RSS

சாருநிவேதிதாவும் நோஸ்டால்ஜியாவும்

30 Aug

 

charu

ஒரு மனிதனுக்கு தேசப்பற்று, மொழிப்பற்று எந்தளவுக்கு முக்கியமோ அதேபோன்று  “ஊர்ப்பாசம்”என்பதும் இன்றிமையாத ஒன்று.  இதனை “ஊர்ப்பற்று” என்று கூறுவதை விட “ஊர்ப்பாசம்” என்று சொல்வதே சாலப்பொருத்தம் என்பேன். பற்றினைக் காட்டிலும் பாசமென்பதை ஆகுமான மட்டும் அள்ளி அள்ளி பொழிய முடியும் அல்லவா?

“சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு” என்று பாடினார் கவிஞர் வைரமுத்து. “அதெப்படி அவ்வளவு தீர்க்கமாக சொல்கிறீர்கள்?” என்று அவரிடம் கேட்டதற்கு “சேலை கட்டும் பெண்கள் தங்களின் கூந்தலில் மல்லிகைப்பூ சூடுவார்கள். அதற்கென்று பிரத்யேக மயக்கும் வாசம் உண்டு” என்றார் ‘நச்’சென்று.

சேலைகட்டும் பெண்களுக்கு வாசமுண்டோ இல்லையோ  யாமறியேன் பராபரமே. ஆனால்  அவரவர் பிறந்த மண்ணிற்கென தனியொருவாசம்; தனித்தன்மை;  தவறாமல் உண்டு.    “சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா” என்ற திரைப்படப்பாடல்தான் இத்தருணம் என் நினைவுக்கு வந்தது.

ஊர்ப்பாசத்தை உலகுக்கு பறைசாற்ற தங்கள் பெயருக்கு முன்னால் ஊர்ப்பெயரை சூட்டிக்கொண்ட பிரபலங்கள்தான் எத்தனை எத்தனை?

நாகூர் ஹனீபா,  திருச்சி லோகநாதன்,   குன்னக்குடி வைத்யனாதன், மதுரை சோமு, வலையப்பட்டி சண்முகசுந்தரம், லால்குடி ஜெயராமன், மகாராஜபுரம் சந்தானம், செம்மங்குடி சீனிவாச ஐயர், நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், உமையாள்புரம் கே. சிவராமன்,  சீர்காழி கோவிந்தராஜன், சிதம்பரம் ஜெயராமன், தாராபுரம் சுந்தர்ராஜன், தஞ்சை ராமையாதாஸ், ஆரூர் தாஸ்,  நாமக்கல் கவிஞர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், குன்றக்குடி அடிகளார் என்று  ஏராளமான பெயர்களை வரிசைப்படுத்திக்கொண்டே போகலாம்.

ஊர்ப்பாசம் என்பது உள்ளார்ந்த உணர்வு. தானாகவே வருவது. தன்னை அறியாமலேயே பீறிட்டெழுவது. அதற்கு வயதில்லை. அளவுகோல் இல்லை. ஆறிலும் வரும்; ஐம்பதில் வரும். ஆத்மார்த்த ரீதியில் ஏற்படும் உள்ளுணர்வு அது. இசையையும் எழுத்தையும் நேசிப்பவர்களுக்கு சற்று அதிகமாகவே வருவது.

இசையை நேசிப்பவர்கள்தான் ஊரையும் அதிகம் நேசிக்கிறார்கள் என்பது என் நியூட்டன் மூளைக்கு எட்டிய சிறுகண்டுபிடிப்பு.

தங்கள் பெயருக்கு முன்னால் ஊர்ப்பெயரை இணைக்காமலேயே, தனது ஊரின் பெருமையை அவ்வப்போது சிலாகித்துப் பேசி, எழுதி, நமக்குணர்த்ய நாயகர்கள் நிரம்ப உண்டு.

காஞ்சிபுரம், பண்ணைபுரம்,  சூரக்கோட்டை,  வடுகப்பட்டி, பரமக்குடி, திருக்குவளை என்ற பெயரை நாம் கேட்ட மாத்திரத்திலேயே  அறிஞர் அண்ணா, இளையராஜா, சிவாஜிகணேசன், வைரமுத்து, கமலஹாசன், கலைஞர் கருணாநிதி – முறையே இவர்களின் முகம்  நம் விழித்திரையில் வந்து விழுந்து விடுகிறது.

நம்மூரைச் சார்ந்த சாரு நிவேதிதாவும் இதற்கு விதிவிலக்கல்ல. எனக்கு ஊர்ப்பாசமே கிடையாது என்பார். ஆனால் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்  அதன் புராணம் பாடுவார். ஊர்ஏக்கம் அறவே இல்லை என்பார் ஆனால் அவ்வப்போது அதன் நினைவுகளில் வாடுவார்.

ஒரு மனிதனுக்கு எப்போது ஊர்ஞாபகம் வரும்? தனிமையில் வாடும்போதா? அல்லது சோகத்தில் மூழ்கும்போதா? அல்லது மகிழ்ச்சியில் திளைக்கும்போதா? அல்லது போதையில் மிதக்கும்போதா? இவ்வுணர்வு ரஜினி மாதிரி. எப்ப வரும்? எப்படி வரும்? யாருக்குமே தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்துலே கரெக்ட்டா வந்துடும்.

கண்ணிமை கவிழும் போதும்
கனவுகள் தவழும் போதும்
என்னையே தொலைத்து விட்டு
எங்கெங்கோ தேடும் போதும்
பொன்மணியோடு கொஞ்சம்
பூர்வீகம் பேசும் போதும்
என்னையே பிழியுமம்மா…
எங்களூர் ஞாப கங்கள்.
 

என்று “தொட்டில் கனவுகள்” என்ற கவிதையில் அனுபவித்து எழுதுகிறார் கவிஞர் வைரமுத்து.

அவரது ஊருக்கென்று வானாளவிய வரலாற்றுப் பெருமைகள் வரிசைப்படுத்தி பேசுமளவுக்கு ஒன்றுமே கிடையாதாம். இருந்தபோதிலும் அவருக்கு தன் ஊர்மீது இணைபிரியா பந்தம், அளப்பரிய பாசம். அப்படியொரு பிணைப்பு. ஏன்? எதனால்? தன்னை தாலாட்டி சீராட்டி வளர்த்த ஒரே காரணத்தால் என்கிறார்.

 குளங்களும் இல்லை மன்னர்
கோவில்கள் இல்லை ஊர்க்கு
விளம்பரம் இல்லை ராஜ
வீதிகள் இல்லை சுற்றி
வளங்களும் இல்லை சோலை
வனங்களும் இல்லை என்னை
வளர்த்த ஊர் என்பதன்றி
வரலாறும் அதற்கும் இல்லை…
 

என்று அவரே வாக்குமூலம் தருகிறார். அதுமட்டுமல்ல, தமிழகத்து தலைநகரில் வாகைசூடி வாழ்ந்தாலும் தனது கடைசி காலத்தில் தனது சொந்த மண்ணிலேயே அடைக்கலமாகி அடங்கி போகவேண்டுமென ஆவல் கொள்கிறார்.

அரண்மனையில் வாழ்ந்தாலும், அரசாட்சி செய்தாலும், ஆறடி மண்தான் நமக்குச் சொந்தம் என்ற உண்மையை அறிந்தவர் கவிஞர். அந்த ஆறடி மண்ணும் தன் ஊர் மண்ணாகவே இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுவதில் என்ன தவறு இருக்க முடியும்?

சொல்லாத கவிதை யெல்லாம்
சொல்லி நான் முடித்த பின்பு
உள்ளூறும் எண்ண மெல்லாம்
உணர்வாக வடிந்த பின்பு
தள்ளாத வயதில் என்றன்
தாய் மண்ணில் இருப்பேன் என்பேன்.
கல்லறை பிறந்த மண்ணில்
கட்டடா மகனே என்பேன்…
 

கவிஞரின் நோஸ்டால்ஜியாவில் நாமும் கரைந்துருகி காணமல் போகிறோம். கற்பனைவளமும், நோஸ்டால்ஜியாவும் எழுதுகோல் கொண்டு படைக்கும் படைப்பாளிக்கு ஒரு உந்துகோல் என்பதில் சந்தேகமில்லை.

ஊர்ப்பாசம் மிகுதியால் “அந்த நாள் ஞாபகம்” என்ற தலைப்பில் கவிதை நூலொன்றை நான் வெளியிட்டபோது என் நண்பர் நாகூர் ரூமி  “இவர் வில்லியம்ஸ் வொர்ட்ஸ்வொர்த்தைப் போல. அமைதியாக நினைத்துப் பார்த்து – Recollections  in tranquility – நாகூருக்கு எழுத்தில் உயிர் கொடுத்திருக்கிறார்” என்று என்மீது பொழிந்த பாராட்டுமழை  பசுமரத்தாணியாய் இன்னும் என் மனதில் பதிந்துள்ளது.

Nostalgic  நினைவோடு கடந்தகால நினைவுகளை அசைபோடுவது இருக்கிறதே..  ஆஹா.. அது ஒரு தனிசுகம். அதனை விவரிக்க வார்த்தைகள் போதாது. குளித்துவிட்டு Cotton Buds கொண்டு காது குடைவதைக் காட்டிலும் ஆனந்தம்; பரமானந்தம். இயல்பாகவே கண்ணை மூடிக்கொண்டு அனுபவிக்கத் தோன்றும்.

Genes வழித்தோன்றல் மனிதனின் செல்களில் மாத்திரமல்ல மண்ணுக்கும் உண்டு போலும். இதைத்தான் மண்ணின் பெருமை என்கிறார்களோ?. “வெதை ஒண்ணு போட்டா சொரை ஒண்ணா முளைக்கும்? “ என்கிறார்களே நம்மூரில். விதைக்கும் மண்ணுக்கும் உள்ள தொடர்புதான் மனிதனுக்கும், பிறந்த மண்ணுக்கும் உள்ள பந்தம்.

Vikatan 4

சாருவின் ஊர்ப்பாசத்தை நாம் அலுசும் முன் அவரைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் கூறுவது அவசியமாகிறது.

‘திராவிட பாரம்பரியத்தில் வந்தவர்கள் நாங்கள்’ ‘பகுத்தறிவாதிகள் நாங்கள்’ என்று சிலர் தங்களை அடையாளப் படுத்திக் கொள்வார்கள். தெய்வ நம்பிக்கையா? அதெல்லாம் எங்களுக்கு இம்மியளவும் கிடையாது என்பார்கள். கோயிலுக்கு சென்று பரிவட்டம் கட்டிக் கொள்வார்கள், வீட்டில் சாமி படத்தை வைத்து பூஜை செய்வார்கள், பாபாக்களின் காலில் விழுவார்கள் ஆனால் பெரியாரின் கொள்கைதான் எங்கள் கொள்கை என்று பஞ்ச் டயலாக் பேசுவார்கள்.

சாருவைப் பொறுத்தவரை எனக்கு ஊர்ப்பாசம் கீர்ப்பாசம் எதுவுமில்லை என்பார். ஆனால் தன்னையறியாமல் அவ்வப்போது அந்த உணர்வு பீறிட்டுக்கொண்டு வரும். அவ்வுணர்வை அவரால் கட்டுப்படுத்த இயலாது. பக்கம் பக்கமாய் எழுதி எழுதித் தள்ளுவார்.

வைரமுத்து தன் ஊரைப்பற்றிச் சொல்கையில் “என்னை வளர்த்த ஊர் என்பார்” சாருவோ அவர் பிறந்த மண்ணை “தான் பொறுக்கிய இடமென்பார்.”. அவ்வளவுதான் வித்தியாசம்.

“எனக்குப் பெரிதாக ஊர்ப்பாசம் கீர்ப்பாசமெல்லாம் கிடையாது. இருந்தாலும் நாம் பிறந்து வளர்ந்து பொறுக்கிய இடங்களைப் பற்றிப் படிக்கும் போது தவிர்க்க முடியாமல் ஒரு ‘நாஸ்டால்ஜிக்‘ உணர்வு வந்து குந்திக் கொள்கிறது”

என்று பகிரங்க வாக்குமூலம் அளித்தவர் சாரு.

தனது வாழ்நாளின் பெரும்பான்மையான நாட்களை டெல்லியிலும், சென்னையிலும் செலவழித்த சாரு இளம்பிராயத்தில் தான் பிறந்து வளர்ந்து பொறுக்கித் திரிந்த இடங்களை, அப்பசுமையான பொழுதுகளை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அசைபோட அவர் தவறுவதில்லை. அந்தரங்க உண்மைகளை எல்லாம் போட்டுடைக்கும் நம் Celebrity எழுத்தாளருக்கு ஊர்ப்பாசத்தைச் சொல்ல ஏன் தயக்கம் என நாமும் புரியாமல் விழிபிதுங்குகிறோம்.

apayam1

என் வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைந்து என்னை வளர்த்து உருவாக்கியது நான் பிறந்து வளர்ந்த நாகூர்தான். பல ஊர்களில் இன்று காலம் சுழன்று ஓடி, பல மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தாலும், நாகூர் சிறிது அளவேதான் மாற்றங்களைக் கண்டிருக்கிறது”

என்று அவர் கூறுகையில் அவருடைய நோஸ்டால்ஜியா நமக்கு ஊர்ஜிதமாகிறது. ஒருவனது வாழ்க்கைக்கே அடித்தளம் அமைத்துக் கொடுத்த ஊரை அவன் கொண்டாட வேண்டியது அவன் கடமையல்லவா?

சாருவைப் பொறுத்தவரை அவர் ஒளிவு மறைவு இல்லாதவர். அவருக்கு  எதையும் மறைக்கத் தெரியாது. தான் யார்? தன் பின்புலம் என்ன? என்று வெளிக்காட்டுவதில் அவருக்கு எந்தவொரு ஆட்சேபனையும் இருந்தது கிடையாது. தான் புரிந்த தவறுகளை தன் வாசகர்களுக்கு பகிர்வதில் அவர் ஒருபோதும் வெட்கப்படுவதில்லை.

 நான் நாகூரில் வாழ்ந்த இடம் பறைச்சேரியையும் தாண்டி சுடுகாட்டுக்குப் பக்கத்தில் இருந்த தொம்பச் சேரி. மலம் அள்ளும் தொழில் செய்த தெலுங்கர் இனம். அப்போது தீண்டாமை என்பதை நேரடியாக ஒவ்வொரு தினமும் அனுபவித்திருக்கிறேன் “

என்று தன் மனக்குமுறலை வெளிப்படுத்துகிறார். தாங்கள் ஏதோ ராஜபரம்பரையிலிருந்து வந்தவர்களாக காட்டிக் கொள்ளும்  ‘நேற்று பூத்த மழையில் இன்று பூத்த காளான்’களுக்கு மத்தியில் சாருவின் வெளிப்படத்தன்மை நம்மை ஈர்க்கிறது. இடைவெளி குறைகிறது. பரஸ்பரம் ஏற்படுகிறது. வாசகர்களாகிய நமக்கு அவரிடம் ஒரு நெருக்கத்தை உண்டு பண்ணுகிறது.

எழுதுபவன் யோக்கியனா? ஒழுக்கமுள்ளவனா? என்றெல்லாம் வாசகன் பாரபட்சம் பார்ப்பது கிடையாது. எழுத்தாளனின் ஆளுமையில் கவரப்பட்டு அவனும் ‘அஸ்கா’வாய் கரைந்து போகிறான். வாசகன் எழுத்தைத்தான் நேசிக்கிறானே தவிர அவனது அந்தரங்கம் பற்றி அவனுக்கு கவலையில்லை.

சாருவின் வெளிப்படத்தன்மையினாலேயே அவர் சகல சர்ச்சைகளிலும் சிக்கிக்கொண்டு சகட்டுமேனிக்கு விமர்சனங்களை சந்திப்பவராக இருக்கிறார்.  Rating  ஏறுவதற்கு Image  குறைந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பவர் அவர்.அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையையோ அல்லது பொதுஇடங்களில் அவரது  நடத்தையையோ அலசிப்பார்ப்பது இப்பதிவின் நோக்கமல்ல.

சமுதாயத்தை வழிநடத்துவதில் ஒரு பிரபல எழுத்தாளனுக்கு முக்கியப் பங்கு உண்டு. ‘பிரபலம்’ என்பது வாசகர்கள் அவனுக்கு அளித்திருக்கும் வெகுமதி. அவன் சமுதாயத்திற்கு Role Model ஆக இருக்க வேண்டுமென்பது எனது தாழ்மையான அபிப்ராயம். கற்பு என்பது பெண்ணுக்கு மட்டும்தானா? எழுத்திற்கும் உண்டு. ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ என்று தங்கள் வாழ்நாள் முழுதும் சூளுரைத்தவர்கள் கூட எழுத்தில் கண்ணியம் காக்கவில்லை என்பது வருந்தத்தக்க விடயம். “கம்பரசம்” அதற்கோர் அழகான உதாரணம்.

பீ, மூத்திரம், குசு – இன்னும் சொல்லவொண்ணாத சொற்பதங்களை சாருவின் எழுத்தில் படிக்கும்போது புத்தகத்தை மூடிவைத்த பிறகும் ஒரு அருவருப்பை என்னால் உணர முடிகிறது. ஏன் கம்பர் “அல்குல்” என்று எழுதவில்லையா? சாரு எதார்த்தமாக எழுதுவதில் என்ன தவறு? என்று அவர் நண்பர்கள் கேட்கிறார்கள். இதுதான் இலக்கியம் என்றால் அந்த இலக்கியமே எனக்கு வேண்டாம் என்றுதான் சொல்லுவேன்.

Call Spade a spade என்பார்கள். சாருவின் தனிப்பட்ட வாழ்க்கையை நான் வெறுப்பவனாக இருந்தாலும் அவரே அறியாமல் அவர் மனதிலிருந்து    ஊற்றெடுக்கும் அவரது ஊர்ப்பாசத்தை நான் மெச்சாமல் இருந்தால் அது என் மனசாட்சிக்கே செய்யும் துரோகமாகும்.

ஒரு மனிதனின் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள் என்றால் அது அவனது பள்ளி நாட்களாகத்தான் இருக்கும். அது ஒரு நிலாக்காலம், அது ஒரு கனாக்காலம். சாருவிற்கு அந்த நாட்கள் ‘தம்ரூட்’டாய் இனிக்கிறது

நாகூர் தேசிய உயர்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பில் குரு என்று ஒரு மாணவன் புதிதாக வந்து சேர்ந்தான். எங்களைவிட நாலைந்து வயது பெரியவன். சில புதிய ஆசிரியர்கள் அவனையும் ஓர் ஆசிரியர் என்றே நினைத்துவிடுவார்கள். அவ்வளவு பெரியவன். அது ஓர் ஆணின் வாழ்க்கையில் முதன்முதலாகக் காமம் எட்டிப் பார்க்கும் வயது. அதற்கேற்ப சரீரத்திலும், எண்ணங்களிலும் ஏற்படும் மாற்றங்கள். குருதான் எங்களுக்கெல்லாம் ஹீரோ. கொக்கோகப்  புத்தகங்களைப் படித்து விட்டு வந்து கதை கதையாகச் சொல்லுவான். அவனுடைய கதைகளுக்கு மாற்றாக நானும் அவ்வப்போது கதைகள் சொல்லுவேன்

சாருவின் படைப்புகளில் ஆபாசம் தலைவிரித்தாடுவதன் காரணம் இப்போது நமக்கு விளங்குகிறது.. ‘முதல் கோணல் முற்றும் கோணல்’, ‘விளையும் பயிர் முளையில் தெரியும்’ ‘தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை’ ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?’ இப்பழமொழிகள் யாவும் ஏன் திடீரென்று இப்பொழுது ஞாபகம் வருகிறது என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை.

சாரு தனக்கு ஆன்மீகத்தில் தீவிரப்பற்று உண்டு என்கிறார். அதற்கு நாகூர் தர்காவை சாட்சிக்கு அழைக்கிறார். அதனால்தான் அவர் தனது எழுத்தில் அடிக்கடி ‘ஹதீஸ்’ என்ற வார்த்தையை உபயோகிக்கிறார். (அதுவும் சம்பந்தமில்லா இடங்களில்) , திடீரென்று மெளலானா ரூமியின் மஸ்னவி கதைகளைக் கூறுகிறார்.

இப்படியே ஆன்மிகத்தில் தீவிர பற்று ஏற்பட்டுப் போனது. வீட்டில் இருந்த நேரத்தை விட தர்ஹாவில் இருந்த நேரம்தான் அதிகம். உறங்குவதும் அங்கேதான். காலை ஐந்து மணிக்கு நேப்பாளி கூர்க்கா தனது லத்தியைத் தரையில் அடித்து எழுப்பும்போதுதான் வீட்டு ஞாபகமே வரும்” என்கிறார்.

இவரது ஆன்மிகப் பற்று எப்படிப்பட்டது என்று நமக்கு சொல்லத் தெரியவில்லை. நித்யானந்தாவை கடவுளின் அவதாரம் என்ற ரேஞ்சுக்கு புகழ்ந்துவிட்டு தீவிரபக்தராக இருந்த இவர் “நித்யானந்தரின் பக்த கோடிகள் அனைவருமே ஏதோ மந்திரித்து விட்ட ஆட்டு மந்தைகளைப் போல திரிந்தார்கள்” என்று அந்தர்பல்டி அடித்தார்.

charu-mind

“நான் உங்கள் வலையில் நித்யானந்தாவைப் பற்றி கடவுள் அவதாரம் என்கிற அளவிற்கு நீங்கள் புகழ்ந்து எழுதி இருந்ததை நம்பி நானும் அதில் அதிக அளவு பணத்தையும் நேரத்தையும் செலவழித்தேன். என் மடலுக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது” என்று வாசகர் ஒருவர் எழுதிக் கேட்டதற்கு நம்ம சாருசார் அளித்த பதில் நமக்குள் ஆயிரம் வால்ட் மின்சாரத்தை பாய்ச்சுகிறது.

 “who is paying for me ? Everything here in my site is a free fuck.  pl don’t read this site.”

இவருடைய பொறுப்பற்ற பதிலைப்படித்து Ice Bucket குளியல் அடைந்ததுபோன்று நாமும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில்  உறைந்துபோகிறோம்.

கர்னாடக இசை, லத்தீன் இசை, மொரோக்கோ இசை, கர்னாடக இசை, ராப் இசை, இவை எதுவாக இருந்தாலும் சாருவின் விமர்சனம் பிளந்து கட்டும்.. “இசை நுணுக்கம்” என்ற நூலைப் படைத்து நான்காம் தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றிய மகாவித்துவான் நாகூர் வா.குலாம் காதிறு நாவலரை விட சாருதான் இசைநுணுக்கம் அதிகம் தெரிந்தவரோ என்று நம்மை எண்ணத் வைக்கிறது. அதற்கான காரணத்தையும் அவரே விளக்குகிறார்.

இப்படியாக இரவுகளில் தெருத்தெருவாய் சுற்றித் திரியும் சுதந்திரம் இருந்ததால் ஒரு நல்ல பலன் உண்டானது. நிறைய கவ்வாலிக் கச்சேரிகளையும் ஆன்மீகச் சொற்பொழிவுகளையும் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. (பின்னாளில் எனது இசை ரசனைக்கு இந்தக் கச்சேரிகளே அடித்தளமாக அமைந்தன எனலாம்.) அதேபோல், ஆன்மீகச் சொற்பொழிவுகளில் நூற்றுக்கணக்கான ஹதீஸ்களையும், சூஃபி கதைகளையும் கேட்டேன்

சாருவை அழைத்து வந்து ஆன்மீக உரை ஆற்றச் சொன்னால் அது எந்த லட்சணத்தில் இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன்.

பாஸியுடன் பேசிக் கொண்டிருந்த போது எனக்கு என்னுடைய இளம்பிராயத்து ஊர் ஞாபகம் வந்தது.  நாகூரில் கால்பந்தாட்டம் பிரசித்தம்.  நாகூர் மட்டும் அல்ல; கூத்தாநல்லூர், மன்னார்குடி என்று தஞ்சாவூர் மாவட்டம் முழுவதிலுமே கால்பந்தாட்டம் பிரசித்தம்.  காரணம், தஞ்சாவூர் மாவட்டம் இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் பகுதி. லத்தீன் அமெரிக்காவைப் போல் உலகம் முழுவதுமே இஸ்லாமியர் வசிக்கும் நாடுகளில் கால்பந்தாட்டம் பிரசித்தமாக இருப்பதை கவனிக்கலாம்.  இந்தியாவில் கிரிக்கெட் என்ற அசுரனால் மற்ற விளையாட்டுகள் அனைத்தும் காணாமல் போய் விட்டன

விரைவில் பீலி, மரடோனா, ரொனால்டோ, மெஸ்ஸி, நெய்மர் -இவர்களைப்பற்றி சாரு நூல்கள் எழுதுவார் என்று எதிர்ப்பார்க்கலாம். புரியாத விஷயங்களை, புரியாத வார்த்தையில், புரியாத முறையில் சொன்னால் நவீன எழுத்தாளராக ஆகிவிடலாம் என்று சாருவின் வாயிலாக நாம் அறிகிறோம்.

முத்தமிழும் கலந்த கலாசாரம்  நாகூரில் உண்டு. உலக அளவில் வீரியமான கலாசாரமும் நாகூரில்தான். எங்கள் ஊரில் சொல்லி வைத்ததுபோல் எல்லோரும் இனிமையாகப் பாடுவார்கள். புரோட்டா மாஸ்டரில் இருந்து பெண்கள் உட்பட பலரும் இரவு நேரம் ஆகிவிட்டால், இசைச் சங்கமத்தில் ஒன்றாக கலந்து விடுவார்கள்.

“வைதேகி காத்திருந்தாள்” என்ற திரைப்படத்தில் ராத்திரி வேளையில் விஜயகாந்த் “ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு” என்று ராகமிசைக்க திண்ணையில் அமர்ந்திருப்பவர்கள் முதற்கொண்டு தொட்டிலில் தாலாட்டும் தாய்மார்களை வரை  அவர் பாடலைக் கேட்டுவிட்டுத்தான் தூங்கப் போவார்கள். சாருவின் எழுத்தை படித்துவிட்டு நாகூரிலும் புரொட்டா மாஸ்டர் முதற்கொண்டு பெண்கள் உட்பட இப்படித்தான் நடுஜாமத்தில் பாடுவார்களோ என்று வாசகர்கள் முடிவுக்கு வருவார்கள்.

நாகூருக்கும் இசைக்கும் இணைபிரியா பந்தமிருப்பது என்னவோ உண்மைதான். இத்தொடர்பினைப் பற்றி எத்தனையோ அறிஞர் பெருமக்கள் ஏராளமாக எழுதிவிட்டனர்.

 • டெல்அவிவ் வரை சென்று தமிழ் சூஃபி இசையை பரப்பி வந்த அப்துல் கனி, ஹாஜா மொய்தீன், சபூர் மொய்தீன் பாபா சபீர்
 • கர்னாடக இசைப் புலமை பெற்ற தர்கா வித்துவான் எஸ்.எம்,ஏ..காதர், இசைமணி எம்.எம்.யூசுப்
 • நாகூரில் வாழ்ந்த இந்துஸ்தானி இசை விற்பன்னர்கள் தாவூத் மியான், கவுசு மியான், சோட்டு மியான்,
 • மொழி புரிகிறதோ இல்லையோ கவ்வாலி பாடல்களுக்கு தலையாட்டும் ரசிக பெருமக்கள்
 • நாதஸ்வர மேதை நாகூர் சுப்பையா பிள்ளை, மிருதங்கக் கலைஞர் நாகூர் அம்பி ஐயர்,
 • இஸ்லாமியப் பாடகர்கள் இசைமுரசு இ.எம்.ஹனிபா, கலைமாமணி இ.குல்முகம்மது

என அனைத்து இசை வடிவங்களுக்கும் வடிகாலாக நாகூர் திகழ்கிறது என்பது எல்லோரும் அறிந்ததே. திருவையாறுக்கு கிடைத்த அங்கீகாரம் நாகூருக்கு கிடைக்கவில்லை என்பதென்னவோ உண்மை.  இதோ சாரு சொல்வதைக் கேட்போம்.

எங்கள் ஊர் அனுதினமும் இசை சங்கமத்தில்தான் தத்தளிக்கும். காலையில் எழுந்தவுடன் தர்காவில் இசை ஒலிக்கும். அதைபோல அழகான ஷெனாய் வாத்திய இசையும் கேட்கும். இந்த இசையைக்  கேட்டுக்கொண்டே காலையில் எழுந்திருப்பதற்கு கொடுப்பினை வேண்டும்.  உலகில் நான் கண்ட பல இசைகளில் ஹனிபாவின் இசைக்கு எப்போதும் தனி இடம் உண்டு 

கொடுப்பினை வேண்டும்” என்று கூறும் சாரு இம்மண்ணில் பிறப்பதற்கே மாதவங்கள் செய்திடல் வேண்டுமென்பதை சொல்லாமல் சொல்கிறார். மேலும், இசையோடு இப்பொழுது ருசியையும் இணக்கிறார் சாரு. Recollection in Tranquility என்று நாகூர் ரூமி எனக்குச் சொன்னது சாருவிற்குத்தான் முற்றிலும் பொருந்தும்.

x240-7xU

கடல் காற்றின் சத்தம், இரவில் கொத்துப் புரோட்டா போடும்போது எழும் ஓசை என எப்போதும் எங்கள் ஊரைச் சுற்றி பல இசை சூழ்ந்தே இருக்கும். நான் பல ஊர்களுக்குச் சென்று இருக்கிறேன். நாகூரைத் தவிர வேறு எங்கும் கொத்துப் புரோட்டாவில் அப்படி ஒரு சுவையை ருசித்தது இல்லை.

“தொட்டபட்டா ரோடுமேலே முட்டைபறாட்டா” என்று சந்தம் போட்டு எழுதிய திரைப்படக் கவிஞர்கள் ஏன் கொத்துபறாட்டாவுக்கும் நாகூருக்கும் முடிச்சு போடவில்லை என்பது நம் கேள்வி. “நயாகரா”வுக்கு “வயாகரா” சந்தம் அமைந்தது போல் இதற்கு சந்தம் உட்காரவில்லை என்ற காரணத்தால் இருக்கலாம். இதோ கொத்துபரோட்டா புராணத்தை மேலும் தொடர்கிறார் சாரு.

கொத்துப் பரோட்டாவைக் கொத்தும் போது ஒரு லயத்தோடு வரும் சத்தத்தை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.  அதை சத்தம் என்று எழுதுவதற்கே கூச்சமாக இருக்கிறது.  அது ஒருவித சங்கீதம்.  நாகூரில் மாலை ஆறு மணி ஆனால் போதும், நூற்றுக் கணக்கான புறாக்கள் தர்காவின் மினாராக்களில் உள்ள பொந்துகளில் வந்து அடையும். அதே நேரத்தில் கடைக்குக் கடை கொத்துப் பரோட்டா கொத்தும் சங்கீதமும் கேட்கும்.  ஆனால் நான் நாகூரில் இருந்த என்னுடைய 20 வயது வரை அந்தக் கொத்துப் பரோட்டாவைச் சாப்பிட்டுப் பார்க்க ஒருநாள் கூட கையில் காசு இருந்ததில்லை.  இப்போது காசு இருக்கிறது.  நாகூர் போய் வர நேரமில்லை.

தனது 20-வயதுவரை அந்த கொத்துப்புரோட்டாவை சாப்பிடும் பாக்கியம்கூட இல்லாமல் இருந்தாரே என்று நம் அபிமான இலக்கியகர்த்தா மீது நம்மையறியாமலேயே ஒரு பச்சாதாபம் ஏற்படுகிறது. சாப்பாட்டுப் பிரியரான சாருவுக்கு நாகூர் என்றதும் கொத்துப்புரோட்டா மாத்திரமல்ல தேத்தண்ணி (தேயிலைத்தண்ணீர்) எனப்படும் டீ, மற்றும் தம்ரூட், எல்லாமே அவர் நினைவில் வந்து நிழலாடி வாசகர் நாக்கிலும் எச்சில் ஊற வைத்து விடுகிறார்.

எங்கள் ஊர் டீயைப் போல் நான் வட இந்தியாவில் அதுவும் ஒருசில உயர்தர முஸ்லீம் ரெஸ்தொராந்துகளில் மட்டுமே சாப்பிட்டிருக்கிறேன்.  அப்படிப்பட்ட பிரத்யேகமான நாகூர் டீயின் ருசி சாம்கோ டீயில் இருக்கும்.  (உணவகம் என்று எளிதாக சொல்லி இருக்கலாமே. ஏன் ரெஸ்தொராந்து என்று பல்லைக்கடித்துக் கொண்டு கஷ்டப்பட்டு சொல்கிறார்?)

இதோ தம்ரூட் படலம்.

மதுரைக்கு எப்படி ஒரு சிறப்பான கலாசாரம், உணவு என்று இருக்கிறதோ.. அதேபோல் நாகூருக்கும் தனிக் கலாசாரம் உண்டு. ‘தம்ரூட்’ என்னும் இனிப்புப் பண்டம், பாக்க அல்வாவைப் போலவே இருக்கும். ஆனால், அல்வா கிடையாது. அதனுடைய சுவையே தனி. நாகூரை விட்டால் வேறு எங்கும் தம்ரூட் கிடைக்காது.

திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா உலகப் பிரசித்தம். ஆனால் அதைவிட சிறப்பான, ருசியான… நாகூரைத் தவிர வேறு எங்கும் கிடைக்காத தம்ரூட் பற்றி யாருக்குமே தெரியாது. அதுதான் நாகூரின் துரதிர்ஷ்டம். யாராலும் பேசப்படாத தனித்த ஊர்.

 

இதோ இட்லி படலம்

வேலூர் இட்லி மிகவும் விசேஷமானது. வேலூரில் இட்லியுடன் வடகறியும் தருவார்கள். அதே போன்ற இட்லியை நாகூரில் காணலாம். அதிலும் சேதுராமைய்யர் ஹோட்டல் டிபனுக்கு ஈடு இணை கிடையாது.

மால்குடி என்ற கற்பனைக் கிராமத்தை பாத்திரப் படைப்பாக்கிய ஆர்.கே.நாராயண் போன்று நாகூர் என்ற நிஜ ஊரை பாத்திரப் படைப்பாக்கிய சாருவை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அவருக்கு ஊர்ப்பாசம் இல்லை என்பதெல்லாம் கடைந்தெடுத்த 100% அக்மார்க் பொய். அவர் வெளிக்காட்டும் ஊர்ப்பாசம் அவர் அடிக்கடி உதிர்க்கும் ஆபாச அர்ச்சனைகளை எல்லாம் மறக்கடிக்க வைத்து விடுகிறது. ஒருவரின் குறைகளை சுட்டிக்காட்டும்போது நிறைகளையும் கோடிட்டு காட்டுவதுதான் இலக்கியப்பண்பு, அதைத்தான் நான் இங்கு செய்கிறேன்.

நாங்க வசித்து வந்த ஏரியா ஒரு குடிசைப் பகுதி. எப்போதும் கலகலப்புடன் இருக்கும். எங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த நாட்டு தொடக்கப் பள்ளியில்தான் என்னுடைய ஆரம்ப படிப்பு இருந்தது. நாங்க வசித்த தெருவின் பெயர் கொசத் தெரு. அதை அறிவிக்கும் போர்டு தகரம் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் செய்யப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன். என்னுடைய ‘எக்ஸைல்’ நாவலில் நாகூரைப்பற்றி எழுத அந்தத் தெருவுக்குச் சென்றபோது, இன்னமும் அதே இடத்தில் அந்த போர்டு இருப்பதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன்.

“எதிர்நீச்சல்” படத்தில் கடைசி வரை படத்தில் முகத்தை காட்டாமலலேயே, ஆனால் படத்தில் முக்கிய பாத்திரமாக இருமல் தாத்தா கேரக்டரரைக் காட்டிய  இயக்குனர் பாலச்சந்தரின் சாமர்த்தியத்தை, அவரது நாவலில் நாகூரை பாத்திரப்படைப்பாக்கிய லாவகத்தை சாருவிடம் காண்கிறேன்.

பஹ்ரைன் உட்பட அனைத்து அரபு நாடுகளில் காணப்படும் பழங்கால வீடுகளின் முற்றத்தில் “Wind Tower” எனப்படும் காற்றுவெளி மாடம் காணப்படும். நாகூரில் பெரும்பாலான பாரம்பரிய வீடுங்களின் முற்றத்தில் காற்றுப்பந்தல் ஒன்று கண்டிப்பாக இருக்கும். காற்றை வசப்படுத்த தெரிந்தவர்கள் நாகூர்க்காரர்கள் என்று வேண்டுமானால் புகழாரம் சூட்டலாம். நாகூர் தர்கா உள்ளே குளிர்ந்தமண்டபம் அப்படிப்பட்ட தன்மை கொண்டது. அதைப்பற்றி சாரு இப்படி கூறுகிறார்.

நாகூர் தர்கா மிகவும் பிரசித்தம் பெற்றது என்று எல்லோருக்கும் தெரியும். எனக்கு ஏதாவது மனக் குழப்பம், கஷ்டம் வந்தால் தர்காவுக்குச் சென்று  அமர்ந்து விடுவேன். உடனே மனம் ஆறுதல் அடைந்து விடும். அதேபோல் அங்கு குளிர்ந்த மண்டபம் ஒன்று இருக்கிறது. ஏ.சி போட்டால்கூட அப்படி ஒரு இதமான காற்று வராது. குளிர் காற்று, கூட்டமான புறாக்கள் என அந்த இடமே பார்க்க அமைதியாக இருக்கும்.

மதுரை ஆதீனத்தைப் போன்று சாருவும் நாகூர் ஹனிபாவை பாராட்டிய விதமும் எனக்குப் பிடித்திருந்தது.

நாகூர் அனீஃபா எந்த வித அங்கீகாரமும் இல்லாமல் ஏதோ ஒரு தெருப் பாடகன் என்ற அளவில்தானே இருக்கிறார். அவரைப் போன்ற ஒரு பாடகர் ஐரோப்பாவிலோ , மொராக்கோ போன்ற தேசத்திலோ இருந்திருந்தால் உலகப் புகழ் அடைந்திருப்பார். அப்பேர்ப்பட்ட குரல் வளம் அவருடையது. நாகூர் அனீஃபாவுக்கு இணையாக வேறு யாரையுமே சொல்ல முடியாது. அவர் ஒரு unique ஆன பாடகர். அவருக்கு முன்னும் பின்னும் அவரைப் போன்று பாடக் கூடிய ஒரு கலைஞன் இல்லை. 

என்று பாராட்டும் சாரு நம் மனதில் இடம் பிடிக்கிறார். என்னதான் ஃபாரின் சரக்கை அருந்தினாலும் நாட்டுச்சரக்கை அவரால் மறக்க முடியவில்லை.

வேலி முட்டி பற்றி என்னுடைய ‘ எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும்‘ நாவலில் எழுதியிருக்கிறேன். அதற்குப் பிறகு இப்போதுதான் 25 ஆண்டுகளுக்குப் பிறகு படிக்கிறேன். வேலி முட்டி என்பது எங்கள் ஊர்ப்பக்கத்தில் கிடைக்கும் ஒருவித சாராயம். அது ஒரு காரணப் பெயரும் கூட. அதைக் குடிப்பவர்கள் வேலிப் பக்கத்தில் போய் முட்டிக் கொண்டு கிடப்பார்கள். இப்போதும் வேலி முட்டி கிடைக்கிறதா என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

நாகூரின் Geographical Features-யை சாருவைவிட யாரும் இவ்வளவு துல்லியமாக எழுதியதில்லை.

யார் கட்டினார்கள் என்று தெரியவில்லை. ஆனால், நாகூரில் கிட்டத்தட்ட ஐம்பது குளங்களுக்கு மேல் இருக்கும். நான் வசித்த தெருவைச் சுற்றியே ஒரு டஜன் குளங்களுக்கு மேல் இருந்தன. நான் படித்த நேஷனல் ஹை ஸ்கூலின் விளையாட்டு மைதானத்தின் பெயர் ஈச்சந்தோட்டம். மைதானத்தைச் சுற்றிலும் ஈச்ச மரங்கள். அதனால், ஏற்பட்ட காரணப் பெயர். ஸ்கூலில் இருந்து கிளம்பி பெருமாள் கோயில் கீழ வீதியையும் மாப்பிள்ளைத் தெருவையும் தாண்டி வந்தால் ஈச்சந்தோட்டம். ஈச்சந்தோட்டத்தை ஒட்டி ஈச்சங்குளம். என் சிறுவயதில் அந்த ஈச்சங்குளத்தில்தான் குளித்து வளர்ந்தேன். நாகூரில் அப்போது வீட்டுக்கு வீடு குழாய்த் தண்ணீர் வசதிக் கிடையாது. ஒவ்வொரு தெருவின் முனையிலும் இருக்கும் பொதுக் குழாயில்தான் தண்ணீர் பிடிக்க வேண்டும். அதற்காக, முதல்நாள் இரவே குழாயின் அருகில் பானைகளை வைத்துவிடுவார்கள். அப்போது பிளாஸ்டிக் குடங்கள் புழக்கத்தில் வரவில்லை. காலையில் அந்தக் குழாயடியில் பெண்கள் தலைமுடியைப் பிடித்துக்கொண்டு உருண்டு புரள்வார்கள், ஒரு குடம் தண்ணீர் பிடிக்க..

நாகூரின் தட்பவெட்ப நிலை சாருவின் எழுத்துக்களிலிருந்து நமக்கு நன்கு புரிந்துவிடும்.

நாகூர், கடலின் கரையிலேயே அமைந்து இருப்பதாலோ என்னவோ வானத்துக்கும் பூமிக்கும் நீர் விழுது அமைத்ததுபோல் பொழியும் மழை. நாள் கணக்கில் ஒரு நிமிடம்கூட இடைவெளியே இல்லாமல் பொழிந்து கொண்டிருக்கும். கொஞ்ச நேரம் கூட வானம் தெளியாது. கார்த்திகை முழுவதும் தொடரும் இந்த மழைக்குக் கார்த்திகை அடை மழை என்றே அடைமொழி உண்டு. நாங்கள் வசித்த கொசத்தெருவைச் சுற்றிலும் உள்ள எலுத்தியாரங்குளம் மற்றும் இன்ன பிற குளங்களெல்லாம் வெட்டாறோடு கூட்டணி அமைத்து ஊரையே வெள்ளக் காடாய் மாற்றும். வயதான கிழங்கள் சாகும் காலமும் அந்த மாதமாகத்தான் இருக்கும் என்பதால், எங்கள் வீட்டைத் தொட்டுக்கொண்டு இருந்த சுடுகாட்டில் பிணம் வேகும் நாற்றம் மூக்கைவாட்டும்.  

அவருடைய நோஸ்டால்ஜியா முடிவின்றி தொடர்கிறது.

நாகூரில் நான் சிறுவனாக இருந்தபோது மழை என்றாலே அது புயலாகத்தான் இருக்கும். ஐப்பசி மாத அடைமழை தவிர ஒவ்வொரு மழைக் காலத்திலும் புயல் இல்லாமல் இருக்கவே இருக்காது. 1952-ம் ஆண்டு அடித்த புயலை ‘பெரிய பொசல்’ என்பார்கள். கி.மு., கி.பி. என்று சொல்வதுபோல் குடும்பத்து உறுப்பினர்களின் ஜனன மரணங்களையும், மற்ற சம்பவங்களையும் ‘பெரிய பொசலை’ வைத்தே கணக்கிடுவார்கள். நான் ‘பெரிய பொசல்’ அடித்து ஒரு வருஷம் கழித்துப் பிறந்தவன். பெரிய புயல் நாகூர் மக்களின் நினைவில் தங்கிவிட்டதன் இன்னொரு காரணம், தர்காவின் பெரிய மினர்வாவின் கலசம் புயல் காற்றில் கீழே விழுந்து விட்டது.

சுனாமி வந்த சமயத்தில் சாருவும் நாகூரில் இருக்க நேர்ந்திருந்தால் நமக்கு ஒரு நல்ல பதிவு கிடைத்திருக்குமே என்ற ஆதங்கம் நமக்கு ஏற்படுகிறது. சாருவின் இதுபோன்ற அனுபவங்களை நாம் படிக்கையில் சேரன் இயக்கிய “ஆட்டோகிராப்” படத்தில் வரும் “ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!” பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

charu-3

ஈச்சந்தோட்டத்தில்தான் நாகூரின் பிரபலமான கால்பந்தாட்டப் போட்டிகள் நடக்கும். முக்கியமான போட்டி என்பது, நாகூர் நேஷனல் ஹை ஸ்கூலுக்கும் மன்னார்குடி நேஷனல் ஹை ஸ்கூலுக்கும்தான். நாகூரின் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் என்பதாலோ என்னவோ அங்கே கால்பந்தாட்டம்தான் பிரதான விளையாட்டாக இருந்தது. ஆனால், எங்களுக்கு ட்ரில் மாஸ்டராக இருந்த கண்ணையன் சார் வாலிபாலையும் முன்னணிக்குக்கொண்டுவந்தார். அப்போது அந்த மாவட்டத்தில் வாலிபாலில் ஹீரோவாக இருந்தவர் வடுவூர் ராமமூர்த்தி. அவரைத் தெரியாதவர்களே தஞ்சாவூர் மாவட்டத்தில் கிடையாது. எனக்கு வடுவூர் துரைசாமி ஐயங்காரைவிட வடுவூர் ராமமூர்த்தியைத்தான் நன்றாகத் தெரியும். கண்ணையன் சாரும் வடுவூர் ராமமூர்த்தியும் வாலிபால் ஆடினால் மைதானத்தில் பொறி பறக்கும். வாலிபால் கோர்ட் மட்டும் ஸ்கூலை ஒட்டி உள்ள சிறிய மைதானத்தில் இருந்தது. ஆனால், நான் ஒல்லிப்பிச்சானாக இருந்ததால் எந்த விளையாட்டிலும் சேர மாட்டேன்.

ஊரில் வாழ்ந்த ஒவ்வொருவரையும் நினைத்துப் பார்த்து எழுதுகிறார்..

சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தில் என் நண்பரைப் பார்க்கச் செல்லும்போது எல்லாம் மௌனியின் கொள்ளுப் பேத்தியைப் பார்க்கிறேன். ரைஸ் மில் ஐயர் என்றும், மணி ஐயர் என்றும் சிதம்பரத்தில் அழைக்கப்பட்ட மௌனியின் பேரனும் மௌனியின் மருமகளும் அங்கே வசிக்கிறார்கள். ஒருநாள் என்னைப் பார்த்து ஹாய் சொன்ன அந்தக் குட்டிப் பெண்ணிடம் ”உன் கொள்ளுத் தாத்தாதான் என் குருநாதர்” என்று சொன்னேன். திருதிருவென்று விழித்தாள். அவளுக்குத் தன் கொள்ளுத் தாத்தா ஒரு மாபெரும் எழுத்தாளர் என்று தெரியாது.

சாரு குறிப்பிடும் Interesting Characters நாகூரின் இன்றைய தலைமுறையினருக்கு வேண்டுமானால் புரியாத புதிராகத் தோன்றலாம். ஆனால் 50+ ஆசாமிகளுக்கு இது தேன்பாகாய் இனிக்கும்.

நாகூரில் கண்ணையன் சாரைத் தவிர மற்றும் பல ஹீரோக்கள் இருந்தார்கள். தமிழாசிரியர் சீனி.சண்முகம் சாரை மறக்கவே முடியாது. அவர் வகுப்பு எடுத்தால் வகுப்பறை அமளிதுமளிப்படும். பட்டிமன்றப் பேச்சாளராகவும் விளங்கினார். ஆரம்பத்தில் அவர் தமிழாசிரியாக இல்லை. மாறாக, நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது எனக்கு வகுப்பு ஆசிரியராக இருந்தார். பின்னர், மூன்றாம் வகுப்பு மாறியபோது மூன்றாம் வகுப்பின் ஆசிரியர். பிறகு, நான்காம் வகுப்பிலும்… பிறகுதான் புலவர் படிப்பு முடித்து நான் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்புக்குப் போனபோது தமிழாசிரியராக ஆனார்.

இதுபோன்ற மலரும் நினவுகளை பல்வேறு இடங்களில் Rewind செய்து ஓட விடுகிறார்.வானொலியில் தேன்கிண்ணம் நிகழ்ச்சியைக் கேட்டது போன்ற ஒரு மனதிருப்தி நமக்கு ஏற்படுகிரது.

விளையாட்டுக்கு அடுத்தபடியாக அப்போதைய சிறுவர்களின் ஒரே கேளிக்கை, சினிமா. ஆனால், நாகூரில் ஆறு மாதங்களுக்குத்தான் தியேட்டர் இருக்கும். டூரிங் டாக்கீஸ் என்பார்கள். டூவின் உச்சரிப்பு du. ரொம்ப காலத்துக்குப் பிறகுதான் எனக்கு அது touring என்று புரிந்தது. சினிமா தியேட்டர் கீற்றுக் கொட்டகையாக இருந்தால் ஆறு மாதம்தான் லைசென்ஸ் தருவார்கள். அந்த டாக்கீஸின் அதிபர் பெயர் யாருக்கும் தெரியாது என்றாலும் அவரை எல்லோரும் சிவகவி அய்யர் என்றே அழைத்தார்கள். சிவகவி படம் 1943-ல் வெளிவந்தபோது அது அந்த டாக்கீஸில் ஆறு மாதம் ஓடி இருக்கிறது. பொதுவாக எம்.ஜி.ஆர். படம் என்றால்கூட ஒரு வாரத்துக்கு மேல் ஓடாது. ஊரில் ஜனத்தொகை கம்மி. அப்படிப்பட்ட ஊரில் ஒரு படம் ஆறு மாத காலம் ஓடியிருக்கிறது என்றால், அது எப்பேர்ப்பட்ட விஷயம். அதனால், அந்த டாக்கீஸின் உரிமையாளரின் பெயரே சிவகவி அய்யர் என்று ஆகிவிட்டது. இப்போது சிவகவி அய்யரின் சந்ததியினர் எங்கே இருக்கிறார்களோ தெரியாது. அவர்கள் இதைப் படிக்க நேர்ந்தால் அது எனக்கு சந்தோஷத்தைத் தரும்.

தொடர்ச்சியாக இவ்வளவு புராணம் பாடிய பிறகும் எனக்கு நோஸ்டால்ஜியா கிடையவே கிடையாது என்று சாதிக்கிறார். அதை நம்மையும் நம்பச் சொல்கிறார். இஸ்லாமிய சமூகத்தினரோடு சாருவுக்கிருந்த பிணைப்பை இப்போது நமக்கு புரிய வைக்கிறார்.

இன்னொரு ஹீரோ, பி.ஏ. காக்கா. “காக்கா” என்றால் எங்கள் ஊரில் அண்ணன் என்று அர்த்தம். ஊரில் முதல்முதலாக பி.ஏ. டிகிரி முடித்ததால் அவரை எல்லோரும் பி.ஏ. காக்கா என்று அழைத்தார்கள். ஃபரீது காக்கா குத்துச் சண்டை வீரர்.  நடிகர் ரவிச்சந்திரனின் படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் அவர்தான். இப்படி ஊரில் பல பிரபலங்கள் உண்டு. எல்லோரையும் விடப்  பிரபலமாக விளங்கியவர் தமிழர்கள் அத்தனை பேருக்கும் தெரிந்த பாடகர் நாகூர் ஈ.எம்.அனீபா. நாஸ்டால்ஜியாவினால் சொல்லவில்லை;  ஹனிபாவின் குரலைப் போன்ற unique ஆன குரல் மிகவும் அரிது என்று சொல்லலாம்.

சாரு மீண்டும் மீண்டும் தனக்கு நோஸ்டால்ஜியா கிடையாது, கிடையாது என வம்படிக்கிறார்.  நமக்கு சிரிப்புத்தான் வருகிறது. நோஸ்டால்ஜியாவுக்கு அர்த்தம் தேடினேன்.  The term nostalgia describes a sentimentality for the past, typically for a period or place with happy personal associations. சுருங்கச் சொன்னால் அது ஒரு Homesick. இதை ஒப்புக்கொள்வதற்கு சாருவிற்கு உடன்பாடில்லை. நமக்கும் அதன் காரணம் புரியவில்லை.

charu with

“வியப்புக்குரிய மனிதராக அவர் ஒரு காலத்தில் இருந்தார். விரசத்துக்குரிய மனிதராக அவர் பின்னர் மாறிப்போனது வேறு விஷயம்” என்று நாகூர் ரூமி சாருவைப்பற்றி சொன்னதை நானும் ஆமோதிக்கிறேன். பலர் முகஞ்சுளிக்கும் சாருவை நான் பாராட்டுவதில் எனக்கு எந்த கூச்சமும் கிடையாது.

சாருவுக்கு பெண்களோடு பழகுவதென்றால் ஏகப்பட்ட குஷி.

தாயம், பல்லாங்குழி, பாண்டி என்று எங்கள் தெருப் பெண்களோடு விளையாடுவேன். இப்போதுகூட தாயம் விளையாட்டில் நான் ஒரு எக்ஸ்பர்ட் என்றே சொல்லிக்கொள்ளலாம். விளையாடித்தான் பல ஆண்டுகள் ஆகின்றன.

நோஸ்டால்ஜியா இல்லையென்று கூறும் சாருவுக்கு நாகூரின் அவலத்தைக் கண்டு மனம் பொறுக்கவில்லை. ‘தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே’ அதன் பொருள் விளங்குகிறது.

சமீபத்தில் நாகூருக்குப் போயிருந்தபோது நான் பார்த்த சில்லடி (கடற்கரை) காணாமல் போயிருந்தது. வெறும் குப்பை கூளங்களும் முள்செடிகளுமே நிரம்பி இருந்தன.

என்று வேதனை கொள்கிறார் சாரு,

 

 

hqdefault

சர்ச்சைகளில் மாட்ட வேண்டும் என்பதற்காகவே தாறுமாறான விமர்சனங்கள் சரமாரியாக தங்கள்மீது வந்து விழட்டும் என்று வழிமீது விழிவைத்து காத்திருப்போர் உண்டு. அவர்களில் சாருவும் ஒருவர். சர்ச்சைகளில் சிக்காமலிருந்தால் ஊடகங்கள் நம்மை மறந்தேபோகும் என்று நினைப்பவர் போலும். ஊடகங்களில் பெயர் அடிபட்டால்தானே ஜனங்களின் மனதிலும் இடம்பிடிக்க முடியும்?  “It’s all in the Game” என்பார்களே அந்த வகைதான்இது.

ஒரு இளைஞன் ஒழுங்காக படிப்பதில்லை, அவனுக்கு  தெளிவான நோக்கமில்லை, முடிவெடுக்கும் திறானியில்லை, மனச்சிதறல், ஒழுக்கமின்மை, நேர்வழியில் செல்வதில்லை –  இப்படிப்பட்ட ஒருவனை சமூகம் மதிக்குமா என்றால் நிச்சயம் மதிக்காது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு படைப்பை எழுத்துவடிவில் உருவாக்கினால் அது மிகுந்த பாராட்டை பெறுகிறது. இலக்கியத்தில் அதற்குப் பெயர் “பின்நவீனத்துவம்”. ஆம் பின்நவீனத்துவ நாவலுக்கு விளக்கம் தேட முற்பட்டால் இப்படி ஒரு விடை நமக்கு கிடைக்கின்றது “தொடர்ச்சி, நீரோட்டம், தொகுப்பு, நேர்கோடு, ஆகியவற்றில் இருந்து விலகி தொடர்ச்சியின்மை, சிதறல், முடிவின்மை, மையமின்மை , பன்முகத்தன்மை ஆகியவை கொண்டதுதான் பின் நவீனத்துவ புனைவிலக்கியம்”. சுருங்கச் சொன்னால்  எந்த ஒழுங்கிற்கும் வராது போனால் அதற்குப்பெயர் பின்நவீனத்துவ நாவல்.

சாரு நிவேதிதாவின் “ஸீரோ டிகிரி” நாவலுக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் பின்நவீனத்துவ புனைவிலக்கியம் என்பதாகும். “இது என்ன எழவோ?” என்று சிலர் முணுமுணுப்பதை என்னால் உணர முடிகின்றது, மொழியைச் சிதைத்து, கதையைச் சிதைத்து  வாசகர்களுக்கு ஒரு திடீர் மன அதிர்ச்சியை ஏற்படுத்தும் சாரு போன்ற எழுத்தாளர்களுக்கு சமுதாயம் அளித்திருக்கும் கெளரவம் “அழகியல்வாதிகள்” என்பதாகும்.

இதுபோன்ற புனைவுகள் நமக்கு பிடிக்கவில்லை என்று மனம்திறந்தால் நம்மை பிற்போக்குவாதி என்கிறார்கள் சிலர். Do in Rome as Romans Do என்ற பழமொழிக்கேற்ப “நான் சாரு நிவேதிதாவின் நாவலை விரும்பிப் படிப்பேன்” என்று சொன்னால் நம்மையும் ஒரு Intellectual இலக்கியவாதியாக சமுதாயம் ஏற்றுக் கொள்கிறது.

 • “My novel was like a guerrilla attack on the society,”
 • “Being a writer in Tamil Nadu is like being a musician in the Taliban,”
 • “I wanted to free the chains imposed by the intelligentsia and the so-called culturewallahs from the Tamil language,”
 • “I consider my novel as auto-fiction. It is autobiography and fiction. I understand there is an auto-fiction movement in France”

இப்படியெல்லாம் வாய்மலர்ந்தருளும் சாருவின் கூற்றை கேட்கும் வெளிநாட்டவர்கள், வெளிமாநிலத்தவர்கள் அவரை நோபல் பரிசு வாங்கிய ரவீந்திரநாத் தாகூருக்கு இணையாக கருதுவார்கள் என்பது உறுதி.

சாரு எழுதுவதற்கு பெயர்  புனைவாம்.  அது கட்டுரை அல்லவாம். இன்னும் சொல்லப்போனால் அதன் பெயர் எரோட்டிக்கா புனைவாம். (போர்னோ இலக்கியம் என்றால் சாருவின் வாசக வட்ட அன்பர்கள் நம்மை அடிக்க வருகிறார்கள்)  எது எப்படியோ, சாருவின் எழுத்து வாசகர்களிடம்  ஒருவித கிளர்ச்சியையும், அதிர்ச்சியையும்,  வாசிப்பனுபவத்தையும்  ஏற்படுத்தவல்லது என்பதையும் அவர்  ஆளுமையுடைய எழுத்தாளர் என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.

charu with drinks

முன்பொரு சமயம் அ. மார்க்ஸ் சாருவைப் பற்றி எழுதும்போது “கடைசி பியர் வாங்கிக் கொடுப்பவன்தான் சாருவுக்கு  மிகச் சிறந்த எழுத்தாளன்” என்று குறிப்பிட்டிருந்தார். இப்படி சாருவைப் பற்றிய negative Commentsதான் அதிகம்.

குடிப்பழக்கம் போதைப்பழக்கம் யாரிடத்தில்தான் இல்லை? ஒளவையார், பாரதியார், கண்ணதாசன் இவர்கள் யாரும் செய்யாததையா இவர் செய்துவிட்டார் என்கிறார்கள். அறிவுஜீவிகள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் போலிருக்கிறது என்று நாமும் நம்மை சமாதானப் படுத்திக் கொள்கிறோம்.

சாருவைக் குறைகூறும் நான்  அவருடைய நல்ல குணங்களையும் எடுத்துச் சொல்ல வேண்டும். ஜெயமோகனை மரியாதைக் குறைவாக பேசிய நண்பர் ஒருவரைப் பார்த்து சாரு சொன்னது இது. “இலக்கியம் என்ற தளத்தில் நான் விமர்சிப்பது வேறு. ஆனால் நீங்கள் அவரை உரிய மரியாதையுடன் பேச வேண்டும். அவர் உழைப்புக்கு அறிவுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்” என அறிவுறுத்தி இருக்கிறார். பாராட்டப்பட வேண்டிய பண்பு.

சாரு தன்னை ஒரு Auto Fiction Writer என்று சொல்லிக் கொள்வதில் புளகாங்கிதம் அடைகிறார். அவர் மென்மேலும் எழுதுவதற்கு சொந்தக்கதை சோகக்கதை எதுவும் கைவசம் பாக்கி இருக்கிறதா, இல்லையா என்பது நமக்குத் தெரியாது.

 • “Dravidian politics and Brahminical indifference to Tamil culture have raped the Tamil language, which has shrunk and become superfluous,”
 •  “The member of Brahmin families talk Tamil only to vegetable vendors and their maids,”

என்றெல்லாம் பிறாமணர்களை சரமாரியாகச் சாடும் சாரு, துக்ளக்கில் எழுதவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சோ புராணம் பாடுவதை நம்மால் ஏற்றுகொள்ள முடியவில்லை.

“The Dravidians consider Tamil Nadu chief minister M Karunanidhi as an ‘artist’. What is his claim to be an artist?” என்று கேள்வி கேட்கும் சாரு பிறிதொரு சமயம் கனிமொழியின் ‘கருவறை வாசனை’ தொகுப்பு வெளிவந்தபோது தலையில் வைத்துக்கொண்டு கொண்டாடினார்.

260477_242766582415927_100000477613498_1029367_3391478_n

நித்யானந்தாவிற்கு தூபம் போட்டது பிறகு ‘பல்டி’ அடித்தது, தமிழச்சியுடனான இணைய உரையாடல், ஜெயமோகனுடன் லடாய், இப்படிப்பட்ட சர்ச்சைகள் அவரை பரபரப்பாக பேச வைத்தன.

சாரு தன்னை ‘நாகூர்க்காரன்’ என்று சொல்லிக் கொள்வதில் ஒருபோதும் பெருமை பட்டுக்கொண்டதாய் எனக்கு தோன்றவில்லை. ‘ஹனிபாவினால் நாகூருக்கு பெருமை’ என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ‘சாரு நிவேதிதாவால் நாகூருக்கு பெருமை’ என்று நம்மால் மார்தட்டி பீற்றிக்கொள்ள முடியவில்லை.

– நாகூர் அப்துல் கையூம்

 

Tags: , ,

5 responses to “சாருநிவேதிதாவும் நோஸ்டால்ஜியாவும்

 1. நாகூர் ரூமி

  August 30, 2014 at 10:09 pm

  கடைசியில் சொன்ன வார்த்த என்னவோ உண்மை கய்யூம்!

   
 2. johan paris

  August 30, 2014 at 11:05 pm

  //ஹனிபாவினால் நாகூருக்கு பெருமை’ என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ‘சாரு நிவேதிதாவால் நாகூருக்கு பெருமை’ என்று நம்மால் மார்தட்டி பீற்றிக்கொள்ள முடியவில்லை.//
  முழுக் கட்டுரையின் சாரம் இதுவே!
  அருமையான அலசல். சாருவை அணுவணுவாக புரிந்துள்ளீர்கள். உங்கள் உழைப்புக்கு பாராட்டுக்கள்.

   
 3. S.E.A.Mohamed Ali. "nidurali"

  September 9, 2014 at 4:21 pm

  அருமையான, விளக்கமான கட்டுரை
  தாங்கள் ஏதோ ராஜபரம்பரையிலிருந்து வந்தவர்களாக காட்டிக் கொள்ளும் ‘நேற்று பூத்த மழையில் இன்று பூத்த காளான்’களுக்கு மத்தியில் சாருவின் வெளிப்படத்தன்மை நம்மை ஈர்க்கிறது. இடைவெளி குறைகிறது. பரஸ்பரம் ஏற்படுகிறது. வாசகர்களாகிய நமக்கு அவரிடம் ஒரு நெருக்கத்தை உண்டு பண்ணுகிறது.

  எழுதுபவன் யோக்கியனா? ஒழுக்கமுள்ளவனா? என்றெல்லாம் வாசகன் பாரபட்சம் பார்ப்பது கிடையாது. எழுத்தாளனின் ஆளுமையில் கவரப்பட்டு அவனும் ‘அஸ்கா’வாய் கரைந்து போகிறான். வாசகன் எழுத்தைத்தான் நேசிக்கிறானே தவிர அவனது அந்தரங்கம் பற்றி அவனுக்கு கவலையில்லை.

  சாருவின் வெளிப்படத்தன்மையினாலேயே அவர் சகல சர்ச்சைகளிலும் சிக்கிக்கொண்டு சகட்டுமேனிக்கு விமர்சனங்களை சந்திப்பவராக இருக்கிறார். Rating ஏறுவதற்கு Image குறைந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பவர் அவர்.அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையையோ அல்லது பொதுஇடங்களில் அவரது நடத்தையையோ அலசிப்பார்ப்பது இப்பதிவின் நோக்கமல்ல.

   
 4. saleem

  November 29, 2014 at 7:54 pm

  I read your article and personally feel that he had suffered some sort of discrimination in his childhood, which dosen’t make him feel elated to say he is from Nagore. Though he remembers every moment of his life in Nagore, those bitter memories still haunt him. His early childhood seems to have battered with social, financial, adversities which doesen’t let him cherish the wonderful time, But deep in his mind there are still those moments which couldn’t be disregarded. I am sure time would heal those haunted memories and one day he will proudly proclaim that his literary roots are from Nagore for which is grateful for.

   
 5. rathnavelnatarajan

  February 26, 2015 at 1:06 pm

  படித்தேன். அருமை சார்.
  சாரு தன்னை ‘நாகூர்க்காரன்’ என்று சொல்லிக் கொள்வதில் ஒருபோதும் பெருமை பட்டுக்கொண்டதாய் எனக்கு தோன்றவில்லை. ‘ஹனிபாவினால் நாகூருக்கு பெருமை’ என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ‘சாரு நிவேதிதாவால் நாகூருக்கு பெருமை’ என்று நம்மால் மார்தட்டி பீற்றிக்கொள்ள முடியவில்லை.

   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: