RSS

புலவர் இரெ.சண்முகவடிவேல்

10 Aug

sanmugam1

திருவாரூர் இரெ. சண்முகவடிவேல் அவர்கள் நாடறிந்த நற்றமிழ்ப் புலவர்; தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பட்டிமண்டபங்களில் தமிழ் வளர்க்கும் இலக்கிய சொற்பொழிவாளர்;  ‘தமிழகம் அறிந்த சான்றோர்’,  ‘திருக்குறள் கதையமுதம்’ உள்ளிட்ட நூல்களை எழுதியவர். இவரும் புலவர் சீனி சண்முகம் அவர்களும் இணைந்து பங்கு பெறும் பட்டிமன்றங்கள் என்றால் நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது. இவர்கள் இருவரோடும் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.  தமிழறிஞர்களோடு சேர்ந்து இலக்கியக் கூட்டங்களுக்கு செல்கையில் அவர்கள் பெற்ற அனுபவங்கள், சிலேடைப் பேச்சுக்கள், புதிரான வினாக்கள், சமயோசிதமான பதில்கள் இவைகளை மணிக்கணக்கில் கேட்டுக் கொண்டே இருக்கலாம். இன்பத்தமிழின் இலக்கியச் சுவையை இதமாக பருகியதில் இதயமெலாம் இன்புற்று மகிழும். இவர்கள் இருவரையும் நாகூரின் இலக்கிய இரட்டைக் குழல் துப்பாக்கி என்று சொன்னால் மிகையாகாது. புலவர் சீனி சண்முகம் அவர்கள் நாங்கள் தொடங்கியுள்ள நாகூர் தமிழ்ச்சங்கத்தின் நெறியாளராக பதவி வகிக்கிறார்.

நாகூர் தமீழ்ச் சங்கம் 2

நாகூர் தமிழ்ச் சங்கம்

புலவர் இரெ.சண்முக வடிவேல் அவர்கள் திருக்குறள் முனுசாமி அவர்களுடன் தனக்கேற்பட்ட சுவையான அனுபவங்கள் இதோ நம்மிடையே பகிர்கிறார்.

ஷன்முக வடிவேல்

 

 

 

நாங்கள் நண்பர்களாகக் கூடி இலக்கியக் கூட்டங்களில் பேசச் செல்வோம்.

பயணங்களில் அல்லது தங்கியிருக்கும் இடங்களில், பேசும் மேடைகளில் என்று எங்கும் சுவையான நிகழ்ச்சிகள் நடக்கும். இன்று அவற்றை நினைக்கும்போது ஒரு புறம் மகிழ்ச்சி சுரக்கும். இன்னொரு புறம் இன்று அவர்கள் இல்லையே என்ற ஏக்கம் பிறக்கும்.

திருக்குறள் முனுசாமியார் திருக்குறளை சிரிக்கச் சிரிக்கப் பேசி யாவரையும் சிந்திக்கத் தூண்டுவார். நாங்கள் அவரோடு சேர்ந்து சென்ற நிகழ்ச்சிகள் பல உண்டு. அவ்வாறு அவரோடு போகும்போது அவர் பேசுவதும் நடப்பதும் நினைக்க நினைக்க இனிப்பன ஆகும்.

நாகூரில் இலக்கிய விழாவில் பேசவந்தார். தங்கியிருந்த இடத்திலிருந்து சொற்பொழிவு மேடை உள்ள இடம் ஒரு கிலோ மீட்டர் தொலைவு இருக்கும். அழைத்துப்போக ஒரு கார் சொல்லியிருந்தோம். அந்த கார் உரிய நேரத்தில் வரவில்லை. நான் வாசலுக்கும் உள்ளுக்குமாகப் போய்வந்தபடி இருந்தேன். அதைக் கண்ட திருக்குறளார், “”ஏம்பா சண்முகவடிவேலு, நீ காருக்கு சொன்னேன்னு சொல்றியே அது கனவுலயா? நனவுலயா?”  என்று கேட்டார்.

“உண்மையாவே சொல்லிவச்சேன்யா, ஏதோ காரணம் தெரியலே. அவனை இன்னும் காணலே.” என்றேன் நான்.

“அது ஏதாவது இருந்துட்டுப் போவுது, வா,  நாம நடந்தே போவோம்.” என்று புறப்பட்டு வெளியில் வந்தார்.

நானும் அவரும் நண்பர் சீனி. சண்முகமும் பேசிக்கொண்டே  நடந்து வந்தோம். அப்போது அவர் சொன்னார்,

“இப்ப நாம சேர்ந்து நடந்து போறது ரொம்ப நல்லதுப்பா. ஏன்னா இது பெரிய விளம்பரம். நூறு வால் போஸ்டர் அடிச்சு ஒட்டுனா மாதிரி ஆயிட்டுது. அதுசரி, நூறு போஸ்டர் அடிக்க எவ்வளவு செலவாகும்?” என்று கேட்டார்.

“”இருநூறு ரூபா ஆகும்.” இது சீனி, சண்முகம்.

“”அப்போ அந்த இருநூறு ரூபாயை என்கிட்டே குடுத்துடு.”

“”சரிங்கய்யா.”

“”சரின்னு சொன்னா போதாது.  இப்பவே குடு.”

எல்லாரும் சிரித்து மகிழ்ந்து, நடந்த அசதி தெரியாமல் பேசுமிடம் சென்றோம்.

ஒரு பள்ளியில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தோம். கூட்டம் சரியாகச் சேரவில்லை. ஒரு மணி நேரம் ஆனால் கூட்டம் சேர்ந்துவிடும். அப்புறம் ஆரம்பிக்கலாம் என்று நினைத்தோம்.

ஓர் அறையில் தங்கிப் பேசிக் கொண்டிருந்தோம். அந்த நாளில் திருக்குறளார் சிகரெட் புகைக்கும் பழக்கம் கொண்டிருந்தார். பர்கிலி சிகரெட் என்ற சிகரெட் வாங்கி வருமாறு சொன்னார். ஒரு பாக்கெட் பர்க்லி சிகரெட் வாங்கி வந்து கொடுத்தோம். சிகரெட் பாக்கெட்டைப் பிரித்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைக்கும் நேரம், நாகப்பட்டினத்திலிருந்து முதுபெரும் புலவர்களான வை.மு. சண்முகதேசிகர், சின்னப்பாப் பண்டிதர் போன்ற பெருமக்கள் உள்ளே வந்தார்கள். திருக்குறளாரோடு உரையாடுவதற்காக ஆர்வமாக வந்தார்கள். திருக்குறளாரோ அவர்கள் முன்னே எப்படி புகைப்பது என்று தயங்கினார். பேச மேடையேறுவதற்கு முன்னர் புகைபிடித்துவிட நினைத்தார். என்ன செய்வது என்று புரியாமல் சில வினாடிகள் யோசித்தார். ஒரு முடிவுக்கு வந்தவராக என்னை அழைத்து பக்கத்தில் வைத்துக்கொண்டார்.

சிகரெட் பாக்கெட்டை சண்முக தேசிகர் ஐயா பக்கம் நீட்டி,’ “எடுத்துக்கங்க’ என்றார். தேசிகர் ஐயா முதலில் அதிர்ச்சி அடைந்தார். அவர் வாழ்க்கையிலேயே இப்படி ஒரு அனுபவம் அடைந்திருக்க மாட்டார். நெற்றியில் திருநீறும் குங்குமமும், கழுத்தில் உருத்திராட்சம், முழுமையான குடுமி. இப்படிப்பட்ட தோற்றத்தோடு இருப்பவரிடம் சிகரெட்டை நீட்டி எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதற்கே ஒரு தைரியம் வேண்டும்.

தேசிகர் ஐயா எப்போதும் சிரித்த முகமாக இருப்பவர். இப்போது சற்று அதிகமாகவே சிரித்தபடி, “நீங்க பிடிங்க’ என்று கூறினார். இதுபோலவே ஏனைய பெரியவர்களிடமும் நீட்டி, அவர்களையும் “நீங்க பிடியுங்க’ என்று சொல்லச் செய்தார். சீனி. சண்முகம் சும்மா இல்லாமல், “”எல்லார் கிட்டயும் எடுத்துக்கச் சொன்னீங்க. சண்முகவடிவேல் கிட்ட ஏன் சொல்லாம விட்டீங்க?” என்று கேட்டார்.திருக்குறளார், “”மத்தவங்ககிட்டே காமிச்சு எடுத்துக்குங்கன்னு சொன்னேனே, யாராவது எடுத்தாங்களா? எடுக்காதவங்களா பாத்துதான் காமிச்சேன், சண்முகவடிவேலுகிட்டே நீட்டினா அப்புறம் “ஒன்னு குடுப்பா’ன்னு நான் அவருகிட்டே கெஞ்சனும். நான் அவங்ககிட்டே எல்லாம் சிகரெட் பாக்கெட்டைக் காட்டி எடுத்துக்கங்கன்னு  சொன்னது எதுக்குன்னா,

அவங்களுக்கு குடுக்கறதுக்கு இல்லே, அவங்க முன்னால சிகரெட் பிடிக்கிறதுக்கு பர்மிஷன் வாங்கறதுக்குத்தான் அவங்க சொன்னாங்க, பாத்தீங்களா, “நீங்க பிடிங்க’ன்னு அதுதான் பர்மிஷன். அத வாங்கறதுக்குத்தான். இதைக்குடுக்கற மாதிரி காமிச்சேன்” என்று சொன்னதும் எல்லாரும் சிரித்தோம், அவர் புகைத்தார். பிறகு மேடைக்குச் சென்றோம்.

அன்று அவர் பேசுவதற்குப் போனபோது அன்றைய கூட்டத் தலைவர் அவரோடு பேசியபடி சென்றார்.

அப்போது அந்தத் தலைவர் திருக்குறளாரிடம், “அனுமார் ஏன் பிரம்மச்சாரியாய் இருந்தார்’ என்ற விஷயத்தை விளக்கவேண்டும் என்று ஆணையிடுவதுபோல கூறினார்.

அதில் குறளார் மனம் வருந்தியிருப்பார் என்று நினைக்கிறேன். தன் பேச்சில் குறளார் இந்தச் செய்தியைக் குறிப்பிட்டார். “”தலைவர் ரொம்பக் கெட்டிக்காரர். ஆஞ்சநேயர் ஏன் கல்யாணம் செய்துக்கலைங்கறதைச் சொல்லுங்கன்னு கேட்டார். ஏதோ இவரு அவருக்குப் பொண்ணு குடுக்கத் தயாரா இருந்தமாதிரியும் அவரு பிரம்மச்சாரி ஆயிட்டதாலே எல்லாமே கெட்டுப் போயிட்ட மாதிரியும் பேசுறாரு. இப்ப அனுமாரு கல்யாணம் பண்ணிக்காம போயிட்டதாலே என்ன கெட்டுப்போச்சி? தலைவரு கல்யாணம் பண்ணி பிள்ளை குட்டியெல்லாம் பெத்து எடுத்தாரே, என்னா உலகமே அதுனால நன்மையடைஞ்சிட்டுது? அவனுக்குப் புடிக்கலை அவன் கல்யாணம் பண்ணிக்கல்லே, அது அவன் சொந்த விவகாரம். அதுலல்லாம் போயி நாம தலையிடக்கூடாது. என்னா தலைவரே சரிதானா?” என்று சொல்லிவிட்டு அவர் பக்கம் திரும்பினார். அவர்  பாவம், தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்துவிட்டார்.

அனுமன் விஷயத்தை குறளார் அதோடு விடவும் இல்லை, “”அவன்தான் எப்படி ஐயா கல்யாணம் பண்ணிக்குவான்? இராமன் சொல்றான், “எம்பொண்டாட்டி சீதையை இராவணன் தூக்கிக்கிட்டுப் போயிட்டான்’னு. அதோடு போச்சா? சுக்ரீவன் சொல்றான் “எம்பொண்டாட்டி உருமையை என்னோட அண்ணன் வாலி தூக்கிக்கிட்டுப் போயிட்டான்’னு. பாவம் அனுமாரு அவரு நெனச்சாரு, அப்போ, கல்யாணம் பண்ணிக்கிட்டா பெண்டாட்டியை எவனாவது தூக்கிட்டுப் போயிடுவான் போலருக்கு. ஏன் கல்யாணம் பண்ணனும்? அவளை இன்னொருத்தன் தூக்கிக்கிட்டுப்போவனும்? வேண்டாம்போ கல்யாணமும் வேண்டாம். எவனும் தூக்கிக்கிட்டுப் போவவும் வேண்டாம்னுட்டுதான் கல்யாணம் பண்ணிக்காமலே இருந்துட்டான்”னு ஒருபோடு போட்டார்.

திருக்குறளார் அனுமனைக் கேலி செய்வதற்காக அப்படிக் கூறவில்லை. ஒரு வேடிக்கைக்காகத்தான் சொன்னார். எல்லாரும் சிரித்துச் சுவைத்தார்கள்.

கணவன்- மனைவி என்றால் அப்படித்தான்ஒருமுறை திருக்குறளார் பேசும்போது, கணவன்- மனைவி எப்படி ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதை விளக்கினார். அவருடைய பேச்சில் எளிமையும் நடைமுறை வாழ்க்கைக்கு வேண்டிய நல்ல செய்திகளும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவி இணைந்து நடத்தும் இல்லறத்தில் என்னென்ன பிரச்சினைகள் தோன்றும் என்பதையும், அதைத் தீர்க்கும் வழிகளையும் திருக்குறள் துணையோடு அவர் விளக்கும்போது கூட்டம் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கித் தத்தளிக்கும்.

கணவன்- மனைவிக்கு இடையே நிகழும் பூசல்களைப் பற்றிச் சொல்லும்போது, குடும்பம் என்றால் கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு எழத்தான் செய்யும் என்று சொல்லி அதனை விளக்கினார்.

கலந்து உரையாடும்போது, வெவ்வேறு கருத்து தோன்றத்தான் செய்யும். உட்கார்ந்து பேசி, யார் கருத்தில் நல்லது இருக்கிறது? யார் கூறுவதில் தீமை இருக்கிறது? என்பதையெல்லாம் பேசித் தீர்த்துக்கொண்டால் எல்லாம் நன்மையாக முடியும். குடும்பம் இன்பமான குடும்பமாக இருக்கும்.

அதற்கு எடுத்துக்காட்டாக ஒன்றைச் சொல்லுவார். திருமணமாகி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் ஒருவர் கேட்கும் கேள்வியையும் பதிலையும் அனாயசமாகக் கூறுவார்.

“”தம்பி கல்யாணம் பண்ணி நாலு வருசமாச்சே எப்படி இருக்கே? என்னா பண்ணிக்கிட்டு இருக்கே?”

“”ஆமாங்க. இந்த நாலு வருசத்துல பகவான் ரெண்டு புள்ளைங்க குடுத்திருக்காரு.”

“”ஓ! அப்படியா? பகவான் இன்னம் குடுப்பாரா?”

“”குடுப்பாரு, குடுப்பாரு. குடுக்காம எங்க போயிடுவாரு? ரெண்டு குடுத்தவரு இன்னம் ஒன்னு ரெண்டு குடுக்காமலா போயிடுவாரு.”

“அதான் சரி. நல்லா இருப்பே போயிட்டு வா.”

“இப்படிச் சொல்றானே, இவன் உருப்படுவானா?’ என்று கேட்டுவிட்டு மேலும் சொல்வார்.

“”பகவானுக்கு இந்தப் பய என்னா வேலை குடுத்துருக்கான் பார்த்தீங்களா?”

சிரிப்பும் சிந்தனையும் அலைமோதும்.

“கல்யாணம் பண்ணிய பிறகு வீட்டுக்கு என்ன நன்மை செய்தாய்? நாட்டுக்கு என்ன நன்மை செய்தாய்? என்று யோசிக்க வேண்டாமா? சிந்திக்க வேண்டாமா?’ என்பார்.

வேலையில்லா வீணர்கள்

“”ஒருநாள் நான் விழுப்புரத்துல கடைத்தெருவுக்குப் போனேன். போகும்போது சலவை செய்த வேட்டி சட்டை அணிந்து வெள்ளை வெளேர்னு புறப்பட்டேன்.

போறபோது வழியில மழைத் தண்ணி தேங்கிக் கிடந்துச்சு. நான் ஒதுங்கி ஓரமாக நடந்தேன். ஒரு கார் வேகமாக வந்து, அந்தச் சேற்று நீரை என்மீது வாரியடித்துவிட்டு, அதுவேலை முடிஞ்சுதுன்னு போயிட்டுது.

நான் அப்படியே ஒரு கதர்க்கடைக்குப் போயி,

ஒரு நாலு முழ வேட்டியும் ரெடிமேட் சட்டையும் வாங்கி அணிந்து புறப்பட்டேன். பழைய வேட்டி சட்டையை ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டேன். கடைத்தெருவில் என் வேலைகளை முடித்துக்கொண்டு மூன்று மணி நேரம் கழித்து வீட்டுக்குக் கிளம்பி நடந்து வந்தேன்.

எங்க வீட்டுக்குத் திரும்புற முனையில் ஒருத்தன் நான் கடை வீதிக்குப் போகும்போது நின்று கொண்டிருந்தான். இப்போது நான் திரும்பும்போதும் அதே இடத்தில் நின்றான்.

அவன் எங்கிட்ட கேட்டான் பாருங்க, நான் அசந்து போயிட்டேன். “என்னா சார், போறப்போ சலவை சட்டை போட்டுக்கிட்டுப் போனீங்க. வரும்போது புது வேட்டி சட்டையோட வாரீங்க. என்னா சேதி?

எனக்கு ஆச்சரியம் என்னா தெரியுமா? சலவை சட்டையும் வெள்ளைதான். புதுச்சட்டையும் வெள்ளைதான். இந்தப் பயலுக்கு ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம் தெரிஞ்சிருக்கு. அப்போ, அந்த அளவுக்கு என்னைக் கவனிச்சிருக்கான். அங்கயே நிக்கிறான். அங்க இங்க நகரவே இல்லை. இந்த மாரி தன்னை உயர்த்திக்கணும்கற கவலை இல்லாம, இன்னொருத்தனை இந்த அளவுக்கு கவனிக்கிறானே, இவனை மாதிரி ஆளுங்க இருக்கறவரைக்கும் நம்ம நாடு தேறுமா? அவனவனுக்கும் ஒரு வேலை இருந்தா இப்படி இன்னொருத்தனைக் கவனிச்சிக்கிட்டு வீதியோரமா நிற்பானா?

அர்த்தம் நிறைந்த கேள்வியைக் கேட்டு, சிந்திக்க வேண்டும். ஏ, மனிதா! எங்கே போகிறாய்?” என்பார் குறளார். நமக்கும் சிந்தனை சுடர்விடும்.

நாகையில் நடந்த ஆராய்ச்சி

ஒருமுறை நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் கோவிலில் பேசுவதற்காக குறளார் வந்திருந்தார். நாங்கள் அவர் பேச்சைக் கேட்கும் ஆர்வத்தில் நாகூரிலிருந்து சென்றோம். அவர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பிறகு காரில் கோவிலுக்குப் புறப்பட்டோம். அந்தக் கோவில் அறங்காவலர் எங்களோடு வந்தார்.

அந்த அறங்காவலருக்குத் தன்னை ஒரு விவரம் தெரிந்தவராகக் காட்டிக் கொள்ள ஆசை. அதனால் காரில் போகும்போதே குறளாரிடம் எதை எதையோ பேசிக்கொண்டே வந்தார். கடைசியில் முத்தாய்ப்பாக, “பேச்சுன்னா சிரிக்க வைக்கிற பேச்சா இருக்கக்கூடாது ஐயா, ஆராய்ச்சியோடு இருக்கணும் பேச்சு, ஆராய்ச்சி பண்ணிப்பேசுறதுதான் பேச்சு.’ என்றார்.

திருக்குறளார் நகைச்சுவையாகப் பேசுவதில் வல்லவர். அவரிடம் சிரிக்க வைக்கிறதெல்லாம் வெறும் பேச்சு. ஆராய்ச்சியோடு பேசுவதுதான் பெரும் பேச்சு என்ற அறங்காவலரின் பேச்சு அவர்மேல் சினத்தை உண்டாக்கியது. அந்த வேகத்துடன் மேடையேறிய திருக்குறளார், அறங்காவலரை உண்டு இல்லையென்று ஆக்கும் ஆவேசத்தில் இருந்தார்.

பேசுகிற கோவில் காயாரோகணசாமி -நீலாயதாட்சி அம்மன் கோவில். கோவிலையே அறங்காவலர் விருப்பப்படி ஆராய்ச்சி செய்துவிட முடிவெடுத்து விட்டார்.

தொடக்கத்திலேயே ஆராய்ச்சியை ஆரம்பித்தார். “”இங்க இருக்கிற சாமி பேரைப் பாருங்க காயாரோகணர். அம்பாள் பேரைப் பாருங்க நீலாயதாட்சி அம்மன். எதையும் நல்லா ஆராய்ச்சிப் பண்ணித்தான் பேசணும். நம்ம அறங்காவலர் ஒரு உத்தரவே போட்டுட்டாரு ஆராய்ச்சியாப் பேசணும்னு. நான் ஒரு ஆராய்ச்சி பண்ணியிருக்கேன். அவரு எங்கப்பா அறங்காவலரு, கூப்பிடுங்க. ஆராய்ச்சி பண்ற நேரத்துல அவரு பாட்டுல எங்கயாவது போயிடப் போறாரு. நல்லா கேட்டுக்கங்க அறங்காவலரு. இங்கு இந்தக் கோவில்ல இருக்கற சாமியும் அம்மனும் எகிப்து நாட்டுலேருந்து வந்தவங்க. இதை நான் ஆராய்ச்சி பண்ணிக் கண்டுபிடிச்சேன்.  எப்படின்னு கேக்கறீங்களா? சொல்றேன்.

எகிப்து நாட்டுத் தலைநகரம் கெய்ரோ. அங்கேருந்து வந்தவருங்கறதாலதான் “கெய்ரோ ராகனர்’ன்னு பேரு.

அந்தப் பேருதான் நாளடைவில மருவி காயாரோகணர்னு ஆயிடுச்சி. நம்ம ஆளுதான் பொள்ளாச்சியையே புள்ளதாச்சி ஆக்குவானே! தலைநகர் கெய்ரோவிலிருந்து வந்ததாலே காயாரோகணர்னு ஆச்சுதா?

அப்புறம் பாருங்க. அங்க ஓடுற ஆற்றுக்குப் பேரு என்னா? நைல் நதி, நைல் நதியே பெண்ணா மாறி வந்தாங்க. அதனாலதான் நைல் ஆய தாட்சி என்பது நீலாயதாட்சின்னு மருவி வந்துட்டு.

ஆக, நம்ம காயாரோகணரும் நீலாயதாட்சியும் எகிப்து நாட்டுல இருக்கப் பிடிக்காம நாகப்பட்டினத்துக்குக் கடல்வழியா வந்து கோவில் கொண்டு அருள்புரிஞ்சிகிட்டு இருக்காங்க. என்னாய்யா அறங்காவலரு நம்ம ஆராய்ச்சியும் கண்டுபிடிப்பும் எப்படி?”

இவ்வாறு குறளார் பேசியதைக் கேட்ட பெரியோர்கள் எல்லாரும் அந்த அறங்காவலரை கடுமையாக கடிந்து பேசினார். யாருகிட்டேபோயி என்னாய்யா சொன்னே? அப்படியெல்லாம் சொல்லலாமா?’  என்று கேட்டார்கள்.  அறங்காவலர் தலைகுனிந்து நின்றார்.

திருக்குறளார் இப்படிச் சில நேரங்களில் ஆராய்ச்சி செய்து அசத்திவிடுவார்.

டபாய்க்கிறே ஆராய்ச்சி சென்னைத் தமிழில் டபாய்க்கிறே என்று  ஒரு “சொல்லாட்சி’ உண்டு.

அதைப் பற்றித் திருக்குறளார் ஒருமுறை ஆராய்ச்சி நடத்தினார்.

“”டபாய்க்கிறேங்கறது சென்னையிலுள்ள ரிக்ஷாக்காரர் மொழின்னு லேசா நினைச்சிடாதீங்க. அதுவும் நல்ல தமிழ்தான். ஏன்டா+ அப்பா+ ஏய்க்கிறே என்கிற மூன்று சொற்களின் சேர்க்கைதான் டபாய்க்கிறே என்பது.

“ஏன்டா அப்பா ஏய்க்கிறே’ என்ற மூன்று சொற்களையும் ரிக்ஷாக்காரர்களில் தோன்றிய சில அறிஞர்கள் என்னா செஞ்சாங்கன்னா, ஒரு அமுக்கு அமுக்கினாங்க. அவ்வளவுதான். ஏன்டாவுல “ட’ மட்டும் மிஞ்சிச்சி. அப்பாவுல “பா’ மட்டும் மிச்சம் பாக்கியெல்லாம் அம்பேல்! “ஏய்க்குறே’யில் “ய்க்கிறே’ மட்டும் மிச்சமாச்சுது.  ஏ மட்டும் அம்பேல்!

ட+ பா+ ய்க்கிறே சேந்து “டபாய்க்கிறே’ ஆச்சுது! இப்ப உள்ள “மொழி அறிஞர்’கள் அதை என்னா நைனா டபாய்க்கிறியா”ன்னு பேசி மொழியை வளமாக்குறாங்க என்று கேலி பேசுவார்.

“ஏ, மனிதா!’ என்றும், “சிந்திக்க வேண்டும்’ என்றும் அடிக்கடி குறளார் சொல்லுவார்.

சில வார்த்தைகளை அவர் சொல்லும்போது அப்படியே மனதில் பதிந்துவிடும். உரிய சந்தர்ப்பங்களில் திருக்குறளார் ஐயா இப்படிச் சொல்வார்களே என்ற எண்ணம் உண்டாகும்.

ஒருமுறை ஒரு ஊரில் நிகழ்ச்சி நடத்தும் இளைஞர்கள் எங்களுக்கு உணவு பரிமாறினார்கள். வீட்டில் தயாரித்த நல்ல உணவுகளைத்தான் தந்தார்கள். இட்டிலி நன்றாக இருந்தது. சட்னி தண்ணீர் அதிகமாகி நிற்காமல் ஓடுகிறது. குறளார் சொன்னார், “”சாப்பிடுப்பா, இது வெறும் சட்னி அல்ல, வாட்டர் பரீஸ் காம்பவுண்டு”. அதைக் கேட்டதும் எங்களுக்கு சிரிப்பு பொங்கியது. இருந்தாலும் இளைஞர்கள் வருந்துவார்களே என்று சிரிப்பை அடக்கிக்கொண்டோம். அந்த இளைஞர்கள், “”ஐயா மன்னிச்சுக்குங்க. கொஞ்சம் தண்ணி அதிகமாயிட்டுது.” என்று வருத்தம் தெரிவித்தார்கள்.

குறளார் சொன்னார், “”நான் ஒன்னும் தப்பா சொல்லலே தம்பிங்களா. “வாட்டர் பரீஸ் காம்பவுண்டு ‘ ஒரு டானிக். அதுமாதிரி இந்தச் சட்னியும் நல்ல டானிக்குன்னு சொன்னேன் அவ்வளவுதான்.”

இன்றும் எங்காவது, எப்போதாவது சட்னி தண்ணீர் அதிகமாக இருந்தால் எனக்குக் குறளார் சொன்ன வாட்டர் பரீஸ் காம்பவுண்டு நினைவில் வரும். உடனே ஐயாவோடு பழகிய நாள்கள் நினைவுக்கு வரும். ஐயா இன்று இல்லையே என்ற ஏக்கம் உண்டாகும்.

அந்த நாள்களில் திருக்குறளார் முனுசாமி அவர்களுடன் சென்று வந்ததும், அவர் பேசிய பேச்சும், நடந்துகொண்ட விதமும் நினைந்து மகிழ்த்தக்கனவாகும்.

நல்ல செய்திகளை நகைச்சுவை ததும்ப வழங்குவார். திருக்குறளை அழுத்தமாக எல்லார் மனத்திலும் பதியவைப்பார். திருக்குறளைப் பரப்பியதில் அவருக்கும் ஒரு பங்குண்டு. திருக்குறளார்- அவரோடு பழகியவர்கள், அவர் பேச்சைக் கேட்டவர்கள் என எல்லார் நெஞ்சிலும் எப்போதும் இருப்பார்.

– புலவர் இரெ.சண்முகவடிவேல்

நன்றி : நக்கீரன் 

————————————————————————————————————————————————————————-

சாரு நிவேதிதா

நாகூரில் கண்ணையன் சாரைத் தவிர மற்றும் பல ஹீரோக்கள் இருந்தார்கள். தமிழாசிரியர் சீனி.சண்முகம் சாரை மறக்கவே முடியாது. அவர் வகுப்பு எடுத்தால் வகுப்பறை அமளிதுமளிப்படும். பட்டிமன்றப் பேச்சாளராகவும் விளங்கினார். ஆரம்பத்தில் அவர் தமிழாசிரியாக இல்லை. மாறாக, நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது எனக்கு வகுப்பு ஆசிரியராக இருந்தார். பின்னர், மூன்றாம் வகுப்பு மாறியபோது மூன்றாம் வகுப்பின் ஆசிரியர். பிறகு, நான்காம் வகுப்பிலும்… பிறகுதான் புலவர் படிப்பு முடித்து நான் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்புக்குப் போனபோது தமிழாசிரியராக ஆனார்.

சாரு நிவேதிதா

 

 

Tags:

One response to “புலவர் இரெ.சண்முகவடிவேல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: