.சிவபாலன், சொ.பாலசுப்பிரமணியன்
One response to “இசை சூழ்ந்த ஊர் – நாகூர்”