RSS

நாகூர் ஹனிபாவும் கைத்தறி துணி விற்பனையும்

09 Sep
அறிஞர் அண்ணாவுக்கு பின்னால் நிற்பவர் நாகூர் ஹனிபா

அறிஞர் அண்ணாவுக்கு பின்னால் நிற்பவர் நாகூர் ஹனிபா

1953-ஆம் ஆண்டு அது…..

திராவிட முன்னேற்றக் கழகம் உருவாகி நான்கே நான்கு ஆண்டுகள் ஆகியிருந்தன. பெரியாரின் சீடராக இருந்த நாகூர் ஹனிபா, அறிஞர் அண்ணாவுடன் இணைந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காக முழுமூச்சாய் பெரிதும் பாடுபட்டார்.

1953-ல் திமுக நடத்திய மும்முனைப் போராட்டம் திராவிட இயக்க வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. இந்த போராட்டத்தின்போது அறிஞர் அண்ணா, ஈ.வெ.கி. சம்பத், நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், என்.வி.நடராசன் ஆகிய ஐவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கு “ஐவர் வழக்கு” என்று அழைக்கப்பட்டது. பின்னாளில் அவர்களே திமுகவின் ஐம்பெருந்தலைவர்கள் என்று பெருமையுடன் அழைக்கப்பட்டனர்.   இந்த ஐம்பெருந்தலைவர்கள் பட்டியலில் கலைஞர் கருணாநிதி பெயரெல்லாம் கிடையவே கிடையாது.

DMK Leaders

அண்ணா மதியழகன் 1957

நாகூர் ஹனிபா அறிஞர் அண்ணாவின் மீது தீவிர பற்று வைத்திருந்தார். அதே போன்று அறிஞர் அண்ணாவும் எந்தவொரு போராட்டத்திற்குச் சென்றாலும் தன்னுடன் நாகூர் ஹனிபாவையும் தவறாமல் அழைத்துச் சென்றார்.

1953-ஆம் ஆண்டில் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வில் பெருமளவில் துன்பஅலை வீசியது.  சொல்லவொணா துயரங்களை அவர்கள் சந்தித்தார்கள் அறிஞர் அண்ணாவும் நடுத்தர நெசவுத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவரே. கைத்தறி நெசவாளர்களின் குடும்பம் படும் அவலங்களை அவரால் காணப் பொறுக்கவில்லை. நெய்த துணிகள் யாவும் விற்பனையாகாமல் தேங்கிக் கிடந்தன. குடும்பங்கள் பசியால் வாடினர். சாப்பாட்டுக்கே வழி இல்லாத நிலை. இதனால் நெசவாளர்கள் கஞ்சித் தொட்டியை நாடும் அவல நிலை ஏற்பட்டது.  சிலர் பிச்சை எடுக்கும் நிலைக்குக்கூடத் தள்ளப்பட்டனர்.

முன்பு தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது கதர் மூட்டையை தலையில் சுமந்து ஊர் ஊராகச் சென்று விற்றார். அதேபோன்று ஒரு எண்ணம் அறிஞர் அண்ணாவின் மனதிலும் உதித்தது. கழகத் தலைமை ஒன்று கூடி கைத்தறித் துணிகளை விற்று அதனைக் கொண்டு நெசவாளர்களின் துயர் துடைக்க முடிவு செய்தனர். விற்பனை செய்வதற்கு முதற்கட்டமாக திருச்சி மாநகரத்தை தேர்ந்தெடுத்தனர்.

“திருச்சியில் யார் துணிகளை விற்பது?” என்ற கேள்வி எழுந்தபோது “திருச்சியில் நானே சென்று விற்கிறேன்” என்று அறிஞர் அண்ணா அறிவிப்பு செய்தார். கழகத்தொண்டர்களுக்கிடையே இந்த அறிவிப்பு பெரும் ஊக்கத்தையும், மிகுந்த எழுச்சியையும் உருவாக்கியது.

கழகத்தொண்டாற்றுவதற்காக சரியான வாய்ப்பை எதிர்பார்த்திருந்த நாகூர் ஹனிபா இதனை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். அண்ணாவிடம் சென்று “நானும் உங்களோடு இணைந்து பாடிக்கூவி கைத்தறி துணிகளை விற்கத் தயார்” என்றார். கண்களில் பெருமிதம் பொங்க அறிஞர் அண்ணாவும் நாகூர் ஹனிபாவின் முதுகில் செல்லமாகத் தட்டி “சபாஷ்” என்றார். [திருச்சி தெப்பக்குளத்து அருகே அறிஞர் அண்ணா, நாகூர் ஹனிபா, அன்பில் தர்மலிங்கம் முதலானோர் வீதியில் நின்று கூவிக் கூவி விற்கும் காட்சியைத்தான் மேலேயுள்ள படத்தில் காண்கிறீர்கள்]

“அனிபா அய்யாவுக்கு ஒலிபெருக்கி தேவையில்லை” என்று தந்தை பெரியார் முன்னொரு சமயம் கூறியது அறிஞர் அண்ணாவின் நினைவுக்கு வந்தது. ஊர் ஊராகச் சென்று கூவி விற்பதற்கு கம்பீர குரல்வளம் படைத்த நாகூர் ஹனிபாவைவிட வேறு பொருத்தமான ஆள் கிடையாது என்ற முடிவுக்கு வந்த அறிஞர் அண்ணா உடனே அவரை அழைத்துக் கொண்டு கழகக் கண்மணிகளோடு திருச்சிக்கு புறப்பட ஆயத்தமானார்.

அதுமட்டுமன்றி, திமுகவினரும் அவர்களது குடும்பத்தினரும் கைத்தறி ஆடைகளையே அணியவேண்டும் என அன்பாணை பிறப்பித்தார். தலைவனின் ஆணையை மகிழ்வோடு ஏற்றுக்கொண்ட  தொண்டர்களும் “கைத்தறி ஆடையே இனி அணிவோம்” என மனதில் உறுதி பூண்டனர்.  இந்நிகழ்வை இன்றளவும் கைத்தறி நெசவாளர்கள்  நினைத்துப் பார்த்து மனம் நெகிழ்கின்றனர். “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்றுரைத்த அறிஞர் அண்ணாவின் மனித நேயத்தை நினைத்துப் பார்த்து பெருமிதம் கொள்கின்றனர்.

அறிஞர் அண்ணாவின் இந்த கைத்தறி விற்பனைத் திட்டம் நன்றாகவே வெற்றி கண்டது. எதிர்பார்த்ததை விட கூடுதல் பலனை அளித்தது. திருச்சியில் தொடங்கி பின்னர் ஊர் ஊராகச் சென்று கழகத் தோழர்கள் கைத்தறி துணி விற்பனையில் ஈடுபட்டனர். மூட்டைகளைச் சுமந்து தெருத்தெருவாக கூவி விற்றனர். இந்த விற்பனையில் நாகூர் ஹனிபாவின் பங்கு கணிசமான அளவில் இருந்தது. “அண்ணாவின் கட்டளையை ஏற்று நான் 25,000 ரூபாய்க்கு கைத்தறி துணிகள் விற்றுக் கொடுத்தேன்” என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பத்திரிக்கையில் எழுதியும், பொதுக்கூட்டங்களில் பேசியும் கலைஞர் அவர்கள் சுயவிளம்பரம் தேடிக்கொண்டார்,

ஆனால் ‘பிழைக்கத் தெரியாத மனிதராக’, திமுகவில் பெரிய பதவியை எதுவும் நாடாமல், “அமைதிப் புரட்சி” புரிந்து, மாபெரும்  சாதனையாளராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியை மாத்திரம் கண்டு ரசித்து சந்தோஷப்படும் மனிதராக இன்றளவும் இருந்து வருகிறார் நாகூர் ஹனிபா. “நான் இவ்வளவு ரூபாய்க்கு விற்றுக் கொடுத்தேன். இதுபோன்று சாதனைகள் புரிந்தேன்” என்று இதுவரைக்கும் இந்த அப்பாவி மனிதர் எந்த ஊடகத்திலும் மார்தட்டிக் கொண்டதில்லை.

Nagore Haniffa Old Photo

உடுமலை நாராயணகவி எழுதிய பாடலொன்று நாகூர் ஹனிபாவுக்கு கைகொடுத்தது. கம்பீரக் குரலோடு ஒலிபெருக்கியின் உதவி இல்லாமலேயே பாடத் தொடங்கினார். ‘சான்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு’ என்ற கூற்றைப் போன்று இந்த “தமிழக தான்சேன்” எந்த ஊருக்குச் சென்று தன் கந்தர்வக் குரலால் ராகமிசைத்தாலும், மக்கள் அவரது இசையில் மயங்கி கட்டுண்டனர்.

சேலைகள் வேட்டிகள் வாங்குவீர்

திராவிட நாட்டின் சேமம் வேண்டி

சிங்கார ஆடைகள் வாங்குவீர்.

பாடலின் ஆரம்ப வரிகள் இதுதான்.

தங்கள் அபிமான தலைவர்களைக் காணவும், “கணீர்” என்ற வெண்கலத்தொனியுடன், கம்பீரத் தோற்றம் கொண்ட  நாகூர் ஹனிபா பாடும் பாடலை ஆர்வத்துடன் கேட்கவும், கட்டுக்கடங்காத கூட்டம் ஆங்காங்கே கூடியது. பொதுமக்கள் தங்கள் விருப்பம்போல் கைத்தறி துணிகளை தாராள மனப்பான்மையோடு வாங்கிச் சென்றனர்.

நெசவாளர்களின் துயரினை விளக்கும் வகையில் தந்தை பெரியார் அவர்களும் தன் பங்குக்கு 28.02.1953 தேதியிட்ட விடுதலை ஏட்டில் பின்வருமாறு தலையங்கம் எழுதியிருந்தார்.

இன்றையத் தினம் இந்நாட்டிலே நெசவாளர்கள் கஷ்டம் இருக்கிறது என்றால், அவர்கள் குடும்பம் குடும்பமாய் ஊர்சுற்றிப் பிச்சையெடுத்து அதுவும் கிடைக்காமல் பட்டினி கிடந்து, தற்கொலை செய்து கொண்டு சாகவுமான நிலைமை இந்த நாட்டிலே இருக்கிறது என்றால் யார் காரணம்? பொதுமக்களுக்குத் துணி தேவையில்லை என்று சொல்லி விட முடியுமா? அல்லது நெசவாளர்கள் தான் வேலை செய்யத் தெரியாத சோம்பேறிகள் என்று சொல்லிவிட முடியுமா? முடியாதே! அவர்களுக்கு வேலை இல்லை. செய்ய மனமிருந்தும், திறமிருந்தும், வேலையில்லாக் காரணத்தால் விதியற்று, வாழ்வற்று வீதியிலே பட்டினி கிடந்து நெசவாளி சாகிறான்.

– தோழர் ஈ.வெ.ரா
(‘விடுதலை’, 28.02.1953)

“மில்கள் கரை வேஷ்டி, கலர் புடவைகள் உற்பத்தி செய்யக் கூடாதெனத் தடை விதிப்பதுதான் கைத்தறி நெசவாளர் பிரச்னைக்கு நிரந்தரப் பரிகாரம்” என 10.6.1953-ல் அப்போது முதல் மந்திரியாக இருந்த ராஜாஜியும்  தன் பங்குக்கு ஆலோசனையை எடுத்துரைத்தார். தம் திட்டத்தில் நேருஜி அனுதாபம் கொண்டுள்ளதாகவும், அவர் நிச்சயமாகச் சரியான நடவடிக்கை எடுப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

1957-ஆம் ஆண்டு கூத்தாநல்லூரைச் சேர்ந்த கமாலுத்தீன் (கமால் பிரதர்ஸ்) “புதையல்” என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டார். கதை வசனம் மு,கருணாநிதி எழுதி இருந்தார். [அப்போது குளித்தலை தொகுதியிலிருந்து வென்று முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக கலைஞர் கருணாநிதி பதவி வகித்த நேரம்.] தற்போது 6 கோடி மதிப்புள்ள கோபாலபுரம் வீட்டை 40,000 ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்தது கமால் பிரதர்ஸ் என்பது திமுக மூத்த தொண்டர்கள் பலரும் அறிந்து வைத்திருக்கும் செய்தி. (அந்த வீட்டை வாங்கித்தந்தது கலைவாணர் என்,எஸ்.கே. அவர்கள். கார் வாங்கித் தந்ததுதான் கமால் பிரதர்ஸ் என்ற மாறுபட்ட கருத்தொன்றும் நிலவுகிறது. உண்மை அந்த கலைஞருக்கே வெளிச்சம்)

தேங்கிக் கிடந்த கைத்தறி துணிகளை நாகூர்  ஹனிபா, அன்பில் தர்மலிங்கம், மு.கருணாநிதி உள்ளிட்ட திராவிட முன்னேற்றக் கழக கண்மணிகள் வண்டிகளில் ஏற்றிக்கொண்டு ஊர்தோறும் சென்று விற்பனைச் செய்து நெசவாளர்கள் துயரைப் போக்கிய நிகழ்வு பொதுமக்களின் மனதிலிருந்து அழியாதிருந்த நேரமது

இவ்வேளையில் கைத்தறியின் மாண்புகளை விளக்கும் வகையில் கமால் பிரதர்ஸ் தயாரித்த “புதையல்” படத்தில் கவிஞர் பட்டுக்கோட்டை  கல்யாணசுந்தரம் அவர்கள் ஒரு அருமையான பாடலை  எழுதியிருந்தார்.

சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும் 
சித்திரக் கைத்தறி சேலையடி! – நம்ம 
தென்னாட்டில் எந்நாளும் 
கொண்டாடும் வேலையடி! 

காஞ்சிபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஜரிகை ஆலை, மறைந்த பேரறிஞர் அண்ணா கனவு கண்டதாகும். அவர் மறைந்த பிறகு அந்த ஆலையை உருவாக்கியவர் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். அப்படிப்பட்ட ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளதை நினைத்தால் இதயம் வெடிக்கிறது. இதனை இப்போதைய அதிமுக அரசும் கண்டுக் கொள்வதாக தெரியவில்லை.

1955-ஆம் ஆண்டு, “நம் நாடு” கழக ஏட்டில் வெளிவந்த ‘அழைக்கின்றார் அண்ணா’ என்ற பாடலை HMV நிறுவனம் பதிவு செய்ய, நாகூர் ஹனிபாவின் கம்பீரக் குரலில்  இசைத்தட்டு வெளியானபோது,  அப்பாடல் தமிழகத்தில்  ஓர் இசைப்பிரளயத்தை உண்டு பண்ணி  தென்னக அரசியலில்  ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த மூலக்காரணமாக இருந்தது. எந்தப் பாடலை வெளியிட முதலில் HMV நிறுவனம் கட்டோடு மறுத்ததோ அந்த இசைத்தட்டுதான் அந்த ஆண்டில் அதிகம் விற்று விற்பனையில் ஒரு சாதனையைப் படைத்தது

அறிஞர் அண்ணா அடிக்கடி பெருமைபட கூறிய வார்த்தைகள் என்ன தெரியுமா? “அழைக்கின்றார் அண்ணா” என்ற இந்தப்பாடலை நாகூர் ஹனிபாவை பாட வைத்து படமெடுத்து, அதைத் திரையிட அரசு அனுமதித்தால் நிச்சயம்  திராவிட நாடு பெற்று விடுவேன்” என்பதுதான். அவர் அன்று உதிர்த்த சொற்கள் தமிழக அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.

ஆம். அப்படிப்பட்ட காந்தக் குரல் ஹனிபாவுடையது. அந்த சிம்மக் குரலோனுக்கு இணையாக இதுவரை  யாரும் வரவில்லை. ஒலிபெருக்கியையே அதிர வைக்கும் எட்டுக்கட்டை கம்பீரச் சாரீரம் அது.

திமுக தொடக்க கால முதல் இன்றுவரை தன் விசுவாசத்தையும், தன் உழைப்பையும்  அறிஞர் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட திராவிட முன்னேற்றக் கழகத்திற்காகவே அர்ப்பணித்திருக்கின்ற அதிசய மனிதர் அவர். கத்திக் கத்தி ரத்தவாந்தி எடுத்து, தன் செவிப்பறையும் கிழிந்து இன்று உடல் நலிந்து காணப்படுகிறது அந்த தன்மானச் சிங்கம்

நாகூர் ஹனிபாவை ஒரு இஸ்லாமியப் பாடகராக மட்டுமே அறிந்து வைத்திருக்கின்ற இன்றைய இளைய தலைமுறையினர் தமிழகத்தில் ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டவர் அவர் என்ற விவரம் அறிந்து வைத்திருக்கவில்லை என்பது மனதுக்கு வேதனை அளிக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் வருங்காலத் தலைவர்களாக உருவெடுத்திருக்கும் கலைஞர் ஐயாவின் வாரிசுகளும் பேரக்குழந்தைகளும் இந்த அழிக்க முடியாத வரலாற்றையெல்லாம் அறிந்து வைத்திருக்கிறார்களா என்று யாராவது கேட்டால் நமக்கு உதட்டைத்தான் பிதுக்கத் தோணுகிறது.

வலது பக்கத்திலிருந்து இரண்டாவதாக அமர்ந்திருப்பவர் நாகூர் ஹனிபா

வலது பக்கத்திலிருந்து இரண்டாவதாக அமர்ந்திருப்பவர் நாகூர் ஹனிபா

 

தொடர்புடைய சுட்டி:

நாகூர் அனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (5-ஆம் பாகம்)

நாகூர் அனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (4-ஆம் பாகம்)

நாகூர் அனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (3-ஆம் பாகம்)

நாகூர் அனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (2-ஆம் பாகம்)

நாகூர் அனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (1-ஆம் பாகம்)

 

One response to “நாகூர் ஹனிபாவும் கைத்தறி துணி விற்பனையும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: