RSS

வஹிதா ரஹ்மானும் நாகூர் தொடர்பும்

20 Oct

w2

வஹிதா ரஹ்மானுக்கும் நாகூருக்கும் மிக நெருங்கியத் தொடர்பு உண்டு. இதனைப் படிப்பவர்கள் நான் ‘மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடு’வதாக நினைக்கத் தோன்றும்.

அகில இந்திய அளவில் கனவுத் தாரகையாக, இந்தி திரைப்பட உலகில் கொடிகட்ட பறந்த அந்த பிரபல பத்மஸ்ரீ பத்மபூஷண் நடிகைக்கும், தென்னிந்தியாவின் ஏதோ ஓரு மூலையில் இருக்கும் சிறிய ஊரான நாகூருக்கு அப்படி என்ன ஒரு தொடர்பு இருக்க முடியும்?

இதற்கு ஒரு சின்ன ‘ப்ளாஷ்பேக்’ தேவைப்படுகிறது.

என் இளம்பிராயத்தில் நான் முதன் முதலாக பார்த்த இந்திப்படம் “பீஸ் சால் பாத்”. திருச்சிக்குச் சென்றிருந்தபோது மதுரை ரோட்டில் அமைந்திருந்த ராஜா திரையரங்கில் அப்படத்தை பார்த்த அனுபவம் என் மனதில் ஒரு ‘திகில்’ உணர்வை ஏற்படுத்தியிருந்தது. இரவில் உறங்கிக் கொண்டிருக்கையில் திடீரென்று அந்த படத்தில் வெள்ளை உடை அணிந்து பாட்டு பாடித்திரியும் அந்த பெண் பேயின் நினைவு கனவில் வந்து என்னை பயமுறுத்தும். திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தபடி அழுவேன்.

எனது பாட்டி அம்மாஜி திருமறை வசனங்கள் என் மீது ஓதி ஊதி பயம் தெளிய வைப்பார்கள். மறுநாள் “அந்த படம் யார் நடித்தது?” என்ற பேச்சு எழுந்தபோது நான் அவர்களிடம் ”வஹிதா ரஹ்மான்” என்று கூறினேன்,

சற்று நேரம் மெளனம் நீடித்தது, காலை நீட்டிக்கொண்டு இரும்பாலான உரலில் சிறிய உலக்கையைக் கொண்டு பாக்கு இடித்துக் கொண்டிருந்த அவர்களின் முகத்தில் ‘பளீச்’சென்று ஒரு பிரகாசம். தோன்றியது.

பழைய நினைவுகளில் அப்படியே மூழ்கிப்போனார். “ஓஹோ! வஹிதா ரஹ்மானா? என்று கூறி விட்டு ஒருவிதமான அர்த்தமுள்ள புன்னகையை உதிர்த்தார். அவருடைய மெளனப் புன்னகைக்குப் பின்னே ஏதோ ஒரு பின்னணிக் கதை இருப்பதை என்னால் ஊகிக்க முடிந்தது.

தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேசத் தயாரானார். நானும் அவர் வாயிலிருந்து வரப்போகும் சுவையான அனுபவங்களைக் கேட்பதற்கு ஆவலுடன் காதுகளைத் தீட்டிக் கொண்டேன்.

“இதோ பார்த்தியா இந்த முற்றம். இங்கேதான் வஹிதா ரஹ்மான் சின்னக் குழந்தையாக இருக்கும் போது கவுன் அணிந்துக் கொண்டு சுற்றிச் சுற்றி வருவாள்” என்று ஆரம்பித்தார்.

எனக்கு ஒரே ஆச்சரியம்! இந்தி நடிகை வஹிதா ரஹ்மான் நம் வீட்டுக்கு வந்து போவாரா?. என்னால் நம்பவே முடியவில்லை. ஆர்வத்துடன் அவர் சொல்வதை கேட்கத் தொடங்கினேன்.

பழைய ஞாபகங்கள் ஒவ்வொன்றாய் அசைபோட்டு கூறலானார். பாட்டி அம்மாஜி கூறியதை அப்படியே மனதில் பதிய வைத்துக் கொண்டேன். அதை எழுத்து வடிவில் ஆவணப்படுத்துவதற்கு இன்றுதான் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று நினைக்கிறேன்.

நாகூரில் நல்ல வசதி வாய்ப்போடு வாழ்ந்த குடும்பம் எங்களுடையது. எங்கள் குடும்பத்திற்கு சொந்தமாக ஜவுளிக்கடை, தொப்பிக்கடை, கைத்தறி கைலிகள் தயாரிக்கும் கம்பெனி மற்றும் பத்தை கைலிகள் ஸ்க்ரீன் பிரிண்ட்ஸ் கம்பேனி இருந்தது. என்னுடைய பாட்டனார் அ.அ.அப்துல் அஜீஸ் அரசு அதிகாரிகளுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தார். நாகை மாவட்ட கமிஷனராக இருந்த முகம்மது அப்துல் ரஹ்மான் அதுபோன்று அறிமுகமானவர்தான்.

ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் மாலை வேளையில் தவறாமல் நாகூருக்கு அவர்களுடைய குடும்பம் நாகப்பட்டினத்திலிருந்து வந்து விடும். எங்கள் வீட்டில்தான் வந்து சற்று நேரம் ஓய்வெடுப்பார்கள், வியாழக்கிழமை இரவை “கிழமை ராவு” என்று விசேஷமாக எங்களூரில் சொல்வார்கள்.

அன்றைய தினம் மின்விளக்குகளால் தர்கா அலங்கரிக்கப்பட்டு தர்காவைச் சுற்றியுள்ள வெளிநாட்டு பொருட்கள் விற்பனையாகும் கடைகள் மற்றும் இனிப்புப் பலகாரம் விற்கும் கடைகளில் கூட்டம் அலைமோதும். அந்த பகுதிக்குள் நுழைந்தாலே சுடச்சுட பட்டாணிக்கடலை வறுக்கும் மணம் ‘கமகம’வென்று மூக்கைத் துளைக்கும்

நாலாபுறமுள்ள சுற்றுபுற ஊர்களிலிருந்து மக்கள் சாரை சாரையாக வந்த வண்ணம் இருப்பார்கள். தர்காவின் உட்புறத்திலுள்ள திண்ணையில் நாதஸ்வர தவில் கச்சேரி நடைபெறும். ‘நகரா மேடை’யில் ஷெனாய் இசை ஒலிக்கும். மொத்தத்தில் விழாக்கோலம் பூண்டு ஊரே கலகலப்பாக களைகட்டும்.

அப்துல் ரஹ்மான் நாகூருக்கு வரும்போதெல்லாம் நாகூரில் பிரசித்திப் பெற்ற “உப்புரொட்டி” என்ற ஒரு வகை cookies தவறாமல் வாங்கிக்கொண்டு போவார். என் பாட்டனார் அ.அ.அப்துல் அஜீஸின் சகோதரர் இஸ்மாயீல் நாகூர் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு நேரெதிரே அமைந்திருந்த ரொட்டிக்கிடங்கிலிருந்து (Bakery) சுடச்சுட பெரிய தகரடின்னில் பேக் செய்து தருவிப்பார். வஹிதாவுக்கும் அவர் சகோதரிகளுக்கும் இந்த தின்பண்டம் என்றால் உயிர்.

[உப்புரொட்டியை நாகூரில் முதன் முதாலாக அறிமுகம் செய்து வைத்தது இஸ்மாயில் சாஹிப்தான், அதற்குப் பிறகு அதனை மேலும் பிரபலப்படுத்தியது சஹ்பான் என்பவர், இன்றளவும் இந்த உப்புரொட்டி நாகூரின் பிரசித்திபெற்ற தின்பண்டங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது.]

வஹிதாவின் தந்தை அப்துல் ரஹ்மானுடைய குடும்பம் சற்று மாடர்னான குடும்பம். நாகையில் மாவட்டக் கமிஷனராக பணிபுரிந்த அவரிடம். கார், பணியாட்கள், ஓட்டுனர் என சகல வசதி வாய்ப்புகளும் இருந்தது. உருதுமொழிதான் அவர்களது தாய் மொழி, அப்துல் ரஹ்மானுக்கு தன் குழந்தைகளுக்கு உருது மொழி பயிற்றுவிக்க ஆசை,, நாகூரில் அந்த வசதி இருந்தது. நாகூரில் உருதுமொழி கற்பிக்க கோஷா ஸ்கூல் இருந்தது. ஆனால் நாகையிலிருந்து வந்துபோக அது அவர்களுக்கு சாத்தியப்படவில்லை.

அப்துல் ரஹ்மான் – மும்தாஜ் பேகம் தம்பதியினருக்கு மொத்தம் நான்கு குழந்தைகள். நான்கும் பெண்குழந்தைகள். சயீதா, வஹிதா, ஷாஹிதா, ஜாஹிதா (Zahida), ஆகிய நால்வர் ஆண் வாரிசு கிடையாது. வஹிதாவும் அவருடைய மூத்த சகோதரி சயீதாவும் துறுதுறு’வென்று இருப்பார்கள்.

வஹிதாவின் தந்தை சற்று மாநிறமாக இருந்தாலும், தாயார் மும்தாஜ் நல்ல எடுப்பான நிறம். தாயின் செக்கச்செவேலென்ற நிறம்தான் பெண்பிள்ளைகளுக்கு வாய்த்திருந்தது. அப்போது வஹிதாவுக்கு ஏழோ, எட்டோ வயதிருக்கும் குட்டைப்பாவாடை அணிந்த சிறுமியாக வலம் வந்துக் கொண்டிருப்பார். .

வஹிதாவுக்கு யானை என்றால் கொள்ளை இஷ்டம். அவரை அழைத்துக் கொண்டு தர்கா அலங்கார வாசல்முன் நிற்கும் அலங்கரிக்கப்பட்ட யானையின் முதுகில் உட்கார வைத்து மகிழ்வார் அவரது தந்தை. தன் மகளின் முகத்தில் பூக்கும் அந்த புன்சிரிப்பை கண்டு ரசிப்பார்.

ஒரு சமயம் தர்கா யானை எங்கள் வீட்டு வழியே சென்றது. வீட்டின் முன் வந்து நிற்கும் யானைக்கு சில்லறை காசு கொடுத்தால், யானை தன் தும்பிக்கையால் சுழற்றி வாங்கிக் கொண்டு அதை அப்படியே யானைப் பாகனிடத்தில் ஒப்படைக்கும். அதை வேடிக்கை பார்க்கும் வஹிதாவுக்கும் அவரது சகோதரி சயீதாவுக்கும் ஆச்சரியம் சொல்லி மாளாது.

மேலும் அதற்கு உரித்த தேங்காயை கொடுத்தால் தும்பிக்கையால் லாவகமாக தரையில் அடித்து உடைத்து சில்கள் சிதற அதன் உட்புற வெள்ளை பகுதியை அப்படியே வாரி எடுத்து யானைப் பாகனிடத்தில் கொடுக்கும். இந்தக் காட்சியைக் காணும் வஹிதாவும் அவரது சகோதரி சயீதாவும் உற்சாகத்தில் துள்ளுவார்கள்.

“டாடி! டாடி எனக்கு அந்த யானையை வாங்கித் தாருங்கள்” என்று வஹிதா தன் தந்தையிடம் அடம் பிடிப்பார். “இந்த பெரிய யானை வேண்டாம். கொஞ்சம் பொறு. உனக்காக ஒரு குட்டியானை வாங்கித் தருகிறேன். அதனை வளர்த்து நீ பெரிய யானையாக ஆக்கலாம்” என்று சமாதானம் செய்வார்.

வஹிதாவுக்கு யானை மீது ஒரு அபார பைத்தியம் எற்பட்டதற்கு காரணம் அவர்கள் ஏற்கனவே இருந்த ஊர். அப்துல் ரஹ்மான் நாகப்பட்டினத்திற்கு மாற்றல் ஆவதற்கு முன்பு இருந்ததோ பாலக்காட்டில். தமிழகம்-கேரளா எல்லையிலிருந்த பாலக்காடு இயற்கை வளம் நிறைந்த பகுதி. அங்குள்ளவர்கள் தமிழ் பேசினாலும் அவர்களது கலாச்சாரம் முழுக்க முழுக்க கேரளாவைச் சார்ந்ததாக இருந்தது.

ஓணம் பண்டிகையின் போது பாலக்காடு கோட்டையில் அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பு பிரமாதமாக நடக்கும். ஐந்து வயதுச் சிறுமியான வஹிதா ரஹ்மானை அழைத்துக் கொண்டு அப்துல் ரஹ்மான் பாலக்காடு கோட்டைக்குச் செல்வார். தோளில் அவரை தூக்கிப்பிடித்து தூரத்தில் நடக்கும் அணிவகுப்பை வேடிக்கை காட்டுவார். யானைகளின் அணிவகுப்பு பார்ப்பதற்கு வண்ணமயமாகவும், கம்பீரமாகவும் பிரமாண்டமான காட்சியாக இருக்கும். அதிலிருந்தே வஹிதாவுக்கு யானைகள் மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது

சினிமா, நாடகம். நாட்டியம் என அனைத்து கலைநிகழ்ச்சிகளுக்கும் தன் பெண்பிள்ளைகளை அப்துல் ரஹ்மான் அழைத்துச் செல்வார். அவருக்கும் இசை என்றால் கொள்ளைப் பிரியம். வஹிதாவுக்கு நாட்டியத்தின் மீது சிறுவயது முதற்கொண்டே ஒர் ஈடுபாடு ஏற்பட்டது.

“நான் திரைத்துறைக்கு வந்ததே எனக்கு நடனத்தின் மீது இருந்த அளப்பரிய ஈடுபாட்டினால்தான்” என்று அண்மையில் ஒரு பேட்டியின்போது கூறியுள்ளார்.

வஹிதா எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவராக இருந்தார். சோகமான காட்சிகள் திரைப்படத்தில் வந்தால் தியேட்டரிலேயே ‘கேவிக் கேவி’ அழுவார். அவரை சமாதானம் படுத்துவதற்கே அவருடைய தாயாருக்கு நேரம் போதுமானதாக இருக்கும்.

அப்துல் ரஹ்மானுக்கு வேட்டை என்றால் மிகவும் இஷ்டம். எனது பாட்டனார் அவரை அழைத்துக்கொண்டு வேதாரண்யம் அருகேயுள்ள பகுதிக்கு மான் வேட்டைக்குச் செல்வார். என் பாட்டனாருடன், வேறு சில நண்பர்களும் சேர்ந்துக் கொள்வார்கள். கோடியக்கரையிலிருந்த எனது பாட்டனாரின் நண்பரின் பங்களாவில்தான் தங்குவார்கள். மான்கறி சமைத்து ‘கூட்டாஞ்சோறு’ ஏற்பாடு செய்வார்கள்.

அப்துல் ரஹ்மான் மும்தாஜ் பேகத்தை 1920-ஆம் ஆண்டு திருமணம் செய்தார். அப்துல் ரஹ்மான் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும், கேரள எல்லையிலிருந்த பாலக்காட்டிலும், ஆந்திராவிலிருந்த விசாகப்பட்டினத்திலும் இம்பீரியல் சிவில் சர்வீஸ் அதிகாரியாக பணியாற்றினார். இப்போதைய I.A.S. அதிகாரி வகிக்கும் பதவிக்குச் சமமான பதவி அது. 1936-ஆம் ஆண்டு அவர் செங்கல்பட்டில் இருந்தபோதுதான் வஹிதா பிறந்தார்.

உருது மொழிதான் அவர்களுடைய தாய்மொழி. என்றாலும் வஹிதாவின் தந்தை அப்துல் ரஹ்மான் நன்றாக தமிழ்பேசக் கற்றுக் கொண்டார். அப்துல் ரஹ்மானின் தந்தை வடநாட்டில் ஜமீந்தாராக இருந்தவர். அவர் வேறொரு திருமணம் செய்துக் கொண்டபோது மனமுடைந்து சென்னை மாகாணத்திற்கு பணிமாற்றல் கேட்டு வாங்கிக் கொண்டு இங்கு வந்து அடைக்கலம் புகுந்தார்.

photo 1

வஹிதா ரஹ்மான், அவரது தாயார் மும்தாஜ் பேகம், சகோதரி சயீதா ரஹ்மான்

டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் மருமகன், “ஒன்றே குலம்” என்ற படத்தைத் தயாரித்தபோது அதற்கு கதை – வசனம் எழுதியவர் கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி. இவருடைய சிபாரிசின் பேரில்தான் அந்தப் படத்தில் வஹிதா ரஹ்மானுக்கு நர்ஸ் வேடம் கிடைத்தது.

[‘சிலம்புச் செல்வர்’ ம.பொ.சி.யின் நெருங்கிய சீடர்களில் கு.சா.கிருஷ்ணமூர்த்தி முக்கியமானவர். தமிழரசு கழகத்தை ம.பொ.சி. தொடங்கியது முதல் கா.மு.ஷெரீபுடன் இணைந்து ம.பொ.சிக்கு பக்கபலமாக இருந்தவர் இவர்.]

w1

வஹிதா ரஹ்மான் பருவ வயதை எட்டியிருந்தபோது 1951-ஆம் ஆண்டு அவருடைய தந்தையின் மரணம் திடீரென சம்பவித்தது. மருத்துவப்பட்டம் பெற்று மருத்துவர் ஆகவேண்டும் என்ற அவரது கனவு தூள் தூளாகத் தகர்ந்து போனது, அவரது குடும்பத்தின் பொருளாதாரச் சூழ்நிலைக் கருதி சினிமாத் துறையில் புகுந்து சம்பாதிக்க முற்பட்டார். அதற்கான அழகும், உருவமும், திறமையும் தன்னிடம் உள்ளது என்று திடமாக நம்பினார். செல்வச் செழிப்போடு வாழ்ந்த அவர்கள் அதேபோன்று ஆடம்பர வாழ்க்கையைத் தொடர நிறைய பணம் தேவைப்பட்டது.

1953-ஆம் ஆண்டு வஹிதாவின் மூத்த சகோதரி சயீதாவுக்கு திருமணம் நடந்தது.

இதற்கிடையில், அவரது தாயாரும் நோய்வாடப்பட்டார். 1955-ஆம் ஆண்டு அவரும் மரணம் எய்தினார். குடும்பத்தை வழிநடத்த சகோதரர்கள் யாரும் இல்லை. பெற்றோர்களுடைய மரணம் அவரது வாழ்க்கைப் பாதையில் ஒரு திருப்பத்தை உண்டு பண்ணியது.

வஹிதாவின் தாய்வழித் தாத்தா நல்ல ரோஜாப்பூ நிறம். ஆஜானுபாகுவான தோற்றம். இந்திய பிரிவினைக்கும் முன் அவரது முன்னோர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்து குடியேறினார்கள். வஹிதா ரஹ்மானின் தாயாரின் குடும்பம் மிகப் பெரிய குடும்பம். அவருடைய தாயாருக்கு ஐந்து சகோதரிகளும், நான்கு சகோதரர்களும் இருந்தனர். பிறகு வஹிதாவின் தாயாரின் குடும்பத்தினர் பாகிஸ்தானில் சென்று குடியேறினர்.

வஹிதாவின் தாய்மாமன்கள் அத்தனை பேரும் வஹிதா ரஹ்மானிடம் மிகுந்த பிரியம் வைத்திருந்தனர். அவர்கள் எல்லோரும் வடநாட்டில்தான் இருந்தார்கள். அவர் சினிமாவில் நடிக்கிறார் என்ற செய்தி கேள்விப்பட்டு தடுப்பதற்கு நிறைய முயற்சிகள் எடுத்தார்கள். சினிமா வழிக்கேட்டில் சென்று விட்டுவிடும் என்று எச்சரித்தார்கள். அம்மாவின் அளவுக்கு அதிகமான செல்லம், வஹிதாவின் பிடிவாதம் இவையிரண்டிற்கும் முன்னால் தாய்மாமன்களின் எதிர்ப்பு சற்றளவும் எடுபடவில்லை.

w5

நடிப்புத்துறையில் நுழைவதற்கு தேவையான அத்தனை பயிற்சிகளையும் சிரமத்துடன் மேற்கொண்டார். சென்னையில் திருச்செந்தூர் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை என்ற குருவிடம் பரதநாட்டியம் பயின்றார். சென்னையில் அவர்களுக்கு சொந்தமாக ஒரு வீடும் “ரெட்ஹில்ஸ்” பகுதியில் விவசாய நிலங்களும் இருந்தன.

வஹிதா ரஹ்மானுக்கு தமிழ், தெலுங்கு மொழிகள் தெரியாது என்றாலும் பேசினால் ஓரளவு புரிந்துக் கொள்வார். காலப்போக்கில் அவர் அதனை மறந்தும் போனார்.

1955-ஆம் ஆண்டு அப்துல் ரஹ்மானின் நண்பராகத் திகழ்ந்த ராமகிருஷ்ண பிரசாத் என்பவர் “ரோஜுலு மாராயி” என்ற பெயரில் தெலுங்கு படம் ஒன்றை தயாரித்தார். அதில் ஒரு பாடலுக்கு நடனமாட வஹிதாவுக்கு வாய்ப்பளித்தார். .இப்படித்தான் அவருடைய திரையுலக பிரவேசம் தொடங்கியது.

hqdefault

அதே வருடம் தெலுங்கில் வெளிவந்த “ஜெயசிம்ஹா” என்ற படத்தில் சிறிய வேடமேற்று நடித்தார். 1956-ஆம் ஆண்டு, ஜெமினி கணேசன் அஞ்சலி தேவி ஜோடியாக நடித்து வெளிவந்த “காலம் மாறிப்போச்சு” என்ற படத்தில் இடம் பெற்ற

“ஏறு பூட்டி போவாயே அண்ணே ! சின்னண்ணே !! – உன்

துன்பமெல்லாம் தீருமே அண்ணே ! சின்னண்ணே !!

என்ற பாடலுக்கு அமர்க்களமாக அவர் ஆடிய நடனம் திரையுலகினரின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. “ரோஜுலு மாராயி” என்ற படத்தில் இடம்பெற்ற தெலுங்கு பாடலின் தமிழ் “ரீமேக்” அது. ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ என்ற படத்தில் “சலாம் பாபு” என்ற பாடலுக்கு குரூப் டான்சராகவும் வந்து ஆடியிருக்கிறார்.

w4

எம்.டி.ஆர் – வஹிதா ரஹ்மான்

எம்.ஜி.ஆர்., என்.டி.ராமாராவ், ஜெமினி ஆகியோர் நடித்த தென்னிந்திய மொழிப் படங்களில் பெரும்பாலும் நடனக் காட்சிகளில் மட்டுமே நடித்து வந்த வஹிதாவுக்கு 1956-ஆம் ஆண்டு இந்தி பட உலகில் கதாநாயகியாக நடிக்கக்கூடிய பெரிய வாய்ப்புகள் காத்திருந்தன. அவரை இந்தியுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் குருதத்.

வஹிதா ரஹ்மான் என்ற பெயரை சினிமாவுக்கு ஏற்றவாறு வேறு பெயர் மாற்றிக்கொள்ளும்படி அவருக்கு பரிந்துரை செய்தபோது அதனை ஏற்க மறுத்து விட்டார்.

இஸ்லாமிய மதத்தை சேர்ந்த முகம்மது யூசுப்கான் திலீப்குமாராகவும், மஹ்ஜாபீன் பானு மீனா குமாரியாகவும், மும்தாஜ் ஜஹான் பேகம் மதுபாலாவாகவும் பெயர் மாற்றம் செய்து இந்திப் படவுலகை கலக்கிக்கொண்டிருந்தனர்.

வஹிதாவுக்கு இந்த பெயர் மாற்றத்தில் சற்றும் உடன்பாடு இல்லை. “ரசிகர்கள் என் நடிப்பைத்தான் பார்ப்பார்களேத் தவிர என் பெயரை அல்ல. பெயரை மாற்ற ஒருக்காலும் நான் மாட்டேன்” என்று ஒரே பிடிவாதமாக அவர் இருந்து விட்டார்.

குருதத்துக்கும் வஹிதா ரஹ்மானுக்கும் இடையே நெருக்கமான உறவு இருந்தது என்ற வதந்தி பலமாக பரவியிருந்தது. கடைசிவரை வஹிதா அதைப்பற்றி எந்தவித கருத்தும் கூறாமலே காலத்தைக் கடத்தினார்.

காலப்போக்கில் அனைத்து இந்தி முன்னணி காதாநாயகர்களுடனும் ஜோடியாக நடித்து தொட முடியாத உச்சத்திற்கு சென்று சாதனைகள் படைத்தார்.

அவர் தனது 38-வது வயதில்தான் – 1974-ஆம் ஆண்டு – சஷி ரேக்கி (திரைப்படப் பெயர் கமல்ஜீத்) திருமணம் புரிந்துக்கொண்டு பெங்களூரில் குடியேறினார். 2000-ஆம் ஆண்டு தன் கணவருடைய மரணத்திற்குப்பின் மீண்டும் பம்பாய் சென்று பாந்த்ராவில் உள்ள அவரது பங்களாவில் குடியேறி வாழ்ந்து வருகிறார்.

w3

வஹிதா ரஹ்மான் – குருதத் (படத்தில்)

 

கிட்டத்தட்ட 55 வருடங்களுக்குப் பிறகு வஹிதா ரஹ்மானை மீண்டும் “விஸ்வரூபம்-2” படத்தில் அம்மா வேடத்தில் தமிழ்த்திரையுலகில் பிரவேசம் செய்வதற்கு நடிகர் கமல ஹாசன் வாய்ப்பு அளித்துள்ளார் என்ற செய்தி வெளிவந்துள்ளது. சென்னைக்கு படப்பிடிப்புக்கு அவர் வருகையில் பழைய நினைவுகளைச் சுமந்துக் கொண்டு நாகூர் வந்து நாகூர் யானைக்கு ‘சலாம்’ சொல்லிவிட்டு, ஹாரீஸ் பேக்கரியிலிருந்து ‘உப்புரொட்டி’ வாங்கிப் போவாரா என்று தெரியவில்லை!!.

– நாகூர் அப்துல் கையூம்

Advertisements
 

Tags: , ,

8 responses to “வஹிதா ரஹ்மானும் நாகூர் தொடர்பும்

 1. saleem

  October 20, 2014 at 11:05 pm

  miga arumaiyana thahaval, very good.

   
 2. S.E.A.Mohamed Ali. "nidurali"

  October 21, 2014 at 4:07 am

  அன்புள்ளா அண்ணன் அப்துல் கையூம் அவர்களுக்கு ,
  அஸ்ஸலாமு அழைக்கும் .
  வஹிதா ரஹ்மானைப் பற்றிய விளக்கமான கட்டுரை தந்துள்ளீர்கள் .அவரின் நாகூர் தொடர்பு பல காலமாக இருந்து வருவதை நான் சிறிது அறிந்தவன் .அவரது சகோதரிக்கு கும்பகோணம் அருகில் உள்ள சோழபுரத்தில் திருமணம் செய்த வகையில் தொடர்பு இருந்தமையால் அந்த உறவுகளுக்காக அந்த ஊர் பக்கம் வரும்போதெல்லாம் நாகூருக்கு பல முறை தான் புகழ்பெற்ற பின்பும் வந்து போவது உண்டு. அவரது சகோதரி திருமணம் செய்த வகையில்; இன்னும் அங்கு அவர்களது உறவினர்கள் உள்ளார்கள் .அதனை விளக்கமாக விசாரித்து சொல்ல வேண்டும் சோழபுரத்தில் எனது .ஒரு அண்ணன் மருமகன் உள்ளார் நேரம் கிடைக்க விசாரித்து தெரிவிக்கின்றேன்
  அன்புடன்
  முகம்மது அலி ஜின்னா

   
 3. nagoreismail786

  October 21, 2014 at 6:44 am

  வஹிதா ரஹ்மான் நாகப்பட்டினத்தில் வசித்த செய்திகள் நான் ஏற்கனவே தெரிந்த செய்தி தான். ஆனால் நாகூருக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு இந்த பதிவு படித்த பிறகு தான் தெரிய வருகிறது.
  வஹிதா ரஹ்மான் சினிமாவுக்கு வரும் போதே இரண்டு கண்டிஷன்களோடு தான் வந்தாராம், 1. பிகினி போன்ற ஆடையில் நான் நடிக்க மாட்டேன், 2. ம்மா, வாப்பா வைத்த பெயரை மாற்ற மாட்டேன்.
  குருதத் தான் அவரை இந்தி சினிமாவிற்கு கொண்டு வந்தார், ஒப்பந்தம் போடும் போதே குருதத்திடம் பிகினியில் நடிக்கும் படி கேட்க கூடாது என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடும் படி கேட்டிருக்கிறார், அதற்கு குருதத் சொன்னாராம், அதெல்லாம் குறிப்பிட வேண்டியதில்லை, என் படத்தை பாருங்கள், அந்த மாதிரி காட்சியெல்லாம் இடம்பெறாது என்று, வஹிதா ரஹ்மான் பிடிவாதமாக எழுதியாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம்.
  அவர் சினிமாவில் மட்டுமல்ல நேரிலும் ஸிலிவ்லெஸ் பிளவுஸ் கூட அணிந்ததில்லையாம். எதுக்கு தேவையில்லாமல் எல்லோருக்கும் உடலை காட்ட வேண்டும் என்று கூறுகிறார்.
  குருதத்தோடு உங்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி கேட்டதற்கு எனக்கு தெரியும் நான் ஒரு நடிகை அதற்காக தான் நான் என் கணவரோடு சண்டையிடுவதெல்லாம் எழுத ஆசைப்படுவீர்கள், ஆனால் என்னோட சொந்த விஷயங்களை நானாக சொல்ல போவதில்லை என்று கடுமையாக மறுத்து விட்டார்.
  உங்கள் பதிவில் நர்ஸ் வேடத்தில் இருக்கும் படத்தின் பெயர் காமோஷி.. எனக்கு பிடித்த குல்ஜார் சாப் தான் படத்திற்கு வசனம் எழுதினார். நர்ஸாக வந்த மனநிலை பாதிக்கப்படும் தர்மேந்திரா, ராஜேஷ் கன்னாவை அன்புடன் கவனித்து வருவார், அவர்கள் குணமானதும் வெளியே போய் விடுவார்கள், இவருக்கு அன்பு தோல்வியால் மனநலம் பாதிக்கப்படும். யாராலயும் நடிக்க முடியாது, அப்படி ஒரு யதார்த்தம்.
  எனக்கு குல்ஜார் சாப் இயக்கிய நம்கீன் என்ற படத்தில் ஜோதி (அ) ஜுகுனியாக வரும் இவரது நடிப்பு மிகவும் பிடிக்கும். மறதி காரராக நடித்திருப்பார். மறக்க முடியாத நடிப்பை தந்திருப்பார்.

   
 4. S.E.A.Mohamed Ali. "nidurali"

  October 21, 2014 at 9:37 am

  அன்புள்ளா அண்ணன் அப்துல் கையூம் அவர்களுக்கு ,
  அஸ்ஸலாமு அழைக்கும் .
  வஹிதா ரஹ்மானைப் பற்றிய விளக்கமான கட்டுரை தந்துள்ளீர்கள் .அவரின் நாகூர் தொடர்பு பல காலமாக இருந்து வருவதை நான் சிறிது அறிந்தவன்

  வஹிதா ரஹ்மான் தந்தை கும்பகோணத்தில் வேலை செய்யும் போது அவரது மகள் வஹிதா ரஹ்மான்சகோதரி சயீதா ரஹ்மான் கல்லூரியில் படிக்கும் போது கும்பகோணம் கருப்பூரில் உள்ள ஜாபர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்கள் . அவரது மகன் டாக்டர் மாலிக் M.B.B.S அவரை மாலிக் பாய் என்று அழைப்பார்கள்.(ஆனால்அவர் இராவுத்தர் தான்)
  மற்றவர்கள் பம்பாய்,மற்றும் ஹைதராபாத் போய் விட
  மாலிக் மட்டும் கும்பகோணத்தில் உச்சிபிள்ளையார் கோவில் பக்கம் உள்ள சாரங்கபாணித் தெருவில் தெருவில் இருக்கிறார் (மாலிக் பாய் கிளினிக் என்று இன்றும் உள்ளது )
  வஹிதா ரஹ்மான்சகோதரி சயீதா ரஹ்மான் அவர்கள் ஹைதராபாத்தில் இருந்தாலும் அடிக்கடி தனது மகனை பார்த்து செல்வார்கள்

   
 5. தாஜ்...

  October 21, 2014 at 3:27 pm

  அருமையான கட்டுரை. எந்த வரியும் மிகை இன்றி செய்திகளை மாத்திரம் தந்திருப்பது மனதைத் தொட்டது. வகிதா ரஹ்மான் + நாகூர் தொடர்பு பற்றி நண்பர் நாகூர் ரூமி என்னிடம் பல ஆண்டுகளுக்கு முன்னேயே சொல்லி இருக்கிறார். அப்போது அச் செய்தி மனதில் ஒட்டவில்லை. வகிதாரஹ்மான் சினிமா அளவில் என்னை எந்த நேரத்திலும் பாதித்ததே இல்லை. அவரது ஒரு படத்தை கூட நான் விரும்பி பார்த்ததில்லை. இப்போது அவரை ஆர்வமுடன் காண விஸ்வரூபம் -2 யை எதிர்பார்த்தவனாக இருக்கிறேன். இந்த எதிர்பார்ப்புக்கு முழுமையான காரணம் மதிப்பிற்குறிய கையூம் ஸார்தான். கட்டுரைக்கு வாழ்த்து. கையூமுக்கு நன்றி.

   
 6. rathnavelnatarajan

  November 22, 2014 at 7:35 pm

  வஹிதா ரஹ்மானும் நாகூர் தொடர்பும் = நாகூர் மண்வாசனை
  THE AROMA OF NAGORE SOIL = அப்துல் கையூம் = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு அப்துல் கையூம்

   
 7. rathnavelnatarajan

  November 22, 2014 at 7:36 pm

  Reblogged this on rathnavelnatarajan and commented:
  வஹிதா ரஹ்மானும் நாகூர் தொடர்பும் = நாகூர் மண்வாசனை
  THE AROMA OF NAGORE SOIL = அப்துல் கையூம் = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு அப்துல் கையூம்

   
 8. Santhanam

  November 24, 2014 at 2:34 am

  yes. I know some of the details given here. thank you for sharing this. Waheeda Rehman is a very able actress and beautiful too. Some of her movies with Guru Dutt and Guide are her proud posessions in her acting career.

   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: